வாணியும் அஸ்வினியும் பின்னே செல்ஃபியும்

வாணி சென்னை ஏர்போர்ட்டிலிருந்து ஊபர் வாடகைக்குப் பிடித்து ஏறினாள்.தன் வீடு வந்து சேர இரவு மணி  12.00 ஆகிவிடும்.வாணியின் செல்லச் சென்னை வரும் வழியில்  அங்கங்குக் கொஞ்சம் விழித்தும்  நிறையத் தூங்கிக் கொண்டும் இருந்தது.ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்தப்படி அஸ்வினிக்கு ரிங் அடித்தாள்.போன் போகவில்லை.கொய்ங் கொய்ங் கொய்ங்கென்று வினோதமான மெல்லிய ஓசைக் கேட்டது.நான்கு முறை முயற்சித்துவிட்டு ’என்ன க்யூட்டி இது?’
கடுப்பானாள்.

டெல்லி – சென்னை விமானம் மூன்று மணி நேரம் தாமதம்.அம்மாவும் அப்பாவும் தூங்காமல் தன் வருகைக்காகக் கவலையோடு காத்துக் கொண்டிருப்பார்கள்.டெல்லியில் ரூம் மேட் அஸ்வனியும் என் போனுக்குக் காத்திருந்துத் தூங்கி இருப்பாள்.ஐ ஆம் கோயிங் டு மிஸ் யூ ஃபார் மோர் தேன் ட்வெண்டி டேய்ஸ் அஸ்வினி டார்லிங்.

ஊபர் தன் வீட்டின் வாசலில் நின்ற சின்ன அதிர்ச்சியில் வாணி திடுக்கிட்டு கண் விழித்தாள்.இருபது நிமிஷம் தூங்கி இருக்கிறாள்.ஜிபே ஸ்கேனில் ’கர்சிக்’.பணம் டிரைவருக்கு செட்டில் ஆனது.தாங்கஸ் சொல்லி புறப்பட்டான்.

உள்ளே நுழைந்ததும்  ஹாலில் காத்திருந்தப் பெற்றோருக்குச் செல்லமாக ’ஹாய்’ சொல்லிவிட்டு இரண்டு லக்கேஜ்ஜுகளை தரையில் ஓரமாக உருட்டிவிட்டாள்.சோபாவில் உட்கார்ந்தாள்.முதல் காரியமாக  அஸ்வினிக்கு போன் செய்தாள்.ஆஹா தூங்கவில்லை.போனை எடுத்துவிட்டாள்.தனியாக இருப்பதால் தூக்கம் வரவில்லை போல.தன் போனுக்காகக்
காத்திருந்தது சந்தோஷமாகவும் இருந்தது.
தன்னைப் பிரிந்து இருப்பது முதல் தடவை.
விமானம் தாமதத்தில் இரண்டு மூன்று மிஸ்டு கால்கள் இருந்ததை இப்போதுதான் பார்த்தாள்.
’சே…நா ஒரு மடச்சி’.

”அஸ்வினி குட்டி அட்லாஸ்ட் சேஃபா  சென்னை வந்து சேர்ந்துட்டேன்.’டோண்ட் ஒர்ரி ஃப்ளைட் டிலேன்னு மெசேஜ் போட்டேனே”

”கெடச்சது.அப்பா……..என்னாச்சுன்னு கவலையாயிட்டேன் கிரேட் வாணி”

“ அஸ்வினி..ஆமா கேட்கறேன்.. என்னடி இன்னுமா தூங்கல?”செல்லமாகச் சிரித்தாள்

”தூக்கம் வரல வாஆஆஆஆ நி”

”அடியே அஸ்ஸூஊஊஊஊஊ ”பகபகவென வாய் கொள்ளாமல் சிரித்து “என்னடி ஆச்சு தூக்கத்துக்கு”

”எப்படி வரும்?உன்ன விட்டு முதன் முதலா  தனியா இருக்கேன்”

”ஓ ஸ்வீட் அஸ்வினி.டோண்ட் ஒர்ரி டார்லிங். ஐ வில் பி பேக் இன் ட்வெண்டே டேய்ஸ்.மை வார்ம் ஹக்& கிஸ்.போதுமா?தூங்கு டேக் கேர்” செல்லை முத்தமிட்டு சந்தோஷமானாள்

“மீ டு ஹக் வாணி.ஸ்வீட் ஆஃப் யூ.தினமும் போன் பண்ணு.மறந்துடாத.நோ வாட்ஸ் அப் டியர்”

“சாரி சாரி….வச்சுடாதா .என்ன டிரஸ் அஸ்வி. யூஷுவல் வொயிட் டாப்ஸ்.நோ இன்னர் திங் அண்ட் தொள தொள பைஜாமாவா?மெர்சல் ஆக்கிடுவ”

அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் மெலிதாக புன்முறுவல் பூத்துக்கொண்டார்கள்.


” கிழிஞ்சது போ.தேடி தேடி நா மெர்சல் ஆயிட்டேன். நீ உன்னோட பேக்ல பேக் பண்ணி எடுத்துட்டு போயிட்ட.நீதான்னு தெரிஞ்சதும் சிரிப்பு தாங்கல.முதன் முதலா டிரஸ்ஸ
போட்டப்ப இந்த கிஃப்ட்னு புது ஃபாரின் ரேசர் கொடுத்த டர்டி…டர்டியஸ்ட் கேர்ள்”

“பின்ன மாசா மாசம்  களையெடுக்க மறக்கக் கூடாது அஸ்” மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வாணி பகபகவென்று சிரித்தாள்.

அப்பா போரடித்துப் போய் கொட்டாவி விட்டபடி வாணிக்கு குட் நைட் சொல்லிவிட்டு படுக்கப் போய்விட்டார்.

அப்பாவிற்கு செல்லமாக பை சொல்லிவிட்டு….

‘சாரிடி அஸ்வினி.விட்ட குறையோ தொட்ட குறையோ என்னோட தொள தொள கூட வந்துடிச்சி.அதுக்கு என்ன விட்டு பிரிய மனசில்ல உன்…..”முடிக்கவில்லை மொபைலை பொத்தியபடி திரும்பி ”என்ன”அம்மாவைப் பார்த்தாள்

பொறுமை இழந்த அம்மா எரிச்சலில் முகத்தை சுளுக்கி சைகையும் காட்டி மெதுவான குரலில்

‘உள்ள சப்பாத்தி குருமா வச்சுருக்கேன்.
சாப்பிட்டு ரெஸ்ட் எடு.என்ன பேச்சு  வேண்டி கிடக்கு அகால வேளைல. சீக்கிரம் முடி.நாளைக்குப் பேசக்கூடாதா?அவ தூக்கத்த ஏன் டிஸ்டர்ப் பண்ற.குட் நைட் பைடி”  சொல்ல

”அம்மா சாரி…வாணி என் போனுக்காக  வெயிட் பண்ணி இருக்கா.நீ அப்பாவுக்கு சில ஆபீஸ் லேட்டாச்சுன்னா எவ்வளவு சின்சியரா டிவோட்டட் ஒயிஃப் மாதிரி  வெயிட் பண்ணுவே அத போலத்தான் அஸ்வினி ” கலாய்த்தப்படி சிரித்து “ போ போ அப்பாவிற்கு சர்வ் பண்ணு”

”காமெடியா…?அசடு வழியாத.போய் சாப்பிட்டு படு”அம்மா இன்னும் எரிச்சலானாள்.

”அம்மா வெயிட்….” சொல்லி ’உஸ்ஸ்ஸ்ஸ் ஓ காட்”
போன் கட்டாகி இருந்தது.”புவர் கேர்ள் தூங்கிட்டா  போல என் பேச்ச கேட்டு நிம்மதியாகி.போன கூட ஆஃப் பண்ணல”

வாணி போனை ஆஃப் செய்தாள்.மொபைல் ஸ்கிரீனில் வாணியும் அஸ்வினியும் தோளில் கைப்போட்டுக் கொண்டு எடுத்துக் கொண்ட  செல்ஃபி பளிச்சிட்டது அம்மாவின் கண்களில்.

வாணி அம்மாவைப் பார்த்துப் பெருமைப்பிடிபட பார்த்து…

”இந்த செல்ஃபி ஒன் ஆஃப் தி பெஸ்ட் குல்ஃபி” திரையை முத்தமிட்டாள்.


” என்ன இழவோ?பிரிண்ட் எடுத்து வீட்டு வாசல்ல பேனர் கட்டி வை.குல்ஃபிய பார்த்து தீபம் காட்டி கன்னத்துல போட்டுப்பாங்க”

“அடியே லஷ்மி அம்மாஆஆஆஆஆ சாரி மகா லஷ்மி அம்மாஆஆஆஆஆ.காண்டு ஆயிட்ட. சொல்றத கேட்டுட்டு தூங்கப் போ”


புன்னகைத்துவிட்டு “அஸ்வனி ஆறு மாசம் முன்னாடிதான் என்னோட ரூம் மேட்டா ஜாயின் பண்ணினா.ரொம்ப நெருக்கமாகி பாசமாயிட்டா.கிட்டத்தட்ட ஒட்டிக்கிட்ட.வெரி ஸ்வீட் & க்யூட் கேர்ள்.பெட் டைம் ஸ்டோரீஸ் சொன்னதான் தூங்குவா ”புல்லரித்துக் கொண்டாள்.

“அது என்ன பெட் டைம் ஸ்டோரீஸ்?”ஏண்டா இங்கே இருந்தோம் என்று ஆயிற்று.கணவருடன் தூங்கப் போய் இருக்கலாம்.

‘அதெல்லாம் சீக்ரெட்.ஒன்லி ஃபார் டியர்ஸ்ட் தோழிகளுக்கு மட்டும்.அம்மாக்களுக்குக் கிடையாது”உதடு மூடி உள்ளுக்குள் சிரித்தாள்.

”நீயும் உன் பெட் டைம் ஸ்டோரியும்.மீண்டும் முகம் சுளுக்கி வாணியிடம் குட் நைட் சொல்லிவிட்டு பெட் ரூமிற்குப் போனாள் லஷ்மி.

போனவள் தூக்கம் வராமல் புரண்டாள்.ஆறு மாசத்துல அவ்வளவு டியர்ஸ்ட் ஆயிட்டாளா ரூம் மேட்டிடம்?பேச்சே ஒரு மாதிரியா இருக்கே.

வயிற்றை லேசாகப் பிசைந்தது.இரண்டு முறை பாத்ரூமிற்கு போய்விட்டுப் படுத்தாள்.
ஒரு மணி நேரம் ஏதேதோ யோசனைகள் தோன்றி மண்டை சூடாகி  தண்ணீர் குடித்து ஆசுவாசமானாள்.நாளை கட்டாயம்  கேட்டே ஆக வேண்டும்  என்று தீர்மானித்தாள்.
இன்னொரு பெட்ரூமில் வாணி படுக்கையில்  தூக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்தாள்.
எழுந்து ஜன்னல் அருகில் வந்தாள்.அது பெரிய  நாலு சாலை கூடும் இடம்.ஊரே உறங்கிப் போய் மயான அமைதியில் வெறிச்சோடிப் போய் இருந்தது.உதட்டில் புன்முறுவல் பூத்துக் கண்கள் விரித்த பிரமைத் தோற்றத்தில் அந்த நாலு சாலை கூடும் இடத்தில் அம்மா கலாய்த்த பிரம்மாண்ட பிளக்சி போர்ட்டில் செல்ஃபியில் வாணியும் அஸ்வினியும் சிரித்தப்படி இருந்தார்கள்.


                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *