ரம் லுனாஸ் போலிஸ் ஸ்டேஷனில் காலை 6.30க்கே போய்ச் சேர்ந்திருந்தார்.

ஆறாம் ஆண்டு அடைவு நிலை அரசு தேர்வுக்கான வினாத் தாட்கள் கொண்ட சீல் செய்யப்பட்ட உறையை அங்குதான் எடுக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக வினாக்கள் கசிந்து வெளியாகிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டை பொது ஊடகங்கள்  வெளிப்படுத்த, தேர்வு வாரியம் வினாத்தாட்களை  காவல் நிலையத்துக்கு அனுப்பி அங்கிருந்தே அன்றைக்கான தாட்களை தலைமை சோதனை அதிகாரி கையொப்பமிட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற சட்டத்தைக் கறாராக  அமல்படுத்திக்கொண்டிருந்தது.

அன்றைக்கு மலேசிய மொழிச் சோதனை நாள். மலேசிய மொழியில் தோல்வி கண்டால் மற்றெல்லாப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றாலும் எந்தப் பிரயோஜனமுமில்லை. அப்பாடத்தில் தேர்ச்சிபெற்றாலொழிய சான்றிதழ் செல்லுபடியாகாது, உப்பில்லாத பண்டம் போல!.

பரம் எங்கள் பள்ளியில் மலேசிய மொழி ஆசிரியர். பள்ளித் தேர்வு முடிவுகளில் ஊனமுண்டானால் அவர்தான் பொறுப்பு. அது மிகுந்த பதற்றம் தரக்கூடிய பாடம். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அப்பாடம் எப்போதுமே சிம்ம சொப்பனம்தான்.

போலிஸ் நிலையத்தில் சோதனைத் தாட்களை கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டவர் நேராக அவர் தலைமைச் சோதனை அதிகாரியாகப் பணிக்கப்பட்ட பள்ளிக்குமப் போகாமல், தான் போகும் வழியில் இருக்கும் தான் போதிக்கும் பள்ளிக்கு அருகே மறைவான இடத்தில் காரை நிறுத்தி, பிளேடால் சீல் செய்யப்பட்ட  உறையின் தலைப் பகுதியை கீறிய அடையாளம் தெரியா வண்ணம்  சிசேரியன் செய்து ஒரு தாளை மட்டும் வெளியே எடுத்தார். கை நடுக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. பின்முதுகு வியர்த்துவிட்டிருந்தது! கேள்வித்தாள் மந்திரவாதியின் துருப்புச் சீட்டுபோல தலையை நீட்டிக்கொண்டு வெளியே வந்தது. தான் பாதுக்காக்கவேண்டிய ரகசியத்தை தானே உடைத்துத் தாளைத் தொட்டபோது குண்டு உள்ள துப்பாக்கியைத் தொட்டதுபோல விரல்கள் அதிர்ந்தன.

சோதனை மண்டபத்தில் பொட்டலத்தை அவர்தான் எல்லாருடைய முன்னிலையிலும் சீலை நீக்கி, உறையைக் கத்தரித்து தாட்களை வெளியே எடுக்கவேண்டும். எல்லோரும் பார்க்க பிளேடால் வெட்டப்பட்ட தடயத்தை மறைத்து, மண்டபத்தில் மறுபக்கம் காட்டி  சாதூர்யமாகக் கத்தரித்துத் தாட்களை வெளியே எடுத்துத் தான் நியாயத்தை பறைசாற்றிவிடுவார்.

யாரும் அறியா வண்ணம் சோதனையில் வெளியாகப்போகும் கட்டுரைக்கான வினாக்களை மனதில் ஏற்றிக்கொண்டார். பள்ளியில் இறங்கி தன் சக ஆசிரியர் நாதனிடம் இன்னின்ன வினாக்கள் வந்திருக்கின்றன, நம் மாணவர்களைத் தயார்படுத்திவிடுங்கள் என்று ரகசியமாகச் சொல்லிவிட்டுத் தான் சோதனை நடத்த பொறுப்பேற்ற பள்ளிக்குக் கிளம்பிப் போய்விட்டார்.

எப்போதும் போலல்லாமல் சோதனை நாட்களில்  முக்கால் மணி நேரத்துக்கு முன்னரே பள்ளி வளாகத்துக்கு வந்துவிடுவார்கள் மாணவர்கள். அவர்கள் நெற்றியில் திருநீறு பள்ளிச்சிடும். பட்டையும் போட்டிருப்பார்கள்.  கடவுளை வலிந்து இழுக்கும் உபாயம் அன்றைய நாட்களில் நடப்பதை கடவுளே தடுத்தாலும் நடக்காது.

………………………….

மாலா என் அறைக்கு வந்திருந்தார். கோப்பு வேலையில் கவனக்கூர்மை கொண்டிருந்ததால், அவர் நிழல் விழுந்த சில நொடிகளுக்குப் பின்னரே அவர் இருப்பை உணர்ந்தேன்.

நான் ஏறிட்டுப் பார்த்ததும், “சார் ஒரு பிரச்ன” என்றார். பிர்சனை காரணமாக வணக்கம் வைக்கவில்லை மறந்துவிட்டிருந்தார்.

நான் அவரைக் கூர்மையாகப் பார்த்தேன். பிரச்னை என்றாலே பிரக்ஞை விழிப்புத் தட்டிவிட்டது எனக்கு. பள்ளிக்கு இன்னொரு பெயர் பிர்ச்னை என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

“சுவா பணத்த காணம். ஹேண் பேக்கில்  வச்சிருந்தத , யாரோ திருடிட்டானுங்கனு தோணுது”

“எவ்ளா?”

“இருவத்தோரு மாணவர் கொடுத்த கட்டணம். ஐநூத்துச் சொச்ச வெள்ளி!”

“யாரு மேல சந்தேகப் படுறீங்க?”

“என் வகுப்பு மாணவரா இருக்கலாம்.”

“எத வச்சி சொல்றீங்க?”

“நான் என் ஹேண்ட் பேக்கை என் மேசைல வச்சிட்டு டோய்லெட் போய்ட்டேன், திரும்பி வந்து ஆபிஸ்ல ஒப்படைக்க பேக்கை தொறக்கிறப்பதான் தெரிஞ்சது!”

“எல்லா மாணவரும் வகுப்பில இருக்கிறப்போ இது சாத்தியமில்லையே டீச்சர்.”

“அப்போ பிஜே பீரியட் சார். ரெண்டாவது பீரியட். பிள்ளைங்க எல்லாரும் தெடலுக்கு போன சமயம். வகுப்பில யாருமில்லையேன்னு நம்பி வச்சிட்டுப் போனேன். கவனக் குறைவா இருந்திட்டேன்.”

“அப்படின்னா அதுல யாரோ ஒருத்தன் பிஜே டைம்ல எடுத்திருக்கலாம்னு நெனைக்குறீங்க இல்லையா?

மாலா தலையாட்டினார்.

நான் சற்று யோசித்துவிட்டுச் சொன்னேன், “நீங்க ஒன்னு பண்ணுங்க. பணம் திருடு போனதா இன்னைக்கு வகுப்பில காட்டிக்காதீங்க. பி ஜே வாத்தியார எந்த மாணவர் விளையாட்டுக்கு வரலேன்னு மட்டும் விசாரிச்சி பாருங்க.”

“கேட்டுட்டேன் சார். நாப்பாதோரு மாணவர்கள் கூட்டம். இன்னும் சில வகுப்பு மாணவர்களும் தெடல்ல இருந்திருக்காங்க! அப்படி யாரும் இல்லாமல் இருந்ததா தான் உணர்லேன்னு சொன்னாங்க. எந்த மாணவரும் அனுமதி கேட்டு தெடல விட்டு வெளியாகலேன்னும் சொன்னாங்க.”

“நீங்க பணம் வசூல் பண்ணதையும் பையில வச்சதியும் மாணவர்கள் பார்த்திருக்காங்க. பார்த்தவர்கள்ள ஒருத்தன் எடுத்திருக்கலாம். நீங்க பணத்த மாணவர் முன்னால பையில வச்சிருக்கக்கூடாது. பணத்தப் பாத்தா யாருக்குத்தான் ஆச வராது? சரி பரவால்ல, நாளைக்கு விசாரணைய தொடங்கலாம். இன்னைக்கு எதையும் வகுப்பில காட்டிக்காதீங்க! மாணவர்கள ரகசியமா கண்காணிச்சிக்கிட்டு வாங்க. இந்த இருவத்து நாலு மணி நேரத்துல ஏதாவது துப்பு கெடைக்கலாம். எங்காவது கசியலாம். நீங்க பதட்டப்படாதீங்க பணம் கெடச்சிடும்.” என்றேன்.

“திருடனவன் செலவு பண்ணிட்டானா சார்?”

“நாம இப்பத்திக்கு திருடியவன் கண்டு பிடிச்சி கண்டிக்கணும். அதான் முக்கியம். அவ்ளோ பணத்த அவனுக்கு செலவழிக்கத் தெரியாது. அவன் விரும்புற பொருளு மலிவானதாத்தான் இருக்கும். மீதப்  பணத்த மீட்டுடலாம். இந்தப் பணம் எடுத்தவன் தகுதிக்குப் பெரிய தொகை உங்க அஜாக்கிரதையினால பணம் களவாடப்பட்ருக்கு. அப்படியே எல்லாப் பணமும் கெடைக்கிலனா, நீங்கதான் அதுக்கு முழு பொறுப்பேற்கணும் டீச்சர்.” மாலாவின் முக அசைவுகளில் அதிருப்தியின்மை ஓடியது.

……………………………………………….

சோதனை நடக்கும் அதிகாலை வேளையில் பரம் பள்ளி வளாகத்துக்கு வெளியே காரை நிறுத்தும்போதே பதட்டத்துடன் இருந்ததால் பின் இடது பக்க டயர் குழியில் இறங்கிவிட்டிருந்தது, அது சிறிய  களேபரத்துக்குக் காரணமானது. சில ஆசிரியரகள், மாணவர்கள் துணையோடு சமதரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது கார். அவர் சக ஆசிரியரிடம் அவசரமாக பேசிச்செல்வதையும் சில ஆசிரியர்கள் பார்த்திருக்கிறார்கள். சோதனை மையத்துக்குப் போகவேண்டியவர் இங்கு வரக் காரணமென்ன என்று ஆசிரியர்களுக்குச் சொல்லி விளக்கவேண்டியதில்லை. அதனைப் பார்த்தவர்கள் அவரைப் பிடிக்காதவராகக்கூட இருந்திருக்கலாம். அவர்களில் யாரோ ஒருவர் சகுனியாக இருந்திருக்கிறார்.

மலேசிய மொழி சோதனை முடிந்து மாணவர்கள் மகிழ்ச்சியோடு வெளியேறிக்கொண்டிருந்தனர். கட்டுரை வினாக்கள் கிடைத்தவுடன் அந்தத் தலைப்பிலான கட்டுரையை அரை மணிக்குள் மூளையில் ஏற்றிக்கொண்டு மண்டபத்துக்குள் நுழைந்தவர்கள், சோதனை முடிந்து வெளியேறும்போது மகிழ்ச்சி கொப்பளிக்காத என்ன? அந்த சம்பந்தப்பட்ட சகுனிக்கு இந்தச் சம்பவங்களெல்லாம் பெட்டிசன் போட ஆதாரங்களாக இருந்தன. பெட்டிசன் போடுபவர்கள் மகா திறமைசாளிகளாக இருப்பார்கள்.பேர் குறிப்பிடாமல் செய்யும் செயல் என்ற காரணத்தால் கடிதம் உண்மையாக நடந்ததுபோன்ற ஆதாரங்களை உள்நுழைத்திருப்பார்கள். ஆனால் மிகக் கவனமாகத் எழுதியர் பேர் விடுபட்டிருக்கும்.

சோதனை முடிந்து மூன்று வாரங்கள் இருக்கும், கல்வி இலாகாவிலிருந்து அமைப்பாளர் கர்ணன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மறுநாள் பள்ளிக்கு வரப்போவதாகச் சொன்னவுடன்தான் இதெல்லாம் என் பிரக்ஞையை விழிப்படையச் செய்தது..

“லீவு போட்டுராதீங்க. அதான் மொதல்லியே சொல்றேன்,” என்றார்.

“நான் என்ன சார் திடீர்னு? என்ன விஷயம் சார்?” என்றே ஏதாவது துப்பு கிடைத்தால் உஷாராகிவிடலாம் என்பதற்காகக் கேட்டு வைத்தேன்.

“கடுமையான பெட்டிசன் வந்திருக்கு. இயக்குனர் விசாரிக்கச்சொல்லி என்ன அனுப்புறாரு” என்றார்.

“எதப்பத்தி சார்?

“வந்து சொல்றேன்”

ஏதாவது பிரச்னையாக இருந்தால் மட்டுமே அமைப்பாளர் பள்ளிக்கு வருகை தருவார். என் நிர்வாகத்தில் சமீபமாக எந்தப் பிரச்னையும் இல்லை. யோசித்துப் பார்த்ததில் பரம் மேல்தான் வந்திருக்கவேண்டும் என்று யூகித்துக்கொண்டேன்.

சோதனை நடக்கும் தினத்தில் வினாக்கள் பரம் மூலம் கிடைக்க வாய்ப்புண்டு என்று நாதன் காதோடு காதாக சொன்னது நினைவுக்கு வந்தது. பள்ளியின் தேர்ச்சி விகிதம் இரண்டு ஆண்டுகளாகச் சரிவு நிலை கண்டிருந்தத்து. அதற்காக கல்வி இலகாவினரின் குடைச்சலுக்குப் பதில் சொல்ல நடையாய் நடக்க வேண்டியிருந்தது. அந்நாட்களில் நடு இரவில் தூக்கம் கூட கலைந்துவிடும். இரவில் அடிக்கடி சிறுநீருக்கு எழவேண்டிவரும்.

அடுத்த ஆண்டு எத்தனை விகிதம் உங்கள் டார்ஜெட் என்று எழுதியும் வாங்கிக்கொண்டார் கல்வி இயக்குனர். இந்த டார்ஜெட்டை அடைய மலேசிய மொழிப்பாடம்தான் பெரும் தடையாக இருந்தது. இந்த ஆண்டு வெள்ளோட்டச் சோதனைகளிலும் மலேசிய மொழிப்பாடத்தில்தான் சிவப்பு மை கோலம் வரைந்திருந்தது.  எனவே நாதன் முன்னேற்பாட்டுக்கு நானும் தயங்கித் தயங்கி உடன்பட்டிருந்தேன். நான் சம்பந்தப்பட்டாதாகத் தெரியக்கூடாது என்று கட்டளையிட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. தேர்ச்சி விகிதத்தில் சரிவு உண்டானால் மீண்டும் இயக்குனரின் அழைப்பு வரும். மீண்டும் குடைச்சல். உங்கள் டார்ஜெட் இட்டுக் கட்டியதா என்று கூட்டத்தில் சக தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் மானத்தை வாங்கிவிடுவார் இயக்குனர்.

சமீபமாக பள்ளியில் எந்தப் பிரச்னையும் இல்லை. பரம் ஆசிரியரின் செயல் மட்டுமே பெட்டிசனுக்குக் காரணமாக இருக்கக்கூடும்!

எதற்கும் உஷாராகிவிடவேண்டும்.நான் பரமை உடனே ரகசியமாக அழைத்தேன்.

“பரம் நாளை அமைப்பாளர் வறாரு. பெட்டிசம் போயிருக்கு. விசாரிக்க வரன்னிருக்காரு. பரீட்ச தொடர்பா இருக்கலாம்னுதான் பலமான சந்தேகம் வருது! எனக்கு நீங்கதான் உடனே நினைவுக்கு வந்தீங்க. அதான் கூப்பீட்டேன்.” என்றேன். பரம் பீதிகொள்ள ஆரம்பித்தார். கன்னச் சதை குலுங்கியது. பக்கவாட்டில் தொங்கிய கைகள் நடுங்குவதைப் பார்த்தேன். எச்சிலை மல்லுக்கட்டி விழுங்கும் முயற்சியைக் கண்டேன்.

“பரம், எங்கிட்டதான் முதல்ல விசாரணை நடக்கும். நான் திட்டவட்டமா அப்படியெல்லாம் இல்லன்னு சொல்லிடுவேன். நீங்க பயப்டாதீங்க. எப்போதும் போல இயல்பா இருங்க.”

அவர் நெற்றியில் துளிர்ந்த வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டார்.

“நீங்க அன்னைக்கு காலையில பள்ளிக்கு வந்தத பல ஆசிரியர் பாத்திருக்காங்க. அதுதான் பெரிய எவிடன்ஸா அவருக்குப் போயிருக்கும். உங்க டிரைவிங் லைசண்ஸ் பெர்ஸ்ல இருந்ததாகவும் அத உங்க மேசை டிரோவர்ல மறந்து விட்டுட்டு போய், அன்னைக்கு காலையில எடுக்க வந்தேன்னு மட்டும் சொல்லிடுங்க. பரீட்ச நேரம் எங்க பாத்தாலும் போலிஸ் தடுப்பு இருக்கும் அதான் பள்ளிக்கு வரவேண்டி இருந்ததுன்னு சொல்லுங்க! மத்தத நான் பாத்துக்கிறேன்“ என்றேன். அப்போது அவர் சமதானமடைந்திருந்தார். தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் நான், என் சாட்சியத்தில் அவரைக் காப்பாற்றிவிடுவேன் என்று வலியுறுத்தலால் அவர் அமைதி அடைந்திருக்கலாம்.

“நாதண்ட சொல்லி மணவர்கள எச்சரிக்கப்படுத்தச் சொல்லுங்க. அவருக்குத்தான் எல்லாரும் பயப்படுவானுங்க. அவர் கட்டளையிட்டா கண்டிப்ப எதுவும் வெளிய சொல்லமாட்டானுங்க. அமைப்பாளர் மாணவர தனித் தனியா விசாரிக்கவும் வாய்ப்பு இருக்கு. எவனாவது ஒளறி காரியத்த கெடுத்திறப் போறான்.” என்றேன் தீர்க்கமாக.

பரம் நாதனை நோக்கி விரைந்தார்.

“எல்லா மாணவர்ட்டேயும், குறிப்பா பயப்படுற சுபாவம் உள்ள மாணவர்ட்ட கவனமா இருக்கச்சொல்லி வலியுறுத்திச்ச் சொல்லுங்க.” என்று அடுத்த வாக்கியத்தை சொல்லும்போது அவர் போகும் வேகத்தை மட்டுப்படுத்தி சேவற்கோழிபோலக்  கழுத்தைத் திருப்பிப் பார்த்துத் தலையாட்டி உள்வாங்கிக்கொண்டார்.

…………………………………

றுநாள் காலை எட்டரை மணி வாக்கில் என் அறைக்கு வந்திருந்தார் மாலா டீச்சர்.

“சார், கதிரேசன் எடுத்திருப்பான்னு துப்பு கெடச்சிருக்கு சார்.” கதிரேசனின் முகம் எனக்குத் தட்டுப்படவில்லை. என் இமைச்சுருக்கத்தைப் பார்த்த டீச்சர், ”போன மாசம்கூட சபையில தண்டிச்சீங்களே, ஒரு பையனோட புதுப் பேனாவ எடுத்திட்டானு, அவன்,”

எனக்கு அவன் முகம் உடல் தோற்றம் கண் முன்னால் உருக்கொள்ளத் தொடங்கியது. நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

“கதிரேசன் நேத்து ஸ்கூல் முடிஞ்சி பள்ளிக்கு வெளியே, கூட்டாளிக்கெல்லாம் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்திருக்கான். ஒத்த ஒத்த வெள்ளி நெறைய கையில வச்சிருந்தான்னு விமலாங்கிற மாணவி சொன்னிச்சி. வகுப்பு மோனிட்டர் சார், அதுகிட்ட மட்டும்தான் ரகசியமா சொல்லிவச்சேன், நம்பகரமான மாணவி சார்.”

“அவன கூப்ட்டு ஒனக்கு ஏது அவ்ளோ காசுன்னு கேட்டேன். அவங்க மாமா கொடுத்தார்னு சொன்னான்.” என்றார். அவன் கண்ல பொய் தென்பட்டுச்சி பாத்தேன்.”

“அவன மட்டும் வரச்சொல்லுங்க, மேக்கொண்டு நான் விசாரிக்கிறேன்” என்று அனுப்பி வைத்தேன்.”

……………………….

க்காரு கதிரேசன்.” என்றேன். நின்றுகொண்டே இருந்தான். அவன் கால்களில் நடுக்கம் இருந்தது.

அவனைச் சமன் செய்ய, “ அப்பா என்ன வேலை செய்றார் கதிரேசன்” என்று ஆரம்பித்தேன்.

“அப்பா இல்ல சார்.” என்னிடமிருந்து கரிசனத்தைக் கோரும் குரல் அது.

“அம்மா….?”

“பெக்டிரி லைன் லீடர்.”

“நேத்து ஒன் கூட்டாளிங்களுக்கெல்லாம் ஐஸ் வாங்கிக் கொடுத்தியா? அவ்ளோ காசு ஏது ஒனக்கு?”

“நேத்து மாமா வந்தார். அஞ்சி வெள்ளி கொடுத்தாரு.சார்.”

“ஒங்க மாமா நேத்து வந்தாரா? விசாரிக்கலாமா? அவர எனக்குத் தெரியும்.?” என்று ஒரு பேச்சுக்கு கிளப்பிவிட்டேன். அவன் முகம் கலவரமடையத் தொடங்கியது.

நான் அவனின் தோற்றத்தின் திடீர்ச் சிதைவைச் சாதகமாக்கி “சொல்றா, இப்ப போன் பண்ணி விசாரிக்கவா? ஒங்க மாமாவ?”

அவனிடமிருந்து மூச்சில்லை.

நான் அவனை மேற்கொண்டு சிந்திக்கவிடாமல் பேசினேன். “சமீபத்தில ஒரு ஞாயித்துக் கெலம உன்னதான் சபையில தண்டிச்சேன்?” அவன் முகம் கருமேகம்போல இருளடையத்தொடங்கியது.

“ஒழுங்கா சொல்லு ஒனக்கேது பணம்?”

“நீ சொல்லல நான் போலிஸ கூப்பிடுவேன்,” என்று மேசை ரிசீவரை எடுத்தேன்.”

போலிஸ் என்றதும் ஆள் முழுவதுமாய் உடைந்துவிட்டான். கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. நான் பொய்யாக மிரட்டினேன் அவ்வளவே!

“சொல்லு நீ எடுத்தேன்னு ஒத்துக்கிட்டா, பள்ளிக்கூட விசாரணையோடு விட்டுர்றேன், பயப்பட வேணாம், போலிசையெல்லாம் கூப்பிட மாட்டேன்” என்றேன்.

அவன் பயந்த குரலில் சொன்னான், விழிநீர் கொட்ட, “நான் தான் சார் எடுத்தேன்” என்று ஒத்துக்கொண்டான்.

“எங்கேர்ந்து எடுத்தே?”

“டீச்சர் ஹேண் பேக்லேர்ந்து”

“அப்படி எடுக்கிறது தப்புன்னு தெரியாத ஒனக்கு?”

அவன், “தப்புதான் சார், தெரியாம செஞ்சிட்டேன்” அழுகை நிற்கவில்லை.

“சரி, ஒத்துக்கிட்ட. அதுபோல பணத்தையும் ஒப்படச்சிடணும், அது ஸ்கூல் பணம், கண்டிப்பா திரும்பக் கொடுத்திடனும், தெரியுதா? இப்ப பணம் எங்க இருக்கு?”

“அம்மா வாங்கி வச்சிக்கிட்டாங்க சார்,”

“அம்மா கேக்குலையா பணம் ஏதுன்னு?”

“கீல கெடச்சதுன்னு சொன்னேன் சார்!”

“நீ சொன்னத நம்பிட்டாங்களா?”

“ சிரிச்சிக்கிட்டே வாங்கி வச்சிக்கிட்டாங்க.”

“ நீ பள்ளி முடிஞ்சி வீட்டுக்குப் போனதும், அம்மாவ நான் பாக்கணும்னு சொல்லி கூட்டிவா.”

“சரி சார்.” அப்போதைக்கு அவன் தப்பித்துவிட்ட வேகம் இருந்தது அவன் வெளியேற்றத்தில்.

………………………………………………..

முதல் பாடவேளை முடிந்த கையோடு அமைப்பாளர் வந்துவிட்டடுருந்தார். நல்ல வேளை நாதன் மாணவர்களை அன்று காலை மீண்டும் சந்தித்து நினைவுபடுத்திவிட்டிருந்தார். எனக்கும் அதுவே சரியெனப்பட்டது. ஆனால் சபையின்போது அவர் முகம் கலையற்றுக் கிடந்தது. நான் அவரை நெருங்கி முதுகில் ஆதரவாகத் தட்டி விழிமொழியால் ஆறுதல் சொன்னேன்..

அமைப்பாளர் வந்ததும் “சார் கெண்டீனில் பசியாறிடலாம் சார்.”

“அதெல்லாம் வேண்டாம். நான் சப்பிட்டுட்டுதான் வந்தேன்” என்றார். அவரை என் அறைக்கு அழைத்துச் சென்று நாற்காலியை இழுத்துப் போட்டேன். அவர் அமர்ந்ததும்தான் நான் என் இருக்கைக்குப் போகுமுன்னர் குமாஸ்தாவிடம் கெண்டீனுக்குப் போய் காப்பி ஆர்டர் கொடுக்கச் சொன்னேன்.

அமர்ந்தவர் தன் பையைத் திறந்து ஓர் உறையை என் முன் நீட்டினார். ஸ்டாம்ப் முத்திரை குத்தப்பட்ட மைக்கறை சிதறிக் கிடந்தது.  “படிச்சிப் பாருங்க,” என்றார். தலைப்பே அடைவுநிலை அரசு சோதனையில் பள்ளி ஆசிரியரின் மோசடிச் செயல் என்றிருந்தது. சிகப்பு அடிக்கோடிட்டு தலைப்பு! ஒரு பக்கம் நிறைய புகார்கள் நிறைந்த கடிதம். படிக்கப் படிக்கத் திகிலடையச் செய்தது. நான் சந்தேகப் பட்டதுபோல பரம் மீதான பெட்டிசன். நானும், நாதனும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. கண்டிப்பாக என் பள்ளி ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டிருப்பதை அதன் விபரங்கள் காட்டியது. தேர்வு நடந்த அன்றைய காலை வேளையில் நடந்த அனைத்தும் நடந்த மாதிரியே கம்பூயூட்டரில் டைப் செய்யப்பட்டிருந்தது. கையெழுத்தென்றால் கண்டுபிடிக்க வாய்ப்புண்டு.

“நான் சம்பந்தப்பட்ட ஆசிரியர விசாரிக்கனும், அதுக்கு முன்னால நீங்க சில கேள்விக்கு பதில் சொல்லணும்.?”

என் உள்ளுதறலைக் காட்டிக்கொள்ளாமல் கேளுங்க என்று நிமிர்ந்து அமர்ந்தேன். யாரோ என்னையும் நாதனையும் பரமையும் பிடிக்காமல் போட்ட விஷக் கடிதம் என்றேன்.

“நெருப்பில்லமா புகையாது சார்” என்று பதிலடி கொடுத்தார். மனுஷன் முடிவே கட்டிட்டாரோ? “துல்லியமா கிரோனொலோஜி பிரகாரம் எழுதப்பட்டிருக்கு.” என்றார் என் கண்களைப் பார்த்தபடி.

“யார் பேர் போட்றுக்கு சார்?”

“மொட்டக் கடுதாசு போட்றவன் பேர் விலாசம் எல்லாம் போடுவானா?”

“நீங்களே மொட்டக் கடுதாசுங்கிறீங்க, அதுல நிஜத்தன்மை இருக்கும்னு நம்புறீங்களா.?”

“அதப்பத்தி விசாரிச்சுதான் சொல்ல முடியும். எல்லா மொட்ட கடுதாசையும் ஆராயும்படி புது உத்தரவு பிறப்பிச்சிருக்காங்க.”

“தேர்வு நாள் காலையில் தேர்வு அதிகாரியான உங்கள் பள்ளி ஆசிரியர் பரம் உங்க பள்ளிக்கு வந்திருக்கார். காரணமில்லாம ஏன் வரணும்?”

“பரம் வந்தது வாஸ்தவம்தான். அவர் வந்தது அவரோட லைசண்ஸ் உள்ள பர்ஸ எடுக்க. எங்கிட்ட தெரிவிச்சுட்டுத்தான் போனாரு. நானும் அவரோட மேசை வரைக்கும் போனேன். எடுத்துக்கிட்டு ஒடனே கெளம்பிட்டாரு.”

“அந்நிக்கு  நாதன்ங்கிற ஆசிரியர்ட்ட பேசிருக்காருன்னு போட்ருக்கு!”

“நாதன் அவ்ளோ காலைய்ல பள்ளிக்கு வந்ததில்ல சார், நீங்க வேணுமனா டீச்சர்ஸ் எட்டேண்டன்ஸ செக் பண்ணிக்கோங்க,” என்று சொல்லி எடுத்து போட்டேன். அன்று அவர் முன் யோசனையோடு தாமதமாகவே கையொப்பமிட்டிருந்தார். அதனை உறுதிபடுத்திக்கொண்டுதான் ரிஜிஸ்டரை தைரியமாகக் காட்டினேன்.

“உங்கள நான் நம்புறேன். நான் பரம் விசாரிக்கணும். ஒரு தனி அறை வேணும்.” எனக்கு அச்சம் மேலிட்டது. பரம் இயல்பாகவே பதட்ட குணம் உள்ளவர். நெருக்கடியான தருணங்களில் உளறத் தொடங்கிவிடுவார்.

“ஏன் சோதனை அன்னிக்கி, நீங்க நேரா சம்பந்தப்பட்ட ஸ்கூலுக்குப் போகாம இந்த ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க?”

“பெரிய வாத்தியார சந்திச்சிட்டு லைசண்ஸ் எடுக்கணும் சொல்லிட்டுதான் ஆசிரியர் அறைக்குப் போனேன்.அது அவசியமா தேவைப்பட்டது. போலீஸ் தடுத்தா நான் சோதனைக்கு நேரத்தோட போகமுடியாது சார்”

“அந்நிக்கி காலய்ல, நீங்க நாதண்ட பேசனதா புகார்ல் எழுதியிருக்கே?”

“இல்ல சார்,  நான் அவர பாக்கவே இல்ல, ஒடனே கெளம்பிட்டேன். என் சிந்தனையெல்லாம் சோதனைக்கு நேரப்படி போயிறனுங்கிறதுதான் இருந்துச்சி.”

“உங்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்ப கொடுத்தா எல்லாத்தியும் முன்னமேயே கவனமா எடுத்து வச்சிருக்கணுமில்ல?”

“எனக்கு இது முதல் அனுபவம். பதட்டமா இருந்திச்சி அதான்.”

“நீங்க வினாத்தாள எடையில எங்கியும் பிரிச்சி எடுத்தீங்களா பரம்?”

“சார் நான் வினாத்தாள் எல்லார் முன்னிலையிலும் பிரிச்சதுக்கான ஆதாரத்த சோதனை இன்ஸ்பெக்டர் ரெக்கோட்ல எழுதியிருக்கார், அதன நீங்க வாங்கிப் பாக்கலாம் சார்,” பரமின் அழுத்தமான ஆதாரம் அவரை தொடர்ந்து விசாரிக்க வைக்கவில்லை!

முன் தயாரிக்கப்பட்ட பதில்களாலாலும் என்னுடைய ஆதரவான வார்த்தைகளாலும் பரம் துணிச்சலாகவே எதிர்கொண்டார். அமைப்பாளருக்கு விசாரனையின் பதில்களில் திருப்தி உண்டாகி இருந்தது. கடைசியாக மாணவர்களை வகுப்பில் சந்தித்தார். அவர்களிடமிருந்து ஒரு துப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“சாரி சார் எனக்கிட்ட கடமைய நான் செஞ்சேன். உங்களுக்கு தொந்தரவு கொடுத்திருந்தா பெரிசு படுத்தாதீங்க. இப்ப எனக்கு உங்க நேர்மையில சந்தேகம் வர்ல. வினாத்தாள் கெடச்சதா ஆதாரம் எதுவும் கெடைகலேன்னு  இயக்குனருக்கு ரிப்போட் கொடுத்திருவேன்.” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார்.     

இது கடுமையான குற்றம்.. நிரூபிக்கப்பட்டிருந்தால் என்னென்ல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று உள்மனம் பதறியது. எனக்குப் பதவி இறக்கம் ஆகியிருக்கும். பரமின் சேவை ரெக்கொர்டில் சிகப்புப்புள்ளி விழுந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளியின் மரியாதை சந்தி சிரித்திருக்கும்.

என் பதற்றம் சீராகிக்கொண்டிருந்தது. என் மூக்குதுவாரத்தை உரசிக்கொண்டு சூடான பெருமூச்சு வெளியானது.

…………………………………………………

திரேசன் அவன் அம்மாவை பள்ளிக்கு அழைத்துவர என்ன பாடுபட்டிருப்பானோ தெரியவில்லை.

மாணவர்கள் போய்விட்டது பள்ளி வளாகம் விஸ்தரித்துக்கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. வெறிச்சோடிக் கிடந்த இடத்தில் வெய்யில் தயக்கமற்று நிறைந்து விரிந்திருந்தது. அந்தப் பட்டப்பகல் ஒளி படர்ந்து கண்களைக் கூசச் செய்தது.

நான் குளிர்சாதன ரிமோட்டை எடுத்து குளிர்ச்சியைக் கூட்டிவைத்து கதிரேசன் அம்மாவுக்காகக் காத்திருந்தேன். குற்றச்செயலுக்கான தீர்வை கண்டுபிடித்துவிட்ட மிதப்பில் நாற்காலியை பின் சாய்த்து முதுது சரிய உட்கார்ந்தேன். அதற்கு எட்டுக்கு எட்டடி கொண்ட அறையில் குளிர் சரசரவென பாய்ந்து நிரப்பிக்கொண்டிருந்தது. உடல் தளர்ச்சிகொண்டு, கண்களை அயரவைக்கும் குளிர்ச்சி.

அந்த பெண் அறைக்குள் நுழையும்போதே திணவுகொண்டு, கண்மாறாமல் என்னைத் தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே நுழைந்தாள். அவளின் நேர்கொண்ட பார்வை பள்ளிப்பணம் தொடர்பான கவனத்தைத் தொந்தரவு செய்தது. நான் கல்லூரியில் படித்த உளவியலைவிட இவள் தன் வாழ்க்கை அனுபவத்தில் அதிகமாகவே படித்திருப்பாள் போல!  நான் நிமிர்ந்து நாற்காலியின் நுனிக்கு வந்தேன். புறங்கைகள் மேசைமேல் ஊன்றி அதனை ஆதாரமாக்கிக்கொண்டேன்.

“கதிரேசன் அம்மாவா?

அவளின் ‘ம்’ சற்று ஆணவத்தோடு வெளிப்பட்டது. என் இருப்பை அலட்சியப்படுத்தும் தொனி அது.

“எதுக்கு வரச்சோன்னேன் தெரியுங்களா?’ என்றேன்.

“சொன்னான் சார்….. தெரியும்” என்றார். குரலில் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லை! என் குரலைவிட சற்றே மேலோங்கி இருந்தது.

