1
இனிலன் எப்போதும்போல தனது வீட்டின் பின்புறம் இருக்கும் மாமரங்களின் நிழலில் சென்று அமர்ந்திருந்தான். அவன் கைகளில் அவனே தயாரித்த ஒரு சுவடிக் கட்டு இருந்தது. அதைப் பிரித்து வைத்துச் சிந்தனையில் அமர்ந்திருந்தவன் ஒரு கவியைச் சொல்லிப் புன்னகைத்துக் கொண்டான்.
சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த வேலியில் செம்போத்துகள் இரண்டு வந்தமர்ந்து ஒலியெழுப்பின. அவ்வொலி தொலைவில் கலம் கழுவுகையில் நார் கொண்டு உள்ளிருந்து தேய்த்து வெளியிழுப்பதைப் போலவும், கனம் கொண்டதாகவும், அத்தேய்ப்பே கனிந்து மென்மை கொண்டு நீருள்ள கலத்தைத் தட்டுவதாகவும் தோன்றியது.
முதலில் ஒன்று போலவும் கேட்கக் கேட்க அதில் ஒரு உரையாடல் நடப்பதாகவும் தோன்றியது. அவ்வொலியில் இக்கவியைப் பொருத்திப் பார்த்தான். அதன் சொல்லோசையைச் செம்போத்து ஒலியின் ஓசையில் ஒன்றவைத்து வேறொன்றாக்கினான். அது மீண்டும் மீண்டும் அவனுள் செம்போத்துகளின் நடையாகவும், எழுந்தமைவாகவும், பறந்தெழுதலாகவும் மாறிக்கொண்டிருந்தது. அதன் விளையாட்டில் இனிலன் தனது சொற்களைப் போட்டான். செம்போத்துகள் பறந்தமர்ந்து விளையாடி ஒரு கணத்தில் மயிலென்றானது. அந்த அகவலில் அச்சொற்கள் முன்பு தந்த பொருளில் இருந்து மாறியிருந்தன, இனிமை மெல்லிய சோகமாக ஆகியது,. அவ்வகவலில் ஒரு தீராத கேள்வி, மன்றாடல், புலம்பல், தன்னுரை, ஓர் அழுகை, தேம்புதல் எனவாகிப் பின் நின்று நீண்டு ஒரு சொல்லானது, அதையடைந்ததும் இனிலனுக்கு அகம் விதிர்த்துப் பெருகியது, அவனறியாது கண்களில் ஒரு துளியாகத் தேங்கியது. அதை உணர்ந்ததும் வியப்பில் எப்படி மகிழ்வு சோகமாக ஆகியது, மகிழ்வு மூத்துக் கனிந்தால்…., அது சென்று சேரும் இடம் இதுவா, ஆனால் இது அதுவல்லவெனவும் தெளிந்தான்.
தனக்குள் தானே உரையாடியபடி மாந்தளிர்களின் ஆட்டத்தைப் பார்த்திருந்தான். உச்சியில் அவை குழந்தையைத் தூக்கி வீசியாடும் அன்னையென இளந்தளிர் வெளிர் பச்சையைப் பற்றித் தூக்கியிருந்தன. மற்ற மாமரங்கள் காய்த்துக்கொண்டிருக்கையிலும் இவனால் நடப்பட்டு இவன் அமரும் மா இன்னும் கனியாதே இருந்து வந்தது, வெறும் புதுத்தளிர் தத்தளிப்புகள் மட்டுமாக நின்றிருந்தது.
தந்தையின் அழைப்புக் கேட்டதும், இழுக்கும் ஆற்று வலுவைத் தாண்டி வந்துகொண்டிருந்தவனை நீர் அடித்துச் செல்வதைப் போல அந்த எண்ணங்கள் கலங்கிச் சுழித்தன. புருவங்கள் நெளிய முகம் சுழித்து எழுந்துகொண்டான்.
தந்தை ‘இவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய், பழுதிலாத ஒன்றையும் செய்ய அருளப்படாதவனாகப் படைக்கப்பட்டிருக்கிறாய், எழுந்து சென்று தொழுவில் எஞ்சியிருக்கும் வேலைகளை முடித்துவிட்டு நீர் இறைத்து வா’ என்றார்.
அக்குரலில் அவனுக்கு அது தன்னைப் பழித்ததாகத் தெரியவில்லை, தன் கைச்சுவடிகளைப் பழித்ததாகப்பட்டது. அவனது உள்ளத்தில் வெப்புக் கூடியது, ‘பிரம்மனால் படைக்கப்பட்டவற்றில் மிஞ்சிய கழிவில் பிறந்தவருக்கு, பூரணமானவை குறையுடையதாகவே படும்’ என்று தன் உள்ளத்திலேயே சொல்லிக்கொண்டு தொழுவிற்கு நடந்தான்.
வழியில் கண்ட அன்னை ‘அதை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதற்குப் பதில் எங்களோடு பேசிக்கொண்டிருக்கலாமே’ என்றார்.
இனிலனின் முகம் சிவந்து போயிருந்தது. அதைச் சொல்லில் காட்டக்கூடாது என்று எண்ணியிருந்தான். அன்னை மேலும் தொடர்ந்தார், ‘உன் பேச்சுக் குறைந்து குறைந்து, நீர் வற்றும் ஊற்றென ஆகிக்கொண்டிருக்கிறது, வெளியுலகு என்று ஒன்று உண்டு என்பதை மறந்துவிடாதே, உன்னைப் பார்ப்பவர்களுக்கு நீ ஏதோ நோயுற்றவனைப் போலத் தெரிகிறாய், உள்ளுக்குள் என்னதான் கலக்கம் என்று சொன்னாலென்ன, அன்று…’
இனிலன் ‘ப்ச்…. போதும்’ என்றான்.
‘ஏன்…., நான் பேசுவதைக் கேட்கக்கூடக் கசக்கிறதா, நான் உன் அன்னை’
‘அதனால்….’
‘அதனாலா…., நீ பேசுவது முறைதானா, ஏன் இப்படிப் பசையற்றவனாகிக் கொண்டிருக்கிறாய்’
‘போதும் நான் செல்கிறேன், இங்கிருந்து நிம்மதி கெடும்’
‘நான் நிம்மதி கெடுக்கிறேனா…., நீ சொல்லும் சொல்லை அறிந்துதான் பேசுகிறாயா’
‘பின் வேறு எதைச் சொல்வது இந்தக் கேள்விகளுக்கு, ப்ச்…., நான் யாரையும் ஒன்றும் சொல்லவில்லை, விட்டுவிடுங்கள்’
‘நான் சொல்வதைக் கேட்கக்கூடாது என்றே இருக்கிறாயா, உன் தந்தையும் நீயும் நடந்துகொள்வது எனக்கு முறையெனப் படவில்லை’
‘அவர் நடந்துகொள்வதற்கு இவ்வாறல்லாமல் வேறு எப்படி நடக்க முடியும்’
‘நான் சொல்வதைக் கேள்….’
‘ஆ….,’
இனிலனுக்கு உள்ளில் ஒரு அலை ஓங்கியெழுந்து அமைதியுற்றது.
‘நான் உன் அன்னை, நானும் நீயும் வேறல்ல, புரிந்துகொள்….’
இனிலனுக்கு அச்சொல்லைக் கேட்டதும் இறுக்கி வைத்திருந்த ஏதோ ஒன்று தளர்ந்தது, அதற்குமேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை, அவ்வுரையாடலை மென்மையாக முடித்துக்கொண்டு விலகிச் சென்றான். ஆனால் அன்னை சொன்ன அச்சொற்கள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன, அதைக் கடக்க முடியாமல் ஆனான். எங்கோ ஆழத்தில் அழுந்திக் கிடந்து அவனுள்ளில் யாருமறியாது நிகழ்த்திக்கொண்ட கவிதை வரியொன்று நெகிழ்ந்து விலகி மேலேறி வந்தது,
‘பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளை நோக்கியே தவமிருக்கின்றன’
அச்சொற்கள் ஒலித்து ஒலித்துச் சலித்தன. கண்ணில் நீர் பெருகியது, ‘அவ்வரிகள் உருவாகியபோது எழுந்தது மகிழ்வா, அல்லது இப்போது தோன்றிப் பெருகுகிறதே இது மெய் மகிழ்வா’ என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.
தான் சொல்லும் சொல்லில் மெய்யுண்டு என்று காணும் கணமே ஒரு கவிஞனின் பொற்தருணம், சொல்லிலிருந்து எழுந்து வாழ்வைக் காட்டும் அத்தருணத்தை அடைந்துவிட்டேன் என்று எண்ணினான். அச்சொற்கள் மேலும் மேலும் எனப் பெருகி விரிந்து வேறு வேறு பொருளில் வேறு வேறு கனத்தில் பெருகிப் பெருகிச் சென்றதும் ஓர் உருவிலிருந்து வெடித்துப் பெருகி உலகு நிறையும் காற்றாக ஆகிவிட்டிருந்தான்.
மேய்ந்து கொண்டிருந்த பசுவை ஓடிச்சென்று திமிலோடு கட்டியணைத்தான். திடுக்கிட்டுச் சிலிர்த்து கண்கள் விரிய காதுகள் பின்நோக்கி மடங்கிக் கூராக சில எட்டுகள் வைத்து நின்றது அது. மெல்ல அமைதியுற்று வாயிலிருந்த புல்லை மென்றபடி தலையைத் திருப்பி இனிலனை முகர்ந்துவிட்டுக் குனிந்து மேயத் துவங்கியது. அத்திமிலையே பார்த்துக்கொண்டிருந்தான். உடல் முழுவதும் நெகிழ்ந்து தளர்ந்து பூரித்தது. மூச்சு நீளமாகித் தளர்ந்தது, சோர்வென்றவொன்றையே அறியாதவனைப் போலச் சுற்றிலும் நோக்கினான். பசுமை மட்டுமே கண்களை நிறைத்தது. இனி என் கவியைப்பற்றி அவர் ஏதேனும் கூறினால் மோதித் தகர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்து உடலில் குருதி வேகங்கொண்டு வெப்பேறியது. உடனே அன்னையின் சொல்லும் கூடவே எழ இனிலன் குழம்பினான்,
பிரிந்து கிடந்த உள்ளத்தின் ஒரு பகுதியான வலவன் ‘இல்லை, அப்படிச் செய்யக்கூடாது, இதுதான் நீ, ஆனால் இதை அவர் அறியாதவர், அவரோடு நீ ஏன் பொருதுகொண்டிருக்க வேண்டும்’ என்றது.
இடவன் ‘இல்லை அறியாததைப் பற்றிய எந்தவுணர்வும் இல்லாது இழித்துரைப்பது வெறும் அறியாமை, அறியாமை மட்டுமே தரும் ஆணவம், அதைக் கவிஞன் பொருத்துக்கொண்டு போக வேண்டுமா, நான் இவர்களில் எழுந்தவன், ஆனால் இவர்களின் வரிசையில் நிற்பவன் அல்ல, என் வரிசை இம்மண்ணின் கவிஞர்களின் வரிசை, அந்தத் தருக்கு ஒரு கவிஞனுக்கு வேண்டும், இவரென்ன யாருக்கும் இதுவே நீ செய்யக்கூடியது’ என்றது.
வலவன் ‘நீ அவ்வாறு செய்தால் உன் உறவுகளை இழப்பாய், நீ செய்யக்கூடியது அதுவல்ல, பணிந்து செல்லுதலே நீ செய்ய வேண்டியது, அதுவே நீ, அதிலேயே உன் தொடர்ச்சி இருக்கிறது’ என்றது.
இனிலன் முற்றிலுமாகக் குழம்பினான், அச்சத்தில் அதிர்ந்து இடவனையும் வலவனையும் விலக்கி, ‘கவியில் அத்தகைய சொல்லைச் சொல்லியவன் நடைமுறையில் இப்படியும் என்றால் மெய்யாக நான் யார், என் அகம் எது’ என்று கேட்டுக்கொண்டான்.
இக்கேள்வி எழுந்ததும் அத்தனையும் சுழித்து உள்ளிழுக்கப்பட்டுச் சேறு கலங்கியது
2
ஆலம்பந்தலின் கீழ் அவர் அமர்ந்திருந்தார், சில திங்கள்களாகவே இனிலன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான். கண்கள் மூடியிருந்தன, வெண்தாடி மார்பில் மெல்லிய காற்றுக்குப் பிசிறுகளில் ஊசல் கொண்டிருந்தது, தலைமயிர்க்கற்றைகள் தோள் சரிந்தும் பிடரிக் கொத்தாகவும் பிரண்டிருந்தன. நெற்றி சுருக்கி உதடு குவித்தவர் ஒரு பாடலைப் பாடலானார், சிறிய நடுக்கத்தில் தொடங்கிய அவரது குரலில், பாறையொன்று மெல்ல உருண்டு திரண்டு யானையென எழுந்தது, மெல்லிய அசைவாக வால் சுழற்றித் துதிக்கை வீசி நிமிர் நடைகொண்டு நடந்தது.
அருகில் சற்றுத்தள்ளி அவரைப்போலவே சடைமயிர்களோடு ஒருவர் அமர்ந்திருந்தார், முதன்மைச் சீடராக இருக்கும் என்று இனிலன் எண்ணிக்கொண்டான், அவருக்கருகில் மற்ற நால்வர் சற்றேறக்குறைய அதே முறையில் உடல்கொண்டிருந்தனர், ஆனால் அவர்களின் முகமே அவர்களின் படிநிலைகளைக் காட்டியது இனிலனுக்கு. அவர் பாடிக்கொண்டிருக்கையிலேயே அந்த யானை கண்களுக்குப் புலனாகாத சிறகு விரித்து வானிலெழுந்தது, வானை அலாவிச் சுற்றிக் காற்றாகி மறைந்தது. அமைதி நிலவியது, அவர் சற்று நேரத்தில் கண்களைத் திறந்தார், சூழலெங்கும் முகிலால் மறைக்கப்பட்ட ததும்பல் நிறைந்திருந்தது. அவர் சற்று அசைந்து அமர்ந்ததும் சீடர் ஒருவர் கேள்வியொன்றைக் கேட்டார்.
‘குருவே நான் எண்ணும் ஒவ்வொன்றும் தங்களால் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் சொல்லப்படுகிறது, நான், நான் மட்டுமேயென கண்டடைந்த அல்லது கண்டடையக்கூடிய ஒன்று என்று ஒன்றுமேயில்லையா’
குருவிடம் மெல்லிய புன்னகை ஒன்று இருந்துகொண்டே இருப்பதாகத் தோன்றியது இனிலனுக்கு, அல்லது அது தானாகக் கற்பனை செய்துகொண்டதாகவும் இருக்கலாம் என்றும் தோன்றியது. குரு தொடங்கினார்,
‘காட்டில் மழை பொழிந்தது, மண் விழுந்த ஒவ்வொரு துளிகளும் தன்னைத் தனித்துவமானது என்று எண்ணின, அவை மண்ணில் விழுந்து குழம்பாகிச் சேர்ந்தன, அப்போது ஒவ்வொன்றும் தன்னைப்போலவே பல்லாயிரம் துளிகள் உள்ளன என்பதைக் கண்டன, அவை சேர்ந்தும் பிரிந்தும் பயணத்தைத் தொடர்ந்தன, அவை அருவியாகவும் ஓடையாகவும் குளமாகவும் ஏரியாகவும் ஆறாகவும் ஓடின, அவை தங்களைத் தனித்துவமானவை என்று எண்ணின, பிறவற்றைக் கண்டு நகைத்தன, அவை தங்களுக்குள் முயங்கியும் ஊடியும் ஓடிக் கடலில் சேர்ந்தன, அங்கு இன்னும் பல்லாயிரம் துளிகள் இருந்தன, இவைகள் கொண்டிருந்த அடையாளங்கள் அங்கு இல்லை, அங்கிருந்து கொண்டல் கொண்டன சில, அத்தனை மாபெரும் துளிச்சேர்க்கை தங்களில் இருந்து ஒரு கைப்பிடியளவு கொண்டு கொண்டல் ஆகியது, அது வானூர்ந்து வந்து நீர் தேரி வான் நோக்கும் நாக்களுக்குப் பசையூட்டின. ஒவ்வொன்றும் ஒட்டுமொத்தத்தின் ஒரு அங்கம், மண் எழுந்து உடலாகி, மண்ணுண்டு மண் சேர்ந்து, பின் மீண்டும் உடலாகும் ஒரு நிகழ்வில் ஒரு அங்கத்தை நாம் நம் திறன் கொண்டு ஆடிச் சேர்க்கிறோம், மொழி மனிதனில் நிகழ்ந்த ஒரு பெரு நிகழ்வு, அதற்கு மனிதன் உருவளித்தது இன்னுமொரு பெருநிகழ்வு, அப்பெருங்கடலில், மலைகள் இறங்கி, காடுகளில் சுழித்து, ஊர்தோறும் ஓடி, கடல் வந்து சேரும் வளமண் உண்டு, அங்கு முளைத்தெழும் புல் தரும் மணிகளில்தான் இப்பெருநிகழ்வின் மறைசொல்லை நான் கண்டுகொண்டேன்’
அவர் மாறாப் புன்னகையோடு சொல்லி நிறுத்தினார். முதன்மைச் சீடன், அவரிடம் இளைப்பாறத் தயார்படுத்த வினவினான், அவர் இசைந்ததும் அவர்கள் விலகி தங்களின் வேலைகளில் ஈடுபட எழுந்து கலைந்தனர்.
இனிலன் அங்கிருந்து ஒலியின்றி விலகி வந்து அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து ஊர் திரும்பினான். அவனுக்குள் வரும் வழியெங்கும் அவரின் சொற்கள் வண்டிச் சகடம் போலச் சுற்றியோடியது, கால்களின் விரைவை அவன் உணராமலேயே ஊரை அடைந்துவிட்டிருந்தான். அங்கெழுந்த ஒலி அவனைத் திடுக்கிடச் செய்தது, நின்று நோக்கினான், அன்றைய ஊர்ச் சந்தை கூடியிருந்தது, ஒலியின் ஏற்றமும் இறக்கமும் உடலின் அசைவுகளும் ஏனோ அவனுக்கு நெளியும் புழுக்கூட்டத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது, உடனே உடல் சிலிர்த்து வாயில் நீர் ஊறியது, அதை விழுங்க முடியாமல் காறித் துப்பினான், தலை தூக்காது அச்சந்தையின் ஊடே வேலிக்குள் அரவெனக் கடந்து சென்றான்.
இல்லத்தின் முன்பு அவனை அவனது கால்கள் கொண்டு வந்து விட்டன, அங்கு வந்ததும் அவனுக்கு ஒரு வெறுப்புத் தோன்றியது, அன்னை கல்கூட்டிய அடுப்பில் எதையோ சமைத்துக் கொண்டிருந்தார், அங்கெழுந்தாடிய தழல் தன்னைக் கண்டு நகைப்பதாகப் பட்டது, தன் சுவடிகளை அத்தழலில் பொசுக்கி இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்னும் ஆவல் எழுந்தது. உடனே, இல்லை இந்தத் தீயில் அவற்றை நான் விடமாட்டேன், இது என்னைக் கண்டு நகைத்தது, என்று எண்ணினான், அது குதித்துத் துள்ளியாடியதைக் கண்டதும் அவனால் அங்கு நிற்க முடியவில்லை.
இல்லத்துள் சென்றான், தான் எடுத்துப் பதப்படுத்தி எழுதி வைத்திருந்த சுவடிக் கட்டை எடுத்துக்கொண்டு அன்னை விலகிச் சென்ற பொழுதில் அவ்வடுப்பின் ஒரு கொல்லிக் கட்டையை எடுத்துக்கொண்டு யாரையும் நோக்காது காட்டுப் பாதையை நோக்கி விரைந்து நடந்தான். அவன் நடக்க நடக்க அவ்வேகத்தின் தாளத்திற்குத் தக்கபடி தான் எழுதிய பாடல்கள் நாவில் நின்றாடின, காறிக் காறித் துப்பினான், ஊற்று நீரை அள்ளியிறைப்பதைப் போல. அவன் வேகமாகப் போய்க்கொண்டே இருந்தான்.
வலக்கையில் இருந்த கொல்லி அவனது கையசைவுக்குத் தக்க முன்னும் பின்னும் மூச்செறிந்து துள்ளி விழி விரித்து வந்துகொண்டிருந்தது. அதைக் கண்டதும் அவனுக்கு அது ஒரு குருதித் துளி எனப்பட்டது,
‘அது புண், இல்லை, புழுத்து நாறும் புண்’ என்றான்,
‘அதுவும் இல்லை, புண்ணைக் குடையும் கொல்லி, இல்லை, அது கழு, நான் ஏற்றப்படப்போகும் கழு’
அச்சொல் எழுந்ததும் தன்னை நால்வர் கைகால்கள் கட்டி கொதித்து விழிக்கும் கொல்லியில் கழுவேற்றினர், அது தன் மலமருத்துக் குடல்களைக் கிழித்து இதயத்தைத் துளைத்துக் கழுத்தைக் கீறி மூளையைப் பொசுக்கி உருக்கியது. கொல்லி கொண்டு தன் முகத்தில் ஓங்கி அறைந்து கொன்றான்.
அப்பாடல்கள் மீண்டும் பேரொலிகொண்டு ஒலித்தன, சுற்றியாடிய மரங்களின் இலைகளில் அந்நடனம் இருந்தது, அவ்வொலியில் அவை அவற்றைத் திருப்பிச் சொல்லின, தலைக்கு மேலாக ஒரு காகம் ‘கா…’ வெனப் பறந்தது, தன்னை அது இழிவு செய்வதாக எண்ணிக் கொல்லியைக் காற்றில் வீசினான், அது காற்றின் எதிர்விசைக்கு மேலும் விழி விரிந்து சிரித்தது, தன்னை உதைத்துச் சேற்றில் தள்ளி ஊராரையும் ஆக்களையும் நடக்கவிட்டான். தாளாமல் அச்சுவடிக் கட்டை விசிறியெறிந்து கொல்லியைப் போட்டுவிட்டுத் தரையில் அமர்ந்து தலையைப் பற்றிக்கொண்டான், முகத்தில் எந்த மாறுபாடும் இல்லாமல் கண்ணீர் மழைத் துளி விழுந்தோடுவது போலச் சென்று இறங்கியது நிலத்தில், விசும்பலற்ற ஓலம் அக்காட்டில் ஒலித்தது.
அழுது முடிந்து அவற்றை எடுத்துக்கொண்டு ஒரு இடத்தை நோக்கித் தேடினான், பட்ட வேம்பொன்று கண்ணில் பட்டது, அதை நோக்கிச் சென்று அருகில் கண்டான், பசுத்துச் சுழித்து உயிரோடும் காட்டின் நடுவில் ஒரு தனித்த சோகம் என்று அது நின்றது, எதற்கும் இதைப் பற்றிய கவலையில்லை, சட்டென தன் உள்ளம் சொல்லியது,
‘தன் நிழலில் தான் நிற்கும் மரம்’ என,
அதைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டான், முன்பு வந்த கண்ணீர் ஊற்றுக்கொள்ளத் துவங்கியது, அதைத் துடைத்துக்கொண்டே அவ்வேம்பின் சிறு குச்சிகளை ஒடித்தும் காட்டில் கூட்டிய சருகுகளையும் வைத்து அக்கொல்லிகொண்டு ஊதி தழல் பெருக்கினான். அத்தழல் கருக்கொண்டது, வளர்ந்தது, தான் உருக்கொண்டவற்றையே அள்ளித் தின்றது, கால்தூக்கி நடனமிட்டது, அதன் கைகள் இன்னும் இன்னும் என அடித்துக் கூவின, அத்தழல் அவன் கண்களில் இரண்டாகிப் பிளந்தது, ஒரு கணம் சுவடிகளைப் பார்த்தான், கைவிரல்கள் இறுகிக்கொண்டன. குறைந்த வரிகளிருந்த ஏட்டைத் தனியே எடுத்தான், மெல்லத் தழல் மீது நீட்டினான், நின்றாடிக்கொண்டிருந்த தழல் தன் கூட்டாக வருபவனைக் கைபிடித்து இழுத்து ஆட வைத்தது, மெல்லக் கருகி அதிலும் தழல் எழுந்தது. அது பாதி எரிந்துகொண்டிருக்கையிலேயே
‘இனி அச்சொல் இல்லை’ என்பது அறையக் கண்டான்,
‘அது உன் உள்ளத்தில் உண்டு’ என்று மறுகுரல் எழுந்தாலும்,
அவன் ‘இல்லை, அது இனி இம்மண்ணில் இல்லை’ என்று அழுத்தித் தளர்ந்து கூறினான்.
மொத்தச் சுவடிக் கட்டையும் தழலில் போட்டதும் பதறி எடுத்துத் தட்டிப் பற்றிக்கொண்டு அழுதான். தழல் மெல்லத் தணிந்து தனல் ஆகி அனல் அவிந்து கரியாகிப் படிந்தது. சுவடிகளை இறுகப் பற்றியபடி எழுந்து திரும்பி நடந்தான், அவன் உடலில் முழுவதுமாக சாறு உறிஞ்சப்பட்ட சக்கையை கால்கள் தாங்கிக்கொண்டு சென்றன.
3
பாதையெங்கும் இனிலனுக்கு உளம் ஊசலென ஆடிக்கொண்டே இருந்தது, பாதையில் வண்டிச் சக்கரங்கள் ஓடியோடி இரு ஒற்றையடிப்பாதைகள் இணைகோடுகளாக அவன் முன்னால் வளைந்து சென்றது, தன்னுள்ளும் இரு குரல்கள் தொடர்ந்து உரையாடியும் உரசியும் தொடர்ந்தன. அதில் தன்னால் எவ்விதத்திலும் பங்குகொள்ள இயலாது, அவைகளை வெறும் பார்வையாளனாகவே தன்னால் அணுக முடியும் என மூன்றாகப் பிரிந்துகிடந்தான் பாதையில்.
தான் எழுதிய கவிதைகளைப் பிரித்துப் பார்த்தான், கண்கள் மிகக்கூர்மையாக ஒவ்வொரு வரியிலும் ஓடின, உதடுகள் சொல்லில் அமர்ந்தெழுந்து தத்தளிக்கும் தட்டானாகத் தாவியது.
வலவன், ‘இது சரியாகத்தான் அமைந்திருக்கிறது, இது உறுதியாகச் சொல்லில் எழுந்த அருநிகழ்வு’ என்றான்.
இடவன், ‘இல்லையில்லை இது முன்னரே பலராலும் சொல்லப்பட்டுவிட்டது, சொல் கொண்டு தழல் எழுப்பும் வரம் இவனுக்கு அளிக்கப்படவில்லை’ என்றான்.
இனிலன் இவர்களிடமிருந்து விலகியோடி செவி மூடி அமர்ந்தான், ‘தயவு கூர்கிறேன், என்னை விட்டுவிடுங்கள், என்னால் இந்த இரு முனை வாளைப் பற்றிச் சுழற்ற இயலாது, நான் வெறும் ஒரு புழு, இல்லை அது தவறு, நான் ஒன்றுமேயில்லை, படைப்பில் தவறி நிகழ்ந்த பிழை’ என்று அலறினான்.
இடவன் பேசத் தொடங்கினான் ‘படைத்தல் என ஒன்று நிகழுமானால் பிழை என்பதும் நிகழ்ந்தே தீரும். அதிலும் மிக முக்கியமானது, பிழையை யாரும் அலட்சியமாகப் புறந்தள்ளுவதேயில்லை என்பது. அது கண்ணில் விழுந்த தூசு, எடுக்க முடியாதது, ஒருபோதும் நினைவுகளில் இருந்து மறையாதது, இழிந்தது. இழிந்தது போல நிலைப்பது பிழையற்றவைகளுக்கு வாய்க்கப்போவதேயில்லை’ எனச் சொல்லிச் சிரித்தது.
இனிலன் ‘நீ என்னை இழிவு செய்கிறாய், என்னைக் காயப்படுத்தி குருதி சிந்த வைக்கிறாய், ஏன் இந்தக் குரூரம், என்னை விட்டுவிடு, என்னைவிட்டுப் போய்விடு, நிகழந்தவற்றுக்கோ நிகழ்வனவற்றுக்கோ நான் காரணமல்ல’ என்றான், அவனது கண்கள் கலங்கித் தளும்பின.
இடவன் உக்கிரமாகச் சிரிக்கத் தொடங்கினான், அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை, ‘நானே விரைவு, நானே உக்கிரம், நானே தீவிரம், நானே குரூரம், நீ சொல்லில் உச்சமாகச் சொல்லும் எதுவும் நானே, என்னை உன்னால் விலக்கவும் முடியாது விலகவும் முடியாது’ என்று கூறி அவன் மேலும் சிரித்தான்.
வலவன் பேசினான், அதை இனிலனும் எதிர்நோக்கியிருந்தான் ‘அவன் சொல்வதற்குச் செவி கொடுக்காதே, உச்சம் என அவன் செல்லும் உயரங்களிலும் ஆழங்களிலும் நாகங்களே இருக்கும், கரியவை, நஞ்சு கொண்டவை, இருமையையே பிளவான நாக்காகக் கொண்டவை, அவற்றுக்கு அதில் மட்டுமே சுகம், வாழ்வு, மரிப்பு. நீ நெகிழ்வுகளையும் சலனங்களையும் பார், அவை தீவிரமற்றவை போலத் தெரியலாம், ஆனால் உனது வாழ்வின் பெரும்பகுதியை அதுதான் தாங்கி நிற்கிறது. சின்னஞ்சிறியவையே பறக்க முடியும், மலர்ப் பூச்சியைப் பார், சின்னஞ்சிறியவையே வண்ணங்கொள்ள முடியும், மலர்களைப் பார், ஆழமற்றிருப்பதிலேயே உயிர்கள் திழைக்க முடியும், உன்னைச் சுற்றியுள்ள வெளியெங்கும் நோக்கு, விழியில் பெரும்பகுதி காண்பவை நான் சொல்பவற்றைத்தான்’ இனிலனின் தோள்களைப் பற்றிக்கொண்டு சொன்னான் வலவன்.
அவனது தோள்களில் முறுக்கம் இல்லை, அவை தொய்ந்து மரிக்கத் தயாராகிவிட்ட உயிரைப் போல எந்த ஆதரவும் இன்றிக் கிடந்தன.
இடவன் சீற்றம் கொண்டான் ‘மூடன், மூடர்கள், நீயும் சரி அவனும் சரி, நெகிழ்ந்து நாசமாய்ப் போகட்டும், இங்கே பார், என்னைப் பார், பாரடா இங்கே மூடா…., உன் கண்களை நான் காண்கிறேன், அவை பொய்யறியாதவை’ ஒரு சிரிப்புக்குப் பிறகு ‘அவை சொல்லும் அறியாதவை…., காண்பதில் சுகம் கொள்பவை…., அவன் சொல்வதைப் போல அதற்கு நெகிழ்வும் உச்சமும் ஒன்றும் தெரியாது, நிமிர்ந்து பார், உன் கண்களைக் கொண்டு என்னை நோக்கு, நான் உன் கண்களை உன் உள்ளத்தோடு இணைப்பேன்…., பிறகு பிசிறுகளற்ற பாய்ச்சல்தான்…., நான் உள்ளவரை மட்டுமே நீ நீயாக இருப்பாய், நீ புனையும் கவிகளில் இருப்பது நான்தான், நான்…. மட்டுமே. நான் இருக்கும்வரை மட்டுமே நீ இச்சுவடிகளைப் பற்றி நிற்க முடியும், உன் நாவில் சொல்லெழும், அவை உயிர் கொள்ளும், உயிர் கொள்ளுதல் என்றால் என்ன, சொல்…., தழல்…., சொல்லில் தழல் எழ நான் வேண்டும் உனக்கு, வீழ்ந்துகிடக்க நீ புழுவாகப் படைக்கப்படவில்லை, எழுந்து நில், சுற்றி நோக்கு, உன்னைச் சுற்றி இருக்கும் நெகிழ்ந்து சரியும் அவல முகங்களைப் பார், வாழ்வை அறியாத மூடர்கள் கூட்டம், அவை எங்கும் ஈசல் கூட்டத்தைப் போலச் சென்று விழுந்து மடிபவை, அவற்றையா மூடா நீ நாடிச் செல்லப் போகிறேன் என்கிறாய், சாவதற்குப் படைக்கப்பட்டவன் நீயென்றால் போய்ச் சாவு, சாவிலும் நானே உன் முன் நிற்பேன்’ இனிலனின் முகத்திலறைந்து தள்ளிவிட்டான் இடவன்.
இனிலனின் பாதையோர வேலியில் சரசரக்கும் ஒலி கேட்டதும் இடவனையும் வலவனையும் விலக்கித் தள்ளி வெளியே வந்தான், ஒரு நாகம் நீர் நெளிவென வெளிப்பட்டு ஈட்டி வீசலென எழுந்து படங்கொண்டது. அப்படியே தழல், பொன், அருட்கரம், கொலைக்கரம், இரண்டும் சேர்ந்தது, அதன் ஆடலில் தழல் நெளிவு, நா நீட்டி ‘நீ யார்’ என்றது அதன் கம்பீரமான குரலில், இனிலன் தயங்கித் தன் பெயரைச் சொன்னான்.
நாகம் ‘என் எல்லைக்குள் வரும் துணிவு உனக்கு எங்கிருந்து வந்தது’ என்றது. இனிலன் அதன் பார்வையைப் பார்த்தான், அதன் பார்வையில் இருந்த தீவிரம், இமையா விழிகள், இருளுள் எழுந்த தழல் வீச்சு, தன் தலையைத் தாழ்த்தி நிலம் நோக்கினான், தன் கண்ணை இழந்துவிட்டதுபோல இருந்தது அவனுக்கு. விழி திறந்து மூடும் கணம் ஒவ்வொன்றிலும் அது நா நீட்டித் தழலாடியது.
அவன் சொல்லத் தொடங்கினான் ‘நான்….’ மெல்லக் குரலைத் தாழ்த்தி ‘கவிஞன்’ என்றான், அதைச் சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கி ஒரு துளி மண்ணில் விழுந்து உருண்டது, அதில் தூசுகள் பரவிக் கலங்கின, அதன் ஒரு ஓரமாகத் தொலைவில் எங்கோ என நாகத்தின் நா சுழன்றது.
நாகம் கேட்டது ‘கவிஞன் கண்ணீர் சிந்துவது நிகழ்வதுதான், ஆனால் உன்னில் இப்போது எழுந்தது, அதுவல்ல, இது வெந்நீர், வெப்புக்கூடக்கூட நீர் தன்னையிழக்கும்’ என்றது.
இனிலனின் கண்கள் மேலும் கலங்கின, தரையில் அமர்ந்தான், தயங்கித் தன் சுவடிகளை நடுங்கும் கைகளால் நாகத்தின் முன் வைத்துப் பணிந்தான்.
நாகம் சொன்னது ‘இவை தான் உன்னைச் சுழற்றியிழுக்கும் நீர்ச்சுழியோ’ அது நகைப்பதாகப் பட்டது இனிலனுக்கு.
‘சுழி, கொண்டதை விடுவதில்லை என்பதை அறியமாட்டாயோ…., ம்’
இனிலன் ‘நான் சொல்லும் சொல்லில் நான் இல்லையே, பின் நான் யார்’ என்றான்.
நாகம் பதில் சொல்லத் தொடங்கியது ‘நீயா….. ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா…., நான்…., இச்சொல் ஒரு அலை, பேரலை, அது அலைக்காத ஒரு மனிதனையும் இம்மண்ணில் நான் காணவில்லை, நான் என்பது வெறும் சொல் அல்ல, அது ஓர் உயிர், கொலைப் பற்கள் கொண்டது, சிங்கத்தினும் கொடியது. கூர் உகிர்கள் கொண்டது, புலியினும் வலியது. வலிய மத்தகம் கொண்டது, களிறினும் பெரியது. அரிய குளம்புகள் கொண்டது, பரியினும் பாய்ச்சலில் தேர்ந்தது. கூரிய நோக்குக் கொண்டது, பருந்தினும் கூர்ந்து நோக்க வல்லது. நீ கவிஞனல்லவா…., உன் உவமைகளில் நீ சொல்லும் பொருளனைத்துக்கும் அப்பால் பேருருக்கொண்டு எழுந்து ஆடுவது, அதன் கைப்பாவைகளென ஓராயிரம் பல்லாயிரம் எனப் பிறந்து சாகும் உயிர்கள், அது தெய்வம், நான் என்னும் எண்ணமே அதன் பலி, அதில் உழல்தலே அதன் படையல், நான் என்னும் எண்ணத்தில் அத்தெய்வம் கொள்ளும் பலிகளை முதன்முதலாக உணர்ந்த ஒருவனின் கண்களில் உதித்தவனே நான், இமையா விழிகள் கொண்டவன், தழலென உருக்கொண்டு வந்தவன், ‘நான்’ என்பதை என் வால் சுருட்டில் பிணைத்து வைத்திருக்கும் ஒரு தெய்வம், தெய்வத்தைத் தெய்வமே வெல்லும், தெய்வத்தை தெய்வமே நிலையில் நிற்கச் செய்யும், ஆனால் அது மற்ற உயிர்களுக்கு, பிறந்திறந்து ஓடுபவர்களுக்கு, கவிஞன் என எழுந்தவன் வெறும் நான் மட்டுமல்ல, தன்னுயிர் தான் அறப் பெற்றானையே இம்மண்ணுயிர்கள் எல்லாம் தொழும், நீ படைக்கப் பிறந்தவன், உன் தெய்வம் சொல், அதன் உருவும் பலியும் படைச்சோறும் உன் குருதி வழி நீ கடைந்தெடுக்கும் சொற்கள்தான், நீ சொல்லில் எழுப்பும் சொற்றளியே சொற்தெய்வம் உறையும் இடம், நீ கொள்ளும் தவம் அத்தெய்வத்தை நோக்கி மட்டுமே, அதுவே உன் இப்பிறப்பின் முடிவு, நீ கொள்ளும் இடர்களனைத்தும் நீ இன்னும் உன்னைக் கவிஞனாக முழுதுணராது இருப்பதால் தோன்றும் நிழல்கள், அந்நிழலில் தங்கி உழன்று சுகிப்பவன் ஒருபோதும் கவிஞனாக ஆவதில்லை, நீ செய்ய வேண்டியது தவம், உன் சொற்தெய்வத்தின் முன் பணிந்து கிடந்து அடைய வேண்டிய வரம், அதில்லாது உனக்கு கரையேற்றமில்லை. அத்தவம் உன்னில் தெய்வமெழ வைக்கும், அச்சொற்தெய்வம், நீ மட்டுமல்ல, உன் குடியும் மண்ணும் மக்களும் கண்ட கனவுகளையும் நினைவுகளையும் உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் உன் சொல்லில் எழுந்தாட வைக்கும், சொல்லியாடிச் செத்தொழிவதே கவிஞன் அடையும் பேறு. அதில் தன்னை முழுதளித்தவன் பெருங்கவிஞனென தன் மக்களால் போற்றித் தொழப்படுவான்’ என்றது.
இனிலன் ‘ஆனால், என்னில் எழும் சொல் ஒரு துளி நஞ்சையும் அளிக்கிறதே…., அது சுற்றத்தோடு பொருதுகொண்டே இருக்கிறது, தனித்திருக்கையில் அது என்னுள்ளே பேரச்சத்தை ஏற்படுத்துகிறது, இது வரமல்லவே…., கவிஞனானால் இது அவனுக்கு அளிக்கப்படும் சாபமா….’ என்றான். அவன் கண்களில் ஏக்கம் மேலிட்டது.
நாகம் ‘ஹா…., கவிஞன் குழவியாயிருக்கையில் எழும் கேள்விகள்…., மழலை மாறாதவை’ என்று சிரித்தது. பின்னர் தொடர்ந்தது ‘நஞ்சில்லாத ஒரு படைப்பும் இல்லையே, நஞ்சோடு சேர்ந்தால் மட்டுமே அமுதும் பயனளிக்கும். தூய நஞ்சோ அமுதோ, இன்னும் மனிதர்களுக்கு அருளப்படவில்லை’ என்று சொல்லி இனிலனையே நோக்கியது.
இனிலனின் உடலில் வியர்வைத் துளிகள் மொட்டரும்பின, அது கைகளில் நடுக்கமாகவும் சொல்லில் தடுமாற்றமாகவும் எழுந்தாடியது.
இடவன், வலவனை மிதித்துத் தள்ளி, ‘ஹா…. அப்படிச் சொல்லுங்கள்’ என்றான் முன்னகர்ந்து.
இனிலன் ‘இல்லை…, இல்லை, இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, நஞ்சு எப்படிப் பயனுள்ளதாகும், நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்’ என்றான்.
நாகம் ‘என்ன….’ என்று சீறி முன்னால் நகர்ந்தது, அதன் இமையா விழிகளில் வாளின் கூர்நுனி ஒரு தருணத்தில் மட்டுமே வெளிப்படுத்தும் ஓர் கூரிய ஒளியைக் கண்டான், அதன் பற்கள் தருக்கி எழுந்து தூக்கி மண்ணில் சரிக்கும் முறுக்கிய கரங்களாகத் தோன்றி எழுந்தமர்ந்தன. அதிலெழுந்த ஒரு துளி நஞ்சு, ‘பொன்னந்தி’ என அவனுள்ளில் உவமை சொட்டி மறைய, அவன் திடுக்கிட்டான், பார்வையைத் தவிர்த்து இனிலன் அஞ்சிப் பின்னகர்ந்தான்.
நாகம் அழுத்தமாக ‘நீ கவிஞனென்றால் அமுது வந்த வழி தெரியுமல்லவா உனக்கு’ என்றது.
இனிலன் தயங்கித் தலையசைத்தான், அவன் உள்ளமும் தழலாட்டத்தில் சேர்ந்தாடத் தொடங்கியது, மெல்லத் தலையுயர்த்திக் கேட்டான் ‘அது கதையல்லவா’ என்று.
நாகம் அவனைக் கண்டுகொண்டது, சிரித்தது, ‘உன்னைக் கவிஞன் என நினைத்திருந்தேன்’ என்றது.
இனிலன் ஒரு கணம் கூசிச் சிறுத்தான், தன்மீது வெறுப்பைக் கொட்டினான், தன் கூரிய நகங்களால் தன்னைக் கிழித்துத் திசையெங்கும் வீசியெறிந்தான், குருதியள்ளிக் குடித்துமுடித்து நோக்கினான், நாகம் மாறாப் புன்னகையோடு நோக்கியது.
நாகம் ‘சொல்லில் மெய்யுண்டு என அறியாத எவனும் கவிஞனல்ல, ஆனால் சொல்லில் இருக்கும் மெய்யை மறைப்பவன் இழியுயிர்’ என்றதும் நிலத்தில் தன் வால் சுழற்றியடித்தது.
இனிலன் பின்னகர்ந்து எழுந்து அழுதபடி ஓடினான், சில அடிகளில் நின்று விழி திறக்காது வந்து நாகத்தின் அடியில் விழுந்தான், அவன் உடல் குலுங்கிக் குலுங்கி அமைந்தது நிலத்தின் நீர்க்குமிழி வெடிப்பாகத் தோன்றியது, விசும்பல்கள் மட்டுமென்றாகி, உடலிடையை அழுது கரைத்துப் பின் மெல்ல எழுந்து அமர்ந்தான், அவனது முகம் சக்கையாகத் தோற்றமளித்தது.
நாகம் ‘குழந்தையே, நீ என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம், இனி கேட்கவிருக்கும் கேள்விகளுக்கெல்லாமும் என்னிடம் பதிலுண்டு, ஆனால் அவை நீ தவத்தின் மூலம் அறிய வேண்டியவை, தவத்தின் மூலம் அறிய வேண்டியவைகளை வெறும் சொல்லாக அறிபவன் அறிந்தவனாவதில்லை, அவ்வாறு சொல்லப்படுபவை, கூழாங்கற்கள்…., அவை எழுப்பும் ஒலிகளுக்குப் பொருளில்லை’ என்றது.
இனிலனின் அழுகை முற்றாக நின்றிருந்தது, இனி அதில் பயனில்லை என்று அவனுள்ளில் ஒன்று முடிவுசெய்திருந்தது. அவனில் மிகக் கடினமாக முயன்று ஒரு பெருமூச்சு மட்டுமே வெளி வந்தது.
இனிலன் ‘என் வாழ்வு இங்கோடு முடியப் போகிறதா’ என்றான்.
நாகம் மீண்டும் சிரித்தது. பிறகு சொன்னது ‘நகைப் பேச்சு உனக்கு இயல்பாக வருகிறது. எழு, இங்கிருந்து ஓடு, உன் சொற்தெய்வத்திடம் போய் விழு, அங்கு கேள்’ எனச் சொல்லித் திரும்பி வழியில்லாத வேலியின் வளைவுகளுக்குள் வளைந்து சென்று மறைந்தது நாகம்.
இனிலன் ஒழுங்கற்று வளைந்தும் குழைந்தும் வழியடைத்து நின்ற வேலியை நோக்கி நின்றிருந்தான், பொன்னந்தி அவன் கண்ணின் ஓரம் பட்டு உறுத்தித் திரும்ப வைத்தது, சுவடிகள் சரிந்து கிடந்தன, அதையள்ளிச் சுருட்டிக் கட்டினான், தன் நெஞ்சோடு சுவடிகளை இறுகப் பற்றியபடி, கிழக்கில் திரும்பி நடந்தான். குருவின் ஒரு பாடலின் சாரம் அவன் நினைவாக எழுந்தது,
அது
வெளியின் எல்லையறியாத
எல்லையை
அறிந்து விரிந்ததோ
அறிய வேண்டி
விரிந்துகொண்டிருப்பதோ
இமையா எழில் விழித் தாம்பு
சுற்றியிருக்காது
தளர்ந்தவிழாது
இமையவர் ஒருபுரம் தோள்திரள
அசுரர் ஒருபுரம் புயம்திமிர
நஞ்சூறிக் கனிந்து
நாச்சொட்டவென
எழுந்து வந்ததோ
ஒரு பொற்கலசம்
அமுதெனும்
பேர் படைத்த
ஒற்றைக் கலசம்
அதைக்கொள்ள உள்ளதோ
ஒரு மத்து
ஒரே அச்சு
ஒற்றைத் தவம்
தவத்துள் ஆழும்
‘மந்த்ரம்’