காப்பாளனின் காப்பாளன்.

புலங்கப்படாத வீட்டின்

வராதிருக்கும் 

நாட்களில் 

நூலாம்படை பின்ன

எட்டுக்கால்ப் பூச்சிகள் 

ஏன் தயங்கியது

தொந்தரவுகளற்றபோதும்.

 

விட்டுச் சென்றதில்

வேறெதுவும் 

மாற்றங்களற்ற

தனிமையின்

வெறுமையைத்தான்

கூட்டி 

சிறு தூசுகளுடன்

குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டியதாக இருந்தது

ஏங்கி நின்ற வீட்டில்.

 

பக்கத்து வீட்டு 

சப்போட்டா மரத்தில்

படுத்திருக்கும்

வரவேற்பறையின்

படுக்கையிலிருந்து 

பார்வைகள் பட

ஒட்டடைகள் ஒத்த

வண்ணத்தில்

கூடு கட்டிய

குருவியைக் காணவில்லை 

கொட்டும் மழையில் 

கூடு கிழிந்து தொங்குவதால்.

 

அசௌகரியம் கடந்து

அடுத்த வீட்டாரிடம்

சொல்லி இருக்கலாம்

மாடிக்குச் செல்லும்போது

மரத்தை எதுவும் 

அசைந்து விடாதீர்கள் 

என்னை நம்பிய

விருந்தாளிகள் 

அனுமதியற்று

உங்கள் வீட்டில்

குடியேறிவிட்டதென்று.

 

தோழமைகள் கொடுத்த

வாக்குறுதியில்

அபயம் தேடிய

அந்தக் குருவிகள் 

எங்கே சென்றிருக்கும்

துணைக்கு நானில்லாத

துயர நாளில்

தொலை தூரம் சென்ற

என்னைத் திட்டியபடி 

 

யாருமற்ற வீட்டில் 

வெறுமையைச் சுவைத்த

மதிய வேளையில் 

பச்சைப் புற்கள்

மேற்கூரை

மின்விசிறியால் 

காற்றுக் கேற்றப்ப

ஆடி விழுந்தது.

தலைக்கு மேல்

சுவற்றில் மாட்டியிருக்கும்

மின் விசிறியைப் பார்க்குமாறு.

 

இத்தனைப் பெரிய

வீட்டில்

இந்த மின்விசிறியின்

பின்புறம்

இவைகளுக்கு 

எப்படி

இதமான பாதுகாப்பானதென

இன்றுவரைப் புரியவில்லை 

கொசுக்களின் 

கடி வேதனையால்

கொண்ட வெறுப்பில்.

 

சப்போட்டா மரக்குருவிகளும்

சற்றைக்கு முன் வந்த

குருவிகளும்

விரைவாக வீட்டைக்

கட்டியது ஏனென்றுதான் தெரியவில்லை 

கவலைகளோடு

ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கும்

எனக்கான 

இப்பொழுதில்.

 

வெளியூரில் இருக்கும் 

மகளும், மனைவியும்

விடாப்பிடியாக அழைத்தாலும்

வேலைகள் முடிந்து 

வருவதாகச் சொல்கிறேன்

ஒவ்வொரு நாளும்.

விளையாட்டாகவாவது சொல்லிவிடக்கூடாது

பின்நாளில் 

இவைகளுக்காகத்தான்

இருந்தேனென்று.

 

கோடை வெயிலின் கொடுமையில்

கெஞ்சி மகன் அழைத்தபோதும்

குளிர் அறைக்குள்

செல்லாத நான்.

வீட்டிற்குள் தான் 

அரைத் தூக்கத்தில்

அல்லல்ப்படுகிறேன்

ஒவ்வொரு நாளும் 

அவைகளுக்காக.

 

விடியும் முன்பொழுதுகளை

விரும்புகிறவன்

என்பதால்.

கட்டிலை விட்டாவது

தரையில் படுக்கலாமென.

பாயை விரித்தபொழுது.

குருவிகள் பறந்து

கொஞ்சி விளையாடியது.

கைபேசிப் பதிவுகளில்

காட்சிகளாக இருக்கிறது. 

வீசிய பந்தாக

வீட்டிற்குள் வந்து

 படுக்குமாறு.

 

படியில் இறங்கும்பொழுது

கீழ் வீட்டுப் பாட்டி

‘பாம்பு வந்தது தம்பி

பார்த்துப் போங்க.’

என்றதன்

முகத்தில்

அப்படியே இருந்தது 

அதிகாலை பாம்பைப் பார்த்த

அதிர்ச்சி.

 

பதறி மேலே

வந்து

பார்த்து நன்றி சொல்ல

பறவைகள் பாஷை

தெரியாத

பாவியென நோவித்தான்

பகல் பொழுதெல்லாம்

கழிக்க முடிந்தது 

பாரிய சோகத்தில்.

 

கல்யாண வயதை

மகனும் மகளும் நெருங்கினாலும்

கட்டிலில் என்னுடன் படுத்து 

கலாட்டாக்கள் செய்யும்

திருவிழாவாக மாறும்

தீபாவளி நாட்களை

நினைத்துத்தான்

மனம்

திகிலில் கிடக்கிறது 

குருவிகளோடு கொண்ட இரக்கத்தால்.

 

முட்டைகள் இட்டு.

குஞ்சுகள் பொறித்து.

முகம் மலரக் கீச்சொலிகள் செய்தவைகள் 

போகும்வரை.

முட்டாளென்று

யாவரும் என்னை

முடிவுகள் செய்தாலும்.

தீபாவளியைக் கொஞ்சம் 

தள்ளி வைக்கச் சொல்லித்தான்

தினம் தினம் பேச்சு வார்த்தைகள் 

நடத்துகிறேன்

இறைவனிடம்

அலுக்காமல்

இப்பொழுது வரை.

***

[email protected]

One comment

  1. என்ன ஒரு உயி(ய)ர் நேயம்!!!காக்கைக்குருவி எங்கள் சாதி எனும் மகாகவியின் நீட்சியாய்…தங்களது கவிதை!!!அருமை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *