தோப்பில் இருக்கும் புளிய மரத்தடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறுக்கே நுழைந்த மாட்டினை துரத்துவதற்காக யாரோ எறிந்த கல் வசமாக சென்று காலில் தாக்கி விட்டது. வேகமாக திரும்பிய மாடு அருகிலிருந்த என்னை முட்டித் தள்ளியதில் நான் விழுந்து உருண்டேன். காலில் ரத்தத்தோடு நின்றிருந்த மாட்டினைப் பார்த்து கோபம்கொண்ட பக்கத்து வீட்டு சுந்தரத்தின் அப்பா மாணிக்கம் வேகமாய் எங்களை நோக்கி ஓடி வந்தார். பின்னால் சுந்தரத்தின் அம்மா கையில் கரண்டியோடு வருகிறாள். பசங்க அனைவரும் இவன் தான் மாட்டை அடித்தான் என்று கையை என்பக்கம் நீட்டுகிறார்கள். நேரம் செல்ல செல்ல கூச்சல் அதிகரித்தது. நான் மாட்டினை அடிக்கவேயில்லை என்று அலறிக்கொண்டிருந்தது யார் காதிலும் விழுந்தது போல் தெரியவில்லை. பாட்டி வந்து என்னை அணைத்துக் கொண்டாள். அவளைப் பார்த்த கூட்டம் கலைந்து சென்றது. பின்பு நான் அவள் மடியில் படுத்துக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் எனது நண்பர்கள். பாட்டி ராகமாக “மாடுங்கெல்லாம் ஆதியில காட்டுல தான் இருந்துதுங்க..” என்கிறாள். நாங்களனைவரும் ஒரே நேரத்தில் “உம்ம்” என்றோம். “சத்தியத்துக்கு ஒப்புக்கினு தாம் மனுஷங்கிட்ட காட்டு குணத்த விட்டுட்டு லச்சுமியா வாழ்ந்துட்டு இருக்குதுங்க..” “உம்ம்ம்” “அந்த சத்தியத்த விட்டு மனுஷன் விலகினா மாடுங்க காட்டுக்கே போயிடும்” அதற்கு நாங்கள் “உம்ம்” கொட்டுவதற்குள் சன்னமாக தலையிலடித்தது போல் ஒலித்தது அம்மாவின் குரல்.
மீண்டும் தூங்க முயன்றவனை தூங்க விடாமல் காதைப் பிளந்த குரலினால் விழித்துக் கொண்டேன். “ப்ச்” என்ற சத்தத்துடன் நேரத்தை பார்த்தேன். சனிக்கிழமை என்பது நினைவில் தட்டியது. வீட்டின் பின் பக்கத்திலிருந்து அம்மா இடைவிடாது யாரிடமோ வாக்குவாதம் செய்வதும், நடுவில் அப்பா உச்ச குரலில் பேசிவிட்டு சிறிது இடைவெளி விட்டு மீண்டும் உச்சக் குரலில் பேசுவதுமாக இருந்தது.
இடையிடையே பக்கத்து வீட்டு மாடுகள் “ம்ம்மாஆஆ…” என்று எழுப்பும் ஒலி. அப்போது தான் முட்டையிட்டிருந்த பெட்டைக் கோழி “கொக் கொக் கொக் ர்ர்ரக் கொக் கொக் ர்ர்ரக்கொக்…” என்று தொடர் கத்தலும் எங்கோ ஒரு சேவலின் நீட்டிய கொக்கரிப்பும். பக்கத்து வீட்டு சுந்தரத்தின் அம்மாவின் குரல் இவ்வளவையும் தாண்டி தெளிவான உச்சரிப்பில் கேட்க முடிந்தது. கண்ணை கசக்கிக் கொண்டே பின் வாசல் வழியாக சென்று வீட்டின் சுவரோரமாய் வளர்ந்திருந்த பச்சைக்காய் தென்னை மரத்தில் சாய்ந்து நின்று கொண்டேன். இரவு பெய்திருந்த மழை நீர் கசிந்து ஒரு பக்கம் கருமையாக மாறியிருந்தது. காலை சூரியன் இலைகளிலிருக்கும் ஈரத்தை மின்னச் செய்தது.
கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது காலை நேரங்களில் இது மாதிரியான சண்டைகள் வந்து கொண்டிருந்தன. தொடங்கி பத்து நிமிடத்தில் முடிவதிலிருந்து இப்போது ஒரு நாள் முழுவதும் நீளுவதாக மாறியிருந்தது. இடையிடையே கொஞ்சம் இடைவெளி விட்டு காலையுணவை முடித்துக் கொண்டு பின்பு திடிரென்று ஒரு புள்ளியில் மீண்டும் சண்டை தொடங்கி மதிய சமையல் வேலை தொடங்குவது வரை நீளும். வேலையின் போது கூட அம்மாவின் வாய் முனுமுனுத்துக் கொண்டிருக்கும். பின்பு மாலையிலும் கூட தொடரும்.
இந்த தெருவின் எல்லா வீட்டு மனைகளும் மிக நீளமானது. ஒவ்வொரு வீடும் முடிந்த பிறகு பின்னால் பெரிய பெரிய புளிய மரங்கள் சேர்ந்து ஒரு தோப்பாக மாறியிருக்கும். கோடை விடுமுறையின் போது ஒவ்வொருத்தரும் அவர்களுக்கு சொந்தமான மரத்திலிருந்து புளியம்பழங்களை உலுக்கும் போது மட்டும் அந்த மரங்கள் உரிமையாளர்களின் பெயரால் குறிப்பிட்டு சொல்லப்படும். மற்ற நேரங்களில் அந்த மரங்கள் சிறுவர்களுக்கு சொந்தமான விளையாட்டு களமாக இருக்கும். அங்கிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனி பெயர்களும் புழக்கத்தில் உண்டு. இனிப்பு புளிய மரம், ஜோட்டான் மரம், புளிப்பு மரம், யான புளிய மரம், சறுக்கு புளிய மரம், கொத்து புளிய மரம், ஊசி பழ மரம் என்று விதவிதமான மரங்கள். புளியங்காய் செங்காயிலிருந்து செம்பழமாக மாறியிருப்பதற்கு ஹார்லிக்ஸ் என்றும் சிவந்த பழமாக மாறியிருப்பதற்கு பூஸ்ட் என்றும் நிறத்தின் அடிப்படையில் பெயருண்டு.
என் பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன் இந்த தெருவில் இருக்கும் வீடுகள் அனைத்தும் அளவிலும் அலங்கரிப்புகளிலும் தான் வேறு பட்டிருக்கும். வீடு என்னுமளவில் ஒரே மாதிரியானவை. வெளியே திண்ணைகளும் சாய்ப்புகளும் அந்தந்த வீட்டு அளவிற்கேற்ப அமைந்திருப்பவை. பின்பு ரேழி அதனை ஒட்டிய அறை, அதற்கு பின் வராந்தா நடுவே முற்றம். வராந்தாவிலிருந்து பிரிந்து செல்லும் மேலறையும் கீழறையும், அதனையடுத்து சமையலறை. பின் கட்டில் தறிக்கொட்டகை அதற்கும் பின்னே மாடுகள் கட்டுமிடமும் அவற்றிற்கான தொட்டிகளும். அருகில் ஒரு பெரிய கோழிக்கூண்டு இரண்டு நெருக்கமான ஜன்னல்கள் வைத்தது. அதனையடுத்து கிணறு, பின் சிறிய வீட்டு தோட்டம் அதனையடுத்து புளியந்தோப்பு. புளியந்தோப்பை தாண்டினால் வேலிகாத்தான் மரக் காடு. அதனையடுத்து பனஞ்சாலையும், முன்பு வயலாக இருந்த கிரிக்கெட் மைதானமும். அதனை தாண்டினால் மீண்டும் வேலிகாத்தான் மரங்களும் ஈச்ச மரங்களும் செறிந்திருக்கும் காடு. எல்லையாக வல்லப்பாக்கத்து ஏரி.
இப்போது அந்த பழைய மாதிரி வீடுகள் அனேகமாக இல்லை. இடித்து சுற்றுச் சுவர் வைத்த மெத்தைவீடுகள் கட்டியாகிவிட்டது. தறிக்கொட்டகைகள் மாற்றியமைக்கப்பட்டு வாடகைக்கான வீடுகளாக மாறிவிட்டன. இங்கிருந்து ஒரகடத்திற்கும் ஸ்ரீபெரும்பந்தூருக்கும் வேலைக்கு செல்லும் வெளியூர் ஆட்களால் வீடுகளுக்கு நல்ல கிராக்கி உருவாகிவிட்டது. சுற்றியிருக்கும் திருவண்ணாமலை திண்டிவனம் செய்யார் ஆரணி பகுதிகளிலிருந்து பல இளைஞர்கள் புதிதாக குடியேறியிருந்தார்கள். மாடுகள் கோழிகள் என எதுவுமில்லை. எங்களது வீட்டில் தாத்தா வேலைக்கு சென்ற காலத்திலேயே தறியின் ஓட்டம் குறைந்து போனது. ஆள்காரர்கள் வந்து நெய்வதற்காக மட்டும் சில தறிகள் இருந்தது. தாத்தாவிற்கு வீட்டு தோட்டத்தின் மீதும் கோழிகளின் மீதும் பெரும் விருப்பம். அவருக்கு மிக பிடித்தமான சுரைக்காயை அவரே வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து சரியான பருவத்தில் அறுத்து சமைக்க சொல்லுவார் என்பார் பாட்டி. “சுரை பிஞ்சிலயும் கோழி (வெட) குஞ்சிலயும் சாப்பிடனும்” என்பது அவரது வழக்கு. தோட்டத்தில் வேப்பமும் புங்கமும் கொன்றையும் பங்குனியில் பூத்துக் குலுங்கும் என்பாள் பாட்டி.
அவரது பணி ஓய்விற்கான கடைசி ஆண்டில் அப்பாவிற்கு திருமணமானது. அடுத்த வருடமே அவர் இறந்து போனார். அப்பா தலையெடுத்ததும் தறியின் ஓட்டம் முற்றிலும் நின்று போனது. நான் வீட்டிலிருக்கும் தூசி படிந்த தறி சாமான்களையும், கால்குழிகளையும், பதிந்திருக்கும் தறிக்கால்களையும் மேலே தொங்க விடப்பட்டிருக்கும் ஊர்திகளும் பூட்தலைகளையும் நூல் டப்பாக்களையும் பார்த்திருக்கிறேன். பின்பு அவையும் இல்லாமலாகிவிட்டது. அம்மாவும் வேலைக்கு செல்வதால் பாட்டி ஒருவரால் அனைத்தையும் கவனிக்க முடியாததற்காக மாடுகளையும் கோழிகளையும் விற்று விட்டார் அப்பா. புது வீட்டிற்காக இருந்த மரங்களும் வெட்டப்பட்டன. நின்றிருந்த கிச்சிளி மரமும் பட்டுப் போனது. வீட்டுத் தோட்டம் இல்லாமலாகி இரண்டு தென்னைகளும் கொய்யா மரமும் மட்டுமே மிஞ்சியது. பரந்து விரிந்திருந்த வீடு சுற்றுச் சுவர்களுக்குள் சுருங்கியது போல் இருப்பதாக பாட்டி சொல்வது விசித்திரமாக இருக்கும். முன்பு மட்டும் வீடு ஊரளவிற்கு பெரியதாக இருந்ததா என்ன?.
சுந்தரத்தின் அப்பா இப்போதும் தறியையும் மாடுகளையும் கோழிகளையும் பராமரிக்கிறார். அவரது வீடு இன்னும் பழைய அமைப்பிலேயே இருந்து வருகிறது. நான் சுந்தர மூர்த்தியை விளையாட அழைப்பதற்காக சிறு வயதில் அவர்களது வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அதன் குளிர்ச்சியும் தோட்டத்திலிருந்து வரும் வாசனையும் மிகவும் நெருக்கமாக மனதில் பதிந்து போனது. அந்த தெருவிலேயே அவர் ஒருவரின் வீட்டில் மட்டுமே இன்னும் தறியின் சத்தம் கேட்கிறது. அதனை தவிர வயசாளிகளால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தறிகள் இருந்து கொண்டிருக்கிறது. தறி வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் அதன் கடைசிக்காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களைப் போல் முடிக்கு டை அடித்துக் கொண்டு ஒரகடத்திற்கு செல்ல முயன்றவரால் அங்கு நிலைக்க முடியவில்லை. அவரைப் போன்றே வேலை செய்ய முயன்று முடியாமலும், வேலைக்கே செல்ல விருப்பமில்லாதவர்களும் தான் தறியினை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
“கோழி எல்லாத்தையும் கூண்டுல மூடி வைக்கறதுக்கென்ன, இஷ்டத்துக்கு அவுத்துவுட்டு அது எல்லா எடத்துலயும் பேணு வைக்கிது” என்றாள் அம்மா.
“மூடி தான் வைக்கிறோம், கட்டைய தொறந்துட்டு பறந்துறுதுக்கா..”
“இங்க பாரு சுந்தரம்மா.. டெய்லி இதே ரோதனையா போச்சி உங்க கோழிங்களோட.. இதுங்க பேணு வச்சதெல்லாம் வாரிக்கொட்டுறதா வேல எனக்கு”
“இனிமே வராம பாத்துக்குறேன்கா..” “அந்த கொய்யா மரத்தில ஏறி ஒக்கார்றதுல என்ன சொகுசோ இந்த பண்ணாடைங்களுக்கு..” என்று கோழிகளை கையை வீசி துரத்தி விடுவது போல் வீசி “ச்சீ ஒடுங்க ஒடுங்க நாய்ங்களா… காலைலயே சண்டைய இழுத்துக்கினு வந்துட்ட“ என்றாள்.
“இந்த கோழிப்பீயினால தான் பாம்புங்க உள்ள வருது.. நீங்க கோழிய வளத்து முட்ட விக்கிறதுக்கு எங்க வூட்டுல பாம்பு வராம காவலுக்கு இருக்கனுமா..?”
“ஆமா.. இதுங்க முட்டைய வித்து தான் மாளிகையும் கப்பலும் வாங்கி வச்சிருக்கோம்.. இந்த நாலஞ்சி முட்டைக்கு இவ்ளோ கண்ணுங்க வேற..” கோழிகளின் பக்கமாக திரும்பி “கசுமாலங்க காலைல தொறந்து விட்டா எங்கயாவது ஒழிஞ்சி தொலைய வேண்டியது தான.. எடமா இல்லாம போச்சி உங்களுக்கு.. ஊர்ல இருக்கிற காக்கா குருவிங்கள்லாம் வருதே அதெல்லாமா எல்லார் கண்ணுக்கும் தெரியுது? இந்த நாலு கோழி வர்றதுக்கு தான் அப்படி அடிச்சிக்கிறாளுங்க.. “
“நீ சம்பாரிக்கிற காசுக்கு யாரும் அடிச்சிக்கல.. அன்னைக்கு பாம்பு வந்தப்ப சுந்தரம் அப்பா தான வந்து அடிச்சாரு..நீயும் பாத்துட்டு தான இருந்த.. இங்க என்ன அடப்பு இருக்கா.. பொதரு இருக்கா.. செடி செட்டு இருக்கா.. வெரவு குவிஞ்சிருக்கா.. சுத்தி காம்பவுன்ட் போட்டு சுத்தமா இருக்கப்பவே வருதுங்க…”
“உங்கள சொல்லலக்கா.. நீங்க இப்ப டூட்டிக்கு கிளம்பிருவீங்க.. நெதம் எத்தன சண்டய பாக்க வேண்டி இருக்கு இந்த சனியனுங்களால.. என்னவோ பொறக்கும்போதெ ஆபிசுக்கு பேக் மாட்டிக்கிட்டு ஜம்பமா போனவங்க மாறி குதிக்கிறவங்களுக்காவுது.. எந்தெந்த வூடு எப்படி வளந்ததுனு தெரியாமலா கடக்குறோம்.. வேலைக்கு போயி வருஷம் திரும்பறதுக்குள்ள இருந்த இருப்ப மறந்துட்டு சீமக்காரி மாதிரி ராங்கி பண்ணிக்கிட்டு இருக்காளுங்க..”
“உங்க கோழிங்களால தான் இந்த வீடே நாத்தம் அடிக்குது, பின்னாடி கதவ தொறக்க முடியல நாத்தம் கொடல பெரட்டுது.. இத வித்துட்டு இன்னொரு மாட்ட பிடிச்சிக்கிட்டா உனக்கும் சவுகரியுமா இருக்கும்ல” – உள்ளிருந்து வந்த அப்பா திடீரென்று கேட்டார்.
“இந்த நாத்தம் புடிச்ச கோழிங்களோட மல்லு கட்ட எங்களுக்கு என்ன ஆசையா.. இதுல அடிக்கடி சீக்கு வந்து பாதி கோழிங்கள அடிச்சிக்கினு போயிடுது.. மிஞ்சுதுறல இருந்து வர்றத வச்சி குடும்பத்துக்கு ஒத்தாசையா போகுது.. இன்னொரு மாடு வாங்குறது நம்மால முடியுமா.. இல்ல அதுக்கு பாடு எடுக்க தான் இங்க யாரு இருக்கா.. இப்ப இருக்கற வேலயே ஓயல.. எங்க தான் இல்லாம இருக்குது நாத்தம்“ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் சென்று விட்டாள்.
“தோ இந்த முருங்க மரத்த வெட்டுனு சொல்றேன் காதுல விழுதா ஒனக்கு.. எல்லா இலையும் பழுப்படிச்சி உள்ள விழுது..கம்பிளி பூச்சிங்கவேற கொத்தா ஏறி உள்ள வருது” என்று உள்ளே சென்றவளைப் பார்த்து கத்தினாள் அம்மா.
உள்ளிருந்து மாட்டிற்கு கழிநீர் பானையை தூக்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு “எல வுழுந்தா மக்கிப் போவ போது.. இது என்னமோ பெரிய இதுனு மாசக்கணக்கா சொல்லிகிட்டு இருக்கிறாங்களே…ம்ம்ம்ம்” என்று இழுத்தாள்.
“அங்க தான் இன்னொரு முருங்க மரம் வளந்துருச்சே, இத வெட்டிரலாம்ல.. நாலு பேருக்கு எதுக்கு ரெண்டு மரம்..” என்றார் அப்பா.
“தெருவே வந்து கீரைக்கு இங்க தான் நிக்குது… துளுக்க விடாம ஒடிச்சிக்கினு போறாங்களே.. நமக்கு ஒரு நாளு கெழமைனா கீர ஒடிக்கிறதுக்கு ஆப்பட மாட்டேங்குது.. தோ இது காய் மரம் எலயே நிக்காது, இந்த ஒரு மரத்து கீர தான் வாய்க்கு ஒணவா இருக்கும்” என்றவாறு பிரியாக திரிக்கப்பட்ட வைக்கோலில் சிறிது பிய்த்து கன்றிற்கு அருகில் போட்டாள்.
“இது என்னைக்கும் விடாதுங்க.. வேலைக்கு போயி வந்து வீட்டுல நிம்மதியா இரண்டு நாளு இருக்க முடியுதா.. பாம்பும் பூரானும் கம்பளி பூச்சியும் கோழிபீயுமா வீடு இருந்தா வெளங்கும்.. இந்த கொரங்குங்க வேற..” என்று தலையலடித்துக் கொண்டாள்.
“தோ உங்க மரத்து காய பறிச்சி தின்னு போட்டு ஓட்ட ஒடச்சி வச்சிக்கிது கொரங்குங்க.. அதுக்கு நாம என்னா செய்ய முடியும்… வசதி இருக்கறவங்க மாடி கட்டிக்கிறாங்க.. கொரங்குக்கு பாத்து மரத்த வெட்டிட்டா நாளைக்கு மட்ட காயி வேணுமுன்னா எங்க போறது”
“எங்க மரத்து காயின்னு சொல்றீயே.. உங்க வீட்டுல மரம் இல்லாமலா போச்சி..”
“இது செவ்வெளநி காயி.. அந்த மரம் உங்க மாமனார் கொயம்புத்தூர்ல இருந்து வாங்கியாந்தது.. இங்க யாரூட்டலயும் அது இல்லியே.. இதெல்லாம் குத்தம்னு சொல்லிட்டிருந்தா நாள்பூரா மத்தவங்க கூட சண்ட போட்டிட்டு தான் இருக்கணும்.. அதுக்கு எங்க நேரம் இருக்கு.. அந்த மனுசன் பழயத துன்னுட்டு வர்றதுக்குள்ள ரெண்டு பொந்து தார் சுத்தி வைக்கணும்..” என்றவாறு உள்ளே சென்றாள்.
2
மதிய உணவிற்கு பின் வீட்டிற்கு முன் சிமெண்ட் பாவியிருந்த வராந்தாவில் அமர்ந்து பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தேன். மழை ஒய்ந்திருந்தது. கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த பாட்டி அதைக் கழற்றிவிட்டு மழையில் நனைந்திருந்த சாலையை ஒளிரச் செய்யும் பசுமஞ்சள் நிற சூரியனின் கதிர்களை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் கசிந்த நீரை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். மண் சாலையில் நீர் சுழித்து தனக்கான வழியினைக் கண்டடைந்து சிறு ஓடையாகி சென்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் உருவாகி மறையும் நிரந்தர ஓடையில் என்னென்னவோ அடித்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தன. தூக்கி எறியப்பட்ட, மறைத்து வைக்கப்பட்டவற்றை வெளிக்கொணர்வது போலவே இருப்பவற்றையும் அடித்துக் கொண்டு செல்லும். ஆங்காங்கே மண்ணிலிருந்து வெளிக்கிளம்பி தெரிந்த கருங்கற்கள், மண்ணிலிருந்து பூத்திருப்பவை போல் கருத்து பளபளத்தன. தும்பிகள் குறுக்கும் நெடுக்குமாக பறந்து தெரு முழுவதையும் நிறைத்துக் கொண்டிருந்தன. அவள் புன்னகைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“என்ன ஆயா.. மழ நின்னுடுச்சினு சிரிக்கிறயா..” என்றேன்.
“அந்த காலத்துல இந்த வெய்யில் வர்றதுக்கு தவம் கெடப்பாங்க.. புரட்டாசில விட்டு விட்டு பெய்யுற மழ, அர்ப்பிசில விடாம கொட்டும்.. கார்த்தி மழைல கால்குழில தண்ணி வந்திடும்.. அதுனால மழைக்கு நடுவுல அடிக்கிற வெய்யில்ல எல்லார் வீட்டுக்கு முன்னாடியும் நமுரடிச்ச பாவ உலத்துறதும், புதுப் பாவு புடிக்கிறதும்னு மக்க ஓட்டம் பிடிப்பாங்க.. மழ நிக்கிற நேரத்த இருப்பாணி அடிக்கிற சத்தத்த வெச்சி கண்டுபிடிச்சிடலாம். மழ திரும்ப வந்ததும் பாவ சுத்தி தோள் மேல வச்சிக்கிணு ஓடுவாங்க.. மழ நின்னதும் திரும்ப பாவு விரிக்க ஒடியாருவாங்க..”
“அதெல்லாம் முடிஞ்சி போச்சி.. இனிமே மழ பெஞ்சாலும் கொட பிடிச்சிக்கினு வேலைக்கு போவாங்க..”
“உங்க தாத்தா வேலைக்கு போறப்ப அவர் கூட இன்னும் மூனு நாளு பேரு தான் ஊர்ல பேக் மாட்டிக்கினு கிளம்பிறவங்க இருந்தாங்க.. அவரு வேலைக்கு போனாலும் தறியயும் விடல.. வீட்டில இருக்கிற நாளுங்கள்ள வெடிகாலைலேயே தறிக்காரங்க அவர் பாவு தொட்டு விரிக்கணும்னு கூப்பிட வந்திடிவாங்க. உங்கப்பனுக்கு தறின்னா என்னனு தெரியுமா.. கெக்கள குடும்பத்துல வந்து பொறந்தானே.. அவன் கைக்கு எழயோட வச வரவே இல்ல. உனக்கு தறி வராதுடான்னுட்டாரு அவங்கப்பா..”
“அப்பா ரயில் பேக்டரிக்கு வேலைக்கு போய் நல்லா தான வந்துட்டாரு.. ”
“ம்ம்கும்.. உங்கப்பன நீ தான் மெச்சிக்கனும்.. இந்திரா காந்திய சுட்டதுக்கு பொறவு அவன் வேலைக்கு போன காலத்துல கூட நம்ம ஊருல தறிக்கு கொறவு இல்ல.. கரண்ட் தறிங்க வந்து கரண்ட் பத்தாம போயி போட்டவன்லாம் எடுத்துட்டு கைத்தறிக்கே வந்துட்டாங்க.. ஆனா அப்பவே வரும்படி கொறஞ்சி போச்சி.. புது வருஷத்தில பெருமந்தூரிலயும் ஒரகடத்திலயும் இந்த கம்பெனிக்காரனுங்க வந்தப்பறம் இங்க தறி ஓட்டம் கொறஞ்சி இப்ப சுத்தமா இல்லாம போச்சி.. மாடு கன்னுங்க, கோழிங்க, தோட்டம் எல்லாம் வெளங்காம மூதெவி பிடிச்ச ஊராச்சி.. தெருவில போறதுல பாதி பேரு எந்த ஊருக்காரன் எவன்னு புடிப்பு இல்லாம போச்சி”
“எல்லாரும் சம்பாரிச்சி நல்லா தான் இருக்காங்க.. நீ தான் நொட்ட சொல்லிட்டிருக்க.. நம்ம சுதாக்குட்டி அப்பா ஹாங்காங்க் போயிருக்காராம் கம்பெனி விஷயமா..”
“யாரு சேகரா…”
“ஆமா.”
“அவங்கப்பா மணிய உங்க தாத்தா தான் யாராருக்கிட்டயோ சொல்லி பஸ் டிப்போல சேர்த்து விட்டாரு.. அவன் ஆடின ஆட்டத்துக்கு குடி இன்னா பொண்ணுங்க இன்னா.. மொட்டப்பய்யனா இருந்தவன் எங்க உருப்படப் போறானு அவங்க அப்பாவிலே இருந்து எல்லாரும் சொன்னாங்க.. ஆனா உங்க தாத்தா கையப் பிடிச்சி தூக்கி விட்டப்றம் ஆளே மாறிப்போனாம்.. அவன் மேல இருந்த கேஸெல்லாம் சரி பண்ணி வேலைக்கு போனப்பறோம் குடும்பம் குட்டினு கௌரதயா போனான்…” சிறிது இடைவெளி விட்டு “இன்னைக்கு உனக்கு ஒரு வேல கேட்டு போனா இந்த சேகரு அவன் படிச்ச படிப்புக்கு இங்க வேலை இல்லனு சொல்றான்.. படிப்ப பாத்தா வேல நிக்கிது.. வேல அவனவன் கையில இல்ல இருக்கு”
“அது மெக்கானிக் கம்பெனி ஆயா.. அங்க எலக்ட்ரானிக்ஸ் வேல இருக்காது”
“நாயக்கரு பள்ளிங்களாம் இங்க வந்து தொழில படிச்சி தறிபூந்து நெச்ச நெசுவு ஏறாமலா போச்சி.. செஞ்சா கத்துக்க முடியாதா வேல என்னா வேல..” என்றாள்.
3
இரவெல்லாம் பெய்த மழை காலையில் ஒய்ந்திருந்தது. புது உற்சாகத்துடன் கிளம்பியிருந்த சூரியன், சற்று அதிக வீரியத்தோடு கதிர்களை வீசிக்கொண்டிருந்தான். காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் உடல் புழுக்கத்தை உணர்ந்தது. மெதுவாக நடந்து புளிய மரத்தோப்பிற்கு ஏனென்று தெரியாமல் வந்து சேர்ந்திருந்தேன். அடிப்பருத்த யானைப் புளிய மரத்தின் கீழிருந்தே இரண்டாக பிரிந்து சென்ற கனத்த கிளைகளின் நடுவே சாய்ந்து நின்று கொண்டு எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தேன். சிறுவர்கள் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மண்ணில் வரையப்பட்ட வட்டத்தில் ஆளுக்கொரு ஒரு சிறிய கோலியை பந்தயமாக கட்டி ஆடும் ‘மேண்டா’ ஆட்டம். சற்று தொலைவில் சுந்தரம் மாட்டின் மீது கை வைத்துக் கொண்டு வந்து கைத்தடிமன் இருந்த நொச்சி மரத்தில் அதனைக்கட்டுவது தெரிந்தது. என்னை விட இரு வயது சிறியவன் என்றாலும் முதிர்ச்சி நிறைந்தவனாகவே எப்போதும் எனக்கு தோன்றுவது உண்டு.
“சுந்தரம்.. சுந்தரம் டேய்…”
தலையை உயர்த்தியவன் மரத்தின் இடைவெளியில் நின்றிருந்தவனை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்தது ஏமாற்றமாக இருந்தது. சிரித்துக் கொண்டே என்னை நோக்கி வந்து “ம்ம் பசங்களொட விளாட வந்தியா..” என்றான்.
சிறுவர்களோடு அவ்வப்போது சேர்ந்து விளையாடும் வயதான பெரியவர்களும் இன்னும் இருந்தார்கள். பெரும்பாலும் தோற்றுவிட்டு செல்லும் அவர்களின் முகம் உற்சாகமாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.
“அதெல்லாம் முடிஞ்ச காலம்.. காலேஜ் எப்ப முடியுது”
“இது அஞ்சாவது செமஸ்டர்..”
“அப்றம் என்ன செய்யறதா யோசன வச்சிருக்க..”
“ஒன்னும் தெரியல.. அப்பா வேலைக்கு தான் போகனும்னு சொல்றாரு.. “
“ஹாஹாஹா… அவரே வேலைக்கு போயி புடிக்காம தான வந்துட்டாரு.. நீ மட்டும் வேலைக்கு போகணும்னு கண்டிஷனா பேசுறாரு..?”
“ஆமா.. தறி வேலைல எல்லாம் அவரு சவுகரியம்.. நெனச்ச நேரம் எந்திரிச்சிடலாம்.. ஒரு வேலைக்கு போயிட்டா முடியுமா.. இன்னைக்கு அதெல்லாம் நடக்காது.. வேலையாவது எட்டு மணி நேரத்துல விட்டுடறான், இங்க நாள் பூரா குடும்பத்தோட குழிக்குள்ள கெடந்தாலும் பத்த மாட்டேங்குது.”
“ம்ம்.. நான் அடுத்த வாரம் சென்னைக்கு போகலாம்னு பாக்குறேன்.. அங்க இருந்து வேல தேடி பாக்கணும். அந்தப் பக்கம் கம்ப்யூட்டர் கம்பெனி நெறய வந்திருக்கு..”
“ம்ம்.. அங்க யாரு இருக்கா..?”
“ஃபிரன்ட்ஸ் நாலஞ்சி பேர் இருக்கானுங்க.. சென்னையும் ஒன்னும் புதுசில்ல அங்க தான படிச்சேன்..”
“ஆமா…”
“சென்னைக்கு போறது பாட்டிக்கு புடிக்கல.. நாம என்ன செட்டியாராடா தொழில தேடி வேற ஊருக்கு போவ.. இங்க இருந்து பொழைக்க முடியாதவா இத்தன தலமுறயா இருந்தாங்கன்னு கேக்குறாங்க..”
“அவங்க வேற காலத்து ஆளு..”
“ஆமா.. அப்பாவுக்கு சம்மதம் தான்.. அம்மா தான் யோசிக்கிறாங்க.. இவ்வளவு நாளா வெளிய தான தங்கி படிச்ச.. திரும்ப போகனுமான்னு.. வேல கெடச்சாலும் திரும்ப வரமுடியாதுங்கிறதுனால அவங்க இங்கயே எதாச்சும் பாருங்கிறாங்க.”
“ம்ம்ம்”
“வீட்டில அடஞ்சி கெடக்குறா மாதிரி இருக்கு எனக்கு.. ஆறு மாசமே பல வருஷமா போகுது”
“ஆமா.. சும்மா இருக்கிறதும் வெறுப்படிக்கும்.. போயிட்டு சொல்லு.. அடுத்த வருஷம் நானும் வருவேனாயிருக்கும்…”
“எல்லாரும் வெளியே வந்து தான ஆகணும்.. “பின்னால் சிறுவர்களின் ஒலி திடீரென்று மேலெழும்பி அடங்கியது.
“பாக்கலாம்..”
“சாயங்காலம் படத்துக்கு போலாமாடா.. பாபுல கில்லி வந்திருக்காம்..”
“புது அச்சி மரம் கட்டறதுக்கு பாய் கிட்ட வர்றேனு சொல்லியிருந்தேன்.. நீ போயிட்டு வா..”என்றவாறே புளியம்பூவை பறித்து வாயில் போட்டுக் கொண்டான்.
“சரி உக்காரு கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்..”
“நூல் எழைக்கனும்.. இரண்டு டப்பா சுத்திட்டு கடைக்கு போயிட்டு வர சரியாயிருக்கும்.. நான் வர்றேன்” என்று சொல்லிக்கொண்டே திரும்பி நடக்க தொடங்கினான்.
4.
மிகப்பெரிய கரிய மலையினுள் இருக்கும் குகைக்கு சென்று கொண்டிருந்தேன். குகையினுள் செல்லும் பல நூறு வழிகள், அதனை ஒரு பெரிய குளவிக்கூடு போல் மாற்றியிருந்தது. பாதைகளில் சில ஓளி வீசிக் கொண்டும் பல வழிகள் இருண்டும் இருந்தன. ஒவ்வொரு வழியிலும் ஒருவர் நின்று கொண்டு உள் நுழைபவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிப்பது தெரிந்தது. வெள்ளை கருப்பு சிவப்பு மஞ்சள் பழுப்பு நிற தலைமுடிகளுடன் உயரமாக, பருத்து, குட்டையாக, கோட் சூட் அணிந்து, சிரித்துக் கொண்டும், வேட்டியும் மேல்கோட்டும் அணிந்தும், தலையில் தலைப்பாகையுடனும், கையை உயர்த்தி ஆரவாரமிட்டுக் கொண்டும், அடிப்பதற்கு கையை தயார் நிலையில் வைத்திருப்பது போலும், முறைத்துக்கொண்டும், போலிப்புன்னைகையுடனும், கையில் துப்பாக்கியுடனும், தலை குனிந்து வணங்கியும், கை கூப்பியும், கை குலுக்கியும், இடை வரை வளைந்தும் என அவர்கள் வெவ்வேறு விதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வெள்ளை, கருத்த, சிவந்த, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமான விதவிதமான பெண்களும், ஆண்களும் வரிசையாக வெவ்வேறு பாதைகளில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்ட சிலர் குகைக்குள் அமர்ந்திருப்பதும் அவர்களது மேஜையின் ஓரத்தில் மரங்களும் மலைகளும் சிறியதாக அமைந்திருப்பதும் தெரிந்தது. குட்டையானவர்களும் தட்டை மூக்கு கொண்டவர்களும் உணவுகளை பரிமாறுவதைக் காண முடிந்தது. உள்ளே வருபவர்கள் விசேஷமாக வரவேற்கப்பட்டனர்.
தள்ளிவிட்டும் உள்ளே செல்லாமல் நின்ற எனது கன்னத்தில் ஒரு பெண் ஓங்கி அறைந்தாள். அவள் மிகவும் பருத்து, பிதுங்கிய கண்களும், மிகப்பெரிய வயிறும், தொங்கிய முலைகளும், கோரைப்பற்களும் கொண்டவளாக இருந்தாள். ஏளனத்துடனும் வெறுப்புடனும் என்னை நோக்கி சிரித்து பின் வசை பாட தொடங்கினாள். என் பின்னால் இருந்த கூட்டம் என்னைத்தள்ளியதில் குகைக்குள் காலெடுத்து வைத்தேன். பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்த முள் கால்களில் குத்தி உள் நுழைந்து வயிற்றினைக் கடந்து தலையை அடைந்தது. “ஆஆ” என்ற அலறல் எல்லா பக்கத்திலுமிருந்தும் ஒலித்தது. பதறி கண்களை திறந்து எழுந்து கொண்டேன். நன்றாக விடிந்து விட்டிருந்தது.
மீண்டும் “ஐய்யோ…” என்னும் அலறல். மிக பரீட்சயமான குரலாக ஒலித்தது.
“அந்த பாவிப்பெத்த மாடு முட்டிருச்சே….” என்று அம்மா அலறியது கேட்டு நான் செல்வதற்குள் அப்பாவும் தங்கையும் வந்துவிட்டிருந்தனர்.
அம்மாவை முட்டிய மாடு அசையாமல் பிதுங்கிய கண்ணுடன் நின்று கொண்டு மூச்சு சத்தத்தினால் காய்ந்த புளியஞ் செத்தைகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தது. அப்பாவிற்கு அதை விரட்டுவதற்கு துணிவு ஏற்படவில்லை. சத்தம் கேட்டு வெளியே வந்த சுந்தரத்தின் அம்மா மாட்டை கையினால் ஒரு அடி கொடுத்து இழுத்துக் கொண்டு சென்று கட்டினாள்.
“சனியன் புடிச்ச மாட்ட கால ஒடைக்காம நிக்கிறீங்களே.. மாட்ட விட்டு முட்டி சாகடிக்க பாக்கறாங்க..ஐயோ ஐயோ.. “என்று அலறியது எனக்கு சற்று மிகையாக தோன்றியது. ஆனாலும் அம்மாவின் கூப்பாடு ஓயவில்லை.
மாட்டை கட்டி விட்டு வந்தவர் “எங்கக்கா இடிச்சிது.. அடிகிடி எதாவது பட்டுச்சா…? அது இடிக்கிற மாடு இல்லக்கா..” என்றாள்.
அம்மாவின் ஆங்காரம் தலைக்கு மேல் ஏறியது அருகிலிருந்த கல்லை எடுத்து அந்த மாட்டை நோக்கி விட்டெறிந்தாள்.. “கண்ணு முன்னாடி இடிச்சி விழுந்து கெடக்குறேன்.. மாடு இடிக்காதுனு கூசாம சொல்றியே.. இப்படி மாட்ட அவுத்து விட்டுட்டு புருஷனும் பொண்டாட்டியும் உள்ள என்ன பண்ணிட்டிருக்கீங்க.. தெருவுல தோட்டத்துல யாரும் நடமாட கூடாதா.. சும்மா போறவளா வந்து இடிக்கிற மாடு என்ன மாடு.. இல்ல எல்லாத்தையும் வெலக்கி வாங்கிட்டீங்கனு நெனச்சிக்கிட்டு ஆடுறீங்களா.. “
“அப்படிலாம் இல்லக்கா…ஏன் இப்பிடி பண்ணுச்சினு தெரியல”
“நீ வேணும்னே இடிக்கட்டும்னு அவுத்து விட்டுட்டு உள்ள போய் உக்காந்துட்ட. இப்ப வந்து கேக்கிறீயா… கை காலுக்கு ஏதாவது ஆகிருச்சினா நீ வந்து காலத்துக்கும் வேல செய்வியா எனக்கு.” சத்தம் கேட்டு அதற்குள் மாணிக்கம் அங்கு வந்து சேர்ந்தார்.
“என்னமா ஆச்சி.. ஒரே சத்தமா இருக்கு. கை காலெல்லாம் மண்ணா கெடக்குதே…” என்றார் மாணிக்கம்.
“உங்க வீட்டு மாடு இடிச்சி விழுந்து கிடக்கறா.. இப்ப சந்தோஷமா உனக்கு..” என்றார் அப்பா..
“என்ன இப்படி பேசுறீங்க.. அடி எதாவது பட்டிருக்கானு பாருங்க.. ஆசுபித்திரிக்கு போவோம்..”
அதற்குள் எழுந்து நின்ற அம்மா.. “ மாட்ட கட்டி போடாம விட்டுட்டு அப்றோம் என்ன ஆசுபித்திரிக்கு.. “
“கட்டி தாம்மா போட்டுருந்தோம்.. எப்படியோ அவுத்துக்கினு வந்து இடிச்சிருச்சிம்மா.. கை கால ஒதறும்மா.. ஒன்னும் ஆகாது”
“இந்த கேடு கெட்ட மாட்டுக்கு சாவு வராத நிக்குதே.. ஒழுங்கா இத அடிச்சி வெரட்டுங்க.. இல்லனா போலீஸ்ல கேசு குடுப்பேன்..”
“மாடு லச்சுமிம்மா.. அப்படி சொல்லாதீங்க..” என்றார் மாணிக்கம்.
“எனக்கு லச்சுமி இல்லை.. எனக்கு அது எமனா வந்து சேந்திருக்கு…”
“ஐயயோ அப்படி சொல்லக்கூடாதும்மா.. அது வாயில்லாதது.. உங்க வீட்டிலயும் மாடு கன்னுலாம் இருந்தது தானே.. இந்த வீட்டு பின்னாடி எத்தன மாடுங்க ஐசுவரியமா நின்னிருக்கும்.. இதோ அண்ணன இதே வீட்டு மாடு முட்டி தள்ளிருக்கே..”
“அதுனால தான் மாடே வேனாம்னு எல்லாத்தையும் இவன் பொறந்த ரெண்டாம் வருஷமே வித்து ஒழிச்சேன்… “
“காசி போயும் கருமம் தீரலங்கிறா மாதிரி, இப்ப உங்க வீட்டு மாடு வந்து எங்கள முட்டிக்கிட்டு இருக்கு..” என்றாள் அம்மா.
சத்தம் கேட்டு மெதுவாக சுவரைப் பிடித்துவாறே பாட்டி வந்து சேர்ந்தாள்.
“என்னடா மாணிக்கம் இங்க என்ன சத்தம் வேலய உட்டுட்டு வந்து.. நீ என்ன ஆபிசு காரனா, வேலய பாக்காம சத்தம் போட்டிட்டிருந்தா குடும்பம் வளருமா..?”
“கோமதியக்காவ மாடு முட்டிருச்சிம்மா.. அதான் இறங்கி வந்தாரு..” என்றாள் மாணிக்கத்தின் மனைவி
“யார.. “ என்று திரும்பி கை கால் சேலையில் மண் அப்பியிருந்த அம்மாவை உற்றுப் பார்த்து “உள்ள கூட்டிட்டு போயி என்னா ஏதுன்னு பாருடா.. போடாங்குறேன்” என்றார் அப்பாவிடம். அம்மாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு அப்பா வீட்டிற்குள் செல்வதைப் பார்த்துக் கொண்டு நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். தங்கச்சியும் அவர்களுடன் சென்று விட்டாள்.
“எந்த மாடுடா முட்டிச்சி..” என்று கேட்டை திறந்து கொண்டு பக்கத்து வீட்டில் மாடு கட்டியிருக்கும் தொழுவத்திற்கு மெதுவாக சென்றாள்.
பாட்டியின் மணம் தெரிந்ததும் மாடுகள் தலையை உயர்த்தி காதுகளை விடைத்து மூச்சினை இழுத்துவிட்டது.. பின்பு வாலை இருபக்கமும் சுழற்றி வீசி தலையை குனிந்து அவளை நெருங்க முயற்சித்தது.
“இந்த செவுலி மாடு தான் இடிச்சிருக்கா..”
“இவளா.. “ பாட்டி நெருங்கி சென்று தாடையை பிடித்தாள். கத்தரிப்பூ நிற நாக்கால் அவள் கையை நக்கியது. நான் தூரமாகவே நின்று கொண்டேன்.
“எனக்கும் ஒன்னும் புரியலம்மா.. கொழந்தைங்க வந்தா கூட சும்மா நின்னுட்டிருக்கிற மாடு எப்படி இடிச்சிதுன்னு தெரியல..” என்றார் மானிக்கம்.
மாணிக்கத்தின் மனைவி “என்னவோ பாட்டியம்மா.. கேசு கீசுனு சொல்லிட்டு போறாங்க..” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லடி.. இத்தன நாளா வீட்ட விட்டே வெளிய எறங்காதவ திடீர்னு வந்தா.. யாரோ புதுசா இருக்குதேனு தள்ளி வுட்டுருச்சி..நீ போயி பொழப்ப பாரு” என்றாள். மாணிக்கத்தைப் பார்த்து “ஒன்னும் நெனைக்காம வெய்யிலோட போயி பொழப்ப பாரு டா..” என்றாள். மாணிக்கம் அரை மனதுடன் திரும்பி என்னை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டினுள் நுழைந்தார்.
பாட்டி எல்லா மாடுகளையும் தொட்டுத்தடவி பேசிக்கொண்டிருந்துவிட்டு மெதுவாக நடந்து வந்து வெளித்தரையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டாள்.
மறுநாள் எழுந்ததுமே தயாராகயிருந்த பையை கொடுத்து அம்மா என்னை சென்னைக்கு வழியனுப்பினாள்.