தமிழ் வாத்தியார்

என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன். இப்போது நினைத்து என்ன பிரயோஜனம்? உயர்  ப்ரஞையில் எடுத்திருக்கவேண்டிய முடிவை அவசரத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் எடுத்துவிட்டேன். இதற்கு ப்ராயச்சித்தம் தேட வேண்டிய நிலை வந்துவிட்டது. கணக்கு, தமிழ் என் முன் இரண்டு பாதைகள் இருந்தன. கணக்கை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இப்போது நினைத்தால் இந்த முடிவை எடுப்பதற்கு ராபர்ட் ப்ராஸ்ட் தான் காரணம் என தோன்றுகிறது

இரண்டு பாதைகள் என் முன் பிரிந்தன 

யாரும் நடந்திராத பாதையை தேர்ந்தெடுத்தேன் 

அதன் விளைவுகள்தான் யாவும்

அவருக்கு வேண்டுமானால் அந்த பாதை பலனத்திருக்கலாம், எனக்கு உதவவில்லை. சமுதாயத்திற்கு ஆக்க பனியின் விளைவுகளை விட வீட்டு  கணக்கை சமாளிக்க வழிகள் தேவைப்படுகிறது. இந்த உண்மையை புரிந்துகொள்ள ஆயிரம் நிராகரிப்புகள் , தோல்விககள்  தேவைப்பட்டது. குறைந்தபட்சம் இப்போதாவது விழித்துக்கொண்டேன். கல்லூரியில் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டேன். இந்த மாதக்கடைசி தேர்வு முடிந்ததும் கணக்கர் வேலை காத்திருந்தது.  

ஒண்டிக்கட்டைக்கு தனிமை தேவையில்லைதான் ஆனால் என் ஆரம்ப காலத்தில் அது எழுத உதவியது. மாடியிலிருந்து பார்த்தால் கொஞ்சும் நிலா, வயல் என அந்த வீடு சில மாதங்கள் நன்றாகத்தான் இருந்தது. கல்லூரி பக்கத்தில் இருப்பது ஒரு வசதி. போய்வர செலவில்லை. வீடும் அதன் பின்கட்டில் வேப்பை மரமும் அதன் அடியில் இருந்த பாராங்கல்லையும் விட அந்த வீட்டின் வாடகை என்னை அதிகம் கவர்ந்தது. அன்று மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த போது எதேச்சியாகத்தான் பின்கட்டு ஜன்னலிலேருந்து அந்த உரையாடல் எனக்கு கேட்டது

ஏய்..என்ன சும்மா இருக்கே?” ஆண் குரல்

என்ன பேசணும்….யாரவது பார்க்க போறாங்கபெண் குரல்

ரோட்டுக்கும் நமக்கும் நடுவுல வீடு இருக்கு..யார் பார்ப்பாங்க?”

வீட்டுல இருக்கிறவங்க…”

வீடு பூட்டிருக்கு

பிறகு மௌனம், மெலிதான சிரிப்பு. ஒட்டுக்கேட்பது அநாகரீகம். அனால் இது முயன்று செய்ததில்லை. இளசுகள் ஏதாவது செய்து கொள்ளட்டும் என அன்று விட்டுவிட்டேன். இது அவர்களின் முதல் சந்திப்பல்ல என்பதும் புரிந்தது. மறுநாளும் அது தொடர்ந்தது.

தந்திரம் படம் பார்த்தியா?” பெண் குரல்

படம் பார்க்கவே மாட்டேன்ஆண் குரல்

ஏன்?வேற என்ன பண்ணுவ?”

நாவல் இல்ல சிறுகதை படிப்பேன்

இப்ப என்ன நாவல் படிச்சுக்கிட்டுருக்கே?”

நல்லகண்ணு  எழுதின தீக்குளிப்பு. நீ அத படிச்சிருக்கியா?”

இல்ல. நாவல் படிக்கற பழக்கமே இல்ல

தமிழ் படிப்புல சேந்திருக்க ஆனா நாவல் படிக்க மாட்டேன்னா..எனக்கு புரியல

நேரம் கிடைக்காது. அக்காவோட தையல் கடைல போய் கஸ்டமர்ஸ்கிட்ட பேசறது தான் டெய்லி பொழுபோக்கு

உனக்கு தையல் தெரியுமா?”

தெரியும்னா சொன்னேன்? எங்கக்காவுக்கு உதவியா இருப்பேன்னுதானே சொன்னேன்

சில விஷயங்கள் எனக்கு அன்றைக்கு புலப்பட்டது. அவர்கள் இருவரும் தமிழ் பயில்பவர்கள் என்பது முதல் விஷயம். அந்த மாணவனின் ரசனை இரண்டாவது விஷயம். “தீக்குளிப்பு“, எனக்கும் மிக பிடித்த நாவல்மறுநாள் கொஞ்சம் முன்னமாகவே வந்து காத்திருந்தேன்

நம்ம உறவை உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா?” ஆண் குரல்

வீட்டுகாரங்கள விடு நானே ஒத்துக்க மாட்டேன். உனக்கு முதல்ல ஒரு வேலை கிடைக்கணும் அப்பறமாத்தான் மத்ததெல்லாம்

ஏன் உனக்கு அந்த சந்தேகம்?”

இந்த காலத்துல தமிழ் படிச்சு என்ன பிரயோஜனம்?”

அட ஏன் அப்படி கேட்டுட்டே?..நீ கூடத்தான் படிக்கற

என் விஷயம் வேற. உன்னை பத்தி பேசு. பெரிய இலக்கியவாதியாக போறியோ?”

அப்படிதானு வெச்சுகையென். வித்யாசமா படிக்கணும்னு , எழுதணும்னு  நினைக்கிறவன் நான். இன்னிக்கு கூட லெச்சர்ல அந்த தமிழ் வாத்தி வெண்ணிலவு நாவலை பத்தி சொன்னது எனக்கு சுத்தமா பிடிக்கல. ஏதோ கடனுக்கு மாரடிக்கிற மாதிரி பேசறான்” 

ஏன் நல்லாத்தானே சொல்லித்தராறு?”

என்ன மண்ணு சொல்லித்தர்றாறு? மீனா போனதுக்கு சுரேஷ் ஏன் அப்படி ஏங்கனும்?”

ஏன்? காதலி கைவிட்டுட்டு போனதுக்கு அவன் ஏங்கறதுல என்ன தப்பு?”

அன்றைய உரையாடல் மிக சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டு விஷயங்கள் புரிந்தது. முதலாவது இந்த இருவரும் என் மாணவர்கள். இரண்டாவது இதுவரை நான் சொல்லிக்கொடுத்த முறை ஒருதலை வாய்பாடாக இருந்திருக்கிறது. மாணவர்களின் கருத்தை  சொல்ல வாய்ப்பு கொடுக்காமல் நடத்தியிருக்கிறேன். சரி அது ஒரு புறம் இருக்கட்டும். என் மனதில் ஓடிய முதல் கேள்வி இந்த மாணவர்கள் யார்? அதிலும் இந்த மாணவன்  யார்? என் வகுப்பில் முப்பத்தைந்து மாணவர்கள். அதில் இந்த ஆடவன் யார்? குரலை வைத்து கண்டுபிடிக்கமுடியவில்லை. முகங்களை பார்க்க விருப்பமில்லை. மறுநாள் மாணவர்களை வகுப்பில் கவனமாக பார்தேன். இந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் யார்? மாலை தெரியக்கூடும் என நினைத்தது தப்பு தான். அதுவரையிலும் காதலில் விழாததன் பின்விளைவு. அன்னோன்னியமாக பேசும்போது யாரவது பெயரை கூறுவார்களா? அன்று எதிர்பாராமல் வேலைகள் வந்தது. வேலைகளை முடித்துவிட்டு ஆவலுடன் வீட்டுக்கு வந்தேன். மெதுவாக பின்கட்டு ஜன்னலுக்கு போனேன். ஆனால் அன்று அவர்கள் வரவில்லை. மறுநாளும் அப்படியேதான் நடந்தது. ஒரு வேளை வீடு என்னுடையது என கண்டுபிடித்துவிட்டார்களோ? மனதில் குடைச்சல். இதற்க்கு விடையில்லாமல் இங்கிருந்து போகமுடியாது. இதற்கு ஒரே வழிதான் இருந்தது

அன்று கல்லூரியில் தமிழ் தேர்வு. தேர்வின் கடைசியும் மிக அதிக மதிப்பெண் இடையுடைய கேள்வி:

வெண்ணிலவு நாவலில் மீனா சுரேஷுக்கு செய்தத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? விளக்குக

மேஜையில் உட்கார்ந்து மாணவர்களின் முகத்தை கூர்ந்து கவனித்தேன். எந்தவித சலனங்களும் தெரியவில்லை. தேர்வு முடிந்தபின் விடைத்தாள்களை சேகரித்துக்கொண்டு என் அறைக்கு திரும்பி கடைசி விடையிலேருந்து படிக்க ஆரம்பிதேன். பெரும்பாலும் என் கருத்தைத்தான் விதவிதமாக ஏழுதியிருந்தனர். இருவரை தவிர. ஒரு மாணவி அந்த வினாவை முற்றிலும் புறக்கணித்திருந்தாள். ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்

இந்த வினாவை நீங்கள் எதற்காக கேட்டிருக்கிறீர்கள் என புரிந்தது. முதலில் எங்கள் தனிமைக்கு மரியாதை கொடுத்து எங்களை விரட்டி கொச்சை படுத்தாமல் இருந்ததிற்கு நன்றி. நான் அப்பொழுது சொன்னதைத்தான் இப்பொழுதும் சொல்வேன். சுய நலத்திற்காகதான் மீனா சுரேஷை துறந்தாளா  என்பதில் கதை  எழுதியவர்க்கு  வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம் ஆனால் எனக்கு இல்லை. இதைப்பற்றி உங்களிடம் விவாதிக்க எனக்கு தயக்கமில்லை ஆனால் அவளுக்கு இருக்கும். கடைசியில் ஒரு வேண்டுகோள், என் பெயரை வேண்டுமானால் உங்கள் பெருமைக்கு சொல்லிக்கொள்ளுங்கள் அவள் பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.”

அந்த மாணவியின் விடைத்தாளில் நான் எழுதினேன்

நீ எதற்காக இந்த கேள்வியை புறக்கணித்திருக்கிறாய் என எனக்கு தெரியும். அன்று நீ சொன்னது உண்மைதான். உன் தோழன் பெரிய இலக்கியவாதி ஆவதற்கான எல்லா குணங்களையும் உடையவன். நாகரீகம் அறிந்தவன். சுய சிந்தனைவாதி. உங்களுக்கு ஒரு உபதேசம். நீ உன் அக்காவிடம் தையல் கற்றுக்கொள். இலக்கிய உலகத்தில் பெயரை நிலைநாட்டுவது மிக கடினம். வெற்றிகளை விட தோல்விகள்தான் அதிகம். உங்கள் காதல் மலர்ந்து திருமணம் ஆனால் ஒரு நிரந்தர வருமானம் குடும்பத்திற்கு தேவை. அடுத்தமுறை உங்களை சந்தித்தால் தம்பதியராக சந்திக்க என் ஆசிகள்

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *