அந்த ஆயிரம் வாலா சரவெடி வெடித்து முடித்ததும் குழந்தைகள் அனைவரும் குதூகலத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்து சிரித்துக்கொண்டே வெளியே வந்த சுப்பையா கையில் பத்தியோடு நின்ற மாடசாமியை பார்த்துச் சொன்னார் “ லேய் மாடா வள்ளி கிளோஸ் “. புரியாமல் விழித்துகொண்டிருந்த நின்ற மாடசாமியிடம் மீண்டும் அழுத்தி சொன்னார் “ ஏலேய் வள்ளி போய் சேந்துட்டால “.

ஆயிரம் வாலா வெடித்து வெளிவிட்ட புகையை கிழித்துக்கொண்டு விறுவிறுவென்று வீட்டிற்குள் ஓடிச்சென்றான் மாடசாமி. வீட்டிற்குள் நுழைந்ததும் வாசலை ஒட்டி இடது பக்கம் இருந்தத் திண்ணையில் துணி விரிப்பில் விறைத்துக் கிடந்த வள்ளியை பார்த்தான். அவளின் அரையில் கிடந்த பாவாடை நழுவி கீழே சென்றிருந்தது. இடுப்புக்கு கீழே துணி இல்லாமல் கிடந்தாள். அவளின் வயிறு உப்பிப் போய் ஒரு பக்கம் சரிந்திருந்தது. வெகு நாட்களாக கிடையில் கிடந்ததால் தோல் சுருங்கி கழுத்து எலும்பு வெளியே தள்ளி மெலிந்த கை கால்களுடன் கிடந்த அவளின் முகத்தை அப்போது தான் அழகானதாக உணர்ந்தான் அவன். மூத்திர வாடை அவளைச் சுற்றி வீசிக்கொண்டிருந்தது. அவளின் அரை குறை நிலையை பார்த்து அருகே கிடந்த பழைய சேலையை எடுத்து மூடினாள் சுப்பு.

வலது பக்க திண்ணையில் கிடந்த நார் கட்டிலில் படுத்திருந்த பிச்சம்மா கிழவியை எழுப்பினாள் சுப்பு. “ ஏத்தே, ஏத்தே, இங்கேருங்க வள்ளி போய்ட்டா”. கிழவி லேசாகக் கண்ணைத் திறந்து சுப்பு சொல்வதை என்னவென்று கேட்டு நடுங்கியபடி எழுந்து உக்கார்ந்தாள். அவளின் தோளில் கிடந்த அழுக்கடைந்த வெள்ளை காடாச் சீலை நழுவி அவள் மடியில் விழ சுருங்கி தொங்கிய முலைகள் ஆடின. விழுந்த சீலையை மீண்டும் அவளுக்கு சரியாக போட்டுவிட்டாள் சுப்பு.

 “ என்னட்டி பொய்ட்டளா, பாதவத்தி மவ எவ்ளோ சங்கடப்பட்டுட்டா, என்ன அவட்ட கூட்டிட்டு போட்டி “ என்று எழுந்து நடுங்கிய படியே நடக்க ஆரம்பித்தாள். நடக்க நடக்க அவளின் அழுகை உருக்கொள்ள ஆரம்பித்தது. “ எம்மா..என் ராசாத்தி.. என் அலகியே… என் சாமி போய்டியாட்டி… எட்டி என் தங்கமே ஒரு வாய் சோத்த எனக்குன்னு எடுத்துத் தர நீதானட்டி இருந்த. யே அய்யா நான் என்ன செய்வேன். எம் பிள்ளைக்குன்னு நான் என்னத்த செஞ்சேன். ஒண்ணத்தையும் பாக்காம இப்படி போய்ட்டீய என் ராசாத்தி “ என்று தலையிலும் மாரிலும் அடித்தபடி வள்ளியின் பிணத்தருகே சென்று உக்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

அவளின் அழுகை சத்தம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும் அங்கே வர வைத்தது. அங்கே நிற்க முடியாமல் வெளியே சென்றுவிட்டான் மாடசாமி. வெளியே பீடி பிடித்துக்கொண்டிருந்த சுப்பையா அவனை பார்த்ததும் வாயில் இருந்த பீடியை எடுத்துவிட்டு இரண்டு முறை இருமி கஷடப்பட்டு தன் நெஞ்சில் இருந்த சளியை வாய்க்கு கொண்டு வந்து அதை பக்கத்தில் ஓடிய சாக்கடையில் சளுக்கென்று துப்பினார். பின் அவனை பார்த்து “ கடைசில நீ வச்ச வெடியால தான் அவ போவணும்னு இருக்கு “ என்று சிரித்தார்.

கோழி குப்பையை கிளறுவது போல் தன் நினைவுகளை கிளறி வள்ளியின் நினைவுகளை தொகுக்க ஆரம்பித்தான் அவன். வள்ளி அவனது அத்தை. 

மாடசாமியின் தாத்தா ஆறுமுகத்திற்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பொன்னம்மாவுக்கு இரண்டு மகன்கள். இசக்கிமுத்து மற்றும் சுப்பையா. இரண்டாவது மனைவி பிச்சம்மாவுக்கு மூன்று குழந்தைகள். இசக்கியம்மா, இசக்கியப்பன் மற்றும் வள்ளி. மற்ற குழந்தைகளை நல்ல ஆரோக்கியமான நிலையில் வளர வள்ளி மட்டும் பிறப்பில் சாதாரணமான குழந்தையாக பிறந்தாலும் வளர வளர அவளின் உருவமும் செயல்பாடுகளும் அவளை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்தியது. 

அவளின் உச்சி மண்டையில் மூடிகள் உதிர்ந்து வழுக்கை தலைபோல் ஆனது. பருவ வயதிலேயே அவளது உடற்தோல் சுருங்கி கிழவி போல் தோற்றம் வந்தது. அவளது முகம் கோவில் கொடையில் நேமிதத்திற்கு விடப்படும் இசக்கியம்மன் ஓட்டு சிலையின் முகம் போல் ஆனது. சீரற்ற பல் வரிசையில் ஒவ்வொரு பல்லுக்கும் இடையில் பெருத்த இடைவெளி உருவாகியது. பற்கள் அனைத்தும் மஞ்சள் நிறம் பெற்று பாசி பிடித்த ஆற்றோர துணித்துவைக்கும் கல் போல் ஆனது.  கீழ் உதடு தேவைக்கு மேல் கீழே தொங்க எப்போதும் அவளால் வாயை மூட முடியாது. இமை முடிகள் போதிய அளவுக்கு வளராமல் இருந்தும் இல்லாமலும் செம்பட்டை நிறமாகியது. இமைகள் பெரிதும் வெளியே தெரியாததால் அவளின் உணர்வுகளை பிறர் தெரிய வாய்ப்பில்லாமல் ஆனது.

அவள் திறந்த வாயோடு தான் எங்கும் நிற்பாள். கீழ் உதட்டில் இருந்து நில்லாது சொட்டும் மழைத் துளி போல் எச்சில் வழிந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது நாக்கை நீட்டி எச்சிலை ஸ்ஸ்ஸ் என்று உள்ளே இழுத்துக்கொள்வாள். முதுகு லேசாக கூன் விழுந்து ஒட்டிய மார்போடு ஒல்லியாக சோளக் கொல்லை பொம்மை போல் உலா வர ஆரம்பித்தாள்.

அவளுக்கு கொடுக்கும் ஆடைகளின் தன்மையே அதுதானா இல்லையென்றால் அவளாக அப்படி ஆகுகிறாளா என்று தெரியாது ஆனால் எப்போதும் அழுக்கடைந்த ஆடைகளோடு தான் காட்சியளிப்பாள். ஒரு வெளிறிய தாவணியும், மட்ட ரக பாலிஸ்டரில் தைத்த ஜாக்கெட் மற்றும் நீண்ட பாவாடையும் அணிந்து திரிவாள். பெரும்பாலும் அக்குளுக்கு அடியில் கிழித்துவிடுவாள். அதன் பின் வெவ்வேறு நிரங்களில் கிழிந்த இடத்தில் ஒட்டுப் போட்டுக் கொள்வாள். 

இசக்கியப்பன் மற்றும் இசக்கியம்மாவுக்கு பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் செவிலியாக இருந்து வளர்த்தெடுத்தது வள்ளி தான். இசக்கியப்பன் மற்றும் சுப்பு காட்டு வேலைக்கு சென்று மாலை திரும்பும் வரை குழந்தைகள் அவள் பொறுப்பில் தான். இடையில் பொன்னமாவையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

வள்ளியின் பிணத்தை குளிப்பாட்டி, ஒரு மங்கலான தவிட்டு நிற புடவையை சுற்றி, நாடி கட்டு கட்டி, கண்ணில் சந்தனத்தை வைத்து அடைத்து, நெற்றியில் ஒரு ரூபாய் வைத்து வீட்டின் மூலையில் சாத்தி வைத்திருந்தார்கள். வீட்டில் கூட்டம் கூடி ஒப்பாரிகள் காதை கிழித்துகொண்டிருந்து.

“ என் தங்கமே, ஊன்னு ஒரு வார்த்த பேசுனதுண்டா, ஒரு நல்லது பொல்லதுக்கு ஆசைப்பட்டது உண்டா, என் ராசாத்தி எம்மா…. “

“ மஞ்ச பூசி நீ பாத்தது இல்ல, எம்மா உன்ன சீவி சிங்காரிச்சு பாக்க இப்புடி தான் எனக்கு குடுத்துவைக்கணுமா, யே அய்யா, என்னால முடியலையே “

“ ஏட்டி சுப்பு உன் பிள்ளயால்லாம் அப்புடி பாத்தாளே, போய்ட்டாலே டீ “

வெளியே ஆண்கள் கூட்டம் ஆங்காங்கே அமர்ந்துகொண்டும் நின்றுக்கொண்டும் பேசிக்கோண்டிருந்தார்கள். பச்சை ஓலையை வெட்டி வீட்டின் கூரையில் போட்டிருந்தார்கள். ராஜன் கடையில் இருந்து இரண்டு பெஞ்ச்சுகளை வாங்கி போட்டிருந்தார்கள். சிலர் அதில் உக்காந்திருந்தார்கள். சிலர் ஆங்காங்கே குத்த வைத்து இருந்து கதைகள் விட்டுக்கொண்டிருந்தார்கள். என்றைக்கும் அடிக்கும் டீ கடை அரட்டை இன்று டீ கடையில் இருந்து சாவு வீட்டுக்கு மாற்றலாகியிருந்தது. 

பச்ச ஓலையில் கிடுவு பின்னிகொண்டிருந்தார் வெட்டியான் மணி. அவரது மனைவி வள்ளியை தூக்கி செல்லும் தேரில் அவளை இணைக்க காடா சீலையை வாங்கி கிழித்து முறுக்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இளைஞர்கள் வள்ளிக்கான தேரை தயார் செய்து கொண்டிருந்தார்கள். கோவில் தேர் போல தென்னை மட்டை மட்டும் ஓலைகளால் கட்டி கோபுரம் போன்ற அமைப்பை அதன் மேலே அமைத்து அதன் உச்சியில் தென்னை குருத்து ஒன்றை கட்டி கோவில் தேர் போலவே செய்திருந்தனர்.  ஒரு சிறிய அரையை கொண்ட அந்த தேரின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் அரிசி முறுக்குகளை கட்டிதொங்கவிட்டனர். உள்ளே வள்ளியை கிடத்த ஒரு வைக்கோல் மெத்தையை செய்து வைத்திருந்தாள் மணியின் மனைவி.

“ லே மாடா, இங்க வால “

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாடசாமியை கூப்பிட்டார் இசக்கியப்பன். அவரை நோக்கி ஓடினான் மாடன். 

“லேய் உள்ள போய் மம்பட்டி எடுத்துட்டு வந்து நம்ம உளியன் கூட சுடுகாட்டுக்கு போல “ என்றார் இசக்கியப்பன். அவர் முகத்தில் இப்போது ஒரு பெரிய ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டுமே என்ற துடிப்புதான் இருந்ததே தவிர மாடன் எதிர்பார்த்த தூக்கம் சிறிதும் இல்லை. அவன் அங்கு எப்படி இருப்பது என்ற குழப்பதுடனேயே அலைந்தான். சிலரிடம் வருந்தும் முகத்தை காட்டினால் சாதாரணமாக பேசுகிறார்கள். சிலரிடம் சாதாரணமாக பேசினால் இப்பிடி போய்ட்டாலே மக்கா மாடா என்று கதறுகிறார்கள். குழப்பத்துடன் இருந்த மாடன் யார் எப்படி பேசுகிறார்களோ அவர்களுக்கு ஏத்தது போல் தன்னை மாற்றிக் கொண்டான். அப்படியானால் வள்ளிக்கு தன் மனதில் இடம் தான் என்ன. வள்ளி தன் வாழ் நாளில் அவனிடம் என்ன தான் நினைவுகளை வீட்டுச்சென்றாள்.

மம்பட்டியை எடுத்து உளியனுடன் சுடுகாடு போகும் வழியில் யோசித்துக்கொண்டே சென்றான். வள்ளி தன்னுள் விட்டுச்சேன்ற சுவடுகள் தான் என்ன. உண்மையில் வள்ளி கிடையில் விழுந்த பின்புதான் வள்ளி என்ற ஒரு உயிரினம் தன் வீட்டில் இருக்கிறது அது தன் குடும்பத்தின் அன்றாட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத உயிருள்ள உபகரணம் என்று புரிந்திருந்தான். வள்ளி கிடையில் விழும் முன் அவன் மனதில் உள்ள வள்ளி யார் என்று யோசித்தான்.

இசக்கியப்பனின் மூன்றாவது குழந்தை பிரியாவுக்கு ஒரு வயது இருக்கும்போது அவளை விட்டுவிட்டு வழக்கம்போல் இசக்கியப்பனும் சுப்புவும் காட்டுவேளைக்குச் சென்றிருந்தார்கள். வள்ளி மற்ற குழந்தைகளுக்கு சாப்பாடு வைத்து கொடுத்துவிட்டு பிரியாவுக்கு பால் கொடுத்து தொட்டிலில் போட்டுவிட்டு சாப்பிட உக்கார்ந்து ஒரு சட்டியில் கஞ்சியை தண்ணியோடு சேர்த்து சாப்பிட்டுகொண்டிருந்தாள். அப்போது தொட்டிலில் இருந்து பிரியா உருண்டு உருண்டு நழுவி கீழே விழுந்துவிட்டாள். வீல் வீல் என்று அழுத பிரியாவின் சத்தத்தை கேட்டு வந்தான் மாடசாமி. வள்ளி பதறி பிரியாவை தூக்க வருவதற்குள் உள்ளே வந்த மாடன் வள்ளியின் கையில் சோற்றுசட்டியை பார்த்து. 

“ யே லூசு முண்ட உன்ன பிள்ளைய பாக்கச் சொன்னா தீவனம் கேக்காட்டி தின்னி முண்ட” என்று திட்டிக்கொண்டே சென்று பிள்ளையை தூக்கினான். வள்ளி சொல்லவருவதை கேக்க நிதானம் இல்லாமல் வள்ளியை புடதியில் ஓங்கி அறைந்ததான். அவள் “ எய்யா “ என்று கதற மீண்டும் எட்டி அவள் பிட்டியில் மிதித்தான். சோத்துசட்டியோடு கீழே விழுந்த வள்ளியை மீண்டும் இரண்டு மிதி மிதியென மிதித்தான் மாடன். 

கோழை மார்பில் வடிய ஒழுகிய மூக்கு சலியோடு எழுந்து நின்று அழுதாள் வள்ளி. சத்தம் கேட்டு வந்த பொன்னாம்மையும். “ கோட்டி சிறுக்கி, பைத்தியக்கார தேவுடியா “ என்று தன் பங்கிற்கு ரெண்டு அடியை போட்டாள். ஒரு வழியாக பிரியா அமைதியானாள் ஆனால் அவள் தலையில் ஒரு சிறு வீக்கம் வந்துவிட்டது. ஆகவே இதே கச்சேரி இசக்கியப்பன் சுப்பு ஜோடி வேலை முடிந்து வந்த பின்னும் தொடர்ந்தது.

வள்ளி பொன்னமாவுக்குத் தெரியாமல் அவ்வப்போது பக்கத்து வீட்டு வேலாவிடம் சோறு வடித்த பின் எஞ்சும் கஞ்சுத்தண்ணியை வாங்கி குடித்துவந்தாள். அதில் உப்பு போட்டு குடிப்பது அவளுக்கு பிடித்த உணவு வகை. அவளது வீட்டில் உள்ள கஞ்சுத் தண்ணியை ஆட்டுகுட்டிகளும், பெரிய ஆடுகளும் பெற்றுக்கொள்ளும். அவை கஞ்சுத் தண்ணியை உறிஞ்சி குடிப்பதை கோழை வடிய பார்த்துக்கொண்டிருப்பாள் வள்ளி. வேலாவிடம் சென்று “ எக்கோ எங்க அம்மைட்ட சொல்லிறாதிய “ என்று நடுங்கிக்கொண்டே போகனியில் கஞ்சிதண்ணியை வாங்குவாள். அது பிரியாவுக்கு இட்லி வாங்க கொண்டு வரும் போகனி. அதில் கஞ்சி தண்ணியை வேலா ஊற்ற ஊற்ற அவளை அறியாமல் எச்சில் அவள் கீழுதடு தாண்டி வழியும். 

வள்ளி வந்தாள் கொதி போட்டுவிடுவாள் என்று உணவு வகைகளை எடுத்து வேலா ஒளித்து வைப்பதையெல்லாம் வள்ளி அறிய வாய்ப்பில்லை. ஒரு முறை இட்லி வாங்க சென்ற வள்ளி வெகு நேரமாக காணவில்லை என்றுதேடி போன பொன்னம்மா இந்த கஞ்சிதண்ணி ரகசியம் தெரிந்து “ அடுத்த வீட்டு சோறு கேக்காட்டி உன் நாக்குக்கு, உனக்கு வீட்டுல சோறு போடாம கொடும படுத்துத மாறி அங்க போய் நிக்க, போவியாட்டி, போவியாட்டி வேற வீட்டுல போய் வாங்கி திம்பியா “ என்று வெப்பங்குச்சியாள் அவளை உருட்டி பிரட்டி அடித்தாள். இசக்கியப்பனும் அவன் பங்குங்குக்கு ரெண்டு அடி போட்டான். அதில் இருந்து வள்ளி அந்த பழக்கத்தை நிறுத்தினாள். ஆனாலும் அவ்வப்போது வேலா தன்னுள் எங்கோ இருக்கும் ஏதோ ஒன்றாள் வள்ளியை திருட்டுதனமாக கஞ்சிதண்ணி கொடுத்து வந்தாள்.

ஒரு முறை அனைவரும் கோவில் கொடைக்கு கிளம்பும் போது வள்ளியும் அவர்களோடு கிளம்பி செல்ல தயாரானாள். கிளம்பும்போது வீட்டில் இருந்த கண்ணாடியை பார்த்து அதன் அருகில் சென்று தன் முகத்தை பார்த்தாள். உள்ளே சென்ற வள்ளி என்ன செய்கிறாள் என்று பார்க்க வந்த மாடன் “ என்ன ஒன்ன பொண்ணா பாக்க வாரனுவோ அப்பிடியே சிங்காரிச்சுட்டு நிக்க போட்டி வெளிய, கிறுக்கி” என்று அவள் புறங்கழுத்தை பிடித்துத் தள்ளினான் மாடன். அப்போது அவள் மடியில் இருந்து ஒரு சுருக்கு பை கீழே விழுந்தது அதை மாடன்  எடுக்கச்

சென்றான். ஆனால் வள்ளி வெடுக்கென்று அவனிடமிருந்து அந்த பையை பிடிங்கிக் கொண்டாள். 

“ எட்டி என்னட்டி அது, காட்டு “ என்று அதை பிடுங்க அவளை அணுகினான் அவன். அவள் ஒன்னும் இல்ல என்று மறைத்தால். “ காட்டுட்டி” என்று மீண்டும் பிடுங்க நெருங்கினான் அவள் மறைக்கவே அவளை ஓங்கி செவிளோடு அரைந்துவிட்டான். அவள் ஓவென்று ஓலமிட பொன்னம்மை “ எல கிளம்புல அவளபோட்டு அடிச்சிக்கிட்டு பஸ்சுக்கு நேரமாச்சு வால” என்று வேகப்படுத்த அதை விட்டு வேகமாக வெளியே சென்றான். அவள் அதை தன் மடியில் கட்டிக்கொண்டாள்.

சுடுககாட்டில் மண்வெட்டி குவித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினார்கள் உளியனும் மாடனும். “ லே மாடா வள்ளிக்கு என்னல ஆச்சு “ என்று கேட்டான் உளியன்.

“தெரில மக்கா நல்ல தான் இருந்தா, திடீர்னுன்னு உக்காரும்போது முனகுனா என்னட்டின்னு பாட்டி கெட்டா, இவா ஒன்னும் இல்லன்னுட்டா. ஆனா நாளாக ஆக வெளிக்கி போனா வரமாட்டா அப்படியே குத்த வச்சு உக்காந்தே இருப்பா. ஏய் ணு கூப்புடுவா நாங்க போய் தூக்கி விட்டா எந்திரிச்சி வருவா. கொஞ்ச நாள்ள அவ வயிறு ஊதி பெருசாயிறுச்சு. ஒரு நாள் வெளிக்கி பொய்ட்டு எந்திரிக்க முடியாம அப்டியே பீ மேல உக்காந்துட்டா. வீட்டுக்கு தூக்கிட்டு வந்து குண்டி கழுவி விடும்போது தான் பொன்னம்ம பாத்துருக்கா குண்டிக்கு கீழ பெருசா வீங்கி இருந்துருக்கு. அப்புறம் அப்டியே கிடைல விழுந்துட்டா “

“ ஆசுபத்திருக்கி போலையால “

“ சித்தப்பேன் மருந்து வாங்கி கொடுத்தாரு, சரியாவல “

“ அப்டியே செத்துட்டாளா “

“ ஆமா கொஞ்ச நாள் படுக்கைலேயே பேண்டுட்டு மொண்டுட்டு கிடந்தா தீவாலிக்கு

நா போட்ட வெடி சத்தத்துல செத்துட்டா போல “ என்று சிரித்தான். 

“ உனக்கு அழுவ வரலையால “ 

“ வருது சிறுக்கி சாவும் போது இவ்ளோ செலவு வச்சுட்டு செத்துட்டாலேன்னு தான் “

வீடு சென்று நீர்மாலை எடுத்து, முச்சந்தி மாலை எடுத்து வள்ளியை அலங்கரித்து தேரில் ஏற்றி முறுக்கிய துணியால் கட்டி பட்டாசு வெடித்து சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார்கள். சனிக்கிழமை செத்ததால் ஒரு கோழி குஞ்சை தேரில் கட்டி கொண்டு சென்றார்கள். வள்ளி சுருங்கி கூடு மட்டும் இருப்பது போல் தெரிந்தாள். சுடுகாடு சென்று கொள்ளி குடம் உடைத்து. வள்ளியை சிதையில் தனல் வைத்து குப்புற கிடத்தி ஈர வைக்கோளை அவள் மேல் பரப்பி மண்ணால் மூட்டம் போட்டு முடித்தார்கள். மூட்டத்தில் போடப்பட்ட துலைகள் வழியாக புகை வெளிவர ஆரம்பித்தது. எல்லா சடங்கயும் இசக்கியப்பன் செய்தார்.

எல்லாம் முடிந்து அனைவரும் கிளம்பும்போது உளியனுடன் மாடன் வந்து கொண்டிருந்தான். அனைவரும் பேசிக்கொண்டே கிளம்பினார்கள்.

“ என்னடே வள்ளி ஆடம்பரமா கொண்டு வந்து சேத்தாச்சு போல “

“ ஆமா “

“ செலவு யாருடே செஞ்சா “

“ அத அவளே சேத்து வச்சுட்டுதான் போயிருக்கா “

“ என்னடே “

“ஆமாடே அவள பாக்க வரவங்க குடுக்குற அஞ்சு பத்த சேத்து சேத்து மடியில ஒரு சுருக்கு பையில ஐயாயிரம் ரூவா வச்சிருக்கா, அத தான் எடுத்து செலவு செஞ்சுருக்காங்க “

ஏதோ கேக்க கூடாதாது காதில் விழுந்தது போல் நடுங்கிய மாடன் அப்படியே கீழே உக்கார்ந்துவிட்டான். கண்ணில் நீர் தாரை தாரையாக வழிய அழ ஆரம்பித்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *