டில்லி

”தம்பி செல்வா டில்லி உன்ன பாக்க வந்தானாப்பா? ஒரு வாரமா அவனக் காணம்ப்பா.  உன்ன பாக்க வந்தா ஒடனே வூட்டுக்கு வரச் சொல்லுப்பா.  சின்னப் பொண்ணுப்பா பாவம்பா அவன் பொண்டாட்டி, ரெண்டு கொயந்தங்கள வச்சிகிணு சோறு தண்ணி சாப்பிடாம அழுதுகினே இருக்குதுப்பா” பதட்டத்துடன் அழுகுரலில் சொன்ன அக்கா அழுக ஆரம்பித்தாள்.  பின் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு

”இங்க போரூர்ல இருக்கற வரைக்கும் நல்லாத் தான இருந்தான்.  உன்ன மாறி நல்ல பிரெண்ட்சுங்கோ பயக்கவயக்கம் இருந்த வரிக்கும் ஒயிக்கமா வேல பாத்துகிணு குடும்பத்த பாத்துகிணுதான இருந்தான்.  அங்க வந்துதான் கெட்டு குட்டிச் சுவரா பூட்டாம்ப்பா.  எப்ப ஆர் எல் நகர் வந்தானோ அப்ப இருந்தே கெட்ட நேரம் ஆரம்பிச்சிட்டுக் கீதுபா அவனுக்கு”

”என்ன ஆச்சுக்கா?”

”உனுக்குத் தெரியும்.  நானு நாலு வூடுங்கள்ள பாத்திரம் தேய்ச்சிக்கிணு கீறேன்.  என் வூட்டுக்காரரு இஸ்கூல் புள்ளிங்கள நீ பாத்துக்கீறியே அந்த வண்டில இட்டும் போயி இட்டாந்துகிணு கீறாரு.  இன்னாடா நம்ப தம்பியாச்சே அப்பா அம்மா இல்லாத புள்ளியாச்சே நம்பள உட்டா இவனுக்கு யாரு கீறாங்கன்னு இவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி, குடுத்தனம் வெச்சி, கடன உடன வாங்கி எங்கவூட்டுக்காரு மாறியே வண்டி ஓட்டி பொயச்சிக்கட்டுமின்னு வண்டி வாங்கி குடுத்து, அக்கம்பக்கத்து ஏரியாங்கள்ள தெரிஞ்சவங்களாண்ட சொல்லி, கொயந்தங்களோட பேரண்ட்ஸான்ட கூலி பேசிவுட்டு…எவ்வளவு செஞ்சிகீறன் நானு?” அக்கா என்னைப் பார்த்தாள்.

அவள் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

”மகேந்திரன்னு ஒரு பொறுக்கிப்பய.  அவன் கூட சேந்துகிணு பிசினஸ் பண்றேன்னு தெரிஞ்சவங்களாண்ட எல்லாம் ஏலச்சீட்டு நடத்தறேன்னு காசு வாங்கிகீறாம்பா இவன்.  என் கிட்ட கூட ஒரு வார்த்த சொல்லல.  பொண்டாட்டி கிட்டயும் சொல்லல.”

”அந்த மகேந்திரன் நாயி மொத்த காசயும் எடுத்துகிணு ஓடி பூட்டாம்பா.  அப்ப கூட இவன் இன்னா பண்ணி இருக்கணும்? அக்கா தப்பு நடந்து போச்சி இப்படி இக்கட்ல மாட்டிகினேன் காப்பாத்துக்கான்னு என் கால்ல உயிந்திருக்கணுமில்ல ? இது சத்தமில்லாம எங்கியோ ஓடி போச்சி”

”பாவம் அந்த புள்ள……பணம் குடுத்தவங்க வந்து சத்தம் போட்டாங்கன்னு பயந்துகிணு தூக்கு மாட்டிகிக்க போயிருச்சி.  நாங்காண்டி இல்லன்னா இன்னா ஆயிட்ருக்கும்?”

”போலீஸ் கம்ப்ளெயிண்ட் எதுவும் குடுத்துருக்காங்களா அக்கா?” என்று நான் கேட்டேன்.

”இல்லப்பா அதுக்கு பயந்துகிணுதான் ஓடிப் போயிக்கீறான்.  நான் பணம் கட்டுனவங்க ஒவ்வொருத்தரு வூடா போயி அவுங்க கால்ல உயிந்து தயவு செஞ்சு போலீஸாண்ட கம்ப்ளெயிண்ட் குடுத்துறாதீங்க.  உங்க பணத்துக்கு நான் பொறுப்பு.  எம் புருஷனக்கு இங்க கீற தம்மாத்தூண்டு இடத்த வித்துனா, இன்னும் பத்து வூட்ல வேல செஞ்சினா எப்படியாச்சு குடுத்துருவேன்னு சொல்லிக்கீறேன்”

”அதுக்காண்டி தான்ப்பா உன்ன பாக்க வந்தேன்.  இங்க எங்கனா அவன பாத்தியன்னா ஊட்டுக்கு வரச் சொல்லுப்பா.  போலிஸெல்லாம் புடிக்க மாட்டாங்கன்னு சொல்லுப்பா அவனான்ட.”

”சரிக்கா.  நீங்க தைரியமா இருங்க.  நானும் அவனத் தேடிப் பாக்கறேன்” என்றேன்.

”ரொம்ப நன்றிப்பா.  நீ ரெண்டு நாளு லீவு எடுத்துகினு கூட தேடிப் பாருப்பா.  உன்னோட ரெண்டு நாள் சம்பளத்தக் கூட நான் குடுத்திடறேன்” என்றாள்.

”என்னக்கா இப்படி பேசறீங்க? நானும் உங்க தம்பி மாறி தானே?” என்றேன்.

அக்கா மீண்டும் அழுதாள்.

அக்காவிற்கு கொஞ்ச நேரம் ஆறுதலாகப் பேசி காபி கொடுத்து அனுப்பி வைத்தேன்.

மூன்று நாட்கள் போரூரிலும் டில்லிபாபு வந்திருக்க வாய்ப்புள்ள இடங்கள் என்று எனக்கு தோன்றிய இடங்களிலும் தேடினேன்.  அவனது மற்ற பள்ளி நண்பர்களை சென்று கண்டு டில்லிபாபுவை பார்த்தால் என்னைப் பார்க்க வரச் சொல்லுங்கள் என்று சொன்னேன்.  அவர்கள் என்ன விஷயம் என்று விசாரித்தபோது முன்பு ஒருமுறை ஒரு வேலைக்காக நாங்கள் இருவரும் விண்ணப்பிப்பதற்காக என் வீட்டிற்கு அவன் வந்த போது தன் பத்தாம் வகுப்பு சான்றிதழை விட்டுவிட்டு சென்று விட்டான் அதை அவனிடம் திருப்பித் தர வேண்டும் என்று சொன்னேன்.  மற்றபடி அவனது பிரச்சினையைப் பற்றி எவரிடமும் சொல்லவில்லை.  அவர்கள் இருக்கும் இடத்திற்கு வேறு ஒரு வேலை தொடர்பாக தற்செயலாக வர நேர்ந்த போது அருகே இருக்கும் அவர்களைக் காண வந்ததாக காட்டிக் கொண்டேன்.

டில்லி பாபு எங்கும் கண்ணில் படவில்லை.  அவன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவும் இல்லை.  அவனது அக்காவை சென்று பார்த்து அவன் திரும்ப வந்துவிட்டானா என்று கேட்கத் தோன்றியது என்றாலும் அக்காவை சந்திக்க நான் செல்லவில்லை.

——

மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.  நான் டில்லிபாபுவை மறந்துவிட்டிருந்தேன்.

என் எதிர் வீட்டுக்காரர் அவ்வப்போது தன் குடும்பத்துடன் பல்வேறு கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லக்கூடியவர்.  ஒவ்வொரு முறையும் என்னையும் குடும்பத்துடன் உடன் வருமாறு அழைப்பார்.

”காசி, கயா, அலகாபாத் போறோம் வர்றீங்களா?”

”இல்ல.  கொஞ்சம் தவிர்க்க முடியாத வேல.  ஊருக்கு போக வேண்டியிருக்கு.  நீங்க நல்லபடியா போயிட்டு வாங்க.  நான் அடுத்த முறை வர்றேன்”

எப்படியாவது என்னை புண்ணிய தலங்களுக்கு அழைத்துச் சென்று இறை அருளை எனக்குப் பெற்றுத் தந்தே தீர வேண்டும் என்று அவர் விடாமல் முயன்று கொண்டிருக்க நானும் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தவிர்த்து வந்தேன்.

இந்த முறை என்னை அவர் விடுவதாக இல்லை.  குடும்பத்துடன் செல்லாமல் தனியாக திருவண்ணாமலை கிரிவலம் செல்ல இருப்பதாக சொன்னார்.  நாலு மணி நேர பயண தூரம் தான்.  இதற்காவது வாங்கள் என்றார்.  குடும்பத்துடன் வர வேண்டியதில்லை நான் மட்டும் வந்தால் கூட போதும்.  காரிலேயே போய்விட்டு வந்து விடலாம்.  பெட்ரோல் செலவு கூட பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.  இரவு கிரிவலத்தின் பிறகு உடனே திரும்ப வேண்டியதில்லை.  திருவண்ணாமலை போன உடனே அறை எடுத்துவிடலாம்.  கிரிவலம் முடித்து அறைக்கு வந்து உறங்கி விட்டு மறுநாள் நிதானமாக புறப்பட்டால் போதும்.  எல்லா செலவும் தன்னுடையது என்றார்.

அப்போதும் நான் தயங்கினேன்.

அவர் ”இது இறைவனின் அருள் என்று புரிந்துகொள்ளுங்கள்” என்றார்.

நான் சம்மதித்தேன்.

பிரம்மாண்டமான அழகிய ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள் மிகுந்த அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மையையும் தரிசித்துவிட்டு கிரிவலம் துவங்கினோம்.  அன்று பௌர்ணமி அல்ல என்பதால் பெரிய அளவில் கூட்டம் இல்லை.  சில சாதுக்கள், சாமியார்களும் குடும்பங்களாக பொதுமக்கள் சிலரும் தனித்து சிலரும் நடந்து கொண்டு இருந்தனர்.

ரமணாசிரமத்திற்கு சென்றோம்.  கிரிவலப் பாதையில் ஒரு சாலையோர உணவகத்தில் கடையை மூட இருந்த நேரத்தில் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டோம்.  பின்னர் நடையைத் தொடர்ந்தோம்.  மெதுவாக பல இடங்களில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டே சென்றோம்.  ஒவ்வொரு லிங்கமாக வணங்கிச் சென்று குபேர லிங்கத்தை வணங்கி விட்டு நடந்த போது போது காலை ஆகிவிட்டிருந்தது.

அருகருகே நடந்து சென்று கொண்டிருந்த எங்கள் இருவருக்கும் நடுவே பின்னாலிருந்து ஒரு சாமியார் வெடுக்கென புகுந்து வேகமாக முன்னால் சென்றார்.  எனக்கும் என் எதிர் வீட்டுக்காரருக்கும் அவர் ஏன் அப்படி செய்தார் என்று புரியவில்லை.  பின்னர் அவர் திரும்பி வேகமாக முன்னால் வந்து மீண்டும் எங்களிடையே புகுந்து என்னை இடித்துக் கொண்டு பின்னால் சென்றார்.

எனக்கு கோபம் வந்தது.  நான் அவரது காவி உடையைப் பிடித்து இழுத்து ”என்னடா திமிரா? என்றேன்.

எதிர் வீட்டுக்காரர் என்னை ”வேண்டாங்க” என்று தடுத்து ”ஏன் ஸ்வாமி இப்படி செய்கிறீர்?” என்று சாமியாரிடம் கேட்டார்.

”ஓ அதுவா மகனே? உங்களது அஞ்ஞானத்தை தெளிவிக்கவே அவ்வாறு செய்தோம்” என்றார்.

எதிர் வீட்டுக்காரர் குழப்பமடைந்தார்.  பின் பயபக்தியுடன் சாமியாரை வணங்கினார்.

சாமியார் சிரிப்புடன் தன் தாடியை தடவி விட்டுக் கொண்டார்.  தன் ஜோல்னா பையில் கைவிட்டு விபூதி எடுத்து நீட்டினார்.  எதிர் வீட்டுக்காரர் பவ்யமாக அதைப் பெற்றுக் கொண்டார்.  பின் சாமியார் என்னிடம் கையை நீட்ட நான் வாங்கிக் கொள்ளவில்லை.

”வாங்கிக்கங்க” என்று எதிர் வீட்டுக்காரர் சொல்ல நான் விருப்பமில்லாமல் பெற்றுக்கொண்டேன்.

சாமியார் சிரித்துக்கொண்டே ”என்ன மகனே பார்க்கிறாய்? யாமல்லவோ உன்னை இங்கு வரவழைத்தது” என்றார்.

பின் ”எல்லாம் ஈசன் அருள்தான்.  உங்கள் இருவருக்கும் தீட்சை வழங்கும்படி உத்தரவாகி இருக்கிறது.  வாருங்கள் என் பின்னால்.” என்றார்.

நான் எரிச்சலடைந்தேன்.  என்றாலும் எதிர் வீட்டுக்காரரின் விருப்பத்திற்காக உடன் சென்றேன்.

கிரிவல சாலையிலிருந்து விலகி முள் மரங்கள் இருந்த ஒரு ஒற்றையடிப் பாதையின் வழியாக எங்களை அழைத்துச் சென்றார் சாமியார்.  ஒரு இடத்தில் நின்று அங்கிருந்த பாறையின் அருகே சென்று அதில் அமர்ந்து கொண்டார்.

”வா” என்று எதிர் வீட்டுக்காரரை அழைத்தார்.  அருகே சென்ற அவரை கண்களை மூடச் சொல்லி தன் வலது கை கட்டை விரலால் அவரது புருவ மத்தியில் தொட்டு இறை நாமங்களை சொன்னார்.  பின்னர் ”அருளப்பட்டது” என்று சொல்லி என்னைப் பார்த்து ”நீ வா” என்றார்.

அவரது முகத்தில் தெரிந்த குறும்பும் தாடியும் கண்களும்.  எனக்கு சட்டென பொறி தட்டியது.  இந்த குரலை எப்படி அடையாளம் காணாமல் போனேன்?

”டேய் நீ டில்லி தான?” என்றேன்.

சாமியார் சிரித்துக் கொண்டே ”வா மகனே.  அடையாளம் கண்டுபிடித்து விட்டாய்.  புத்திசாலிதான் நீ” என்றார்.

”டேய் டில்லி..”

”அது இறந்த காலம் மகனே.  வா வந்து இறைவனின் அருளைப் பெற்றுக்கொள்”

எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

”போடா நாயே.  பொண்டாட்டி புள்ளைங்கள ஆபத்துல விட்டுட்டு ஓடுன கோழை.  உன் கிட்ட நான் ஆன்மிகம் கேக்கணுமா?” என்று கூச்சலிட்டேன்.

டில்லி பாபு சாமியின் உடல் ஒரு கணம் அதிர்ந்தது.  அறை பட்டது போல முகம் சுருங்கியது.

நான் திரும்பி வேகமாக நடந்தேன்.  எதிர் வீட்டுக்காரர் ”நில்லுங்க நில்லுங்க” என்று கத்திக்கொண்டே பின்னால் ஓடி வந்தார்.

மறுநாள் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது தோன்றியது.

ஒருவேளை நான் நடந்து கொண்ட விதம் தவறோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *