மோனிகாவுக்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கும் போது அறைக்குள் அமர்ந்திருப்பது அசௌகரியமாக இருந்தது. கனத்த இரும்பு சங்கிலியால் கட்டபட்டது போன்ற சடவுடன் ஐன்னல் வழியே நந்தியாவட்டை மரத்தில் பெய்யும் மழையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆரம்பத்தில் இந்த மருத்துவமனைக்கு வந்து திரும்பும் போது பெரிய ஆசுவாசத்தையும் அனைத்திலிருந்தும் மீண்டுவிட்டதாகவும் தோன்றும். மாதம் ஒருமுறை அப்பாயின்மென்ட். பார்கவி பல முறை சொல்வதுதான் ‘ நீ உறவுகளில் அதி தீவிரமான எதிர்பார்ப்பை விதைக்கிறாய்’.
உறவு என்பது காற்று மழை போல, காலநிலை கூடி வரும்போது கொஞ்ச நேரம் உணர்வால் அடையக்கூடிய உச்சம். அதற்குபின் எல்லோரும் தனித்தனி மனிதர்கள். நீ உணர்வின் உச்சத்தில் இருக்கவே விழைகிறாய் என்றார்.
ஆரம்பத்தில் அது சரியானதாகவே தோன்றியது. மாத்திரைகள் இப்போது தேவையில்லை எனச் சொல்லி சில உடற்பயிற்சிகளை பரிந்துரைத்தார். ஆனால் இந்த முறை நான் தெளிவாக உணர்ந்தேன். எனக்கும் விக்னேஷீக்கும் கொஞ்சமும் பொருந்தாது என பிரிந்துவிட்டோம். இது நடந்து இரண்டு நாட்களும் என் மனம் தாங்கமுடியாத உற்சாகத்தில் மிதந்தது. என் மனதில் இருந்து எழும் ரீங்காரம் எனை சுற்றிய பொருட்களின் லயத்துடன் இணைந்து நாங்கள் ஒரு ஒற்றை பெரு இருப்பாக தோன்றினோம். அன்றைய இரவு யாருமற்ற தோட்டத்தின் இருளில் வானில் தெரிந்த நட்சத்திரங்களையும் பவளமல்லி மரத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். உடலின் ஒவ்வொரு பாகமும் தித்தித்தது. கை நுனியை நக்கினேன். அப்படி ஒரு அமிர்தத்தை என் வாழ்வில் நான் அருந்தியதில்லை. யாருடைய எச்சிலின் சுவையை விடவும் இனிய மது அது. என் டீசர்ட்டின் விளிம்பை இழுத்து நாடியால் என் மார்பில் உரசினேன். எங்கும் இன்பம் வழிந்தது. யாருமற்று எனக்காக மட்டும் இரவெனும் மாயவேடம் அணிந்து நின்றிருக்கிறான் அவன்.
அடுத்த நாள் எங்கள் வீட்டின் பக்கவாட்டு இருட்டில் நின்றிருந்த ரஸ்தாளி வாழைக்கு அடியில் நின்று வானத்தைப் பார்த்தேன். வானத்தில் இன்றும் நட்சத்திரங்கள் அரைத்த வைரத்தை தூவிவிட்டது போல் இருந்தது. காற்றுக்கும் குறைவில்லை. ஆனால் குறுக்காக ஒன்று வந்திருந்தது. இருட்டும் நேற்று போலத்தான். என்ன என்ன என அலசினேன். அது என்ன என்று எழும் கேள்வியின் இடையில் நான் மூடி வைத்திருந்த பூதங்கள் எழுந்தன. விக்னேஷின் ஞாபகம் வந்தது. போனை எடுத்து அவனை அழைக்கச் சென்ற கையை கட்டுப்படுத்தினேன். திருப்பி கூப்பிட முடியாதபடி அந்த உறவை துண்டித்துவிட்டேன். மனம் தன்னிச்சையாக சுழலும் எந்திரம் போல தொடர்ந்து நிகழ்வுகளை முகங்களை வந்து கொட்டியது. அவற்றில் இருந்து தப்பிக்க ஆழ மூச்சை இழுத்துவிட்டபடி சன்சேட்டை பார்த்தேன். பின் வானத்தை. வாழை சாய்ந்திருப்பது போல் தோன்றியது. பின் அட்டை போல இருட்டுக்குள் ஒட்ட வைத்ததை பிரித்தபடி உள்ளே இருந்து வரும் ஒரு கையை கண்டேன். நான் நன்றாக அறிந்த ஒரு கை. அம்மம்மாவின் இதமான வெதுவெதுப்பை கொண்ட கை அல்ல. விக்னேஷின் நான் இருக்கிறேன் என உறுதி தரும் கையும் அல்ல. அம்மாவின் பாதுகாப்பானதோ, பாட்டியின் கண்டிப்பு நிரம்பியதோ அல்ல. ஒன்று மட்டும் தெரிந்தது அதற்கு உணர்வுகள் கிடையாது. குளிர்ந்து உலோகம் போல மாறியவை. தாத்தாவின் மாமாவின் மேல் வீட்டில் இருந்த பாலாஜியின் தந்திரமான கட்டளையிடும் கை.
வீட்டுக்குள் சென்று படுத்தேன். அறையின் இருட்டுக்குள் உடல் மாறி மாறி தோன்றியது. சுவர்கள் சாய்ந்தன. வளைந்து கிடைமட்டமாக விழையும் சுவரை பார்த்தபடி படுத்திருந்தேன்.கொஞ்சம் கண்ணை மூடினாலும் சுவர் என் மேல் விழுந்துவிடும் எனத் தோன்ற கண்களை மூடமுடியவில்லை. நிலம் அதிர்ந்தது. வீடு குலுங்கியது. என் மனம் பறவை விட்டு பிறிந்த மரக்கிளை போல் அதிர்ந்து கொண்டிருந்தது. குலுங்கும் நிலத்தை தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்ட கைகள் யாருடைவையோ. எழுந்து விளக்கைப் போட்டால் அனைத்தும் நின்றுவிடும். ஆனால் என் உடல் அசையவில்லை. மூளைக்கும் உடலுக்குமான பிணைப்பு விடுபட்டு இரண்டும் வேறு வேறு பிரபஞ்ச விதிப்படி இயங்கின. இடையில் இந்த மனம். என்ன செய்ய.
பின் அது தினமும் வந்தது. அணைக்கப்பட்ட அறையின் சுவரெல்லாம் உடல்களாகவும் கைகளாகவும் தோன்றின. வெறி கொண்டு பற்ற விழையும் கைகள்.
பார்கவி ‘உனக்கு மாத்திர தேவையில்லை.எனக்காக ஒன்னு பண்ணு தெனமும் டைரி எழுது. குடிக்கனும் போல இருந்துச்சுன்னா நல்ல நண்பர்களோட குடி, ரிலேசன்ஷிப்புல பதட்டமில்லாம எறங்கு. ஆனா ஒன்ன முழுசா விட்றாத. நல்லது கெட்டது சரி தப்பெல்லாம் பாக்காம ஒனக்காக கொஞ்ச நாள் இரு. உனக்கு புடிக்கிலேன்னா முகத்துக்கு நேரா புடிக்கலேன்னு சொல்லு. டோன்ட் லிவ் பார் அதர்ஸ், பர்ஸ்ட் ட்ரை டு லீவ் வித் யூ அண்ட் லவ் யூவர்செல்ப்’
நான் தினமும் நாட்குறிப்பு எழுதத் தொடங்கினேன்
‘அப்போது அப்பா எங்களை விட்டு பிரிந்து ஸ்டெல்லா நர்ஸீடன் சென்று வாழ்ந்துகொண்டிருந்தார். அப்பாவும் அம்மாவும் ஒன்றாகத்தான் மதுரையில் எம்.பி.பி.எஸ் படித்தனர். எம்.எஸ் படிக்கும் போது திருமணம் செய்து கொண்டனர். அப்பா சர்ஜனுக்கு படித்தார். ஆனால் அப்பாவிற்கு அந்த உளநிலை கிடையாது. அதனால் தன்மேல் மிகப் பெரும் அவநம்பிக்கையுடன் கற்கத் தொடங்கினார். அது சீழ் போல் அவருக்குள் வளர்ந்தது. எந்த பெண்ணையும் போல அம்மாவிற்கு அவரின் புண் எளிதாகத் தெரிந்துவிட்டது. எல்லா கணவன்களைப் போல் அவரும் அதை அறிந்துகொண்டார்.
பாரி பிறந்தது முதல் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டைதான். நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வருவது குறைந்துவிட்டது. அப்பா தனியாக கிளினிக் வைத்திருந்தார். வீட்டுக்கு வருவது பெரும்பாலும் பாரியைப் பார்க்க. போகும் போதெல்லாம் கையில் பணம் கொடுப்பார். எனக்கு தனியாக எதுவும் கொடுத்ததில்லை.
அங்கு எங்களுடன் அம்மம்மா தங்கியிருந்தார்கள். என் சிறுவயதில் அம்மா என்னைத் தொட்டு கொஞ்சிய நினைவே எனக்கு இல்லை. அப்பா என்னைத் தொட்டதேயில்லை. அம்மம்மா கையின் சூடும் திருநீறு மணக்கும் அடிவயிற்று சேலையும் இப்போதும் நினைவில் எழுகிறது.
பெரும்பாலும் தனிமையில் தான் இருப்பேன். எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்த சன்சேட்டில் இறங்கி அமர்ந்து கொள்வேன்.
சாயுங்காலத்தில் தீயிலிருந்து எழும் தூசு போல பறந்து செல்லும் வவ்வால்களும், மௌனமான ஸ்வரம் போல ஏறி இறங்கி பறக்கும் நீர்க் காக்கைகளும் மறைந்து வானம் செந்தூரம் மாம்பழத்தை போல சிவந்து பின் மசமசவென இருட்டு என்னை பற்றிக் கொள்ளும் வரைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
ஜெனோவின் அறை கேளம்பாக்கத்திலிருந்து மாமல்லபுரம் போகும் சாலையில் வலதுபக்கம் திரும்பி நேராக சென்று கடல் மோதுவதற்கு முன் இடதுபக்கத்தில் இருந்தது. இரண்டுமாடி கட்டிடம். இங்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். மொட்டை மாடியில் படுத்தால் கடலின் நீர்த்துளி வந்து விழும். காரை பெயர்ந்து பச்சை பெயிண்ட் உதிர்ந்து தரையிலிருந்து அரையடி உள்ளே இருக்கும். இதை எல்லாம் களைந்துவிட்டால் வடஐரோப்பிய சிறுநகரத்தில் ஜன்னலில் பூந்தொட்டி வைத்து இருக்கும் வீடு போல் தோன்றியது. பக்கத்து வீட்டுக்கு இடைபட்ட சிறு இடவெளியில் நித்ய கல்யாணி பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தது. வாசிலிலே நின்றிருந்தாள் ஜெனோ.
‘ வாடி, அழகாயிட்ட’ என சிரித்தபடி தோளைத் தொட்டு அணைத்தாள். எவ்வளவு நாளாச்சு இதுபோன்ற தொடுகையை உணர்ந்து. அவள் கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்துக்கொண்டேன்.
ஜெனோவிற்கு பெரிய முழி . முகம் முட்டை போல இருக்கும். மாநிறம். இடதுபக்கம் மூக்குத்தி மட்டும் போட்டிருப்பாள். சிரிக்கும் போது அழகிய ஆரோக்கியமான முன் வெள்ளை பற்கள் கீழ் உதட்டை மீறி வர, முயல் குட்டியைப் போல தோன்றுவாள்.
திரைப்படங்களுக்கு திரைக்கதை உதவி செய்வாள். கவிதை வாசிப்பாள். அவளிடம் பிடிக்காத இரண்டு விஷயஙகள் கஞ்சா குடிப்பது மற்றும் காளி மோகனரங்கனுடனான அவள் உறவு. காளி நடிப்பு எனக்கு பிடிக்கும். இப்போது நடிப்பவர்களில் அவர் மிக சிறப்பான நடிகர். ஆனால் ஏதோ ஒரு நெருடல். என்னிடமும் ஒருமுறை ‘ உன்னையும் எனக்கு பிடிக்கும்’ என சொல்லியிருக்கிறார். அவர் குடும்பம் திருவண்ணாமலையில் இருந்தது. அவர் மனைவிக்கு இந்த உறவு வதந்தியாக தெரியும்.
காலையில் எழுந்து கடற்கரைக்குச் சென்றேன். வலதுபக்கம் அடுகம் பூக்குள் தன் மான் பாதத்தடத்தை விரித்து நின்றிருந்தது. பச்சை வானத்துக்கிடையே ஊதா நிற பரல்கள் போன்ற பூக்கள் ஈரமாகி இருந்தன. ஒரு பூவை எடுத்து காதில் வைத்துக் கொண்டேன். ஆள் ஆரவம் இல்லை. கடற்கரை அனாதையாக ஒலமிட தூரத்தில் ஒருவர் அலைகளை கடந்து கணுக்கால் அளவு நீரில் அமர்ந்து கடனைக் கழுவிக் கொண்டிருந்தார். முகத்தை திருப்பிக் கொண்டேன். சாம்பல் பூத்திருந்த வானத்தினூடே தன் கட்டுகளை உதறிவிட சொல்லி முறையிடும் கடலைப் பார்த்தேன். மனம் துக்கமாக இருந்தது. இன்று யாரும் கடலுக்குச் செல்லவில்லை. கொஞ்ச தூரம் நடந்து சென்றேன். செருப்பை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு துகளும் என் கால்களைத் தொடுவதை அனுபவித்தபடி நடந்தேன். பின் திரும்பி வரும் போது கார்த்திக் கையில் சிலம்பு கம்புடன் கடற்கரைக்கு வந்தான். தூரமாக எப்போதும் என்னைப்பார்ப்பவன் தலையைக் குனிந்தபடி சென்று ஒரு சிறு கணத்தில் என் கண்களை சந்தித்து அதிர்ந்து விலகி செல்வான். இன்று என்னையே பார்த்தபடி நேராக வந்தான். அவன் கண்கள் ஈர்ப்பு கொண்டதாக தோன்றியது. எனக்கு பிடித்த கருப்பு நிறம், கூர்மையான கண்களை இன்று தான் பார்க்கிறேன், அழகிய நாடி அவனை அழகாக காண்பித்தது. அதைவிட ஆபத்தில்லாத நெருக்கம் இருந்தது. அவன் பார்வை சுடவில்லை.
‘ நல்லா இருக்கீங்களா’
‘ ம், நீ’
‘ நீங்க கத எழுதுவீங்களா’
‘ இல்ல படம் வரைவேன், கத வாசிப்பேன், ஏன் கேக்குற’
‘ நான் இப்பதான் வாசிக்க ஆரமிச்சுருக்கேன், இத்தன நாள் ஏன் தேவையில்லாம கம்பு சுத்துனேன்னு தோனுது’
‘ அப்படியா, அப்டில்லாம் நிப்பாட்டிறாதப்பா, நிறைய பேன்ஸ் இருக்காங்க உனக்கு’
அவன் அலட்சியமாக அதை கேளாதவன் போல ‘ நேத்து காடுன்னு ஒரு நாவல் படுச்சு முடுச்சேன். மனசு ஒருமாதிரி கொந்தளிச்சு போத ஏறியிருந்துச்சு. எல்லாமே பச்சையா மாறிருச்சு. ரொம்ப தனிமையா பீல் பண்ணுனேன். நீங்க காடு சம்மந்தம்மாதானா வேல பாக்குறீங்க, காளி அண்ணன் சொன்னாரு’
நான் செல்லும் நேரங்களில் அவன் ஏதேச்சையாக எதிர்ப்படுவான்.
‘ எனக்கு சிலம்பம் சொல்லித் தர்றியா’ என்றேன்
தினமும் மாலையில் சிலம்பம் வகுப்புக்கு சென்றேன். கம்புடன் கூடவே அலைந்தேன். உடல் சோர்வு தெளிந்து உல்லாசமாக மாறியது. சதைகள் இறுகுவது மனதை இலகுவாக்கியது.
கார்த்தியை ஒருநாள் காளி இருக்கும் நேரத்தில் வீட்டுக்கு அழைத்திருந்தேன். காளியின் முகத் தவிப்பை காண சந்தோஷமாக இருந்தது. கார்த்தி நிலை கொள்ளாமல் வீட்டில் அலைந்து மேய்ந்தான்.
‘ இன்னக்கி மீன் சமைக்கலாமா’ என்றான்
அவனே சென்று சங்கரா வாங்கி வந்து அற்புதமாக சமைத்திருந்தான்.
அவன் கண்களை ஆழமாக பார்த்தபடி ‘பெரிய ஆளுதாப்பா நீ’ என்றேன்.
அவன் கண்களை விலக்கவில்லை. பின் அடிக்கடி வந்தான். நாங்கள் புத்தகங்கள் காடு சமையல் பற்றி பேசிவிட்டு ஒருவரை ஒருவர் தின்பது போல் பார்த்தபடி அமர்ந்திருப்போம். அவனுடைய தயக்கம் எனக்கு பிடித்திருந்தது.
ஜெனோ படப்பிடிப்புக்காக கேரளா சென்றிருந்தாள். மழை பெய்து கொண்டிருந்தது. படுக்கையிலே படுத்திருந்தேன். காலையிலே கார்த்தி மெசேஜ் அனுப்பியிருந்தான். அவனுக்கு பதில் அனுப்பிவிட்டு சமையலறையில் டீ போட்டேன். ஜன்னல் வழியாக கடல் கூப்பிட்டது. கதவை பூட்டிவிட்டு கடலில் இறங்கினேன். அலைகள் ஆக்ரோசமாக தழுவின. நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை. தனிமையில் தூங்கவே முடியவில்லை. அலை ஆயிரம் கைகளாகி என்னை பற்றித் தழுவி இழுத்து தள்ளியது. நானும் கடலும் அலைகளும் மட்டுமான உலகத்தில் நீந்தினேன். பின் கோபம் கொண்டு என்னை தூக்கி கரையில் குப்புறத் தள்ளியது. அதை அடித்தேன். மணலில் பலவித வடிவங்களை வரைய அலை வந்து உண்டு மீண்டது.
பின்னால் கார்த்திக் நின்றிருந்தான். சைகையால் குதி என்றேன். தயங்கி மெல்ல வந்து அலை கால் தொட பின்னால் சென்று உள்ளே விழுந்தான். எவ்வளவு நேரம் குளித்தோம் எனத் தெரியவில்லை. வெண்ணுரை அலைகள் தள்ளிய சிப்பிப் போல் கரையில் கிடந்தோம். உடல் என்பதை மறந்து. எழுந்தவன் சுற்றிப் பார்த்துவிட்டு தலையை கவிழ்த்து நடந்தான்.
அறைக்கு திரும்பி குளித்து உடைமாற்றினோம். இளசடவு அழுத்த மெத்தென்ற பஞ்சுப்பை வைத்த பிரம்பு நாற்காலியில் கிடந்தேன். நீலவெளிச்சம் சூழ்ந்த அறை தூங்கச் சொன்னது. அவன் சோபாவில் அமர்ந்திருந்தான். ஹாலில் பாய் விரித்துப் படுத்தேன். திரும்பி அவனைப் பார்த்து ‘ நீ தூங்கலயா’ என்றேன்.
அவன் எந்திரம் போல் எழுந்து என் அருகில் படுத்தான். என் உடலின் பாகங்கள் முழுக்க தரையில் அழுத்த ஓய்வாக இருந்தது.
‘ நீங்க அழகாக இருக்கிறீங்க’ என்றான்
அவன் பக்கமாய் திரும்பி அவனைப் பார்த்தேன். அவன் என் கண்களின் ஆழத்தைப் பார்த்தான். என் கண்கள் அலைபாய மூளை வேகமாக இயங்கியது.
‘ஏன் உங்கள் தலை சூடாக உள்ளது’ என என் தலையைத் தொட்டான்.
நான் ‘ உன் தலையும் தான்’ என அவன் தலையைத் தொட்டு காட்டினேன்.
இயல்பாக இருக்க முனைந்தாலும் என் மூளை சூடாகியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன். வெறுமனே படுத்திருக்கிறேன் அவ்வளவுதானே.
நான் என்னையறியாமல் ‘ என்னிடம் உனக்கு பிடித்ததென்ன’ என்றேன்
‘ பெரிய முழி, பெரிய தலை. எல்லாமே பெரியதாக உள்ளது’ என்றான்
‘ எல்லாமே என்றால்’
அவன் எதுவும் சொல்லாமல் விட்டத்தைப் பார்த்தான்.
‘ உனக்கு என்னிடம் பிடித்ததென்ன’
‘எனக்கு பொண்னுன்னாலே பிடிக்கும்’ என்றான்
ஒருவித அருவருப்பும் கோபமும் வந்தது. அவனை நெருங்கிப் படுத்தேன். அவன் கைகள் என் வயிற்றில் முட்டின. கால்களை மேலேப் போட்டான். என்னுடைய கண்ணத்தை கைளில் ஏந்தி முத்தம் கொடுக்க நெருங்கினான்.
‘ உள்ள போவோம்’ என்றேன்
மந்திரித்தவன் போல் என் பின் வந்தான். அவனை அப்படியே பலி கொடுக்கலாம் எனத் தோன்றியது.
அன்று நானே சமைத்தேன். பேன்கேக். எனக்கு சமைக்கத் தெரிந்த இரு உணவு. பேன்கேக் மற்றும் பாஸ்தா. அவன் ருசித்து சாப்பிட்டான்.
ஆனால் அவன் கையின் முதல் தொடுகை நிகழ்ந்த அன்றே எனக்கு தெரிந்துவிட்டது நாங்கள் இணையமாட்டோம். ஆனால் எப்படி அதை நேரடியாக சொல்வது. கனவில் என அவன் முகம் வேறெங்கோ லயித்திருந்தது. எனக்கு கழிவிரக்கமும் குரூரமும் ஒரே நேரம் தோன்றியது.
நான் அங்கிருந்து கொஞ்சம் அகல விரும்பினேன். முல்லைக்கு சென்றேன். அங்கு கிராப்ட் பெஸ்ட் நிகழ்ந்திருந்தது. எனக்கு பிடித்த புற்கள் வேய்ந்த அறையில் படுத்திருந்தேன். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. காலையிலே அபியைப் பார்த்தேன். இப்போது நன்றாக வளர்ந்துவிட்டான்.
மீண்டும் ஒருவித சோர்வு மனநிலை. சாயுங்காலம் நான் மட்டும் இருக்கும் போது, அபி வந்தான். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவன் குரல்வளை முற்றிய சங்கைப் போல் இருந்தது. அது நன்றாக தெரியும்படி தாடையை ஆட்டி ஆட்டி பேசினான். இப்போது பாடக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஒரு பாடல் பாடினான். ஹிந்துஸ்தானி பாடல்களைப் போல உச்சத்தில் ஆலமரத்தின் கீழ் நிற்பது போல் உணர்ந்தேன். என் கால்கள் அவன் காலில் பட அவன் தொண்டை இடறியது. சிறுவன். அதனாலேயே சீண்ட தோன்றியது. கால்களை நெருக்கி வைத்தேன். அவனும் படுத்துக்கொண்டான். என் அருகில் அவன் நெருங்கி வந்துபோது என் வயிற்றில் விதை முளைக்கும் குறுகுறுப்பு எழுந்தது.
முத்தமிட வந்தபோது ‘நாம என்ன பண்ணிட்ருக்கோம், இது சரியா’ என்றேன்.
வெளிறியவனாக எழுந்து மொத்த உடலும் கூசி குறுகி அமர்ந்தான். எழுந்து செல்பவனைப் பார்த்தபடி படுத்திருந்தேன். நாளை இதை கார்த்தியிடம் சொல்ல வேண்டும்.
கொஞ்ச நேரம் மூளை முற்றிலும் செயல்படாமல் இருந்தது. வெளியே தவளைகளின் இரைஞ்சல் கேட்டது. இருள் தயங்கி முதிய அன்னை போல் உள்ளே வந்து சில்லிட்ட ரேகை ஓடும் ஈரமான கைகளால் பற்றிக் கொண்டது. அப்போது அது எனக்கு தேவைப்பட்டது. அம்மம்மாவின் நினைவு வந்தது.
கைப்பேசியை எடுத்து எழுதத் தொடங்கினேன்.
மேல்வீட்டில் ஜானகி ஆன்ட்டிக்கு வாடகைக்கு கொடுத்திருந்தோம். செந்தில் அண்ணன் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தார். அவர்கள் வீட்டில் டிவி இருந்தது. அங்கு பாரி வரமுடியாது என்பதினால் எனக்குத் தான் அங்கு எல்லா முக்கியத்துவமும் கிடைத்தன. ஜானகி ஆன்ட்டி பூஸ்ட் தருவார்கள். சொக்காப் போட்ட பனியாரம் செய்தால் எனக்கு தான் முதலில். பாரியிடம் இதையெல்லாம் சொல்வதற்காகவே நான் அடிக்கடி அங்கு சென்றேன்.
எப்போதாவது அம்மம்மாவின் பேரன் அயோத்தியாபட்டினத்தில் இருந்து வருவான். அம்மம்மா கூட்டும் பொழுதோ சமைக்கும் பொழுதோ அறைக்குள் அழைத்து சென்று அவன் ஆண் குறியை பெரிதாக்கி காட்டுவான். என் நெஞ்சு கண்டபடி துடித்து வெடிக்கக் காத்திருக்கும். ஆனாலும் என்னால் நகரமுடியாது. எனக்காக அல்லவா அவன் செய்கிறான். சில நேரங்களில் வளராத என் மார்பில் முத்தம் கொடுத்து சுவைப்பான்.
அன்று ஜானகி ஆன்ட்டியும் அம்மம்மாவும் கோவிலுக்கு சென்றிருந்தனர். ராமன் அங்கிள் இபியில் இருந்து இருட்டிய பின்தான் வருவார். நான் மேலே சென்ற போது செந்தில் டீவியை நெருங்கி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். எனைப் பார்த்ததும் பதட்டத்துடன் டீவியை அணைத்துவிட்டு ‘ஆன்ட்டி வெளியில போயிருக்காங்க’ என்றான். ‘ சேரி’ என்றபடி மீத்துவைப் போய் தூக்கிக் கொஞ்சினேன்.
மீத்து வெள்ளை நிறமான பூனை. மீத்து நான் வைத்த பெயர். அது பெரிய சீனிக்கட்டி போல இருக்கும். அடிக்கடி தன்னையே நக்கி சுவைத்துக் கொள்ளும்.
‘டீவி பாக்குறாயா’ என கார்ட்டூன் போட்டான். டெக்ஸ்டர் தன் லேபில் புதிய மருந்தை கண்டுபிடிக்க முனைந்து கொண்டிருந்தான். அடிக்கடி அவன் அம்மா இடையிடையே வந்து அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்தார். சோபாவில் அமர்ந்திருந்த செந்தில் மீத்துவை வருடிக் கொடுத்தான். என் தொடையில் கைபட்டபோது நான் திரும்பவில்லை. என் கண்களுக்குள் ரெத்தம் பாய்ந்து புகை மூட்டமாக தெரிந்தது. ஓட வேண்டும் போல தோன்ற ஆனால் எழ முடியாமல் புதைந்து கிடந்தேன். அவன் கைகள் என் அல்குல்லை தடவியது. நான் திரும்பி அவனைப் பார்த்தேன். அவன் முகத்தை இறுக்கமாக வைத்தபடி டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக் கொண்டிருந்தான். என் உடல் அதிர்ந்தது. தலை சுற்ற நாக்கு வறண்டது. ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்தது. அவனை என் பக்கம் கவர வேண்டும் எனத் தோன்றியது. சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. லேசாக அவன் கைகளில் சொட்டியது. அவன் கைகளை எடுத்துக் கொண்டு எழுந்து உள்ளறைக்குள் சென்றான். நான் வேகமாக எழுந்து ஓடி மொட்டை மாடியின் நீர் போகும் பைப்பில் அமர்ந்து மூத்திரம் இருந்தேன். வரும் வழியிலேயே கொஞ்சம் சிந்தியிருந்தது. மயக்கும் வாடையுடன் கலந்து சிறு நீர் வெளியேறியது. பின் அதன் நெடிக் கூடி கூடி காட்டமான வாடை வந்து பின் நின்றது.
புறாக்கள் வெயிலில் இருந்து மறைவதற்காக எதிர்த்த வீட்டின் திண்டில் அமர்ந்திருந்தது. அழுகையாக வந்தது. ஏன் இப்படி நடந்தது. இது சரியா தவறா. அம்மாவிடம் சொல்லலாமா. அம்மாவை நினைக்கும் பொழுது எரிச்சலாக வந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் அம்மாவின் ஞாபகம் தான் வந்தது. உடனடியாக அம்மாவை பார்க்க வேண்டும் போல் தோன்ற கீழே ஓடிச்சென்று என் அறையின் இருளுக்குள் புதைந்து அழுதேன். கண்களை மூடினால் தாத்தாவும் மாமாவும் சிரிப்பது தோன்றியது. ஏனோ உடல் மிகப் பாரமாக இருந்தது. தேம்பலை அடக்க முயன்றேன். விசும்பலாக வந்து மூச்சு முட்டியது. இல்லை, இது தவறான ஏதோ ஒன்று. உடல் மேல் அருவருப்பாகவும் எரிச்சலாகவும் வந்தது. கத்தியைக் கொண்டு இந்த உடலை கீறிக்கொள்ள ஆவேசம் வந்தது.
பின் கண்ணீர் வற்றும் வரை தனிமையில் அழுதேன். அவ்வளவுதான் அவ்வளவுதான் என்ற எண்ணம் வர மனம் இடுங்கலாகியது. திடீரென்று அந்த தனிமையில் இரண்டு தகர உலோகங்களை உரசும் ஒலி போல் சிரிக்கும் ஓலி ஆபாசமாகக் கேட்டது. தெடர்ந்து கூடிக்கூடி வந்தது. பின் அமைதியடைந்தது. ஆந்தை அலறியது. இவ்வளவு நெருக்கமாக அதன் குரலை கேட்டது ஆச்சர்யமாக இருந்தது.
பின் நாளை காலை ஜெயபால் சாரிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். அவரும் இந்த ஆந்தை போல் கூசும் சிரிப்பொலி பொங்க சிரப்பார். ஏனோ இதுவரையிலான காலம் தன்னைவிட்டு கடத்திகொண்டதுபோல் வெறுமையாக இருந்தது. அப்படியே உறங்கி விட்டேன்.
காலை வெளிச்சத்தை அவ்வளவு தெளிவாகவும் உயிர்ப்புடனும் அதற்குமுன் பார்த்தில்லை. மனம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாம் இனிமையாக இருந்தன. ஆனால் இதற்கு முன் இருந்தது போல இல்லை. இப்படியே இருக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. மதியத்திற்கு மேல் இனம்புரியாத கலவரத்துடன் பயம் அதிகரித்தது. அது மேலும் நேரத்தை வேகமாக கடத்தி சாயுங்காலமாக்கியது. மனம் எதையும் உணரும் தன்மையில் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. நேற்று நிகழ்ந்ததை வலுக்கட்டாயமாக நினைவில் அழிக்க நினைத்து பதட்டத்துடன் பள்ளி வாகனத்தில் ஏறாமல் கழிவறையில் சென்று ஔிந்து கொண்டேன். அது நினைவில் எழும் போதெல்லாம் மூத்திரம் அறியாமல் வெளியேறியது. அன்று மட்டும் இரண்டு முறை சென்றுவிட்டது.
இதயம் படபடக்க வேகமாக ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். வீட்டிற்கு வரும் பொழுது உடல் முழுவதுமாக தன் சக்தியை இழந்திருந்தது. அம்மம்மாவிற்கு தெரிந்துவிட்டால் என்னாவது என நினைத்தபடி என்னை சமாளித்து சிரித்தேன். தலையிலும் நெற்றியிலும் வியர்வைத் துளிகள் அரும்பி எரிச்சலாக்கியது. இப்படி இருந்தால் யாருக்கும் என்னை பிடிக்காதே என மனதில் பச்சாதாபம் கொண்டு வழிந்த கண்ணீரை துடைத்தபடி சன்சேட்டிற்கு போக அறைக்குள் சென்று உடை மாற்றினேன். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் விலகவும் பிடிக்கவில்லை. வரவர தலை பாரம் அதிகமாகிக்கொண்டே வந்தது. சன்சேடில் ஏறி அமர்ந்து யாருக்கும் ஓசை கேட்காமல் அழதேன்.
அப்புறம் அது போல இரண்டு மூன்று முறை நிகழ்ந்தது. அவன் திரும்பி என் முகத்தை பார்த்ததில்லை. எப்போதும் ஈர்குச்சி குழல் போன்ற விரல்களால் என் யோனியைத் தீண்டி சுயமைதுனம் செய்வான். பின் எழுந்து அவன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்வான்.
என்னை பின் பெரிதும் சஞ்சலப்படுத்துவது ஏன் எழுந்து ஓடி வராமல் போனேன் என்பது தான்.
கைப்பேசியை சார்ஜில் போட்டுவிட்டு கடுங்காப்பி தயார் செய்து கடலை நோக்கிச் சென்றேன். அலைகள் கால்களை தூக்கி வெட்டி தவ்வும் நாய்களைப் போல கரை மேல் விழுந்து பூதம் ஒன்று உருஞ்சுவது போல பின் வாங்கின. பெரிய அலை எழுந்து என் கால்களை நனைத்து என் கால்களுக்கு கீழ் இருந்த மண்ணை அரித்து சென்றது. சட்டென்று அழுகை வந்தது. கரையில் அமர்ந்து அழுதேன். என் அழுகையின் ஓசையை கடல் தன் கோடி கைகளால் அள்ளிச் சென்றது. ஓய்ந்து திரும்பிய போது மனம் வெறுமையாக இருந்தது. அறைக்குள் படுத்திருந்தேன். அடி வயிற்றில் மின்சாரம் பாய்வது போன்ற அதிர்வு. பின் சிலந்தி குறுக்காக ஓடுவது போன்ற ரணம். மொத்த நரம்பும் இழுத்துக் கொள்ள வயிற்றில் ஏற்படும் அதிர்வு மொத்த நரம்பிலும் சுண்டிவிட்டது. காற்றே இல்லாது போல தோன்றியது. எழுந்தமர்ந்தேன். கொஞ்சம் விளக்கென்ணெயை எடுத்து தொப்புளுக்குள் தடவிவிட்டு வயிற்றை சுற்றி தடவ வயிற்றில் குளிர்ச்சி பரவியது. இருந்தும் வலிக் கூடிக் கொண்டே சென்றது. கைப்பேசியை எடுத்து மொட்டை மாடிக்கு சென்றேன். பின்னால் சன்சேட் உள்ளதா என எட்டி பார்த்தேன். வானம் ஒற்றை கண் வழியே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.
இப்போதெல்லாம் பௌர்ணமியை ஒட்டியே பெரும்பாலும் பீரியட்ஸ் வருகிறது. கைகளால் தொடலாம் என்பது போல நிலவின் வெளிச்சம் குளிர்ச்சியாக வழிந்தது. வெறி கொண்ட மிருகம் போல கடல் தனியே சமர் புரிந்து கொண்டிருந்தது. தூரக்கடலில் நிலவின் ஔி பல சிறு குட்டைகளாக மாறி பல நிலவாகிக் கிடந்தது.
மொட்டை மாடியில் படுத்துக் கொண்டேன். உறங்கும் போது வந்த கனவில் நூலகத்துக்குள் வழியே சிறிய அறையில் நெடுநேரம் நடந்து செல்ல இருட்டுகிறது. அது அந்த கட்டிடத்தின் போர்டிகோ வழியாக கீழே இறங்கிச்செல்லும் இருளடர்ந்த பாதையாக நீளுகிறது. யாரும் அதற்குள் செல்வதில்லை. அங்கு பேய் இருக்கும் என்று சொல்லுவார்கள். அதை கேட்டபோதே பயமாக இருந்தது. பக்கத்தில் யாரே நின்றபடி அங்கு பேய் உள்ளது செல்லாதே பாப்பா என்றும் பார் போ போ என்று சொல்வது போலவும் இருந்தது. இருள் நிறைந்து இருந்த சிறு குடோனில் பழைய மரச்சாமான்கள் போடப்பட்டிருந்தது. அதன் முனையில் இருந்த ஏணிப்பாதை சுருண்டபடி கீழே இறங்கியது. கீழே செல்ல அமானுஷ்யமாக இருந்தது. பக்கத்தில் இருந்து கேட்ட குரல் இப்பொழுது ஒரு கையாக மாறி என்னைப் பற்றியது. குளிர்ந்த இரும்பு போன்ற கை. உறைந்திருந்த பயம் பீறிட மேலேறி ஓடத்தொடங்கினேன். பின்னாலிருந்து வராண்டா முழுவதும் கை நீண்டு வந்து என்னை பற்ற துடித்து என் இடது பக்கம் இருந்த கைப்பிடிச் சுவரைப் பற்றியது. கால்கள் தடுக்கி விழுந்த போது கைகள் சிராய்த்தது.
சிறுநீர் முட்ட எழுந்து சென்று ஓரத்தில் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் வெளியேறி இருந்தது. ஏதோ அரவம் கேட்டு உடல் மெய்ப்பு கொண்டது. யாரோ ஒருவர் அருகில் இருப்பது போன்ற உணர்வு. நிலா உச்சியில் ஏறி சரிந்து கொண்டிருந்து. கீழே சென்று போர்வையை போர்த்தியபடி தூங்கினேன்.
வழி எங்கும் குருதித்தடம். நான் வருவதை அவர்கள் கண்டுகொள்ளாமல் சுவாரஸியமாக பேசிக்கொண்டிருந்தனர். நான் சென்றவுடன் அம்மாவின் முகம் பாவமாகவும் பாட்டியின் முகம் குரோதமாகவும் மாறியது. ரெத்தத்தை காண்பித்து தாத்தா என்றேன். பாட்டியின் முகம் கடுகடுப்பானது. உறைந்து போக வைக்கும் பார்வை. பின்பு வழக்கம் போல் பேசத்தொடங்கினர்.
பின் யாரும் இல்லை. ஆனால் இரைச்சலும் மனித நெரிசலும் தெரிந்தது. எங்கும் பயமுறுத்தும் பாட்டியின் முகம். குறகுறுக்கும் விழிகள். நாக்கை கடித்து விகாரமான பற்களின் ஓரம் வழியும் குருதி. குருதி குருதி. மொத்தமாக குருதியால் கடைந்தெடுக்கப்பட்ட உடலை பரிதவித்து பற்றியபடி படுத்திருந்தேன்.
ஏதோ ஒரு கை என்னை அந்த சேற்றில் இருந்து எடுத்து காட்டின் புலர்காலையின் புல் மேட்டில் இட்டது. பனி உருகி அனைத்தும் புது உடல் கொண்டு வரும் காலை. செம்போந்து ஒன்று பாடிச் சென்றது. க்கேவே க்கேவே என கத்தியபடி ஒரு பறவை பறந்து சென்றது. வானம் முழுவதும் மான்களும் மயிலும் விழித்துக் கொண்டு உடல் கொண்டன.
காலையில் ஜெனோதான் எழுப்பினாள். ‘ என்னடி எவ்வளவு தடவ கூப்புடுறது, போன எங்க வச்ச’ என்றபோது மேலேயே போனை வைத்து விட்டு வந்ததை உணர்ந்தேன். பிரஷ்ஷில் பேஸ்ட் எடுத்துக் கொண்டு மேலே சென்றேன். நன்றாக வெயில் வந்திருந்தது. ஒரு காக்கை காய்ந்த சோற்றை கொத்தி தின்று கொண்டிருந்தது. கடல் அமைதியுடன் மென்மையாக கரையை தழுவிச் சென்றது. கைப்பேசியை காணோம். நன்றாக ஞாபகம் உள்ளது இங்கே எடுத்து வந்தேன். அல்லது கீழேயே வைத்துவிட்டேனா. கீழே சென்று எல்லா அறையிலும் தேடினேன். கடற்கரைக்கு சென்றேன்.
திரும்பி வந்து சோபாவில் அமர்ந்திருந்தேன். அதில் ஆறு வருடமாக சேமித்திருந்த நூல்கள் புகைப்படங்கள் தொடர்பு எண்கள் இருந்தன. மேலும் கடந்த இரண்டு மாதமாக எழுதிய நாட்குறிப்பு புதுப்புது கருக்களின் குறிப்புகள் எல்லாம் இருந்தன. சதுப்பு நிலப் பறவை பிராஜக்டீன் வரையறை ஒன்றை தயார் செய்திருந்தேன். மறுபடியும் அதை தயார் செய்ய வேண்டும் என நினைக்கும் போதே சோர்வு வந்தது. இங்குதான் இருக்கும் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகியிருக்கும் என எண்ணிக் கொண்டேன்.
நேற்று மட்டும் பத்து செல்போன்கள் திருடுபோயிருந்ததாக கார்த்தி சொன்னான். படுத்தே கிடந்தேன்.
‘ சேரி விடுடி’ என்றாள் ஜெனோ. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவள் சிக்கன் சமைக்கச் சென்றாள். நான் அப்படியே படுத்து தூங்கிவிட்டேன். எழுந்தபோது நன்றாக பசித்தது. உறைக்கும் வெயில் வெளியே மஞ்சள் துண்டை காயப் போட்டது போல கிடந்தது.
நேற்றைய கனவில் வந்த பெருங்கை ஞாபகம் வந்தது. எல்லாவித பாரமும் அகன்று எடையின்மையுடன் படுத்திருந்தேன். இதுவரை எதுவுமில்லாமல் நேற்றை யாரோ அழித்து விட்டு சென்றது போல் வெள்ளையாக இருந்தது.
உற்சாகமாக எழுந்து விசிலடித்த என்னை பார்த்து ‘ என்னடி ஆச்சு’ என்றாள்.
‘அது ஆட்காட்டி குருவி’ என்றேன்.
லூசு என சிரித்துவிட்டு சாப்பாடு எடுத்து வைத்தாள்.
அனைத்து அழுக்குகளை வெளியே தள்ளிவிட்ட கடல் மிகப்புதியனவாகி நிலத்தை முத்தமிட்டு திரும்பிக் கொண்டிருந்தது.