மூன்றாம் பாலின்
முதல் சுவை.
வித விதமான வெறுப்புகளில்
நிறைந்திருந்த
மதிய வேளையின்
உணவுத் தட்டில்
சொரணையைச் சுரண்டியது
சூடாக ஊற்றிய
காலையில்
பற்ற வைத்த
சமயலறை நெருப்பால்.
வயிறு நிறைந்த
ஏப்பத்தில்
சூழ்ந்த
அன்பின் வாசனையில்
கிடைத்த
குளிர்மை பானம்
சகலத்தையும்
சமாதானமாக்கிவிட்டது
இரவாடைகள் கசங்க ஏதுவாக.
***
ஒளிர்வின் பிரகாசம்.
எல்லாவற்றையும்
தியானமாக்கியபொழுது
எஞ்சியது யாவும்
தியானம்
தியானம்
தியானம்.
***
கூசாத மெய்.
ஒளியின் நிழலில்
மறைந்திருக்கிறது
மௌனம்.
***
சித்திரப் புள்ளிகள்.
அந்தியைப் பிடித்துதான்
அழகாக வரைந்தேன்
இரவுக்குள் மின்னுகிறது
நட்சத்திரங்கள்.
***
மணத்தலின் சுயாதீனம்.
அனுபவித்தலை
எழுத நினைத்தபொழுது
அது
தன்னைத்தானே
எழுதிக்கொண்டிருந்தது.
***
விழிப்பின் வேறொருபொழுதில்.
காணாமல் போன
எழுதுகோளை
கண்டெடுத்தபொழுது
நடந்துகொண்டிருக்கிறேன்
தடங்களற்று
அதுவாக.
***
ஹிருதய சுத்தி.
பகலின் களைப்பிற்கு
இரவின் தழுவலில்
உற்சாகத்தைத் தந்த
ஓய்வின்
ஈரம் இன்னும்
சொட்டிய வண்ணமிருக்கிறது
இதயத்தில்.
***
-ரவி அல்லது.
