“லவ்வாது மண்ணாங்கட்டியாவது.. அதெல்லாம் எனக்கு வராது.. “
“ஒலகத்துல உயிர்லாம் இருக்குற வர.. லவ் இருக்கும்.. உயிர்ங்க எல்லாம் ஒலகத்த விட்டு மறையும்போது லவ்வும் மறஞ்சு போய்டும்.. உனக்கு உயிரிருக்கா.. உயிர் ஓடுதா ஒன் ஒடம்புல”
“ஒலறாத.. நேரத்த வீணடிக்கிற எந்த செயலையும் செய்ய மாட்டன்.. அதனாலயே நான் ஒதுக்கி தள்ற மொத விஷயம் லவ்”
“உன் நேரம் உன் கைல இருக்கா?.. நேரத்தோட வளைவு சுழிவு எல்லாம் உனக்கு அத்துப்படியா?
– – – – – – – – – – – – – – – – –
“நேரம் எனப்படுவது நூல்கள் பின்னி கொண்டே போவது போன்றது. அதன் நாடி அதனுள்ளே பூட்ட பட்டுள்ளது. அந்நூல் அறுபட்டால்…”
சர்வேஷ் புத்தகத்தை கோபத்தில் தூக்கி எறிந்தான்.
“தெரியாத விஷயத்தபத்தி பேசாம இருக்கறது தான சரி.. அதுக்கு பதிலா ஏன் இப்டி தெரிஞ்ச மாறி பாவன காட்றாங்க”
புரிந்தும் புரியாமல் இருக்கும் மாயையில் யார்தான் விழாமல் இருக்க விரும்புவார்கள். சர்வேஷ் மீண்டும் புத்தகத்தை எடுத்து மெதுவாக படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு எழுத்துக்கும் மதிப்புண்டு என்ற விழிப்பு இருந்தால்தான் எல்லாம் பிடிக்கிடைக்கும் என்று அறிந்து கொண்டான்.
வாழ்க்கையின் சந்து பொந்துகளை மற்றும் மூலை இடுக்குகளை புத்தகத்தின் மூலம் கண்டைய முடியும் என்று நம்பினான். புத்தகங்களே ஆயுதமாகவும், சிந்திப்பதை பொழுது போக்காகவும் வைத்து கொண்டான். எழுத்தாளர்கள் தன் வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையை புத்தகத்தின் மூலம் வாழ்கிறார்கள் என்று கருதினான்
எல்லா வினாவுக்கும் விடைகளை வைத்து இருந்தான். உலகத்தின் கதவுகளை மூடுவதில் அவனுக்கு அவ்வளவு ஆனந்தம். ஆனால், கதவுகளை மூட மூட இன்னும் பல கதவுகள் முளைப்பதை அவன் உணராமல் இல்லை. காதலையுமே ஹார்மோன்களின் ஆட்டத்தின் விளைவு என்ற அறிவு சட்டகத்தை போட்டு கொண்டு அனுபவ பாதையில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டான். ஆனால், வாழ்க்கை பொல்லாததல்லவா!
சர்வேஷ், எப்போதும் போல பூங்காவுக்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். யாரோ அவனை பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்ற, திரும்பி பார்த்தான். அவனுடைய பார்க்மேட் பூஜாதான் பெஞ்சில் உக்காந்து அவனை பார்த்து கொண்டிருந்தாள். அவன் பார்த்ததை கண்டு பூஜா ஓடி வந்து சர்வேஷ் பக்கத்தில் உட்கார்ந்தாள். உற்சாகத்துடன்,
“ஹே, நான் பாக்கறன்னு உன் மனசுக்கு பட்டுச்சா”
“யாரோ பாக்குற மாறி தோணுச்சு.. அதான் திரும்புனன்”
“நான் ஒரு தியரி வெச்சிருந்தன்.. ஒரு சம்பவத்த கற்பன பண்ணிட்டு.. அத தொடர்ச்சியா மைண்ட்ல ஒட்டிட்டு இருந்த அது நடக்கும்னு.. உன் மூலமா அது ப்ரூவ் ஆய்ட்ச்சு”
“போடி பைத்தியகாரி..”
“போடா டேய்”
“உனக்கு லவ் வந்துருக்கா.. லவ் பண்ணிருக்கியா?”
