ஒரு கோப்பை பாதாம் கீர்

காளிதாசனின் தொண்டை புல் பூண்டு முளைக்க வாய்பே இல்லாது வறண்டு தாகம் எடுக்க ஒரு கடை முன் நின்றான்.

“அண்ணா, ஒரு வாட்டர் பாட்டில் குடுங்க”

“வாட்டர் பாட்டில் இல்லையேப்பா.. பாதாம் கீர் இருக்கு குடுக்கவா”

“சரி.. குடுங்கண்ணா”

“இந்தாப்பா”

என் க்ளாஸில் பாதாம் கீர்ரை ஊற்றி நீட்டினார். காளிதாசன் வாங்கி குடிக்க ஆரம்பித்தான்! – தொண்டை மண்டலம் பூத்து குலுங்கியது.. மூளையில் இன்ப பாய்ச்சல்.. மனதிற்குள் இனிய கீதம். 

பாதாம் கீர் அவனுக்கு மிகவும் பிடித்து போயின. காசும் துணை பிரசுரமாக நன்றியும் கூறி விட்டு கடைக்கார அண்ணாவிடம் இருந்து விடை பெற்றான்.

காளிதாசன் பெங்களூரில் தன் வேலைக்காக சென்று திரும்பி கொண்டிருந்தான். அவன் நண்பன் திண்டுக்கல்லில் வசிக்கிறான். இரண்டு பேரும் சந்திகளாமென திட்டம் போட்டிருந்தார்கள். அங்கே செல்ல இரவு ஒன்று அல்லது இரண்டு ஆகிவிடும். இப்போது மணி பத்து. அவன் நண்பன் தாண்டவராயன், “எறங்கிட்டு பூங்காவனம் பஸ் ஸ்டாண்டுனு கேளு. ரூட் சொல்வாங்க. அங்க வந்த பிறகு போன் பண்ணு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறன்..சரியா?” என சொன்னான். இவனும் அதற்கு அமோதித்தான். வர வழியில் தாகத்துக்கு பாதாம் கீர் வார்த்து விட்டு பஸ்சில் ஏறி கிளம்பலானான்.

ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து  கொண்டிருந்தான். பக்கத்து சீட்டில் இருந்தவர் காதை கிழிக்கும் அளவிற்கு குறட்டை விட்டு தூங்கி கொண்டு வந்தார். நிசப்த்த வெளியில் சஞ்சலம். பின்பக்க சீட்டில் திடீரென ஒருவன் ஊ…. என ஊளையிட்டான். காளிதாசனுக்கு தூக்கி வாரி போட்டது. பின்னே திரும்பி,

“ஏங்க.. இப்டி”

“ரெஸ்யூம்க்கு ஒரு ரெஸ்பான்ஸ் வந்துருக்கு ப்ரோ”

“செரிங்க நல்ல விஷயம்! லிங்க்டின்னா”

“டிண்டர் ப்ரோ”

“ஓகே ப்ரோ கேரி ஆன்”

என திரும்பி சீட்டில் சாய்ந்து படுத்து கொண்டான். திண்டுகல்லுக்கு செல்ல இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் ஒரு தூக்கம் போடலாம் என்ற எண்ணம். எண்ணத்துக்கு ஏற்றவாறு நடந்து கொண்டான். நடுவில் விழித்தான். ஆனால், கண்ணை திறந்த வேகத்தில் மூடி கொண்டான். ஆழ்ந்த தூக்கத்திற்கு ஆளானான்.

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி…

காளிதாசன் திடுக்கிட்டு எழுந்தான். பக்கத்தில் இருந்த நபர் ஃபோன்னில் எதையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தார். கட்டைவிரலில் கட்டு போட்டிருந்தது. அட இடிக்கு பொறந்தவனே என நினைத்துக் கொண்டு சுற்றி முற்றி பார்த்தான். ஏதோ சரியில்லை என அவன் மனதுக்குப்பட்டது. இடியின் மகன் பக்கம் திரும்பி,

“ஏங்க திண்டுக்கல் போக இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்”

“திண்டுக்கல்லா…. அது தாண்டி போயாச்சேப்பா”

“அப்படியா!”

“என்னப்பா நீ.. கவனமா இருக்குறது இல்லையா.. என்ன செய்ய.. இந்த காலத்து பசங்கள்ளாம்”

காளிதாசன் அவர் ஃபோனை கவனித்தான். அவர் மீண்டும் சிரிக்கும் வேலையை தொடர்ந்தார். சீட்டிலிருந்து எழுந்து கண்டக்டரிடம் சென்றான்.

“அண்ணா.. திண்டுக்கல்ல எறங்க வேண்டியவன்னா.. தாண்டி போயிட்ருக்கு”

“அட பஸ் திண்டுக்கல் தாண்டி போய்ட்சேப்பா..”

“நான் பேசறது என்ன மொழின்னா?”

“தமிழ் தம்பி.. இது கூட தெரியாதுன்னு நெனைசிட்ட பாத்தியா”

“அண்ணா.. கொஞ்சம் ஓரம் நிறுத்திக்கோங்கண்ணா.. நான் வேற வண்டி பிடிச்சு போய்க்கிரன்”

“சரிப்பா.. சரிப்பா.. “

“நன்றின்னா”

பஸ் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டது. காளிதாசன் தோல்பையுடன் இறங்கினான். கண்டக்டர் அவனுக்கு பஸ் ஸ்டண்ட் இருக்கும் இடத்தை சுட்டிகாண்பித்தார். சித்திரகுப்தா! கண்டக்டரின் புண்ணிய கணக்கில் இதனையும் சேர்த்து எழுதிக்கொள்வாயாக என மனதில் நினைத்து கொண்டான்.

பஸ் கிளம்பியது.

சப்தங்களற்ற பெருவெளி தன்னை சூழ்ந்தது போல் உணர்ந்தான் காளிதாசன். ஈ எறும்பு கூட விடுமுறை எடுத்து கொண்டது போலும். பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்றான். தன் காலோசை சத்தம் மட்டுமே உறுதுணையாக இருந்தது. அவனை சுற்றியுள்ள யாவும் தன் ரூபத்தில் இருந்து கரைந்து உருகி ஓடுவது போல் உணர்ந்தான். வேறோர் லோகத்தில் யாரோ அவனை தூக்கி போட்டது போல் அவனுக்கு பட்டது.

பஸ் ஸ்டாண்டில் சென்று நின்றான். தன் மனம் இனம் புரியா ஒரு உணர்வுக்கு  ஆட்பட்டது. தூரத்தில் கண்ணை உரிக்கும் அளவிற்கு வெளிச்சம் வந்தது. பஸ் அருகில் வர கையை நீட்டி நிறுத்தினான்.

பஸ்ஸின் படியில் மெல்ல ஏறி உள்ள நின்றான். ஊதுபத்தி நறுமணம் காற்றோடு கலந்து இருந்தது. பஸ் டிரைவர் அவன் பக்கம் திரும்பி சிரிக்க, அவர் கன்னத்தில் திருஷ்டி போட்டு இருந்ததை கவனித்தான். காளிதாசனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நின்றபடியே பஸ்ஸை நோட்டமிட்டான்.

  • ஒரு காதல் ஜோடி (அ) தம்பதி
  • இரு நபர்கள் – ஒருவர் சிவன் வேஷமும், மற்றொருவர் எமன் வேஷம்.
  • ஒருவர் கருப்பு கண்ணாடி, கருப்பு கோட், சிவப்பு டை, இரு கைகளையும் கோர்த்து மடியில் வைத்து உட்கார்ந்திருந்தார்.
  • கட்டம் போட்ட சட்டை லுங்கி அணிந்து கொண்டு ஒருவரும் மற்றும் கருப்பு சட்டை வெள்ளை பேன்ட் அணிந்து இன்னொருவரும் பக்கத்து பக்கதில் கை போட்டு உட்கார்ந்து இருந்தனர். நண்பர்களாக இருக்கலாம். முகத்தில் குடியின் கலை தெரிந்தது.
  • ஒருவன் அண்ணாந்து பார்த்த படி உட்கார்ந்து இருந்தான்.

மெதுவாக சென்று முதல் இருக்கையில் உட்கார்ந்தான். பஸ் டிரைவர் சத்தமாக, 

“போலாமாப்பா”  என கேட்டார்.

காளிதாசன் குழப்பத்துடன்,

“போலாம்ங்க” என கூறினான்.

பஸ் கிளம்பியது. பஸ் டிரைவர் காளிதாசன் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்ணாடி வழியே கண்டார்.

“ஏன்பா வெட்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்க”

சிறிது தயக்கத்துடன்,

“கன்னத்துல என்னன்னா திருஷ்டி பொட்டா”

“ஆமாப்பா”

ஏனென்று கேட்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் நிறுத்தி கொண்டான். அவன் ஆர்வத்தின் விசை அவரை தொட்டது போலும். அவர் தொடர்ந்தார்.

“சின்ன வயசுல கண்ணு பட போதுனு எங்கம்மா சீவி சிங்கரிச்சு இந்த திருஷ்டி போட்டு வைக்கும். எனக்கு என்னமோ இந்த திருஷ்டி பொட்டோட என மொகமத்த பாக்குறது பிடிச்சு போட்சு. அதான் திரும்ப திரும்ப நடந்தேறி! இப்போ வரைக்கும்! இங்க வரைக்கும் நிக்குது”

“யாரும் கிண்டல் பண்ணலயா?”

“பண்ணாம சோறு தண்ணி எறங்காதே நம்மாளுங்களுக்கு. ‍நான் என்னப்பா செய்ய, அது பாட்டுக்கு நடக்குது. மேகத்த பாத்து ச்சி.. ‍அசிங்கமா இருக்குனு சொன்ன என்ன? அட.. அழகா இருக்குன்னு சொன்ன என்ன? அது பாட்டுக்கு போயிட்டு இருக்கப்போது”

காளிதாசன் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான்.

சிரிக்கும் சப்தமும் இடைஇடையே முத்தங்கள் சப்தமும் கேட்டது. மரியாதை நிமித்தமாக திரும்பாமல் இருந்தான். ஆனால் ஒரு குரல் அவனை திரும்ப வைத்தது. கருப்பு கோட் நபர்,

“நாட்ட முன்னேற்ற பாதையில எடுத்துட்டு போகும்ங்குனு பாத்தா காதல் பண்ணிட்டு கெடக்குதுங்க. காலம் பொன் போன்றதுனு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க. களி முத்தி கருவாடா ஆய்ட்சு. காதல்லாம் பாவ கணக்குல சேக்கணும். வீட்டுக்கும் பாரம் நாட்டுக்கும் பாரம்”

(காளிதாசனுக்கு அவரை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அவர் உடல் முழுவதும் சிலை போல் இருக்க வாய் மட்டும் அசைந்தது.)

சிவன் எமனிடம்,  “கேட்டுக்கோப்பா.. காதல பாவ கணக்குல சேர்த்துப்பியாம்” 

“உன் வேலைய சுலபம் ஆக்கிட்டு.. எனக்கு வேலையே இல்லாத மாறி பண்ண பாக்கிரியா?. “

“எடத்த காலி பண்றதே எதாச்சும் வெக்குறதுக்குதான்யா.. எனக்கும் உன் நெலம தான்”

“ஆனா.. வேலை இல்லாம இருக்கறது எவ்ளோ பெரிய பாக்கியம்ல.. சும்மா கெடந்து சுகம் காணலாம்”

“அது சிவனுக்கும் எமனுக்கும் நமக்கு இல்ல”

“அது சரி”

திடீரென அழுகை சத்தம் கேட்டது. நண்பர்கள்,

“மச்சி, ஏண்டா”

“என்னடா..ஏண்டா!”

“ஏண்டா இருக்கணும்”

“புரியல டா”

“ஏண்டா வாழனும்.. ஏண்டா கஷ்ட படனும்.. எதுக்குடா ஓடனும் ஓடி வரணும்.. மொத்தத்துல ஏண்டா ஒரு விஷயம் பண்ணனும்?..”

“எல்லாம் ஒரு ஜாலிக்குதான்டா”

“அப்டியா மச்சி”

“ஆமாடா.. ஒரு விஷயம் நமக்கு ஜாலி குடுக்குதா.. அத நோக்கி ஊர்ந்து போயிட்டே இருக்கணும்.. லாபமோ நட்டமோ”

“இப்போ பாரு.. எனக்கு போதைல இருக்க ஜாலியா இருக்கு.. போதைலியே இருந்து ஒடம்பு அழுகி ஒழுகி போறது சரியான காரியமா?!”

“சரிதான் மச்சான்.. உன் ஜாலிகாக ஒடம்ப கரச்சிக்கிற”

“அவ்ளோதானடா மனிஷ வாழக்க..”

“மச்சி, நீ அளவுக்கு மீறி யோசிக்கிற.. அளவுக்கு மீறினால் ஆல்கஹாலும் நஞ்சு.. சொன்ன கேளு.. இவளோ யோசிக்கற்து உடல் நலத்திற்கு கேடு.. உயிருக்கு தீங்கு விளைவிக்கும்..”

“கத்தி கடப்பாற மாறி கடவுள் நம்பல படைக்கும்போதே எதாச்சு வேலப்பாட சொருகி படச்சி இருக்கலாம்யா.. அப்டி எதும் இல்லனு தெரிய வருதல அதான் பிசுகுது.. “

“இந்த தேவ இல்லாத வியாக்கனத்த ஒழிச்சு கட்டுயா.. மறந்து தொல!”

“அது எப்டிடா முடியும். மனிஷ ஜென்மம்மா பொறந்துட்டு காரண புண்ணியம் இல்லாம சொழண்டுட்டு இருக்கற்து நெனைக்கும்போது எல்லாத்தையும் புடுங்கி போட்டுட்டு போய் சேந்துடலாம்னு தோணுது”

“போத தெளிஞ்சா எல்லாம் சரி ஆய்டும்.. ஓம் நம சிவாய!”

இவ்வாறு பேசி கொண்டிருக்க; திடீரென விட்டத்தை  பார்த்தவாறு படுத்து இருந்தவன் கரகரத்த குரலில்,

“அழுகும் பழத்தில் ஒளிரும் புழு. ஏன் வந்தது? எதற்கு இருக்கிறது? எதை நோக்கி போகிறது? யார் அறிவார்! ஆனால் அதன் இருப்பை யார் மறுப்பார்!” 

பஸ்சில் உள்ள அனைவரும் ஒரு சேர திரும்பி அவனை பார்த்து கொண்டிருந்தார்கள். 

அமைதி……..

சிவன் பழைய நிலையில் உட்கார்ந்தார். தன் தொண்டையை சரி செய்து கொண்டு உரத்த குரலில்,

“நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே!!!!” 

என பாடினார். பஸ் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி சென்றது. 

தூக்கிவாரி போட்டதில் காளிதாசன் திரும்பி பழையவாரு ரோட்டை பார்த்தபடி உட்கார்ந்தான். திருஷ்டி பொட்டு அவன் கவனத்தை ஈர்க்காமல்லிலை. அவன் பின்னே பேச்சுக்குரல் சரசரவென கேட்க தொடங்கியது…….

“ஏண்டி செல்லம்.. இங்க பார்ரன்.. இன்னும் கொஞ்சம் கிட்ட வா”

“அட கடவுளே! அந்த வசனம் எனக்கு சுத்தமா ஞாபகம் வரமாட்டிகிதேயா”

“மச்சி போதும் இதோட நிப்பாட்டிக்கோ”

“உலகமா இது ச்சா தாமரையில கூட தண்ணி ஒட்ற காலம் நெருங்கிட்டு இருக்கு”

“யாருடி அது பிரகாஷு?”

“எல்லாம் சிவமயம்”

“அட கன்றாவியே நாக்கு நுனி வரைக்கும் நின்னுட்டு அத தாண்டி வர மாட்டிங்குதே”

“ஆத்ம புத்திரனின் செய்தியை எவராவது கேட்டீரோ”

கண்ணுக்கொரு வண்ணக்கிளி…

காதுக்கொரு கானக்குயில்…

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…”

“சத்தியமா சொல்றேன் நீதாண்டி என் உலகம் உயிர் எல்லாம்”

“மச்சி.. ஏண்டா இருக்கணும்?”

“நாடகம் நல்லா போகனும்யா இல்லாட்டி வயித்து பாட்டுக்கு கலையாவது மயிராவதுனு சொல்ல வேண்டியது ஆய்டும்”

“பொன் கொழந்த பெறந்தா என்ன பேர் வைக்கலாம்? ஆண் கொழந்த பெறந்தா என்ன பேர் வைக்கலாம்?”

“தண்ணிய ஊத்துன்ன மேல போகாது கீழ தான் போகும்.. எல்லாம் புரியுது.. ஆனா அது தண்ணிக்கு தெரியதுல”

“ஒரு நாட்டோட பலம்.. அந்த நாட்டு மக்கள்கிட்ட இருக்க ஒத்துமையில தான் இருக்கு”

“ஏன் இப்டி பேசுற.. என் பிஞ்சுக் குட்டிக்கு இப்டிலாம் பேச வராதே.. யார் உன்ன கெடுத்து வெச்சது”

“மூத்தகுடிகளின் எச்சத்தில் வாழும் மானுடறே.. அடக்கம் தேவை.. இல்லையெனில் நின் உயிர்க்கு நீயே விஷமாவாய்”

“மச்சி உனக்கு அவ்ளோதான் மரியாத”

…..

வண்டி நின்றது. காளிதாசன் குடுகுடுவென இறங்கி பெருமூச்சு விட்டான். பஸ் மெல்ல சாலையின் இறுதிவரை சென்று மறைவதை அமைதியாக கண்டான்.

சாலை வெறிச்சோடி இருந்தது. மௌனம் விஸ்வரூபம் எடுத்து தாண்டவம் ஆடியது. அவன் அங்கும் இங்கும் பார்த்தான். தனக்கு பரிட்சயமான இடம் போல் தெரிந்தது. 

“இது என்ன ஏற்ன எடத்திலேயே எறக்கி விட்டுட்டு போயிட்டான்”

என பஸ் சென்ற இடத்தை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான். 

“தம்பி..”

என யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. காளிதாசன், குரல் வந்த பக்கம் திரும்பினான். 

“என்னப்பா பேய்யறஞ்ச மாறி நின்னுட்டிறிக்க”

“இல்லங்க இங்க ஒரு பஸ்ல ஏற்ணன்.. பாத்தாக்க சுத்தி வந்து இங்கேயே எறக்கி விட்டுட்டு இருக்கான்”

“உனக்கு மட்டும் அரசாங்கம் தனியா பஸ் விடுதா இந்த பக்கம்”

“ஏன் அப்டி சொல்றிங்க”

“இங்க பஸ்ஸே நிக்காதுப்பா”

“இல்லைங்க நான் இங்கதான் ஏறி போனன்”

“உன்ன பாத்தா ரொம்ப கொழம்பனா போல தெரிது.. எங்க போனோம் நீ”

“பூங்காவனம் பஸ் ஸ்டாண்ட்”

“வண்டியில ஏறுப்பா.. நான் அந்த சைட் தான் போறன்.. எறக்கி விட்றன்”

காளிதாசன் சிறிது தயக்கத்துடன் நின்றான்.

“பரவாலப்பா ஏறு.. ஒன்னும் போய் வித்துற மாட்டன்”

“அய்யோ.. இல்லண்ணா அப்டிலாம் எதும் நெனைக்கல.. ரொம்ப நன்றின்னா”

என பைக்கில் ஏறி அவர்பின்னே உட்கார்ந்தான். 

வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. இருவரும் அமைதியாக வந்தனர்.

“என்னப்பா சைலண்ட்டா வர்ற”

“ஒன்னும் இல்லண்ணா”

“இன்னும் சந்தேகம் போகலல.. புரியுது.. உலகம் அப்டி கன்னா பின்னான்னு இருக்கு.. யாரையும் நம்ப முடியாம போச்சு “

“அப்டிலாம் இல்லண்ணா.. பஸ்ல வந்தது ஒரு மாறி இருக்கு”

“அட.. என்னப்பா இன்னும் பஸ் கிஸ்ஸுனு பெனாத்திட்டு இருக்க.. நெனைவு போல கனா கண்டிருக்கன்ட்டு நெனைக்கிறன்.. இந்தா தண்ணிய குடி”

என தண்ணீர் பாட்டிலை குடுத்தான். காளிதாசன் சிறிது குடித்து விட்டு குடுத்தான்

“என்னண்ணா தண்ணி ஒரு மாதிரி இருக்கு”

“கொழா தண்ணிப்பா கொஞ்சம் டேஸ்ட் வேற மாதிரி தான் இருக்கும்”

“சரிண்ணா.. இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு”

“பக்கத்துல வந்துடுச்சுப்பா”

“நல்லதுண்ணா”

“போய் சேர்ர வரைக்கும் ஒரு கத சொல்றன் கேக்ரியா”

“கேட்கலாமே சொல்லுங்க”

“காலமித்ரன்ட்டு ஒரு அரூபன் இருந்தானாம். அவன்கூட பேசனும்னு மகேந்திரன்னு ஒருத்தன் ஆசப்பட்டான். உயிர்தாகம் புடிச்சவன் அவன். என்ன பண்ணிருக்கான்.. அவனுடைய மனசுகட்டுல இருக்க ஒரு பாகத்த ஒடச்சு அதுல உருவான வெளி மூலயமா காலமித்ரன்ன தொடர்பு கொண்டானாம். “உன்னால என் ஆயுட்காலத்த நீட்ட முடியுமா?” அப்டினு சொல்லி கேட்டிருக்கான். அதுக்கு அவன் “முடியும்”ன்னு  சாந்தமா சொல்லிருக்கான். “பண்ணு பாப்போம்”னு இவன் கேட்டான். அதுக்கு காலமித்ரன் “விதையில்லமால் செடி முளைக்குமா கரு இல்லாமல் உயிர் அறுக்குமா! உன் உயிர் காலத்த நீட்டிகணும்னா சும்மா முடியாதில்லையா அதுக்கு உண்டான தீனி போடணுமே. நான் சொல்ற முறையில உயிர்கள பலி குடுத்தா அந்த அந்த உயிர்களுக்கு உண்டான ஆயுட்காலம் உன்ன வந்து சேர்ந்தடையும். கொசுவ பலி கொடுத்தா ஏழு எட்டு நாலு, பூனைய பலி கொடுத்தா பதினஞ்சு இருபது வருஷம், மனிஷாள பலி கொடுத்தா அந்த குறிப்பிட்ட ஜென்மாவுக்கு விதிச்ச ஆயுட்காலம் உன் உயிற்காலத்தோட கூடும். புரியுதா?”. அதுக்கு அவன் “நல்லா புரிஞ்சுது. அந்த முறைய சொல்றியா எனக்கு”னு கேட்டான். காலமித்ரன் அந்த முறைய அவன் கிட்ட தெளிவா சொன்னான். அத வெட்சிக்கிட்டு தன்னோடா உயிற்காலத்த அனுமாரு வாலு மாறி இழுத்துட்டு போய்ட்டே இருந்தான். ஒவ்வொரு நைட்டும் என்ன என்ன அவன் கண்ணுக்கு மாட்டுதோ அதான் அன்னையோட தீனி. இன்னைக்கு நைட் நீதான்!”

காளிதாசன் மகேந்திரனின் முதுகில் மயக்க நிலையில் படுத்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து காளிதாசன் கண் விழித்தான். மை இருட்டாக இருந்தது. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “தான் பிற அது இது” என எல்லா அர்த்தகனங்களும் தவிடுப்பொடி ஆனது. உள்ளுக்குள் பயத்தின் அனல் அடிக்க ஆரம்பித்தது. திடீரென ஒரு சொட்டு ஒளி எழும்பி அவன் பக்கம் சென்று தஞ்சம் அடைந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு அவனை சுற்றிலும் அகல் விளக்காக எரிய ஆரம்பித்தது. ஒளி மூலையமாக அவனிருப்பது அறை என்று தெளிவானது. வெளிச்சம் அவ்வரையை நிரப்பியது. தன் கை கால்கள் கட்டி அம்மணமான நிலையில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவனெதிரே மகேந்திரன் நிர்வாண நிலையில் வந்தமர்ந்தான். 

“கூச்ச படாத சரியா”

“என்ன எடம் இது என்ன பண்ணி வெட்சிருக்கீங்க”

“ஓ.. கதைய முழுசா கேக்குறதுக்குள்ள மயங்கிட்டியா.. சரி கேளு”

மீண்டும் முழு கதையை சொன்னான்.

“என்ன என்ன என்னமோ சொல்றீங்க”

“இருக்கற்த தான்ப்பா சொல்றன்”

“ஏன்னா இப்டி பண்றீங்க”

“இதுக்கு காரணம்லாம் வேணுமா என்ன?… இருந்தாலும் நீ சூப்பர் ப்பா.. 70 வருஷம் உனக்கு விதிச்சி இருக்கு”

“என் லைஃப்ப ஏன் திருடுற.. நான்லாம் வாழ கூடாதா?”

“வாழ்ந்து என்னப்பா பண்ண போற.. இந்த நொடி நீ போய் சேர்ந்தாலும்.. உலகத்துக்கு ஒரு கொறைசலும் ஆவ போறதில்ல.. உன் வீட்ல ஒரு பக்கெட் கண்ணீர் வீணா போகும் அவ்ளோதான்”

“இதேதான உனக்கும்”

“ஊர் உலகத்துக்கே அதான்.. அதனாலதான் இது.. சும்மா பேசி நேரத்த வீணடிக்க விரும்பல”

என கண்களை மூடி முணுமுணுக்க ஆரம்பித்தான். காளிதாசன் ஒரு சில வினாடி சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு பேசலானான்,

“ஒன்னு தெரிஞ்சுக்கோ என்னைய பலி கொடுக்கறதுனால உனக்கு நஷ்டம் தான். ஏன்னு கேக்கிறையா?! உண்மைய சொல்லனும்னா எனக்கு  இந்த வாழ்க்கையே பிடிக்கல. லைஃப்ப அடியோட வெறுக்குறன். எதோ பொறந்துட்டோம்னு வாழுந்துட்டு இருக்கன். பால் குடிச்சா பலம் கூடும். உண்ம! ஆனா அதுல கொஞ்சோடு வெஷம் கலந்த என்ன ஆகும். இருக்குற பலம்லாம் போய்டும்.. கூட சேந்து உயிரும் போய்டும். அந்த மாறிதான் என் எண்ணத்துள்ள இருந்து சுரந்த வெஷம் என் உயிர்ல கலந்து இருக்கு. என்னய பலி குடுக்கறதுனால உனக்கு 70 வருஷம் கூடாது கொறையதான் செய்யும். நல்லா யோசிச்சுக்கோ.”

இச்சொற்கள் மகேந்திரனின் மனதுக்குள் புகுந்து எண்ணத்தில் தடுமாற்றம் உருவாக்கியது. முனுமுனுப்பதில் இடைவெளி உருவாக ஆரம்பித்தது. கண்ணை திறந்தான்,

“என்ன கஷ்டம் உனக்கு?”

“வெஷத்த எடுக்க பாக்கிரியா? “

மகேந்திரன் அமைதியாக இருந்தான். பல எண்ணங்கள் முட்டி மோதி புது புது உருவங்கள் எடுக்க ஆரம்பித்தது. நிமிடங்கள் கடந்து சென்றன. அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்தது. அவன் எழுந்து சென்று ஆடைகளையும் தோல்பையையும் எடுத்து கொண்டு காளிதாசன் பக்கத்தில் போட்டான். கட்டினை வேக வேகமாக அவிழ்த்து விட்டு,

“நீ வாழ வேண்டியவன். போ!”

என கூறினான். காளிதாசன் உடைகளை உடுத்தி தோல்பையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். வாசற்படி தாண்டியபின் மெதுவாக திரும்பி மகேந்திரனை பார்த்தான். இருவரும் மாறி மாறி பார்த்து கொண்டார்கள். மெல்ல நடந்து அவ்விடத்தை தாண்டினான். திடீரென சுயநினைவு வந்தது போல் சுற்றும் முற்றும் பார்த்து அலறி அடித்துகொண்டு ஓட ஆரம்பித்தான். ‘இடம் பொருள் காலம் நேரம்’ என எல்லா எல்லைகளையும் உடைத்து விட்டு ஓடி கொண்டிருந்தான். ஒரு சிறு கல் அவன் ஓட்டத்தை ஒடுக்கியது. கீழே விழுந்தான்! 

“ஏனப்பா கண்ணா!”

என ஒரு பாட்டியம்மா அவனை மெல்ல எழுப்பி பக்கத்திலிருந்த பெஞ்சில் உட்கார வைத்தார். கை கால்களை ஆராய்ந்தான். சிராய்ப்புகள் குவிந்திருந்தன.

“எதுக்கு இப்படி ஒரு ஓட்டம். காணாதத கண்ட மாதிரி. உசுற யாரோ திங்க போற மாதிரி”

“எப்டி பாட்டி சரியா சொல்றீங்க. உசுரு போய்டுமோங்குற எண்ணதுல தான் பாட்டி இந்த அளவு ஓட்டம்”

“என்ன கண்ணா பெனாதிட்டு இருக்க. நூறு ஆயுசு வரைக்கும் நல்லா இருப்ப நீ”

“நூருலாம் இல்ல பாட்டி. எழுபது தான்.. உங்களுக்கு எவ்ளோ வயசு?”

“எழுபத்து அஞ்சுப்பா”

“உனக்கு இன்னும் பல காலம் வாழனம்னு ஆச இருக்கா பாட்டி”

“அப்டி ஆச இருந்தா ரொம்ப காலம் இருக்கலாம். வாழ முடியாதேப்பா”

“என்னமோ பாட்டி. இந்த நாள நான் மறக்கவே மாட்டான் கற்பன பண்ணி பாக்கா முடியாததெல்லாம் நடந்துச்சு. எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்கணும்! நான் என்ன பாவம் பண்ணன்னு தெரியல!”

“ஒடையில போற கல்லுக்கு ஒரு இரா உசுரு வந்தபோது இப்டி தான் பொலம்புச்சான்”

“நீங்க ஏன் பாட்டி இப்போ பெனாத்துறீங்க”

பாட்டி மெல்லியதாக புன்னகைத்தார்.

“சரிப்பா கண்ணா நான் வரன். நீ பாத்து போ”

“சரிங்க பாட்டி. நன்றி!”

என கையில் உள்ள காயத்தை பார்த்து ஊதினான். இதமாக இருந்தது. திரும்பி ஒருதரம் பார்க்க பாட்டியை காணவில்லை. ஒரு சிறு மின்மினிப் பூச்சி தான் பறந்து சென்றது. பிடித்தான் ஓட்டம்.

ஒருநிலையில் தன் முழு சக்தியும் இழந்து மூச்சிரைத்து தொப்பென உட்கார்ந்தான். கொஞ்சம் நிதானம் அடைந்தான். மூச்சும் சீரடைந்தது. மெல்ல தலையை தூக்கினான்.

“பூங்காவனம் பேருந்து” – என போர்ட் இருந்தது.

மனதில் உள்ள பெரிய பாரமொன்று இறங்கியது. சிறிது மயக்க நிலையில் இருந்தான். ஒரு குளியல் போட்டால் தேவலை என்று தோன்றியது. தாண்டவராயன் வீட்டிற்க்கு சென்ற பின் முதல் வேலையாக குளிக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்து கொண்டான். தாகம் தொண்டையடைத்தது. தூரத்தில் கடையொன்று இருப்பதை கண்டான். மெதுவாக எழுந்து அக்கடையை நோக்கி நடந்து சென்றடைந்தான். கடைக்காரரிடம் மெல்லிய குரலில் கேட்டான்,

“அண்ணா.. பாதாம் கீர் இருக்கா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *