1. கண்டிராத சரக்கு
மொழியப் படாத
கவிதைமுட்டை ஒன்று
கணம் ஓயாது மின்னுகிறது
கரிய வானில்
மொழிச் சிறகு திளைக்காத
ஆழத்தில் கிடப்பதன்மீது
கடற்பூரானின்
ஆயிரம் கால்கள் ஊர்கின்றன
ஆயிரமாண்டு சித்தமறிந்த பாதையைவிட்டு
சில அடிகள் தள்ளியிறங்கிய
முக்குவன் ஒருவன்
புகுந்தான்
மானுடம் தீண்டா
கடலோட்டம் ஒன்றில்
இழுப்பிலும் சுழிப்பிலும் அதன்வழிப்பட்டு
தொட்டு எடுத்த
முத்துக் கும்பம் உடைத்து
அவன் வீசியெறிந்தவற்றுள் கிடந்த
பெருமுத்துக்களில் எல்லாம்
பழக்கத்தின் கீறல்கள் பொறித்து
புத்தம் சோழிகள் என
கூவி விற்றது
அவன் குடி
⁂⁂⁂
2. கல்பொருசிறுசொல்
வெயில் நீந்தும் நிலத்தில் பூத்த
கல்லைப்பறித்து செய்த திண்ணையில்
நாளெல்லாம் கிடந்து
கண்ணீர் தொட்டு
முத்தி முத்தி அழித்தான்
மண்கண்ட மாகவிதை ஒன்றின்
சொற்களை
கல் அறிந்ததா?
அது பூத்த நிலம் அறிந்ததா?
அதில் நீந்திய வெயில் அறிந்ததா?
⁂⁂⁂
3.
வரளாத ஆறு
எங்கள் ஊருக்கு இல்லை
இருக்கும் ஒரு மலையும்
செடி கொடி மரங்களற்ற பாழ்
குடிக்கவும் குளிக்கவும்
வியர்வை கரிக்கும் கிணறுகள்
வெள்ளிச்சிறுபிறை ஓட்டி
கேசபாரம் மட்டுஞ் சுமக்கும் நாடோடி
கண்டான்
கனகந்திரள்கின்ற பெருங்கிரியை
சுவைத்தான்
அம்மலையில் ஊறிய வாடா சுரப்பை
⁂⁂⁂
4.
விண்ணாளும் பறவைக்கும்
உண்டு
ஒரு மலையுச்சிப் பாறையோ
நெடுமரத்துக் கிளையோ
ராஜபட்சிக்கு உணவென்பது
பறக்கும் பறவை மாத்திரம்
உறக்கமோ
சிறகசையாது விண்ணில் நீந்தல்
எப்போதேனும் சுழன்றிறங்கி
இறகுகோதியடுக்க மட்டும்
பாறைக்கும் கிளைக்கும் வரும் பறவைக்கு
நொறுங்கிச் சிதறும் வரை
முறிந்து விழும் வரை
பாறையோ கிளையோ கனவில் வந்ததேயில்லை
⁂⁂⁂