அரிசிக்கடைக்குள் நுழைந்தபோதும், பதட்டம் குறையவே இல்லை சிவாவுக்கு.
காலை பதினோரு மணி, வியாபாரம் இல்லாத நேரம். பெரியசாமி உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தார். வாய் கொஞ்சமாய் திறந்திருக்க, லேசாக குறட்டை வந்தது. சிவா சுற்றிலும் பார்த்தான். அரிசி மூட்டைகள் நிறைய அடுக்கப்பட்டு இருந்தது. சில மூட்டைகள் சில்லறை வியாபாரத்திற்காய் பிரித்து வைக்கப்பட்டிருந்தது.
சின்ன வயசில் அப்பாவோடு வந்தது நினைவில் இருந்தது. அப்பாவும் பெரியசாமியும் பேசிக்கொள்ளும் நேரத்தில், இருவருக்கும் தெரியாமல் ஒரு பிடி அரிசியை அள்ளி, டவுசர் பையில் போட்டுகொள்வான். அதற்காகவே அரிசிக் கடைக்குச் செல்லும்போது ஓட்டை இல்லாத டவுசர் அணிந்து செல்வான்.
அப்போதிலிருந்து தன்னை வறுமை பிடித்திருப்பதை நினைத்தபோது மனம் கனத்தது சிவாவுக்கு. ஒரு பெருமூச்சு விட்டான். அந்த சத்ததிலேயே பெரியசாமி விழித்தார். மெல்ல கண்கள் மட்டும் திறந்து. தான் தூங்கியதை கட்டிக்கோள்ளாமல் “ஓம் நமசிவாய” என்றுவிட்டு “வாப்பா சிவா” என்றார்.
“அப்பா உங்கள பாத்துட்டு வரச் சொன்னாரு”
“முந்தாநாள்தானே ஒரு மூட்ட போட்டுவிட்டேன், இட்லி அரிசி எதும் வேணுமா? பழைய பாக்கி ரெண்டு நாள்ல தரேன்னாரே, அதுக்குத்தான் வந்தியோன்னு பாத்தேன்”
சுருக்கென்றது. சட்டென்று விஷயத்தை சொன்னான் “பெரியக்கா பொண்ணு, பெரிய மனுஷி ஆகிடுச்சாம்”
பெரியசாமி “அட எப்போ?
“இப்போதான், அக்காவுக்கு பக்கத்து வீட்டு சுந்தரம் வந்து சொன்னாரு”
“சரி சிவா, என்ன வேணும்?
“200 ரூவா கைமாத்து கொடுத்தா, அடுத்த வாரம் மொத்தமா தரேன்னு அப்பா சொன்னாரு”
யோசிக்காமல் கல்லாப்பெட்டியை திறந்து நோட்டுகளை எண்ணி நீட்டினார். “இந்தா சிவா நல்லபடியா பண்ணுங்க”
“சரிண்ணே” என்று திரும்பியப்போது. “ ஒரு நிமிசம் நில்லு” என்றவர் வேகமாய் கல்லாவில் இருந்து வெளியே வந்து செவ்வாகமாகக் கிழித்து வைக்கப்பட்டிருந்த பேப்பர்களில் ஒன்றைப் பொட்டலம் போல் மடித்து அதில் ரெண்டு படி அரிசி அள்ளிப்போட்டார். எடை கல்லில் வைக்காமலேயே நூல் கொண்டு கட்டி சிவாவின் கைகளில் கொடுத்தார்.
“பொங்கல் அரிசி, இது கணக்குல இல்ல, மூத்தவ பாவம், உங்கக்கா என்ன பண்ணுதோ, பொங்கல் வச்சு கொண்டு போய்டுங்க” என்றார்.
வாங்கிவிட்டு நகர்ந்தவன் தோள் பிடுத்து “அக்கா மக பெரிய மனுசி ஆகிட்டா, உன் காசுல ஒரு முழம் பூ வாங்கிட்டுப் போ” என சில்லறைகளாக அவன் சட்டை பையில் வைத்தார். சிவா “சரிண்ணே” என்று வெளியே வந்தான்.
கடைக்கு வெளியே, நாளை முதல் ‘ஆண்பாவம்” என்று போஸ்டர் ஒட்டி இருந்தது. போஸ்டர் ஒட்ட ரவி தன்னை அழைக்காததை நேரில் பார்த்து கேட்க நினைத்தான். நடந்து, தண்ணீர் டேங்க் எதிரில் இருந்த சைக்கிள் கடைக்கு வந்தான். “அண்ணே ஒரு சைக்கிள் எடுத்துக்கறேன்”
“எடுத்துக்க சிவா”
“இந்த மூணாம் நம்பர எடுத்துக்கறேன்” என்று வரிசையாய் நின்ற சைக்கிள்களில் ஒன்றை வெளியே எடுத்தான். செருப்பை கழட்டிவிட்டுக் கால்களால் டயரை மிதித்து காற்று பார்த்தான். “கொஞ்சம் காத்து புடிக்கணும்” என்று ஓரமாய் கிடந்த பம்பை எடுத்து சைக்கிள் வால் tubeல் பொருத்தி காற்றடித்தான்.
“டபுல்ஸ் போக போறியா?
“ஆமாண்ணே, நானும் அப்பாவும் அஞ்சு ரோடு போறோம்”
“என்ன விசேஷம்?
“பெரியக்கா பொண்ணு பெரியமனுஷி ஆகிட்டு”
“ஓ சரி சரி, போயிட்டு வா, நோட்டுல எழுதி வச்சுட்டு போயிடு”
சிவா தரையில் கிடந்த நோட்டை எடுத்து, 26.12.1985 – சிவா – 11.30 – 3 என்று அடுத்தடுத்து எழுதினான்.
சைக்கிள் மிதித்து, பழைய போஸ்ட் ஆபிஸ் சந்தில் இருந்த, தன் வீட்டுக்கு வந்தான். அப்பா வெளியே உட்கார்ந்து விசிறிக் கொண்டிருந்தார். கேரியரில் இருந்த அரிசிப்பயை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான். தன் பாக்கெட்டில் கை விட்டு அந்த ரூபாய்களை அப்பாவிடம் கொடுத்தான். அப்பா வாங்கி எண்ணிப் பார்த்து தன் பைக்குள் வைத்தார். “பொங்கலுக்கு அரிசி கொடுத்தாரு, காசு வேண்டாமாம்”
“எதுக்கு இதெல்லாம், திருப்பி கொடுக்கறப்போ இதுக்கும் சேர்த்து பணம் கொடு, இப்படி யார் கொடுத்தாலும் வாங்கலாமா? கடன் வேற இது வேற” என்று பொதுவாய் சொன்னார். பூவுக்கு கொடுத்த காசு பற்றி சிவா சொல்லவில்லை.
அப்பா ஒரு மஞ்சள் பை வைத்து இருந்தார். சிவா தன் சட்டையை மாற்றிகொண்டான். வெளியே வந்து வீட்டைப் பூட்டினான். “போலாமா? என்றுவிட்டு சைக்கிளை எடுத்தான். அப்பா மெல்ல நடந்து வெளியே வந்தார். கொஞ்ச நாளாய் அப்பாவின் நடை தளர்ந்து போய் இருந்ததை பார்க்க முடிந்தது.
சிவா சைக்கிள் மிதிக்க அப்பா கொஞ்ச தூரம் கேரீர் பிடித்து வந்து லாவகமாக ஏறினார். ஏறிப் புட்டங்களை அசைத்து சரி செய்து அமர்ந்தபோது சைக்கிள் தடுமாற, சிவா நேர் செய்து ஒட்டினான்.
“இறக்கத்துல பூக்கடைல நிறுத்து கொஞ்சம் பூ வாங்கிக்கலாம்” சிவா தலை ஆட்டினான்.
சிவாவுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாத போது, தன் அப்பாவை சைக்கிளில் வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்தக் கனவு நிகழ்ந்தபோது சுமையாய் தோன்றியது.
இறக்கத்தில் பெடல் செய்யாமல் சைக்கிளில் சென்றது கால்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது.
பூக்கடை அருகில் சைக்கிள் மெதுவாக ஓட, அப்பா ஓட்டத்திலேயே இறங்கித் தடுமாறி நின்றார். “என்ன முத்து கவனமா இறங்க கூடாதா, அதிசயமா இந்த பக்கம்”
“வைரத்தோட பொண்ணு பெரியவ ஆகிட்டா, அதன் போய் பாத்து செய்ய வேண்டியதை செய்யலாம்னு”
“கமலா வரலையா?
“அது மூத்தவனுக்கு மகன் பொறந்தான்னு பாக்க முசிறி போச்சு, சொல்லி, வந்து சேர நேரமாகும், சின்னவனும் அம்மாக்காரி கூட போயிருக்கான். சிவாவும் நானும்தான் இங்க இருக்கோம், கொஞ்சம் பூ கொடு, விசேசத்ததுக்கு தேவையான அளவு கொடு”
பூக்களை முழமிட்டுக்கொண்டே “அப்போ புள்ள தீட்டுன்னு பெரியவன் வர மாட்டான், சிவாதான் குடிசை கட்டணுமா”
“தெரியல, வைரத்தோட புருஷன் என்ன நிலைமைல இருக்கானோ? போனாதான் தெரியும்”
“கமலா தம்பிதானே அவன்?
“ஆமா அந்த தொம்பிதான்” என்றார் எரிச்சலாய். சிவா அனைத்தையும் கேட்டு அமைதியாய் இருந்தான்.
மீண்டும் சைக்கிள் பயணம். ரயில்வே கேட், ஏதோ சரக்கு ரெயிலுக்குக்காக மூடி இருந்தது. “கீழ குனிஞ்சு போய்டலாம் போ” என்று மீண்டும் சைக்கிளில் இருந்து இறங்கினார். சிவா கேட்டுக்கு கீழே குனிந்து சைக்கிளை சாய்த்து நகர்த்தி அந்த பக்கம் சென்றான். அப்பாவும் அதே போல் வர மீண்டும் சைக்கிள் பயணம்.
சைக்கிள் நேராக வைரத்தின் வீட்டு வாசல் முன் நின்றது.
“சிவா வந்துட்டான்” என்று ஒரு கிழவி சொல்லக் கையில் முறத்தோடு வெளியே ஓடி வந்தாள் வைரம்.
“அப்பா இது தேவையாப்பா இந்த முண்டைக்கு” என்று முத்துவை அணைத்து அழ, முத்துவின் கண்கள் கலங்கியது. சிவாவும் கலங்கினான். சிவா வேறு பக்கம் திரும்பி கண்கள் துடைத்தான்.
“நல்லது நடந்த வீட்ல ஏண்டி அபசகுணம் புடிச்ச மாரி அழுதுட்டு இருக்க, நீங்க உள்ள வாங்க” என்றாள் பக்கத்து வீட்டு கிழவி.
“அவன் எங்க?
“எங்க குடிச்சிட்டு விழுந்து கிடைக்கோ, சந்தோசம்னாலும் சோகம்னாலும் குடிதானே அதுக்கு”
“…டியா பையன் வரட்டும் இன்னிக்கு, உங்கோயி …ண்டயால வந்தது, தம்பி தம்பின்னு என் பொண்ண குழில இறக்கி விட்டா தட்டுவாணி” என்று கத்தினார் முத்து.
“தாத்தா 50 காசு கொடு” என்றான் சின்னவன்.
முத்து தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தார். “மாமா சைக்கிள் சாவி தா ஒரு ரவுண்டு போறேன்”
“வேண்டாம் ராஜா சும்மா இரு” என்று அதட்டினன் சிவா.
ராஜா கோவித்து கொண்டு சென்றான்.
“கமலா எப்போ வரும்? – பக்கத்துவீட்டு கிழவி.
“தெரிலம்மா, அது வந்தே ஆகணுமா?
“ஆமா பொம்பள விசேஷம், சுத்தி ஆம்பளைகளா நின்னா விளங்குமா, கமலா வந்தா இவ புருசனும் அடங்கி உக்காருவான்”
“சேதி சொல்லியாச்சு, வந்துடும், இப்போ என்ன பண்ணலாம்”
“கீரை விதை வாங்கிட்டு வந்திங்களா?
முத்து அமைதியாய் நின்றார்.
கிழவி சிவாவை பார்த்து “சிவா கீரை விதை வாங்கிட்டு வா, குளிச்சிட்டு போட்டுக்க புது துணி எடுத்துட்டு வா, தாவணி பாவாடை, முத்து வா நாம போய் ஆத்து இறக்கத்து தோப்புல தென்ன மட்டை கீத்து எடுத்துட்டு வருவோம். என்று நடந்தாள். சொந்தங்கள் யாருக்கும் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் வீடு தெரு ஆட்களால் நிறைந்தது. ஒரு ஹாலும் அடுப்படியும்தான் மொத்த வீடும். தெருவில் மக்கள் நின்றார்கள். முத்து இன்னொரு வீட்டில் சொல்லி டீ போட ஏற்பாடு செய்திருந்தார்.
“புள்ள காலைல இருந்து சாப்பிடல, அந்த பாலையும் கீரை விதையையும், நம்ம அங்காயிய வேண்டிக்கிட்டு கொடு சிவா”
சிவா கீரை விதை கொடுத்தான். அந்தச் சின்னப் பெண் சிரித்துக்கொண்டே வாங்கி வாயில் போட்டாள். சட்டென்று துப்பினாள். “இந்தாடி அப்டிலாம் துப்ப கூடாது மருந்து மாதிரி முழுங்கு”
மீண்டும் சிவா கொடுக்க, இம்முறை முழுங்கினாள். பின் சிவா கொடுத்த பாலை குடித்தாள். மீதி கொஞ்சம் இருக்கையில் சிவாவிடம் “போதும் மாமா” என கொடுத்தாள். அந்த சின்ன கைகள் தன் கைகளில் பட்டது, நேற்றுவரை தூக்கி சுற்றி விளையாடிய கைகள் இப்போது வேறொரு பெண்ணின் கைகளாய் தோன்றியது. சட்டென விலக்கி கொண்டான்.
“அடியே அத ஓரமா வை டி, சிவா அந்த புது துணி, நீங்க வாங்கிட்டு வந்த பூ, பழம், சீப்பு, பவுடர் எல்லாம் வச்சுக்கோ, தட்டுல கொடு, வைரம் எங்க அந்த வீணாப்போனவன்”
“இந்தா வந்துட்டாரு” என குரல் கேட்டு திரும்ப, பாண்டி நடந்து வந்தான்.
“சிவா, பொண்ணோட அப்பன் ஆத்தாள நிக்க வச்சு, ‘தாய்மாமன் வீட்டு சீரு, குறை இருந்தா மனசுல வச்சுக்கமா ஏத்துக்கோ‘ னு சொல்லிக் கொடு”
சிவா அதே போல் செய்ய, “கால்ல விழுந்து ஆசி வாங்கு மீனா” என்று பெண்ணிடம் சொல்ல, பாண்டியும் சேர்ந்து காலில் விழ சென்றான். சிலர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர். “எந்திரிங்க மாமா” என பதறி தூக்கினான் சிவா.
“சும்மா மாப்ள” என சிரித்து எழுந்தான் பாண்டி.
“…யோலி மானத்த வாங்குறனே” என்று புலம்பினார் முத்து.
மீனா குளிக்க சென்றாள். ஆண்கள் வெளியே வந்தார்கள். பாண்டி முத்துவிடம் வந்து “எப்போ வந்திங்க மாமா? என்றான். சாராய நாற்றம் அடித்தது.
“இப்போதான்”
“அக்கா…”
“வரும்”
“மாமா ஒரு 10 ரூவா கொடுங்க, கொஞ்சம் சாமான் வாங்கணும்”
“ஓரமா போய் நில்லு, கன்னத்துல ஓங்கி விட்டேன் செத்துப் போய்டுவ”
“கோவமா இருக்கீங்களா, நா குடிக்கறத நிறுத்திட்டேன் மாமா, ஆனா இந்த புள்ளய எப்படி கரை சேப்பேன்னு நினச்சேன், துக்கத்துல கொஞ்சம் குடிச்சுட்டேன், பாவம் வைரம்” என விசும்பினான். முத்து ஏதேனும் செய்துவிடுவோம் என பயந்து நாகர்ந்தார்.
கொஞ்சம் தள்ளி வைரம் யாரோடோ பேசிகொண்டிருந்தாள். அப்பாவை பார்த்து அருகில் வந்தாள். “என்னப்பா?
“ஒண்ணுமில்ல, எல்லாம் முடிஞ்சதா?
“ஆச்சு ப்பா, டீச்சர் ட்ரைனிங் முடிச்சேன்ல, வேலை கிடைச்சு இருக்குப்பா”
“சரி கண்ணு”
“அப்பா என்னாச்சுப்பா?
“என்ன மன்னிச்சுடு கண்ணு, இந்த பயலுக்கு உன்ன கொடுத்து உன் வாழ்க்கைய அழிச்சுட்டோமே சாமி” என வைரத்தின் கை பிடித்து முகத்தில் வைத்து அழுதார் முத்து. உடல் குலுங்கியது. “அழாதப்பா ஒண்ணுமில்ல, நா பொழச்சுக்குவேன் ப்பா, நீ இருக்கைல எனக்கு என்னப்பா?
“அதுதான் சாமி பயமே, நா போய்ட்டா என்ன கண்ணு பண்ணுவ”
“என்னப்பா நீ என்ன எவ்ளோ தைரியமா வளத்தி வச்ச, நா நின்னுக்குவேன் ப்பா, கீழ விழுந்தாலும் எழுந்து நின்னுக்குவேன் ப்பா, நீ பயப்படாதப்பா” என்று ஆறுதல் சொல்லி முதுகில் தடவி “இருப்பா சாப்பாடு போட பக்கத்து வீட்டுல சொல்லி இருந்தேன் கேட்டு வரேன்” என நகர்ந்தாள் வைரம்.
முத்துவுக்கு அழுகை அடங்கியது. கண்களை துடைத்துவிட்டு திரும்பினார். சிவா அப்பாவை நோக்கி வந்தான். “என்னாச்சு?
“அது நான் பாத்து செஞ்ச சிலைனு நெனச்சேன், இல்ல டா, அது சுயம்பு, எப்படியும் பொழச்சுக்கும்” என்று பொதுவாய் சொல்லிவிட்டு நாகர்ந்தார் முத்து. சிவா அப்பா சென்ற திசை பார்த்தான். நடையில் கம்பீரம் ஏறி இருந்தது.