1.
வழிந்து சென்றன
புத்தக அலமாரியில்
நிரம்பிய சொற்கள்
மலர் என்ற சொல்
அழைத்து வந்தது
பூத்துக் குலுங்கிய அடர்வனமொன்றை
மான் விரட்டி உதிரம் ருசித்து
வனமதிர கர்ஜித்தது
சொல் வெடித்துப் பிறந்த சிங்கமொன்று
குளிர் உறைந்த நதியின் மீது
துள்ளிப்பாய்ந்தன
நிலமறியா குறுமீன்கள்
நிலைக்கண்ணாடி மிதக்க
நுரைத்துப் பொங்கியது
அலைகளற்ற பேராழி
நதிக்கரையோரம் தனித்திருந்த
சிற்றிடைப்பெண்ணை நெருங்கிய
நொடிப்பொழுதில்
அனைத்தையும் கலைத்துப்போட்டது
மீண்டும் உன் வருகை
2.
சன்னல் அமர்ந்து
அறையை வெறித்தது
வானறிந்த அச்சிறு பறவை
கூரலகு கம்பி உரச
பற்றிப் படர்ந்தது
அலைதலின் நெருப்பு
வெளியைப் புணர்ந்து
சிலிர்த்து நின்றது
அறையி்ன் குறி
உச்சம் நிகழ்ந்த
நீர்மையில் வேர்ப்பிடித்தன
அகாலத்தின் விதைகள்
நிலம்கீறி தளிர்த்த
சிற்றிலையில் இளைப்பாறுகிறது
நீ சிறைப்படுத்திய
அச்சிறு பறவை
3.
இருள் நதியில்
விழுந்து கிடந்தது வானம்
விண்மீன்கள் நீந்த
படித்துறையில் தேங்கின
பால்வீதியின் கசடுகள்
நிலாவைத் தின்னத்தவித்த
கெழுத்தி மீனை
பாய்ந்து தாக்கியது எரிகல் ஒன்று
இலைமீதமர்ந்து விட்டில் தேடிய தவளை
ஒளிப்புள்ளிகளை அஞ்சியது
சுடுகாட்டுத் தகரக் கூரையைத் தீண்டி
துயில் கலையச் செய்தன
நகரும் பெருக்கில் நனையாத நிழல்கள்
கால்கழுவி மேம்பாலம் ஏறி
கருத்த உருவொன்றைக் கண்டவனை
இறுக்கிக்கொண்டது அமாவாசை இரவு
4.
நண்பனின் வருகை முடிந்து
டி.வி.பார்த்து
உண்டு கிளம்பும்போதுதான்
கண்டுகொண்டேன்
கைக்கடிகாரமற்ற இடதுகை இருப்பை
புத்தக அலமாரியைத் துழாவி
அலுவலகக் கோப்புகளை பரிசோதித்து
கழிவறைக்குள் சென்று வந்த பின்னும்
சிக்கவில்லை
டி.வி.பெட்டிக்குள் ஒளிந்து
வண்ண வண்ண உருக்கொண்டு
ஒளிர்ந்து அசைந்தது
நீண்ட தேடலுக்குப்பின்
ஆங்காரம் கொண்டு
உருவி எடுத்தேன்
தலைநரைத்து மீசை வெளுத்து
மிகச்சோர்ந்திருந்தது
கண்ணாடியில் என்முகம்