ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்

1.

வேலை இடைவெளியில்

உணவருந்தச் சென்றேன்

மிச்சமில்லாமல் வழிக்கப்பட்டிருந்த

குழம்புச்சட்டியின்

அடி ஆழத்தில்கிடந்தன

இரு மீன் துண்டுகள்

ஐந்து மீன்களை ஐயாயிரம் பேருக்கு

பகிர்ந்தவர் அருகில் இருந்திருந்தால்

கொஞ்சம் குழம்பு கேட்டிருப்பேன்

அந்நேரத்தில் அவரும் இல்லை

தனியாகச்சிதறிக் கிடந்த

மீனின் ஒரு கண்ணைப் பார்க்க

பரிதாபமாக இருந்தது

வெறுப்பில்திரும்பிவிடலாம் என்று நினைத்தேன்

ஆனால்

தின்பதற்காக கொலையுண்டு

பல இன்னல்களைத் தாண்டி

மேசை மேல் வந்திருக்கும் இதை

குப்பையிலிட்டால்

அடுத்த ஜென்மத்தில் என்னை எவரேனும்

இங்ஙனம் செய்யக்கூடும் என்ற பயத்தில்

தின்னத்தொடங்கினேன்

இப்போது

என் தொண்டையில் ஒரு முள்

குத்தி நிற்கிறது.

2.

தொலைதூர உறவு.

 

எண்ணற்ற புகைப்படங்கள்

காதல் மொழிகளால்

நிரம்பி வழியும் பக்கங்கள்

காலநேரம் அறியாத கொஞ்சல்கள்

பறக்கும் முத்தங்கள்

இவையாவும் இருந்தும்

உன் இன்மையின் இன்னல்களை

தீர்க்க முடியாத விரக்தியில்

வீடு வரை சென்றிருக்கிறது அலைபேசி

இந்த உலகம்

கைகளுக்குள் சுருங்கி போனாலும்

என் கைக்கு எட்டாத தொலைவில்

விலகி போன உன்னை

காற்றின் ஒவ்வொரு அலைவரிசையிலும்

தேடுகிறேன்

ஆனால் கிடைப்பவை எல்லாம்

உன் நிழல் உருவங்களே

கண்ணீர் மல்கி

கணம்தோறும் காத்திருக்கிறேன்

என் உயிர் தாங்கி வரும்

உன் மெய் உருவுக்காக.

3.

கடல் காணல்

 

சிரித்துக் கொண்டே

என் பின்னால் வந்த நிலவு

ஒருநாள் மறைந்து விட்டது.

நீங்கள் நினைப்பது போல் இல்லை

மேகத்தின் பின் ஒளிந்திருக்கவில்லை

அன்று அமாவாசையும் இல்லை

எங்கே சென்றது என்பதின்

மர்மமும் விலகவில்லை

அடுத்த நாள்

அதனிடமே கேட்டேன்

தன்னைத் தூளாக்கி

கடலை நிரப்பி

பூமியை முழுமையடையச் செய்ய

சென்றதாக சொன்னது

என்னால் நம்ப முடியவில்லை

ஆனாலும்

நேற்று  நான் கடலைப்பார்க்கவில்லை

நீங்கள் யாரேனும்பார்த்தீர்களா?.

4.

தொலைந்தப் பகல்

 

சாலையில் வெளிச்சமடித்து

எதையோ தேடிக் கொண்டிருந்தது

தெருவிளக்கு

சுற்றி வட்டமடித்த பூச்சிகள்

ஆவலாய் கேட்டன

எதை தேடுகிறாய் என்று

எதுவும் சொல்லாமல் மெளனமாய்

நின்றது

கடந்து சென்ற நாய் ஒன்று கேட்டது

அப்போதும் மெளனம் தான்

சரி

தொலைத்தப் பொருளுக்காக

காவல் இருப்போமென

அங்கையே கால்நீட்டிப் படுத்தது

அவசரத்தில் சென்ற வாகனங்கள்

இது எதையும் கவனிக்கவில்லை

மனிதர்களைப் பற்றி

சொல்லவே வேண்டாம்

இரவு முழுவதும்

தலைகுனிந்து மெளனமாய் நின்ற அது

விடிந்ததும் அணைந்துவிட்டு

காலடியில் உறங்கிக் கொண்டிருந்த

நாயின் கனவில் சொன்னது

தொலைந்து போன இந்தப்பகலைத் தான்

தேடினேன் என்று.

 

5.கீழே விழும் கடல்.

 

மழை பெய்தால்

விழ இடமில்லை

உலர நிலமில்லை

ஆனாலும் விடாமல் பெய்கிறது

வைரமழை

கூரையும் இல்லாமல்

குடையும் இல்லாமல்

வளையங்களில் குடியிருக்கும்

ஒருவன்

வால் நட்சத்திரங்களை

வானுக்குத் திருப்பி அனுப்பி

கடலைத் தேடுகிறான்

மிதக்கும் அவன் வீட்டை

நீரிலிட்டு நீந்தச் செய்து நிலத்தை அடைவதே

அவன் இலக்கு

எங்கும் கடல் இல்லை

இருக்கும் ஒரே கடலும்

ஒரு கோளத்தில் நிறைந்துள்ளது

இப்போது

அந்த கோளத்தைக் கவிழ்த்து

கடலை சிந்த வைக்க வேண்டும்

 

அதற்கென்ன வழியென்றுக் கூறுங்கள்

கோளத்தில் எப்படி கடல் நிறைந்தது

என்பதை

அவன் பின்னால் கூறுவான்.

6.

 

மகிழ்ந்திருத்தல்

 

மகிழ்ந்திருத்தல் என்பதெல்லாம்

தனிமை பொழுதுகளில்

கடந்தவற்றை

நிகழ்பவற்றை

வருபவற்றை நோக்கிய

சஞ்சலமற்ற

அமைதியான

மனதின் பிரதிபலிப்பே.

மற்றவை யாவும்

நிச்சயமற்ற ஓர் நேரத்தின்

கொண்டாட்டங்களே.

7.

கூந்தல் ஏறும் பூக்கள்.

 

மகரந்தச்சேர்க்கை முடிவில்

கருவுறாதப் பூக்களை எல்லாம்

மரம் உதிர்த்து விடுகிறதா

இல்லையெனில்

கருவுறாததினால் பூக்களே

உதிர்ந்து விடுகின்றனவா

ஒருவேளை

எத்தனை எடையை தாங்க முடியுமென்று

மரமும், பூக்களும்

கலந்து பேசியிருக்குமோ என்னவோ

தெரியவில்லை

இந்த புரிதலின் விளக்கம் புரியாமல்

யோசித்துக் கொண்டிருந்தேன்

திடீரென்று எங்கிருந்தோ வந்தவள்

முற்றத்து ரோஜாவைக் கிள்ளி

தலையில் சூடிக் கொண்டாள்

அவ்வாறெனில்

இது என்ன புதுக் குழப்பம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *