1.கையேல்தல்
நெரிசலில்லா
இருக்கைகள் நிறைந்த பேருந்தில்
முன்வழியேறி யாசிக்கிறாள்..
வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளில்
நிறைத்த கண்களில்
பழக்கப்பட்ட வலியின் இனிமை
ஒவ்வொரு இறைஞ்சலிலும்,
எவர் கையிலிருந்தும் வெள்ளி இசைக்கவில்லை,
அவள் பித்தளை ஒலித்தட்டில்..
வேண்டுதல் நிறைவேறா பக்தனாய்
பின்வழி இறங்கையில்,
வஞ்சகமின்றி இசைத்தது
“ஓர் ஐம்பது பைசா கருணை”.
2.வெறுமனே காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
சிறகுகள்
அதன் அந்தர ஊசலில்
அடுத்த கணம்
எங்கு திரும்புமென
அறியாச் சிலிர்ப்பில்
மறைத்துள்ளது
அத்தனை அழகையும்
வாழ்வும் அப்படியே.
3.கொலை சாட்சி.
எதையோ தேடி
சுடரை சுற்றி பறக்கும் பூச்சியிடம்
எவர் சொன்னது?
ஒளி உள்ள இடத்தில்
வாழ்வு உண்டு என,
இதோ, கருகி நிலத்தில் விழுகிறது.
சுடரை உச்சியிலேற்றி
கையறு நிலையில் நிற்கும் மெழுகு
கசிந்துருகி சொட்டிய கண்ணீர்
மெல்லோசையாக கேட்கிறது.
நான்
கொலை கூண்டில்
சாட்சியாக நிற்கிறேன்.
4.கார் காலம்.
கடலின் கண்ணீர் நான்
வானின் மேகம் நீ
வா..
நீயும், நானும்
ஒரு முடிவில்லாத பயணம் போகலாம்
நீ அணைத்துக்கொள்
நான் ஏற்றுக்கொள்கிறேன்
நம் விசும்பலால்
5.மழைக்கூடல்.
நொடிநேரம் மின்னி மறையும்
மின்னல்
சிமிட்டும் உன் கண்கள்
ஒளிப்படமாக நின்று பின்
தொடரும் மழை
துடிக்கும் என் இதயம்
ஒரு துளிகூட மிச்சமில்லாமல்
நான் பெய்து முடிக்கும் போது
நீ கண்மூடி தூங்க சென்றாய்
கூரை அமைத்த வானமோ
நட்சத்திரங்களால் பூக்க,
கனத்து சொட்டிய இரவு
பெருமூச்சு விட்டுக்கொண்டு
திரும்பி படுத்தது.