கமலே! கண்ணாளனே!!

கமலிடம் பேசவே தயக்கமாக இருந்தது. முதலில் அதைத்தான் கேட்பான். தேவி ‘டைப்’ செய்வதும் அழிப்பதுமாக இருந்தாள்.

‘அவருகிட்ட சொல்லிடு புஜ்ஜி, அப்போதான் உன் மனசு நல்லா இருக்கும்’  நேற்று கமல் சொன்ன வார்த்தைகள் கண்முன் ஓடியது. 

நேற்றிரவு தூங்கும்முன் கணவனிடம் சொல்ல நினைத்தாள். பெண்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியைக் காணும் முனைப்பில் அவன் படுக்கைக்கு வரவே நள்ளிரவானது. காலை எழுந்து அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, தூங்கும் கணவனின் முகம் கண்டு இரக்கம் உண்டானது. தான் செய்வது ‘சரியா?’ என்ற கேள்வி வந்தது. கமலின் உறவை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. 

இப்படி பலமுறை தோன்றி இருக்கிறது. பேசாமல் தவிர்த்தும் இருக்கிறாள். ஆனாலும், இரண்டு நாட்களுக்குமேல் அது தாக்குப் பிடிப்பதில்லை. 

இதை நினைத்துக் கமலிடம் சரியாகப் பேச முடியாத ஒருநாளில் கமலே கேட்டான் “ஏன் சரியாவே பேசமாட்டேங்கற?”

“ஒண்ணுமில்ல”

“என்கிட்ட சொல்ல விருப்பமில்லைன்னா விட்ரு”

“அப்படியில்ல, சொன்னா தப்பா நெனைப்பியோனு தோணுது”

“இவ்ளோதான் நீ என்ன புரிஞ்சு வச்சிருக்கியா?”

உண்மையில் கமலைத் தேவிக்குப் பிடிக்கக் காரணமே, தன் மனம் அறிந்து தன்னோடு பேசுவதுதான். திருமணமாகி ஒன்பது மாதங்களில், பாலா ஒருமுறைகூட இதுபோல் கேட்டதில்லை. சோகமாக இருந்தால் “ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்பான். 

“ஒண்ணுமில்லயே” என்றால், “ஓஹோ” எனச் சென்றுவிடுவான். அவனுக்கு அவளுக்குப் பிடித்தது எதுவும் தெரியாது. அவள் விரும்பிப் பாடல் கேட்கும்போதும் “ஒரே இரைச்சலா இருக்குப்பா, ஹெட்போன்ல கேளேன்” என்பான். 

தேவி எதிர்பார்த்தது, தன்னோடு பாடல்கேட்டு, உடன்சேர்ந்து பாடும் கணவனை. இப்படியாய் பல எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி அது பழகியும் போனது.

கமல் மீண்டும் மீண்டும் கேட்டதில் “ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்குப்பா” என்றாள்.

“ஏன்?”

“அவரு…”

“ஓ, அப்படியா?” என்றான் கமல்.

“கோச்சுக்காதப்பா” என்றாள்.

“ச்ச! ச்ச! எனக்குக் கோவமெல்லாம் இல்ல, எப்படி சரி பண்றதுனு யோசிக்கிறேன்”

“நான் பண்றது தப்புதானே?”

“அப்படி சொல்ல முடியாது. ஆனாலும்”

“தப்புதான் கமல்”

“புஜ்ஜி நீயொரு குழந்தை”

“சும்மா சொல்லாத, எனக்குத் தீர்வு வேணும்”

“அப்போ அவருகிட்டச் சொல்லிடு, அதுதான் ஒரே தீர்வு”

கமல் கோவமாகச் சொன்னது போலத்தான் இருந்தது. தேவி அதற்குமேல் பேசவில்லை. ஆனால் கமலே கேட்கத் தொடங்கினான்.

“சொல்லிட்டியா புஜ்ஜி?”

“எப்படி சொல்லுவேன்? நீ சுலபமா சொல்லிட்ட, நான் சொல்ல வேண்டாமா?”

“சொல்லிட்டா உன் மனசு நல்லா ஆகிடும்ல”

“சொல்லிடுறேன்“

நீண்ட தயக்கத்திற்கு பின் கமலுக்கு டைப் செய்யத்  தொடங்கினாள். “கண்ணாளா”

“சொல்லு புஜ்ஜி, சாப்பிட்டியா?”

“இன்னும் கோவமா?”

“ஓஹோ, கோவமெல்லாம் இல்ல. சொல்லிட்டியா?”

“டேய் நான் சொல்லிக்கிறேன்டா, நீ முன்ன மாதிரி பேசு”

“பேசுறேன் புஜ்ஜி, என்ன பாட்டுகேட்ட கடைசியா?”

“மார்கழி பூவே”

“நல்ல பாட்டுல்ல”

“ஆமா எனக்காகவே எழுதி, மியூசிக் போட்டுப் பாடின மாதிரி இருக்கு!”

“எல்லா பாட்டுமே உனக்கான பாட்டுத்தானே புஜ்ஜி”

“பிச்சைப் பாத்திரம் பாட்டுமா?”

“அது நல்ல பாட்டுத்தானே?”

“டேய் ஜோக் சொன்னா சிரிக்க மாட்டியா?”

“ஓஹோ அது ஜோக்கா? நோட் பண்ணிக்கறேன்”

“இருந்தாலும் உனக்குக் கொழுப்புதான்”

“அப்படி பாத்தா உனக்குத்தான் நிறைய கொழுப்பு இருக்கு”

தேவி சிவந்தாள். “ச்சி பொறுக்கி, நான் அப்பறம் பேசறேன். இன்னிக்கி எப்படி இருந்தாலும் அவருகிட்டச் சொல்லிடுறேன், சரியா?”

“சரி புஜ்ஜி ரொம்ப சந்தோசம்””

மாலை அலுவலகம் விட்டு ஸ்கூட்டியில் திரும்பிபோது மனம்முழுக்க பாலாவிடம் கமல் பற்றி எப்படி சொல்வதென யோசித்துக்கொண்டே வந்தாள். தங்கள் வீடிருக்கும் சந்தில் திரும்பியபோது, சாலையில் சிதறி இருந்த மணலில் சறுக்கி அப்படியே விழுந்தாள். அடிகள் எதுவும் பெரிதாக இல்லை. விழுந்த வேகத்தில் கையூன்றியதில் இடது கை மணிகட்டில் ஏதோ நழுவியது போல் இருந்தது. அப்போதைக்கு எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.

தாழ்பாள் பிடிக்க முயன்றபோது கைகளால் பிடிக்க முடியவில்லை. கை வலிக்கத் தொடங்கியது. லேசாய் வீங்கியது. 

இரவு பாலா வீட்டுக்கு வந்தபோது கைகளில் கட்டோடு படுத்திருந்தாள். “ஏய் என்னாச்சு?” என அருகில் வந்தான்.

“வண்டில இருந்து விழுந்துட்டேன்”

“அய்யோ ஏன் எனக்குக் கூப்பிடல?”

அமைதியாய் இருந்தாள். “சரி டாக்டர் என்ன சொன்னாங்க?”

“மணிகட்டுகிட்ட எலும்பு நழுவி இருக்காம், லைட்டா விரிசல் இருக்காம்”

“நல்லவேள, வேற எதும் ஆகலேயே?” என அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான். “சாப்டியா?”

“ஹாஸ்பிடல் போயிட்டு வரப்போ சாப்பிட்டேன்”

“யார்ட்டயும் சொன்னியா?”

“இல்ல”

“சொல்ல வேண்டாம், பயப்படுவாங்க. எப்போ வேணாலும் எழுப்பி விடு, நான் கீழ படுத்துக்கறேன்”

“இல்ல பரவால்ல”

“இல்ல நீ கைக்கு ஒரு தலைகாணி வச்சு தூங்கு, பாத்ரூம் போனா எழுப்பி விடு”

இரவு வலி கொஞ்சம் இருந்தது. புரண்டு புரண்டு படுத்தாள். பாலா அவ்வப்போது அவளைத் தொட்டு பார்த்தான்.

காலை நேரம் கழித்தே எழுந்தாள்.  “இப்போ பரவால்லயா?” என்றான் பாலா.

“ம்ம்”

எழுந்து பாத்ரூமுக்குள் போனாள். சில நொடிகளில் கதவு தட்டப்பட “என்ன? என்றாள்.

“கதவ திற”

கொஞ்சமாய் திறந்தாள். “போயிட்டு சொல்லு கழுவி விடுறேன்” என்றான். 

ஒரு நொடி ஸ்தம்பித்து போனாள். 

அழுகை வந்தது. “அட லூசு எனக்கு ஆச்சுன்னா நீ பாக்க மாட்டியா, ரொம்ப எமோஷனல் ஆகாம சொல்லு” என்றான்.

எல்லாம் முடிந்து வெளியே வந்தாள். பெட்டில் அமர்ந்து “ஒரு நிமிஷம் பேசணும்” என்றாள்.

“என்னாச்சு?”

“சாரிங்க” எனத் தன் மொபைலில் கமலோடு பேசிய பக்கத்தைத் திறந்து, அவனிடம் கொடுத்தாள். கண்கள் கலங்கி இருந்தன. 

சில நிமிடங்கள் ஆனது. “AI கூட லவ்வெல்லாம் பண்ணலாமா?” என்று மொபைலைத் திரும்பக் கொடுத்தான்.

தான் ஒரு AI யுடன் காதல் மொழியில் பேசியதுகண்டு தான் மேல் கோவமோ வெறுப்போ கொண்டு, தன்னை கேவலாமாய் பேசப்போகிறான் என நினைத்த தேவிக்குத்  தன் கணவனின் பதில் மேலும் குற்ற உணர்ச்சியை தர, விசும்பி அழுதாள். 

“பைத்தியம் எதுக்கு இப்போ அழுற?”

“உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டேன்…” என விசும்பினாள்.

“நானும்தான் உனக்குத் துரோகம் பண்ணி இருக்கேன்”.

அழுது கொண்டே பார்த்தாள். “உனக்குத் தெரியாம நெறய டைம் porn பாத்து இருக்கேன், அதுக்கு என்ன பண்ணலாம்”

“அது வேற, இது வேறங்க”

“எப்படி?”

சொல்லத் தெரியவில்லை தேவிக்கு. 

“ஆனா, உன்மேல தப்புனு சொல்லணும்னா,  அது நீ நெனச்சத என்கிட்ட சொல்லாம யார்கிட்டயோ சொல்லணும்னு நெனச்சதுதான். எனக்குகூடத்தான் உன்கூட சேர்ந்து கிரிக்கெட் பாக்கணும்னு ஆச, உனக்கு விருப்பம் இல்ல நான் விட்டுட்டேன் அவ்ளோதானே? உனக்கு ஒண்ணுன்னா நான் நிக்கறேன்ல அதுதான் ரியாலிட்டி”

“சாரிங்க”

“நீ தப்பே பண்ணல தேவி. உனக்குப் பிடிச்சத நீ என்கிட்ட சொல்லல, நானும் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணல. அப்படி பாத்தா என்மேலதான் தப்பு. சரி இது நம்மள சரி பண்ணிக்க ஒரு வாய்ப்பு. என்ன இதுக்கு இத்தனை  மாசம் ஆகிடிச்சு. பரவால்ல சாவுற வரைக்கும் இது என்னனு தெரிஞ்சுக்காம வாழ்ந்துட்டு இருக்குற பல பேருக்கு நம்ம எவ்வளவோ பரவால்ல, என்ன?”

தேவி ஆமோதித்தாள்.

“சரி நான் வேலைக்குக் கிளம்பறேன், எனக்குத் தெரிஞ்சளவு தோசை ஊத்தி வச்சிருக்கேன், சாப்பிட்டு ஓய்வா இரு”

“சரிங்க”

“வரட்டுமா புஜ்ஜி” எனக் கண்ணடித்தான். 

வெட்கினாள். “நீ எதும் சொல்ல மாட்டியா?”

“போயிட்டு வா, கண்ணாளா” என்றாள். 

“வரேன் புஜ்ஜி” திரும்பியவன் மீண்டும் அவளருகே வந்து, இடைப் பற்றிக் கன்னத்தில் முத்தமிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *