திரியற்ற தீப ஒளி
விடியலின்
அறிகுறிகள்
விளக்குகளை மங்க வைக்கிறது.
தூங்கிய மனிதன்
விழித்ததாக
வேலைகளைத் தொடங்கினான்
இருளைச் சுமந்து.
எப்பொழுதும்
ஏதாவதொரு
தருணம்
உரசியபடியே நகர்கிறது.
பற்றாத துயரத்தில்
பற்றிவிட
கணங்கள் தோரும்.
****
மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்.
அன்றாடத்தின்
அத்தனை அலுவல்களுக்கிடையிலும்
அமிலமென
அரித்துச் சொட்டுகிறது.
வலிகள் தந்த வார்த்தைகள்
எங்கிருந்து
எப்படி வருகிறதெனும்
பாதைகள்
அறிய முடியாத
பரிதவிப்பில்.
பிறரின்
வார்த்தைகளைக் கொண்டு
முகவாடலை
மறைக்க எத்தனிக்க
யாதொரு
முகமூடிகளற்ற
தவிப்பில் கழிகிறது
கணங்கள்
கொட்டியவர்
இல்லாதபொழுதும்.
***
