யார் நீ?
“விளக்கமுடியாததும்
விளங்கிக்கொள்ள வேண்டியதும்”
உன்னை நானறியேன்.
“எனைத் தெரிந்தோர் பலர்
அறிந்தோர் சிலர்”
நீ சொல்வதொன்றும் புரியவில்லை.
“அப்படிச் சொல்வார் பலரும் உண்டு
எனைப் பிதற்றல் என்பார் சிலரும் உண்டு”
என்னதான் சொல்கிறாய்? இப்படியே பேசிக்கொண்டிருப்பது தான் உன் தொழிலா?
“பூ பூக்க வைப்பது
புயல் வரச்செய்வது
நன்மழை பொழிவது
நம்பிக்கை தருவது
கவியிருள் கார்ப்பது
அவ்விருள் அகற்றிடுவது
மலையுச்சியில் இருப்பது
மனதுக்குள் இருப்பது
என்றிவை யாவுமென் தொழிலே”
நீ யாரென்று சொல்லித் தொலையேன்.
“அண்டத்தின் அளவு முதியவள் நான்
இன்னிசையொத்த இனியவன் நான்
பேருண்மை பலவும் கொண்டது நான்
போதி மரங்கள் ஆயிரமென்மேல்
மலர்களுமுண்டு அதனிடத்தே
தேனீக்கள் ஆயிரம் அதனூடே
ஞானிகள் வருவர் எனை நாடி
நீர் அது நானே
உலகம் விடும் கண்ணீராய்
காற்றது நானே
நன்மணமெங்கும் பரப்புவதால்
வான் அது நானே
எங்கும் பரந்து இருப்பதனால்
தீ அது நானே
சுடவேண்டியதைச் சுட்டெரிப்பதனால்
மண் அது நானே
விதைகளைக் காடுகளாக்குவதால்”
ஐயோ…எங்கிருந்து தான் இங்கு வந்து சேர்ந்தாயோ.
“வருதலும் போதலும் செய்யும்
வழக்கிலை எம்மிடம்
எங்குமே இருப்பதால்
இல்லையவ் வழக்கமே”
அடடா, புரிந்துகொண்டேன்.
என்னை மன்னிக்கவும்.
புதிர் போட்டது போதும்.
எனைப் பார்க்க வந்திருக்கும் நீர்
எங்குமிருக்கும் கடவுள் தானே ?
“கடவுள் எனில் நான் கடவுள்
கவிதை எனில் நான் கவிதை”