“எனக்கு நீங்கள் ஏழு காதல் கதைகள் சொல்ல வேண்டும்”
“என்ன?”
“ஏழு பரவசமூட்டும் காதல் கதைகள்.. நான் ஒரு போட்டியில் கலந்து கொள்ள
இருக்கிறேன்.. அதற்கு வேண்டும்..”
“நாம் வந்திருப்பது தேன்நிலவிற்கு.. கதை விவாதத்திற்கல்ல..”
“இளைப்பாறும் நேரத்தில் சொல்லலாமே!”
“காதல் என்பது மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்.. ரத்தத்தில் கையெழுத்து போடுவது..நடு இரவில் மதிலேறி குதித்து வாழ்த்துகள் சொல்வது.. பிடிக்கவில்லையென்றால் முகத்தில் த்ராவகம் வீசுவதெல்லாம் அபத்தம்.. எனக்கு காதலில் நம்பிக்கையில்லை.. ந்யூரொபெப்டைட் ஹார்மோன் ..”
“போதும்.. போதும்.. வாழ்வை ரசிக்கச் சில பொய்கள் தேவை..”
“முதலில் கதையா.. இல்லை ‘அதுவா’? “
“கதை……”
ஜன்னலுக்கு வெளியே ஒரு சிறு ஓடை.. பெயர் தெரியா பறவையொன்று
அலகால் முகந்து நீர் குடித்துக் கொண்டிருந்தது..
“அப்போது நாங்கள் இருந்த தெருவில் ஒரு குடும்பம். மூன்று வயது ஆண்குழந்தையுடன் ஒரு தம்பதி. சற்றுத் தள்ளி இருக்கும் ஒரு இண்டஸ்டிரியல் எஸ்டேட்டில் ஏதோ ஒரு தொழிற்சாலையில் அவருக்கு வேலை. வீட்டில் குழந்தையுடன் அந்தப்பெண் இருந்தாள்..
வீட்டைக் கடக்கும் போது புன்னகை மெலிதாய் எட்டிப் பார்க்கும்,, அவ்வளவே..
ஒருநாள் அந்தப் பெண் பேக்கரியில் வேலை செய்யும் வடநாட்டு இளைஞனுடன்
ஓடிவிட்டாள் என தெருவே பரபரத்தது.. தலையில் கைவைத்து அவர் அமர்ந்திருக்க குழந்தை பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்ததை நிறைய நாட்கள் நினைவிலிருந்து நீக்க முடியவில்லை..”
“ஒரு பெண்ணின் அதிகபட்ச அன்பைப் பெறுவது அவளின் குழந்தை. அதையே விட்டு விட்டு அவள் செல்ல எது உந்துசக்தியாய் இருந்தது? இதுவும் காதலின் ஒரு பரிமாணம் தானே..? சரி தவறென்னும் விவாதத்திற்குள் போகாமல் பார்த்தால்… “
“இந்தக் கதை வேண்டாம்..கேட்கவே பதறுகிறது”
“நடுநடுவே காரமான ஊறுகாய் தொட்டுக் கொண்டால் இனிப்பு நிறைய சாப்பிடலாம்.. வலியும் காதலும் போல்..”
“வேதனையில்லா ஒரு கதை சொல்லுங்கள்..”
“காதலின் இன்னொரு பக்கம் வேதனை, வலி, தியாகம், துரோகம், ஏமாற்றம் இப்படி ஏதாவது இருந்தே தீரும்..”
“கொஞ்சம் தியாகம் கொஞ்சம் வேதனை நிறைய காதல்.. அப்படி ஏதாவது சொல்லுங்கள்..”
“ராஜா ராணி கதை சொல்லட்டுமா?”
“ஹ்ம்..”
உதயணன் கிறங்கிப் போயிருந்தான்.. வாசவதத்தையின் அழகும் மென்மையும் அவனை மூழ்கடித்தன.. மற்றவை எல்லாம் அர்த்தமற்றதாகத் தெரிந்தன.. மகிழ்ச்சியின் போதையில் மதி தள்ளாடியது..
அரசவை கவலைப்பட்டது..எல்லைப் பிரதேசங்களில் எதிரிகள் நடமாட்டம். உதயணன் மூர்க்கமாய்ப் போரிட்டு ஜெயித்து வத்ச தேசத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மாகாணங்கள் கைமாறிப்போக ஆரம்பித்தன.. வத்ச தேசத்திற்கு எப்போதும் ஆபத்து.. அவர்களை விரட்டி மறுபடியும் கைப்பற்ற வேண்டும்..
அதற்கு முதலில் வாசவதத்தையின் மயக்கத்திலிருந்து உதயணனை எழுப்ப வேண்டும். மகத தேசம் போன்ற அண்டை தேசத்தின் படை உதவி வேண்டும். மந்திரி யூகி ஏதேனும் செய்ய வேண்டும். யூகி யோசித்தான்.
மகத இளவரசி பத்மாவதியை உதயணன் மணந்தால் மகதம் உறவு நாடாகும். படை பலம் கூடும்.. எளிதில் எதிரிகளை விரட்டலாம்..
முதலில் வாசவதத்தையின் மயக்கத்திலிருந்து உதயணனை எழுப்ப வேண்டும்.
“நீங்கள் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது ராணி”
யூகியின் வாசகம் கேட்டு வாசவதத்தா அதிர்ந்தாள். உதயணன் கவனம் அரசில் இல்லை என்பது அவளுக்கும் தெரியும். சாமான்யப் பெண் அல்லள் அவள். அவளுக்கும் பொறுப்பு இருக்கிறது நாட்டைக் காப்பாற்ற.
‘நாட்டிற்காக என் உயிரைக் கொடுக்கத் தயார்..ஆனால் அவரை விட்டுப் பிரிவதை நினைத்தால்தான் வேதனையாயிருக்கிறது..” கண்கள் ததும்பின.
‘நன்றி.. உங்கள் உயிர் வேண்டாம்.. நீங்கள் இறந்ததாக நம்ப வைத்தால் போதும்… சிலகாலம் தலைமறைவாக இருக்க வேண்டும்..’
‘இது சாவை விடக் கொடுமை.. ‘
‘அரசுப் பதவி அளவற்ற சுகம் தரும்… அதற்கான விலையை சில நேரம் சிலரால் தரவேண்டியிருக்கும்..’
உதயணன் ஒருநாள் வேட்டைக்குப் போனான். அவன் வருவதற்குள் யூகியின் ஏற்பாட்டின் படி வாசவதத்தா தங்கியிருந்த இடத்தில் தீப்பிடித்தது.. காப்பற்றப் போன மந்திரியும் விபத்தில் கருகி இறந்தார்.. என செய்தி பரவியது..
உதயணன் வந்து பார்த்தபோது ராணி அணிந்திருந்த தீயில் உருகிய ஆபரணங்கள் மட்டுமே கிடைத்தன.. உதயணன் இன்னும் எரிந்து கொண்டிருந்த தீயில் குதிக்க முயற்சித்தான். அருகில் இருந்தவர்களால் தடுக்கப் படவே உயிர் தப்பினான்.
“காதல்..! ஓர் அரசன் இப்படி இருப்பது என்ன ஆச்சர்யம்..! “
“ஆமாம்.. அரசர்கள் முட்டாள்களாய் இருக்கக் கூடாதா என்ன?”
“ப்ரியம் முட்டாள்தனமா..?”
“கதை சொல்லட்டுமா.. இல்லை..”
“வேண்டாம்.. தொடருங்கள்..”
“தமிழில் சொல்லட்டுமா? நீ எழுத எளிதாயிருக்கும்..”
“தேவையில்லை.. நான் மொழி பெயர்த்துக் கொள்கிறேன்.. “
யூகியும் வாசவதத்தாவும் மாறுவேடத்தில் மகத நாடு சென்றனர்.. அவர்கள் தங்கியிருந்த கோயிலுக்கு இளவரசி பத்மாவதி தன் சேடிப் பெண்களுடன் வந்தாள்..“
“பூஜை முடிந்ததும் அங்கிருந்த மக்களிடம் நலன் விசாரித்தாள்.. தானங்கள் செய்தாள்.. வேதியர் வேடத்திலிருந்த யூகி அவளிடம்
‘ எனக்கு ஓர் உதவி தேவை’ ‘சொல்லுங்கள்.. “
‘இவள் என் சகோதரி.. கணவர் காணாமல் போய் விட்டார்.. அவரைத் தேடிப் போகிறேன்.. நான் வரும் வரை உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்..’
வாசவதத்தா பத்மாவதியை வணங்கினாள்.. அவளின் வனப்பைப் பார்த்து
பிரமித்தனர் சேடிகள். ‘இவளைப் பார்த்தால் அந்தணப்பெண் போலவே இல்லையே.. அரசகுலப் பெண் போல் இருக்கிறாள்’ என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்..
‘கவலை வேண்டாம்.. நான் பார்த்துக் கொள்கிறேன்’
‘மிக்க நன்றி.. விரைவில் வந்து விடுவேன்.. அவந்திகா.. நான் வருகிறேன்’ யூகி கிளம்பினார்..
“அவந்திகா?”
“வாசவதத்தாவின் இப்போதைய பெயர்..”
“ஓ,,,அவர்கள் வேறெங்காவது இருக்கலாமே.. உதயணன் மணமுடிக்கப் போகும் ராஜகுமாரியுடன் ஏன் இருக்க வேண்டும்..?”
“நீ சொல்.. எதற்காக.. கொஞ்சம் யோசி..”
“ஓ ஓ.. புரிந்தது.. பின்னாளில் இவளின் கற்பிற்கான சாட்சி.. என்ன ஒரு நம்பிக்கை..! சில விஷயங்கள் என்றைக்கும் மாறாதவை. சிரிக்க வேண்டாம்.. மேலே சொல்லுங்கள்..“
“பத்மாவதிக்கு வாசவதத்தா மீது காரணமறியா ஒரு ஈர்ப்பு…. அவளின் நளினம், ஆழமான அறிவு.. ஏதோ ஒன்று .. அல்லது எல்லாமும்.. மிகுந்த எச்சரிக்கையுடன் தன்னைப் பற்றிய விவரங்கள் வெளிவராமல் பழகுகிறாள் வாசவதத்தா.. சில நாட்களில் உதயணன் மகத தேசம் வருகிறான்.. திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.. திருமணம் பற்றிய கனவில் இருக்கும் பத்மாவதி தன் எண்ணங்களை வாசவதத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்”
“என்ன கொடுமை.. தன் காதலனைப் பற்றிய கனவுகளை இன்னொரு பெண்
பேசுவதைக் கேட்பதும்.. தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் உரையாடுவதும்.. பாவம் வாசவி..”
“கடினமே.. தன் நாட்டிற்கான அவளின் தியாகம் அது.. பத்மாவதி வாசவதத்தா மற்றும் பிற தோழியருடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது உதயணன் தன் நண்பனுடன் அங்கு உலாவ வருகிறான்.. அவன் வருவதைப் பார்த்ததும் பத்மாவதி தோழிகளுடன் மரங்களுக்குப் பின் மறைந்து கொள்கிறாள்..’
“உதயணனும் அவன் நண்பனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அவனிடம் ஒரு சோர்வு இருக்கிறது.. “
‘வாசவதத்தா, பத்மாவதி இருவரில் உங்கள் மனதைக் கவர்ந்தவர் யார்..’
‘உனக்கு வேறு வேலை இல்லையா’
‘சொல்லுங்களேன்’
பெருமூச்சுடன்.. ‘பத்மாவதியின் அழகும், பேச்சும், ஒழுக்கமும் இணையில்லாதவை..’
மரத்தின் பின் நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்மாவதி குதூகலிக்க வாசவதத்தா மனம் வாட..
‘ஆனால்.. வாசவதத்தா என் உள்ளம் முழுவதும் நிறைந்திருக்கிறாள்..அவள் மீதுள்ள என் காதல் வார்த்தைகளில் சிக்காதது.. “
சொல்லும் போதே கலங்குகிறான் உதயணன்..
தன் தியாகம் வீணாகவில்லை என வாசவதத்தா மனம் மகிழ.. சேடிகள் பத்மாவதியைச் சீண்டுகின்றனர்..
ஆனாலும் வாசவதத்தா மறைந்த பின்னரும் அவளிடம் இருக்கும் உதயணின் காதல் பத்மாவதிக்குப் பிடித்திருக்கிறது.. அந்த நேர்மையான மனதில் தானும் இடம் பிடிப்பது எளிதென உணர்கிறாள்..
அவளை உதயணனிடம் போய்ப் பேசச்சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகின்றனர்.. சேடிகளும் வாசவதத்தாவும்.
தயங்கி உதயணன் முன் வருகிறாள் பத்மாவதி..
நண்பன் திடுக்கிட்டு.. ‘அரசரின் கண்களில் மகரந்தத் துகள்கள் விழுந்து விட்டன.. நான் போய் நீர் எடுத்து வருகிறேன்.. நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்.. ‘ என நகர்கிறான்..
“அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என நானறிவேன்..மேலே கதையைச் சொல்லுங்கள்..”
“முடிவை இப்போதே சொல்லிவிடவா?’
“வேண்டாம்.. அதுவரை பொறுமை காப்பேன்…’
“இந்த கட்டத்தில் நீ உன் எழுத்துத் திறமைக்கு ஒரு சவால்.. இனி வரப்போவது கவிதை போன்ற ஒரு காட்சி.. வாசகர்களின் கண்முன்னே நிறுத்த வேண்டும்..”
“போதும் பீடிகை.. தொடரலாம்..”
“ஒருநாள் பத்மாவதிக்குத் தாங்க முடியா தலைவலி.. சேடிகள் பதறுகிறார்கள்..
உதயணனுக்குச் சேதி போகிறது.. சேடிகள் வாசவதத்தாவிற்கும் தெரிவிக்கிறார்கள்..
உதயணன் தலைவலியால் தவிக்கும் இளவரசியைக் காண நீராழி மண்டபம் செல்கிறான்.
வாசவதத்தாவும் அங்கே போகிறாள்.
உதயணன் நீராழி மண்டபம் அடைந்த போது அங்கு யாரும் இல்லை.. மஞ்சம் தயாராக இருக்கிறது..இதமான குளிர்…சோர்வில் அதில் அமர்ந்ததும் உறங்கி விடுகிறான்..
அரசியைத் தேடி அங்கு வரும் வாசவதத்தா மஞ்சத்தில் பத்மாவதி படுத்திருப்பதாக நினைக்கிறாள்.. நன்றாக உறங்கும் அவளை எழுப்ப மனமில்லாமல் அருகில் அமர..
‘வாசவதத்தா .. என் அன்பே..’
அதிர்கிறாள் வாசவதத்தா.. அங்கிருப்பது அரசியல்ல.. உதயணன்..
தான் உயிருடன் இருப்பது தெரிந்து விட்டதா.. இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் வீணாயினவோ..
‘நீ ஏன் அலங்கரித்துக் கொள்ளவில்லை.. வாசவி..’
உதயணன் உறக்கத்தில் அரற்றுகிறான் எனப் புரிந்ததும் பயம் தெளிகிறது..
அவனுக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்கிறாள் ..
‘ஏன் நன்றாகத்தான் இருக்கிறது என் அலங்காரம்..’
‘என்மேல் கோபமா?’
‘உங்கள் மேல் எதற்குக் கோபப்படவேண்டும்?’
‘இல்லை.. விராசிகாவை நினைத்து உனக்கு கோபம் வரலாம்..’
உதயணனின் பழைய காதலி விராசிகா.. வாசவதத்தாவைச் சீண்ட அவன் அவ்வப்போது இப்படிக் கேட்பான்..
கனவில் சிரித்துக் கொண்டே அவளை அணைக்க கைகளை நீட்ட..
ஒரு கணத்தில் நிலை தடுமாறி.. அவன் கைகளைப் பற்றுகிறாள் வாசவி..
மின்னல் தாக்கியது போல் விழித்துக் கொள்கிறான் உதயணன்.. உறக்க மயக்கத்தில் வாசவதத்தா மேகம் போல் மிதந்து தன்னைக் கடந்து போவதைப் பார்க்கிறான்..
வேகமாய்த் தொடர கதவில் மோதி விழுகிறான்..
‘வாசவதத்தா.. ‘ என அலற.. தோழன் ஓடி வருகிறான்..
‘பார்த்தேன்.. என் வாசவியைப் பார்த்தேன்..’
‘கனவாயிருக்கும்.. அவள் தீயில் மூழ்கி இறந்து விட்டாளே..’
‘இல்லையில்லை..நான் பார்த்தேன்…விழிகளில் மையில்லை.. கூந்தல் நீண்டு
தொங்கிக்கொண்டிருந்தது.. அவள் என் கைகளைத் தழுவியதால் உண்டான
ரோமாஞ்சனம் இன்னும் நீங்கவில்லை.. பார் .. பார்.. ’
‘கனவுதான் அரசே..’
‘இது கனவென்றால் இந்தக் கனவிலிருந்து நான் விழிக்காமல் இருக்கட்டும்..’
அரற்றுகிறான் அரசன்.
“வாவ்.. என்ன ஒரு காட்சி.. திரைக்கதை போலல்லவா இருக்கிறது.. படமாக எடுக்கலாமா”
“உன் அப்பாவிடம் பணம் கேள்”
“அப்புறம் என்ன ஆயிற்று..”
“இதுவல்ல நாம் வந்த வேலை.. “
“அறிவேன்.. தயை கூர்ந்து தொடருங்கள்..வட்டியுடன் தருகிறேன்..”
நாட்கள் நகர்கின்றன..
“சேவகன் நுழைந்து ஒரு அவசரச் செய்தியைச் சொல்கிறான்.. மகத மன்னனின் படைகள் தயாராகி விட்டன.. உங்கள் அமைச்சர் ருமண்வாவும் உங்கள் படைகளைத் திரட்டி வந்து விட்டார்..
கனவை மறந்து போருக்கு இழுத்துப் போகிறது கடமை. அவன் இழந்த நாடுகள் அவன் வசமாகின்றன.. வாக்களித்த படி பத்மாவதியுடன் திருமணம்..
“ஏன் இப்படி கதை ஓடுகிறது.. மெதுவாகச் சொல்லலாம்.. அது சரி.. இந்தக் கதை வளர்ந்தவர்களைக் கவருமா..சிறுவர்களுக்கான கதை போலிருக்கிறதே..?”
“கதைகளுக்கும் வயதிற்கும் தொடர்பில்லை..சிறுவர் கதைகளில் பெரியவர்களுக்கான செய்திகளும்.. பெரியவர்களின் கதைகளில் இளமையின் அடையாளங்களும் தென்படலாம்.. “
“நவீன காலத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ள முடியா கதைகளில் யாருக்கு ஆர்வம் இருக்கக்கூடும்.. “
“கதைகளுக்கும் காலத்திற்கும் கூட தொடர்பில்லை.. வாழ்வு ஒரே போலத்தான் அதிலிருந்து எழும் கதைகளும் அப்படித்தான்..”
“இந்தக் கதை இப்போது நடக்குமா என்ன..சாத்தியமே இல்லை..”
“உன் அப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்..?”
“எதற்கு இந்தக் கேள்வி..”
“சொல்..”
“550 கோடிகள் இருக்கலாம்..”
“அலுவலகத்தில் உன் அப்பாவின் அறையில் இருக்கும் மிகப் பெரிய மஹோகனி மேசையின் மேல் சிறிய தங்கச் சட்டமிட்ட ஒரு பெண்ணின் படம் இருக்கிறதல்லவா..? அது யார்…”
“அது .. அப்பாவின் முதல் மனைவி.. ஒரு தீ விபத்தில்……”