நிதானப்படாத அறியாமை.
இந்த இரகசிய அல்லாடலுக்குள்
ஆயிரம் தவிப்புகள் இருக்கிறது.
தாழாத் துயரின்
பிரிவாலான மௌனத்தில்
அறியப்படும்
மொழி பெயர்ப்புகள்
அந்திமமாக
இருளாக்குகிறது.
கால ஓட்டத்தின்
யாதொரு
பங்கமற்ற தருணத்தில்
நேசித்தலைப் பருக
வாய்ப்பிருந்தால்
எனக்குள்
காத்திரமான
கருணை மட்டுமே
உள்ளதென
அவர்களும்
சாட்சியாவார்கள்
சகாயமாக
கருணைப் பிரவாகமெடுத்து.
****
புறந்தள்ள முடியாதப் பிரவாகம்.
யாரோ ஒருவரின் கவனக்குறைவால்
நிகழ்ந்தப் பாதகத்தினை
விவரிக்க வார்த்தைகள் குறைவு.
அதன்
கோரம் நினைக்கவியலாத துயரம்.
அங்கே
கொஞ்சம் கருணை மனிதர்களிடம் எஞ்சி இருந்தது.
அதன் நீட்சியாக கருணையை மட்டுமே என்னால் எங்கும் காண முடிந்தது.
இத்தனைக் கருணையை
மறைத்து
இவர்கள் தான்
யாரோவாக எப்படியோ இருந்தார்கள்.
நிகழ்வின்
மறு சீரமைப்பு
தருணங்களைத் தள்ளுமாறு படுத்தினாலும்
எனக்குள் முகிலும்
வாஞ்சையின் கருணை
மீண்டுவிடத் துடிக்கிறது
யாவையும்
நேசிக்கும்
என்னை இவர்கள் காண வேண்டுமென.
*****
ருசிக்காத மெய்.
இப்படியான
சூழலொன்றில்
நான்
எடுத்து வந்தது
ஏனோ
அவர்கள்
மனம் கவரவில்லை
வெறுப்பதைத் தவிர.
அவர்கள்
அவர்களின்
மதிப்பீடுகளில்
துல்லியமாக இருந்தார்கள்
அறியாமையில் இருப்பதை ஏற்க மறுத்து.
நான்
எனதன்பில்
ஆகத்துல்லியமாக இருந்தேன்
ஒப்பிடமுடியாத வண்ணம்.
வழக்கம்போல
மொந்தையில்
ஊறிய
வார்த்தைகளில்
முகம் மாறினார்கள்
வேதனைகள் சூழ.
வேறு வழியே
இல்லை
என்றபொழுது
வெளியேறிவிட்டேன்
கரிசனக் கருணையை
காண வேண்டுமென
என்றையுக்குமாக
எடுக்காமல்
விட்டு வந்ததை
அவர்கள்
பின்னொரு நாள்
காண வேண்டுமென.
****
இருத்தலின் நேசம்.
நான்
காற்றாகச் சுவாசிக்கிறேன்.
நான்
காற்றாக மாற
சுவாசிக்கிறேன்.
நான்
காற்றாக
வீசச் சுவாசிக்கிறேன்.
நான்
காற்றோடு
கரையச் சுவாசிக்கிறேன்.
உங்கள்
இழுப்பில்
யாதொரு பங்கமற்று
நுழைந்து
உருமாற்றி விடும்
கரிசனத்தில்
சுவாசிக்கிறேன்.
****
காத்திருப்பின் நியமங்கள்.
என்னை
யாரெனக் கேட்டவருக்கு
கற்பிதமாக பொய்யுரைக்க விருப்பமில்லை.
தேடி எடுத்துச் சொல்ல நினைத்தவைகளில் பொய்கள் ஒட்டி இருந்தது.
ஒன்றை மட்டும் துடைத்து செதுக்கிச் சொல்ல நினைத்தபோது
அது
சொல்ல நினைத்ததாக இல்லை.
அப்படியே
கண் மூடிய பொழுது
நேரம் கடந்ததே தெரியவில்லை.
கண் விழித்து
கேள்விக்கானவரை தேடிக்கொண்டிருக்கிறேன்
காணவே இல்லை
இப்பொழுது வரை.
விழித்திருக்கக் கூடாது
மிதந்து சென்ற
ஆற்றிலென
எனக்குள் தோன்றுகிறது
அவ்வப்பொழுது
நகைப்பாக.
*****
