நாற்பத்தெட்டு வயதான பால்வண்ணத்திற்கு திடீர் என்று ஒரு சிக்கல். வெளியே சொல்ல முடியாத சங்கடம். நெருங்கிய நண்பர்கள் முன்பு இருந்தார்கள். இறந்தது போக அவர்களில் சிலர் இப்போதும் அருகிலேயேதான் இருக்கிறார்கள். சிறுவயதில் அனைத்தையும் அவர்களிடம் கொட்டித்தீர்க்க முடிந்தது. குடும்பம் குழந்தைகள் என்றான இந்த நடுவயதில் அவனால் எதையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள். அதனால் நண்பர்கள் எவரையும் வீட்டிற்கே அழைப்பதில்லை. அவனும் நண்பர்கள் வீட்டிற்குச் செல்வதும் இல்லை. வழியில் பார்த்தால் ஒரு சிறிய புன்னகை. கூடவே தலை ஆட்டல். அப்புறம் உயிர் நண்பர்களில் சிலர் அந்திக்குடிகாரர்கள் என்ற அவதாரம் வேறு எடுத்திருந்தார்கள். அவர்களின் சகவாசம் தன்னை மது அடிமை ஆக்கிவிடும் என்ற பயம். அவர்களையும் ஒதுக்கியே வைத்தான். “ரெண்டு சமஞ்ச குமருகள் இருக்கிற வீட்டில் குண்டுமணித் தங்கம் கிடையாது“ என்பது இல்லாளின் நித்திய மந்திரம்.
பால்வண்ணன் கலெக்டர் ஆபிஸ் குமாஸ்தா. குமாஸ்தாக்களுக்குரிய அத்தனை லட்சணங்களும் அம்சமாக அமையப் பெற்றவன். வேலை கிடைத்து செக்குமாட்டுத்தனத்தில் நுகத்தடி இழுக்க ஆரம்பித்த பின்னர் அவன் வெளி உலகத்தையே மறந்தான். மனைவி, குழந்தைகள், குடும்பம் என்ற லட்சியப் பாதையில் தொய்வின்றி முன்னேற ஆரம்பித்தான். ஒரு அரசு வேலைக்குப் பின்னர் பொன்னுலகம் நிச்சயம் என்று நம்பினான். பணியில் சேர்ந்த முதல் ஆறுமாதங்களை நெஞ்சை நிமிர்த்தி வேலைகளை கற்றுக்கொள்வதில் அர்ப்பணிப்பு காட்டினான். அலுவலகம் அவனை வேறு மாதிரி எதிர்கொண்டது. அவனுடைய சாதியில் இருந்து கைவசம் இருக்கும் அசையும் அசையா சொத்துக்கள் வரை அவனுக்கான மரியாதையை தீர்மானித்தது. ஓராண்டிற்குள் அலுவலகச் சூழல் என்பது பெரும் வேட்டைக்காடு என்ற முடிவிற்கு வந்தடைந்தான். அதற்குள் இரண்டு மூன்று மெமோக்களைச் சம்பாதித்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அந்த பிராணச் சங்கடம் அவனுக்கு ஏற்பட்டது. ஒரு அதிகாலைக் கனவு. எண்பதுகளின் நடிகை என்று நினைவு. நடிகையின் பெயர் புகை மூட்டமாக. நெருங்கிச் சென்று உதடுகளைக் கவ்வ முயன்றான். “ஏட்டீ… வள்ளி… இந்தப்பால்காரிதான் எத்தன கூப்பாடு போடுதா… போயி வாங்கிட்டு வந்து தொலையேன்” என்று இல்லாளின் தீனக்குரல் முத்தத்தை இடையில் வெட்டியது.
கனவு கலைந்து பாயில் மல்லாக்கப் படுத்தான். மொத்த உடலும் உச்சக்கட்ட பரவசத்தை நோக்கி நீண்ட பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. கைலி நனைந்திருக்க வில்லை. நனைந்திருந்தால் நல்ல விடியலாக அன்று இருந்திருக்கும். வயதானால் கைலி நனைவதும் நின்றே போகிறது. கடைசியாக கைலி நனைந்து பத்திருபது ஆண்டுகள் ஆகியிருக்கும். இளையவளைப் பெற்ற பின்னர் கைலி நனைவதும் நடக்கவே இல்லை.
ஆறே முக்கால் மணிக்கு அவன் விழிப்பது அபூர்வம். எட்டு மணியைத் தாண்ட வேண்டும். ஏனெனில் கண் சோர்ந்து துாங்க ஆரம்பிப்பதே இரண்டு மணிக்கு மேல்தான். உடல் வலியெடுக்க படுக்கையில் சாய்வான். மனம் சோர்வு கொள்வதே இல்லை. வெறுமை குதிர் போன்று நெஞ்சின் மேல் ஏறி அமர்ந்து கொள்ளும். அலுவலகக் கோப்புகள் பூதங்களைப் போலாகி மிரட்டும். பால்யத்தை மீட்டிக்கொண்டே புரண்டு படுப்பான். இல்லாளுக்கு அந்தக் கவலைகள் ஏதும் இல்லை. மகள்களோடு படுத்த உடன் ஆழ்ந்த உறக்கம். ப்பர்..ப்பர் என்று உதடுகள் பதற பத்தாவது நிமிடத்தில் குறட்டை பீறிட்டுக் கிளம்பும். வயதானால் துாக்கமும் தன்னைக் கைவிடும் என்பதை அனுபவப் பூர்வமாக எதிர்கொண்டு வருகிறான்.
உடலெல்லாம் வழக்கம்போல வலியெடுத்தது. இடுப்பின் பின்பகுதியை அசைக்க முடியவில்லை. பகல் முழுக்க நாற்காலியில் சரிந்து இருப்பதன் பக்க விளைவு. வேகம் குறையாமல் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறையைப் பார்த்தான். அதன் மாறா வேகம் அவனுக்கு எரிச்சலை ஊட்டியது. சமீப காலங்களில் வேகமான எதைக்கண்டாலும் இயல்பாக எரிச்சல் கொண்டான். தடைபட்ட உதட்டு முத்தம் பேயைப் போல அவனைப் பீடித்துக்கொண்டது. தலையை வலித்தது. இறுக்கி அணைத்து ஒரு உதட்டு முத்தம் கொடுத்து எத்தனை ஆண்டுகளாயிற்று என்ற கேள்வி ரீங்கரித்துக் கொண்டே இருந்தது. அந்த தேட்டத்தோடையே காலைக்கடன்களை முடித்தான். உப்புக்குறைவான சாம்பாரில் நான்கு இட்லிகளைப் பிய்த்துப் போட்டு விழுங்கினான். எட்டரைக்கு வீட்டை விட்டுக்கிளம்பினான். ஆபிஸ் கொண்டு சேர்க்கும் ஜெயராம் பஸ்சிற்காக காத்திருக்கத் தொடங்கினான்.
அப்போதுதான் ஒன்று உரைத்தது. வீட்டில் இருந்து கிளம்பி பத்து நிமிடம் மெயின்ரோட்டில் நடந்து பஸ் ஸ்டாண்டை அடைவதற்குள் ஐம்பத்தெட்டு பெண்களை உற்றுப் பார்த்திருக்கிறான் என்பது. பெண்கள் என்றால் அவர்களின் உதடுகளை மட்டும். எத்தனை விதவிதமான உதடுகள். முழுக்க காய்ந்தவை, காலை ஒளியில் பொன்னென ஒளிர்பவை. மெல்லிய சாயப் பூச்சால் கவர்ந்து இழுப்பவை. முத்தமிட தயார் ஆனவை போல குவிந்தவை. சிவந்தவை, கறுத்து மேடு தட்டியவை. மென்ரோமங்கள் கொண்டவை. மஞ்சள் குளித்தவை. நாவால் எச்சில் கொண்டு மெருகேற்றம் கண்டவை. சிறு பெண்களின் உதடுகள் அவனைக்குத்தி கிழித்தன. அவை கொண்டிருந்த பவித்திரம் வெறிகொள்ளச் செய்தது. இனி இப்பிறவியில் இல்லை என்று செவிட்டில் அறை பட்டான். அக்கொந்தளிப்பு அவனின் இயல்பிற்கு மாறானது.
வெள்ளரிக்கா விற்கும் தாவணிப்பெண்ணை அவன் தேவாங்குப் பார்வை பார்த்தபோது அந்தப்பெண் பளீர் என்று பதிலுக்குச் சிரித்தாள். எவரோ துப்பிய எச்சில் சரியாக முகத்தில் விழுந்ததைப் போல அச்சிரிப்பால் பதறிப் போனான். அந்தப்பெண் மகளின் பள்ளித்தோழி. மல்லிகாவின் முகம் நினைவில் உருக்கொண்டது. உடனே சுதாரித்துக் கொண்டான். குற்ற உணர்ச்சியால் குறுகினான். தலையைத் தாழ்த்தி பஸ் நிலையத்தில் பரவிக்கிடந்த குப்பைகளை மட்டுமே கவனிக்கத் தொடங்கினான். பார்ப்பதற்கு குப்பைகள்தான் எவ்வளவு இருக்கின்றன. குப்பைகள் சூழ் உலகு. அவை சதா பறந்து அமர்ந்தன. கால்களை ஈசின. நாய்கள் விரட்ட முன்னேகின. பஸ்களின் பின்னால் ஓடி டயர்களுக்கு மத்தியில் ஓய்ந்தன.
சன்னலோர இருக்கையில் அமர்ந்ததும் வேகமாக டிக்கெட் வாங்கி கண்களை மூடிக்கொண்டான். பள்ளிவாசல் நிறுத்தத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சுப்பு ஏறினார். சக பயணி. எப்பவும்போல அருகிலேயே இடித்துக்கொண்டு அமர்ந்தார். அவரைக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அருகில் இருப்பது சுப்புதான் என்பது நாறச் செண்டு வாசனையிலேயே தெரிந்தது. ஆனாலும் கண்களைத் திறக்கவில்லை. சுப்புவின் பேச்சு எப்போதுமே சம்பள உயர்வு, பஞ்சப்படி, மாதாந்திர வங்கிக்கடன்கள், கையில் இருக்கும் தற்செயல் விடுப்புகள், ஒப்படைப்பு செய்ய வேண்டிய ஈட்டிய விடுப்புகள் என்று கனத்த அறுப்பாக இருக்கும். எண்களை மந்திரம் போல உச்சாடனம் செய்வார். அவர் வாய் திறந்தாலே எச்சில் தெறிக்கும். அவரின் உதடுகள்…… தலையை உதறிக்கொண்டான்.
அற்புதமான இந்தக் காலை மனநிலையை அவன் இழக்க விரும்பவில்லை. வாழ்விலே மறுமுறை இது வாய்க்குமா? ஒரு உதட்டு முத்தத்திற்காக மொத்த உடலும் பரிதவித்து எத்தனை ஆண்டுகளாயிற்று? முடிந்தால் காலைக் கனவினை அந்த அரைமணி நேரப் பயணத்தில் மீட்டெடுக்க முடியுமா என்று முயன்று பார்க்க வேண்டும். கனவில் வந்த நடிகை யாராக இருக்கும்? இளமையில் அவன் ரசித்த நடிகைகளை இப்போது கண் கொண்டு பார்க்க முடியவில்லை. டி.வி.சீரியல்களில் அவர்களைக் காணும் போதெல்லாம் “குந்தாணி.. என்ன பாடு படுத்திட்டா” என்று நெஞ்சு பொறுமுவான். இளையவள் மல்லிகா கொண்டாடும் நடிகைகளை ரகசியமாக பார்க்க ஆரம்பித்தான். சிறுத்த இடையும். மான்குட்டி போன்ற துள்ளலும், முகடுகள் தளும்பும் தாராளமும். அவனுக்கு அவை தேவையாக இருந்தன. நாற்பத்தெட்டு வயதில் வாழ வேண்டும் என்ற வெக்கையை அவையே அளிக்கும் சாத்தியங்கள் கொண்டிருந்தன.
தினமும் அலுவலகம் செல்லும் பாதை. தென்காசியை அடைந்ததும் ஆழ்ந்த துயிலில் இருந்து மீண்டு எழு வேண்டும். அமர்ந்த உடன் துாக்கம் வருவது இந்த காலைப் பயணத்தின் போதுதான். அதுவும் வேலைநாட்களில் மட்டும்தான். விடுமுறை நாட்களில் மனம் உறக்கம் கொள்வதில்லை. மனதும் மனைவியைப் போல மல்லுக்கட்ட விரும்புகிறது. சதா ஏமாற்றுகிறது. எதையும் அவன் விருப்பத்தை அறிந்து செய்வதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை அவனின் வலது பக்கம் கூடவே வந்தது. ஒவ்வொரு நாளும் அம்மலைக்கு ஒவ்வொரு உருவம். இன்று ஒருக்களித்து படுத்திருக்கும் பாட்டியைப் போலிருந்தது. பஸ் சொக்கம்பட்டி வளைவில் ஒய்யாரமாக திரும்பியது. பயணத் தோழரின் மீது அப்படியே அப்பினான். அவரை ஓரக்கண்ணால் பார்த்தான். சுப்பு செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார். சேர்மார்க்கெட் நிலவரமாக இருக்கலாம்..
அல்வாவின் பூர்வீகம் சொக்கம்பட்டி என்ற சொற்கள் கண்களுக்குள் ஒளிர்ந்தன. அல்வாத்துண்டு உதடுகள் என்று உடனே வேறொரு எண்ணப்பாய்ச்சலும்.. கடையநல்லுார், இடைகால், நயினாரகரம், சிவராமபேட்டை, குத்துக்கல்வலசை என்று தொடர் நிறுத்தங்கள். விழித்திருந்தால் பெண்களைப் பார்க்கலாம். அல்வாத்துண்டுகளை உதடுகளென ஏந்திய மடவார். அல்வா சாப்பிடுவது தொடர்பாக அவனுக்கு ஒரு பழக்கம் உண்டு. நறுக்கிய வாழை இலைகளில் அல்வாக்களை வாங்கி உள்ளங்கையில் ஏந்துவான். விரல்கொண்டு பிய்த்து உண்பதில்லை. எத்தனை சூடு என்றாலும் அப்படியே வாயில் தள்ளுவான். உதடுகள் ஊடாக உறிஞ்சுவான். உதடுகளில் அல்வா வழுக்கிச் செல்லும் போது ஏற்படும் பரவசம். ஆம். உதட்டு முத்தத்திற்கு சமமானது.
கடைசியாக உதட்டு முத்தம் எப்போது நிகழ்ந்தது? யோசிக்கவே தேவையில்லை. உடனே சாந்தி மயினியின் எச்சில் வாசந்தான் நினைவிற்கு வந்தது. அப்போது வேலை ஏதுமின்றி தெருமுனை குட்டிச்சுவரில் நண்பர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தான். இருபதைத் தாண்டிய பருவம். கருகருவென்று சுருண்ட தலைமுடியும், காதுவரை நீண்ட கிருதாவும், நெஞ்சு நிறைந்த ரோமும் கொண்ட ஆணழகன். பலவேசம் அண்ணனின் மனைவி சாந்தி மயினியிடம், திருமணமாகி வந்த நாளில் இருந்தே ஒரு கனிவு இருந்தது. எதிர் வீடு. ஒருவிதத்தில் சொக்காரர்கள். பலவேசம் அண்ணன் முன்கோபி. எட்டு அடிதடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. குடித்துவிட்டான் என்றால் எழவு இழுக்காமல் வீடு திரும்புவதில்லை. இதெல்லாம்தான் சாந்தி மயினி மீதான கனிவினை உறுதிசெய்வதை கட்டுக்குள் வைத்திருந்தன. தயக்கம் கொள்ளச் செய்தன. கொத்தனார் வேலைக்காக பலவேசம் அண்ணன் கொல்லத்திற்கு சென்றுவரத் தொடங்கினான். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடு திரும்பினான். அந்த இரண்டு நாட்களும் வீட்டுக்கதவு சாத்தியே கிடக்கும். சாந்தி மயினியை வெளியே பார்க்கவே முடியாது.
அப்படிச் சென்ற பலவேசம் அண்ணன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வீடு திரும்பத் தொடங்கினான். கொல்லத்தில் அவனுக்கு வேறு ஒரு குடும்பமும் இருப்பதாக தெருவிற்குள் பேச்சு அடிப்பட்டது. சாந்தி மயினியும் மாதந்தோறும் தவறாமல் தலைக்குக்குளித்தாள். அம்மாவிடம் புறணி பேச வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். அவன் மயினி வரும் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதில்லை. அம்மாவிற்கு அது தெரிந்திருக்கும். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை.
திடீரென்று மின்சாரம் தடைபட்ட ஓரிரவு. அம்மா அடுப்படிக்குச் சென்று தீப்பெட்டியைத் தேடத் தொடங்கினாள். அவன் நடு வீட்டுக் கதவின் நாதாங்கிப் பிளவின் வழியாக மயினியை வெறித்து அமர்ந்திருந்தான். மடியில் போட்டித் தேர்விற்கான கைடு. சட்டென்று மயினியின் வாசனை அவன் அருகில். நெஞ்சோடு அணைத்து கன்னத்தில் பதற்ற முத்தம், எப்போது வேண்டுமென்றாலும் மின்சாரம் மீண்டுவரக்கூடும் என்ற நினைப்பில் நிகழ்ந்த முத்தம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னரே முடிந்துவிட்ட முத்தம். மின்னற் பொழுதில் முடிந்தாலும் அது ஒரு பேருலகின் உள்ளே நுழைவதற்கான அனுமதிச் சீட்டாக அமைந்தது. மயினிக்கு முன் விளையாட்டில் உதட்டு முத்தத்தின் மீது மட்டுமே பெரும்பித்து. அரைமணி நேரத் தனிமை விளையாட்டில் உதடுகளை மட்டுமே முக்கால்வாசி நேரம் பயன்படுத்துவாள். அவனுக்கு ஆரம்ப நாட்களில் முத்தச் சூட்டிலேயே உருகி வழிந்தது. பின்னர் முன்னேற்பாடுகள் செய்யக் கற்றுக்கொண்டான்.
பத்துப் பொருத்தங்கள் இருப்பதாக முருகேசன் மாமா அம்மாவிடம் உள்ளம் பூரிக்கச் சொன்னார். ஐம்பது பவுனும் ஐந்து லட்சமும் என்று அப்பாவிடம் தயங்கிச் சொன்னார். அதைக்கேட்டு அம்மாவின் முகம் தீவிரமானது. சாய்வு நாற்காலியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த அப்பா அவனை ஒரு கணம் தலை திரும்பிப் பார்த்தார்.
பலநுாறு சினிமாக்களில் பார்த்திருந்ததைப் போல அவன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். பெண் வீட்டில் மட்டப்பா மாடிக்கு அவனை அழைத்துச் சென்றாள் மயினி முறையுள்ள ஒருத்தி. அவள் உடலில் கிளர்ந்த வெட்கம் அவனையும் நாணச் செய்தது. அறைக்குள் சென்று அமர்ந்தான். பழங்காலத்து வீடு. உத்தரங்களில் மழைநீர் ஓடிய கோட்டுச் சித்திரம். பகல்முழுக்க அவர்களின் கூடவே வந்து கொண்டிருந்த பவானி சமுக்காளத்தையும் பட்டுத் தலையணையையும் விரித்திருந்தார்கள். இரண்டு ஆப்பிள், ஒரு ஆரஞ்சு, ஒரு மாதுளை, கால்கிலோ அளவிற்கு திராட்சை. இருட்டுக்கடையில் இருந்து வரவழைக்கப்பட்ட அல்வா எண்ணெய் மினுமினுப்புடன்.
பத்தே நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. அவளுக்கு அதில் ஒன்றும் ஏமாற்றம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிவிட்டாள். அவள் சாமி கொண்டாடி. எனவே எச்சில் பரிமாற்றம் தீட்டு என்று. அவனால் நெற்றியில் மட்டுமே முத்தங்கள் கொடுக்க முடிந்தது. மூன்றே மாதங்களில் உண்டாகினாள். அவனின் தேவை அவளுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அவன்தான் கடையநல்லுார் மங்களசுந்தரியிலும், புளியங்குடி அம்மையப்பாவிலும், தென்காசி வாகினியிலும் தேடித்தேடி பார்த்து பெருங்கனவுகள் கொண்டிருந்தான். அரசு வேலை என்பதால் வேறு முயற்சிகள் செய்து அடைவதிலும் ஆபத்து இருந்தது. அலுவலகத்தில் பெண் தொடர்பால் சஸ்பென்சன் வாங்கியவர்களை அவன் அறிவான். பிழைப்பில் மண் விழுந்து விடக் கூடாது என்று பொத்தி வாழப் பழகினான்.
இரண்டு மகள்கள் பிறந்த பின்னர் அவன் மேலும் சமாதானம் அடைந்தான். அவளுக்கு ஏற்பட்ட உடல் மாற்றங்களும் அவன் ஆர்வத்தை மட்டுப்படுத்தின. இரண்டாவது பேறுகாலம் முடிந்து வீடு திரும்பிய போது அவள் அவனை விட பன்மடங்கு கனத்திருந்தாள். அவன் அருகில் அவள் இரண்டு ஆட்களாக விரிந்திருந்தாள். அவ்வப்போது எழுந்த சண்டைகளும் அவர்களுக்குள் தீராப் பகையை உண்டு பண்ணின.
அடுத்தடுத்து இரண்டு மகள்களும் வயதிற்கு வந்த பின்னர் அவன் பெண் கனவுகளையே கைவிட்டான். உதாரண அப்பாவாக தன்னை மாற்றிக்கொண்டான். அவன் மனைவி மற்றொரு குடும்ப உறுப்பினர் என்று ஆனாள். அவர்களுக்குள் சண்டையே இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது. அவள் ஆண்டு முழுக்க செவ்வாடை பக்தையாக விரதங்கள் இருந்தாள்.
பஸ்சை விட்டு இறங்கியவனை சிலுசிலுவென தண் காற்று அணைத்தது. ஒன்பதே முக்காலுக்கு வரவேண்டிய பஸ் பத்தேகாலுக்குத்தான் வந்து சேர்ந்தது. அங்கிருந்து அலுவலகத்திற்கு நடந்துசெல்ல எப்படியும் பத்துநிமிடங்கள் ஆகும். புதிதாக வந்திருந்த உயரதிகாரி பத்துபத்திற்கு வருகைப் பதிவேட்டை எடுத்து தன் அறைக்கு கொண்டு சென்றுவிடுகிறார். தாமதமாக வருகிறவர்களை அவர் பார்க்கும் பார்வையே சங்கடப்படுத்த போதுமாக இருந்தது.
அவன் பரபரத்தான். உதட்டு முத்தம் சார்ந்த கவலை சட்டென்று விலகி ஓடியது. காலையில் அதிகாரியிடம் திட்டு வாங்கினால் அன்று முழுக்க நரகமாகிவிடும். வேலையில் கவனம் ஒன்றாமல் போகும். அனைத்தையும் விட இத்தனை வயதிற்கு பிறகு தன்னைவிட வயதில் குறைந்த அதிகாரிகளிடம் ஏளனமாக வசைகள் வந்து விழுவது அவனை தர்மசங்கடப்படுத்தும். நடையில் வேகத்தைக் கூட்டினான்.
அந்த அவசரத்திலும் அவனுக்கு சாந்தி மயினியின் உதடுகள் கண்முன்னே தோன்றின. சாந்தி மயினியும் அவனைப் போல தலைநரைத்து, முன்தொந்தி கனத்து ஆளே மாறிப்போய்தான் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு உதட்டு முத்தம் கொடுத்த அந்த சாந்தி மயினியை யாராலும் உரு மாற்றிவிட முடியாது. அவனே நினைத்தாலும் கூட. அவன் சாந்தி மயினியின் மூடிய கண்களை நினைத்துக்கொண்டான். அதிகாலைக் கனவில் வந்த நடிகையின் முகம் சாந்தி மயினியினுடையதாக மாறுவதைக் கண்டு புன்னகை செய்தான்.