“இத செய்யறதுக்கு உங்க அத்தனபேர் கையோட உதவியும் தேவ…” என்று உரத்த குரலில் கத்தினேன். எனக்கு இது கனவு போன்றே தோன்றியது. எனக்கு இரு புறமும் ஜன்னல்களும், மரங்களுமாய் இருந்தது. தலைக்கு மேலாக காகங்கள் கூட்டமாகக் கரைந்தபடி பறந்தன. குரைத்துக் கொண்டிருக்கும் தெரு நாய்களால் இருக்கலாம். நான் இங்கு என்ன செய்கிறேன்? எதற்காக வாசலைத் தாண்டினேன்? யாரையாவது எதிர்பார்த்து வெளியே வந்தேனா அல்லது வெளியே வர அது ஒரு காரணமா..?
நான் கதவை முழுதாகத் திறந்த போது கண் கூசும் வெளிச்சம். நான் அடி வைத்து அந்தரத்தில் நடந்து வெளிச்சத்தினுள்ளே நுழைவது போன்று அடக்க முடியாத மன மகிழ்ச்சி. எனக்கு ஆழ்ந்த தூக்கத்தில் குலுங்கிக் குலுங்கி சிரிப்பது போலிருக்கிறது.
இங்கு நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று தெரிந்தாலும் சல-சலக்கும் குரல்கள் கேட்டபடியே இருக்கின்றன. அவை எங்கிருந்து வருகின்றன என்று தேடினால் நின்றுவிடுகின்றன. இது நிஜம்தானா?. இந்தக் கனவில் நான் இந்த குரலை மட்டும்தான் தேடுகிறேனா? அல்லது எனக்குப் பரிச்சயமான ஒரு முகத்தையுமா..?
எது எப்படியோ, இப்படியே காற்றில் மிதந்து, ஆசுவாசமாக வேடிக்கை பார்த்தபடியே தேடினால்தான் என்ன…? இந்தக் கனவில் நான் பல புது மனிதர்களை சந்திக்க நேரலாம். இல்லை, அப்படி புதியவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் இதுவரை என் கனவில் வந்ததில்லை. அப்படி வந்தால் அவர்களை பற்றியெல்லாம் நான் முன்பே சொல்லிக் கேட்டதை கனவே நினைவூட்டும். நான் ஒப்பனைகளுடன் முகம் தெரியும்படி முடியை ஏற்றிவாரி, சிரித்தபடி காற்றின் வாக்கில் இசைந்தேன்.
திடீரென்று தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. எனது ஒப்பனைகள் அப்படியா இருக்கிறது? நாய்கள் இங்கு என்ன செய்கின்றன? அப்படியென்றால் இது விண்ணுலகம் இல்லையா?
இந்தக் கனவு திடீரென்று வேறுதிசைக்குப் போனது போலிருந்தது. நான் தெருவில் தான் நின்று கொண்டிருந்தேன். உற்றுக் கவனித்தேன். நாய் என்னைப் பார்த்துக் குரைக்கவில்லை. ஒரு உருவத்தைத் துரத்திக் கொண்டுபோய் தெரு முனையில் விட முயல்கிறது. என்னால் ஏனோ கை-கால்களை சட்டென்று அசைக்க முடியவில்லை. நான் முழுச் சக்தியையும் உபயோகித்து ஓடிச் சென்றேன்.
நான் அங்கு பார்த்ததை என்னவென்று சொல்வது. அது ஒரு அழுக்கேறிய உருவம். வேற்றுக்கிரகவாசி போலிருந்தது. சூம்பிய மார்பகங்கள், கை அடியிலும் கால் இடுக்கிலும் நரைத்த மயிர். நிர்வாணமான அச்சுறுத்தும்படியான உருவம். தோல் எலும்போடு ஒட்டி கொண்டும் அங்கங்கே பிடிப்பின்றி தொங்கிக் கொண்டுமிருந்தது.
எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு கனவு..? எனக்கென்னவோ இது கனவு போன்றே தோன்றவில்லை. அத்தனை தத்ரூபமாக இருக்கிறது. கனவானால் என்ன நினைவானால் என்ன… இப்படி ஒன்றைப் பார்த்துவிட்டு எப்படிக் கடந்து செல்வது? எனக்கு இது போன்ற கனவு ஏற்கனவே சிலமுறை வந்ததுபோல் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது. என் தலையை இருபுறமும் யாரோ நசுக்குவதுபோல் வலித்தது. காதில் ஒன்றிரண்டாக விழுந்த குரல் இப்போது பல மடங்காகப் பெருகி காதை அடைக்குமளவுக்கு வந்து விட்டது. இப்போதே இந்தக் கனவிலிருந்து வெளிவரவேண்டும் போலிருந்தது. இவளை இப்படியே விட்டுவிட்டு எப்படிச் செல்வது? நான் விழித்து விட்டால் இவள் இந்தக் கனவில் தனியே சிக்கித் தவித்துக் கொண்டிருப்பாளே. ஆனால் நான் தான் தூங்குவதே இல்லையே..! பிறகெப்படி இது கனவாக இருக்க முடியும்? நான் இம்முறை நிஜமாகவே தூங்கிவிட்டேனா?…
என் காது அடைக்கிறது. எனக்குக் கேட்பது வெறும் குரல் மட்டுந்தானா அல்லது அதற்குச் சொந்தமான அத்தனை கண்களும் என்னைப் பார்க்கின்றனவா?. போதாக்குறைக்கு இந்த நாய்களின் சத்தம் வேறு. இந்த நாய்களும் முன்பே அறிமுகமானவை போல் சில பெயர்கள் நினைவில் படவே அப்பெயர்களைக் குறிப்பிட்டு அதட்டி விரட்டினேன்.
பதறி ஓடி வந்ததில் செருப்பு கழன்று பாதங்கள் தார்ப்பாதையில் பொத்துக்கொண்டன, வலியைக் கடந்து இதுவரை இல்லாத ஏதோ, சிறையிலிருந்து விடுபட்டதுபோல ஒரு புது உணர்வு. எனது கண்கள் இந்தச் சூழ்நிலையிலும் எதைப் பார்ப்பதென்று தெரியாமல் காட்சிகளின் ஈர்ப்பில் அலைந்தன. இந்த அவசர நிலை இல்லையென்றால் இத்தெருவை நிதானமாகப் பார்த்தபடி மரங்களின் நிழலில் காய்ந்த பொன்னிற இலைகள் மீது ஒரு நடை போய் வருவேன். ஆனால் இப்போது முடியாது.
இப்போதே இந்தக் கனவிலிருந்து இவளை விடுவிக்கவேண்டும் போலிருந்தது. எங்கு பிறந்தவளோ..? என் கனவில் மாட்டிக்கொண்ட இவளைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. ஷாலால் போற்றி அழைத்துச்செல்ல நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லையென்று உடனே புரிந்துவிட்டது. என்னை அடக்க முடியாது என்று சவால் விடுவது போல் எதிரே நிற்கிறாள்.
சரியாகத் திட்டமிட்டு நெருங்கினாலும் கையில் அகப்படாத துருதுருப்பு. கூச்சலிட்டுக் கொண்டு அங்கும் – இங்கும், ஓட்டமும் – ஆட்டமுமாய் அனாதையான வீதியை முழுமையாக உபயோகிக்கிறாள். யாரும்தான் இல்லையே, அவளுடன் சேர்ந்து நீயும் கத்திக்கொண்டே ஓடு என்று மனம் சொன்னது. அப்படிச் செய்தால் இந்த கனவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிமையாய் நினைவில் இருக்கும்.
அவளைக் கட்டுப்படுத்த என்னதான் செய்வது..? கீழே கிடப்பதைப் பொறுக்கித் தின்கிறாள். தேங்கி நிற்கும் தண்ணீரில் சம்மணமிட்டு அமர்ந்து கைகளால் அள்ளி மேல் ஊற்றிக்கொள்கிறாள். ஓடிச்சென்று தடுத்தால் “ஜாங்கிரி கொண்டாரல?” என்று வெம்புகிறாள். என் கண்கள் இங்கு நிச்சயமாய் இருக்கும் ஒருவனைத் தேடியது. உறுதியாக இது கனவாகத்தான் இருக்க வேண்டும். நிஜமாக இருந்திருந்தால் கூப்பிடும் முன்னே வந்திருப்பான். என்னைப் பெரும் கூட்டமே கண்காணிப்பது போலிருந்தது. பேச்சு சத்தமும் இப்போது தெளிவாகக் கேட்டபடியே இருக்கிறது.
“இத செய்யறதுக்கு உங்க அத்தனபேர் கையோட உதவியும் தேவ…” என்று உரத்த குரலில் கத்தினேன். எனக்கு இது கனவு போன்றே தோன்றியது……
“உங்களுக்குக் கேக்குதா… நெஜமாவே இங்க யாருமே இல்லையா?“ என்றேன். சட்டென்று மயான அமைதி. என் குரல் எதிரொலிக்க மட்டும்தான் இல்லை. நாய்கள் குறைத்து ஓய்ந்ததா? இல்லை அவளை ஏற்றுக்கொண்டதா என்று தெரியவில்லை. வீதியே வெறுமையாக இருந்தது. இத்தனை மாத காலம் நான் வீட்டில் இருந்தபோது வெளியே ஜன நடமாட்ட சத்தத்துடன் பரபரப்பான வீதி போலத் தோன்றியதே.. அது அத்தனையும் பிரம்மையா…?
ஆனால் என்னை அனைத்துமே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஆங்காங்கே அசைவுகள் தெரிந்தாலும் கண்களுக்கு யாரும் புலப்படவில்லை. யார் என்னைப் பார்ப்பது? வீதியெங்கும் நிறைந்திருக்கும் ஜன்னல்களா..? அவற்றில் தான் நிழலாடுவது போல் தெரிகிறது.
அப்படி இந்த ஜன்னல்கள் பார்க்க தினம் ஒவ்வொரு காட்சி நிகழ்ந்திருக்குமென்றால் இன்று இதுதான் என்று நேற்றிரவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? நான் ஓடிச் சென்று ஏதேனும் உணவை எடுத்து வர நினைத்தேன். ஆனால் இவளை இப்படியே விட்டுவிட்டு எப்படிச் செல்வது என்று குழம்பிக் கிடந்தேன். சற்றுத்தூரத்தில் கண்கூசும் வெளிச்சத்தில் ஒரு பிஞ்சுக்கை ஜன்னல் வழியே ஜாங்கிரி நீட்டியது. அவள் ஓடிச்சென்று அந்தக் கையைப் பிடித்துக்கொண்டு அப்படியே தின்றாள். அந்த விறல்கள் அவள் வாயினுள்ளே போய்-போய் வந்தன. இறுதியில் அந்த கையைக் கன்னத்தோடு அணைத்துக்கொண்டு கண்களை மூடியபடி ஒருகணம் நின்றுவிட்டாள். அப்போது அவள் கண்ணில் நீர் கசிவது போல் தெரிந்தது. நான் போட்டிருந்த ஷாலை நான்கு சுற்றாக சுற்றி அவிழ்க்க முடியாதபடி பின்புறமாக ஊக்கு குத்திவிட்டேன். ஆம் நான்காகத்தான், அவள் அவளவே தான் இருந்தாள். இந்த உணவு இடைவேளையில் உடையை மாற்றினால் தான் உண்டு போலிருக்கிறது, மற்ற நேரங்களில் அது முடியாத காரியம். நான் உணவும், துணியும் எடுத்துவரச் சென்றேன். அதற்குள் கூட்டைவிட்டு வெளிவந்த பட்டாம்பூச்சி போல சுற்றிய ஷால் சுற்றியபடி இருக்க அதை அப்படியே கழற்றி அதிலிருந்து வெளியே வந்து பறந்து கொண்டிருந்தாள்.
உணவைப் பார்த்ததும் ஓடிவந்து இரண்டு கைகளிலும் எடுத்து முகம் நிறையத் தின்றபடி, மீண்டும் “ஜாங்கிரி இல்ல…?” என்றாள்.
