கோவை செல்லும் ரயில் ஒன்பதரைக்குக் கிளம்பிவிடும். இப்போதே மணி எட்டு. வீட்டிலுருந்து ரயில் நிலையத்துக்கு செல்ல எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். முன் பதிவில்லாத பெட்டியில் வேறு செல்ல வேண்டும். சீக்கிரம் சென்றால் தான் இடம் கிடைக்கும். ஏற்கனவே பிந்திவிட்டது. இடம் கண்டிப்பா கிடைக்காது அப்படியே கீழே உக்கார வேண்டியதான் என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன். 

தோள் பையை அணிந்து கொண்டு வெளியே வரும்போது வாசலில் நின்ற தெரு நாய் ஒன்று என் காலில் வந்து முகர்ந்தது.

“ சீ போ நாயே, வெளியே கெளம்பும்போது வருவியா” என்று திட்டிக்கொண்டே பைக்கை எடுத்து கிளம்ப தயாரானேன்.

“ லே அது சாத்தா வாகனம் ல, அத திட்டாத “ என்று அம்மா நாய்க்காக பரிந்து பேசினாள்.

“ போம்மா உன் சாத்தாவுக்கு இந்த தெரு நாய் தான் கிடைச்சுதா? “ என்று வண்டியை நகர்த்தினேன்.

“ உன் கூடவே வரது சாமிதா ல,ரொம்ப பேசாம பாத்து பொய்ட்டு வா “

“ உன் சாமி என்னைக்காவது வந்தா பேசிட்டு சொல்றேன் மா, வரட்டா “ என்று ரயில் நிலையம் நோக்கிக் கிளம்பினேன்.

எப்படியோ எனக்காக ஒரு இடம் ரயிலில் இருந்தது.உக்கார்ந்து அம்மா சொன்னதை யோசித்தேன். சாமி என்று எங்கு இருக்கும். இருக்குமா. அந்தக் கூட்டத்தின் சத்தத்திலும், பக்கத்து சீட்டில் இருப்பவர் திறந்த சப்பாத்தி போட்டலத்தின் மணத்திலும் துளி கவனம் சிதற ஒட்டு மொத்தமாக ஓங்கி நின்றது ஒற்றை சிந்தனை தான். இது என்ன தேவை இல்லாத சிந்தனை. அது இருந்தா என்ன இல்லாட்டி என்ன. இருந்தா எங்க இருக்கும். தேவை இல்லாத மான ஓட்டங்களை கடக்க புத்தகத்தைத் திறந்து படித்துக்கொண்டே சென்றேன். வர வர கூட்டம் அதிகமாக. அப்படியே தூங்கிவிட்டேன்.

அதிகாலை வேலை ரயிலின் முன் பதிவில்லாத பெட்டியில் நசுங்கிய படியே தொடர்ந்த பயணம் திருப்பூர் வந்தபின் லேசாகியது. கூட்டத்தின் பெரும் பகுதி திருப்பூர் ரயில் நிலையத்தில் இரங்கியது. நெளிந்த போன பவுடர் டப்பா போல் என்னை உணர்ந்தேன்.  ஜன்னல் ஒர சீட்டில் இடம் கிடைக்கவே காலையின் புது காற்றை சுவாசித்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது. ரயில் பயணத்தில் பொது வகுப்பு பெட்டியில் பயணம் செய்வது நூறு புத்தக வாசிப்புக்கு சமமாகவே தோன்றுகிறது. அதுவும் இயற்கையை ரசிக்கிறேன் பேர்வழி என்று மூத்திர வாசம் வீசும் கழிவறையின் அருகில் நின்றபடி காலையை ரசித்தபடி பயணிப்பது ஒரு பேரனுபவம்.

நண்பனின் அக்கா திருமணம் நாளை தான். இன்று முழுக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. கோவை வர இன்னும் அரை மணி நேரம் உள்ளது அதற்குள் யோசித்து கொள்ளலாம் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன். கோவை வந்தும் ஒரு முடிவுக்கு வரவில்லை.  ரயிலை விட்டு இரங்கி வெளியே வந்து குளிக்கலாம் என்று ரயில் நிலைய போது குளியல் மட்டும் கழிவறைக்கு சென்றேன். நல்ல  வேளை குத்த வைத்து இருக்கும் கழிவறை உள்ளது. குத்த வைத்து கொண்டே சிந்திக்கலாம் என்ன செய்யவென்று.

தோள் பையை வெளியே  பாத்துகாப்பறையில் வைத்து விட்டு கழிவறையில் குத்த வைத்தேன்.கழிவறையின் வெளியே உள்ள கூட்டத்தின் குரல்கள் என் கவனத்தை ஈர்த்தன. எனக்குப் பிறகு என் இடத்தை பிடிக்க வெளியே ஒருவர் நிற்பது கதவின் கீழ் உள்ள சிறிய இடவெளியில் தெரிந்தது. பாவம் அவசரம் போல அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருந்தார் அந்த நபர். மேலும் வெளியே வைத்த பையின் நினைப்பும் வரவே வேறு நினைப்பில்லை. அப்படியே கழுவிவிட்டு வெளியே வந்து அந்த நபருக்கு துன்பதிலிருந்து விடுதலை அளித்துவிட்டு குளியல் அறை சென்று குளித்தும் முடித்தாகியது இன்னும் என்ன செய்ய என்ற முடிவுக்கு வரவில்லை.

தோள் பையை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தின் வெளியே வந்து ஒரு தேனீரும் வடையும் சாப்பிட்டு விட்டு அங்கு நின்ற பேருந்துகளை பார்த்தேன் சரி காந்திபுரம் போய் முடிவு செய்யலாம் என்று பேருந்தில் ஏறி காந்திபுரம் சென்று பேருந்து நிலையத்தில் நின்றவாறு யோசித்தேன். சரி மாலை வரை ஈஷா மய்யம் செல்லலாம் என்று தோன்றவே ஈஷா பேருந்து நிற்கும் இடத்துக்கு சென்று பேருந்துக்காக காத்துநின்றேன். 

நேரம்  எட்டு முப்பது இருக்கும் இன்னும் பேருந்து வர அரை மணி ஆகும் என்று பேருந்து நடத்துனர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.  மக்கள் அவரவரின் அன்றாடத்திற்கான ஓட்டத்தில் எந்த குறையும் இல்லாமல் பதறி பதறி ஓடிகொண்டிருந்தனர். பள்ளி கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், சீருடை அணிந்த ஊழியர்கள் என அங்குமிங்கிம் கூட்டம் அலயோடிக் கொண்டிருந்தது. வருவதும் போவதுமாக ஒவ்வொருவரும் ஓடி ஓடி தங்களுக்கான பேருந்துகளை பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். டீ கடைகளில் சிலர் தங்கள் எண்ணமெல்லாம் கையில் இருந்த கண்ணாடி கோப்பையில் குவித்து ரசித்து ரசித்து உறிஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர் கைபேசியை பார்த்தாப்படியே டீ குடித்தனர்.

சில பேருந்துகளில் பிறரை இடித்து முட்டி மோதி பேருந்தின் இருக்கைகளை தனதாக்க ஒரு பெரிய போர்க்களமே நடந்தது. இடங்களில் சிறிது பெரிது என்று இல்லை போலும், இடம் என்றாலே போட்டி தான் நடக்கிறது. பேருந்தில் இருந்து அரசாங்க வேலைகள் வரை. சிலர் மிக முரட்டுத்தனமாக பிறரை தாக்கி இடம் பிடிப்பதையும் சிலர் தன் இடத்தை பிறருக்கு கொடுப்பதுவும் நடந்தது.

“ மனுஷங்க மட்டும் தான் நண்பா போராட்டம் இல்லாம நிம்மதியா வாழுறானுக மத்த உயிருகள பாருங்க எப்படி போராடி வாழுதுன்னு “ என்று என் நண்பர் ஒருவர் சொன்னது தான் நியாபகம் வந்தது. இப்படியே என் வேடிக்கை தொடர தனியார் பேருந்து ஒன்றில் ஓடிய பாடல் என் கவனத்தை ஈர்த்தது. இளையராஜா அவர்களின் ஊரு விட்டு ஊரு வந்து பாடல் ஒலித்தது. அதை நோக்கி என் கவனம் திரும்ப பேருந்தின் பின்னால் நின்று கொண்டிருந்தார் ஒரு முப்பது வயது மிக்க வாலிபர். 

சிகப்பும் கருப்பும் கலந்து ஒரு டி சர்ட் அணிந்து இருந்தார். அதில் வரைந்த இருந்த ஓவியம் பல வித பூக்களை சேர்த்து வரைந்த கலவை ஓவியம். நீல நிற பாண்டும் வெள்ளை ஷூவும் அணிந்து நல்ல மிடுக்காக இருந்தார். நல்ல வாட்டமான உடல். நின்று கொண்டிருந்தவர் திடீரென தன் தோள்களை இருபுறமும் உளுக்கி தலையை இருபுறமும் ஆட்டி உதடை கடித்தப்படியே நடனம் ஆட தொடங்கிவிட்டார். தன் குதி கால்களை  வலது இடது என மாற்றி மாற்றி முன்னால் ஊன்றி இடுப்பை வளைத்து வளைத்து ஆடினார்.

அங்கு நின்ற எந்த மக்களை பற்றியும் அவரின் கருத்து செல்லவில்லை. தன் ஆட்டத்தில் மூழ்கி தன்னை மறந்து ஆடினார். சிலர் அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தனர் சிலர் அவர்களின் அவசரத்தில் அவரை விளக்கி விட்டு அவர்களின் பேருந்துக்கு ஓடினர். நடத்துனர் ஒருவர் வாயில் விசில் வைத்தப்படியே அவரை கண்டுகொள்ளாது தனியார் பேருந்தின் ஓட்டுனருக்கு சத்தம் கொடுத்து வண்டியை எடுக்க சொல்லி வண்டி சென்றது.

அவர் அப்படியே தலையை வெட்டிய படியே என் அருகில் வந்து நின்றபடி கேட்காத பாடலுக்கு தனது உடல் அசைவுகளை தொடர்ந்து கொண்டிருந்தார். பின் ஏதோ தோன்றவே அங்கிருந்து நகன்றுவிட்டார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஈஷா பேருந்து வந்து நிற்கவே நான் ஏறிக்கொண்டேன். அதிலும் கூட்டம் தான். ஒரு வழியாக ஏறி உக்கார்ந்துவிட்டேன். ஜன்னல் இருக்கையின் பக்கத்து இருக்க, கூட்டத்தில் இடம் கிடைத்தால் போதும் என்று உக்கார்ந்த பிறகு ஜன்னல் இருக்கயை பார்த்தேன். நடனமாடிய அதே நபர் என அருகில் உக்கார்ந்து உள்ளார்.

எனக்கு பயம் வரவே அங்கிருந்து எழுந்து விடலாமா என்று தோன்றியது. ஆனால் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன, எழுந்தால் ஒரு மணி நின்று கொண்டே செல்ல வேண்டும் ஆகவே வேறு வழியின்றி உக்கார்ந்து இருக்க முடிவு செய்தேன். அந்த நபர் வெளியே வேடிக்கப் பார்த்துக் கொண்டே இருந்தார், வண்டி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது. அந்த நபர் குழந்தை போல் தலையை வெளியே நீட்டி அருகில் செல்லும் பேருந்துகளின் பெயர்களை சத்தமாக வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

நடத்துனர் அங்கிருந்து “ யாருப்பா அது தலய உள்ளார எடுங்க “ என்று தன் கொங்கு தமிழில் சத்தமிட. 

வெடுக்கென தலையை உள்ளே எடுத்துவிட்டு “ சர்ணா சர்ணா… நீ பயப்படாம போண்ணா…நான் பாத்துக்குறேன் “ என்றார். 

சற்று நேரம் அமைதியாகி விட்டு “ வெளிய விடப்புடாது..வெளிய விடப்புடாது.. உங்க அப்பன் வீட்டு வண்டியா.. வெளிய விடப்புடாது ஆங் “ என்று உரக்க பேச ஆரம்பித்து விட்டார். அனைவரும் அவரை பார்க்க நடத்துனர் அவர் வெலையைத் தொடர்ந்தார். 

