சாலையில் ஓடிவந்த மோட்டார்ச்சத்தம் வீட்டின் முன்பு நிலைத்தபோதே உள்ளுணர்வு அதிர்ந்துவிட்டது.
“ஏய், எங்க உங்கப்பன், உள்ள இருக்கானா?” மணியண்ணனின் கூச்சல் கேட்டது. அதைவிடவும் மேலாக வெளியே நின்றுகொண்டிருப்பது நிலா. நான் அதை அறிந்திருக்கவில்லை.
கைலியைப் பொதுவாக இடையில் சுருட்டிக்கொண்டு நடைக்குத் தோதாக முழங்காலிடம் பிடித்து உயர்த்திக்கொண்டு வெளியே வந்தேன். காரைவீதியின் மறுபக்கம் அவர் நின்றுகொண்டிருந்தார். இருவருக்குப் பின்னும் சிறு இடைவெளியாக சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. நிலா பாதி பின்னலிட்டும், மீதி சிக்கெடுத்து பரப்பிவிட்ட சிகையுமாக பள்ளிச் சீருடையில் நின்றிருந்தாள்.
ஆக்டிவாவிலிருந்து இறங்க முற்பட்ட மணியண்ணன் என்னைக் கண்டதும் அதிலேயே அமர்ந்து கொண்டார். எங்கோ தாவத் துணிவதுபோல அவரது கால்கள் நன்றாக ஊன்றிக்கொண்டன. “ஏன்டா நீலாம் ஒரு மனுசன்னு இருக்க?” என்றார்.
நிலா அந்தத் திடுக்கிடும் குரலில் என் இடப்புறமிருந்து நகர்ந்து வீட்டிற்குள் மறைந்தாள். நான் சற்றுத் தளர்வடைந்தேன்.
அவர் தொடர்ந்தார். “பாக்கி வாங்கிகிட்டு தின்ன மட்டும் தெரியுது. வேலை இருந்தா வேலைக்கு வர முடியாதா?”
சாலையில் சலங்கை ஒலிகள் குலுங்கிவந்தன. கழுத்தோடு கட்டப்பட்ட காலோடு மாடுகள் எங்களுக்கு குறுக்கே தாங்கி தாங்கி நடந்தன. அவற்றைப் பத்திக்கொண்டுவந்த பால்ராமு “என்ன மணி, காலைலயே டூட்டியா?” என்றார்.
“உசுர வாங்குறானுங்க நீ வேற. வேலை இல்லன்னா காசு இல்லன்னு சொல்லிக்கிட்டுவந்து வாங்கிக்க வேண்டியது. வேலை இருந்தா ஆளுகளைக் கண்ணுலேயே பார்க்க முடியுறது இல்லை. இந்தா இவன்லாம் ஒருவாரமா ஆட்டம் காட்டிட்டு இருக்கான்”
பால்ராமு பொதுவாகச் சிரித்துவிட்டுச் சென்றார். எல்லோரும் அவரவர்கள் பணியில் இருந்தார்கள். எனக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.
“எங்கடா வேலைக்குப் போற?” மணியண்ணன் வண்டியோடு நின்றுகொண்டார்.
“எங்கயும் இல்லண்ணா, ஒருவாரமா உடம்புச் சரியில்லாம…”
“மயிர்ல சரியில்லாம!” அவர் வெறிகொண்டுக் கத்தினார். “ஏன்டா நாயே, எங்கயும் வேலைக்குப் போகாமத்தான் ஆளுக்கு முந்தி சூத்தைக் கிளப்பிட்டு ஓடுறியா நீ? உங்க வேலையெல்லாம் தெரியாமலா பட்டறை நடத்திட்டு இருக்கேன்! வேலைக்கு வரேனு இங்க பாக்கி வாங்கிக்க வேண்டியது. அடுத்த பட்டறைக்குப் போய் பாக்கி வேண்டாம்னு சம்பளம் சேர்த்திக் கேட்டு உட்காந்துக்கிறது. இப்படி ஏமாத்தித் திங்குற பீ எப்படிடா வாய்ல போவுது?”
“பட்டறை எதுவுக்கும் வேலைக்குப் போகலண்ணா…” நான் சற்று சீண்டப்பட்டவனாகக் கூறினேன்.
“அப்புறம்?”
“சமையல் வேலைக்கு!”
“ஏதே? பைத்தியமா நீ, அதுல என்னடா கிடைக்குது?”
“ஐநூறு!” நான் சேர்த்தியே கூறினேன்.
“ஏன்டா குடிச்சே உன் புத்தி மழுங்கிப் போச்சா, பட்டறையில உனக்கு என்ன சம்பளம்?”
“ஏழ்நூறு”
“அப்புறம்?”
“ஊத்துவேலை முடிய மாட்டிங்கிதுண்ணா. முதுகெல்லாம் வெடி விழுந்தமாதிரி வலிக்குது!”
“ஏன்டா நான்லாம் ஊத்து வேலை செய்யாம தான் பட்டறையில உட்காந்துட்டு இருக்கேனா?”
நான் அமைதியாக நின்றேன். ‘நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?’ என்ற எந்தக் கேள்விக்கும் என்னால் எப்போதும் பதில்கூற முடிந்ததில்லை.
“எங்க தேவி? அந்தப் புள்ளைக்குத் தெரிஞ்சிதான் நீ சமையல் வேலைக்குப் போறியா?”
என் உடல், உள்ளம் மொத்தமும் அயர்ந்து கொண்டது. “நீங்க போங்கண்ணா, நான் ரெடியாகிட்டு பட்டறைக்கு வரேன்!” என்றேன்.
“நீ?”
“அண்ணா நான் வரண்ணா”
“இருபது நிமிசத்துல அங்க இருக்கணும்!” அவர் வண்டியைத் தொடக்கினார். நான் தலையசைத்தேன்.
அன்று இரவு ஒன்பதரைவரை அங்கேயேதான் இருந்தேன். வேலை கொடுத்த பட்டறையில் அவசரம் என்பதால் இங்கும் எல்லாமே அவசர அவசரமாக நடந்துகொண்டிருந்தது. நான் காலையில் பட்டறைக்குச் சென்றபோதே இரண்டு தட்டங்களில் குஷ்பூ(வெள்ளிக் கொலுசின் பட்டைகள்) அடுக்கப்பட்டு அதில் வேலைகளாகிக் கொண்டிருந்தது. பட்டறை நிரம்பியிருந்தது. என்னோடு மொத்தம் ஆறுபேர். நானன்றி இன்னொரு பெரிய வேலைக்காரன். மணியண்ணன் வேலைகளைத் தோது செய்வதிலிருந்தார்.
தட்டங்கள் தீர்மானமாக ஊத்துவேலை தொடங்கியது. வெயிலும், ஸ்டவ்வின் அனலுமாக நெருங்கியிருந்த இடம் புழுங்கியது. மதியம்வரை நான் ஊத்தில் அமர வேண்டியிருக்கவில்லை. மதியத்திற்கு நெருங்க தீர்மானமான தட்டங்கள் கூடிவிட்டதால் ஊத்து பழகிக் கொண்டிருந்த பையன் ஒருவனை மணியண்ணன் ஊதச் சொன்னார். அவன் ஊதியதில் மேல்பூக்கள் நிறைய மராமத்தாகின. கீறினால் அவை பட்டையின்மேல் பிடிமானமின்றி சிதறின. பொதுவாக இவை அதுவரை செய்த வேலையை அர்த்தமிழக்கச் செய்பவை. புதிதாகத் தொடங்குவதைவிட மராமத்துப் பணிகள் எரிச்சலூட்டக் கூடியவை, மேலும் நேரம் வளர்த்தக் கூடியவை. அது காலத்தின் இருபுறமும் கத்தியை நீட்டிக்கொண்டு சுழலும் செயல்.
“ஒரு மாசமா ஸ்டவ்வைப் பிடிச்சிட்டு இருக்க, இதான் உன் ஊத்து லட்சணமா?” மணியண்ணன் அந்த ஒத்தையை எறிந்தார். அது அவனருகில் தரையில் விழுந்து உருண்டது. “பட்டறையில என்னன்னா ஜதை ரெண்டுநாள்ல வேணும், இல்லன்னா வெள்ளியை நீயே வச்சிக்கோன்னு அர்ஜன்ட் பண்ணுறானுங்க. நீங்க இப்படி உசுர வாங்கிட்டு இருக்கீங்க. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு எதாவது வேலைக்குப் போயிடலாம் போல! நாய் பொழப்பாட்டம் இருக்கு…” மணி சரியாக இரண்டு ஆகியிருந்தது. அடுத்த நாற்பது நிமிடம் சாப்பாட்டு நேரம்.
பொடி வைக்கும் பெண்கள்கூட மணியண்ணனின் பேச்சு ஓய சில நிமிடங்கள் காத்திருந்து பார்த்தார்கள். அவர் குரல் கூடிக்கொண்டே இருந்தது. ரமணி எழுந்துகொண்டு “சாப்பாட்டுக்குக் கிளம்புறண்ணா. அவரும் வந்திருப்பாரு!” என்றாள்.
மணியண்ணன் அவளை கேள்வியாகப் பார்த்துவிட்டு, நேரத்தையும் கவனித்துவிட்டு “ம்ம்” என்றார்.
உணவு முடித்துவிட்டு திரும்பியபின், அந்தப் பையன் சென்று ஊத்தில் அமர்ந்தான். “டேய் நீ எந்திரிச்சுப்போய் பூ வை!” என்ற மணியண்ணன் “செந்திலு, இதுலாம் என்னான்னு பாரு” என்று அவன் மராமத்தாக்கிய ஜதைகளை என்னை நோக்கித் தள்ளிவிட்டார்.
நான் உண்டுகொண்ட ஆற்றலையெல்லாம் இழந்து சலிப்புடன் அந்த ஜதைகளையும், மணியண்ணனையும் பார்த்தேன். அவர் என்னைத் தவிர்த்து வேலைகளில் முனைப்பானார். பையன் நடந்துவந்து “அண்ணா” என்றபடி என்னை எழுப்பிவிட்டு அங்கே அமர்ந்துகொள்ள நின்றான்.
நான் சென்று ஊத்தில் அமர்ந்தேன். முதல் அரைமணிநேரத்திற்கு பெரிதாக எந்த வலியும் தோன்றவில்லை. உடல் உண்மையாகவே மீண்டுவிட்டதோ என்றுகூடத் தோன்றியது. கண்கள் மட்டும் அனல்காற்றில் சிவந்து கொண்டிருந்தன. பின் மெல்ல முதுகெலும்பின் கீழ்பகுதியிலிருந்து தீநாகமாக எழுந்த அந்த வலி சுடும்நெளிவுடன் முதுகெங்கும் பரவிக்கொண்டது. என் கைகள் நடுக்கமெடுத்தன. உடலை நேர்நிமிர்த்தினால் முதுகைக் குறுக்காக பல சாட்டைகள் வெட்டின.
இரவு வீடுதிரும்பும் பொழுது ஒவ்வொரு அடியும் வதையாக இருந்தது. எங்காவது ஓரமாகப் படுத்துக்கிடந்து விட்டால் போதுமென்ற நிலை. நினைவு தெரிந்த நாள்முதல் செய்துவரும் தொழில்தான். என் உடலும் இதற்கெனவே படைத்ததுபோல் பலகாலமாய் உழைத்தது. ஆனால் அண்மைக்காலமாய் அது மலிந்துவிட்டது. அதன் ஒவ்வொரு கூறும் இப்பொழுது இந்த வேலையைக் கண்டால் அஞ்சுகின்றன.
சமையற்கட்டில் மூடிவைத்த தட்டில் உணவிருந்தது. உண்ணுவதற்கெல்லாம் உடலில் வலுவில்லை. இருந்தும் விடியல் அவள் ஏச்சிலிருந்து தொடங்கும் என்பதால் உண்டுவிட்டுவந்து படுக்கையில் விழுந்தேன். தேவியும், நிலாவும் அடுத்தடுத்து உறங்கிக்கொண்டிருந்தர்கள் அல்லது உறங்குவதுபோல இருந்தார்கள்.
விடியலில் தேவியின் நடமாட்டம் உணர்ந்தபோதே விழித்துக்கொண்டேன். எழுந்து விறுவிறுப்புடன் தயாராகி சமையல் வேலைக்காக ஓடி பேருந்தில் அமர்ந்துகொண்டேன். குகைக்குச் சென்று கணேசன் கேட்டரிங்கில் அவர்களோடு இணைந்துகொண்டபின் இருநாட்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை.
அன்று ஞாயிறு என்பதால் வீட்டில் உறங்கிக்கிடந்தேன். மூர்த்தி தேவியின் எண்ணிற்கு அழைத்திருந்தான்.
“ஏய் இதை உன் அப்பன்ட்ட கொடு!” என்ற தேவியின் குரல் தூக்கத்திற்குள் கேட்டது. நான் கண் திறந்தபோது ஓடுகளுக்கிடையே அடுக்கப்பட்டிருந்த கண்ணாடித் தடுப்பிலிருந்து பொழிந்த ஒளிவெள்ளத்தில் நிலா மௌனமாக மிதந்துவந்து போனை நீட்டினாள். நான் எழுந்தமர்ந்து டீவி சத்தத்தை ஒடுக்கினேன்.
“ஹலோ?”
“அண்ணே, மூர்த்தி!”
“சொல்லு மூர்த்தி”
“எங்கண்ணே போன ரெண்டுநாளா? உன்னைக் கேட்டு மணியண்ணன் போன் பண்ணிட்டே இருந்தாரு. அர்ஜென்ட் வேலைன்னு வெள்ளிக்கிழமை வீட்டுக்குவந்து சொல்லிட்டு போனாராம். நேத்து காணோம்னு ஒரே புலம்பல். பட்டறைக்காரன் ஜதை வேணும்னு ஒத்தக்கால்ல நின்னுட்டு இருக்கானாம். இன்னைக்குகூட வேலை செய்யுறதாத்தான் சொன்னாரு! பாவம்ண்ணே அவரு. அண்ணிக்கிட்டக்கூட கேட்டாராம், அது ‘அந்தப் பேச்சைலாம் என்கிட்ட வேண்டாம்’னு கத்திவிட்டுடுச்சாம்”
நான் அடுத்தடுத்து ‘ம்’ கொட்டிக்கொண்டு இருந்தேன்.
“ஒழுங்கா அவர்கிட்ட வேலைக்குப் போகலாம்ல்ல. அவர் உனக்குச் செய்யாததா? ஏன் அவரையும் அலையவிட்டுடு, நீயும் திருடனாட்டம் சுத்திட்டு இருக்க?”
“இல்லடா, இப்போலாம் ரொம்ப நேரம் குனிய முடியமாட்டிங்கிது. அன்னைக்குப் போயே உடம்பெல்லாம் நல்லவலி. அதான் அடுத்த நாள் பூந்தடிச்சு சமையல் வேலைக்குப் போயிட்டேன். இவர்கிட்ட வேலைக்குப் போய் ஊத்துவேலை செய்யலன்னா இவருக்கு கைகால் போனமாதிரி ஆகிடும்போல, பொருமிட்டே இருக்காரு. இதுக்குமேல வெள்ளிவேலை செட் ஆவும்னு தோனலடா!”
“என்னண்ணே நீ! இங்க நீ பெரிய வேலைக்காரன். அங்க ஏதோ காய்கறி வெட்டிக் கொடுத்துட்டு இருக்கன்னு கேள்விபட்டேன்? இங்க தானேண்ணா நீ ராஜா!”
நான் அமைதியாக இருந்தேன்.
“வேலைக்கு வரலன்னா அவர் கொடுத்த பாக்கியைக் கேட்பாரே?”
“கொடுத்துடுவேன் மூர்த்தி”
“எது சமையல் வேலை பார்த்தா?” அவன் சிரித்தான் “காமெடி பண்ணாதண்ணே!” ஒருநொடி அமைதியாகி “நான் ஒரு யோசனை சொல்ட்டா?” என்றான்.
“என்ன?”
“இங்க நான் வேலைப் பார்க்கிற இடத்துக்கு வரியா? ஒரு ஆள் தேவையா இருக்கு. பெருசா ஊத்துவேலை எதுவும் இருக்காது. ஒன்னு நான் ஊதுவேன். இல்லன்னா அவர் பையனே ஊதுவாப்படி. உனக்கொன்னும் வேலை இருக்காது. நான் அப்போப்போ அரைவேலை செய்ய போயிடுறதால பத்தாக்குறையா இருக்கு. ஓனர்தான் ஆள்பார்க்கச் சொன்னதும். நீ சரின்னா சொல்லு நாளைக்குக் காலைல வேலைக்குப் போகும்போது கூட்டிட்டுப் போறேன். ஓகேன்னா மணியண்ணன்கிட்ட விசயத்தைச் சொல்லிட்டு இங்க பாக்கிவாங்கி அங்க கொடுத்துடலாம். என்ன சொல்லுற?”
நான் ‘சரி’ என்றுதான் கூறினேன். திங்கள்கிழமை காலையில் மூர்த்தி வண்டியோடு வீட்டிற்கு வந்தான். நிலாவைப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு தேவியும் வேலைக்குச் சென்றிருந்தாள். நான் உண்டுவிட்டு அவனோடு சேகரண்ணன் பட்டறைக்குச் சென்றேன்.
சேகரண்ணன் வாசலில் அமர்ந்திருந்தார். அருகில் காப்பி டம்ப்ளர். குழந்தை ஒன்றை மடியில் வைத்துக்கொண்டிருக்க அவரைக் கடந்தபடி பெண்பிள்ளைகள் வெளிவந்தும் உள்சென்றுமாக இருந்தார்கள். வீடே விழாக்கோலம் பூண்டதுபோல் இருந்தது. ஆனால் இல்லை.
மூர்த்தி இதையெல்லாம் சொல்லியபடியேதான் அழைத்துவந்தான். “அந்த வீட்ல எப்பப்பார்த்தாலும் பொடுசுங்க ஓடிகிட்டேத்தான் இருக்கும்ங்க. பட்டறை மேல. அங்க யாரும் வரமாட்டாங்க”
சேகரண்ணன் எங்களைக் கண்டதும் “வா மூர்த்தி!” என்றார்.
“அண்ணா!” அவன் ஒருகையில் வணக்கம் வைத்தான். நான் புன்னகைத்தேன். மூர்த்தி அவரை நெருங்கி “ஆள் கூட்டிட்டு வரேன்னு சொன்னனேண்ணா!” என்று என்னைக் காட்டினான்.
“எங்க வேலை பார்த்துட்டு இருந்தீங்க?”
“மணியண்ணன் பட்டறையில”
“அங்க என்ன?”
“ஊத்துவேலை முடியமாட்டிங்கிதுண்ணா”
“ஊதுவீங்கல்ல?”
“அதுலாம். பொட்டாப்பொழுதுக்கும் ஊதிக்கிடந்த உடம்புதான். கொஞ்ச நாளா முதுகுவலி அதிகம். முன்னபோல குனிஞ்சி ஊத முடியுறது இல்லை. அதைச் சொன்னா அங்க சலிச்சிக்கிறாங்க!”
“ம்ம்… இங்க ஊத்துவேலை பெருசா இல்லை. மூர்த்தி இருக்கான். பத்தாததுக்கு எங்க பையனும் இருக்காப்டி. கீழ்தோது எல்லாம் கரண்ட்ல ஊதிடுறது. அதுக்கும் சேட்டான் வந்துடுறான். நமக்கு கைக்கைக்கு ஒட்டித்தர ஆள் வேணும், அவ்ளோதான்!”
“அது ஒன்னும் பிரச்சனை இல்லண்ணா. ஒட்டுற வேலைலாம் வேகமாகவே வரும்”
“என்ன சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க?”
“ஏழ்நூறு!”
“வார சம்பளம் தானே?”
“ஆமாண்ணா! இடையில தேவைப்பட்டாமட்டும்…”
“அதுலாம் ஒன்னுமில்லை வாங்கிக்கலாம். பாக்கி உண்டா?”
நான் தலையசைத்தேன். எந்த வெள்ளிப்பட்டறைக்குச் சென்று நின்றாலும் இறுதிக்கொக்கி இதுவாகத்தான் இருக்கும். ஆளிற்கும், அவனது வேலைக்கும் பொருந்தாத பாக்கி இருந்தால் வேலை கிடைப்பது பெரும்பாடு. பலர் பல வருடங்களாக ஒரே பட்டறையில் உழன்று கொண்டிருப்பதும் தலைக்குமேல் கூடிவிட்ட பாக்கிச் சுமையால்தான். “உனக்குலாம் எவன்டா இவ்ளோ பாக்கிக் கொடுத்து வேலைக்கு வச்சியிருப்பான், சொல்லு!?” என்பார்கள்.
“எவ்ளோ வாங்கியிருக்கீங்க?” என்றார் சேகரண்ணன்.
“ஒன்னு!” என்றேன்.
“ம்ம்!!! ஆயிரம்லாம் முடிஞ்சிபோச்சு. தொட்டா இலட்சம்தான் இல்லையா?”
நான் நெளிந்தேன்.
“சம்பளம் பிரச்சனை இல்லை, பாக்கிதான்…”. அவர் காப்பியை ஒரு மிடறு முழுங்கிவிட்டு “என்ன மூர்த்தி ஒழுங்கா வேலை செய்வாரா?” என்றார்.
“அதுலாம்ண்ணா. நல்லவேலைக்காரர்தான். இல்லன்னா நான் ஏன் கூட்டிட்டு வரபோறேன்”
அவர் என்னைநோக்கி “சரி வாங்க, வேலையைப் பார்த்துட்டு என்ன ஏதுன்னு பேசிக்குவோம்” என்றார்.
அன்றே பட்டறையில் அமர்ந்துகொண்டேன். ஏழுபேர்கொண்ட பட்டறை. நான், மூர்த்தி, சேகரண்ணன், அவரது மகன், ஒரு சேட்டு, இரண்டு பெண்கள். இடமும் தாராளமாக இருந்தது. மூர்த்திதான் மேல்ஊத்து அனைத்தையும் கவனித்துக்கொள்வது. அவனுக்கு வேலைக்கூடிப்போகும் சமயத்தில் மட்டும் சேகரண்ணனின் மகன் ஊத்தில் அமர்ந்தான். கீழ்ஊத்து எல்லாம் சேட்டானிடம் சென்றுவிடுகிறது. ஏழரைக்கெல்லாம் வேலை முடிந்துவிடுகிறது. பெண்கள் ஆறரைக்கே சென்றுவிடுகிறார்கள்.
செலவிற்கு முன்னூறு வாங்கிக்கொண்டு நான் மூர்த்தியுடன் வீட்டிற்குப் புறப்பட்டேன். வழியில் ‘சில்லி சிக்கன்’ கடையைக் கண்டதும் “நிறுத்து மூர்த்தி, கறி வாங்கிக்கிறேன்!” என்றேன்.
அவன் வண்டியை நிறுத்தி “அப்புறம் வாங்கிக்கலாம்ண்ணா!” என்றான்.
“புள்ளைக்கு வாங்குறேன் மூர்த்தி!”
“அப்போ வரும்போது வாங்கிக்கலாம்!” அவன் வண்டியைக் கிளப்ப முயன்றான்.
“எங்க இருந்து?” நான் அவன் தோளில் கைவைத்து அழுத்தினேன்.
“கடைக்குப் போக வேண்டாமா?”
எனக்கு கூச்சமாகியது. “அதுலாம் வேண்டாம் மூர்த்தி. என்னை வீட்லவிடு போதும்!”
“ஏன் அண்ணி திட்டுமா?”
“இல்லல்ல!”
“அப்புறம் என்ன?”
“புள்ளைக்கு வாடை பிடிக்கிறது இல்லை”
“அதுக்கு என்னண்ணா தெரியும்?”
நான் மறுத்தேன். அப்படி விலக்கிவிட்டுச் செல்லக்கூடிய குழந்தையல்ல அவள். என் குடிநாற்றம் அவளது கண்களில் என்னை ஒரு சாக்கடையாக்குகிறது. “இல்லை மூர்த்தி, நீ வேணா போ. நான் கறிவாங்கிட்டு வீட்டுக்கு நடந்து போய்க்கிறேன்!”
“சரிண்ணே!” அவன் என்னை இறக்கிவிட்டு கிளம்பிச் சென்றான்.
அந்த வாரஇறுதியில் சம்பளத்தை நீட்டியபோது தேவி ஒரு சொல்லுமின்றி அதை வாங்கி வைத்துக்கொண்டாள். சோற்றை உண்டுவிட்டு படம் பார்த்துக்கொண்டிருந்த நிலாவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டேன். அவள் கண்கள் திரையின் வண்ணங்களில் மின்னிக்கொண்டிருந்தன. இந்த முகம் – நிறைபொழிவுடன் சிரித்துவரும் இதே முகம்! என் மனதில் அந்த வெட்டு பெருத்துவந்தது. அந்தப் பொழிவை நான் இழந்துவிட்டேன். இனி எப்போதும் அது மீளாதென்ற அச்சம் என்னை உறங்கச் செய்துவிட்டது.
மூர்த்தி மூன்று நாட்கள் விடுப்பெடுத்துக்கொள்ளப் போவதாகக் கூறினான். “நூறு ஜதை அரைவேலை வந்திருக்குண்ணா. மூணு நாள்ல கொடுத்தாகணும். அதனால நீ போ. அங்க ஒன்னும் பெருசா ஊத்துவேலை இருக்காது. ஐட்டமும் முடியப்போகுது. எதாவது இருந்தாலும் அந்தப் பையன் பார்த்துக்குவான், சரியா?” என்றான்.
அது வேலைக்குச் சென்ற நான்காவது வாரத்தின் இடையில் நிகழ்ந்தது. இந்த வாரமும் முடிந்துவிட்டால், கேட்ட பாக்கிப் பணத்தில் ஒரு பகுதி வந்துவிடும். அதை மணியண்ணனிடம் தந்து மிச்சத்தை மூன்று மாதத்திற்குள் தந்துவிடுவதாகக் கூறிவிட்டு வரவேண்டும். இங்கும் பாக்கியைச் சம்பளத்திலிருந்து பிடித்தபடியே கழித்து வரவேண்டும்.
முதல்நாள் சென்றபோது சலங்கை வேலையைத் தீர்மானம் செய்து வைத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். மூர்த்தி கூறியதற்கு மாறாக சலங்கை வேலை என்பது முழுவதும் ஊத்தில் ஆகவேண்டிய ஒன்று. சிலர் மிசினில் ஊதினாலும், இவர்கள் ஸ்டவ்வில்தான் ஊதுகிறார்கள்.
நான் தயக்கத்துடனே வேலைக்கு அமர்ந்தேன். மதியம்வரை சலங்கை கூறுகளை ஒன்றிணைத்து தட்டமண்ணில் ஒட்டிவருவதுதான் பணி. அதன்மேல் அவற்றை ஊதத் தொடங்கவேண்டும். நான் சேகரண்ணனிடம் “ஊத உட்காரணுமா?” என்றேன்.
“வேண்டியதில்லை, பையன் பார்த்துக்குவாப்டி. கைக்கைக்குப் பொடிவச்சிக் கொடுங்க போதும். தட்டம் எதுவும் கூடிப்போச்சுன்னா வேணா பார்க்கலாம்!”
என்னுள் ஆறுதலுக்கு மாறாக ஏமாற்றம் தோன்றியது. சேகரண்ணனின் மகன் ஊத்தில் அமர்ந்துகொண்டான். தொடக்கமே நெருப்பை முழுவதுமாக வைத்துக்கொண்டான். அது பக்குவமின்மையின் மொழி. நான் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.
அவன் சிறிது நேரத்திலேயே நெருப்பைக் குறைத்துவிட்டு “அக்கா பொடிலாம் ஒழுங்கா ஒட்டமாட்டிங்கிது. வெங்காரம் சரியா வைங்க!” என்றான்.
அந்தப் பெண்கள் “சரிப்பா” என்றுவிட்டு பெயருக்கு ஒருமுறை வெங்காரக் கிண்ணங்களைக் குழப்பிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார்கள்.
நான் தட்டத்தைக் கொண்டுசென்று அவன்முன் வைக்கும்பொழுது பார்த்தேன், பொடிகள் (சிறுச்சிறு சதுரங்களாக வெட்டப்பட்டு தீயில் கரைந்து வெள்ளியின் கூறுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டப் பயன்படுத்தும் செம்பு கலந்த சிறுசிறு தகடுகள்) முறையாகக் கரையும்முன்பே தீயின் அதீதக் காட்டத்தால் பொசுங்கி இருந்தன.
“காய்ப்பை இன்னும் குறைக்கணும்ப்பா!”
அவன் தலைநிமிர்ந்து “ஆ?” என்றான்.
“காய்ப்பை இன்னும் குறைக்கணும். பொடி ஒழுங்கா ஒட்டாது!” என்றேன்.
சேகரண்ணன் “இது புதுப்பட்டறையில வாங்கின வேலை. வெள்ளியும் நாம செய்யுறதைவிடவும் மட்டம். அதான் தோது தெரியல. நீங்க ஒரு ரெண்டு லைன் ஊதிக்காட்டுங்க!” என்றார்.
நான் தலையசைத்தேன். அவனும் தலையசைத்து எழுந்துகொண்டான். அந்தத் தட்டத்தின் மிச்சத்தையும், முன்பு ஊதியதில் தீய்ந்து ஒட்டாமல் சுருங்கியிருந்த சிலவற்றையும் அவனுக்கு ஊதிக் காட்டினேன்.
“என்னப்பா ஊதுறியா?” என்றார் சேகரண்ணன்.
“ஊதுறேன்!” என்றான்.
“சரி நீங்க வந்துடுங்க!” என்றார் அவர். நான் மீண்டும் சென்று பொடி வைக்கும் வேலையில் அமர்ந்துகொண்டேன். இருந்தும் வேலை பிந்திக்கொண்டே சென்றது. அவனுக்கு இன்னும் முறையான காய்ப்பு கைவரவில்லை. அவன் மிகவும் சிரமப்படுவது நன்றாகவே தெரிந்தது. தட்டங்கள் கூடிப்போனபோது நானும் ஊத்தில் அமர்ந்துகொண்டேன். நான் இரண்டு தட்டங்கள் ஊதும் நேரத்தில் அவன் ஒரு தட்டம் ஊதினான்.
அவன் சிறியவன்தான். வேலை பழகிக்கொள்ளும் ஒருவன்தான். ஆனால் ஒரு பெரிய வேலைக்காரனுக்கு அவனற்றி அவனுக்கு நிகரான மற்றொரு பெரிய வேலைக்காரன் ஊத்தில் அமரவில்லை என்றால் அது குறைச்சல்தான். எனக்கு அந்தக் குறைச்சல் கீறல்களாகப் புலப்பட்டது.
வெள்ளிப்பட்டறையில் ஊத்துவேலை என்பது அனைத்திற்கும் மேல்சென்று அமர்வது. ஒரு கொலுசின் முழுமையை உறுதிச் செய்யும் பணியது. அது மலிந்தால் அதுவரை செய்த அத்தனை பணியும் வீணாகும். என் அகம் என்னைவிட பணிமுதிர்ச்சியற்ற ஒருவனை என்னினும் மேலான ஒரு பணியில் இருப்பதைக் கண்டு பொசுங்கியது. இயலாமையையும் மீறி சுயம் என்னை ஊத்தைநோக்கி உந்திக்கொண்டே இருந்தது.
அன்று நான் என் ஊத்தில் வெறியாடினேன். மறுநாளும், அதன் மறுநாளும் அவனை அருகில் அமரவைத்து நான் ஊத்தில் ஊறினேன். என் முதுகில் படர்ந்தேறும் தீநாகத்திற்கு என் தலையைக் கொய்தளிக்கும் செயலை எப்படி தொடர்ந்தேன் என்பது வியப்பாக இருந்தது. நான் அங்கே அனைத்திற்கும் மேல் அமர்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன். வலியின் பசிதான் அதன் விலை.
வெள்ளி இரவு ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது கால்கள் தன்னியல்பாகக் கடைக்குச் சென்றன. நான் இரண்டாகப் பிளவுபட்டு என்னுள் மோதிக்கொள்வதை உணர்ந்தேன். ஆனால் பெருமை என்பது தடித்தபோர்வை. அது அசட்டையை உருவாக்கியது. அதன்கீழ் அனைத்தும் கூச்சலின்றிதான் படிந்துகிடக்க வேண்டும். நான் ஊத ஊத என்னுள் திரண்டுவருவது அந்தப் பெருமைதான். அதைமீறி எந்தப் பயமும் முளைக்க வாய்ப்பில்லை. உலகின்மேல் அதைப் போர்த்திவிட்டபின் குனிந்து காணவும் ஒன்றும் இருப்பதில்லை.
நிலா கறிப்பொட்டலத்தை வாங்க மறுத்தாள். “நீயாவது புட்றீ…” என்று தேவியிடம் நீட்டினேன். அவள் அதை வாங்கி அடுக்கிலிருந்த ஒரு பாத்திரத்தில் வீசியதில் ஆத்திரம் வந்தது. அவளை காதோடு அறைந்தேன். “தின்னுவீங்களேன்னு வாங்கிவந்தா இளக்காரமா?” கூச்சலிட்டதைக் கண்டு நிலா உள்ளே ஓடினாள்.
கறிப்பொட்டலத்தைப் பாத்திரத்தோடு அள்ளி உள்ளே விட்டெறிந்தேன். நிலா வீறிட்டாள். பாத்திரம் சுவர்களில் மோதி உருளும் ஓசை கேட்டது. “எங்கயாவது போய் செத்துத் தொலைய்யா!” தேவி தலையடித்துக்கொண்டு உள்ளே ஓடினாள். நான் இருவரையும் நோக்கி துப்பிவிட்டு வெளியேறினேன்.
சனி முழுவதும் நான் எங்கெங்கு அழைந்தேன் என்று நினைவில்லை. இரு இரவுகள் நான் சாலையோரங்களில் உறங்கிக்கிடந்து, கையிலிருந்த மிச்சக் காசைத் தொலைத்து, வாங்கி அளிக்கவும் ஆளில்லாமல் போனபின்புதான் ஞாயிறு மாலைக்குமேல் கொஞ்சம் நிதானம் அடைந்தேன். வீதியில் நடந்துசென்று வீட்டுத் திண்ணையைக் கண்டடைந்து, அதில் படுத்துக்கொண்டேன். தூக்கம் ஒன்றின்பின் ஒன்றாக வந்தபடியே இருந்தது.
தலையில் சூடான எதையோ வைத்ததுபோன்று காலையொளி விழுந்துகொண்டிருந்தது. என்மேல் நான் அணிந்திருந்த கைலி அல்லாமல் வோறொரு வேட்டியும் கிடந்தது. அதையும் அணிந்துகொண்டுதான் இருந்தேனா, நினைவில்லை. இரண்டையும் தொடைகளுக்கிடையே சுருட்டியபடி திண்ணையில் எழுந்தமர்ந்தேன். சிறிது நேரத்தில் சமையற்கட்டில் சத்தம் கேட்டது.
“போய் ஒப்பன்ட்ட கொடு!” தேவி குரல்கொடுத்தாள். டீயோ, காப்பியோ வருவதை உணர்ந்தேன். மனம் ஏதுமற்றதாக இருந்தது. உள்ளுக்குள் நுரைத்திருந்த குடியின் குமிழிகள் இன்னும் மிச்சமிருந்தன. தேவி என்னருகில் டம்ப்ளரை வைத்தாள். டீ ததும்பியதில் திண்ணையில் வழிந்தது.
“புள்ள எங்க?” என்றேன். அவள் என்னைப் பார்த்தப் பார்வையில் எந்த பதிலும் இல்லை. உள்ளே சென்றாள். பாட்டுச் சத்தம் மிகுதியாகக் கேட்கத் தொடங்கியது.
“சனியனே, சத்தத்தைக் குறைச்சித் தொலையேன்!” என்று தேவி நிலாவைத் திட்டுவது கேட்டது. தேநீரின் ஒவ்வொரு முழுங்கிலும் இருநாட்களின் நினைவுகள் நீரின் பிம்பங்கள்போல நெளிந்துவந்தன. நான் வீட்டினுள்ளே எட்டிப்பார்த்தேன். வாசலைக் கண்டுகொண்டிருந்த நிலா அவளை மேலும் சுவரோரம் ஒட்டித் தன்னை மறைத்துக் கொண்டாள்.
பாத்திரம் ஒன்று என் காலருகினில் சுழன்றுவந்தது. உள்ளே தேவியின் செல், அதில் மூர்த்தியின் அழைப்பு. அழைப்போசை கரகரத்தது.
“மூர்த்தி!”
“அண்ணே, எங்கண்ணே உன்னை நேத்தெல்லாம் ஆளையே காணோம்? வீட்டுக்கும் வந்துபார்தேன்!”
“ஏன் மூர்த்தி?”
“பாக்கி வாங்கிக்க வரச் சொல்லியிருந்தார்ல்ல! சனிக்கிழமை ஏன் வேலைக்குப் போகல நீ?”
“இல்லை மூர்த்தி, நான் வேலைக்கு வரல”
“ஏய் பைத்தியமா நீ? நாலுவாரம் நல்லாத்தானே வேலைக்கு வந்துட்டு இருந்த!”
“செட் ஆகலடா. நான் கணேசன்க்கிட்டே வேலைக்குப் போறேன்”
“அப்போ மணியண்ணன் பாக்கி?”
“நான் கொடுத்துடுவேன் மூர்த்தி”
“அண்ணே விளையாடாதண்ணே”
“இல்லை” என்றேன். அதன்பின் அவன் கூறிய அனைத்திற்குமாக என்னிடம் ஒரே பதில்தான் இருந்தது.