ஏன் கழட்டுனன்னு கேட்டா “அது அசிங்கமாயிடுச்சு” என்று முகத்தைச் சுழித்தாள். இந்தக் கனவில் நான் என்னைமீறி இவள் மீது அதிக உரிமை எடுத்துக்கொண்டேன். சடைமுடியை பள்ளிக் குழந்தை போல் காதோடு வெட்டிவிட்டேன். போர்ப் பம்பில் அமர்த்தி குளிக்கவைத்தேன். நெடுநேரம் அடித்தும் தண்ணீர் யோசித்து-யோசித்துத் தான் வந்தது. கனவில் கூட அந்த போர்ப் பம்ப்பில் சத்தத்தைக் காட்டிலும் தண்ணீர் குறைவாகத்தான் வந்தது. அவளை நெருங்க முடியாதபடி தடுத்த நாற்றம் குறைந்தது. முட்டையை விட்டு வெளிவந்த பறவையைத் தொட்டது போல் இருந்தது அவளின் தோல். அதற்காக அவளின் வலுவைக் குறைத்து மதிப்பிட கூடாது. தி்டீரென்று தின்றுகொண்டிருந்த உணவை அடிவயிற்றோடு பிசைந்தாள். கண்விழி பிதுங்கி ஒரு துளி வெளிவர அகன்ற தொண்டையால் வலி மிகுந்த குரலில் கத்தினாள். கால் ஒட்டியபடி செம்மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறி, தரையை அடையும் முன் நின்றது. அந்நேரம் அவளது அழுக்கேறிய நகம், வலுவாய்ப் பிடித்திருந்த என் தோள்ப்பட்டையில் புதைந்தது.
அவள் பெரும் அடத்திற்குப் பின் ஆடையை அணிந்துக்கொள்ள மாலையாகிவிட்டது. இது ஒரு நீண்ட கனவு.
நான் எடுத்து வைக்கும் அடி தடுமாறும்போது ஜன்னல்கள் அறிவுரையும் வழங்கின. அவற்றால் முடிந்தது அது மட்டும் தான்.
மாலை நேரம் வந்ததும், நான் எடுத்து வந்த போர்வையால் அங்கிருந்த மரத்தோரம் சிறியதாகக் கட்டிய கூட்டை அடைந்தது அந்த வயதான புறா. மிகுந்த மன வருத்தம் இருந்தாலும் இந்தக் கனவில் தற்காலிக நிம்மதி கிடைத்தது.
நான் ஒரு குழந்தைபோல கைகளை ஆட்டி, துள்ளியப்படி ஓட்டமும் இல்லாத நடையும் இல்லாத ஒரு வேகத்தில் வீடு திரும்புகையில் அருகாமையில் இருந்த ஜன்னல் குரல் கொடுத்தது. அருகில் சென்றபோது திரை விலகியது.
“ஒரே போராட்டமா போய்டுச்சு இல்லைங்க?… எவனோ ராத்திரியோட ராத்திரியா வந்து இங்க தள்ளிட்டுப் போய்ட்டான். தெருவுல ஒருத்தர் வெளிய வர முடியுதா? இதால… எல்லாருக்கும் சங்கடம் தான். குழந்தையா அது.. ஒரு ஆள் கையப் பிடிச்சு நடத்திக் கூட்டிட்டுப் போய் வீட்டுல விட… வேற எங்கயாவதுதான் தொரத்தனும். நானும் யாராவது எங்கயாவது சேர்க்க ஏற்பாடு செய்வாங்கனு பார்க்குறேன் ஆனா உம்…உஉம்…” என்று தலையை ஆட்டுவதுபோலிருந்து .
“தாத்தா வா இருந்தா பரவால்ல… ஆம்பளைங்க ஏதாவது பண்ணிருப்போம்.. பாட்டியாப் போச்சு. ஆனா உங்கள மாதிரி ஆளுங்கள பாக்கறதுக்கே சந்தோசமா இருக்கு” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே என் மனம் எரிந்து, அந்தக் கிழவியின் உருவெடுத்து அடி நெஞ்சில் இருந்த தீக்குழம்பை முகத்தில் உமிழ்ந்தேன். எனக்கு ஏன் இந்தக் கனவில் இவ்வளவு ஆவேசம் வந்தது? சட்டென்று அனைத்து ஜன்னல்களது திரையும் விலகியதுபோலிருந்தது. எப்படியோ இந்தக் கனவில் அவள் தூங்கிவிட்டாள். நான் தூங்கிவிட்டேனா?…