பெருமாள் கோயில் வளாகம் முழுக்க குருபூஜைக்கான ஏற்பாடுகள். மௌனச்சாமி இந்த முறையும் சமையலைத் தன் வசம் எடுத்துக் கொண்டார். அவரின் சாம்பாருக்கென்றே ரசிகர் கூட்டம் தேடி வரும். எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் அதே மளிகைப் பொருட்கள்தான். அவரே கூட வீட்டில் வைத்து சமைத்துப் பார்த்திருக்கிறார். குருபூஜைக்கான சாம்பாரில் தேவகணங்கள் உறைந்து விடுகின்றன. அடுப்பில் மசால் கொதித்து பக்குவமாகும்போது எழும் நறுமணம் பசியை ஆவேசப்படுத்தும்..பசித்திருப்பதன் அர்த்தம் பூரணம் கொள்ளும்.
படையல் செய்த பின்புதான் எச்சில் செய்ய வேண்டும். அதனால் கொதிக்கும் குழம்பில் உப்பைக்கூட பரிசோதிப்பதில்லை. எல்லாம் மனப்பக்குவந்தான். கைக்கணக்குத்தான்.. சில ஆண்டுகள் துவரம் பருப்பின் அளவு குறைந்திருக்கிறது. காய்கறிகளுக்குத் தட்டு நிகழ்ந்திருக்கிறது. ஒருமுறை தாளிக்கவே மறந்து விட்டது. இரண்டொரு முறை பெருங்காயப் பொடி கை நடுக்கத்தினால் அதிகம் சிந்தியிருக்கிறது. அதனால் எல்லாம் ஒருமுறை கூட ருசி சிதறியதில்லை.
பிள்ளை வரம் வேண்டி குருபூஜைக்கு வந்து கொண்டிருந்தார் சுப்பையாக் கோனார். சாம்பாரின் பக்குவம் அவரை மௌனச்சாமி என்று மாற்றிற்று. குருபூஜைக்கு தன்னுடைய பங்காக சமையல் வேலையை தேர்ந்தெடுத்தது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றுதான். விவசாய வேலைகளுக்கென்று வாங்கிய டிராக்டர் வீட்டில் நின்றது. புளியங்குடியில் இருந்து வாடகைப் பாத்திரங்கள் ஏற்றிவர இரவல் கோரப்பட்டது. அதை ஓட்டிவந்த சுப்பையாக் கோனார் சமையல் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். சாமி காரியம் என்பதை ஒரு வாய்ப்பாகக் கருதினார்.
முதல் முறை சமைக்கும்போது உள்ளே ஒருவித நடுக்கம். பதறி பதறித்தான் சமையலை செய்து முடித்தார். இரண்டாம் ஆண்டு அவருக்கு தன்னம்பிக்கை வந்தது. ஒவ்வொரு முறையும் அவர் வைக்கும் சாம்பாரின் ருசி நம்ப முடியாத பக்குவத்தோடு மணத்தது. பச்சைப்பாம்பை உயிரோடு பிடித்து நீவிய கரங்களுக்குத்தான் அத்தனை ருசி சாத்தியம் என்றார் மாணிக்கம் பிள்ளை. ருசியும் வாசனையும் ஆண்டுதோறும் அதிகரித்தபடியே இருந்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அவர் ஒன்றைக் கண்டுகொண்டார். இயேசுபிரானைப் போல தன்னால் பச்சைத்தண்ணீரை கூட ருசி மிகுந்த சாம்பாராக மாற்றித்தர முடியும் என்பதை. சாம்பார் மூலம் இயற்கை தன்னிடம் உறவாடி வருகிறது என்று நம்ப ஆரம்பித்தார். குருநாதர் தொடர்பு கொள்ளும் ஊடகம் சாம்பார்தான். சாம்பாரின் தளதள கொதிப்பில் குருநாதரின் மந்திர உச்சாடனங்கள் ஒலிக்கின்றன. மஞ்சள் கொதிப்பில் உயர்ந்து வீழும் சாம்பார் குமிழ்களில் குருநாதரின் அருகாமை அமைந்து விடுகிறது. சாம்பாரில் ருசியாக கலந்திருப்பது குருநாதரின் ஞானம். ஞானம் நுரைக்கும் சாம்பார்.
சண்முகத்தாய்க்கு கல்யாணம் ஆகி பன்னிரெண்டு ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லை. நீர்க்கட்டிப்பிரச்சினை. மருமகன் சொக்கம்பட்டியில் வேறு ஒரு தொடுப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வந்தன. விதவையோடு இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பதை அவரே உறுதி செய்து கொண்டார். மருமகன் இரவுகளில் மகள் வீட்டில் தங்குவதும் குறைவு. மூத்த மகளின் முகத்தைப் பார்க்கச் சங்கடப்பட்டார். அவளுக்கும் சங்கதி தெரிந்திருக்கும். நல்ல சேலைகள் கட்டி அவளைப் பார்த்ததில்லை. மலடிப் பட்டம் அவளை வீட்டில் முடங்கிப்போகச் செய்தது. விசேச வீடுகளில் ஒதுங்கியே இருந்தாள். சுப காரியங்களில் அவள் முன் நிற்பதை யாரும் விரும்பாத நிலை. ஒரு வைராக்கியத்தோடு என்னென்னமோ செய்து பார்த்தார். ஆண்டுகள் கழிந்தன. கருப்பை மட்டும் உயிர்க்கவே இல்லை.
பாளையங்கோட்டை பெரியாஸ்பத்திரிக்கும் மாதக்கணக்கில் அலைந்து விட்டார். கருப்பை உள்சுவரைத் தோண்டி சுத்தம் செய்தும் பார்த்தாயிற்று. மாத்திரைகள் தின்று சண்முகத்தாய்க்கு உடல் ஊத்தம் கண்டது. கன்னத்தசைகள் பூரித்தன. அவள் அருகில் நின்றாலே வியர்வை வாசனையில் மருந்து நாற்றம். வயிற்றுப் புண் தோன்றி அதற்கும் பக்குவம். மூன்று மணி நேர பஸ் பிரயாணம் செய்தால் குடம் குடமாக வாந்தியெடுப்பாள். முற்றாக நம்பிக்கை இழந்து மருத்துவத்தை ஒத்திப்போட்டார்.
பனையூரில் வேண்டிக்கொண்டால் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்று சுரண்டை பஸ் ஸ்டாண்டில் ஒரு சாமியார் சொன்னார். “எம்மகளுக்கு ஒரு குழந்தையை மட்டும் கொடுத்துடு சாமி..ஆயுசு முழுக்க உனக்கு தொண்டு செய்வேன்” என்று அங்கிருந்தபடியே வேண்டிக்கொண்டார். சண்முகத்தாய்க்கு அடுத்தடுத்த சித்தரைகளில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது பேத்திக்கு எட்டுமாதங்கள். அதன் பிஞ்சுக்கால்கள் நெஞ்சில் தவழும் போது அவர் அடையும் பரவசத்திற்கு அளவே இல்லை. பேத்தியின் மூத்திரம் மணக்கும் உள்ளங்கால்களால் கன்னத்தில் உதைகள் பெறுவதை பேறு என்று கருதினார். பேத்தி அவரின் அம்மாவின் கண்களை வேறு கொண்டிருந்தாள்.
மூன்று கல்லடுப்புகளில் அண்டாக்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுக்களையைச் சுற்றி கூடுதல் வெக்கை. புன்னையாபுரத்தில் இருந்து முதல்நாள் இரவே கொண்டு வந்திருந்த விறகுகள் புகையின்றி செங்குத்தாக எரிந்து கொண்டிருந்தன. செம்மண் செரித்து வளர்ந்த மரக் கிளைகளில் செம்மண்ணே நெருப்பாக. தண்ணீர் கொதித்து அண்டா மூடியை விளிம்பில் அதிரச் செய்தது. மற்ற இரண்டு அண்டாக்களும் ஆவியாகி வான் நோக்கி எழ முயன்றன. ஒன்றில் சாம்பாருக்கான துவரம் பருப்பு. மற்றதில் அவியலுக்கான காய்கறிகள். விறகுகளின் நுனிகளில் செந்தழலின் குதியாட்டம். காய்ந்த சுள்ளிகள் வெடிப்புடன் சலம்பின. ஒன்றினை ஒன்று விரட்டிப் பிடித்து பற்றி எறிந்தன. தீ விளையாட்டு உக்கிரம் கொண்டது. வெட்ட வெளியில் தீயின் நடனத்தை இமைக்காமல் பார்த்து நின்றார். வெளியே எரியும் தீ உள்ளே ஒரு வெற்றிடத்தை உண்டு பண்ணுகிறது. அல்லது வெற்றிடத்தை வெளிச்சம் கொள்ள வைக்கிறது.
மாணிக்கம் பிள்ளையைத் தேடி ஆட்கள் வர ஆரம்பித்தனர். மூன்று மாதங்கள் அலைந்து திரிந்து வாங்கிய நன்கொடையை விட இப்படித் தேடிவந்து கொடுத்துச் செல்பவர்களின் தொகை கணிசமாக இருக்கும். சாப்பிட்டு முடித்த உடன் தங்களால் இயன்ற தொகையை காணிக்கையாக அளிப்பார்கள். நன்கொடை கொடுத்திருந்த பக்தர்களுக்கு நிசியில் குருபூஜை முடிந்து அபிசேகம் செய்த பொங்கலும், சுண்டலும், பஞ்சாமிர்தமும் மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். பூஜை முடிந்து ஊர் திரும்பும்போது மிஞ்சிய சாமான்களை அள்ளிப்போட்டுக் கொண்டு செல்வார். அரை மூட்டை அரிசி, வாழைக்குலைகள், காய்கறிகள் கொஞ்சம் என. அடுத்த மூன்று மாதங்களுக்கு வீட்டுக்காரியங்களுக்கு அவை போதுமாக இருக்கும். நல்லா இருந்து நொடித்துப்போன குடும்பம் மாணிக்கம் பிள்ளைவாளுடையது.
சாம்பாருக்கான காய்கறிகள் வெட்டப்பட்டு கிடுகுப்பெட்டிகளில் குவிந்திருந்தன. நீர்வாளியில் மிதந்த கத்தரிக்காய்கள் காற்றிற்கு முகம் கருத்து வாடிப் போக ஆரம்பித்தன. முருங்கைக்காய்த் துண்டுகளின் அம்பாரம் பச்சை ஒளியென சுடர்ந்தது, உருளைக் கிழங்குகளை தோல் நீக்கியிருக்கவில்லை. உள்ளிகள் தலையும் வாலும் மட்டுமே வெட்டப்பட்டிருந்தன. புளிக்கரைசல் கூட அரைவாளி தயாராக இருந்தது. ஒரு உரச்சாக்கு நிறைய கருவேப்பிலைகள்.
அபிசேகப் பொருட்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்தன. குருபூஜை முழுக்க உற்சாகம் கொள்ள வைக்கும் ஒரு பொருள் பலாப்பழம். செங்கோட்டையில் இருந்து வைத்திலிங்கம் முரட்டு முள்ளம் பன்றிகளை ஒத்த இரண்டு வருக்கைகளை கொண்டு வந்திருந்தான். மரக்கடை சாய்பு வழக்கம்போல அவற்றை அனுப்பி வைத்திருந்தார். அவற்றின் மணம் கோயில் வளாகம் முழக்க நிரம்பி இனித்தது. காணிக்குடியிருப்பில் இருந்து ஐந்து லிட்டர் தேனும் வந்துவிட்டது. வைக்கோல் பிரிகளுக்குள் முலைத்தளும்பல்களைப் போல மாழ்பழங்கள். பச்சைக் குளத்தின் நடுவே மலர்ந்த மஞ்சள் மலர்கள். முக்கனிகளின் வாசனைகள் அவருக்குள் விஸ்வரூபம் கொண்டன. முக்கனிகளே குருநாதரின் பூத உடல். அவற்றில் எழும் நறுமணங்களே ஞானத்தின் இசைமை.
இருள் பிரிந்து ஒளிவளையங்கள் தோன்ற ஆரம்பித்தன. எத்தனை கூர்ந்தாலும் துாய இருளைக் காண முடியவில்லை. இமைகளுக்குள் நலுங்கி கரைந்தன. சுருண்டு விரிந்தன. திரண்டு ஒற்றைக்கோடென உருமாறி ஒளிர்ந்தன. சில போது கலங்கிய நதியைப் போன்ற நிறங்களின் அசைவு. நெஞ்சை நேராக நிமிர்த்திக்கொண்டார். தாடி நுனி தொப்புளைத் தீண்டி மென்னதிர்வுகளை உண்டு பண்ணிற்று. மூச்சில் கவனம் குவித்தார். பின் வளவுக்குள் நாயொன்று பாய்ந்து தெருவை நோக்கி ஓடிய திம்திம்கள்.
ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நினைவுகளின் ஊற்றுமுகம் திறந்து கொண்டது. வழக்கம்போல அவற்றை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தார். இத்தனை ஆண்டுப் பழக்கத்தில் அவர் கற்றுக்கொண்ட பாடம் கண் முன் நிகழ்பனவற்றை மதிப்பிடக் கூடாது என்பதும், அவற்றை உடனுக்குடன் தீர்ப்பிடக் கூடாது என்பதுந்தான். சமையலின் போதும் இந்நிலை அவருக்குச் சாத்தியந்தான். தியானம் என அவர் எதையும் தனியாக முயற்சிப்பதில்லை. செய்யும் செயல்களில் அவர் தியானி என்றானார். அவ்விதம் ஒருமுகப்பட்டு செய்ய ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியத்திலும் கண்கள் மூடிக்கொள்கின்றன. விழிகள் விழித்திருந்து வெளிக்காரியங்களில் ஈடுபட்டாலும் உள்ளே இருள் உருக்கொண்டு எண்ணங்களை உறையச் செய்கின்றது.
காவித்துண்டினால் அக்குள் ஈரத்தைத் துடைத்துக்கொண்டார். அரிசியினை நீரில் களைந்து ஈயக்கரண்டியால் கொதிக்கும் அண்டாக்குள் அளந்து போட்டான் சுப்பு. கர்ப்பக்கிரகத்தின் உள்ளே ஒற்றைச் சுடரென மின்விளக்கு நடுங்கிக் கொண்டிருந்தது. வாசல் கல்திண்ணையில் முருகேசன் திருநீற்றுப் பண்டல்களைப் பிரித்து சின்ன காகித உறைகளில் அடைத்துக் கொண்டிருந்தான்.
மதியம் ஒருமணிக்கு மேல் பக்தர்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். எப்படியோ குருபூஜைதோறும் பெருமாள் கோயிலில் அன்னதானம் உண்டு என்ற தகவல் பரவி விடுகிறது. இருநுாறுக்கும் மேற்பட்ட பக்தர்களின் வருமையை எதிர்பார்க்கலாம். அன்று மட்டுமே மூன்று இடங்களில் அன்னதானங்கள் நடக்கும். பெருமாள் கோவில் வளாகம்தான் இருக்க இடமின்றி நெறிபடும். முதல் பந்தி முடிந்ததும் மண் தரையில் வாழையிலைகள் கிழிந்து எச்சில்கள் ஒழுக ஆரம்பிக்கும். அவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு நேரம் இருப்பதில்லை. அடுத்த வரிசைக்கு பக்தர்கள் விரைந்து வந்து இடம் பிடிப்பார்கள். கடைசி வரிசையில் அப்போதுதான் ஜவ்வரிசி பாயாசம் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும். அன்னதானங்களில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கென்றே தனித்த ருசி அமைந்து விடுகிறது. பெரும் பஞ்சங்கள் உண்டாக்கிய பதற்றமாகக் கூட இருக்கலாம். சாப்பிட ஒருவரும் வரவில்லை என்ற நிலையே ஏற்பட்டதில்லை.
“ச்சீ..மூதி..இங்க எதுக்கு வந்தே..ஊர் முழுக்க அசிங்கப்பட்டது போதாதுனா?“
மாணிக்கம் பிள்ளை யாரிடமோ சீறினார். மௌனச்சாமி சமையல் மறைப்பில் இருந்து எட்டிப்பார்த்தார். கோயில் வாசலில் ஒருகாலும் தரையில் ஒரு காலுமென மாணிக்கம் பிள்ளை ஒருசாய்ந்து நின்றிருந்தார். அதற்குள் முருகேசன் வாசலுக்கு விரைந்து சென்றான்.
“ஏட்டி..நீ..இன்னும் சாவலையா..விழுந்து சாவ..உனக்கு ஒரு கிணறோ கொளமோ கிடைக்கலையா…இங்க எதுக்குட்டி வந்த..தெக்குக்கோயிலிலே அன்னதானம் போடுதானுவ..அங்க போயி தின்னு..பெரியப்பா மரியாதையில மண் அள்ளிப்போட்டிராத”
முருகேசன் கோவில் வளாகத்தை நோட்டமிட்டுக்கொண்டே சொன்னான். மௌனச்சாமிக்கு அங்கே என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. சோற்றுக்கரண்டியை டவி மேல் வைத்து விட்டு வெளியே வந்தார்.
மாணிக்கம்பிள்ளையின் சாயலில் ஒரு பெண். கழுத்தில் காதில் ஒன்றும் இல்லை. கூந்தல் செம்பட்டையாக மாறி சடைகள் விழுந்திருந்தன. செவ்வாடை என்றாலும் கருப்பாக மக்கேற ஆரம்பித்திருந்தது. கண்களில் பசியின் மினுக்கம். அவள் தரையை வெறித்து நின்றிருந்தாள்.
மாணிக்கம் பிள்ளை தோள்த் துண்டால் அவளை விரட்டினார். அதற்குள் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. முருகேசன் அவரை விட ஆங்காரம் கொண்டவனாக குதித்தான். அவளைக் கழுத்தைப் பிடித்து தள்ளினான். வலதுகையைப் பிடித்து தரையில் தரதர வென்று இழுத்து உடைமுள் காட்டிற்குள் மறைந்தான்.
“யாரு சாமி அது”
“கிறுக்கி”
“சாப்பிட்டு போகட்டுமே”
“திருட்டு முண்டை….சாப்பிட விட்டா பாத்திரத்தை களவாண்டுட்டு போயிடும்”
“சாமி..இந்தாங்க..செல்லுார் மாரியப்பன் கொடுத்த வசூல் பணம். ஐயாயிரத்தெட்டு. நாலுகிலோ அரிசியும் உண்டு. நான்தான் துாக்கிவர முடியாம கொண்டு வரல”
“மறக்காம பிரசாதம் வாங்கிட்டு போ கணேசா”
மௌனச்சாமி மீண்டும் அடுப்புகளின் பக்கம் சென்றார். உலை கொதித்து நுரையாக தளும்பியது. டவியைச் சுற்றி வெண்நுரை வழிந்தது. சுள்ளிகளை அடுப்பில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு வாளித்தண்ணீரை ஊற்றி அணைத்தார். நுரை சாந்தம் கொண்டு சமதளத்தில் குமிழியிட்டது. பித்தளைப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த உலைத் தண்ணீரை மீண்டும் அண்டாவிற்குள் விட்டார்.
முருகேசன் திரும்பி வந்தான். அவன் நெற்றியில் வியர்வையோடு மண்ணும் புழுதியும் ஒட்டியிருந்தது. பேரலில் இருந்து நீரை அள்ளி கைகளையும் முகத்தையும் கழுவினான்.
“நம்ம தங்கச்சிதான்..கொஞ்சம் மர கழண்ட கேசு” என்ற படி சாம்பார் கரண்டியை எடுத்து டாக்சாவிற்குள் கிண்டினான். சீனாச்சட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயப் பத்தைகள், கறிவேப்பிலைத்தளைகளை அள்ளிப்போட்டு தாளித்து சாம்பாருக்குள் கொட்டினான். அப்போது எழுந்து வரும் தேவ மணத்தை மௌனச் சாமியார் எதிர்பார்த்தார். எண்ணெயில் உள்ளி வதங்கும் வாசனையும் எழவில்லை.
முதல் பந்தியில் சாப்பிட்டு எழுந்த சுந்தரம் தலையாரி ” என்னவே..சாம்பாருல ஒரு ருசியும் இல்ல..மண்ணால இருக்கு” என்றார். மௌனச் சாமியார் பதறிப்போனார். உடனே ஒரு கரண்டி சோற்றை அள்ளி வாழையிலையில் போட்டு சாம்பாரை சேர்த்துப் பிசைந்தார்.
வழக்கம்போல கடைசிப்பந்திக்கு சாம்பாரில் வெந்நீர் சேர்க்க வேண்டிய தேவை இல்லாமல் ஆனது. மௌனச் சாமியார் பெருந்துக்கத்தில் பெருமாள் கோயில் வாசலில் அமர்ந்தார். “முருகா..இதென்ன சோதனை” என்றார் தன்னை அறியாமல்.