“லவ்வாது மண்ணாங்கட்டியாவது.. அதெல்லாம் எனக்கு வராது.. “
“ஒலகத்துல உயிர்லாம் இருக்குற வர.. லவ் இருக்கும்.. உயிர்ங்க எல்லாம் இந்த ஒலகத்த விட்டு மறையும்போது லவ்வும் மறஞ்சு போய்டும்.. உனக்கு உயிரிருக்கா.. உயிர் ஓடுதா ஒன் ஒடம்புல”
“ஒலறாத.. நேரத்த வீணடிக்கிற எந்த செயலையும் செய்ய மாட்டன்.. அதனாலயே நான் ஒதுக்கி தள்ற மொத விஷயம் லவ்”
“உன் நேரம் உன் கைல இருக்கா?.. நேரத்தோட வளைவு சுழிவு எல்லாம் உனக்கு அத்துப்படியா?
“ஹே.. லவ்லாம் ஒன்னும் இல்லடி.. அது வெறும் மூளைல நடக்குற வேதியியல் மாற்றம்.. அவ்ளோதான்”
“அப்டிதான் இருக்கட்டுமே.. என்ன கொறஞ்சி போச்சு”
“யோசிச்சு பாரேன்.. உன்ன செவுற பாத்த மாறி உக்கார வெச்சு.. உன் மூளைல இருக்க ஆக்ஸிடோசின ஏத்தி விட்டா உனக்கு லவ் வரும்.. பாத்துக்கோ செவுத்த கூட லவ் பண்ண வெச்சிடலாம்”
“லவ்வ கடவுளுடைய செயல்னு ஒசத்தறவுங்களுக்கு குடுக்கற பதில் மாறி இருக்கு.. டேய் சர்வேஷா எல்லாத்தையும் சுருக்கி துச்சமா ஆக்காதடா”
ட்ரிங்ங்ங்ங்ங்………….
“ஹே டார்லிங், என்ன இன்னைக்கு மணிக்கணக்கா தூங்குற”
சர்வேஷின் காதில் பூஜாவின் ஒலி அலைகள் பட்டு, கண்கள் திறந்தன. மெதுவாக எழுந்து உட்கார்ந்து கண்ணை கசக்கி பார்த்தான். பூஜா அவன் முன் உட்கார்ந்து இருந்தாள். அவள் கன்னத்தை கிள்ளி,
” நீ ஒருமுற.. என்னய பிடிச்சு கேள்வியா கேட்டு கொன்னுட்டு இருந்த பாத்தியா.. அது தான் கனவா வந்துச்சுடி”
“எனக்கு ஞாபகம் இல்லையே”
“உனக்கு அது சாதாரணமான விஷயம்.. ஆனா எனக்கு அப்டி இல்ல.. அதான் போல என் மைண்ட்ல நல்லா ஒட்டின்ருக்கு”
“எனக்கும் ஒரு கனவு வந்திச்சு.. அந்த சம்பவத்துக்கு அப்றம்தான் எனக்கு உன்மேல ஒரு ஸ்பார்க் வந்துச்சு.. அத சொல்லட்டா”
” ஏற்கனவே.. நெறைய தடவ சொல்லிட்டல”
“சொல்லி சொல்லிதான் டா.. கடந்து போன நேரத்த திருப்பி கொண்டு வர முடியும்”
“சரி சரி.. சொல்லு”
அவள் சொல்ல ஆரம்பித்தாள். அவள் வள வள வென பேசி கொண்டு போகிறவள். அவள் சொல்ல நினைத்தை தாண்டி பல விஷயங்களை சொல்லி கொண்டு போவாள். பூஜா பேசியதை இங்கு பதிவு செய்தாள் இக்கதை நாவலாக மாறிவிடும். இந்த கதையை சிறுகதை பதத்துக்கு கொண்டு வர வேண்டுமென்பதால் பூஜா சொன்ன சம்பவங்களை தொகுத்து தருகிறேன்.
சம்பவங்களை பற்றி சொல்வதற்கு முன், சர்வேஷ்-பூஜா இணையின் தற்போதைய நிலையை நான் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். சர்வேஷும் பூஜாவும் ஒன்றாக தான் வாழ்கிறார்கள். சொந்த பந்தங்கள் இல்லமையால் கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லமால் போனது. மன ஒப்பந்தமே போதுமானதாக இருந்தது. அவர்கள் இருவரும் சந்தோஷத்தின் உச்சியில்தான் ஒவ்வொரு நாளையும் கடக்கிறார்கள்.
காதலை பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி கொள்கிறார்கள்,
- கன்னங்களை கிள்ளி கொள்வதன் மூலமாக,
- இறுக்கி கட்டி கொள்வதன் மூலமாக,
- கைகளை கெட்டியாக பிடித்துக் கொள்வதன் மூலமாக,
- இருவரும் சேர்ந்து வேடிக்கை பார்த்து கொள்வதன் மூலமாக,
- ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதன் மூலமாக,
- நடனம் ஆடுவதன் மூலமாக,
- அழகான உரையாடல்கள் மூலமாக,
- நிர்வாண களியாட்டங்கள் மூலமாக
- … ∞
கவிதைகளும் பரிமாறி கொள்வதுண்டு. சர்வேஷ் பூஜாவுக்காக எழுதின கவிதை பின்வருமாறு,
“யான் நெஞ்சின் அறியா பக்கங்களை அறிய வைத்தாயடி என் கண்மணியே! நின் மெல்லிய குரலின் உயிர் என் நாடி துடிப்புடன் கலந்து என்னுடன் ஒன்றானாய்!
உன் முகத்தின் பாவனைகள் என் மனதை மடக்கி மணிக்கணக்கில் உன்னை பற்றி அசை போட வைத்தது! உன் நகை கலந்த நடை என்னை கட்டி போட்டது!
உன் வாசம் என்னுள் புகுந்து என் மூளைவேதியியலில் முறைகேடு நிகழ்ந்தது!
உன் உடலின் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் என்னை பித்து பிடிக்க செய்தது! உன்னை சொந்தம் கொண்டாடுவதில் எனக்கு ஒரு ஆனந்தம்!
உன்னை ஆராய்ந்து அறிவதில் எனக்கு பேரானந்தம்!
உன்னை மனைவியாக நினைக்கையில் ஒரு அல்ப மகிழ்ச்சி!
உன் ஞாபகங்கள் நான் மாய்ந்த பின்னும் வாழும் என் நேரத்தின் மிச்சமாக!”
சரி, இப்போது சம்பவங்களுக்கு போவோம்.
சம்பவம் 1:
பூஜா அவள் தோழி பிறந்தநாளுக்கு பரிசு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டாள். கூடவே, சர்வேஷும் வர வேண்டும் என்று அடம்பிடித்தாள். அவன் நான் ஏன் வர வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்,
“நான் மட்டும் போனா.. யாரு மூஞ்ச பாத்து.. எந்த ஐட்டம் நல்லா இருக்கு.. நல்லா இல்லன்னு கண்டு பிடிக்கிறது”
“ஏன் மூஞ்சில தான் நயமே இல்லன்னு சொல்லுவல”
“அதுக்கு தான் நான் ஒன்னா கூட்டிட்டு போறன்.. உன் மருத்து போன மூஞ்சில எந்த பொருளா காமிச்சா உயிரு வருதுனு பாத்துட்டு, அத நான் கிஃப்டா ச்சூஸ் பண்ணிப்பன்”
“ஓஹ்.. அப்டி சொல்றியா”
” ஆமா, அப்டித்தான்.. வா”
ஆட்டோவை நிப்பாட்டி இருவரும் ஏறி உட்கார்ந்தார்கள். ஆட்டோவின் கண்ணாடியில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தினர். டிராபிக் மற்றும் கடையின் தூரம் பயணத்தை நெடு நேரம் ஆக்கியது. பூஜாவுக்கு சோர்வு கூட, சர்வேஷின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் பெயர் தெரியா உந்துதலால் அவள் தலையை மெதுவாக தடவி விட்டான். அந்த இதத்தில் பூஜாவுக்கும் தூக்கம் வந்து விட்டது. ஆட்டோ கடை பக்கமாக நின்றது. சர்வேஷ், பூஜாவின் கன்னத்தை தட்டி எழுப்பினான். அவள் கண்களை கஷ்டபட்டு திறந்தாள். “கட வந்துட்ச்சு” என அவள் கன்னத்தை அழுத்தமாக கிள்ளினான். அவள் புன்னகைத்து கொண்டே கீழே இறங்கினாள். காரொன்று அவளை இடிப்பது போல் வந்து சென்றது. ஆட்டோகாரர், “பாத்துமா” என கத்தினார். “சர்வேஷ் என்ன பாத்துப்பான்” என்று வாய் தவறி சொன்னாள்.
சர்வேஷ் பூஜாவின் கையை பிடித்து கொண்டு சாலையை கடந்தான். அவள் அவனை பார்த்து, “கடிச்சிடவா” என்று கேட்டாள்.
சம்பவம் 2:
இருவரும் சேர்ந்து ஓர் மியூசியத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தனர். பூஜா ரயிலில் ஏறினாள். சிறிது நேரம் கழித்து அவளுக்கு சர்வேஷிடமிருந்து மெசேஜ் வந்தது.
“பூஜா நான் இன்னைக்கு வரலடி.. நீ போயிட்டு வா.. நம்ம இன்னொரு நாள் பாத்துக்கலாம்”
மெசேஜை படித்தவுடன் பூஜா மண்டையில் அனல் அடிக்க ஆரம்பித்தது. முகத்தில் புழங்கும் நரம்புகள் கடு கடுவென ஆனது. உரிய இடத்தில் ரயில் நின்றது. அவள் எதிர் பக்கம் வர ரயிலில் ஏற வேண்டும் என்பதற்காகவே இறங்கினாள். மழை பெய்ய ஆரம்பித்தது. அவள் குடையை கஷ்டப்பட்டு திறந்து கொண்டே திரும்பினாள். அவளின், புருவங்கள் உயர்ந்தது. ஆமாம், சர்வேஷ் நின்று கொண்டிருந்தான்.
“ஏன்டி.. நல்ல குடையா வாங்க மாட்டியாடி.. நீ குடைய பிடிச்சிட்டு போகும்போது அதுக்குள்ள வரலாம்னு நெனச்சேன்.. ரொமாண்டிக்கா இருந்துருக்கும்”
புன்முறுவலுடன், அவனை கட்டிப்பிடித்து கொண்டாள்.
சர்வேஷ் குடையை பிடிக்க, இருவரும் நடந்து சென்றனர். குடையின் அளவு சிறிதாக இருந்தமையால் பூஜாவை அணைத்து கொண்டே சென்றான். இருவரும் பேசலாயினர்,
“தோ.. பாத்தியா தழும்பு”
“என்னடா ஆச்சு! “
“ஒரு முற கடிச்சியே.. அதான்.. நீ கடிச்சதுனால தான் infection ஆச்சு.. love infection”
“எதும் மருந்து போட்டுகளையா.. பட்டு குட்டி”
“I don’t want to be cured.. its nice to be diseased”
“சரிதான்.. என்ன பிரச்சனலாம் வந்திச்சு”
“உன் கூட பேசற பசங்க மேல பொறாம வந்துச்சு.. நீ என்ன விட்டுட்டு இன்னொருத்தங்க கூட நெருங்கி பழகும்போது உன் மேல possessiveness வந்துச்சு.. இன்னும் என்ன என்னலாம் வர போகுதோ”
“நெஜமாவே இப்படிலாம் ஆச்சா டா.. நம்பவே முடியல”
” என்னாலயே நம்ப முடியலடி.. ஆச்சர்யமாதான் இருக்கு”
” எனக்கு ஜாலி ஜாலியா இருக்கு”
” அடி பாவி.. sadist”
“எப்படிடா என் மேல உனக்கு லவ் வந்திச்சு”
“தெரில.. தெரியவும் வேணாம்.. எதுக்கு ஆராய்ஞ்சிக்கிட்டு”
……..,
மழை எப்போதோ நின்று விட்டது. மியூசியத்தையும் தாண்டியாயிற்று. அவர்கள் பயனில்லா பயணம் ஓயவில்லை.
சம்பவம் 3:
பூஜா சர்வேஷின் தோலில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளுக்கும் அவள் தோழிக்கும் சண்டை முட்டி கொண்டதாம். பூஜா பேச பேச சர்வேஷ் மறுவார்த்தை பேசாமல் தலை ஆட்டி கொண்டிருந்தான். முழுவதுமாக கொட்டி தீர்த்து விட்டாள். சர்வேஷ் “டீ.. பன் சாப்டலாமா” என்று கேட்டான். அவள் சரியென தலை ஆட்டினாள்.
டீக்கடையில் சிறிது நேரத்தை கழித்தனர். அவள் சர்வேஷின் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள். அந்த சூழலில் நிரம்பியிருந்த மனம், சப்தங்கள், ஒளி எல்லாம் கலந்து ஒரு அழகான வடிவம் உருவானது. அவ்வடிவத்தின் மத்தியில் இருவரும் உறைந்து போனார்கள்.
சர்வேஷ் பூஜாவை யாருமில்லா சாலையில் அழைத்து வந்தான். அவளுக்கு கனவுலகில் வந்தது போல் இருந்தது. சர்வேஷ் அவளுக்காக “ரிதம்” என்ற ஒரு பாட்டை அனுப்பி இருந்தான். அந்த பாடலை போட சொன்னான். அவளுக்கு ஒன்றும் புரியாமல் பாடலை போட்டாள். பாடலுக்கு ஏற்றவாறு சர்வேஷ் நடனம் ஆட ஆரம்பித்தான். பூஜா பிரமித்துப் பார்த்து கொண்டிருந்தாள். அவளையும் இழுத்து ஆடினான். பாடல் முடிந்த பின்னும் அவர்களின் நடனம் சிறிது நேரம் நீண்டு போய் நின்றது.
பூஜா சந்தோஷத்துடன், “இந்த நேரம் அப்டியே freeze ஆனா செமையா இருக்கும்டா”
“திரும்ப ரிப்பீட் ஆனா கூட நல்லாதான் இருக்கும்டி”
“ஆமாடா.. என் லைஃப் இதோட முடிஞ்சா கூட எனக்கு சந்தோஷம்தான்.. இந்த லைஃப் மட்டும் ஒரு புக்கா இருந்திருச்சுனா.. இதுவே கடைசி chapterஆ இருந்திருக்கனும்னு ஆச பட்டு இருப்பன்”
அசம்பவம்:
இருவரும் ‘பின்னல்’ என்ற நாடகத்திற்கு சென்றனர். நாடகம் நன்றாக போய் கொண்டு இருந்தது. சர்வேஷ், பூஜாவின் தோலில் கை போட்டு கொண்டும், அவள் அவன் தோலில் சாய்ந்து கொண்டுமிருந்தனர்.
நாடகத்தில், பைரவன் என்ற கதாபாத்திரம் பின்வருமாறு அரங்கம் அதிர கத்தினான்.
“Focus on the Present!”
“Focus on the Present!”
பூஜாவின் தோலின் மேல் போட்டிருந்த சர்வேஷின் கையின் அழுத்தம் குறைய ஆரம்பித்தது. பூஜாவும் நேராக உட்கார்ந்தாள். நாடகம் முடிந்தது. இருவரும் வெளியே செல்லும் போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். எங்கேயோ பார்த்த முகம் என்ற அளவில் தான் இருந்தது. இருவரும் தனி தனியே கிளம்பினார்கள்.
சம்பவம்++:
பூஜா ஆட்டோவிற்காக வெகு நேரம் காத்து கொண்டிருந்தாள். ஒரு ஆட்டோ வருவதை பார்த்து கை காட்டி நிறுத்தினாள். உள்ளே ஏற்கனவே ஒரு ஆள் உட்கார்ந்து இருந்ததை கவனித்தாள். தெரிந்த முகம் தான் – சர்வேஷ். ஆட்டோகாரரிடம், “அண்ணா.. வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் போகனும்” என்று கேட்டாள். அவர், “இவரும் அங்க தான் போகனும்.. உங்களுக்கு ஓகேவாங்க”. சர்வேஷ் சரியென தலையட்டினான்.
ஆட்டோ விரைவாக போய் கொண்டிருந்தது. திடீரென இடி இடித்து மழை பெய்ய ஆரம்பித்தது. சாரல் இருவர் மேலும் அடித்தது. இருவரும் சிறிது நெருங்கி உட்கார்ந்து கொண்டனர். பூஜாவுக்கு ஏனென்று தெரியவில்லை அவன் தோலில் சாயவேண்டும் என்று தோன்றியது. ஆனால் கட்டுபடுத்தி கொண்டாள்.
வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் வந்தது. இருவரும் ஓடி டீக்கடைக்கு சென்றனர். சர்வேஷ் தன்னையும் அறியாமல், “டீ.. பன் சாப்டலாமா” என கேட்டான். அவளும் ஒப்புக் கொண்டாள். இருவரும் டீயை குடித்து கொண்டிருந்தனர். நடைபாதை ஓரத்தில் ஒரு பாட்டி பூக்கட்டி கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொரு பூவாக பின்னி கொண்டிருந்ததை இருவரும் மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தார்கள். திடீரென ஒருவர் கை ஒருவர் பிடித்திருந்ததை கவனித்து சட்டென எடுத்தனர்.
கடையை விட்டு வெளியே வந்தனர். மழை இன்னும் ஓயவில்லை. எங்கிருந்து வந்ததோ சர்வேஷின் கையிலிருந்த குடை. குடையை விரித்தான். பூஜா தயங்கி கொண்டே அவனுடன் நடந்து வந்தாள். சட்டென ஒரு கார் அவர்களை நெருங்கி சென்றது. சர்வேஷ் பூஜாவின் தோலை இறுக்கி பிடித்து கொண்டான். சிறிது நேரம் நின்றனர். பின்பு, மீண்டும் அவர்களின் பயணம் தொடர்ந்தது. அவன் அவள் தோலில் இருந்து கையை எடுக்கவில்லை. மழை பெய்து கொண்டு தான் இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் நின்று விடும்.
இதுதான், அவர்கள் இருவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களின் கோர்வை.
இப்போது, சர்வேஷ் பெரிய எழுத்தாளனாக இருக்கிறான். அண்மையில் அவன் எழுதிய ஒரு புத்தகம் வெளிவந்தது. அதில் முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் சர்வேஷ் என்று இருந்ததால், இக்கதை அவன் வாழ்க்கையில் நடந்ததாக இருக்கலாம் என கிசுகிசுக்க படுகிறது.
சர்வேஷை நேர்காணல் எடுக்க மதன் என்றொருவர் அவன் வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். யாரிடமோ சர்வேஷ் பேசி கொண்டிருப்பது கேட்டது. சர்வேஷ் கதவை திறந்து மதனை வரவேற்று சோஃபாவில் உட்கார சொல்லி விட்டு சமையலறைக்கு சென்றான். வீட்டில் சர்வேஷை தவிர யாருமில்லாதது போல்தான் இருந்தது. மதன் ஹால், ரூமென எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தான். சமையலறையுனுள் நுழைந்து,
“நீங்க மட்டும் தானா வீட்ல..”
“ஆமாங்க..”
“பொண்டாட்டி.. புள்ளைங்க”
“அமயல”
“நான் வரும்போது யாரு கூடயோ நீங்க பேசிட்டு இருந்தீங்க போல”
“ஃபோன்ல.. ஃபிரண்டு கூட”
“ஓஹ்.. சரி சரி”
இருவரும் ஹாலுக்கு சென்றனர். சர்வேஷ் தட்டில் இரண்டு டீ கப்பை எடுத்து வந்து டேபிளின் மீது வைத்தான். இருவரும் சிறுக சிறுக டீயை குடித்து முடித்தனர். மதன், நேர்காணலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தான். சர்வேஷ் ஃபோனை எடுத்தான்.
“இல்லங்க.. பரவால.. ஃபோனெல்லாம் ஸைலன்ட்ல போட வேணாம்”
“ஸைலன்ட்லியா.. ரொம்ப நேரமா ஃபோன் ஆஃப்ல இருக்கு.. சார்ஜ் இல்ல.. போய் போட்டுட்டு வரன்”
சர்வேஷ் எழுந்து சென்றான். அப்போது தான் சுவரில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததை கவனித்தான். அதில் கீழ்வருமாரு எழுதி இருந்தது,
“I don’t want to be cured; it’s nice to be diseased”
சர்வேஷ் திரும்பி வந்து சோஃபாவில் உட்கார்ந்தான்.
நேர்காணல் ஆரம்பித்தது.
Sir nice story…and good writing. But one small correction.. தோல் அல்ல தோள்.
நண்பர் ள விற்கு பதில் ல வை பயன்படுத்தி உள்ளார்… I know editor is not responsible.. but please tell author