முதல் விருந்து
சிறப்பான கல்யாண விருந்து அது
தயாராகிக்கொண்டிருக்கிறது
கறிகள், கூட்டுகள்
இனிப்புகள்
அவள் மூக்கால் சுவைக்க
நாக்கு வியர்க்கிறது
உள்ளே கேட்கிறது
விருந்தினர்களின் சிரிப்பும்
கும்மாளமும்
இவனா தேவமைந்தன்
உல்லாசக்காரர்களுடன்சல்லாபிக்கிறான்
வேசிகளுடன் அளவளாவுகிறான்
சீ! த்தூ! துப்பிவிட்டுச் சென்றாள்
ஒரு குடிநீர்ப்பானையில்
கணவான்களே!
குடியுங்கள் என் மிச்சிலை
திராட்சை ரசம் தீர்ந்ததென
புலம்பிய வீட்டுக்காரனை ஆற்றுப்படுத்தி
தேர்ந்தெடுத்தார் கடவுள்
அதே பானையை
புன்னகையுடன்
2. தற்குறிப்பேற்றம்
கடைக்கு டீ குடிக்கப்போனோம்
நுழைவாயிலில் இருந்த பெஞ்சில்
அமர்ந்திருந்தனர்
ஒரு குழந்தையும் அப்பாவும்
அப்பா புகைத்துக்கொண்டிருந்தார்
மிக நிதானமாக அவர் புகைத்துக்கொண்டிருந்தார்
அவ்வப்போது டீயைஉறிஞ்சிக்கொண்டார்
அந்த குழந்தை
கருப்பாக மிக அழகாக இருந்தது
மிக அமைதியாக அமர்ந்து இருந்தது
அக்குழந்தை முகத்தில்
சிரிப்பில்லைகுறும்புத்தனமில்லை
வருத்தமில்லைகோபமில்லை
கேள்வியில்லைஆர்வமில்லை
அது எங்கோபார்த்துக்கொண்டிருந்தது
அல்லது எங்கேயும் பார்க்கவில்லை
டீ குடித்துவிட்டு அப்பா கிளம்பினார்
காலை உந்தி உந்தி சென்று
வண்டியைக் கிளப்பினார்
ஒரு சொல்லின்றி குழந்தையும் ஏறிக்கொண்டது
வண்டி மறையும்வரை அது என்னைப்பார்க்கவேயில்லை
“சிகரெட் வேணுமா சார்?” என்றார் கடைக்காரர்
“கிங்ஸ்கொடுங்க” என்றேன்
3.கர்மயோகி
வாலாட்டி குருவியே*
வா! வா! என ஒட்டப்பட்டிருக்கிறது
சுவரொட்டிகள்வால்பாறையெங்கும
இமயமலையில் இருந்து வருகின்றனவாம்
அங்கிருந்து வந்ததா?
இங்கிருந்து சென்று திரும்பிவந்ததா?
கூடடையுமிடம் மட்டுமே சொந்த ஊராகுமோ?
அறமும் பொருளும்
வீடும் இங்கிருக்க
இன்பம் மட்டுமே இல்வாழ்க்கையாகுமோ?
இதோ ஒரு புழு
நெளிந்து கொண்டிருக்கிறது
உண்பதே தவமாய்
அதன் மோட்சம் காத்திருக்கிறது
அக்குருவியின் எச்சத்தில்
*வருடந்தோறும்இமயமலையில் இருந்து வால்பாறைக்குவலசை வரும் Grey wagtail birds