அரசப் பெருங்கதவுகளை கனவுகள் அஞ்சுவதில்லை. முரசுகளின் முழக்கங்களுக்கிடையே அதன் கிசுகிசுப்பின் வேர்ப்பின்னல்கள் உள் நுழைகின்றன. கற்பாதையின் இடுக்குகளிடையே வழிந்து ஊரும் கனவுப்புனல். சுவரெங்கும் பூத்துப் படிந்த படலம். கோட்டை தன் சிறகு விரித்து அலகால் அதை நீவி உதிர்த்தது. மரம் உதிர்க்கும் உளர் பூக்களை சிலந்தி ஒற்றைச் சரடால் கிளைகளில் இணைத்தது. சரடில் ஊசலாடும் கனவுத்துளிகள் எழுப்பும் ஒலி அரசக் கட்டிலை மட்டும் வந்தடையும் அமைப்பு கொண்டது. கூரை வளைவுகளில் திரண்டு சொட்டும் ஒலி. பந்த ஏரியில் பட்டு பொசுங்கும் ஒலி. ஆவியாகி உள்சென்று வெளிவரும் மூச்சொலி. இலைகளின் படபடப்பிலும் அதன் ஒலியே. கொடி அசைவிலும் அதன் ஒலியே. ஒலி பருவாகித் தன்னை நெரிக்க அவன் எழுந்தமர்ந்தான்.
நெஞ்சில் அலைந்த தாடியைப் புரி பிரித்து கட்டினான். அருகில் இருந்த சிகையை எடுத்து தலையில் வைத்து நீள் பாகை கட்டி எழுந்தான். கீழாடை நுனி குதிகாலில் மிதிபட கச்சை இளக்கி ஆடையை இழுத்து இறுக்கினான். அவன் செல்லும் வழியில் ஈட்டியுடனும், கவணுடனும் சிலர் நின்றிருந்தனர். விண்ணவர் சூழ் மன்றை அடைகையில், பூசகர் மழிக்கப்பட்டிருந்தார். தூய வெள்ளாடை எடுத்து பாகை கட்டி சன்னத அடிகளுடன் உள் மன்றை நோக்கிச் சென்றார். படையல் முடிந்து திரும்புகையில் அவருள் நடுக்கம் மிஞ்சியிருந்தது.
“ கனவு தானே அரசு? ”
எங்கோ ஒன்றியிருந்த அவரது நோக்கு பதிலை எதிர்பார்க்கவில்லை.
“ அறிவேன். அது வருகிறது. “
“ தாங்கள் அதை கண்டதுண்டா? ”
“ இல்லை, ஆனால் ஏதோ ஒரு வகையில் உணர்கிறேன். ”
“ அதன் நிமித்தம் அறிவீரோ? ”
“ பரிசென வருபவை நல்நிமித்தம் பொருட்டே. ஆனால் அதில் உறையும் தெய்வத்தை நாம் அறியோம். ”
“ சிம்மத்தை விட வலியதாம். ”
“ ஆம். ”
“ இந்த மொத்த நகரையும் திரட்டுவேன் நான் வலியவன். ”
“ ஊழ் வலியது அரசே. ”
பூசகர் கைகள் கால் மூட்டில் உரச திரும்பிச் சென்றார். நீள் விரல்கள் வளைந்து மணிக்கட்டைத் தொட்டன. ஓசையற்ற காலடிகளால் அத்தருணத்திற்காக மட்டும் காற்றில் தோன்றிய பிம்பமென மீண்டும் காற்றில் கரைந்து கொண்டிருந்தார். தன் வாழ்க்கையே இவ்வார்த்தைகளுக்காக என்றொரு நிறைவு.
“ கிழவா, நான் வலியவன். என் அரசை திரட்டுவேன். வேளிரும், மீனவரும், தட்சரும், கொல்லரும், சிற்பியும், கணக்கரும், வணிகரும் நீயும் வந்து நின்றாக வேண்டும். அப்பொழுது பார்க்கிறேன் எது வலியதென்று. ”
அது பூசகருக்கு மட்டும் கேட்க முகம் திருப்பி நகைத்தார்.
மது நுண்வடமாகி என்புகளில் சுழன்று அதன் சரடுகளை கொடுந்தெய்வங்களுக்கு அளித்தது. கோட்டையின் கல் தூண்கள் கமுகென சூல்கொண்டு நின்றன. அவற்றின் பெரு வயிறு கிழித்து முனகலுடன் மென்மணல் கொட்டிற்று. மெலிந்த தூண்களை வளைத்து, மணல் விலக்கி காற்று புணர்ந்து மீண்டும் சூல் கொள்ளச் செய்தது. கோட்டையே சூல் கொண்டு, மணல் இழிந்து, வளைந்து புணர்ந்தாடியது.
“ ஏய் இழிமகனே, எங்கு சென்றாய்? அடேய். ”
“ அரசே, இங்கிருக்கிறேன். ”
“ வா, அருகில் வா மந்தணம் சொல்ல வேண்டும். யாரும் அறியக் கூடாது. ”
அமைச்சர் அருகில் வருவதற்குள் அவன் கால்களை நகர்த்தாமல் முதுகை வளைத்து முன்சென்றான்.
“ அவனை கொல்ல வேண்டும். ”
“ யாரை அரசே? ”
“ அவன் தான் முடி உதிர்ந்த ஆந்தை. கிழடன். அவனைத் தான். ”
“ பேரரசரையா அரசே? ”
அவன் அதை புரிந்துகொள்வதற்கு முதுகை நிமிர்த்தி சிலநேரம் மேற்கூரையில் விழியோட்டினான். சட்டென அருகிலிருந்த ஈட்டியை எடுத்து எரிய அது வெண்கல கதவில் பட்டுத் தெறித்தது.
“ இழிமகனே, என் தந்தையையா கொல்ல சொல்கிறாய்? உனக்கு நாளை மரண தண்டனை. எழுதிக்கொள். என் ஆணை. ”
“ அரசே நான் எப்பொழுது உங்கள் தந்தையைக் கொல்லச் சொன்னேன். நான் பேரரசரை அல்லவா சொன்னேன்.ஒரு அரசர் மற்றொரு பேரரசரை வென்றே பேரரசர் ஆக முடியும் அதையே சொன்னேன். ”
அவன் என்னவென்று புரியாமல் மோவாயைத் தடவி தலை கவிழ்ந்து யோசித்தான். ஏப்பம் எழ தலை நிமிர்ந்து,
“ இழிமகனே, அந்த ஆந்தையைக் கொல்லவேண்டும். என் ஆணை. ” என்றான்.
“ யாரை அரசே? ”
“ அவன் தான், அந்த மழித்த ஆந்தை. பூசகன். கிழவன் அவனைத் தான். ”
“ ஆணை அரசே. ”
“ ஆமாம் எழுதிக்கொள், ஆணை. ”
“ ஆணை அரசே. ”
தலை கவிழ்ந்து நெடுநேரம் அமர்ந்து விக்கலெழ தலை தூக்கி,
“ ஆ.. யாரிவள் சூல் கொண்டவள் இந்நேரம் அரச முற்றத்தில்? ”
அமைச்சர் திரும்பி கல் தூணைப் பார்த்து,
“ என் இல்லாள் அரசே. ” என்றார்.
“ நன்று, சூல் கொண்டவள் அரசின் வைப்பு நிதி போன்றவள். அவளுள் உறங்குகிறது நாளைய செல்வம். இதோ என் பரிசு. ” என்று கங்கணத்தை கழட்டி கொடுத்தான்.
“ நன்றி அரசே. ”
“ ஆ.. உனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. மூடா பெற்றுக்கொள் பரிசை. ” என்று மோதிரங்களை அளித்தான்.
“ என் பேறு அரசே. ”
மீண்டும் அத்தூணைப் பார்த்து, ” அடேய், உன் இல்லாள் மீண்டும் சூல் கொண்டிருக்கிறாள். நீயே ஆண் மகன். நம் அரசு வாழ்வது அன்னையின் அருளால். கோடி விண்மீன்களுக்கிடையே நிலவன்னை என்றிருப்பவள் அவள். நீயே இவ்வரசுக்கு உரியவன். இழிமகனே, இதைப் பெற்றுக்கொள். ” என்று நீள் பாகையை எடுத்து அமைச்சர் தலையில் வைத்தான்.
“ அன்னையின் அருள் அரசே. ”
தரையில் விழுந்து, சிகையை கையில் எடுத்து திருப்பிப் பார்த்து, காற்றில் வீசி கீழ் வருகையில் தலையை அதற்கு கீழ் நகர்த்தினான்.
அமைச்சர் நீள் பாகையை அவிழ்த்து சரியாக கட்டி,
“ ஒரு செய்தி வந்தது, கலத்தில் இருக்கும் நம் தேசத்தவனிடமிருந்து. ” என்றான்.
சிகையை பொருத்தி தலை நிமிராமலே “ம்” என்றான்.
“ கலத்தில் வந்தவர்களை நோய் கொண்டது. மிஞ்சி இருப்பது நால்வரே. ”
அவன் தரையில் விரலோட்டி ஏதோ வரைந்தான்.
“ அது உயிருடன் தான் இருக்கிறது. அது பார்ப்பதற்கு… ”
கை உயர்த்தி நிறுத்தச் சொல்லி எழுந்து, சால்வையை குறுக்காக கட்டி கச்சையை இறுக்கி பீடமேறி அமர்ந்தான்.
“ அது வரட்டும். ”
அமைச்சர் தலை தாழ்த்திச் செல்கையில்,
“ அமைச்சே, பாகை என்னுடையது. ” என்றான்.
அமைச்சர் சட்டென பாகையை அவிழ்த்து சுருக்கம் நீவுகையில்,
“ உன் தலையும் என்னுடையது. ” என்றான்.
அன்றைய நாளின் முற்றமைதியை விலக்கியது பாய்மரக்கம்பின் மேல் அமர்ந்த பருந்துதான். காம்பின் வளையங்களில் அலகை உரசிய ஒளி தெளிவாக கேட்டது. அலகு திறந்து வந்த அதன் ஒலி காற்றை போழ்ந்து நெடுந்தூரம் சென்று மீண்டது. அவ்வொலியே அதன் கூர் உகிர்களுக்கிடையே கலத்தை நெருக்கிப் பிடித்திருந்தது. ஒலி மீள கேட்கக் கேட்க உகிர் இறுகி கலம் நொறுங்கி குருதி வடித்தது.களமளவே பெருத்த உகிரின் நுனி நெஞ்சை அழுத்தும் கணத்தில் சாம்பன் பிளிறினான். இரண்டு நாட்களில் கலம் அதிர ஒரு பிளிறல். பருந்து பாய்மரக்கம்பு விட்டு காற்றில் ஏறி சிறகசைய நின்று சாம்பனை கண்டு பறந்தது. அது கேட்ட முதல் யானையின் குரல். அலை ஓய்ந்த கடலில் மீன்கள் கண்ணும் வாயும் தெரிய மொய்த்தன. எதோ ஒன்று கலத்தின் அடிப்பாகத்தில் விசைக்கொண்டு மோத அதன் அதிர்வு உச்சிக்கொம்பு சென்று காற்றில் மடிந்தது. தூரத்தில் பெருங்குழல் ஓசையுடன் கருநீல மேடை ஒன்று புடைத்தெழுந்து அமைந்தது. பெரும் வல்லமை கொண்டவை மற்றொன்றை குரல் கொண்டே அறிகின்றன.
அவன் எழுந்து பாய்மரத்தை திருப்பினான். சுட்டுவிரலை உயர்த்திக் காட்டினான். ஒரு நாள் ஆகும் என்கிறான் போல. அவன் பெயர் ஏதோ தாவரத்தின் பெயர் போல ஒலிக்கும். அவனை அறிமுகம் செய்து வைத்த மொழிபெயர்ப்பாளன் பதினேழாம் நாள் வாயிலெடுத்து அதிலேயே சறுக்கி விழுந்து மயங்கினான். பத்தாம் நாளே தமிழ் அறிந்த அனைவரும் இறந்தனர். இப்போது மீதமிருப்பது நானும் தாவரப் பெயர்க்காரனும் மட்டுமே. அன்று பலகையில் சுண்ணக்கல்லால் களம் வரைந்து ஆடுகையில் அவன் காய் பிழைக்க, காயை கையில் எடுத்து ஏதோ சொன்னான். ஒவ்வொரு சொல்லையும் இழுத்து இறுதியில் வெட்டி மீண்டும் இழுத்து, அது இசையென்றே ஒலித்தது. மொழிபெயர்ப்பாளன் அன்று நோய் வெப்பில் அவன் மொழியை தமிழின் தாளத்திலும், தமிழை அவன் மொழித் தாளத்திலும் பேசினான். அவன் சாகும் வரை அப்படியே தொடர்ந்தது. அவன் இறந்த பிறகு தாவரப் பெயர்க்காரனை அழைத்து “கடல்” என்றேன். அவன் திகைத்து “ மூக ” என்றான். “ கடலில் தூக்கி போட வேண்டும். ” என்றேன். ஏதோ சொல்லிவிட்டு இழுத்துச் சென்று கடலில் வீசினான்.
அன்று கடலை “மூக” என்று கண்டேன். ஒவ்வொரு அலையிலும் “மூக” என்ற கூவல் தான். அது ஆதியிலே மூக தான் போல. சட்டென எழுந்து நீண்டு சுருண்டு விழும் அதுவும் அவன் மொழியையே பேசியது.
“டேய் சாம்பா, கடல் என்ன மூகவாடா? ” என்றேன்.
துதிக்கையில் கரும்பைச் சுருட்டி எடுத்தவன் கீழே போட்டுவிட்டு மணி குலுங்க தலையாட்டினான். சாம்பனுக்கு அவன் மொழி புரிந்தது. துதிக்கையைச் சுருட்டி நீட்டி வெட்டி நிறுத்தி சாம்பனும் அம்மொழியே பேசுகிறான்.
காலையில் அதன் ஒலி கேட்டே எழுந்தேன், இல்லை அவை. படுத்துக்கொண்டு பார்க்கையில் பாய்மரத்தை பிடித்து இழுத்துச்செல்வது போல அவை வானில் சென்றன. நிலத்தில் உள்ளவைக்கு இவை போன்ற குரலில்லை. கருப்பாய் ஒன்றிருக்குமே அதற்கு கூட நல்ல குரல்தான். பின்னிருந்து ஒன்று பக்கவாட்டை அடைந்து முன்னாள் சென்றது. அதுதான் இனி தலைவன்… அது என்ன? உடனே எழுந்து, மண்டையில் அடித்தேன் அதன் பெயர் என்ன? பலகையில் ஓங்கி குத்தினேன். அது என்ன? தமிழில் அதன் பெயர் என்ன? எழுந்து சாம்பனிடம் சென்று இரு கைகளை விரித்து ஓடி.
“ டேய் சாம்பா, அதன் பெயர் என்ன? வானில் செல்லுமே அதன் பெயர்? ” என்றேன்.
சாம்பன் அசைவின்றி என்னைப்பார்த்து கால் மாற்றி நின்றான்.
“ டேய் அதன் பெயர் என்னடா? ”
இப்போது சாம்பன் உடல் சரித்து படுத்துகொண்டான். பின்னிருந்து அவன் “ தாய்ரா ” என்றான். கை தோய பொத்தென்று விழுந்தேன். இனி எப்போதும் அது தாய்ரா தான். வானில் செல்லும் தாய்ரா. மதியம் நீரிலிருந்து பிறை போல ஒன்று எழுந்து மூழ்கியது. அதன் நிரை மூகவை சூழ்ந்தது. எங்களைக் கட்டி இழுத்துச் செல்வது போன்றதொரு துள்ளல் அவற்றில். அதன் பெயர் என்ன நீரில் செல்வது? அரச சின்னமே அதுதான். அதன் பெயர் என்னவோ. நான் கேட்க விரும்வில்லை. நெடுநாட்கள் கழித்து வெய்யோன் நிலத்தில் அடங்குவது தெரிந்தது.
“ டேய் சாம்பா, போவோமா? ஒரு வழியாக மூக முடிந்துவிட்டது. ”
சாம்பன் துதிக்கையை தூக்கி என் தாடையை தடவினான். தாடியை ஊதி பறக்கச்செய்தான்.
“ மண்டை உடையும் மூடா. ” என்று கை ஓங்கினேன். அவன் மாரில் துதிக்கை வைத்து தள்ளினான்.
“ டேய் ஒழுக்கமாக நடந்துக்கொள். அவர்கள் உன்னை பார்த்ததே இல்லையாம். ஆகையால்தான் உன்னை பரிசாக அரசர் அனுப்பி இருக்கிறார். ஒழுக்கமில்லை என்றால் பலியிடுவார்கள். ”
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் பேசியது மனதிற்குள், வாய் வழி வந்தது ஓரிரு சொற்களே. அப்பொழுது அது புரிந்தது.
“ டேய் சாம்பா உன் பெயர் என்னடா? ”
சாம்பன் தலையை ஆட்டினான்.
“ டேய் உன் பெயரென்ன? விளையாடாதே தமிழில் உன் பெயரென்ன? ”
தாவரப் பெயர்காரன் பின்னால் நின்றிருந்தான். சாம்பனைக் காட்டி அவனிடம் கேட்டேன். அவன் தோளை உயர்த்தி உதட்டை பிதுக்கினான்.
“ அரசே அது வந்துவிட்டது. கலம் இப்போது தான் கரையணைந்தது. ”
அவன் பாகையில் கை வைத்து சரிசெய்து, இடையில் கை ஊன்றி நின்றான்.
“ ஆட்கள் ஈட்டியுடனும் கவணுடனும் நிற்கிறார்கள் அல்லவா? ”
“ ஆம் அரசே, ஆனால் இது இரவு. கொடுங்காற்று பந்தங்களை அணைக்கிறது.
“ நாம் அதை நகர் நுழையவிடக்கூடாது கரையிலேயே எதிர்கொள்வோம். ”
“ நன்று, அரசே. ”
காற்று ஆயிரங்கைகளுடன் பந்தத்தை பொத்தி அணைத்து களியாடியது. ஒவ்வொருவரும் கலன் முழுக்க மீன் எண்ணெய் தூக்கி நின்றனர். பந்த ஒளி கண்டு, மணல் பரப்பிலிருந்து சிறு வெண் நண்டுகள் எழுந்தலைந்து புதைந்தன. கடல் பலநூறு பல் நிரை காட்டி நகைத்து மயக்கியது. அமைச்சர்,
“ நிலவிலா இரவு அரசே.” என்றார்.
அவனிடம் எவ்வசைவும் இல்லை. வலக்கை அரைக் கச்சையை இறுக்கி ஓய்ந்தது. பாய்மரம் இறக்கப்பட்ட கலத்தில் ஆட்கள் ஏறி பாலம் இறக்கினர். பாலம் நெறிபடும் ஓசை கருமையை அடர்த்தியாக்கியது. சுற்றி நின்றவர் பைகளிலிருந்து கூர் கற்களை எடுத்து கவணில் பூட்டினர். ஈட்டி ஏந்தியவர்களுக்கு அருகில் பந்தங்கள் மிதந்து சென்றன. எங்கிருந்தோ ஒரு முழக்கம். அவன் மேல் நோக்கி “ இடியோ? ” என்றான்.
நான்கடி பின்னிருந்து அமைச்சர் “ அது அரசே. ” என்று முனகினார். அது இரண்டாவது முறை கேட்கையில் பந்தங்கள் திசைக்கொன்றாய் அலைந்தன. ஒன்று கடல் நோக்கிச் சென்று பொசுங்கி ஆவியாகியது. முற்றிருளில் வெண்கல மணி ஓசை மணல் அலைகளில் முட்டிச் சூழ்ந்தது. தொலைவில் இரு வெண் துடுப்புகள் காற்றை துழாவின .
“ அரசே. ” என்று பந்தத்துடன் அமைச்சர் மணலில் வீழ்ந்தார்.
“ இழிமகனே, கொடு அதை. ” என்று அவன் பந்தத்தை தூக்கிப் பார்த்தான்.
பேரிருள் ஒரு மாற்று குறைந்து புடைத்து அசைந்து வந்தது, பின்நின்ற கலத்தையே மறைத்தபடி. மணலில் குத்தி நின்ற ஈட்டியை அவனெடுக்க, அது மணலைப் பார்த்து தயங்கி நின்றது. மணலில் ஓடிய சிறு நண்டொன்று அதன் கால்களை சுற்ற துதிக்கையால் அதை தட்டி நகர்த்தியது. பெருமரம் பட்ட நண்டு மணலில் மிதந்து பொந்து பறித்து உட்சென்றது.
“ பரீட்டா.. ” என்று அந்நிலம் முழுக்க ஒலிக்க, வெண் நண்டுகள் மணலுள் இழுத்துக்கொண்டன. அமைச்சர் எழுந்து பார்க்கையில் பாகையை அவிழ்த்து காற்றில் சுழற்றி அவன் அதைச் சுற்றி ஓடினான்.
“ பரீட்டா.. பரீட்டா ” என்றவன் சொல்வதெதை என்று தெரியவில்லை.
“ டேய் இழிமகனே, இங்கே வா. ” என்றான். அமைச்சர் தயங்கி நிற்க,
“ இங்கே வா, இது குழந்தை. இதுவோ கொலை தெய்வம்? எங்கே அவன்? எங்கே அந்த மழித்த ஆந்தை? அவனை நாளை கொல்கிறேன். பரீட்டாவின் கால்களை கொண்டு அவனை கொல்கிறேன், கிழட்டு ஆந்தை. ” என்று அதன் துதிக்கையை கட்டி அணைத்தான். அது துதிக்கையை சுருட்டி அவன் தாடியை ஊதி பறக்கச் செய்தது.
“ என் குழைந்தையடா இது. ” என்றான்.
“ எங்கே அந்நாட்டிலிருந்து வந்தவன் எங்கே? வரச்சொல் அவனை. ” என்று மோதிரங்களை கழட்டினான்.
அமைச்சர் கலத்தருகே தேட ஒருவன் மட்டும் கலத்திலிருந்து இறங்கி வந்தான்.
“ அரசே இவன் கலத்திலிருந்தவன். ” என்று அமைச்சர் அவனை முன்தள்ளினார்.
“ நீ இத்தேசத்தவன் தானே. அத்தேசத்தவன் எங்கே, உன்னுடன் வந்தவன்? ”
“ அரசே, பத்து நாட்களிலேயே அவர்கள் இறந்தனர். மீதமிருந்தவன் ஒருவனே. நெடுநாட்கள் பயணித்தோம். நாட்கள் செல்லச் செல்ல அவனுக்கு பித்தெழுந்தது. தனக்குள் பிதற்றினான். அவன் பேசியது ஓரிரு சொற்களே. ஆனால் அவன் மனதுள் கரந்த சொற்கள் ஆயிரம். கரையணையும் நேரத்தில் அதனிடம் ஏதோ பேசினான். பித்தெழவே அருகிருந்த ஈட்டியை எடுத்து அதை கொல்லப் பாய்ந்தான். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை, அரசே. இறுதியில் வழியின்றி கொன்றுவிட்டேன்.
அவன் அதன் துதிக்கையில் ஓடிய வரிகளில் விரல் ஓட்டிய படி, “ கடல் என்பது ஆழம். ஆழத்துள் வாழ்கின்றன நாம் அறியா தெய்வங்கள். அவனை என்ன செய்தாய்? ”
“ கலத்துள் துணி மூடி வைத்திருக்கிறேன் அரசே. ”
“ அமைச்சே அவனை இக்கரையில் புதைத்து கல் நாட்டுங்கள். இங்கொரு மன்றெழட்டும். அதற்கான பூசகரை நியமிக்கிறேன். ” என்றான்.
“ ஆணை அரசே. ”
“ அவன் பெயர் அறிவாயோ? ”
“ ‘சாம்பன்’ என்று சொன்னான். ”
பரீட்டா மணி குலுங்க தலையாட்ட அவன் அதன் துதிக்கையைப் பற்றி முத்தமிட்டான்.