“வேற வேற சீட்டே சீட்டே “ என்று கூவிக்கொண்டே அனைவருக்கும் பயணசீட்டை கொடுத்துக் கொண்டிருந்தார். நானும் வாங்கிய பின் அவரிடம் கேக்கவே அவர் “ அண்ணா எங்கயாச்சு கொண்டு விடுன்னா “ என்று நூறு ரூவாயை கொடுத்தார். நடத்துனர் கண்டுகொள்ளாமல் “ எங்க போனும் “ என்று மறுபடியும் கேக்க “ குனியமுத்தூர் கூடுண்ணா “ என்று சீட்டு வாங்கி கொண்டார்.

“ சீட்ட பத்திரமா வைங்க, சீட்டு பத்திரம்”  என்று நடத்துனர் சத்தமிட. “ அண்ணா “ என்று என அழைத்து. “ அண்ணா சீட்ட பத்திரமா அங்க வச்சுக்க வா “ என்று தன் குறியை கை வைத்து காட்டினார் அந்த நபர். நடத்துனர் எந்த மாறுதலும் இல்லாமல் “ எங்க வேணா வையி ஆனா பத்திரமா வையி” என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார். “ அங்க வைக்கணுமாம்… அங்க வைக்கணுமா “ என்று பல்லை கடித்துக்கொண்டு பேசிக் கொண்டே வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.

திடீரென்று தன் குரலை இருக்கி “ சீட்ட பத்திரமா எல்லாரும் அங்க வைங்க அண்ணா, அங்க வைங்க, அங்க வைங்க “ என்று மீண்டும் கத்த ஆரம்பித்துவிட்டார்.

நடத்துனர் கோபமாடைந்து நான் இருந்த சீட்டின் பக்கம் வந்து “ யோ உனக்கு என்ன பிரச்சனை, ஒழுங்கா வர முடியாத? ஒழுங்கா கம்முன்னு வரன்னா இரு, இல்லன்னா இப்பயே இரங்கி போயிரு, சும்மா நொய் நொய் ணு கத்திக்கிட்டு, ஆள் வர வேண்டாமா “ என்று தன் கணீர் குரலால் அவரை நோக்கி ஆவேசமாக பேச அந்த நபர் தலையை வெட்டி வெட்டி “ ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவ இல்ல பார்மசி “ என்று பாட ஆரம்பித்துவிட்டார். கண்டக்டர் மீண்டும் சீரவே சுற்றி இருந்தவர்கள் “ அட விடுங்கண்ணே லூசு பய என்னத்தயோ பண்ணிட்டு போறான் “ என்று அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து நகற்றினார்கள்.

“ லூசு பயன்னு ஊரே சொன்னாலும் டேக் இட் ஈசி ஊர்வசி “ என்று மீண்டும் உரக்க பாடினார். கண்டக்டர் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து விலகிகொண்டார். இது நடக்கவே அனைவரும் என்னை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அனைவரின் பார்வையும் ஒரு போலவே திரும்பவே எனக்கு ஒரு திகில் படம் பார்த்தது போல வயிற்றை பிரட்ட ஆரம்பித்தது. தெரியாமல் உக்கார்ந்துவிட்டோமா? எழுந்து விடலாமா என்று மீண்டும் தோன்ற பல்லை கடித்துக்கொண்டு உக்காக்கார்ந்து வெளியே பார்த்தபடியே வந்தேன். ஒரு பதினைந்து நிமிடம் அந்த நபர் வெவ்வேறு பாடல்களை பாடிக்கொண்டு மீண்டும் மீண்டும் ஒரே செய்கையை செய்துகொண்டிருந்தார். 

அவர் ஏதேனும் வித்யாசமாக செய்து மீண்டும் ஏதாவது பெரிய தகராறு நடக்கும் என ஆவலோடு பார்த்த கூட்டம் சற்று நேரத்தில் ஒன்றும் நடக்காது போகவே சலிப்படைந்து அவரவர்கள் அன்றாட சிந்தனைகளில் மீண்டு இவரை மறந்தனர். இவ்வளவு தான் உங்கள் அக்கறையா? என்று என் மனம் அவர்களை பார்த்து பரிதாபம் கொண்டது. ஏதேனும் நடக்காதா எவரேனும் அடித்துக்கொள்ளமாட்டார்களா என்று தான் சாதாரண மனம் சிந்திக்கும் ஒன்றும் நடக்கவில்லையா தானாக சலிப்பை நோக்கி நகரும். இதுவே அன்றாட மன நிலை. சரி இதையெல்லாம் நீ சொல்வதற்கு நீ என்ன ஞானியா என்று என்னை நானே கேட்டேன். நான் ஞானி அல்ல ஆனால் நானும் அவர்களில் ஒருவன் தானே. எனக்கு

என்னை தெரியுமே நானே இவர்களின் அளவுகோள். 

இவ்வளவும் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று “ நண்பா “ என்று ஒரு குரல் என் சிந்தனை ஓட்டத்தை தடை செய்தது. யார் என்னை அழைத்தது என்று திரும்பிப் பார்த்தேன். அவன் தான். பதட்டத்துடன் “ஆங் சொல்லுங்க அண்ணே” என்றேன்.

“ எந்த ஊரு நண்பா “ என்றார்

“ கன்னியாகுமரிண்ணே “ 

“ ஓ அந்த கடல் நடுவுல ஒருத்தரு மூணு விரல காமிச்சுட்டு நிப்பாரே அவுரு ஊரா? மோசமான ஆளாச்சே அவரு “

இப்போது எந்த கேள்விக்கு பதில் சொல்ல என்று தெரியவில்லை. பொதுவாக “ ஆமாண்ணே “ என்று பதில் சொன்னேன்.

அவர் தன் விரல்களை ஒவ்வொன்றாக செய்கையுடன் காண்பித்து “ ஒண்ணுக்கு வந்தா இப்பிடி, ரெண்டுக்கு வந்தா இப்பிடி அதென்ன நம்பா மூணு விரலு.. நாமமா.

வடக்கு இருந்து எல்லாரும் தெக்க வாங்க உங்களுக்கு நாமம் போட்டு மறுபடியும் வடக்கவேஅனுப்பி வைக்கிறேங்குறரா அவரு? பாத்தியா நண்பா தமிழ் நாட்டுக்கு வடக்கயும் தெக்கயும் ஒவ்வொருத்தன் நமக்கு நாமம் அடிக்க காத்துட்டு இருக்கானுக, ஏமாளி நாமதான. இதுல்லாம் இந்த கண்டக்டர் அண்ணனுக்குத் தெரியுமா? கேட்டா பஸ்ஸ விட்டு இரங்குடோய்னு ஆடுவாரு. லூசாமாம் லூசு “ என்று தன் போக்கில் பேசிக்கொண்டே சென்றார். பேசி முடித்துவிட்டு தலையை வெட்டி வெட்டி ஆட்டிக்கொண்டு வெளியே வேடிக்கையை தொர்ந்தார்.

என் அருகில் நின்றவர் “தம்பி அவன்ட பேச்சு குடுக்காத “ என்று நாசுக்காக சொன்னார். இது அவருக்கு கேட்டு விட்டதுபோலும் “ அவர்ட்டயே பேசு நண்பா ஒன்ன பெரிய அம்பானி ஆக்கிருவாரு “ என்று சொல்லிவிட்டு ஜன்னலுக்கு வெளியே த்தூ என்று துப்பினார். இவர் எனக்கு அடி வாங்கி கொடுக்காமல் விடமாட்டார் என பயம் அதிகமாகியது. நல்ல வேலை இவர் சொன்னது நின்றவருக்கு கேக்கவில்லை.

சற்று நேரம் உடலை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் பேச வேண்டாம் பேச வேண்டாம் என்று வேண்டிக்கொண்டே இருந்தேன். வேண்டுதல் பலிக்கவில்லை. “ நண்பா “ என்று மீண்டும் அந்த குரல் கேட்டது. 

“இப்போ எங்க போற நண்பா?” என்றார். பதில் சொல்லவா? வேண்டாமா? சொன்னால் அருகில் நிற்பவர் கோபித்துக்கொள்வாரே என்று பயந்துகொண்டே அவரைப் பார்த்தேன். அவர் கண்டு கொள்ளாமல் திரும்பிவிட்டார். நான் அப்படியே இவரைப் பார்த்து “ ஈஷா போறேன் அண்ணே “ என்றேன்.

“ ஓஹோ “ என்று சிரித்துக்கொண்டே ஜன்னலை நோக்கித் திரும்பிகொண்டார். ஏதாவது யோசிக்கிறாரா. சட்டென்று திரும்பி “ ஏன் நண்பா அங்க ஒரு ஆளு உள்ள இருந்து வெளிய வந்து வானத்த பாத்துட்டு அப்படியே கண்ண மூடி இருக்காரே அது எதுக்க்குன்னு ஒனக்கு தெரியுமா?  “

“ தெரிலியே அண்ணே “ என்றேன்.

“ தெரியல இல்ல “ என்று வாயை கூவித்து முன்னும் பின்னும் தலையை ஆட்டினார்.

“அப்போ எதுக்கு நண்பா அங்க போறீங்க?” இதுக்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. பொத்தாம் பொதுவாக “ சும்மா பாக்கலாம்னு தான் அண்ணே “ என்றேன்.

“நண்பா எங்க எத தேடணும்னு எவனுக்கும் தெரியாதுல்ல நண்பா? தொலச்சத தேடுறேன்னு இருக்குறத தொலைக்க அலையுறானுக. அந்த ஆளு என் அப்படி வானத்த பாக்குறான்னு அவனுக்கும் தெரியாது அவன என் பாக்கனும்ன்னு இவனுங்களுக்கும் தெரியாது. பள பளன்னு பாலிஸ் போட்டு வச்சா அழுகுன பீய கூட வாய பொளந்துட்டு பாப்பானுக நண்பா. “ இவரது குரல் உயரவே அனைவரும் எங்கள் இருக்கையை திரும்பி திரும்பி பார்த்தார்கள். அருகில் நிற்பவர் என்னை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டர். 

இவர் நிறுதாமல் தொடர்ந்தார் “ நண்பா வடக்க இல்ல தெக்கயும் இல்ல மெக்க கிளக்கயும் இல்ல. இங்க இருக்கு நண்பா எங்கயும் இருக்கு நண்பா, இப்போ இருக்கு நண்பா, எப்போவும் இருக்கும் நண்பா.வா வா பக்கம் வா..பக்கம் வர வெக்கமா..மன்மத மோகத்திலே..ஹேய் ஹேய் ஹேய்..வாலிப வேகத்திலே ஏங்குது இளமை..இன்பம்தரும் பதுமை..இனிமை காண வா.. “  பேசிக்கொண்டே இருந்தவர் பாட ஆரம்பித்துவிட்டார். இப்போது இன்னும் உக்கிரமாக உடலை முன்னும் பின்னும் ஆட்டி பாட ஆரம்பித்துவிட்டார்.

இது என்ன போதனை என்று புரியவில்லை. எனக்கு அவரிடம் பேச இப்போது ஆவல் தோன்றியது. ஆனால் பயம் கவ்வியது இருந்தும் தைரியத்தை வரவைத்துக்கொண்டு கூப்பிட்டேன். என்ன இது வாக்குள்ளேயே முணங்குகிறேன். கூப்பிடு கூப்பிடு என்று எனக்குள்ளேயே ஊக்கமூட்டி “ அண்ணே “ என்று அழைத்தேன். சற்று சத்தமாக கூப்பிட்டுவிட்டேன் போலும் அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர். அவன் என்னை நோக்கி திரும்பி தலையை என்ன என்று ஆட்டினான்.

“ அண்ணே நீங்க? “ என்றேன்.

“நானா” என்றவர் பேருந்து நிற்கவும் வெளியே எட்டி பார்த்தார் அங்கு ஒரு நாய் தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தது. இவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சட்டென்று எழுந்து வெளியே இறங்கி சென்றுவிட்டார். அவர் இடம் காலியாகவும் நான் ஜன்னல் ஓரத்திற்கு சென்று அவர் செய்வதை பார்த்தேன். அந்த நாயின் அருகில் சென்றவர் என்னை நோக்கி திரும்பி “ நண்பா அது நான்தான் “ என்று சொல்லிக்கொண்டே நாயை கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். பேருந்து நகரவே அந்தக் கடைசி வரிமட்டும் நெஞ்சில் நிற்க அவர் உருவம் மறைந்து காட்சிகளும் நகர ஆரம்பித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *