ரவி அல்லது கவிதைகள்:

 

  • பேரவதியெனும் பின்னோக்கியப் பயணம்.

ஓய்வெனும் கற்பிதங்களில்

ஒளிந்து கொண்டு 

ஆசுவாசங்கள் கொள்ளும்பொழுது

தேடி வந்து

அழைக்கிறது

கடமையெனும்

கற்பிதங்கள் 

நிரந்தரத்தை மறக்க வைத்து 

நிம்மதியின்மையை 

நோக்கிப் படுத்தி.

****

  1. செயலெனும் அணுமானக்கூத்து.

இக்கணத்தைப் பற்றி

சொல்ல

என்னிடம் ஏராளமான வார்த்தைகள் இருக்கிறது.

அவைகள் 

ஏற்கனவே சொல்லப்பட்டவைகள்.

அதன் பொருளின் உள்ளடக்கத்தை ஆகச்சரியாகப் புரிவதாக 

நீங்கள் நம்புவீர்கள்.

அதிலொன்றை

எடுத்து

உங்கள் முன் வைக்கிறேன்.

அதன் 

பொருளில் 

நீங்கள் செயலாற்ற முனைகிறீர்கள்.

எப்பொழுதும் போலான

என் மௌனம்

உங்களுக்குச்

சாதகமாகிவிடுகிறது.

அறியாமை நாடகத்தை நினைத்து

கண்கள் மூடியபொழுது

காகிதமொன்றை

நீட்டுகிறீர்கள்.

கையெழுத்திடாவிட்டாலும்

கழுவிலேற்றுவது

உறுதி என்பது நாம் அறிந்ததுதான்.

ஆதி வண்ணம் தொட்டு

அழகாக

கையெழுத்திட்டு

இதுவா நானெனக் கேட்கிறேன்.

மானக்கேடென

மருகியக் 

கையெழுத்து 

காற்றில் கரைகிறது.

நீங்கள் காகிதத்தைச் சுருட்டி வழக்கமான செயல் கூத்தில் இறங்குகிறீர்கள்.

மேகமற்றாலும் 

வானம் பொழிகிறது

நீங்கள் 

புரியமாட்டீர்களெனும்

துயரப் பாடில்.

***

  1. பிறருக்காகவான நான்.

அவர்கள்

அசைத்து விட்டுப்போன

நாற்காலியை

அதன்

இயல் நிலைக்கு

கொண்டுவர

அந்தியைக் கடந்த

இரவாகிவிட்டது.

தூங்கிவிடலாமென

கண்களை மூடியபொழுது

தூரமாக

அது

அசையத் தொடங்கியது

என்னை

ஆட வைத்து.

***

  1. இணக்க மீட்சி.

காலச்சக்கரத்திடம் ஒப்புக்கொடுத்தபோது

வாகாக

மசிய வைத்துக்கொண்டது தூசுகளற்று.

துப்பிய சக்கைகள்தான் தான் வாழ்வதாகவும் தாழ்வதாகவும் பிதற்றுகிறது 

அறியாக்கூத்தின் மெய்யில்

****

  1. புரிதலின் புதுவாசல்

சாளரத்தைக் கடந்து

சட்டையணித்து கொண்டதென்னவோ

வானத்தின் சாயலில் தான்

பிறகுதான் தெரிந்தது

யாவுமே

நானென.

***

  1. தருணப் பொய்த்தல்

பகலுக்குள் மூழ்கிய பிறகு

பசிதான் அழைத்து வந்தது.

ருசியின்

அலுப்பில்

உதிர்கிறது

தூக்கம் பொடிப்பொடியாக.

ஓடும் போது

தூக்கம் வந்தும்.

படுக்கும்போது

விழிக்க வைத்தும்

இந்த

வாழ்க்கை

வினோதம் செய்கிறது

என்னிடம்

எதனையோ எதிர்பார்த்து.

***

  1. நிராகரிப்பின் உன்மத்தம்

காண முடியாத

கண்ணீரில்

நனைந்த

செடிகள் 

பூக்க மறுக்கிறது

துயரப்பாடாக.

ஏக்கப் பெருமூச்சு

தாழாது

வாடுகிறது

யாவும்

அனல் தகிக்கும்

வெயிலில்.

இதயக் கசிவில்

பொசுக்கி ஓடுகிறது 

எரிமலைக் குழம்பு 

பாறைகளை

உருக்கி.

பிரளயப் பிறழ்வொன்றின்

வெடிப்பிற்கு முன்

சமிக்ஞை 

வாசனையாவது

சற்றே என்னை

ஆசுவாசப்படுத்தட்டும்

பிறகான

நம்

இணைவின் ஒன்று

கூடலுக்கு.

***

8.புத்தர் ஏன் புன்னகைத்தார்.

வெற்றிடத்தில் வீசும் காற்றிற்கு விட்டுச்செல்ல தடங்கள் இல்லையென்பது 

நுகர முடியாததன்

பேதமையெனக் கண்டு

புத்தர் புன்முறுவல்

பூக்கிறார்.

***

9.வினோதம் போக்கில் விழிப்புகளற்ற அன்றாடம்.

சறுக்கி விழுந்த செறுக்கில்

உதிர்கிறது அறியாமை சிதிலங்கள்.

துணுக்குற்று

பிடித்தெழுந்த

இயலாமையில்

வாடுகிறது

ஆதுரங்கள்.

சேகரித்த

நம்பிக்கையில்

அச்சமென்னவோ

பிடறி பிடித்து

இழுக்கிறது

பாரிய துயரத்திற்கு

விடியலின்

விழிப்பி நோக்கிய

பயணக் களைப்பில்.

***

பூஜ்யப் பரியந்தம்.

புள்ளிகளுக்குள்தான்

எத்தனைப் புள்ளிகள்.

புள்ளிகளால்

நிறைந்து கிடக்கிறது

வாழ்க்கை

தொடரும் போட முடியாமல்.

வாய்க்கும்

தொடருமில் கூட

புள்ளி தான்

வைக்க வேண்டியதாகிறது.

புள்ளிக்குள்தான்

யாவுமிருக்கிறதெனப்

புரியும் பொழுது

தொடருகிறது

வாழ்க்கை

புள்ளியாக விரிந்து.

***

ரவி அல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *