ரவி அல்லது கவிதைகள்

 

 

1.கொடுத்தலின் பெறாமைகள்.

 

நிறைந்து கிடக்கும்

இனிப்புகளில்

பொங்கி வழிகிறது

பாசம் 

பழகியதன் அடையாளமாக

தீபாவளி நாளின்

தித்திப்பில்.

 

கவலளவு பிட்டு

கரிசன அன்பை

ஒவ்வொன்றிலும்

சுவைக்கலாம் தான் 

பழுதாகிய 

உடல் சேர்மானங்கள்

பாதகங்கள்

செய்யாமலிருந்தால்.

 

சாலைத் தோழர்களுக்கு

சகலத்தையும் பங்கிட்டுக் கிடைத்த

சந்தோசத்தில் 

சாக்குகள்

நிறைந்திருக்கிறது 

எடையற்றாக

சற்றே 

என்னை மாற்றி.

 

பூரித்தலைப் பிரித்து

நன்றியென

ஒவ்வொருக்கும்

அனுப்பியபொழுது

கட்டை விரலைக்காட்டி

கடந்து போனார்கள்

கைபேசியில் 

யாவரும் 

சுவை மொட்டுக்களைச் சுரண்டக் கொடுத்தவர்களாக.

 

2.இணைவின் மெய்யியல்.

கானலின்

அணுக்கத்தில்

பருகிய நீரும்

தாகம் தனித்தது

விளங்க முடியாத

விந்தைகளாயிரம்

கொண்டது

இயற்கையென்றாலும்

கொய்யும் பாங்கின்

குணத்தால்

மிகைத்ததாலும்

இருக்கலாம்.

 

3.திறப்பின் பிரவாகம்.

அநேக சாத்தியங்களில்

காத்த மௌனத்தின்

பேரூற்று

பொங்கி வழிகிறது

நிச்சயத்தின்

நிரந்தர

உறுதிப்பாடாக

சிணுக்கிய

குருஞ்சிரிப்பில்.

பாரிய பூரித்தலில்

முளைத்தச் சிறகுகளால்

சமீபிக்கும்

வானம்

காத்திரனமான காதலென 

கசிந்துருக வைத்து 

என்னைக் காணாமலாக்குகிறது

கருணை பொங்க.

 

4.உன்மத்த இணைவு.

 

குவிந்த

யாவிற்குமிடையில்

தேடும்

தேவைகளற்று

மின்னியது

நட்பு

கொண்டிந்த

அன்பின்

அடையாளமாக.

தொடர்பின் எல்லைகளுக்கு

அப்பாலானாலும்

பிணைந்துதான்

இருக்கிறது 

இருத்தலின்

இணைவாக

இன்றைய 

நம்

உறவு

நாளையின்

பரிணாமத்தில்

படியெடுக்கும்

பாங்கில்

மணமாக வீசி.

 

5.எடை கூட்டும் போதாமைகள்.

ஒளியை உள்ளிழுத்துக் கொண்ட

நகரத்தின் 

நடு நிசியின் மேல்

நிலவு உதிர்த்துக் கொண்டிருந்தது

வெளிச்சத்தை.

 

வலு கூட்டும்

சுமையில்

இந்நேரம் எங்கு செல்கிறீர்களெனக் கேட்க

எவரும் எதிர்ப்படவில்லை.

 

தெரு நாய்களுக்காக குரைப்பவர்கள் பற்றி

அறியாமல் 

தூங்கிய நாய்

தலையைத் 

தூக்கிப் பார்த்துவிட்டு 

தூங்கியது.

 

வீட்டின் வெறுமையை

வெகு தூரம் 

தூக்கி வந்த களைப்பில்

அமர்ந்த இடத்தின்

மரம்தான் 

எடுத்துக்கொண்டது போலும்

தளர்வடையச் செய்து.

 

காற்றின் போக்கில்

சலசலத்த சருகுகளை

சிரிப்பென மொழிபெயர்த்து

மிதந்தபடி

வந்துவிட்ட

வீட்டிற்குள்

வெளிச்சம் வந்ததும்

நற் சூழல்தான்.

 

திரை மூடிய

அமைதியின் 

பேரதிசயப் பூத்தலைச்

சொல்ல

துலாவி எடுக்கும்

வார்த்தைகளை

தூக்கம் மென்றபடி

இருக்கிறது 

விழிக்கவிடாமல்.

 

6.இடப் பெயர்வு இன்னல்கள்.

தொலைந்து போன

நகரத்தில் 

தக்கைகள்

மிதக்கிறது

பற்றி ஏறிவிடும்

பரிதவிப்பில்.

 

எடுத்து

எடுத்து

வீசி விடும்

எவருக்கும் 

இவைகளை

எப்படிப் பயன்படுத்துவதெனத் தெரியவில்லை.

 

கரையேறும்

கனவில்

கவலைகள் கொண்டாலும்

வந்த இடம்

போவதாக

உத்தேசமில்லை

எதற்கும்.

அங்கு

மிதக்க

வழியற்று

வறண்டு கிடப்பதால்.

 

7.சங்கல்பப் பொழுதுகள்.

இருளுக்குள் புகுந்த

ஒளிகளுக்கு

வழி விட்டுக் கொண்டிருந்தது

சாலைகள்.

 

சதா ஒலித்துக்கொண்டே 

விரைந்தவர்களுக்கு

வீதியோரம்

தூங்கிறவர்களைப் பற்றிய

அக்கரை இல்லாவிட்டாலும்

அவர்கள் 

வேறொரு கிரகத்தில்

சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

வானத்தையொட்டி

விழித்துக் கொண்டிருந்தவர்கள்

இரவை 

அசை போட்டு 

அசை போட்டு

வேறு வழியில்லாமல்

இரசாயனத்தை

விரும்பிய வடிவங்களில்

விழுங்கிவிட்டு 

முனகிக் கொண்டே

புரண்டார்கள்.

 

யாவருக்குமான

வெளிச்சம்

சமீபித்துவிட்டதாக

வழக்கமான

சமிக்ஞைகள்

தெரிய ஆரம்பித்துவிட்டன.

இனி பகல்

இரவை உறிஞ்ச ஆரம்பித்துவிடும்

அந்தியில்

துப்பி

அச்சங்கள் கொள்ள

வைப்பதற்கு.

 

இன்றும் 

நான் 

கையகப்படுத்திய கொஞ்சம் இரவைக்

கண்களில் ஒத்தி

பகலுக்குள் தான் 

பயணிக்கப் போகிறேன் போலும். 

 

8.வெளிச்சப் பருகல் .

லாவகப் பிடிப்பில்

மெல்லும்

கவலங்களுக்குள்

துகள்களாக

நுரைக்கிறது

களைப்பகற்றும்

ஆசுவாசங்கள்.

 

பிறகொரு

நாளுக்கான

விளைச்சலின்

ஈடுகள்

பொய்த்துக்கிடக்கிறது

பூமியின் 

பிரளய தாண்டவ

வெறுப்புகளில்.

 

மினுக்கின்

பிரகாசங்கள்

வாய்க்கும்

மேனி சுவைக்க

காத்திருக்கும்

மண்ணறைக்கு

அரிதினும் அரிதாக

வாய்க்கிறது

ருசி உணவு

சமைக்கத் தெரியாதவர்கள்

மலிந்து கிடக்கும் 

உலகில்

சேகரமாக்கி 

செமிக்கத் தெரிந்தவர்களால்.

 

9.தருணப் பிறழ்வின் தாகம்.

மதுரமான

காலை வேளையில்

மயங்காமல்

குழப்பத்தை

கொஞ்சம்

நான் எடுத்துக்கொண்டேன்.

அது என்னைக் கொஞ்ச தூரம் அழைத்துச் சென்ற இடம் சிக்கலாக இருந்தது.

 

எதிர்ப்பட்டவைகள் யாவும்

அச்சத்தைத் தந்தது.

 

அதன் ஒப்பீடுகளில்  பயந்தவனாக ஒதுங்க நிழலற்றுத் தவித்தேன்.

 

சூழ்ந்த கவலையில்

திரும்பிவிட முயன்ற பொழுது

விரவிய இருளில்

எதைப் பற்றி மீளுவதென தெரியவில்லை.

 

பழக்கமான சொற்கள்

யாவும் ஒன்றுபோலவும்

தனித்தனியாகவும்

வரிகளாகாத வருத்தத்தில்

வழக்கமான பொருளைத்தர மறுத்தது.

 

முட்டி மோதி

பிடித்தெழுந்த

நான் 

அழைக்கும் வேலையின் பதற்றத்தில்

எழுத்தின் சொல்

எக்காலமென அறியவில்லை.

 

கலைப்புற்ற சோர்வில்

தொலையக் கொடுத்த

விடிபொழுதின் சுகந்தத்தை விட்டொழித்த

பாடில்.

கனப்புகள் கூட்டும்

பகலுக்குள்

நுழைந்துவிட்டேன்

மீண்டுமொரு

தருணத்தில் 

மீளலாமென நினைத்து.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *