வட்டங்கள் வட்டங்களாகவே கடந்து செல்கின்றன

1) திடீரென ஒரு துயரம்

திசைகளெல்லாம்

ஈரத் தலையுடன் நிற்கின்றன

பனிக்கட்டிய இரவு

கசங்கிய நிலவொளியில்

கண்கள் மட்டும் தெரியப் போர்த்திக்கொண்டு

அது எங்கிருந்தோ வருகிறது

எங்கிருந்ததோ…

2)குளம் போல் தேங்கிய நினைவுகள்

நினைவுகள்

குளம் போல் தேங்கத்

தொடங்கிவிட்டன

நீரில் விழுந்த ஆழமென

நினைவுகள் நினைவில் தொலைய

அங்கேயே நிற்கிறேன்

மழையை

வட்ட வட்டமாக

வரைந்து முடித்தது

குளம்

குளம் நோக்கி

கற்கள் வீசினேன்

தாவித் தாவி விழுந்தவையெல்லாம்

வட்டமாகப் பெருகிப்பெருகி

இல்லாமலாகின்றன

அல்லது

அலையலையாக ஓடிவந்து

கரையேறுகின்றன

வட்டங்கள்

ஒன்றிலொன்று

மோதியும்

எதுவும் நிகழ்ந்திடவில்லை

வட்டங்கள்

வட்டங்களாகவே

கடந்து

செல்கின்றன

3) நீர்வழிப் படூஉம்

நீரின் வாக்கில்

எல்லாம் ஓடுகின்றன

ஒரு நதி

அதில் விழுந்த இலை

இலையில் ஏறிய

எறும்பு

ஒவ்வொரு முறையும்

புதிதாகத் தோற்றமளிக்கும் நீருக்கு

நிறைய ரகசியங்கள்

அது-

இறுகியிறுகி கல்லாகுவது போல்

இளகியிளகி காற்றாகும்

தாகத்தின்

அத்தனை ருசியையும்

ஏந்தி நிற்கிறது

மழை

விழுந்ததோ

ஒரு துளி

இடைப்பட்ட தொலைவில் தான்

எண்ணிலடங்காமல்

உடைந்தது

நீரைத் தின்னும்

நிலத்தின் வெக்கை

உடல் முழுதும் பரவியிருக்கிறது

இந்த உடலோ

பசியின் நிழல் போல்

அலைகளின்றி கடலை வரைவது

துளிகளின்றி மழையை வரைவது போல்

வரையும் பொழுது

தூரிகை நார் நுனியிலிருந்து

விழும் துளிகள் போன்றே வானமாகாத நீலம்

அள்ள அள்ளக் குறையாத நீராய்

தரையில் கிடக்கிறது

4) நாளை

நேற்றென்பது

மழையின் நினைவாக

வாசல்மடி வரை

நிற்கிறது

ஏரிகளும் நிறைந்துவிட்டன

ஆடுகளும் மாடுகளும் கட்டியே கிடக்கின்றன

வானம் தன்னை ஒவ்வொரு மேகமாக மூட

இப்பொழுதில் வானமாயிருப்பது

மேகங்கள் மட்டும் தான்

நாளையென்பது வெளிச்சம்

5) கள்ளிப் பூ

பயத்தைச் சுற்றி

முட்கள் வளர்ந்துவிட்டன

திறந்துப்பார்த்தால்

அத்தனையும் கோபம்

வறண்ட நிலத்தில் விழுந்த விதை

பிழைத்துக்கொள்ள என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது

வறட்சியின் சாகசத்திற்கு இலைகளைத் துறக்கவேண்டும்

நீர் சுமக்கும் பொதியாகவே நிற்கவேண்டும்

மேலதிகமாக

கோபமே அறியாத

ஒரு பூவை

எப்படி மலரச் செய்யும்?

காலையின் மென்மையான

தொடுதலைக் கடந்து

பூவின் கோபம்

இரவில் மலர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *