1) திங்கள்
மெது
மெதுவாய்
வெளிச்சமாகிறது
இரவு
நடையின் நிழல் தெரிய
வெகுதொலைவு நடைநடந்து
கதவருகில் நின்றபடியே
பார்க்கிறது
அனல் அகன்று
வந்த ஒளி
2)ஆகுதல்
கரையில்
ஒரு பூ உதிர்ந்து
விழுந்தது
பிறகென்ன
கடல் முழுதும்
பூவின் நிறமானது
◆
ஒளி பொருந்திய விளக்கை
ராப்பொழுது தாங்கிநிற்பது போலொரு கனவு
விழித்ததும்
ஒளி நிரம்பி
வெளி முழுவதும்
பற்றி நிற்கிறது
வானமாக
3) நான்
விதைத்த பிறகும்
உள்ளீடற்ற நிலமாக நிற்கிறேன்
இவ்வுள்ளீடற்றதில் தான் மேலும்மேலும்
விதைக்கவேண்டும்
ஒரு விதையை
அதன் ரகசிய வேர்களை
4) இரண்டல்ல, ஒன்றே
மடைக்கு அப்பால்
அவ்வளவு வேகமும்
தேங்கியிருந்தது
இருந்தவையெல்லாம்
நீருக்கடியிலும் இருந்தன
நள்ளென்னும் யாமத்தில்
வேகம் தாங்காத மடை
திறந்துகொள்ள
ஒரு வயல் இன்னொரு வயலுக்குப்
பள்ளமாக எதிரே நின்றது
எப்போதும் நீர் அறிந்த பள்ளத்திக்கு நூறுபாதைகள்
மெள்ள மெள்ள நீர்
பள்ள வயலை நிரப்ப
வேகமோ தெளிந்த நீரானது
அந்நிலையில்
அங்கனமிருப்பது
இரண்டில்லை
ஒன்று தான்