“அது பள்ளிக்கூடத்துப் பணம். அத நீங்க ஒப்படைக்கிறது நல்லது,” என்றேன்.

:”கீலக் கெடந்த காசு எப்படி பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமாகும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டுத் துணிச்சலோடு நின்றாள். நான் சுதாரித்துக்கொள்ள சில நொடிகள் ஆனது.

“உங்கள் பையன் டீச்சர் ஹேண் பேக்லேர்ந்து எடுத்ததா அவனே ஒத்துக்கிட்டானே என் முன்னால!”

“ நீங்க போலிஸ் கீலிஸ்னு மெரட்னா சின்னப் பையன் பயப்பட மாட்டானா? அதுவும் பெரிய பதவியில உள்ள நீங்க மெரட்னா ஏன் ஒத்துக்க மாட்டான்?”

மிகுந்த எச்சரிக்கை உணர்வு தன்னிச்சையாக என்னை ஆட்கொண்டது.

“அம்மா, அவன் எடுத்தான்னு அவனே ஒத்துக்கிட வைக்கத்தான் ச்சும்மா பூச்சாண்டி காட்னேன்.. பணத்த நீங்க வாங்கிட்டீங்கனு அவனேதான் சொன்னான். அவனே ஒத்துக்கிட்ட பிறகு, இதுல விவாதிக்க என்ன இருக்கு? நீங்க பத்தரமா அத ஒப்படைப்பீங்கன்னுதான் உங்கள கூப்டு அனுப்பினேன்.”

“அதான் சார், அவன நீங்க போலிஸ் கிலீஸ்னு மெரட்டி ஒத்துக்க வச்சேன்னு சொல்லுங்க! சின்ன பையன்கிட்ட இப்டித்தான் விசாரிப்பாங்களா?”

“தவறு நடந்தா அது கண்டுபிடிக்க பாவிக்கிற உத்திதானம்மா இது.  உள்ளபடியே போலிஸ கூப்புடுர நோக்கமெல்லாம் இல்ல எனக்கு! எங்கிட்ட ஒன்னு சொல்லிட்ட பெறகு இப்ப எடப்பட்ட நேரத்துல, அவன் வேறமாரி சொல்லியிருக்கான். எப்படி?”

“அப்ப நான் அவனுக்குச் சொல்லிக்குடுத்து கூட்டியாந்திருக்கேன்னு சொல்றீஙக?” ஒரு பொய்யை எப்படிப்பட்ட பாவனையில், எந்தத் தயக்கமும் கூச்சமும் இல்லாமல் சொன்னால் அது பலிதமாகுமோ அதே பாவனையில் தயக்கமின்மையோடும் கூச்சமின்மையோடும் வலியுறுத்திச் சொன்னாள்.

அந்தத் தாக்குதலுக்கு உடனடியான பதில் சொல்ல முடியவில்லை என்னால்!

நான் செய்த மடத்தனம் எனக்கு சுறீரென்று உறைத்தது. நான் அவனை வீட்டுக்கு அனுப்பியிருக்கக் கூடாது. இங்கேயே இருக்கச் சொல்லி, தோட்டக்காரரை வீட்டனுப்பியிருக்க வேண்டும்! இது இப்படி திசை மாறி இருக்க வாய்ப்பிருந்திருக்காது!

“என் முன்னாலியே அவனக் கேளுங்க. இப்ப கேளுங்க சார். உங்கிட்ட ஒத்துக்கீட்டானு சொன்னீங்கல்ல. இப்ப என் முன்னாலியே விசாரிங்க……சொல்றா’ என்று அவன் தோளைத்தொட்டுத் தள்ளினாள். அவன் ஓரடி முன்னால் நகர்ந்து எனக்கு மிக அருகே வந்து நின்றான். அவனுடைய மிரட்சி நிறைந்த கண்களில் அம்மாவுக்கு அஞ்சுவதாகத் தெரிந்தது. இப்படி தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கப்படுவதை முன்னமேயே  தெரிந்திருந்தால் இச்செயலில் ஈடுபட்டிருக்கமாட்டான்.

இனியும் என்ன விசாரிப்பது? நன்றாக ஒத்திகை பார்த்துவிட்டு அரங்கேற்றத்துக்கு முழுத் தயாரிப்புடன் கூட்டி வந்திருக்கிறாள் தாயைப்போலத்தானே பெற்ற பிள்ளையும் இருப்பான். நான் கேட்டால் எடுக்கவில்லை என்றுதான் சொல்லப் போகிறான். அதற்குப் பதிலாக நான் கேட்காமல் இருப்பதே என் மரியாதைக்கு நல்லது என்று பட்டது.

“பரவாலம்மா , அவன் எடுக்கலேன்னே இருக்கட்டும். அவன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. என்று நான் எழுந்து அவர்களுக்கு முன்பே அலுவலகத்தைவிட்டு வெளியேற வாசலை அடைந்தேன்.

“சொல்றா” என்றாள் மீண்டும். .

“நான் எடுக்கல சார்,” என்றான் சுரத்தில்லாத குரலில்.

…………………………………….

(சுவா பணம் : மாணவர் கல்வி நலனுக்காகச் சேகரிக்கப்படும் பணம்}

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *