[7]
கிழக்கை நோக்கு!
கருணை நிறைந்த ஒளியன்
சுடரும் தலையுடன் எழுகையில்
அவன் பார்வைக்கடியில் இருப்பவர் எல்லாம்
அவனின் புதிய தோற்றத்திற்குப் பணிவர்
மாட்சிமையும் புனிதமும் அமைந்தவனுக்கு
நமது பார்வைகளே காணிக்கை
வானத்தின் செங்குத்து மலைகளில் ஏறி
வலிமையான ஒரு இளைஞனைப் போல
அவன் இருக்கையிலும்
அவனது பொன்னொத்த வாழ்வைக் கண்டு
மக்கள் அவனை வியப்பர்
உச்சத்திலிருந்து
களைத்து ஓடும் தேருடன்
ஒரு வயோதிகனைப் போல
பகலைவிட்டு இறங்கும் பாதையில்
அவன் தடுமாறும்போது
முன்பு பணிந்த கண்கள் எல்லாம்
அவனை விட்டுவிலகி வேறிடம் நோக்கும்
எனவே
உச்சம்போதிலிருந்து இறங்கும் முன்
பெறுக ஓர் புத்திரனை
மறுத்தாய் எனில்
முதுகுகள் மட்டும் சூழ இறப்பாய்
[8]
கேட்கப்பட வேண்டிய இசை நீ!
நீயே இசையை வருத்தத்துடன் கேட்பது ஏன்?
இனியவைக்கு இனியவையுடன் என்ன பகை?
மகிழ்வுக்குரியன களிப்பது மகிழ்வில் மட்டுமே!
மகிழ்வைத் தராததை நீ விரும்புவது ஏன்?
நச்சரிப்புகளை மகிழ்வுடன் ஏற்பது ஏன்?
சீரிய சங்கீதத்தின் ஒத்திசைவில்
முயங்கும் இணைவு
உன்னைப் புண்படுத்தினால்
அது தனிமையின் குழப்பத்தில் கிடக்கும் உன்னிடம்
உன் பங்கினை ஆற்றுமாறு
சினத்தின் சொற்களை மென்மையுடன் சொல்கிறது
இதை நினை!
ஒரு தந்தி இன்னொரு நாணுக்குக் கணவன்
ஒன்றில் ஒன்று எதிரதிர்ந்து
தந்தையும் மகனும் மகிழும் தாயும்
அமைந்த குடும்பம்போல
ஒற்றை ஒரு இசையாய் மலர்கிறது
பலப்பல இசைகள் ஒலித்தாலும்
சொல்லைக் கடந்து
அவை உனக்குச் சொல்வது ஒன்றே –
தனித்திருந்தால் நீ எதுவுமின்றி அழிவாய்
[9]
ஒரு கைம்பெண்ணின் கண்ணீரை அஞ்சியா
வாழ்வை நீ தனித்து அழிக்கிறாய்?
ஆ! வாரிசுகள் இல்லாது நீ இறந்தால்
உலகே அலறும் ஒரு கைம்பெண்ணாக
ஒவ்வொரு கைம்பெண்ணும்
தன் கணவனின் வடிவை
மகனில் காண்கையில்
உன்னுடைய அழகு எஞ்சாது அழிந்தது என
மொத்த உலகமும் உன் கைம்பெண்ணாகக் குமுறும்
ஊதாரியின் செல்வம் எல்லாம்
அவன் கைவிட்டு வழிகையில்
எங்கோ எவரோ அதுகொண்டு வாழ்வர்
ஆனால் கரையும் அழகு
மறையும் பூமியை விட்டே
எனவே
அழகில் பயன்கொள்ளாது
பூட்டி வைப்பவர் அழிக்கிறார் அதையே
கொலையின் இழிவைத் தனக்கே செய்யும்
அந்த நெஞ்சத்தில்
அடுத்தவருக்கான அன்பு சிறிதும் எஞ்சாது