மிருகங்கள்
பூத கணங்கள்
போர் வீரர்கள்
அஷ்டதிக் பாலகர்கள்
நாட்டியப் பெண்கள்
இசைப்பாணர்கள்
ரிஷிகள்
கடவுளர்கள்
அத்தனையையும்
செதுக்கிச் சுமந்து
நானிழுத்து ஏன்
வரவேண்டும்
இச்சுமைகளின்றி
மனம்
பறந்தபோது
நிலைகொண்டது
தேர்.
..
பச்சையாகவே
தடுத்த இலைகளில்
உருளும் துளிகள்
கண்ணாடி போல்
ஆகாயம் காட்டும் குளம்
இடைவெளி விட்டேதான்
மழையும் நிகழ்கிறது…
…
நிறைந்த ‘வெளி’ யாக
நீலமாக வேண்டும்
போலும்..
கண்களினுள்ளே
எனதுயிர்
கரையாது
ஒரு பறவையென
சிறகடிக்கிறது..!
….
நிகழ்வின் உருவை
உணரும் தருணம்
நகர்ந்து நகர்ந்து
நட்டாற்றில் சுழல்கிறது
இடதும்,வலதுமாக
நழுவிக்கொண்டிருக்கிறது
ஒரு மீனைப் போல
ஆற்றலின் மூச்சு..
மூழ்கயிலாமல்
துள்ளிக்குதித்து
அக்கரையில் கிடக்கிறது
அசையாத சிவமாய்
எறிந்த சிறு கல்லொன்று.