தொட்டில் குழந்தை போல அந்த அறையின் திரைச்சீலை மெல்ல அசைந்து கொண்டிருந்தது. உள்ளே ஏர்கண்டிஷனர் எழுப்பிய ஹும் என்ற இசை ஒரு வண்டின் ரீங்காரம் போல எங்கும் நிறைந்து கொண்டிருந்தது. அடுக்கு கலையாத புத்தகங்கள், கண்ணாடிக்குள் சிரிக்கும் நிழற்படங்கள், நாற்காலி மேல் உள்ள துண்டு மடிப்புகூட பிசகாத நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவர் வந்து உட்கார்ந்துவிடலாம் என்று தோன்றுவதுண்டு.
இவன் தானே புதன்கிழமை இரவு 11 மணிக்கு மீனம்பாக்கத்தில் விட்டுவந்தான். ராஜசேகரனுக்கு நிற்கவும், நடக்கவும் சூரியா கூட இருக்கவேண்டும். கிரி, அருட்செல்வன் போன்றவர்கள் இந்த பந்தத்தை ஒருபால் உறவு போல பொடிவைத்துக் கிசுகிசுப்பது தெரியும். சமூக சமத்துவம், பிராமண அதிகார ஒழிப்பு எல்லாம் தம் மேசையில் அழுக்குப் படியாமல் இருக்கும்வரைதான். அதேசமயம், நிறுவனம் என்பது அவர்களின் வீட்டு சமையல் அறை என்று நினைக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மாட்டுக்கரி தின்பவர்களுக்கு படிப்பு வராது என்பது முதல், வர்ணப்பகுப்பும் இன்றைய சமூகப்பகுப்பு முறைகளும் என்ற வகை ஆய்வறிக்கைகள். மத்தளத்துக்கு மட்டும் அல்ல, மனசாட்சி இருப்பவன் எவனுக்கும் இந்த தேசத்தில் இப்போது இரண்டு பக்கமும் அடிதான் என்று யோசித்துக்கொண்டிருக்க கதவு தட்டும் ஓசை கேட்டது.
நாராயணி மேனன் உள்ளே வந்து “குட்மார்னிங்” சொன்னபடி ஒரு நாற்காலியை சரிசெய்து உட்கார்ந்துகொண்டாள். தலை குளித்து வந்திருந்ததன் ஈரமும் வாசனையும் அறைக்குளுமையில், அமைதியில் மெல்ல பரவியது.
“சோ இன்னிக்கும் ரைட் டைம்முக்கு ப்ரசண்ட். சார் தான் இல்லதானே? கொஞ்சம் ரிலாக்சா வரக்கூடாதா?” என்ற கேள்விக்கு எப்போதும் போல சூரியாவிடம் இருந்து புன்னகை.
“வாட் நியூஸ்? பிரசண்டேஷன் எல்லாம் முடிச்சாச்சு. சிநாப்சிஸும் வெச்சாச்சு. சொன்னமாதிரி கரக்ட் டைம்ல சப்மிட் பண்ணிட்டு ஃப்ளைட் பிடிக்க வேண்டியது தான், ப்ளான் அல்லே?”
அதற்கும் வழக்கம் போல ஸ்மைல் தான். மற்றவர்களைப் போல இல்லை இந்த நாராயணி. அவர்கள் வெளிப்படுத்தும் அக்கரையில் பொய் மறைந்திருக்கிறது. கரிசனத்தில், மனிதாபிமானத்தில், தோழமையில் கவிகிறது மெல்லிய அவமதிப்பு. பாவனைகளிலும் குரல் தாழ்த்திப் பேசுவதிலும், தோள் தட்டுதல்களிலும் பார் நாங்கள் உன்னை எவ்வளவு கண்ணியமாக நடத்துகிறோம், குறித்துவைத்துக்கொள் என்று சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ராமகிருஷ்ணர் பள்ளியில் படித்து உதவித்தொகையில் முன்னுக்கு வருபவர்கள் மேல் இயல்பாகவே வந்துவிடும் விலக்கம்தான். நகைச்சுவை, பாராட்டுப் பேச்சுகள் உட்பட அனைத்திலும் மிக நாசூக்காக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
“சூரியா எல்லாம் பார்ன் ஜீனியர்ஸ். வீ ரியல்லி அட்மைர் யூ மேன்….”
இந்தமாதிரி
நாராயணி இப்படி அல்ல. இவள் வேறு ரகம். இவளிடம் வெளிப்படும் கனிவும், கரிசனமும் நிஜமானவை. எப்படி என்று எல்லாம் சொல்வதற்கு இல்லை. அது அப்படித்தான். `
“ஸோ டிசைட் பண்ணிட்டயா? லிஸன். ஒரு நல்ல சான்ஸ். நெட்ஒர்க்கிங் இல்லாம இப்போலாம் எதுவும் நடக்காது. சார் கமிட்டியில இருக்கிறது, டீனுக்கும் இவருக்கும் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது, டைரக்டர் இவங்க எல்லாரும் ஒரு வேவ் லெந்துல இருக்கிறது எல்லாம் ஒன்னாகி வரும்போது நீ சும்மா இண்டர்வ்யூ அடெண்ட் செஞ்சா மதி. சப்ஜெக்ட் பத்தி பெருசா எல்லாம் டெஸ்ட் பண்ண சான்ஸே இல்ல. பின்ன அது என்ன வைவாவா? கோர்ட்டு கேசுன்னு ஒரி பண்ரதுக்கு ரெகுலர் அபாய்ண்ட்மெண்டும் இல்ல. எல்லாம் சரியா வந்தா ஓகே. நீ சான்ஸ் எடுத்துகோ. ஒரு ரெண்டு மாசம் ஒர்க் பண்ணு. ஈவ்னிங்ல தீசிஸ் ஒர்க்க முடி. ஒனக்குத்தான் பார்டி அப்டி இப்டின்னு பழக்கம் கிடையாது. லெட் மீ புட் மை ஹாண்ட் இன் பிபிலியோகிராஃபி ஒர்க், அண்ட் சப்னா வில் ஆல்சோ ஜாய்ண் இன் வெரிஃபையிங் த சைடேஷன். என்ன சொல்ற? ஶெரி, ஒரு காபி சாரே.” என்று அவள் சொல்வதற்கும் மாணவர்களின் குழு ஒன்று காரிடோரில் போவதற்கும் சரியாக இருந்தது. கேஃபடீரியாவில் அவ்வளவு கூட்டமில்லை. காப்பிக்கு பணம் கொடுத்து டோக்கன் வாங்கி வருவதற்குள் நாராயணி மொபைலில் புகுந்துகொண்டிருந்தாள். சூரியாதான் ஆரம்பித்தான்.
“நியூ இயர் ப்ளான் எப்டி? மகாபலிபுரம், எங்கையாவது” என்று வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டு முடிப்பதற்குள் உதட்டைச் சுழித்து, மெதுவாகத் தலை அசைத்து
“இல்லை” என்றாள்.
“ட்வண்டிநயந்த் கோயம்புத்தூர் போரேன். சிஸ்டர் வீட்டுக்கு. தேர்ட் தான் வருவேன். நம்ம இண்டர்வியு சிக்ஸ்தா இல்ல, இல்ல எய்த்து தான். டென்த்துக்கு முன்னாடி கம்ப்ளீட் பண்ணிடுவாங்க. அதுக்கப்புறம் டீன் அகமதாபாத் கான்ஃப்ரன்ஸ் போறாரு ன்னு விஸால் வாஸ் டெல்லிங் ஆன் அதர் டே. பின்னே ஃபெஸ்டிவெல் ஹாலிடேஸ் இருக்கு.”
இவள் என்ன இவ்வளவு பரபரப்பாக இருக்கிறாள்? எப்படி புரியவைப்பது? சொன்னால் மட்டும் எவ்வளவு தூரம் ஒப்புக்கொள்வாள்? என்று தெரியவில்லை. சூரியாவுக்கு நிர்குணானந்தரின் நினைவு வந்தது. கல்கத்தாவில் பயிற்சி பெற்றவர். கொழும்புவுக்கு, மதுரைக்கு இன்னும் எவ்வளவோ இடங்களுக்குப் போகும் சந்தர்ப்பங்கள் வந்தபோதும், மௌனமாக மேட்டுப்பள்ளி நிறுவனப் பொறுப்பாளாராக இருப்பதில் நிறைவடைவதாகத் தெரிகிறது.
“இவ்வளவு சின்ன ஸ்கூல்ல….” என்று ஆரம்பிப்பதற்குள்,
“ஊரோட பேருலயே பள்ளி இருக்கே. அதுதான் ஸ்கூல கொஞ்சம் சின்னதா வெச்சுருக்கோம்” என்று சொல்லிச் சிரிப்பார். அவர்தான் சொல்வதுண்டு.
“பாரு சூரியா . உள்ளே இருக்கிற ஒன்ணு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்குங்கற நெனப்பு இருக்கற வரைக்கும் ஒருத்தன் ரொம்ப கவலப்பட வேண்டியதில்ல. பாத்துகிட்டே இருக்கிற அதுவே கூட்டிக்கிட்டும் போயிடும்.”
ஆமாம். சூரியாவுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நாகராஜனுடன் நெருங்கிப் பழகாதவரை அவனுக்கு இந்த வேலை, சம்பளம் இவற்றைவிடவும் இது கொடுக்கும் ஒரு வாய்ப்பு பெரிதாகத்தான்பட்டது.
இந்த பொசிஷன் நிரந்தரமில்ல. அடுத்து வர டைரக்டர் மனசு வைக்கணும். அதே சமயம், நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு ஒரேடியா சொல்றதுக்கு இல்ல என்று சிலநேரம் தோன்றுவது உண்டு. “எல்லாம் ப்யூர் டேலன்ட் தான். இங்க ஃப்ளோர் மேனேஜ்மெண்ட் காரியம் எல்லாம் ஒண்ணுமே இல்ல, அப்டீன்னு நம்புவதற்கு நான் என்ன ஹைஸ் ஸ்கூல் பையனா? பத்து பன்னன்டு வருஷமா இதிலேயே செட்டில் ஆய்ட்டவங்களும் கேம்பஸ்ல இருக்காங்க. ஆனா, அவங்க ரிசர்ச், பப்ளிஷிங் அப்டின்னு ரொம்ப அலட்டிக்கவோ, பெருசா ஹோப் வெச்சுக்கவோ மாட்டாங்க என்கிறது வளாகச்சூழல். ஃபைனலி, ப்ரைவேட் இண்டஸ்ட்ரி இருக்கிற வரைக்கும் நம்ம பெருசா கவலைப்படவேண்டியது இல்ல. என்ன கொழந்தைங்க ஏர்காட்ல படிக்கணும்னும், போனவருஷம் யூரோப் டூர் போயிருந்தச்சேனும்” கேஃபடீரியாவ்ல ஒக்காந்து பேசமுடியாது. அவ்வளவுதான்.
ஆக, பசித்தவன், பருத்தவன் எல்லோருக்கும் இந்த உலகில் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.
“அதிகம் அலட்டிக்கொள்கிறேனா? நாகராஜனுக்கு உதவுவதும், இப்படி எனக்குள் கேள்வி எழுப்புவதும் பார் நான் எவ்வளவு பரிசுத்தமாக இருக்கிறேன் என அகங்காரத்தைத் திருப்தி செய்யும் பாவனையா ? எது இல்லை அவனிடம், ஏதோ ஒரு புள்ளியில் முன்னால் செல்லும் சந்தற்பம் எனக்கு கூடிவந்திருக்கிறது. சில தொடர்புகள் முதலாக அறிய இயலாத அது வகுத்து வைத்திருக்கும் ஆயிரம் கண்ணிகளில் சில அவனைவிடவும் எனக்கு இலகுவாக தளர்ந்துகொள்வதன் காரணமாகப் பிறக்கும் மெல்லியக் குற்றஉணர்வின் பாவனைதானா? ?” இப்படி எத்தனையோ கேள்விகள்.
“நாராயணி போன்றவர்கள், நெடுஞ்சாலையில் பாட்டியின் கையைப் பிடித்து நடந்துகொண்டிருக்கும் குழந்தை தன் கார் செல்லும் பாதையில் ஓடிவந்து விடுமா என்று சரியாகக் கணிப்பதில் நிபுணத்துவம் அடைவதை வாழ்வின் பேறாகக் கருதும் ரகம். இதோ பாடலும் பலவகை உணவுகளின் கலவையான வாசனையும் நிறைந்து ததும்பும் வளாகத்தில் கொப்பளிக்கும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அடியில் மறைந்திருக்கிறது ஒரு எரிமலை. ஐந்து வயதில் பள்ளிக்குச் சேரும்போதே அது புகைய ஆரம்பித்துவிட்டது. எல்லா மானுட உணர்வுகளையும் அடியிலிருந்து விழுங்கத்துடிக்கும் பகாசுரனின் நாக்காக இதற்கு அப்புறம் என்ன?அடுத்து என்ன?” என்ற மாறாக் கேள்விகள்.
“நிர்குணானந்தர் என்ன செய்து கொண்டிருப்பார்? பாடம் நடத்திக்கொண்டிருக்கலாம். இந்த நேரம் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கலாம். ஏன் பெருக்கிக்கொண்டோ, அலுவலக கூட்டத்திலோ, கீதை வாசித்துக்கொண்டோ கூட இருக்கலாம். இங்கே தன்னால் ஒரு காப்பியைக்கூட மனம் லய்த்துக் குடிக்க முடிவதில்லை. இந்த மனம் என்பது ஒரு தட்டான். அறைக்குள் வந்துவிட்ட தட்டான் இலக்கு இன்றி அலைவதோடு, எந்த நேரத்திலும் புலன்களின் இழுப்பில் மாட்டி மின்விசிறியின் இறக்கைகளில் அடிபட்டுச் சாகுமாறே விதிக்கப்பட்டுள்ளதா என்ன?”
நாராயணி எழுந்து நடக்கவிரும்புவது அவள் பார்வையிலிருந்தே சூரியநாராயணனுக்குத் தெரிந்தது. உடன் எழுந்துகொண்டான். வழியில் வழக்கமான புன்னகைகள், கைகுலுக்கல்கள். வெளியே வந்து இடதுபக்கம் திரும்பி நடந்துகொண்டிருந்தார்கள். புல்வெளிகளில் மாணவர்களிடம் கொப்பளிக்கும் இளமையின் மழைச்சாரல் என்றால் கல் இருக்கைகளில் காதலர் நனைந்திடும் காமத்தின் பனிச்சாரல். நூலகப்பணிகள், நண்பர்களுடன் ஆன சந்திப்புகள் இவற்றை நிறைவுசெய்துகொள்ள இதுதான் சந்தர்ப்பம். சார் இருந்தால் அறையிலிருந்து வெளிவர நேரமே அமையாது. மது கேளிக்கைகளின் இருதியில் சனிக்கிழமை பின்னிறவு நேரங்களில் உதிரக்கூடிய பேராசிரியர்களை மாணவர்களே தூக்கிச் சுமக்கிறார்கள் போன்ற அபூர்வமான சொலவடைகளில் உண்மை இல்லாமல் இல்லை.
“சீ யு அட் ஈவ்னிங்.” என்று சொல்லியவாறே சூரியா நடக்க ஆரம்பித்தான்.?
“டாக்டர் ஆர் மாணவன் என்ற நிலையில் தனக்கு இருக்கும் வாய்ப்புகள், தன்னைவிட சமூக அடுக்கில் கீழிருக்கும் அவனுக்கு அமையாமல் போய்விடுமா? அவனும் கூட டாக்டர் ஆர் அவர்களின் பிரியத்துக்குரிய மாணவன்தான். இப்படி வழிதவறி அலையச்செய்யும் குரலிடம் இருந்து தப்பிக்க முடிவதில்லை. பேராசிரியர் என்ன நினைப்பார்? மகன் தன்னினும் விரியவேண்டும், அதற்குறிய அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருமையும் தனக்கே வேண்டும் என்று விரும்பிடாத தந்தையர் இருக்கிறார்களா? நினைக்க என்ன இருக்கிறது? ஒருவேளை இருவரும் நேர்முகத்தேர்வுக்கு வர அதில் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்பட இயலும், பெரும்பாலும் அது நானாகவே இருக்கக்கூடும்.”
சூரியநாராயணணுக்கு சிரிப்பு வந்தது. தேர்ந்தெடுக்கப்படாமல் போகவேண்டும் என்று விரும்பும் போட்டியாளன் நான். “சரி சார் வரட்டும். இது பற்றி கலந்து பேசலாம். எப்படியும் இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன தானே?” சூரியாவுக்குத் தெளிவாக புரிந்துவிட்டது. இந்த வேலை தனக்கே கிடைக்கவேண்டும். ஆனால் தனது நேர்மையும் நிரூபிக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டும் நடக்க ஒரு நல்ல தந்திரம் இந்த கலந்துரையாடல் நாடகம்.
மாலை வழக்கம்போல துறை சந்திப்புகள், பேராசிரியர் இல்லாததால் அவர் சார்பில் நடத்தப்பட வேண்டிய வகுப்புகள், தொடர்ந்து வந்த நாட்களில் தேர்வுப்பணிகள் என ஓடியதில் சூரியாவின் மனம் இந்த அலைக்கழிப்பை மறந்துபோனதாக நம்ப விரும்பியது. இடையில் வந்துபோன புத்தாண்டு கொண்டாட்டங்கள், ஜூனியர்களின் புதுவருட தீர்மானங்கள், நண்பர்களின் விழாக்கால உபசரிப்புகள் எல்லாம் வேண்டியிருக்கத்தான் செய்தன. 8 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு டீன் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு என்று கடிதமும் மின்னஞ்சலும் வந்து சேர்ந்தன. பேராசிரியர் ராஜசேகர் 30ம் தேதி வந்துவிட்டதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், எந்த கொண்டாட்டத்தையும் அவர் தவறவிட்டுப் பார்த்ததில்லை. புதுவருடம் பிறக்கும் நாளில் மதிய உணவுக்குக் கூப்பிட்டிருந்தார். அவர் பிள்ளைகளுடனும், அம்மாவுடனும், வீட்டில் நாள் விறுவிறு என்று போய்க்கொண்டிருந்தது.
“எய்த்து சூரியாவுக்கு இண்டர்வியு இருக்குல்ல?”
மேடம்தான் ஆரம்பித்தார்.
சூரியா “ஆமாம் மேடம்” என்று சொல்லி தலையசைக்கும் போது பேராசிரியர் ராஜசேகர் கண்களின் வழியே ஒரு தெய்வம் காட்சிதந்து மறைவதைப் பார்க்க முடிந்தது.
சாப்பிட்டு முடித்து குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருந்து விடைபெற்று வரும்போது நேரம் மூன்றரையா அல்லது நான்கு இருக்குமா என்று சரியாக ஞாபகம் இல்லை.
வராண்டாவில் லியோ படுத்துக் கொண்டிருந்தது. பழுப்புநிற லெப்ரிடார். பேராசிரியர் தனது புத்தகங்களுக்கு இணையாக நேசிக்கும் சிவப்புநிற நிசாம் கார் கேட் அருகே பூச்செடிக்கு பக்கத்தில் பளபளவென்று நின்று கொண்டிருந்தது. அவருக்கு எதிலும் ஒரு ஒத்திசைவு இருக்கவேண்டும். கேம்பஸைத் தவிர்த்து இங்கு வீடு பார்த்திருப்பதில் அம்மா காலாரக் கோயில் போய்வரவேண்டும் என்று நினைக்கும் உள்ளம் பல மிஸ்டர் ஸ்மாட்களுக்கு அபத்தமாகத் தோன்றவும் கூடும். அலுவல் அறையில், வகுப்பில், ஆய்வுக்கட்டுரையில், சட்டை கையை மடித்துவிடுவதில் எங்கும் அவர் நாடும் ஒன்று அது தான். துறையில் மற்ற பேராசிரியர்களிடம் இருந்து அவரைத் தனித்துக் காட்டுவதும், அவர்தம் மாணவனாக கால்தொட்டு சூரியா பயில விரும்புவதும் அது மட்டும்தான். காம்பௌண்ட் கேட் வரை வந்து வழியனுப்பிவிடுவதில் பேராசிரியரின் மூத்தமகன் அபிஷேக்கிடம் அவருடைய ஒளியின் துளி நன்றாகவே தெரிகிறது. மாணவன் மகன் என்றால், பொறுப்பான மகன் நிச்சயமாக ஒரு நல்ல மாணவனும் தான். இதில் என்ன சந்தேகம்? என்று நினைத்தவாறு தன் வெஸ்பா ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு சாலையில் வந்து விடுதி நோக்கி ஓட்ட ஆரம்பித்தான். மாலை அருகணைவதை இதமான குளிர் உணர்த்திக் கொண்டிருந்தது. சாலையில், வேகமாகப் போக ஒரு காரணமேனும் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. மூன்று பையன்கள் சாலையில் எதிர் திசையிலிருந்து அப்படி ஏன் பறக்கிறார்கள்? நீதி மன்ற கதவுகளை தட்டிக்கொண்டே இருக்கும் முரட்டுக் குடியானவன் போல சிக்னலில் குழந்தையுடன் கார் சன்னல்களில் வளையல் ஓசை கிரீச்சிடத் தட்டி கை ஏந்தும் பெண். பொதுவாகச் சிலருக்கு வருடங்கள் மாறினாலும் வாழ்க்கை அப்படி ஒன்றும் பெரிதாக மாறிவிடுவதில்லை. சிக்னலில் ஸ்கூட்டரை ஆட்டோ முந்திச் சென்றபோது பேலன்ஸ் தவறி ஒரு பக்கம் சாய்ந்துவிட்டது என்பது அன்றைய நகரச் சந்தடியில் கலந்துவிட்ட ஒரு கூடுதல் சத்தம். அவ்வளவுதான்.
நினைவு மீளும்போது மருத்துவமனையில் கைகால்களை அசைக்க முடியவில்லை. விதவிதக் குழாய்கள், இதயத்துடிப்பை, சுவாசத்தை இன்னும் பிற இயக்கங்களை கண்காணிக்கும் கருவிகள். அவ்வப்போது வந்துபோகும் செவிலியரின் காலணி ஓசைகள். சூரியா மெல்ல குரல் எழுப்பி பேசுவதற்குள் இடையில் எவ்வளவு நாட்கள் கழிந்தன என்று சரியாக நினைவில் இல்லை. அப்புறம், இரண்டு நாட்களுக்குப் பிறகு பேராசிரியர் ராஜசேகர் வந்து பார்த்தபோது, கண்களில் இப்போது தோன்றி மறைவது அன்று கண்ட அதே தெய்வத்தின் பிரிதொரு முகமா! அவரது கனவு ஆய்வுத்திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டங்களில் வெளிப்படும் அதேபோன்ற பார்வை சூரியாவைப் பார்க்கும்போதெல்லாம் வெவ்வேறு வண்ணம் பூண்டு வெளிப்படுகிறதா என்ன! உறைந்துவிட்ட இரத்தம். அதை அறுவைசிகிச்சையால் சீர்படுத்தியிருக்கிறார்கள். முறைவைத்ததுபோல நாளுக்கு சிலபேர் என வந்துபோகும் நண்பர்கள், உடன் பயில்பவர்கள், நாராயணி, சப்னா உள்ளிட்ட தோழிகள், சில தூரத்துச் சொந்தங்கள். “சரி நிர்குணாநந்தர் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார். பொங்கல் விடுமுறையில் வந்து பார்ப்பதாக சொல்லியிருந்தேன். சனிக்கிழமை மாலைவேளைகளில் ஆன்லைன் மூலமாக பிரம்மஸூத்திர அறிமுக வகுப்புகள் நடத்தவேண்டும்” என்று கேட்டது அப்படியே நினைவிருக்கிறது. இந்த மனம் தனக்கு வேண்டியதைமட்டும் எப்படி பத்திரப்படுத்தி பாதுகாக்கிறது. பசித்திருக்கும் சவலைக்குழந்தையை நினைத்துக்கொண்டு சந்தையிலிருந்து திரும்பிவரும் அம்மா போல. எழுந்து நடக்க, அன்றாட வேலைகளை மெல்ல ஆரம்பிக்க 30 நாட்கள் வரை ஆகலாம். அதன் பிறகு சிறிது காலம் வரை நீண்ட பயணங்களைத் தவிர்க்கவேண்டும். விறைந்து வாகனம் ஓட்டுவதை கடினமான வேலைகளைச் செய்வதை ஐந்தாறுமாதம் தள்ளிப்போடுவது நல்லது என்று எதிர்பார்த்த மருத்துவ அறிவுரைகள் தான். விடுதி சரிப்படாது என்று ஒரு சிறிய வீடு பார்த்து வைத்து உதவும் நண்பர்கள் பணம் பற்றி கேட்கும் போதெல்லாம் முறைக்கிறார்கள். சார் தான் அதிகம் பார்த்துக் கொண்டார். மீதியை மடம் செலுத்திவிட்டது. நண்பர்கள் சில்லரைச் சமாச்சாரங்களை கவனித்துக் கொண்டார்கள். வீட்டுக்கு இரண்டு நாளைக்கு ஒருமுறை கண்டிப்பாக வந்துவிடும் நாராயணி. சுவாமிஜி போன சனிக்கிழமை வந்திருந்தபோது ”பிரம்ம சூத்திரம் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். இப்போது வாசிக்க கவிதை புத்தகங்களையும் கேட்க சில இசைக் கோப்புகளையும் பரிந்துரைத்திருக்கிறார். கவிதை என்னும் கண்களின் வழியே பார்க்கப்படும் உலகுக்கு இசையின் வண்ணங்கள் இன்னும் அழகு. மார்ச் இருபதாம் தேதி பன்னாட்டுக் கருத்தரங்கம். ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது. மிஸ்டர் பெர்ஃபெக்ஸன் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ?
புதன் கிழமை வேண்டுமென்றால் ஒருதடவை போய் பார்த்துவிட்டு வரலாம்தான். விக்னேஸிடம் சொன்னால் கார் எடுத்துக்கொண்டு வந்துவிடுவான்.
மெயின் கேட் கடந்து உள்ளே திரும்பும்போது பல நாட்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பொழுதுகளிலும் தனிமையை உத்தேசித்து வந்து உட்காரும் புல்வெளியும் தடாகமும் கண்ணில்பட படர்கிறது ஓர் மெல்லிய அமைதி. கார் குலுங்கும்போதும், திரும்பும்போதும் வலிக்கத்தான் செய்கிறது. வளைந்து மெல்லத் திரும்பி டிபார்மெண்ட் இருக்கும் வளாகத்துக்குக் கார் வந்து நிற்கும்போது , பார்த்துக்கொண்டிருக்கும் அதுவே கூட்டிக்கொண்டும் போகும் என்ற நிர்குணானந்தர் வார்த்தைகள் மனத்தில் ஒலிக்கவும்,
“இதோ முடித்துவிட்டு வருகிறேன்” என்று கையசைத்துவிட்டு நாகராஜன் புன்னகையுடன் வகுப்புக்குள் செல்வதை சூரியநாராயணன் கவனிக்கவும் சரியாக இருந்தது.