குண்டூர், ரெட்டிபாலெம் பைபாஸ் முழுக்க பட்டாலே உறைந்துப்போகும் பனிக்காற்றின் பிடியிலிருந்தது. சற்று மழித்ததுப் போன்று வளைக்கப்பட்டிருந்த நெடுசாலையின்  ஆங்கில ‘எல்’ வடிவ முனையில் ‘டிஎஸ்பி பார் அன் ரெஸ்ட்டாரென்ட்’ என்ற விளக்கொளிப் பலகைத் தாங்கிய அந்த விடுதியினுள் எங்கள் பைக்கை விட்டோம். ஜலபதி ஓட்ட, அவன் பின்னாடி சீருடைச் சிறுவன் போல அவனுடைய இடுப்புமடிப்பைப் பிடித்துக் கொண்டே அவனை கலாய்த்தபடி, அந்த குளிரையும் வாகனங்களின் ஒளிவீச்சையும் எதிர்கொள்வதே ஒரு அலாதி சுகம்தான்!

பாரில் நுழைந்ததிலிருந்து ஐந்தாறு நிமிடங்கள் வரை தேவையிருந்தும், இல்லாமலும் அநியாயத்திற்கு அனாயாச யோசனைகள்..! பின் சூழ்ந்திருந்த மங்கலான வெளிச்சத்தின் குடி வெம்மை என்னுடைய ஆழ்ந்த மௌனத்தை சற்றுக் கலைக்கத் துவங்கியது போலுணர்ந்தேன். 

‘ப்ரியத்தம்மா நன்னு பலகரின்சு ப்ரயணமா…

அதித்திலா நன்னு சேருகுன்ன ஹ்ருதயமா…’ பாடலின் முன்னிசை துவக்கம், பாறைத் தெறிக்கும் நீராய் ஒலித்த மாத்திரத்தத்தில் இதயங்களிலெல்லாம் பரவசச் சிறகுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. ஞானி என்ன செய்தாலும் போத(னை)தான். சுந்தர தெலுங்கிலும் நமது எவர் க்ரீன் கிறக்க ஜோடிகளான எஸ்பிபியும் இசைக்குயிலும் வேறொரு உலகத்திற்கு எம்மைக் கடத்திக் கொண்டிருந்தார்கள்.

பேச வந்த விஷயத்தை மறந்து ஏகாந்த மொழிக்குள் அகப்பட்டுக் கொண்டவன் போல குறிப்பிட்ட பாடலிலேயே மூழ்கிவிடும் அபாயத்தில் இளையராஜாவின் ஜால வலைக்குள் சிக்கிவிட்டிருந்தேன். அப்பர் போல தியானித்திருந்த என்னை யாரோ இடித்து நகர்ந்தபோதுதான் என்னெதிரினில் அமர்ந்திருந்த, ஜலபதி ராவின் முகத்தைப் பார்த்தேன். என்னை விட பத்து வயது பெரியவன். பாசத்தோடு 

அண்ணய்யா என்று அவனை அழைத்தாலும் அதில் அதிகாரமே அதிகம் விஞ்சியிருக்கும். அவன் இன்னும் மல்லேஸ்வரி தொடர்பானத் தாக்கங்களிலேயே இருந்ததை அவனது உதட்டுப் பிதுக்கம் படம் போட்டுக் காட்டியது. எனக்கும் அவனுக்கும் இடையே இரண்டு பாட்டில்கள் பீரும் நான்கு வகை தொடுகறிகளும் மிக்ஸர், காய்கறித் துண்டுகள் சகித்ததோடு எங்களின் கொறிப்பிற்கேற்பப் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

அந்தச் சூழலிலும் நான் சிலாகித்து தேய ஆரம்பித்த குறிப்பிட்ட பாடல் மட்டும் ஜலபதிக்குப் பிடிக்க வாய்ப்பே இல்லை! ஏனெனில் ஓடும் ரயிலை ஒற்றை கையால் சுழற்றி அடிக்கும் புஜபல பராக்கிரமர் ஸ்ரீமான் பாலய்யாவிற்கு மட்டுமே அவன் தீவிர ரசிகன். அகண்டாவையே ராஜுபாலெம் ஸ்டார் தியேட்டரில் குடும்பத்தோடு ஐந்தாறு முறைப் பார்த்தவன் மன்னிக்கவும் குடும்பங்களோடுப் பார்த்தவனாயிற்றே அவன்!

நாங்கள் பாரில் அமர்ந்திருந்தபோது அகன்ற எல் ஈ டி திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த பாட்டு மன சிரஞ்சீவிகாருடையது. அது என்ன சிராஜீவிகாருடையது? ஏன் ஸ்ரீதேவிகாரும் கூட தாண்ட்லு உன்னாரனி செப்பொச்சிகா? இது ஆணாதிக்கம் நிறைந்த உலகமல்லவா? அதைப் பற்றியும்தான் இந்த கதையும் கூட கொஞ்சம் படம் போட்டுக் காட்டுமென நினைக்கிறேன்.

அதனாலேயே அந்த பாடலை மட்டுமல்ல நான் அவனோடுப் பேச நினைக்கும் விஷயங்களையும் கூட சரியாக விளங்கி, ஏற்று, வரவேற்பானா எனத் தெரியவில்லை. ரொம்ப தெளிவா உளற ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன். எல்லாம் மத்து (போதை) மாமா மத்து!

அதற்குமுன்… இதற்குமுன் நடந்த சம்பவங்களை ஒரு சிறு குறிப்பு வரைந்து கொள்கிறேன். தானிக்கி மீரு கூட கொஞ்சம் பர்மிஷன் இவ்வண்டி!

மூன்று நாட்களாக மல்லேஸ்வரி ஃபேக்டரி பக்கம் வராதது எனக்கும் கூட சற்று கலக்கமாகவே இருந்து வந்தது. ஆந்திரத்து அழகுக் கிளியான அவள், கணப்படாத அந்த இரண்டு மூன்று நாட்களில் எனது கண்களும் கூட என் காதலி கீதாவை விட அவளைதான் அதிகமாய் தேடின. அவித்து, உறிக்கப்பட்ட மரவல்லிக் கிழங்கிற்கு மஞ்சள் பூசிவிட்டார் போல மங்களகரமாய் இருப்பாள் அந்த ஐந்தடி அனார்கலி.

இப்படி விவரிக்கிறேனே அவளையும் நான் காதலிக்கிறேனோ என்று நினைக்க வேண்டாம். அவள் எனக்கு சினேகிதிப் போன்றவள். ஒரு பிரியத்தில் சகோதரி என்று சொன்னால் முன்னால் வர்ணித்ததை வைத்து எதிர்மறை விமர்சனங்கள் எழக் கூடுமல்லவா? அதனால் சினேகிதி என்பதே இங்கே உசிதம் என்று கருதுகிறேன். 

மேலும் அவள் கல்யாணமானவள், அன்றாடம் அவள் மஞ்சள் குளித்து வருவாளோ என்னவோ… அல்லது நாங்கள் பணிபுரியும் ஃபேக்டரி முழுக்க மஞ்சள் கிழங்குகளாகப் பார்த்து பார்த்து எனக்குதான் காமாலை வந்துவிட்டதோ என்னவோ… என்ன சொன்னாலும், மல்லேஸ்வரி என் கண்களுக்கு ஏனோ எப்போதும் மஞ்சள் சிலையாகவேத் தெரிவாள். ஆனால் இந்த கதை அவளை மட்டும் பற்றியதல்ல பிரியமானவர்களே..!

மஞ்ஞில் விரிஞ்சப் பூவான அந்த மல்லேஸ்வரியோடு கடந்த ஞாயிறன்று ஜலபதி, கோதாவரி அணை வரை கள்ளக் காதலனாக துடுப்போட்டிச் சென்று வந்திருக்கிறான் சபையோரே! இந்த செய்தி எப்படியோ மல்லேஸ்வரியின் புருஷன் அஞ்சியின் காதிற்கு எட்ட, மஞ்சள் நிலா மல்லேஸ்வரி என்ன நிலைக்கு ஆளாகியிருப்பாள் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். சிவப்பு கிரகணம் பிடித்ததவளாய் இன்னும் அஞ்சியின் கைகள் பட்ட தன் கன்னங்களையேத் தடவிக் கொண்டிருப்பாளோ..? என்ன நடந்திருந்தாலும் அவர்கள் ஊர் மேய்ந்து வந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு மல்லேஸ்வரியின்  மீது ஈர்ப்பைத் தாண்டிய மரியாதையையும் நன்மதிப்பையும் வைத்திருந்தேன்!

அதுவரை மொழிமாற்றுப்படமான ‘வந்தாள் மகாலட்சுமி’யில் நடித்த மீனா மாதிரி தெரிந்தவள், சட்டென ‘ஹலோ.. ஹலோ.. என் காதலா…!’ என அஜீத்தின் கன்னத்தோடு கன்னம் வைத்து ஈஷிக் கொள்ளும் ‘வில்லன்’ பட இரண்டாம் நாயகியாக என் மனக் கிடங்கில் மங்கிப் போனாள். இப்போதும் கூட நம்ப முடியாத வருத்தத்தோடு, தங்க  வைதேகிஸ்வரியே..! மீனா! நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா? என்றெல்லாம் டி ஆர் பாணியில் சலம்பத் தூண்டுகிறது. மன்னிக்கவும், நான் ஒரு சினிமா பைத்தியம்… இயக்குனர் ஆசையிலும் வேறு சுற்றிக் கொண்டிருக்கிறேனா… அதனால்தான் வார்த்தைக்கு வார்த்தை சினிமாவே வந்து விழுகிறது!

சரி என் புராணம் கிடக்கட்டும், இந்த ஜலபதி பங்காரம் (தங்கம்) எப்படிப்பட்டவன் என்று பார்ப்போம்…

ஜலபதி இரண்டு பொண்டாட்டிக்காரன். என்றாலும் முதல் மனைவியையும் அவள் வழிப் பிறந்த குழந்தைகளை மட்டுமே தனது குடும்பமாகக் கருதுபவன். பிறகு இரண்டாவதாக எதற்கு ஒருத்தியை கரம் பிடித்தாய்? அவளுடன் பிள்ளைகளைப் பெற்றாய் என என் அறச்சீற்றக் குரல் எப்போதாவது எழுந்தால், மிகவும் சகஜமாக சொல்வான், ‘நானா அவள் பின்னாடிப் போனேன்? கட்டிக் கொண்டேன்? அல்லது கட்டிக்கொள் எனக் கேட்டேன்? அவள்தானே என்னைக் காதலித்தாள்? திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேனென மிரட்டி, எல்லாவற்றிற்கும் என்னை பணிய வைத்தாள்?’ என அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு நியாயம் கேட்கும் என் வாயை அடைத்துவிடுவான்! 

அவனுடைய முதல் மனைவிப் பெயர் விஜயா. இரண்டாவதாக கரம் பிடித்தவளின் பெயர் சகஸ்ரா. அடடே பேரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நீங்கள் வாய் பிளப்பது எனக்கு விளங்குகிறது. எனக்கும் அப்படிதான் தோன்றியது. புஷ்பா, புஷ்ப லதா என்றில்லாம் இல்லாமல் புதிய பெயராக இருக்கிறதே… வயதும் குறைவாகத்தானே இருக்குமென என விசாரித்துப் பார்த்தேன். அதுவும் ஆமாவாம். ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தவள், அப்போது ஷேர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த இவனுடைய கருப்பு பால்கோவா மூட்டை போல் காட்சியளிக்கும் வாளிப்பான அழகில் மயங்கிக் கிறக்கமாகியிருக்கிறாள். அந்த பித்தம் என்னை(யும்) நீ கல்யாணம் செய்துகொண்டே ஆக வேண்டுமென்ற மிரட்டல் அளவிற்கு அவர்களின் உரசல் தொடர்புகள் சற்று கூடுதல் உயரங்களுக்குச் சென்றிருக்கின்றன. விளைவு, அவளுக்காக ஒரு சின்ன வீடுப் பார்க்குமளவிற்கு எல்லாம் சுபமாய் முடிந்தேறியிருக்கிறது!

இதில் உன் முதல் மனைவியான விஜயாவிற்கு எதுவும் வருத்தம் இருந்திருக்காதா எனக் கேட்டால், அப்படிப்பட்ட சிந்தனையெல்லாம் தனக்கு வந்ததே இல்லையே என்பான். அப்படியே இருந்திருந்தாலும் பெரிதாய் வருத்தப்படுமளவிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டா தம்முடு? என்று எப்போதும் போல் திருப்பிக் கொண்டு என்னையே கேள்விகள் கேட்பான். ஆனாலும் வாய்க்கு வாய் முதல் மனைவியான விஜயாவும், அவள் பெற்றுத் தந்த பிள்ளைகளும்தான் தனக்கு எல்லாமே என்பான். முதல் முறை இதையெல்லாம் கேட்டபோது அவனைப் புரிந்து கொள்ள சற்று சிரமாகவே இருந்தது.

ஆனால் அவன் அப்படி சொன்னதிற்கு காரணம், ஏதோ ஒரு வேகத்திலும், தானே நிர்மாணித்துக்கொண்ட நியாயங்களிலும், விரும்பியும் விரும்பாமலும் அவன் செய்து கொண்ட இரண்டாவது திருமணமும், யார் மீதும் சட்டெனப் பொழிந்துவிடும் அவனுடைய இரக்க சுபாவமே ஒவ்வொரு விஷயத்திலும் அவனை அப்படி பலவீனப்படுத்தி வருகிறது. அதை மறைக்க எதையாவதுச் சொல்லி முட்டுக் கொடுப்பது போல பேச ஆரம்பிப்பான். மகாடு (ஆண்கள்) என்றால் அப்படியும் இப்படியும்தான் என்று தன்னை விட மோசமானவர்களை உதாரணமாக வரிசையில் நிறுத்தி, அவர்களையெல்லாம் விட பெண்களை முறையாக நடத்துவதில் நான் எவ்வளவு நல்லவன் தெரியுமா? என்று மறுபடியும் ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வியாலேயே பதில் தருவான்.

அவன் என்ன வியாக்கியானம் பேசினாலும், என்னால் ஏற்க இயலாதது சகஸ்ராவையும் அவளுடைய பிள்ளைகளையும் எப்போதும் இரண்டாம் நிலையிலேயே வைத்துப் பார்ப்பது. என்னதான் அவள், இவனை துரத்தி துரத்தி காதலித்திருந்தாலும்… எனக்கு ஜலபதி – சகஸ்ரா கதையைக் கேட்டால் ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி – ஜெமினி கணேசன் ‘ பாத்திரங்களில் நம்ம கீர்த்தி சுரேஷ் – துல்கர் சல்மான் நடித்த ‘ மகாநடி’ படம்தான் ஞாபகத்திற்கு வரும். ஒரு நாள் மப்பின் மிகுதியால் நீதிக் கேட்கும் எனது குரல் ஒரு படி ஓங்கியது. “உன் வாதத்தின்படி நீயே நல்லவன் என்று வைத்துக் கொண்டால், ‘மகாநடி’ படத்தில் ஜெமினி கணேசனும் நல்லவர்தானே? அவரை மட்டும் இங்கே எல்லோரும் திட்டுகிறீர்களே என்பேன்.  அப்போது மட்டும் தெலுங்குப் பாசம் பொத்துக்கொண்டு வரும். அவன் குரல் சாவித்திரிக்காக கருப்பு கோட்டு மாட்டிக் கொள்ளும்!

ஆமாம் நீ சொல்றது கரெக்ட்தான். ஒரு வேளை உன் தங்கையையோ, மகளோ உன்னைப் போன்ற ஒருத்தனைக் காதலித்து, வீட்டிலுள்ளவர்களின் பேச்சையும், அறிவுரைகளையும் பொருட்படுத்தாமல் இரண்டாம் தாரமாகச் சென்றிருந்தால் நிச்சயம் அவன் உனக்கு கெட்டவனாகவேத் தெரிந்திருப்பான். அதே உன் மகன் என்றால் நீ பெருமைப்பட்டிருப்பாய் அல்லவா?” என்றதும்வாடு மகாடுக்கதா!’ அவன் ஆம்பிளைப் பிள்ளை இல்லையா என சிரித்துக் கொண்டே மீசையை முறுக்கிக் கொண்டான். அதையும் அவனுடைய கபடமில்லாத பேச்சென்பதா..? என்னால் அந்த பேதத்தை சத்தியமாக இரசிக்க முடிந்ததில்லை!

வந்த கோபத்தில், குடித்ததெல்லாம் சிரமப்பட்டு பாத்ரூம் வரை போகாமல், எழுந்து அவன் முகத்திலேயே ஒண்ணுக்கு விடத் தோன்றியது.

பாருங்கள்! பேச வந்த மல்லேஸ்வரி விசயத்தை விட்டுவிட்டேன்! என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஏண்டா அப்படி பண்ணினே? என்றேன் உண்மையான கோபத்தோடு. இருந்தும் கண்களிலும் குரலிலும் சரக்கின் கிறக்கம் கூடிக்கொண்டுச் சென்றது. நான் என்ன செய்ய? 

“அவள் கணவன் மிகவும் மோசமானவன், வீட்டிற்கும் பணம் கொடுப்பதில்லை. முதலில் அவளுக்கு ஆறுதல் சொல்வது போலத்தான் பழகினேன் தம்முடு.

பிறகு சிறு சிறு உதவிகள் செய்ய, செய்ய…” என்று இழுத்தான்.

“உன்னை முதல்ல இந்த மேஸ்திரி வேலையிலிருந்து தூக்கணும்டா. உன் குடும்பங்களுக்கு நீ ஒழுங்கா எல்லாம் செய்றியா?”

“தம்முடு, முதல்ல விஜயா, பிறகு சின்னி (சகஸ்ரா) அப்புறம்தான் யாரா இருந்தாலும்! யாருக்கா இருந்தாலும்!” மப்பில் குரல் தழுதழுத்தான். அது மப்பாக மட்டும் இருக்க எனக்குத் தோன்றவில்லை.

“நீ நடத்துறா அண்ணய்யா!” என்றபடி 

அவன் கழுத்தை முட்டி எனது தலைக் கவிழ்ந்தது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *