குன்னூர் நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதப்பட்டிருந்த பதாகையை பார்த்தவுடன் என்னையும் அறியாமல் அதுவரை அதிவேகமாக செலுத்தி கொண்டிருந்த வாகனத்தின் வேகத்தை லேசாக குறைத்தேன். ஏனோ அந்த பதாகை என் மனதில் ஒரு இனம் புரியாத குழந்தைக்குரிய உற்சாகத்தை தூண்டிவிட்டிருந்தது.
“இன்னும் எவ்வளவு நேரமாகும் வினோத்?”
மடியில் தூங்கிக் கொண்டிருந்த எங்களுடைய மூன்று வயது மகள் சோபனாவின் தலைமுடியை வருடியபடி கேட்டாள் என் மனைவி அவந்திகா.
“மேக்ஸிமம் டென் மினிட்ஸ்…” சாலையிலிருந்து கண்களை அகற்றாமல் அவளுக்கு பதிலளித்தேன்.
முன்பிருந்ததற்கு குன்னூர் இப்போது நிறைய மாறியிருந்தது. பெட்ரோல் பங்குகள், பேக்கரிகள், சைனீஸ் உணவகங்கள் என குன்னூரில் நிகழ்ந்திருந்த மாற்றங்களை கண்கள் விரித்தபடி ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தேன்.
“என்னடா நாஸ்டால்ஜியாவா“
என்று கேட்ட அவந்திகாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்ப்பதிலேயே என்னுடைய கவனம் இருந்தது.
“நீ எப்ப இங்க வந்த கடைசியா?”
“அது இருக்கும் டுவெண்ட்டி த்ரீ இயர்ஸ்“
“ஓ, அப்போ நிறைய மாறி இருக்கும்ல“.
பதில் சொல்லாமல் முகத்தில் புன்னகையை மட்டும் தவழ விட்டேன்.
குன்னூரில் நான் இருந்த காலம் மிக சொற்பம் தான் என்றாலும் அதன் தெருக்களும் வீதிகளும் எனக்கு மிகவும் பரிச்சயப்பட்டவை.
குன்னூரை பற்றி நினைக்கும்போது மனதில் பலவிதமான பிம்பங்கள் தோன்றி மறைந்தாலும் முதலில் தோன்றும் பிம்பம் பெரும்பாலும் விக்டோரியாவுடையதாகவே இருக்கும்.
கிட்டத்தட்ட இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு என்னுடைய பதினைந்தாவது வயதில் குன்னூருக்கு போஸ்ட்மேனாக என்னுடைய தந்தை பணி மாற்றலாகி, நாங்கள் குடும்பத்துடன் குன்னூருக்கு குடிப்பெயர்ந்த போது தான் விக்டோரியாவை முதன் முதலில் பார்த்தேன். அப்போது அவள் முப்பது வயதை எட்டியிருந்தாள்.
நீளமான நேர்த்தியான மூக்கு, சிவந்த தோல் நிறம், சிறிய கண்கள் பெரும்பாலும் அவிழ்த்து விடப்பட்டு காற்றில் அலைப்பாயும் கூந்தல், அதிகம் சதைப் பற்றில்லாத அளவான கன்னங்கள் இவைதான் விக்டோரியாவின் அடையாளங்கள்.
அவள் பெரும்பாலும் உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் இறுக்கமான கவுன்களையே அணிவாள். ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்த அவள் வெல்லிங்டனில் தன்னுடைய வயதான பாட்டியுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். விக்டோரியாவின் குடும்பம் ஒரு காலத்தில் குன்னூரில் பேக்கரி நடத்தி செல்வ செழிப்பாக வாழ்ந்ததாகவும், பின்னர் திடீரென்று ஏற்பட்ட கடன் பிரச்சனையால் பேக்கரியை விற்றுவிட்டு அவளுடைய தந்தை ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும் வெல்லிங்டனின் நடுத்தர வயதுக்காரர்கள் சிலர் சொல்வதுண்டு. அவள் தாயை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மேலும் விக்டோரியா தன்னுடைய பதினாறாவது வயதில் டீ எஸ்டேட்டிற்கு வேலைக்கு வந்த ஒரு வட இந்திய இளைஞனிடம் காதல் வயப்பட்டு பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவள் கர்ப்பம் தரித்து, பின்னர் ஊரில் யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்து விட்டதாகவும் அதனால்தான் அவளுக்கு வரன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இன்னும் திருமணமாகாமல் இருப்பதாக ஊர்க்காரர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அதை நம்பவில்லை.
ஊட்டிக்கு அருகில் இருந்த ஒரு டீ எஸ்டேட்டில் கணக்கெழுதும் வேலை பார்த்து கொண்டிருந்தாள் விக்டோரியா. பெரும்பாலும் பணிக்கு சைக்கிளில் செல்லும் அவள் சில நேரங்களில் கூட்ட நெரிசலான பஸ்களிலும் எங்களோடு பயணிப்பதுண்டு. அப்போது அவளை பார்க்கவும் அவள் அருகில் நெருங்கி நிற்கவும் இளைஞர்களுக்கிடையில் ஒரு போராட்டமே நடக்கும். ஆனால் அவளுடைய இறுக்கமான முகபாவமும் கண்ணில் எப்போதும் தேங்கியிருக்கும் ஒருவித சோகமும் அவர்களை அவளிடம் நெருங்கவிடாமல் பாதுகாத்தது. அவளை தூரத்திலிருந்து ரசிப்பதற்கு மட்டுமே அவர்களிடம் தைரியம் இருந்தது.
விக்டோரியாவின் வீட்டிற்கு முன் இருக்கும் குட்டி சுவரில் எப்போதும் இளைஞர்களின் கூட்டம் குழுமியிருக்கும். குறிப்பாக மாலை நேரங்களில் பால்காரரிடம் பால் வாங்குவதற்காக வீட்டு வாசலுக்கு வரும் விக்டோரியாவை காண இளைஞர்கள், நடுத்தர வயதினர் என்று பலதரப்பட்டவர்கள் காத்திருப்பார்கள். பால்காரரிடம் பாத்திரத்தை நீட்டி சற்றே குனிந்து நின்று பால் வாங்கும் விக்டோரியாவின் உடல் அங்கங்களை அவளுடைய இறுக்கமான உடையில் பார்ப்பது அவர்கள் கண்களுக்கு விருந்தளித்தது. ஆனால் அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விடுவாள் விக்டோரியா. ஒருவேளை விக்டோரியாவிற்கு அவர்கள் தன் வீட்டின் முன் கூடியிருந்ததற்கான காரணம் தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்திருந்தும் அவர்கள் பார்ப்பதை அவள் உள்ளுக்குள் ரசித்திருக்கலாம். ஆரம்பத்தில் அவர்கள் செயலை வெறுத்த நான் பின்னாளில் அவர்களோடு சேர்ந்து கொண்டேன் .
அவளுக்கு வெல்லிங்டன் மகாராணி என்று பட்டப்பெயர் சூட்டியது நான் தான். வரலாற்று புத்தகத்தில் ஏதோ ஒரு இடத்தில் விக்டோரியா என்ற பெயரில் ஒரு ஐரோப்பிய ராணி இருந்ததாக படித்ததால் அதே பெயருடைய விக்டோரியாவிற்கு அந்த பட்டப்பெயரை சூட்டினேன். பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் மட்டும் பிரபலமாக இருந்த அந்த பெயர் நாளடைவில் மாணவர்களை தாண்டி ஊரில் இருப்பவர்கள் மத்தியிலும் பரவியிருந்தது.
கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்ட என்னுடைய தந்தை ஒரு நாள் வெல்லிங்டனில் கொடுக்க வேண்டிய கடிதங்களை என்னிடம் கொடுத்து வேண்டியவர்களிடம் ஒப்படைக்க சொன்னார். அதில் விக்டோரியாவிற்கு கொடுக்க வேண்டிய கடிதமும் இருந்ததால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். கடிதங்களை பெற்று கொண்டு சைக்கிளில் வெல்லிங்டன் சென்ற நான் விக்டோரியாவிற்கு கொடுக்க வேண்டிய கடிதத்தை கொடுப்பதற்கு அவள் வீட்டு வாசலை அடைந்தேன்.
“மேடம்” என்றேன் சற்றே உரத்த குரலில்.
அவளை அக்கா என்று அழைப்பதற்கு ஏனோ மனம் வரவில்லை. என் குரல் கேட்டு வெளியே வந்த விக்டோரியா என் கையில் இருந்த கடிதத்தை வாங்கிகொண்டு ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தாள். பின்னர் அடிக்கடி என் தந்தையை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெல்லிங்டனில் கொடுக்க வேண்டிய கடிதங்களை எடுத்து கொண்டு வந்துவிடுவேன். இவ்வாறாக பலமுறை விக்டோரியாவிற்கு கடிதங்களை ஒப்படைக்க அவள் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று மாத கால கடித பரிமாற்றத்திற்கு பிறகு ஒருமுறை அவளிடம் கடிதத்தை கொடுத்து அங்கிருந்து கிளம்ப தயாரான போது “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா” என்ற அவளது குரல் என்னை நகரவிடாமல் செய்தது.
“சொல்லுங்க மேடம்” என்றேன் பணிவான குரலில்.
“சாமி அங்கிள் ஷாப்ல கொஞ்சம் திங்ஸ் வாங்கணும், நான் அவர்கிட்ட மார்னிங்கே சொல்லிட்டேன் நீ கொஞ்சம் அது மட்டும் வாங்கி வீட்ல கொடுக்க முடியுமா” என்றாள் கொஞ்சும் குரலில்.
“சரி” என்று தலையாட்டிய படி சைக்கிளை எடுத்து கொண்டு வேகமாக சாமியின் டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்று அங்கிருந்த பொருட்களை வாங்கி வந்து அவளிடம் கொடுத்தேன்.
“தேங்க்யூ” என்றாள் சிரித்த முகத்துடன்.
சிரித்தபோது வழக்கத்தை விட அவள் அழகாக தெரிந்தாள்.
அதற்கு பிறகு ஒவ்வொரு முறை கடிதம் கொடுக்க செல்லும்போதும் சாமியின் கடையில் சென்று ஏதேனும் வாங்க வேண்டுமா என்று நானாகவே கேட்டு வாங்கி வந்து அவளிடம் கொடுப்பேன்.
அவ்வாறு ஒரு முறை அவளுடைய பொருட்கள் அடங்கிய பையை வாங்கி கொண்டு விக்டோரியாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தான் அந்த பையில் இருந்து என் கண்களுக்கு ஒரு சிகரெட் டப்பா தென்பட்டது. விக்டோரியா புகைப்பிடிப்பாளா என்ற ஆச்சரியம் எனக்குள் எழுந்தது. கண்டிப்பாக அது அவளுடையதாக இருக்காது, சாமி தவறுதலாக அந்த டப்பாவை அதில் வைத்திருப்பார் என்று எனக்குள் சமாதானம் சொல்லி கொண்டேன். ஏனோ அவள் புகைப்பிடிப்பாள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்ப நாங்கள் பஸ்ஸில் ஏறிய போது ஜன்னலோர சீட்டில் வேடிக்கை பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் விக்டோரியா. அவளது பக்கத்து சீட் காலியாக இருந்தது. நாங்கள் உள்ளே ஏறிய போது எங்களுக்கு முன்னரே சில இளைஞர்களும் ஆண்களும் இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்த போதும் அவளது அருகில் அமர யாருக்கும் தைரியம் வந்திருக்கவில்லை. திடீரென்று வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு பஸ்ஸுக்குள் சுற்றி முற்றி நோட்டமிட்ட அவளின் பார்வை என் மேல் நிலைத்தது, வா என்பது போல் தலையாட்டி சைகை செய்தாள், நானும் அவளுக்கு கட்டுப்பட்டு அருகில் சென்றபோது என்னை அவள் அருகில் அமருமாறு சைகை செய்ய நானும் மகிழ்ச்சியுடன் அமர்ந்து கொண்டேன். அவள் கூந்தலில் இருந்து பரவிய ஒருவித நறுமணம் எனக்குள் ஏதோ சில மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் அவளுடைய தோள்கள் என்னுடைய தோள்களின் மேல் மிகவும் அழுத்தமாக பதிந்தது எனக்கு மேலும் கிளர்ச்சியை கூட்டியது. காற்றில் பறந்து கொண்டிருந்த தன்னுடைய கூந்தலை அவள் சரி செய்த விதம் பார்ப்பதற்கு கவிதையாக இருந்தது. சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்தபடியே வந்தாள் விக்டோரியா. விக்டோரியாவுடன் நான் பஸ்ஸில் அமர்ந்து கொண்டு வந்ததை பார்த்த சில நண்பர்கள்
“வந்துட்டாருப்பா வெல்லிங்டன் மகாராஜா“
“என்ன மச்சான் உன் ஆளு விக்டோரியா எப்படி இருக்கு“.
என்று பலவாறு கேலி செய்ய தொடங்கினர். இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலாக எங்கள் பள்ளியின் பாத்ரூம் சுவரில் என்னுடைய பெயரையும் விக்டோரியாவின் பெயரையும் எழுதி ஹார்டின் வரைந்து அதில் அம்பு விட்டிருந்தனர்.
வெளியில் அவற்றையெல்லாம் நான் வெறுப்பது போல பொய்யான கோபத்தை நண்பர்கள் மத்தியில் காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் நான் அதை ரசிக்கவே செய்தேன்.
அதற்கு பிறகு எப்போதெல்லாம் விக்டோரியாவிற்கு அருகில் சீட் இருக்கிறதோ அப்போதெல்லாம் அவளிடம் கேட்காமலேயே சென்று அவளருகில் அமர்ந்து கொள்வேன்.
அவளும் எதுவும் பேசாமல் என்னிடம் சம்பிரதாயமான புன்னகையை மட்டும் உதிர்ப்பாள் .
இவ்வாறு சென்று கொண்டிருந்த போதுதான் ஒரு முறை இரவு பத்தரை மணிக்கு மேல் வெல்லிங்டனிலிருந்த என் நண்பன் முகேஷின் வீட்டிற்கு கணக்கு பாடம் படிக்க சென்று விட்டு விக்டோரியாவின் வீடு இருக்கும் தெரு வழியாக என் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது அவள் வீட்டு வாசலில் ஒரு மோட்டார் பைக் நின்றிருப்பது என் கண்ணில் பட்டது.
கூர்ந்து பார்த்தபோது வீட்டு வாசலில் அவள் வேலை செய்யும் எஸ்டேட்டின் மேனேஜர் குழந்தைவேலு நின்றிருந்தார். அவர் திருமணமானவர், அவருடைய மனைவி நான் படித்த பள்ளியில் தான் ஆங்கில ஆசிரியையாக பணிப்புரிந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் வாசல் கதவில் சாய்ந்தபடி அவரிடம் பேசி கொண்டிருந்த விக்டோரியா திடீரென்று சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவர் கைகளை உரிமையாக பிடித்து இழுத்து தன் வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.
எனக்கு அந்த சிகரெட் டப்பா யாருக்காக வாங்கப்பட்டது என்ற உண்மை உறைத்தது. அவள் அவரை கையை பிடித்து வீட்டிற்குள் இழுத்து சென்ற போது அவர்களுக்கிடையில் பரிமாறப்பட்ட நெருக்கம் என்னை கோபமடைய செய்தது. அதற்கு பிறகு சில நாட்கள் அவள் வீட்டின் அருகில் செல்வதையே தவிர்த்திருந்தேன். காரணமே இல்லாமல் அவள் மேலிருந்த கோபம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது. சில சமயங்களில் அவளை பஸ்ஸில் சந்தித்தாலும் கூட அவள் அருகில் செல்வதை தவிர்த்தேன். வழக்கம்போல ஒரு நாள் வெல்லிங்டனில் சில கடிதங்களை கொடுத்து விடும்படி என் தந்தை கூறிய போது வேண்டா வெறுப்பாக அதை வாங்கி கொண்டு சைக்கிளில் கிளம்பினேன். வழியில் நிறுத்தி அந்த கடிதங்களை ஒவ்வொன்றாக பார்த்தபோது அதில் விக்டோரியாவிற்கு வந்திருந்த கடிதம் என் கண்ணில் பட்டது. “ஜேக்கப்” என்ற பெயருடைய ஒருவரிடமிருந்து அந்த கடிதம் வந்திருந்தது. திடீரென்று எனக்குள் எழுந்த அளவு கடந்த கோபத்தில் அந்த கடிதத்தை இரண்டாக நான்காக எட்டாக கிழித்து சாலையில் தூக்கியெறிந்தேன்.
அதற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து வெல்லிங்டன் சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சில பைகளை தூக்கி கொண்டு சாலையோரத்தில் விக்டோரியா நடந்து செல்வது தெரிந்தது, நான் அவளை கண்டுகொள்ளாமல் வேகமாக சைக்கிளை மிதித்து அவளை கடந்த போது “வினோத்” என்று அவளுடைய இனிமையான குரலில் வெளிவந்த என்னுடைய பெயர் என் காதுகளை தீண்டியது.
அவளுக்கு என்னுடைய பெயர் தெரிந்திருக்கிறது என்ற மகிழ்ச்சி ஒரு ஓரத்தில் இருந்தாலும் கூட அவள் மேல் இருந்த கோபம் என்னை நிற்க விடாமல் செய்தது. மேலும் வேகத்தை கூட்டி அங்கிருந்து விரைந்தேன்.
சில நாட்கள் கழித்து விக்டோரியாவின் தந்தை இறந்து விட்டதாக ஒரு செய்தி காட்டுத் தீ போல் பரவ, மொத்த ஊரும் அவள் வீட்டின் முன் குழுமியிருந்தது. கோவாவின் அருகில் இருந்த ஏதோ ஒரு கிராமத்தில் அவர் இவ்வளவு நாள் வேலை பார்த்து வந்ததாகவும் திடீரென்று இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்ட அப்பகுதி மக்கள் அவருடைய பைகளை தேடி அதில் இருந்த அடையாள அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த விலாசத்தின் மூலம் விக்டோரியாவை தொடர்பு கொண்டதாகவும் சுற்றி இருக்கும் ஊர்வாசிகள் பேசுவது எனக்கு கேட்டது. அப்போது அங்கே வந்து நின்ற ஆம்புலன்ஸில் இருந்து அவளுடைய தந்தையின் சடலம் இறக்கி வைக்கப்பட்டது. அதைப் பார்த்த விக்டோரியாவின் பாட்டி “மை சன், மை ஜேக்கப்” என்றபடி தலையில் அடித்து கொண்டு அவருடைய சடலத்தின் மேல் விழுந்து அழத்தொடங்கினாள். அந்த பெயரை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படியென்றால் அன்று நான் கிழித்தெறிந்த கடிதம் அவளுடைய தந்தையிடமிருந்து வந்திருந்த கடைசி கடிதமா. அவளுடைய தந்தை அவளிடம் ஏதேனும் உதவி கேட்டு அந்த கடிதத்தை எழுதியிருக்கலாம் அல்லது தற்கொலை செய்யும் முன்னர் அவளுக்கு கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்பி எழுதி இருக்கலாம் என்றெல்லாம் என் மனதில் யூகங்கள் எழத் தொடங்கின. அழுது கொண்டிருந்த பாட்டியை தானும் அழுதபடியே அணைத்து சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள் விக்டோரியா. எனக்குள் திடீரென்று எழுந்த குற்ற உணர்ச்சியால் அங்கு நிற்க தைரியம் இல்லாமல் என் சைக்கிளை எடுத்து கொண்டு வேகமாக மிதித்த படி அங்கிருந்து நகர்ந்தேன். அந்த குற்ற உணர்ச்சி என்னை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்தது. அதற்கு பிறகு விக்டோரியாவின் வீட்டிற்கு அருகில் செல்லும் தைரியமும் வாய்ப்பும் ஏற்படவில்லை. அடுத்த சில மாதங்களிலேயே என் தந்தைக்கு பணி மாற்றல் கிடைத்து அங்கிருந்து வேலூருக்கு குடிபெயர்ந்துவிட்டோம். அதற்கு பிறகு அவளை பார்க்கும் வாய்ப்பும் சூழலும் கிட்டாமலே போனது. அடுத்த சில வருடங்களிலேயே கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு குடிப்பெயர்ந்த நான் பிறகு வேலை, குடும்பம் என்று கால ஓட்டத்தில் குன்னூரை பற்றி மறந்தே போனேன். இருந்தாலும் விக்டோரியா அவ்வப்போது என் மனக்கண்ணில் தோன்றி மறைவாள். அவளுக்கு என்ன ஆகியிருக்கும், அவள் தந்தை அவளிடம் என்ன சொல்ல நினைத்திருப்பார் என்ற கேள்விகள் என் மனதில் எழும். இரண்டு வருடங்களுக்கு முன்பு வெலிங்டனில் என்னோடு படித்த முகேஷை எதிர்பாராத விதமாக சந்தித்தபோதுதான் குன்னூரின் நினைவுகள் என் மனதில் மறுபடியும் கிளர்ந்தெளுந்தன.
நான் வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்தின் அருகிலிருந்த மற்றொரு மென்பொருள் நிறுவனத்தில் தான் அவன் வேலைக்கு சேர்ந்திருந்தான். அதற்குப் பிறகு அடிக்கடி சந்தித்துக்கொண்ட நாங்கள் குடும்ப நண்பர்களாகவும் மாறிவிட்டோம்.
“விக்டோரியா எப்படி இருக்காங்க” என்றேன் ஆர்வமான குரலில்..
என்னை பார்த்து கிண்டலாக சிரித்தபடியே பதிலளித்தான் முகேஷ்.
“விக்டோரியா அப்படியே தான்டா இருக்கா, அவங்க பாட்டி செத்துட்டாங்க, இன்னும் கல்யாணம் ஆகல, அவங்க அப்பா வச்சுட்டு போன கடன் எல்லாம் ஒரு வழியா தீத்துட்டா, இப்போ அவ வீட்டு பக்கத்துலயே ஒரு சின்ன பேக்கரி வச்சு நடத்திட்டு இருக்கா“
ஆர்வம் தாங்காமல் மேலோட்டமாக அவளுடைய எஸ்டேட் மேனேஜராக இருந்த குழந்தைவேலுவை பற்றி விசாரித்தேன். அவர் தன் மனைவி குழந்தைகளுடன் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய சொந்த ஊரான சிவகங்கைக்கு சென்று விட்டதாக சொன்னான் முகேஷ். முகேஷின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு தான் இப்போது நான் என் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறேன்.
நாங்கள் முகேஷின் வீட்டை அடைந்திருந்த போது கிட்டத்தட்ட நிகழ்ச்சி தொடங்கியிருந்தது கூட்ட நெரிசலில் சிரமப்பட்டு உள்ளே நுழைந்த நான் முகேஷின் மனைவியிடம் அவந்திகாவையும் சோபனாவையும் பார்த்துக் கொள்ளும்படி ஒப்படைத்துவிட்டு அந்த கூட்ட நெரிசலிலிருந்து வெளியேறினேன். வெளியே இருந்த ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி கொண்டு வெல்லிங்டன் தெருக்களுக்குள் இறங்கி நடக்க தொடங்கினேன். குன்னூரில் நிகழ்ந்திருந்த பெரிய அளவிலான மாற்றங்கள் வெல்லிங்டனில் நிகழவில்லை என்றே தோன்றியது. எனக்கு பரிச்சயமான பல கட்டிடங்கள் அப்படியே இருந்தன.சில கட்டிடங்கள் தனது வண்ணங்களை மட்டும் மாற்றியிருந்தன.
நடந்து கொண்டே அனிச்சையாக விக்டோரியாவின் வீட்டிற்கு முன் சென்றுவிட்டேன். எப்போதும் இளைஞர் கூட்டம் குழுமி காணப்படும் அவளுடைய வீட்டின் எதிரில் இருக்கும் குட்டிச்சுவர் பாசி படிந்து கேட்பார் இல்லாமல் அனாதையாக நின்றிருந்தது. அந்த சுவருக்குள் கல் மண் மற்றும் சிமெண்டுடன் பல வெல்லிங்டன் வாசிகளின் பால்ய கால நினைவுகளும் புதைந்திருப்பதாக என் மனதுக்குப்பட்டது. மெல்ல அந்த சுவற்றில் சாய்ந்த படி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். விக்டோரியாவின் வீடு பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் அப்படியே இருந்தது வீட்டின் வாசற்கதவின் நிறம் மட்டும் கருப்பிலிருந்து பச்சையாக மாறியிருந்தது. சில மணித்துளிகளில் அவளுடைய வீட்டின் முன் மோட்டார் பைக்கில் வந்து நின்ற பால்காரர் தன்னுடைய ஹார்னை அலறவிட்டார். அடுத்த சில நொடிகளில் அந்த பச்சை நிற கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் விக்டோரியா. அவள் காலை சுற்றியபடி ஒரு வெள்ளை நிற பூனையும் அவளுடன் நடந்து வந்தது.
அவளுக்கு வயதானதை பறைசாற்றுவதை போல கன்னங்களில் ஆங்காங்கே தோல் சுருக்கங்கள் தென்பட்டன எப்போதும் காற்றில் பறக்கும் அவளது தலை முடியின் முன்புற பகுதிகள் ஆங்காங்கே நரைத்திருந்தன. அவள் எப்போதும் அணிவது போலவே இறுக்கமான உடையையே அன்றும் அணிந்திருந்தாள். ஆனால் இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தது போல இன்று அது அவளுடைய உடல் அங்கங்களை எடுப்பாக காட்ட சிரமப்பட்டது.
தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தை நீட்டி பால்காரரிடமிருந்து பாலை வாங்கி கொண்டவள் ஏதார்த்தமாக தெருவை நோட்டமிட்ட போது என் முகத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு பார்வையை என்னிடமிருந்து விலக்கினாள். அங்கிருந்து திரும்பி வாசலை நோக்கி நடந்தவள் வாசற்கதவின் அருகில் தன்னுடைய பூனை பால் குடிப்பதற்காக வைத்திருந்த சிறிய பாத்திரத்தில் தன்னுடைய கையில் இருந்த பாத்திரத்திலிருந்து சிறிது பாலை ஊற்றினாள். பின்னர் வாசற்கதவை அடைந்தவள் ஏதோ நினைவு வந்தவளாய் பின்னால் திரும்பி என்னை பார்த்தாள். அவள் என்னை அடையாளம் கண்டிருக்கக் கூடும். அதற்குப் பிறகு சில நொடிகள் தீர்க்கமாகவும் கூர்மையாகவும் என்னை உற்றுப்பார்த்தவள் மெதுவாக இதழ்களை விரித்து கண்களை சுருக்கி ஒரு சிறிய புன்னகையை என்னை நோக்கி பரவவிட்டாள். அவள் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் தொங்கி கொண்டிருந்த ஜேக்கப்‘ஸ் பேக்கரி என்ற பதாகை என்னை பயமுறுத்த என்னுடைய நடுங்கிய விரல்களில் இருந்த சிகரெட்டை கீழே எரிந்து விட்டு அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினேன்.