வதை முகாம் 2.0

“என்னால் முடியாதது  ஒன்றுமில்லை”

“மனிதன் என்பவன் எதையாவது சாதிக்க வேண்டும்”

“எனக்கு நானே தலைவன்”

காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட வாசகங்களை  வாசிப்பேன். எனக்குள்  தீ பரவும். இவ்வுலகில், நான்  தனித்து தெரிய வேண்டும் என்ற வேட்கை பிறக்கும்.

இன்றும் அப்படிதான். நான் துணி விற்பனையாளராக இருக்கிறேன். வீட்டுக்கு வீடு சென்று துணியை விற்பதில் வித்தகரான கிரிஜன் தான் என் முன்மாதிரி. அவரைப் போல் நானும் உயர்ந்த இடத்திற்குச் செல்ல வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தீ போல.

பல்லைத் தேய்த்து விட்டு, குளித்து உடைகளை மாற்றிக் கொண்டேன். இந்த உடையில் தான் எனக்கு 500 லைக்குகள் விழுந்தது. அப்படியென்றால் நான் இந்த உடையில் அழகாக இருக்கிறேன் என்று அர்த்தம். நான்  மூன்று போஸ்களை இன்ஸ்ட்டாகிராமில் பார்த்தேன். அந்த போஸ்களில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற திட்டம் .

பைக்கில் கம்பெனிக்கு போகிற வழியில் எவனோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். பேன்ட் ஜிப்பை அவிழ்த்தான். “என்னடா செய்ற?” என்று கத்தினேன். “எனக்கு பிடிச்சித நான் பண்றன் உனக்கென்ன வந்துச்சு, உன் வேலையப் பாத்துட்டு போயா” என்றபடி நடுரோட்டில் மூத்திரம் போனான். நானும் அவன் கருத்துக்கு உடன்பட்டு மூத்திர குட்டையை கடந்து சென்றேன்.

கற்பனையில் மிதந்து கொண்டே சென்றேன். என் மனம் முழுதும் கிரிஜன் நடித்த விளம்பர படம் தான் ஞாபகம் வருகிறது. கிரிஜன் மாளிகையினுள் செல்வார். மாளிகை முழுவதும் “கனோரா” கடை ஆடைகள் தொங்கி கொண்டிருந்தது. கிரிஜன், அந்த மாளிகையின் உரிமையாளரிடம் சொல்வார், “இந்த மாளிகையை அழகு படுத்துவதே இந்த கனோராவின் ஆடைகளால் தான்”. பிறகு, நம்மை பார்ப்பார், “Be Majestic” என்று சொடுக்குவார். நான் அவரை போல் கண்ணாடியில் செய்து பார்த்து கொண்டே இருந்தேன். சொடுக்கி.. சொடுக்கி.. விரலே வலி எடுத்து கொண்டது. நானும் கூடிய சீக்கிரமே பெரிய ஆளாக ஆகி விளம்பரத்தில் வருவேன். பல புத்தகங்கள் வாங்கி வைத்து இருக்கிறேன். உதாரணமாக, “மக்களின் மனதை மயக்குவது எப்படி?” “விற்பனை மந்திரவாதி” ஆகிய புத்தகங்களில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் நான் கூடிய சீக்கிரத்தில் கற்று தேர்ந்து பெரிய விற்பனையாளராக வருவேன். முதலில் கிரிஜன் அணிந்திருந்த உடையை வாங்க வேண்டும். அது மிகவும் விலை உயர்ந்தது. கடன் வாங்கியாவது வாங்க வேண்டும். அந்த ஆடையை போட்டு கொண்டு ஒரு ஃபோட்டோ எடுத்து இன்ஸ்ட்டாகிராமில் போட வேண்டும்.

முக்கியமான ஒரு புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டும். புத்தகத்தின் பெயர்: “உன்னால் முடியும் தம்பி”. இந்நகரில் உள்ள எல்லோர் வீட்டிலும் அந்த புத்தகம் இருக்கும். அந்த புத்தகம் எங்களுக்கெல்லாம் பைபிள் போன்றது. அதன் வாசகங்களை ஒரு காகிதத்தில் எழுதி என் அறையில் ஒட்டி இருப்பேன். புத்தகத்தின் தலைப்பை கண்டித்து பெண்கள் எல்லாம் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார். உன்னால் முடியும் தம்பி என்று ஏன் பெயரை வைக்க வேண்டும். தங்கைகளால், அதாவது பெண்களால் எதுவும் செய்ய முடியாத என்று ஆர்பாட்டம் செய்தார்கள். “உன்னால் முடியும் தம்பிகளே தங்கைகளே” என்று பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதுக்கு பிரெச்சனை என்று அடுத்த பதிப்பில் “உன்னால் முடியும்” என்று தலைப்பை மாற்றினர். வீட்டில் இருக்கும் புத்தகத்தை தூக்கி போட்டுவிட்டு, பெண்கள் எல்லோரும் அந்த புத்தகத்தை வாங்கினர். சில ஆண்கள், தன் வீட்டில் இருக்கும் “உன்னால் முடியும் தம்பி” என்று தலைப்பு இருக்கும் புத்தகத்தை தூக்கி போடவில்லை. ஆதலால், அவர்களுக்கு “ஆணாதிக்காவதிகள்” என்ற பட்டம் கிடைத்தது. நான் இரண்டு புத்தகத்தையும் வைத்துள்ளேன்.

கடை வந்து விட்டது. என் முதலாளி மிகவும் என் மீது அன்பு கொண்டவர். என்னை ஊக்குவிப்பார். நேற்று பதினைந்து துணிகளை விற்றேன். இன்று, இருபது துணிகளை விற்பதாக அவரிடம் சொன்னேன். “உன்னால் முடியாதது என்று ஒன்றுமில்லை தம்பி” என்று உத்வேக படுத்தினார். இருபது துணிகளை என் பைக்கில் பூட்டி கொண்டு சென்றேன்.

ஃபோன் ரிங் அடித்தது, பைக்கை ஓரமாக நிறுத்தினேன். என் லவ்வர் மஞ்சரி தான் ஃபோன் செய்திருக்கிறாள். நான் அவளிடம் என் காதலை சொல்வதற்குள் பெரிய போராட்டம் ஆனது. ரோஜா பூவை வாங்கி கொண்டு சென்றேன். அவளிடம் லவ் சொல்லலாமென ரோஜா பூவை எடுக்க பேன்ட் பாக்கெட்டை தொட்டேன். பூவை காணவில்லை. ரோஜா பூ இல்லமால் காதலை வெளிப்படுத்துவதா… அது எப்படி சாத்தியம். பூக்கடைக்கு ஓடி சென்றேன். பூக்கடைக்காரரிடம் ரோஜா பூவை கேட்டேன். அவர் இல்லை என்று சொல்லி விட்டார். நான் நடந்து வந்த பாதையின் வழியே சென்றேன். ஆஹா! கிடைத்து விட்டது. எடுத்தேன். பார்த்தால் ஒரு இதழ் வாடி போய் இருந்தது. அந்த இதழை மட்டும் பிய்த்து எறிந்து, அவளிடம் நீட்டி ” ஐ லவ் யூ” என்று முட்டி போட்டு சொன்னேன். இரண்டு நாளாக முட்டி வலி. இருந்தாலும், காதலை வெளிப்படுத்துவதற்கான நிலை இதுதான் அல்லவா. ஆதலால், முட்டி போட்டு சொன்னேன். அவள் ஒப்பு கொண்டாள். காதல் செய்வதற்காக மூன்று இடங்கள் உள்ளது. அந்த மூன்றுக்கும் சேர்த்து 1500 ரூபாய் வருகிறது. அதை சேமிக்கும் வரை காதல் செய்வதை நிறுத்தி உள்ளோம். காதல் செய்வதற்கான இடங்களில் சென்று காதல் செய்தால் தானே என் காதலுக்கு மதிப்பு இருக்கும். இல்லையென்றால் தாழ்வான காதலாக மாறிவிடாதா. நாங்கள் இருவரும் காசு சேமிப்பதை பாதியாக பிரித்து கொண்டோம். அவள் தன் பாதியை சேமித்து விட்டதைதான் கால் செய்து சொன்னாள். நான் இன்றைக்குள் சேமித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பைக் எடுக்கையில் என் நண்பன் வருவதை பார்த்தேன். பேசலானேன்..

“வாங்க தொழிலதிபர் சந்திரன்”

“வாங்க விற்பனை வித்தகர் மனோ”

“கேக்க நல்லதான் இருக்கு. ஆனா பாரு மதியம் ஆயிடுச்சு ஏழு துணி தான் வித்துருக்கன்”

“உன்னால முடியும் டா.. நீ வேனும்னா பாரு நீ பெரிய ஆளா வருவா”

“உன் பிசினஸ் என்னாச்சு”

“அத பத்தி பேசதான் ஒரு ஆளா பாக்கபோறன். என்கிட்ட இப்போதைக்கு 100 காண்டாக்ட்ஸ்.. இன்னும் 100, 200 காண்டாக்ட்ஸ் தேத்துனா, பிசினஸ்க்கு யூஸ்ஃபூல்லா இருக்கும்”

“சரி… பேசி டைம் வேஸ்ட் பண்ணா வேணாம்.. வேலைய பாப்போம்”

அவன் கிளம்பினான். நான் துணி விற்பதற்கு இன்னொரு வீட்டுக்கு சென்றேன். ஆனால், அங்கே ரமேஷ் இருந்தான். அவனும் என் கடையில் தான் வேலை பார்க்கிறான். மக்களை மயக்கி துணி விற்பதில் கில்லாடி. எப்போதும் ஒரு சென்ட் அடித்து கொள்வான். மிகவும் வாசனையாக இருக்கும். அந்த வாசனை, துணி வாங்க விருப்பம் இல்லாதவர்களையும் சிறிது நேரம் நிற்க வைக்கும். அந்த சிறிது நேரத்தில் தன் வார்த்தை ஜாலத்தை கொண்டு துணியை விற்று விடுவான். நல்ல டெக்னிக் தான். அவனை விட அதிகம் விற்றால் தான் நான் உயரத்தில் இருக்க முடியும்.

இப்போது என்னிடம் பதிமூன்று துணிகள் உள்ளது. நான் மக்களை கவனித்து, அவர்களுக்கு எதன் மீது இஷ்டம் என்று கண்டுபிடித்து, அதை வைத்து வியாபாரம் செய்வேன். அங்கே ஒரு வீடு இருக்கு, அங்கு செல்லலாம். வீட்டின் கதவை தட்டியவுடன் ஒரு பெண் கதவை திறந்து வெளியே வந்தாள். அவள் பூ போட்ட புடவை கட்டி இருந்தாள். கதவை திறக்கும்போது, வீ‌ட்டி‌ல் சந்தியா(பிரபல நடிகை) போஸ்டர் ஓட்ட பட்டிருந்தது. மூன்று பூ போட்ட புடவையை எடுத்து அந்த பெண்ணிடம் காண்பித்தேன். அவள் கண் விரிந்தது. புடவையை அவளிடம் குடுத்தேன்.  பிறகு பேச்சு குடுத்தேன்,

“அடுத்த படத்தில் ஷைனிங் ஸ்டார் சந்தியா இந்த மாடல் புடவையதான் கட்ட போகறாங்க தெரியுமா!!” என்று சொன்னேன்.

“அப்படியா” என்று ஆச்சர்யப்பட்டாள்.

“ஆமா.. எங்க கடையில அதும் இந்த மாடல் புடவையதான் அவங்க ஆர்டர் பண்ணாங்க.. உங்களுக்கும் இந்த மாடல் பிடிக்கும் போலையே.. உங்களுக்கும் அவங்களுக்கும் ஒரே டேஸ்ட் போல”

மூன்று புடவையையும் வித்தாயிற்று.

இன்னும் நான் ஐந்து வீடுகளை குறித்து வைத்து உள்ளேன். மீதம் இருக்கும் பத்து துணிகளையும் விற்க வேண்டும். விற்பேன் என்று நம்புகிறேன்.

ஐந்து மணி நேரம் கழித்து…

இன்னும் ஒரு துணி (ஜீன்ஸ்) தான் பாக்கி. எப்படியும் விற்க வேண்டும். அதோ ஒருவன் வருகிறான். சாதா பேன்ட் போட்டிருந்தான். நான் அவனிடம் ஜீன்ஸை குடுத்து வைத்து பாக்க சொன்னேன். தன்னை அந்த ஜீன்ஸில் கற்பனை செய்து விட்டால் போதும். வாங்கி விடுவான். ஏனென்றால், அவன் அந்த ஜீன்ஸை தொடும் நொடி கால் பகுதி உரிமையாளராக ஆகிவிடுவான். அதை, தனக்கு வைத்து கொண்டானானால் இன்னொரு கால் பகுதி உரிமையாளராக ஆகிவிடுவான். கற்பனை செய்து விட்டால் இன்னும் அறை பகுதி உரிமையாளராக ஆகி விடுவான். அவன் முகம் மிளிர்ந்தது. ஜீன்ஸை வாங்கி கொண்டான். காசும் பார்த்தாயிற்று. இருபது துணிகளை சாயங்காலத்துக்குள்ளேயே விற்று விட்டேன். இது என்னுடைய ஏற்றத்துக்கான அறிகுறி. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

பைக்கை ஸ்டார்ட் செய்து பார்க்குக்கு சென்றேன். பெஞ்ச்சில் உட்கார்ந்தேன். என் நேரே ஒரு போஸ்டர் ஒட்ட பட்டிருந்தது. படத்தின் போஸ்டர். படத்தின் பெயர்: “உழைத்திடு ஜெய்த்திடு”. மணி ஆறு ஆகிறது. ஏழு மணிக்கு ஷோ. வெட்டியாக இருப்பதற்கு ப‌தி‌ல் படம் பார்த்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது. பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினேன். டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே சென்று சீட்டில் உட்கார்ந்தேன்.

இரண்டு மணி நேரம் கழித்து…

எப்பா என்ன படம்.. படம் மிகவும் அருமை. ஒவ்வொரு நிமிடமும் என் நாடி துடிப்பை ஏற்றியது. ரத்த பாய்ச்சல் அதிகம் ஆனது.

கதை இதுதான். லட்டு சாப்பிடும் போட்டி வர இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அதில் வெற்றி பெற பாலன் பயிற்சி எடுக்க ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்துக்குள் எத்தனை லட்டு சாப்பிட முடிகிறது என்று தனக்கு தானே சோதித்து கொண்டான். ஒரு மணி நேரத்தில் 70 லட்டு சாப்பிட்டான். இது போல் அவன் ஒரு வாரம் உழைத்தான். வார கடைசியில் அவனால் 160 லட்டு சாப்பிட முடிந்தது. போட்டி நாள் வந்தது. பாலன் போட்டிக்கு சென்றான். வீட்டில் அவனை உற்சாக படுத்தினார். போட்டி ஆரம்பித்தது. பத்து போட்டியாளர்கள். அதில் ஐந்து பேர் 50 லட்டு கூட தாண்டாமல் போட்டியில் இருந்து விலகி விட்டனர். மூன்று பேர் 80 லட்டுகளுடன் போதும் என்று போட்டியில் இருந்து விலகி விட்டனர். பாலனுக்கும், இன்னொருவனுக்கும் தான் போட்டி நடந்து கொண்டிருந்தது. 100..150 என தாண்டி போக. ஒரு சமயத்தில் அந்த இன்னொருவன்  ஆட்டத்தில் இருந்து விலகினான். பாலன், 200 லட்டு சாப்பிட்டு இருந்தான். எழுந்து ஆர்ப்பரித்தான். திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தான். இறந்து போனான்.

“உச்சத்தில் இருப்பவனே உயர்ந்த மனிதன்

முன்னிலையில் இருப்பவனே உயர்ந்த மனிதன்”

என்ற வாசகத்துடன் படம் முடிவு பெற்றது. பாலன் இறந்தாலும் உயர்ந்த மனிதனாக இறந்திருக்கிறான். இதிலிருந்து உயிர் போனாலும் சரி உச்சத்தில் இருக்க வேண்டும்.. முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற பாடம் கிடைத்து இருக்கிறது.

நான் எட்ட முடியாத உச்சத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை என் உடம்பில் தீ பற்றி எறிகிறது. நாளை எப்படியாவது ஐம்பது துணிகளை விற்க வேண்டும். அப்போது தான் கிரிஜன் கூட எட்ட முடியாத உயரத்துக்கு போக முடியும். உயர்ந்த மனிதன் ஆக முடியும். நான் ஆகியே காட்டுவேன்.

ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..

ஹோட்டலில் இரண்டு தோசை சாப்பிட்டேன். பைக்கை எடுத்து கொண்டு வீட்டை நோக்கி சென்றேன். பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்றேன். படுத்து தூங்க ஆரம்பித்து விட்டேன். காலையில் சீக்கிரம் எழ வேண்டும் இல்லையா..

ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்……

காலை ஆறு மணி ஆகிறது. சீக்கிரம் கிளம்ப வேண்டும். காலை கடன்கள் எல்லாம் முடிந்தது. பைக்கை எடுத்து கிளம்பினேன். கடைக்காரரிடம் ஐம்பது துணிகளை வாங்கினேன். ஆச்சர்யப்பட்டார். ஆனால், என் மீது அவருக்கு நம்பிக்கை இருப்பதால், ஆச்சர்யத்துடன் நிறுத்தி கொண்டார். ஐம்பது துணிகளையும் பைக்கில் பூட்டி கொண்டேன். இன்னொரு விற்பனையாளன் என்னை புருவத்தை தூக்கி பார்த்தான். “இவ்ளோ துணிகள பைக்ல கொண்டு போறதே சாதனை தான்” என்று சொன்னான். “இத இன்னைக்குள்ள விற்கறதுலதான் சாதனையே இருக்கு” என்று சொல்லி விட்டு பைக்கை எடுத்து கொண்டு சென்றேன்.

ஃபோன்னில் உள்ள காண்டாக்ட்ஸை ஏன் யூஸ் பண்ண கூடாது என்று தோன்றியது. ஒவ்வொருத்தருக்கும் ஃபோன் செய்தேன். வேண்டாம் என்றவர்களை பிளாக் லிஸ்ட்டில் போட்டேன். சில பேர் வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் தான் எனக்கானவர்கள். கேட்டவர்களுக்கு கொண்டு போய் கொடுத்தேன். மதியம் ஒன்று ஆனது. இருபது துணிகள் விற்று தீர்ந்தது. என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கிறது.

சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு பதினைந்து நிமிடம் ஒதுக்கி உள்ளேன். ஹோட்டலுக்குள் சென்றேன். ஒரு மீல்ஸ் ஆர்டர் செய்தேன். வேகமாக சாப்பிட்டேன். என்னை சுற்றி இருந்தவர்களில் சில பேர் என்னை விடவும் வேகமாக சாப்பிட்டார்கள். பாக்கியசாலிகள். நானும் இவர்களை போல் சாப்பிடும் திறமை இருந்திருந்தால், சாதிப்பதற்கான நேரம் அதிகம் ஆகும். என்னால் இந்த நாட்டுக்கு சீக்கிரமாக பெருமை சேர்ந்திருக்கும். சாப்பிட்டு முடித்து விட்டேன். வேகமாக நடந்து சென்றேன். என்னை இடித்து கொண்டு சென்றேன். பொறாமைகாரன் எங்கே நான் வேகமாக உயர்ந்து விடுவேனோ என்ற பொறாமை தனத்தால் என் வேகத்தை குறைக்கிறான்.

ஒரு வீட்டிற்கு சென்றேன். கதவை தட்டினேன். திறப்பதற்கு இரண்டு மூன்று நிமிடங்கள் எடுத்து கொண்டனர். ஏன் தான் மனிதர்கள் இவ்வளவு சோம்பேறிகளாக இருக்கிறார்களோ. எப்படியோ பேசி இரண்டு துணிகளை விற்றேன். மணியை பார்த்தால் மூன்று மணி. மணி ஏன் இவ்ளோ வேகமாக செல்கிறது என்று தெரியவில்லை, மெதுவாக சென்றால் தான் என்னவாம். நேரத்தை என் அடிமை ஆக்கினால் எப்படி இருக்கும். அப்படி மட்டும் ஆகிவிட்டால். என் உயிர் கரையும் நேரத்தை நிறுத்தி விடுவேன். எனக்கும் வயசும் ஆகாது, உயிரும் போகாது. எல்லா துறைகளிலும் முதல் இடத்தை பிடிப்பேன். உலகிலேயே அதிக நாள் வாழும் மனிதன் என்ற சாதனையை படைப்பேன்.

பைக்கில் சென்று கொண்டிருக்க காற்று என்னை நோக்கி அடைகிறது. என்னை பின்னுக்கு தள்ளுவது போல் இருந்தது. காற்று மிகவும் மோசம். என்னை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக பின்னுக்கு தள்ள பார்க்கிறது. காற்று சதி செய்கிறது. இந்த உலகத்தை விட நான் மிக வேகமாக உழல்வேன் என்ற காரணத்தினால் தான் காற்று என்னை இப்படி பின்னுக்கு தள்ளுகிறது போலும். நல்ல திட்டம் தான். இருந்தாலும் நான் சோர்ந்த் போக மாட்டேன். காற்றை கிழித்து கொண்டு செல்வேன்.

யெப்பா.. மணி ஐந்து ஆகிறது. இன்னும் இருபது துணிகள் இருக்கிறது. என் உடல் மனம் இரண்டிலும் குடியிருக்கும் சக்தியை யாரோ வழித்து எடுத்தது போல் இருக்கிறது. இது கவலை படுவதற்கான விஷயம் இல்லை, இது வெற்றிக்கான அறிகுறி.

ஐந்து வீட்டுக்கு இரண்டு துணிகள் என்ற கணக்கில் விற்றால், ஒரு இரண்டு மணி நேரத்துக்குள் வேலை முடியும். நேரமில்லை சீக்கிரம் விற்க வேண்டும். ஒரு வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன். அவர்கள் “வாங்க வாங்க” என்று வரவேற்றனர். அவர்கள் துணி வேண்டும் போல். எல்லா துணிகளையும் பார்த்தார்கள். ஐந்து துணிகளை எடுத்து கொண்டு காசு கொடுத்தனர். எனக்கோ சந்தோஷம் தாளவில்லை. உலகம் எனக்காக இயங்குவது போல் இருந்தது. இன்னும் பதினைந்து துணிகள் இருக்கிறது. சீக்கிரம் வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். அப்படி முடிந்து விட்டால், மீண்டும் ஒரு முறை “உழைத்திடு ஜெயிச்சிடு” பார்க்கலாம்.

பக்கத்து வீட்டுக்கு சென்று கதவை தட்டினேன். கதவை திறந்து என்னை ஏற இறங்க பார்த்தார்கள். “வேண்டாம்” என்று சொல்லி கதவை மூட போக, “ஒரே நிமிஷம் டைம் குடுங்க”னு சொன்னேன். அதற்கு “இல்ல டைம் இல்ல”னு மூடிவிட்டார்கள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். நானும் மீண்டும் மீண்டும் கதவை தட்டினேன். ஆனால், ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை.

மூன்று.. நான்கு வீட்டுக்கு சென்று முயற்சி செய்து பார்த்தேன். யாரும் அசர வில்லை. என் பேச்சுக்கு யாரும் மயங்கவில்லை. என் ஆட்டம் எங்கும் செல்லுபடியாகவில்லை. அவ்ளோதான் போல நான். தெண்டம் ஆகிவிட்டேன்.

“மனோ.. உனக்கு தெறமையும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. இவ்ளோ நாள் ஏதோ லக்ல வித்துட்ருக்கு. இல்லன்னா எதாச்சு பாவம் பாத்து வாங்கிருப்பாங்க. இனிமேட்டு உன்ன நீயே மெச்சிக்காதா. கண்ணாடில உன் மூஞ்சிய பாத்து நீயே துப்புக்கோ”

மீதம் இருக்கும் துணியை விற்க முடியாது போலும். நான் வீட்டுக்கே கெளம்ப போகிறேன். பைக்கை எடுத்து கொண்டு செல்ல, என்னை ஓவர்டேக் செய்து போனான். மனதில் பெரிய இவன் என்று நினைப்பு. எனக்கு அந்த வாசகம் தான் ஞாபகம் வருகிறது – “உச்சத்தில் இருப்பவனே உயர்ந்த மனிதன்

முன்னிலையில் இருப்பவனே உயர்ந்த மனிதன்”. பைக்கை வேக படுத்தினேன். அவனும் வேகமாக சென்று கொண்டிருந்தான். நானும் அவனை தாண்டி சென்றேன். ஆனால், அது நிரந்தரமாக இல்லை. உடனே, அவன் என்னை தாண்டி விட்டான். நான் விடப்போவதாக இல்லை. இன்னும் பைக்கை வேக படுத்துனேன். சூப்பர்.. நான் அவனை தாண்டி சென்று விட்டேன்.

“நான் உயர்ந்த மனிதன்”

“நான் உயர்ந்த மனிதன்”

“நான் உயர்ந்த மனிதன்”

அய்யோ.. லாரி…

டமால்…..

இத்துடன், இந்த வதை முகாம் 2.0 (Concentration Camp 2.0) வில் ஐம்பதாவது சாவு. ஆரம்பத்தில், இந்த வதை முகாம் 2.0 வில் மக்களின் எண்ணிக்கை 550 பேர் இருந்தார்கள். இந்த ஐந்து மாத காலத்தில், தற்கொலையால் 70 பேரும், விபத்தால் 53 பேரும் இறந்திருக்கிறார்கள். மிஸ்டர் மகேந்திரன் தான் இந்த வகையான வதை முகாமை வடிவமைத்தார். அவர் சொன்ன விஷயங்களை நான் இங்கே பதிவு செய்கிறேன்.

“உன்னால் முடியும் என்ற வாசகம் தான் இந்த வதை முகாம் 2.0 அடிப்படை கொள்கை. இந்த வதை முகாம்க்கு வரும் மக்களுக்கு நாங்கள் உன்னால் முடியும் தம்பி என்ற புத்தகத்தை அளிப்போம். இப்போது அதன் பெயர் உன்னால் முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது. அந்த புத்தகம் அவர்களை வேலை செய்வதற்காக ஊக்கப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று. அது மட்டும் இல்லாமல் நாங்கள் நிறைய புகைப்படங்களை உருவாக்குவோம். அந்த புகைப்படங்கள் அவர்களின் ஆசையை தூண்டும். அவர்களை நிறைய வேலையை பார்க்க வைக்கும். இங்கே இருக்கும் மக்கள் சக்தி இருக்கும் போது வேலை செய்யவும், வேலை இல்லமால் சும்மா இருக்கும் போது நுகர்வோராகவும் இருப்பார்கள். அவர்கள் சம்பளம் மீண்டும் எங்களிடமே வந்துவிடும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் பெரும் பகுதியை ஏற்றுமதி செய்வோம். அதில் நிறைய பணம் வரும். இங்கே இருக்கும் மக்கள் தேவையானதற்கும் மேலேயே வேலை செய்வார்கள். அவர்களால் முடியாதது என்று எதுவும் இல்லை அல்லவா. சந்தோஷமாக ஓடாக தேய்ந்து போகிறார்கள்”

“அதுவும் முன்னே இருந்த வதை முகம் விடவும் தற்போது நான் வடிவமைத்த இந்த வதை முகாம் 2.0 மிகவும் சக்தி வாய்ந்ததாக உ‌ள்ளது. முன்னால் இருந்த வதை முகாமில், தண்டனைக்கு உட்பட்ட மக்களை அடைத்து அவர்களை விடாமல் வேலை வாங்குவோம், அவர்களுக்கென எந்த சௌகரியமும் இருக்காது, அவர்களை கண்காணிக்க வேண்டும். இப்போது இருக்கும் வதை முகாமில், தண்டனைக்கு உட்பட்ட மக்களுக்கு அவர்கள் பிடித்த விஷயங்களை செய்யலாம் என்ற சுதந்திரத்தை அளித்துள்ளோம். அவர்களுக்கு என்ன பிடிக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு பண்ணுவோம். படங்கள் மூலையமாக சமூக வலைத்தளங்கள் மூலையமாக இன்னும் பல விஷயங்கள் மூலமாக அவர்களுக்கு என்ன பிடிக்க வேண்டுமோ அந்த விஷயங்களை பிடிக்க வைப்போம். அவர்களும், நான் எனக்கு பிடித்த விஷயங்களை செய்கிறேன் என்று எங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்கிறார்கள். ஊக்கப்படுத்தும் வகையில் பாடல்கள் படங்கள் என உருவாக்குவோம். விளைவாக, மக்கள் சுதந்திரமாக உழைப்பார்கள். மக்கள் சிந்தனை முழுவதும் தான் எப்படி உயர்ந்தவன் ஆக வேண்டும் என்ற வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும். சாதிக்க வேண்டும் என்ற வெறி வரும். நாங்கள் சாப்பாடு தண்ணீர் குடுக்காமல் தடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களே சாப்பாடு தண்ணீர் இல்லமால் வேலை செய்வார்கள். நாங்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அவர்களையே கண்காணித்து கொள்வார்கள்”

“எளிதாக சொல்ல வேண்டுமென்றால், முன்னால் இருந்த வதை முகாமில், நாங்கள் தலைவனாகவும், தண்டனைக்கு உட்பட்டவர்களை அடிமையாக வைத்து இருப்போம். இப்போது, இந்த வதை முகாம் 2.0 வில் அவர்களை நாங்கள் தலைவர்களாக மாற்றிவிட்டோம். விளைவாக, அவர்கள் அவர்களையே அடிமையாக்கி கொண்டார்கள். எங்கள் மேல் கோபமும் வராது, புரட்சியும் நடக்காது. ஏனென்றால், நாங்கள் அவர்களை வதைக்கவில்லையே, அவர்கள் அவர்களையே தானே வதைத்து கொள்கிறார்கள். ஆதலால், இந்த வதை முகாம் 2.0 வெற்றி பெற்ற ஒரு வடிவமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *