குயில் கூட்டம்

 

தூக்கம் கலைந்தப்பின்னும் எழ மனமின்றி படுத்திருந்தான் நவீன்.  சிரமப்பட்டு மெல்ல கண்களை திறந்து கடிகாரத்தை  பாதிக் கண்களால் பார்த்தான், மணி எட்டை கடந்திருந்தது பின்னர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.  இன்றுடன் அவனுடைய நாற்பத்தி ஐந்து நாட்கள் விடுமுறை முடிவடைகிறது. இன்று இரவு அவன் மீண்டும் துபாய் கிளம்ப வேண்டும்.  கண்களை மூடி சிறிது நேரம் படுத்துக் கொண்டிருந்தவன் மீண்டும் தூங்கிப் போனான். தூக்கம் கலைந்து அவன் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது மணி பத்தை நெருங்கியிருந்தது . வெளியே  நவீனுடைய அம்மா  யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருக்கும் சத்தம்  சிறிது அதிகமாகவே கேட்டது. கூர்த்து கவனித்தவன் குரலை வைத்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பது நண்பன் லத்தீப்பின் அம்மா கதீஜா என்பதை புரிந்துக் கொண்டான்.

 மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி அரைகுறையாக முகம் கழுவியவன் முகத்தைத் துடைத்துக்கொண்டு தன் அறையை விட்டு வெளியே வந்தான். அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த கதீஜா அவன் வந்ததை பார்த்ததும் புன்னகைத்தாள்.

“என்னப்பா இன்னைக்கு கிளம்புறீங்களா” கதீஜா.

“ஆமாம்மா நைட்டு கிளம்புறேன்”  சற்றே சுருதி குறைந்த ஒலியில் பதிலளித்தான் நவீன்.

“சரிப்பா உடம்ப பாத்துக்கோங்க போற இடத்துல கொஞ்சம் கவனமா வேலை பாருங்க”.

“சரிம்மா”

“அப்புறம் அம்மா கிட்ட கொஞ்சம் உப்புக்கறி கொடுத்துருக்கேன்  கொண்டு போய் சமைச்சு சாப்பிடுங்க போன தடவ கொண்டு போனது  எல்லாத்தையும் ஒரு பிலிப்பைன்ஸ் கார ஃப்ரெண்ட்  சாப்பிட்டுடானாமே”

“ஆமாம்மா உப்புக்கறினா அவன் உயிரை விடுவான்” என்றான் சிரித்தபடியே.

“எப்படியோப்பா இந்த லீவுல உனக்கு நல்லபடியா கல்யாணம் முடிஞ்சிடுச்சு உன் பிரண்டுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டோம் அவனுக்கும் கல்யாணத்தை பண்ணிட்டா எங்க கடமை முடிஞ்சிரும்”  என்றவள் அம்மாவிடம் வேறு கதைகள் பேச திரும்பிய போது அதற்காகவே காத்திருந்தவன் போல மெல்ல நழுவி தன் அறைக்குள் நுழைந்தான் அவன்.

 மல்லாந்து படுத்துக்கொண்டு மின்விசிறியை பார்த்துக் கொண்டிருந்தவன்  மீண்டும் கண் அயர்ந்து போனான்.

 கண்விழித்த போது கட்டிலில் அவனுடைய காலின் அருகில் அமர்ந்து துணி மடித்துக்கொண்டிருந்தாள் நந்தினி. செல்லமாக அவளை முதுகில் மிதிக்க சட்டென திரும்பியவள் அவனை பார்த்தவுடன் புன்னகைத்தபடி

“என்ன நல்ல தூக்கமோ” என்றவாறே துணி மடிப்பதைத் தொடர்ந்தாள்.

“ம்….” நவீன்.

“எத்தனை மணிக்கு ஃப்ளைட் உங்களுக்கு”

“எட்டரை மணிக்கு”

“இங்கிருந்து எப்ப கெளம்புவீங்க”

“தெரியல கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும்”

நவினுக்கும் நந்தினிக்கும் திருமணம் ஆகி இன்றோடு இருபத்தி ஆறு நாட்கள் முடிவடைந்திருந்தன.

தன்னுடைய நிறத்தைப் பற்றியும்   மெலிந்த தேகத்தைப் பற்றியும்  சற்றே ஏறிய முன்  நெற்றியை பற்றியும் நவினுக்கு எப்பொழுதும் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு.  அவனுக்கு நந்தினியைப் போல் அழகான தோற்றத்துடன் கூடிய அன்பான மனைவி  கிடைப்பாள் என்று  அவன் என்றுமே எதிர்பார்த்ததில்லை.

“ஏய்” சற்று கண்டிப்பும் அன்பும் கலந்த தொணியில் அழைத்தான் நவீன்.

“சொல்லுங்க”

“இங்க திரும்பு”

“சொல்லுங்க வேலை இருக்குல்ல”

“நான் நாளைல இருந்து இருக்க மாட்டேன் மிச்ச சொச்ச வேலை எல்லாம் நாளைக்கு பாரு” சற்றே கோபமாக சொன்னான்.

“சரிங்க சொல்லுங்க”  முகத்தில் புன்னகை தவழக் கேட்டாள்.

“உடம்ப பாத்துக்கோ வேளா வேளைக்கு சாப்பிடு சரியா”

“நீங்களும் உடம்ப பாத்துக்கோங்க கண்ட சாப்பாடு எல்லாம் சாப்பிடாதீங்க” என்றாள் சற்றேக் கண்டிப்பாக.

 சரி என்பது போல் தலையாட்டினான் நவீன்.

 “எப்ப திரும்ப வருவீங்க”

 “எப்படியும் ஒரு வருஷம் ஆகும்”

 அவள் பதில் எதுவும் பேசவில்லை.

 தெருவிலிருந்து வந்த புல்லட் சத்தத்தை வைத்து அக்காவும் மாமாவும்  வந்திருப்பதை  உணர்ந்தான் நவீன்.

 நந்தினியும் அதை உணர்ந்தவளாய் அவர்களை வரவேற்க  ரூமை விட்டு வெளியேற

 அவர்களது அன்யோன்யமான உரையாடல் தடைப்பட காரணமாக இருந்த அக்காவின் மேல் ஏனோ கோபம் வந்தது அவனுக்கு.

 அவன் நான்கு வருடங்களுக்கு முன் முதல் முதலாக வெளிநாட்டு வேலைக்கு போகும் போது வெளிநாடு போகப்போகிறோம் என்று மனதுக்குள் இருந்த மகிழ்ச்சியும் துள்ளலும் இப்போது சுத்தமாக மறைந்து போனது போல் இருந்தது.

 நான்கரை வருடத்திற்கு முன்பு அப்பாவின் உடல் நலக்கோளாறு மற்றும் அக்காவின் திருமண செலவால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்கு வெளிநாடு வேலைக்கு செல்வதுதான் தீர்வு என முடிவெடுத்த போது நவினுக்கு வயது இருபத்தி ஆறு.

 அவன் படித்த ஐடிஐ படிப்பிற்கு உள்ளூரில் தகுந்த சம்பளம் போதவில்லை என்பதும் அவன் வெளிநாடு செல்ல ஒரு காரணமாக அமைந்தது இந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே தாயகம் திரும்பி இருக்கிறான்.

 சில சமயங்களில் அவனுக்கு தன் பெற்றோரின் முகங்கள் கூட மறந்துவிட்டது போன்ற எண்ணம் தோன்றும்.

  ஒவ்வொரு முறை விடுமுறைக்காக தாயகம் திரும்பும் போதும்  இனி சொந்த ஊரிலேயே தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும் மறுபடியும் இந்த நாட்டுக்கு திரும்பக் கூடாது என்று எப்போதும் தோன்றும் அவனுக்கு. ஆனால் குடும்பத்தின் பணத்தேவையும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் அவனை மீண்டும் மீண்டும் இந்த சூழலுக்குள் சிக்கவைத்துக் கொண்டிருந்தது.

 கட்டிலை விட்டு எழுந்து ஹாலை வந்தடைந்தவனுக்கு அடுப்பங்கறையில் அக்கா, அம்மா, நந்தினி ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது. டிவியை ஆன் செய்து ரிமோட்டை கையில் எடுத்தான். எந்த சேனலிலும் நிலை கொள்ள மனமில்லாமல் வெகு நேரம் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான் சிறிது நேரத்தில் நவினின் அப்பா வீடு வந்து சேர அவர் வருகையை பார்த்ததும் மதிய சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்தான். காலை உணவு உண்ணதாதால் சற்றே பசி அதிகமாக எடுத்தது நவீனுக்கு. சிறிது நேரத்திலெல்லாம் அனைவரும் சாப்பிடத் தயாராயினர்.  நந்தினி மீன் குழம்பு சமைத்திருந்தாள். அம்மா வைக்கும் மீன் குழம்பு அளவிற்கு சுவையாக இல்லை என்றாலும் நந்தினியின் மீன் குழம்பு ஏனோ பிடித்துப் போனது அவனுக்கு.

 சாப்பிட்டு முடித்து தட்டை எடுத்து கை கழுவ அடுப்பங்கரை சென்றவனை பின்னாலிருந்து மெதுவாக அழைத்தாள் அம்மா.

“தம்பி இனிமே பணம் அனுப்பும் போது கொஞ்சம் சேர்த்து அனுப்பு பா இப்ப வீட்ல கூட ஒரு ஆள் வந்துருச்சுல்ல”

 “சரிம்மா” என்றான் எந்த மறுப்புமின்றி.

 “வாடகை வேற கூட்ட போறதா வீட்டுக்காரர் சொல்லிட்டு இருக்காரு உன் மாமாகிட்ட சொல்லி வீடு கட்ட இடம் பாக்க சொல்லி இருக்கேன்” அம்மா பேசியது நன்றாக கேட்ட போதும் பதிலுக்கு எதுவும் பேசாமல் அடுப்பங்கரையை விட்டு வெளியேறினான் நவீன்.

 ஹாலில் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தவன் நேரமாவது உணர்ந்து கிளம்ப தொடங்கினான்.

 மணி ஐந்தரையை கடந்திருந்தது வீட்டு வாசலில் டாக்சி தயாராக அவனுக்காக காத்துகொண்டிருந்தது.

 அப்பாவும் மாமாவும் சாமான்களை டாக்ஸியில் ஏற்றுவதில் மும்மூரமாக இருந்தனர்.

நந்தினியிடமிருந்து விடைபெறத் தயாரானான் நவீன்.

 அவனையே ஒருவித  மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

“இங்க பாரு அம்மா கிட்ட கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்கோ ஏதாச்சு சொன்னா கோபப்பட்டு சண்டைக்கு போகாத” என்றான்  சிரித்தபடியே.

“ஆமா உங்க அம்மா என்ன அடிக்காம இருந்தா சரி” என்றாள் பதிலுக்கு சிரித்தவாறு.

 அவ்வளவுதான் இனி இந்த சிரிப்பை மீண்டும் நேரில் பார்க்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்பதை நினைத்தபோது ஏனோ மனது வலித்தது.

“நீயும் வரலாம்ல ஏர்போர்ட்டுக்கு”.

“இல்லைங்க வந்தா வீட்டுக்கு திரும்பி வர வண்டி கிடைக்காது நைட்ல”.

அவள் கூறியது சரி என்றே பட்டது அவனுக்கு.

நவின் அனைவரிடமும் விடை பெற்று கிளம்பிய போது லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது.

 வழியில் தெரு விளக்குகள்  மின்னத்தொடங்கி இருந்தன. அவற்றை ஒருவித வெறுமையோடு பார்த்துக் கொண்டான் நவீன்.

தான் துபாயிலிருந்து திரும்பி வந்தபோது இதே சாலையின் வழியாகவே வீட்டை அடைந்திருந்தான் நவீன். அப்போது  மனதுக்குள் இருந்த  குதூகலம் இப்போது சுத்தமாகவே இல்லாமல் இருந்தது அவனுக்கு.

 சிறிது நேரத்திலெல்லாம் மதுரை விமான நிலையம் அவனை அன்போடு வரவேற்றது.

 டாக்ஸியில் இருந்து விடைபெற்று கைக்கடிகாரத்தை பார்த்த போது தான் எதிர்பார்த்ததை விட சீக்கிரம் வந்துவிட்டதை உணர்ந்தான்.

 இளைப்பாறுவதற்கு ஒரு மூலையில் இடம் பார்த்து அமரவும் அவனுடைய கைப்பேசி சிணுங்கவும் சரியாக இருந்தது எடுத்து காதில் வைத்தான்.

“சொல்லு லத்தீப்”

“என்ன மாப்ள கிளம்பிட்டியா”

“ஆமாடா  அம்மா உப்புக்கறி கொடுத்து இருக்காங்க”

“ஆமா அதுக்கு வேற வேலை இல்ல” சற்றே சலிப்புடன் சொன்னான் லத்தீப்.

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் மாப்ள”

 “என்னடா”

 “உனக்கு வீட்ல வரன் பாக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்” சற்றே குதூகலம் கலந்த குரலில் சொன்னான் நவீன்

“ஆமா இப்ப அது ஒன்னு தான் குறைச்சல்” லத்தீப்பின் இந்த பதிலை நவீன் எதிர்பார்த்திருக்கவில்லை.

 சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான் லத்தீப்

“வெளிநாட்டு வேலைக்கு வந்து அஞ்சு வருஷம் ஆயிடுச்சு மாப்ள ரெண்டு வாட்டி தான்  இதுவரைக்கும்  ஊருக்கே போயிருக்கேன் ஊர் வாசமே கிட்டத்தட்ட மறந்து போச்சு இன்னும் எவ்வளவு நாள் இப்படி ஓட போறன்னு தெரியல இதுல கல்யாணம்னு ஒன்னு பண்ணி அந்த பொண்ணு வாழ்க்கையை ஏன் கெடுக்கணும்”. அவனை சமாதானம் செய்ய மனதில் எதுவும் வார்த்தைகள் தோன்றியிருக்கவில்லை நவீனுக்கு.

 மீண்டும் தொடர்ந்தான் லத்தீப்

“ஏன் மாப்ள நம்ம பள்ளிக்கூடம் படிக்கும்போது குயிலை பத்தி ஓரு பாடம் எடுத்தாங்கல ஞாபகம் இருக்கா”

“இல்லையே மாப்ள” சற்றே குழப்பமாக நவீன்.

“அது ஒன்னும் இல்ல மாப்ள,  குயிலு அடுத்த பறவையோட கூட்ல தான் போய் முட்டை போடும் அதுக்கு நிரந்தரமா கூடு கிடையாதுனு படிச்சிருக்கோம்ல கிட்டத்தட்ட நம்ம நிலைமை இப்போ அது மாதிரி தானே இருக்கு “என்றபடி சிரிக்க தொடங்கினான் லத்தீப்.

நவீனால் தான் அதை நகைச்சுவையாக ரசித்து சிரிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *