டாக்டர் மாரியப்பன் எம்.டி., மிக பிரபலம். அவருடைய கிளினிக்கில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. குறைந்தது முப்பது பேராவது பெரிய வரவேற்பறையில் காத்திருந்தார்கள். அருகிலேயே அவருடைய மனைவி டாக்டர் மீனா டி.ஜி.ஓ.வின் அறையும் இருந்தது. பெண்களின் கூட்டம் காத்திருந்தது. அவர்கள் இருவரும் வரும் நீல நிறக் கார் பெரிய கேட்டின் உள்ளே நுழைந்தது. எல்லாம் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த அறைக்குள் மாரியப்பன் நுழைந்தார். இரண்டு மருத்துவப் பத்திரிக்கைகளை பச்சைச் சீருடை அணிந்த பணிப்பெண் அவர் முன், மேஜையில் வைத்தாள். அவற்றில் ஒன்றை எடுத்து படிக்க வேண்டிய கட்டுரைகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். மருத்துவத் துறையில் புதிது புதிதாக வரும் ஆய்வுகள், தகவல்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையிலேயே அவருக்கு இருந்தது. ஐந்து நிமிடங்கள் ஆசுவாசப்படுத்துக் கொள்வதற்கு முன்னாலேயே நோயாளிகளுக்கு எண் கொடுக்கும் பணிப்பெண் சுதா வந்தாள். ‘சார், அனுப்பவா?’ என்று கேட்டாள். ’ரெண்டு நிமிஷம் பொறு’ என்று சொல்லிக் கொண்டே இன்னொரு மருத்துவப் பத்திரிக்கையையும் எடுத்துப் புரட்டினார்.
நோயாளிகள் வரிசையாக வரத் தொடங்கினர். ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே நேரம் போனது தெரியவில்லை. நடுநடுவில் மகள் தான்யாவுடன் போனில் பேசவேண்டும் என்று நினைத்தார், முடியவில்லை. வந்த நோயாளிகளின் வரிசை முடியும்போது மணி மூன்றாகி விட்டிருந்தது. இப்போது மகளுடன் பேசலாம். ஆனால் அவருக்கும் ஆயாசமாக இருந்தது. தான்யா பிடிவாதத்தை விடுவதாக இல்லை. நிறையத் தடவைகள் பேசிப் பார்த்தார். யாரோ ஒரு முஸ்லிம் பையனை விரும்புகிறாள். அவன் பெயரை உச்சரிக்கக் கூட அவர் விரும்பவில்லை. மனம் கசந்தது. எல்லாம் வெகுசீராகப் போய்க் கொண்டி்ருக்கும் அவருடைய வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெரிய பிரச்சனை. அது எங்கிருந்து எப்போது வந்தது?, அதை எப்படி எதிர்கொள்வது? எதுவும் புரியவில்லை. சொந்த ஜாதியில் யாரையாவது விரும்பியிருந்தால், இதற்குள் திருமணத்தை முடித்திருப்பார்.
பணிப்பெண் வந்து சொன்னாள் ‘சார், அம்மா கிளம்பலாமான்னு கேட்டுவரச் சொன்னாங்க’. இருக்கையை விட்டு எழுந்து காரிருக்கும் இடம் நோக்கி நடக்கத் தொடங்கினார். கார் நகரத் தொடங்கியதும், மீனா கேட்டாள் ‘என்னங்க, இன்னைக்காவது தான்யாட்டப் பேசினீங்களா?’ ‘இல்லை பேச நேரமில்லை’, சொல்லிவிட்டு டிரைவர் இருக்கிறார் என்று கண்ணால் ஜாடை காட்டினார். மீனாவும் அமைதியானாள். மீனாவுக்கும் மகளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. என்ன சொன்னாலும் அப்துலைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். தனிமையில் அவளிடம் பேசக் கூட இடமில்லை. எல்லா இடத்திலும் வேலைக்காரர்கள் யாராவது இருக்கிறார்கள். ஓரளவு பேசலாம் என்றாலும் அதற்கு மேல் பேச முடியவில்லை. முழு உணர்ச்சிகளையும் அடக்கிப் பேச வேண்டியிருக்கிறது. அதே சமயம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினால் பிரச்சனை கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் என்றும் நினைத்தாள்.
வீட்டுக்குள் போனதும் பெட்ரூமில் உடை மாற்றும் போது, மாரியப்பன் சொன்னார் ‘அவளை மிரட்றதத் தவிர வேற வழியில்லை. அப்துலைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, சரின்னு சொல்வோம். ஆனால் அதற்கு முன்னால அப்பா தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்றேன்’. மீனாவுக்கே அதிர்ச்சியாக இருந்தது. ‘என்னங்க, இப்படிச் சொல்றீங்க’ ‘வேற வழி தெரியல. இப்ப வந்திருக்கிற வரன் நல்ல பையன். எம்.டி. வேற. ரொம்ப சாது. நம்ம ஜாதிதான். நம்ம ஜாதியில இந்தமாதிரி கிடைக்கிறது கஷ்டம். அவன் அண்ணனும் டாக்டர். அவன் எங்கயோ சவுதீல எம்.டியா இருக்கான். இதுக்கு மேல என்ன நல்ல மாப்பிளை கிடைப்பான். வீடு வசதின்னு ரொம்ப நல்லா இருக்குறாங்க. இவளும் நல்லா வசதிகளை அனுபவிச்சுப் பழகிட்டா. அந்தப் பய வெறும் எம்.பி.பி.எஸ். அதுவும் ஃபர்ஸ்ட் ஜெனரேஷன். சொந்தக் காரங்க எல்லாரும் காரித் துப்புவாங்க. நம்ப கௌரவம் என்னாகிறது? அவளுக்கு வேற எதுவுமே கண்ல படல. என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா. என்ன செய்யறது?’. அவருக்கே தான் செய்வது ஓவர் ரிஆக்ஷன் என்று பட்டது. சிறுவயதில் ஓயாமல் அவரிடம் பேசிய மகள், இப்போது எப்பவாவது பேசுகிறாள். இயல்பாகப் பேசுவதும் இல்லை. ஒரு செயற்கைத்தனம் இருவருக்கும் இடையில் வந்துவிட்டது. சண்டைக்காரியிடம் பேசுவது போல் பேசுவதைத் தவிர வேறு எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை.
அன்றிரவு பத்துமணிக்கு மேல் டாக்டர் மாரியப்பன் மகளுடன் பேசினார். தான்யா பெரும் குழப்பத்துக்கு உள்ளானாள். இது ஒரு பயங்கரமான எமொஷனல் பிளாக்மெய்ல் என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் அதற்கு என்ன பதில் என்று அவளால் முடிவு செய்ய முடியவில்லை. ஒரே மகளான அவளை மிகச் செல்லமாக, எந்தக் குறையும் இல்லாமல், இருபத்தி ஐந்து வருடங்களாக வளர்த்த பெற்றோர்கள். அவள் எதைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்கும் அப்பா. சிறுமியாக இருந்த போது பலநாட்கள் அவருடைய மார்பிலேயே படுத்து உறங்கியது அவளுக்கு ஞாபகம் வந்தது. அப்பா-அம்மா இருவரையும் விட்டுவிட முடியுமா? மனதில் பெரும் பாறாங்கல் அழுத்திக் கொண்டிருந்தது.
அப்துல் தினமும் போன் பண்ணிக் கொண்டிருந்தான். உற்சாகமாகவே இருக்கும் அவனது முகத்தில் இப்போதெல்லாம் சோகம் அப்பியிருந்தது. குரலிலும் அது வழிந்தது. எப்படி என் மனதில் இப்படி ஒட்டிக் கொண்டான்? இப்படியெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கை அமைதியாக இருந்திருக்குமே என்று சில நேரம் தோன்றியது. ஒரு பாதையில் ஐந்தாண்டுகளாகச் சென்றபின் திரும்பிவிடுவது சுலபமா? அவன், அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறவன். ‘பேசாமல் துணிமணிகளை எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடு’ என்றான். அவன் வீட்டை நினைத்துப் பார்த்தாள். சின்னதாக மூன்றுகட்டு வீடு. அவனுடைய அப்பா பெரிய பாத்திரக்கடை வைத்திருந்தார். அப்பாவின் வீடு பெரிய மாளிகை. நிறைய நிலங்கள், மூன்று வீடுகள்.
அவளைப் போலவே அப்துலும் பயிற்சி மருத்துவராக இன்னும் நான்கு மாதம் பணிபுரியவேண்டும். பிறகு வேலைதேடலாம் அல்லது மேற்படிப்புப் படிக்கலாம். அவன் வீட்டில் மேற்படிப்புப் படிக்க வைப்பார்களா என்று சந்தேகம் இருந்தது. தான்யா ‘உன்னை நான் படிக்க வைக்கிறேன்’ என்று முன்பொருமுறை சொல்லியிருந்தாள். எல்லாம் சிக்கலாகி விட்டது. அப்துலைவிட அவளுக்கு நல்ல மனிதன் கணவனாக வர முடியாது. எவனோ ஒருவன், நல்ல மனிதனாக இருக்கலாம். அப்துலைவிடப் பெரிய டாக்டராக, அதிகம் சம்பாதிப்பவனாக இருக்கலாம். ஆனால், கடமைக்குத் தானே கணவனாக இருப்பான். அப்துல் அவளை மிகவும் நேசிப்பவன். அவளும் அவனை நேசிக்கிறாள். அவன் எப்போது என்ன பேசுவான்? எப்படி நடந்துகொள்வான் என்பது அவளுக்குத் தெரியும். அவனுக்கும் அவளது மனமும் செயலும், மொழியும் அத்துபடி.
மாரியப்பன் அப்படி நினைக்கவில்லை. தனது சமூகத்தில் ஒரு கௌரவமான மனிதராக இருக்கும் அவருக்கு அவளுடைய திருமணம் மிக முக்கியமான நிகழ்ச்சி. மிகப் பெரியதாக நடத்த வேண்டும் என்பது அவருடைய எண்ணம். மாரியப்பன் முன்னரே வைத்திருந்த பிரம்மாஸ்திரத்தை ஏவிவிட்டார்.
தான்யாவுக்கு வேறு வழியில்லை. அப்பாவின் உயிரா அல்லது திருமணமா? எப்படியோ திருமணத்துக்குச் சம்மதித்தாளே என்று மாரியப்பனும் மீனாவும் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். எல்லாம் தடபுடலாக நடந்தது. திருமணத்தன்று காலையிலிருந்து இறுக்கமாக இருந்தாள்.
மாப்பிள்ளை ராமச்சந்திரன் அவனுடைய பெற்றோர்கள், உறவினர்களுடன் திருமண மண்டபத்தில் இறங்கிய போது, மேளதாளமும், பேண்ட் வாத்தியங்களும் முழுங்கின. அவன் எம்.டி முடித்து ஒரு தனியார் மருத்துவமனையில் சவுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கைநிறையச் சம்பளம். அவனுடைய அம்மாவுக்கு ரொம்பச் சந்தோஷம். அண்ணனைப் போலவே அவனும் டாக்டராகி இன்னொரு டாக்டர் மருமகள் வரப்போகிறாள்.
பெண் வீட்டார், ராமச்சந்திரனையும் அவனது குடும்பத்தினரையும் மிகக் கோலாகலமாக வரவேற்றனர். ராமச்சந்திரனுக்கும் மணமகளைப் பார்க்க வேண்டும் என்று ஆவல். அவன் யாரிடமும் அதைச் சொல்லவில்லை என்றாலும், கண்கள் கூட்டத்துக்குள் தான்யாவைத் தேடிக் கொண்டிருந்தன. அம்மா சொல்லியிருந்தாள், பெண் நல்ல அழகு. எங்கே தேடினாலும் இப்படிக் கிடைக்காது. பெண்பார்க்க வந்த போது அவனுக்கும் பெண்ணை நேரடியாகப் பார்க்கக் கூச்சமாக இருந்தது. அவன் சரியாகப் பார்க்கவில்லை. ஒரு வழியாக பெண் மணமேடைக்கு வந்த போது பார்த்தான். அழகிதான். தனக்கு இப்படி ஒரு மனைவி அமைவாள் என்று அவன் நினைத்துப் பார்த்ததில்லை. எல்லாம் அவன் படித்த படிப்பின் பலன். ஓரக்கண்ணில் பார்த்த போது பெண்ணின் முகத்தில் ஒரு இறுக்கம் பரவியிருந்ததைக் கவனித்தான். பெண்கள் திருமணத்தின் போது கஷ்டப்பட்டேனும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருக்கும் பல காட்சிகளைப் பார்த்த அவனுக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது. ஏதாவது பிரச்சனையா? அவன் வீட்டில் எந்தக் கண்டிஷனும் போடவில்லை. பெண்ணின் பெற்றோர்கள் இருவரும் டாக்டர்கள், மணமகள் டாக்டர், மணமகன் டாக்டர். இதில் எதுவும் பிரச்சன இருக்காதே! பின்னால் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். ஆனாலும் மனதில் ஒரு உறுத்தல் இருந்தது. நான் எவ்வளவு அருமையான மாப்பிள்ளை! என்னைத் திருமணம் முடிக்க என்ன செய்திருக்க வேண்டும் இவள்! அய்யர் சொன்னவற்றை அவன் செய்து கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில், நான் எவ்வளவு அருமையானவன் என்பதை அவளுக்கும் பின்னாளில் காட்டுவேன் என்று மனதில் தனியாக எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.
தான்யாவுக்கு இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை அவள் முகத்தின் இறுக்கம் காட்டியது. மணமேடையில், அவளுடைய தோழிகள் ’கொஞ்சம் சிரிம்மா’ என்று அடிக்கடி சொன்னது ராமச்சந்திரனுக்கும் கேட்டது. சடங்குகளை வேண்டா வெறுப்போடு அவள் செய்கிற விதத்தைப் பார்த்த ஐயருக்கும் ஏதோ தோன்றியிருக்க வேண்டும். அடிக்கடி பெண்ணின் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். டாக்டர் மீனாவின் மனதில் திருமணச் சடங்கு நடந்து கொண்டிருப்பது திருப்தியாக இருந்தாலும், தான்யாவின் முகத்தைப் பார்க்கும் போது கோபமாக வந்தது. ’இவ்வளவு தூரம் எல்லாம் நடந்த பின்னும், என்ன நெஞ்சழுத்தம்! கொஞ்சமாவது சிரிக்காளா பாரேன்!’ என்று நினைத்தாள். தான்யாவின் அப்பா மாரியப்பன், வந்த விருந்தினர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்கப் பார்க்க தான்யாவுக்குக் கோபம் பொங்கியது. அவளை எப்படி மிரட்டி விட்டு, இப்படிச் சிரிக்கிறார்? கோபத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் இயலாமையில் சலித்துப்போய் அமர்ந்திருந்தாள். வீட்டில் பல வருஷங்களாக வேலை பார்த்துவரும், மோகன் பணப்பையை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலையாய் அலைந்து, எல்லாவற்றையும் மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். அவ்வப்போது மாரியப்பனிடம் வந்து நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
இரவுக்குள் விருந்தினர்கள் பெரும்பாலானோர் போய்விட்டனர். மிக நெருங்கிய சொந்தக்காரர்களில் சிலர்மட்டும் மண்டபத்தில் இருந்தனர். மணமக்கள் இருவரும் இன்னும் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். போட்டோகிராஃபர்கள், அவர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தனர். வளைந்து நிமிர்ந்தும், அசைந்தும் ஆடியும் வீடியோக்கள் பதிவாகிக் கொண்டிருந்தன. பெண்ணின் முகத்தில் இருந்த கலக்கம் என்ன செய்தாலும் தனியாகத் தெரிந்து கொண்டிருந்தது. நாடகத்தைத் தொடங்கிய பிறகு நடிப்பது போல் நடிக்க வேண்டியிருந்தது. ‘பின்னால் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவள் கருவிக் கொண்டிருந்தாள். ராமச்சந்திரனுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக விளையாட்டாக இருந்தது. ’மணமகளின் முகத்தில் இருக்கும் இறுக்கத்தை தனது பேச்சில், நடத்தையில் மாற்றிவிடலாம். நல்ல மனிதனாக இருப்பவனை எந்தப் பெண் விரும்பமாட்டாள்? சின்னப் பெண் குழப்பத்தில் இருப்பாள். மனிதர்களுக்கு இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாயிருப்பதை யாரும் சொல்லித் தருவதில்லை. சொல்லித் தருவேன்’.
**********
திருமண நாளின் இரவில் ராமச்சந்திரனுக்குக் கிடைத்த அதிர்ச்சி அவன் உயிருள்ள வரை போகாது. அவன் தான்யா நுழைவதைப் பார்த்திருந்த அந்தக் கணத்திலேயே அவள் அவன்மீது நெருப்பைக் கொப்பளித்துவிட்டாள். அவள் முகத்தில் இப்போது இறுக்கம் இல்லை. அவனுக்கு வந்த கோபத்தில் அவனால் பேசக் கூட முடியவில்லை. கோபத்தில் அமைதியாக அடக்கிக் கொண்டு உள்ளே குமைவது அவனது வழக்கம். அன்றும் அப்படித்தான் ஆகிப் போனது. இருபத்தி ஒன்பது ஆண்டுகளாகப் பெண்ணின் ஸ்பரிசத்துக்காகக் காத்திருந்தவன் ஏமாற்றத்தில் உறைந்து போனான். ’அப்பாவின் மிரட்டலுக்குப் பயந்து தாலி கட்ட அனுமதித்தேன். அதற்கு மேல் எதுவும் இல்லை’ என்றாள் அவள். ‘முன்னாலேயே எங்களுக்குச் சொல்லியிருந்தால், திருமணம் வரை வந்திருக்காதே! எங்களையெல்லாம் கேவலப் படுத்திவிட்டீர்களே!’ என்று குமுறினான். அதற்குப் பிறகு இருவரும் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஒரே வீட்டில் இருவரும் வெவ்வேறு அறைகளில் இருந்தனர். அவள் அப்துலுக்கு அடிக்கடி போன் செய்து கொண்டிருந்தாள். அம்மாவிடம் சொல்வதற்குக் கூட அவனால் முடியவில்லை. ஒரு வருடம் கழியும் போது, அண்ணனிடம் சொன்னான். ’கொஞ்ச நாள் பொறு. மனம் மாற வாய்ப்பிருக்கிறது’ என்றான் அவன். காத்திருந்தான். அவளும் இன்னொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.
அப்துலுக்கும் குழப்பமாக இருந்தது. திருமணமான பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கிறதாக ஆகிவிடுமா? கொஞ்ச நாட்களுக்குப் பிறகு குழப்பத்திலிருந்து அவள் விடுபட்டு, ராமச்சந்திரனுடன் வாழச் சம்மதித்துவிடலாம். ஆனால், அவள் பேசும் போதெல்லாம் ’என்னை வந்து கூட்டிச் சென்றுவிடு’ என்று அவனை நச்சரித்தாள். ‘தான்யா, உனக்கு ஏன் புரியவில்லை. ஊரறியத் திருமணம் செய்து கொண்டுவிட்டாய். நீ இப்போது என்னுடன் வந்தால். உன் அப்பாவோ அல்லது கணவனோ சட்டம் , போலீஸ் என்றெல்லாம் போனால் என் நிலைமை என்னாவது? உனது மானம் மரியாதை எல்லாம் என்னாவது? உங்க அப்பா ஏற்கனவே தற்கொலை பண்ணிக்கொள்வேன் என்று மிரட்டியவர். ஏடாகூடமா ஏதாவது ஆகிவிடப் போகிறது’ என்று கவலைப்பட்டான்.
அவள் விடவில்லை ‘கல்லானாலும் கணவன்’ என்றெல்லாம் பழைய பஞ்சாங்கம் பாடுகிறவள் அல்ல நான். நானே உன்னிடம் ஓடி வந்திருப்பேன். அப்பா, உடனடியாகத் தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்றதனால், திருமணத்தில் திகைத்து நின்றுவிட்டேன். என்ன ஆனாலும், ராமச்சந்திரனுடன் நான் வாழ மாட்டேன். வீட்டிலாவது இருப்பேன். நீ வேண்டுமானால், என்னைத் திருமணம் முடிக்க மாட்டேன் என்று சொல். எனக்கு அதில் பிரச்சனையில்லை. என் அப்பா என்னைத் துன்புறுத்தியது மாதிரி அவரைத் துன்புறுத்துவேன். என்னுடன் வாழ விரும்பினால் வா!’ என்றாள் தான்யா.
ராமச்சந்திரன் ’கல்லான கணவன்’ ஆகிப் போனான். கணவனுக்கு வேண்டாத வெறுப்புடன் சமையல் செய்து கொடுத்தாள். உண்ணவும் முடியாமல் உதறவும் முடியாமல் அவன் அலைந்து உள்ளுக்குள் குலைந்து கொண்டிருந்தான். வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் விஷயம் தெரிந்திருந்தது. ‘எனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது?’ என்று அவன் உருகாத நாளில்லை. பல ஜோஸ்யர்கள், சாமியார்கள் என்று அவனுடைய அம்மாவின் மனநிறைவுக்காக அவளுடன் சென்றான். ஆனால் எதுவும் மாறவில்லை. நாட்கள் அப்படியே ஓடிக் கொண்டிருந்தன. யதார்த்தம் அவன் முகத்தில் கரிபூசிக் கொண்டிருந்தது.
பெருநகரத்தின் அடுக்குமாடிக் கட்டடங்களில் ஒன்றில் அவன் குடியேறினான். ’ஒரு வேளை கூட்டுக் குடும்பமாக இல்லாமல், கணவனும் மனைவியும் தனியாக இருந்தால் நிலைமை சரியாகிவிடும்’. நப்பாசை யாரை விட்டது! திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்! தான்யா அப்போதும் மாறிவிடவில்லை. திருமண நாளில் சொன்னபடி அவனை நெருங்கவில்லை. நெருங்க விடவும் இல்லை. ராமச்சந்திரன் அவளிடம் கேட்ட ஒரே கேள்வி ‘எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்?’ அவள் சொன்ன பதில் ‘நான் ஏமாற்றவில்லை. என் அப்பாதான் ஏமாற்றினார். என்னையும் உன்னையும். நீயாவது உன் குடும்பத்தாராவது பெண்ணின் நினைப்பு என்ன என்று கேட்க முயற்சி செய்தீர்களா? என் பெற்றோர்களின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள். நான் இங்கே ஒரு மனுஷி இல்லையா? என்னுடைய விருப்பம் என்ன என்பதை யாரும் கேட்க வேண்டியதில்லையா?’ ராமச்சந்திரன் உரக்கப் பேசும் பெண்களைப் பார்த்ததே இல்லை. பெண்கள் கேள்வி கேட்பார்களா? அதைப் புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை. இருவருக்கும் இடையில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி. இப்படி எல்லாம் இருந்திருக்கக் கூடாதோ?
கடைசியில் சொல்லியே விட்டாள் ‘எனக்கு உன்னுடன் இருக்கக் கூடப் பிடிக்கவில்லை’. ஆனாலும் அவன் ஒன்றும் செய்யாமல் இருந்தான். ’மனைவி ஓடிவிட்டாள் என்று அம்மாவிடம் அண்ணனிடம் எப்படிச் சொல்வது?’ அவன் உள்ளத்தில் திருமணநாளில் அவள் வைத்த தீ, பெரும் ஜ்வாலையாக எரிந்து, அவனுடைய வாழ்வை மட்டுமல்ல, அவன் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.
ராமச்சந்திரன் இப்போதெல்லாம் அடிக்கடி தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். ‘நன்றாகத்தான் இருக்கிறேன். அவள் அழகிதான் அதில் சந்தேகம் இல்லை. அவளுடைய அழகுக்கு ஏற்றவனாக இல்லை என்று நினைக்கிறாளோ?’ அழகு என்பது அழிந்துவிடக் கூடியது என்று அவளுக்குத் தெரியவில்லையோ? ஆனாலும் இன்னொன்றும் தோன்றியது. அழகு அழிந்துவிடக் கூடியது என்றாலும், அது இருக்கும் வரை ஜொலிக்கட்டும் என்று நினைக்கிற ஆளாக அவள் இருப்பாளோ?
ஒருநாள் தான்யா, அப்துலின் புகைப்படத்தைக் காட்டிச் சொன்னாள் ‘இவந்தான். எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். இப்போது கூட, அவனை விட்டுவிட்டு வா. நான் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான். என்ன சொல்லுகிறாய்?’ ராமச்சந்திரன் அப்துலின் முகத்தைப் பார்த்தான். வட இந்திய சினிமா நடிகன் போன்ற அழகான முகம். மஞ்சளாக இருந்தான். தான் கறுப்பு என்ற நினைப்பு அவனுக்கு முதல் முதலாக வந்தது. நல்லவனாக இருக்கிறேன். டாக்டராக இருக்கிறேன் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தானா? முட்டாள்ப் பெண்ணாக இருக்கிறாளே? கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து, அவளைக் கெடுத்துவைத்திருக்கிறார்களே! இவளைப் பழிவாங்க வேண்டும். இவளை விட்டுவிட்டால், போய்விடுவாள். என் வாழ்வைக் கெடுத்தவள். என்னை ஏமாற்றிவிட்டு, அவள் மட்டும் எப்படிச் சுகமாக இருக்கலாம்?’ அவனுக்குள் ஒரு வெறி. அவளிடம் சொன்னான் ‘நானாக உன்னை டிவோர்ஸ் பண்ண மாட்டேன். அதற்கு ஒப்புதலும் தர மாட்டேன். என்னுடன் வாழ்வது உனக்கிடப்பட்ட விதியின் கட்டளை. எனக்கும் அதே கட்டளைதான்’ அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டான். இவன் சட்டப்படி தன்னை விடமாட்டான் என்று தான்யாவுக்குப் புரிந்தது. இவனை மீறிப் போய்விட வேண்டும் என்ற அடங்காத ஆசை எழுந்தது. அப்துல் காத்திருப்பான். அவர்களில் பெண் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதில் தடையில்லை. இன்னொரு வாய்ப்பை அவளே உருவாக்கிக் கொண்டாள். அதை ராமச்சந்திரனோ, மாரியப்பனோ அப்துலோ எதிர்பார்க்கவில்லை.
ஒரு நாள் காலையில், தான்யா ராமச்சநதிரனிடம் சொன்னாள் ‘நான் கருவுற்றிருக்கிறேன்’. அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் இதுவரை அவளைத் தொட்டதில்லை. ஆனால் அவள் உறுதியாகச் சொன்னாள். அவன் கேட்டான் ‘யார் காரணம்?’ தான்யா அமைதியாகச் சொன்னாள் ‘இரண்டாவது மாடியிலிருக்கும், சந்திரன்’. ராமச்சந்திரன் முழுவதுமாக உடைந்து போனான். அது உண்மையா பொய்யா என்று யோசிக்கக் கூட முடியவில்லை.
அதற்கு மேல் ராமச்சந்திரனுக்குப் பொறுக்க முடியவில்லை. எல்லோரிடமும் பேசி மணமுறிவுக்கான காகிதங்களில் கையெழுத்திட்டான். அவன் அதற்குப் பிறகு தனியாக இருக்கப் பழகிக் கொண்டான். இருவர் இருந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதை விட தனித்திருப்பது மேல். தான்யாவும் அப்பாவுடன் இருப்பதாகக் கேள்விப்பட்டான். அதற்கப்புறம் அவளை மறக்க, நடந்த திருமணத்தை மறக்க, ஏன் திருமணத்தையே மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். வாழ்க்கை ஒன்றும் நின்று போய்விடவில்லை. காலம் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. எல்லோரும் வழக்கம் போல் எல்லாவற்றையும் செய்து கொண்டுதான் இருந்தார்கள். நடுக்காட்டில் பஸ்ஸிலிருந்து இறங்கி வழிதெரியாமல் நடந்துகொண்டிருந்தவன் போல் தனியாக உணர்ந்தான். மீண்டும் ஒரு பஸ்ஸைப் பிடித்தே ஆக வேண்டும். இல்லை ஒரு கட்டை வண்டி கூடப் போதும். மரபு என்று நாம் விரித்த வலைகளுக்குள். காலமும் வாழ்வும், இன்றையப் பெண்களும் சிக்கிக் கொள்வதில்லை. புதிய புரிதல்களுடன் இன்னொரு பெண்ணைத் தேடத் தொடங்கினான். பெண்ணின் விருப்பங்கள் தலையாயவை, மற்ற அனைத்தும் அதன் பின்னரே.