அமரன் புரிந்துகொண்டேன். எப்போதும் எதற்காகவும் போராடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. துன்பத்தைக் குறித்த அங்கலாய்ப்பு, பிலாக்கணம் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. மட்டுமல்ல அது தேவையற்றது. மட்டுமல்ல, துன்பம் – அது எவ்வளவு பெரியது என்று நாம் எண்ணிக் கொண்டிந்தாலும் அது நீண்டு கொண்டே செல்லும் போது ஒரு இடத்தில் இன்பமாக மாறத் தொடங்குகிறது. இன்பத்திற்கும் அதே தான். இருமை! இரண்டு புள்ளிகளுக்கு நடுவே ஊசலாடிக் கொண்டிருப்பது. கொஞ்சம் இந்த பக்கமாக உயர்ந்து சென்று சென்று உச்சம் தொடுவது, தொட்ட கணத்திலிருந்து எதிர் பக்கம் நோக்கி இறங்குவது. இதுதான் வாழ்க்கை. பிரபஞ்சத்தின் இந்த மிகச் சிறிய பகுதியில் இந்த ஏற்பாடு.
இருள் – ஒளி, இன்பம் – துன்பம், நல்லது – கெட்டது. இங்கு இருளுக்கும் ஒளிக்கும் நிரந்தர இட உரிமை, சொத்துரிமை போல அளிக்கப்படவில்லை. ஒரு கணமும் நில்லாத நகர்வு விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த கணத்தில் எல்லை வகுத்தளிக்கப்படுகிறது. ஒளியும் இருளும் தொட்டுக் கொள்ளும் அந்த புள்ளி….இரண்டிற்கும் இடையே அப்பால் ஏதோ ஒன்றின் கதவு போல் தோன்றும் அந்த கணம்….”
சுவற்றில் பல்லர் குரல் எழுப்பினார். பொதுவாக பல்லி என்று அழைக்கப்பட்டாலும் பல்லி என்பது பெண்பால் அல்லவா? என் நண்பரை பல்லரே என்று தான் அழைக்கிறேன். உண்மையில் அவர் பல்லரா அல்லது பல்லியா என்பது எனக்குத் தெரியாது. பல்லர் என்றே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். இந்த அறையில் என்னோடு வாழும்படி அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. என் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு தன் எதிர்வினையை தவறாமல் ஆற்றுகிறார். சில சமயம் ”அட அட”, சில சமயம் ”சேச் சே”, சில சமயம் ”அச்சச்சோ”, சில சமயம் அவைகளில் அரசியல்வாதிகள் மேசையைத் தட்டுவார்களே அது போல. ஏற்பு, மறுப்பு, பாராட்டு, வியப்பு!
அமரனாகிய எனக்கு என் இந்த சிறிய நண்பரைக் காண அவ்வப்போது ஆசையாக இருக்கும். ஆனால் அவராக மேலேறி எதிரே பார்வைக் கோணத்திற்குள் வந்து காட்சி தந்தால் தான் உண்டு. கழுத்தைத் திருப்புவது கஷ்டம்.
பல்லரின் குடும்பம் பெரியது. இந்த அறையிலும் பக்கத்து அறையிலும் இவ்வளவு பேர், அதாவது பத்து பன்னிரண்டு பேர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போது தான் தெரிய வந்தது. சற்று நேரம் முன்பு தலைக்குப் பின்னால் திறந்திருந்த ஜன்னலிலிருந்து மழையின் ஒலி கேட்டது. மிக மென் மழை தான். முகத்தில் சில சிறு துளிகளை தெளித்துவிட்டு நின்று விட்டது. பின்னர் ஒரு சில நிமிடங்களில் அறையில் புகுந்தது ஈசல்களின் படை. குழல் விளக்கை அணைக்க வேண்டும். யார் அணைப்பது?
குழல் விளக்கை மொய்த்த பல பூச்சிகள். ஒரு பூச்சி என் முகத்தின் மீது இறங்கியது. மிகவும் இம்சையாகிவிட்டது. கண்களை மூடிக் கொண்டேன். இன்னொரு பூச்சி நெற்றியின் மீது ஊர்ந்து மூக்கின் மீது ஏறியது. அவற்றின் சிறகுகள் ! இந்த உறுத்தலை எப்படி நீக்குவது? யாரையாவது கூப்பிட வாயைத் திறந்தால் வாய்க்குள் சென்றுவிடும். அத்துடன் இப்போது வீட்டில் யாரும் இல்லையே? என்ன செய்வது?
மனதிற்குள் அழைத்தேன். ”பல்லரே என் எண்ணங்களை உணரும் நண்பரே. எனக்கு உதவுங்கள்”
அதிசயம் போல நடந்தது. நான் என் கண்களைத் திறக்கவே இல்லை. சொத்தென்று பல்லர் என் கன்னத்தில் குதித்தார். எனக்கு அதிர்ச்சியாகவும் சற்று சங்கடமாகவும் இருந்தது என்றாலும் என் நிலைமையை புரிந்து கொண்டவரான என் நண்பர் அதிக நேரம் எடுக்காமல் நொடிகளில் பாய்ந்து ஒரு பூச்சியை தன் சாட்டையை வீசிப் பற்றி கவ்விக் கொண்டு என் முகத்திலிருந்து கட்டிலின் தலைப்பக்க இரும்பிற்கு தாவிய சத்தம் கேட்டது. மற்றொரு பூச்சி முகத்திலிருந்து வெளியே விழுந்து விட்டது. நான் கண் திறந்தேன். பல்லர் கட்டிலிலிருந்து சுவற்றுக்குத் தாவி விட்டிருந்தார். இந்த அறையின் வெவ்வேறு இடங்களிலிருந்தும் பக்கத்து அறையிலிருந்தும் விரைந்து வந்த பல்லரின் குடும்பத்தினர் ஒரு விரைவுப் படையைப் போல செயல்பட்டு பூச்சிகளை விரட்டி விரட்டி வேட்டையாடினர்.
வெளியே காலணியை கழற்றி விடும் ஒலி கேட்கிறது. எவ்வளவு துல்லியமாக காது கேட்கிறது எனக்கு? சாந்தியும் பாப்பாவும் வந்துவிட்டார்கள்.
“ஷு வ எங்க வெக்கணும்ன்னு சொல்லிருக்கேன்?” சாந்தி பாப்பாவை அதட்ட ”இங்க” என்றாள் பாப்பா.
”ம்….” சாந்தியின் குரல்.
பள்ளி முடிந்ததும் அருகே இருக்கும் சாந்தியின் அலுவலகத்திற்கு நடந்து சென்று விடுகிறாள் பாப்பா. சாந்தி அலுவலகம் முடிந்ததும் பாப்பாவுடன் வீடு திரும்புகிறாள்.
பக்கத்து அறையில் உடை மாற்றிக் கொண்டு என் அறைக்குள் வந்த சாந்தி ”அய்யோ” என்றாள்.
”ஜன்னலை சாத்தி இருக்கணும். அந்தம்மாவ சாத்த சொல்ல வேண்டியது தான? என்ன எல்லாம் இப்படி இருக்கு? அந்தம்மா என்ன தான் வேல பண்றா?” என்றாள்.
நான் என்ன தான் சொல்ல? அந்தம்மா முதலில் அய்ந்து மணி நேரம் இருப்பதாக சொன்னாள். பின்னர் அவளாகவே ஒவ்வொரு மணி நேரமாக குறைத்துக் கொண்டே வந்தாள். இப்போது ஒரு மணி நேரமே அதிகம். தோசையை சுருட்டுவது போல என் உடலைத் திருப்பி விட்டு வேகமாக சுத்தம் செய்துவிட்டு தலையணையை மாற்றிவிட்டு,
”ஜன்னல மூடிறவா?”
”வேண்டாம்”
முன்பெல்லாம் சொல்லிக் கொண்டு செல்வாள். இப்போது சொல்வதும் கிடையாது. ஆரம்பத்தில் இரக்கப்பட்டு கொஞ்ச நேரம் அருகே இருந்து பேசிவிட்டுச் செல்வாள். பின் அவளுக்கு அலுப்பு தட்டிவிட்டது. பெருமளவில் செத்த உடம்புடன் ஒரு வெற்றுத் தலையுடன் எவ்வளவு நேரம்தான் பொழுதைச் செலவிட முடியும்?
அந்தம்மாவைப் பற்றி சாந்தியிடம் புகார் சொல்வதில் பயனில்லை.
சாந்தி அறையைப் பெருக்கி பூச்சிகளை முறத்தால் அள்ளி குப்பைக் கூடையில் போட்டாள். பின் ”டீ குடிக்கறீங்களா ?” என்றாள்.
”சரி” என்றேன்.
நான் எப்போதும் விரும்புவது போல மிதமான சூட்டில் டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். தன் கையால் என் தலையைத் தூக்கி – என் தலையைத் தூக்கி என்று சொல்வது பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. வெறும் தலையாகிய நான் என்னைத் தூக்கி என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். என்னைத் தூக்கி டீயைப் புகட்டினாள். பின் என் முகத்தை தன் உடையால் துடைத்து விட்டாள். பின் என் உதட்டில் முத்தமிட்டாள். பின் தலையணையை சரிசெய்து என்னை அதில் இதமாக வைத்தாள்.
”பாப்பா எங்க?” என்று கேட்டேன்.
”ஹோம் ஒர்க் எழுதிட்டு இருக்கேன்ப்பா” என்ற பாப்பா பின்னர் அறைக்குள் என்னருகே வந்து என் கன்னங்களைத் தொட்டாள். சிரித்தாள். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
”சரி பாப்பா. நீ போயி ஹோம் ஒர்க் பண்ணு” என்றேன்.
”சரிப்பா” என்று சென்றாள்.
”நான் வேலைய முடிச்சிட்டு வர்றேன்” என்றாள் சாந்தி.
”சரி சாந்தி” என்றேன்.
அவள் பாத்திரங்கள் கழுவ வேண்டும், துணிகளை துவைக்க வேண்டும், சமைக்க வேண்டும். எத்தனை வேலைகள்? அலுவலக வேலை முடிந்த பிறகும்? அலுவலகத்தில் எவ்வளவு வேலைகளோ?
இரண்டு மணிநேரம் கழித்து வருவாள். பிரஷ், பற்பசை, பாத்திரத்துடன். இந்த தலைக்கு பல் துலக்கி விட வேண்டுமே? மீண்டும் காலையில் எழுந்து அவள் பல் துலக்கியவுடன் வந்து இந்த தலைக்கு பல் துலக்கிவிடுவாள். வாராவாரம் ஷேவிங் செய்துவிட வேண்டும்.
அவள் தந்த உதட்டு முத்தம் நினைவுக்கு வந்தது. ”பேசாமல் இந்த உடல் துண்டித்து நீக்கப்பட்டு விட்டு வெறும் தலையாக மட்டும் நான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சாந்திக்கும் எவ்வளவு சிரமம் குறையும். இந்த அறைக்குள் நான் சிறைப்பட்டுக் கிடக்க வேண்டியதில்லை. என் உறவின் பேரில் சாந்தியின், பாப்பாவின் சுதந்திரத்தை சிறைபடுத்தி இருப்பதையும் சற்று குறைத்துக் கொள்ளலாம்.”
சாந்தி ஒரு பையில் என்னைப் போட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்று விடலாம். அலுவலக அனுமதியுடன் என்னை டேபிளில் வைத்துக் கொள்ளலாம். காண்பது சொல்வது என்ற வகையில் அவளது வேலைக்கு எந்த வகையிலாவது உபயோகமாக நான் இருக்க முடியும்.
பாப்பா கூட என்னை விளையாட வெளியே எடுத்துச் செல்லலாம். அப்பாவை வைத்து கால்பந்து விளையாடலாம். ”ஆமாம். உனக்கு எந்த வகையிலும் பயனற்ற இந்த அப்பாவை மன்னித்துவிடு பாப்பா. என்னை வைத்து புட்பால் ஆடு. உன் கால்களால் எட்டி உதை”
உணர்ச்சி வசப்பட்டு கண்களில் நீர் பெருகிய போது
”அச்சச்சோ” என்று சுவற்றிலிருந்து குரல் எழுப்பினார் பல்லர். பிறகு மூன்று முறை தண்டால் எடுத்துவிட்டு தன் தலையை மேலும் கீழுமாக அசைத்துவிட்டு என்னைப் பார்த்தார்.
அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காவிட்டால் பல்லரின் நட்பு கிடைத்திருக்குமா? என் நீண்ட துன்பம் இன்பமாக மாறியது பல்லரால் தான் என்பது யாருக்காவது சொன்னால் புரியுமா? எந்த வகையான எண்ண ஓட்டங்களுக்கும் பின்னால் அவர் தன் குரல் எழுப்பி என்னை வெளியே இழுத்தார். இந்த கணத்தை எனக்கு திறந்து தர முயன்று கொண்டிருந்த அவர் என் நண்பர் மட்டுமல்ல ஆசிரியரும் கூட.
அந்த நிகழ்வு நடந்த பின் ”எப்படி இந்த மாதிரி நடக்க முடியும்? எப்படி இந்த மாதிரி நடக்க முடியும்? என்று ஏற்க முடியாமல் என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டே இருந்தேன்.
வழக்கமான ஒரு மாலைப்பொழுது. பள்ளிக் கூடம் விட்டு சிரித்துக்கொண்டே ஓடி வந்த பாப்பாவை அள்ளித் தூக்கி பைக்கில் முன்னால் உட்கார வைத்துக் கொண்டு சாந்தியின் அலுவலகம் சென்று அவளை அழைத்துக் கொண்டு வழியில் பூ விற்கும் பெண்ணிடம் நின்று, பேரம் பேசாமல் கை நிறைய வாங்கி சாந்தியின் கையில் தந்துவிட்டு, இரண்டு சின்ன பூக்களை வாங்கி பாப்பாவின் இரு காதுகளிலும் சொருகிவிட்டு வந்து கொண்டிருந்தேன்.
ஒரு திருப்பத்தில் ஒரு சின்ன விபத்து. நல்லவேளை சாந்திக்கும் பாப்பாவிற்கும் ஒன்றும் ஆகவில்லை. சின்ன விபத்து என்றுதான் கண்கள் மூடும் முன் தோன்றியது. கண்கள் திறந்தபோது எத்தனை நாட்கள் கடந்தது என்று நான் அறியவில்லை.
நான் வெறும் தலை தான் என்று அறிவிக்கப்பட்டேன். கழுத்திற்கு கீழாக என் உடலில் எதையும் நான் இயக்க முடியாது. கழுத்தை திருப்புவதும் கடினம்தான். ஆனால் என் உள்ளுறுப்புகள் மட்டும் இயங்கும். இது என்ன நியாயமோ?
பதினோராம் வகுப்பில் உயிரியல் பாடத்திற்காக ஒரு தவளையை பிளாஸ்டிக் கவரில் பிடித்து அதன் கழுத்தின் பின்புறம் சிறு கத்தரிக் கோலைச் செருகி கழுத்தெலும்பை உடைத்தபின் அது அசைவிழந்து அப்படியே கிடந்தது. ஆனால் நீண்ட நேரம் உயிரோடு இருந்தது. ஒருவேளை அந்த பாவத்தின் பலன் தான் இதுவோ என்று தோன்றியது.
”ரவி எனக்கு இப்படில்லாம் ஆனதே இல்ல. எனக்கு இப்படில்லாம் ஆனதே இல்ல” என்று நண்பர் ரவியிடம் திரும்பத் திரும்ப சொல்லி அழுத போது சாந்தியும் அழுதாள். ரவி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் கவனித்தேன் பேசும் போது என் குரல் – ஒலி உடலுக்குள் குகைக்குள் சென்று ஒலிப்பது போல ஒலித்தது.
இப்போது யோசித்தால் சிரிப்பாக வருகிறது. ”எனக்கு இப்படில்லாம் ஆனதே இல்ல” என்றால் என்ன?
யாருக்கும் எதுவும் எப்படியும் எப்போது வேண்டுமானாலும் ஆகக் கூடியது தானே வாழ்க்கை?
பல்லர் சத்தம் எழுப்பி இக்கருத்தை முழுமையாக ஆதரித்தார்.
அப்புறம் எல்லோரும் ஊகிக்கக் கூடியது தான். என்னைக் கொன்று விடும்படி கெஞ்சினேன். ”இன்னும் கொஞ்சநாள் கழித்து சரியாகிவிடும்” என்றார்கள். அந்த கொஞ்சநாள் எப்போது கழியும் என்று இன்று வரை தெரியவில்லை. அமரன் என்று எனக்கு பெயர் வைத்த என் அம்மா அப்பாவின் மீதும் கோபமாக வந்தது. அமரன் என்றால் மரணம் அற்றவன். நான் மரணம் அற்றவனாக இருக்க வேண்டுமாம் !
வாழ்க்கையோ மரணமோ உரிய நேரத்தில் கிடைக்காவிட்டால் யாரிடம் சென்று நீதி கேட்பது?
நான் வீட்டிற்கு வந்த பிறகு துவக்கத்தில் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்ற நண்பர்கள் பின்னர் வரவில்லை.
யாரையும் குறை சொல்லக் கூடாது சரிதானே பல்லரே?
——
அதிசயமாக அந்தம்மா கடந்த இரண்டு நாட்களாக கூடுதல் நேரம் இருக்கிறாள். சில சமயம் அவள் செல்லும் போது ”அம்மா அம்மா” என்று கூப்பிட்டாலும் காதில் விழாதது போல சென்று விடுவாள். இன்று என்னவோ அக்கறை அதிகமாகிவிட்டது. துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்தை துடைத்து விட்டாள். பின்னர் பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அருகே உட்கார்ந்தாள்.
”தம்பி. உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
”சொல்லுங்கம்மா”
”தப்பா நினைச்சிக்கக் கூடாது”
”இல்ல சொல்லுங்க”
”நீங்க இருக்கற நெலம உங்களுக்கே நல்லாத் தெரியும்….”
”அதெல்லாம் வேண்டாம். நேரா விஷயத்துக்கு வாங்க. என்ன விஷயம்?’
”உங்க பிரண்டு ரவி……”
”ரவியா ? வந்திருந்தாரா?”
”இல்ல தம்பி. நான் சொல்லுறத கேளுங்க”
”சரி சரி சாரி….சொல்லுங்க”
”அவரு சாந்தி கிட்ட பேசிக்கிட்டு இருந்தத கேட்டேன்” என்ன, எங்கே, எப்போது என்றெல்லாம் நான் கேட்கவில்லை. பல்லரும் சுவற்றில் வேகமாக ஓடி வந்து இரண்டு தண்டால் எடுத்து விட்டு உன்னிப்பாக கேட்டார்.
”ரவி சாந்திய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றார்.”
”இப்படியே எத்தனை நாள் இருப்பீங்க? நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கறேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து அமரனப் பார்த்துப்போம். பாப்பாவ என்னோட மகளாத் தான் நான் நினைக்கறேன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கறேன். நான் அமரன் கிட்ட பேசறேன்” அப்படின்னு சாந்தி கிட்ட சொன்னார்.
”சாந்தி என்ன சொன்னா?” என்று கேட்டேன்.
”சாந்தி கோபப்பட்டு அவர திட்டிட்டாங்க. அவரு பேசாம போயிட்டாரு”
எனக்கு சாந்தியை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம் இந்த மகிழ்ச்சி நியாயமற்றது என்ற குற்றவுணர்ச்சியும் ஏற்பட்டது.
”சரிம்மா. நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க ?’
”நீங்க சாந்தி கிட்ட பேசுங்க”
ரவி நல்லவன் என்று எனக்குத் தெரியும். அவன் என்னிடம் வந்து சொல்லி இருந்தாலும் மகிழ்ந்திருப்பேன். இருந்தாலும் ”ரவி நல்லவன்னு நீங்க நினைக்கிறீங்களா ? என்று கேட்டேன்.
”என்ன தம்பி இப்படி கேக்றீங்க? உங்க பிரெண்டு உங்களுக்குத் தெரியாதா?” என்றாள் அந்தம்மா.
”அவன் நல்லவன் இல்ல” என்றேன்.
அந்தம்மா திடுக்குற்றாள். பின் சில வினாடிகள் தயங்கிவிட்டு ”நீ இப்படி சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன். ஆம்பிளங்க புத்தியே இப்படித்தான். சாந்தி எப்படி கஷ்டப்படறான்னு கொஞ்சமாச்சி தோணுதா உனக்கு?”
நான் சரியான திசையில் செல்வதாகத் தோன்றியது.
”என்ன சாந்தி சாந்தி ? அவ ஒரு தேவிடியா” கோபம் கொண்டவனாக கத்தினேன்.
பிளாஸ்டிக் நாற்காலியிலிருந்து வெடுக்கென எழுந்து அந்தம்மா ஆத்திரத்துடன் என் முகத்தின் முன் கை நீட்டி ”யார்றா தேவிடியா ? நீதான்டா நாயே தேவிடியா மகன். உங்கம்மா தேவிடியா” என்றாள்.
நான் ”அவ ஒரு தேவிடியா. நீ ஒரு நாறத் தேவிடியா” என்று அந்தம்மாவின் முகம் பார்த்து சொன்னேன். அவள் என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். பின் அறையை விட்டு வெளியே செல்லப் போனாள்.
தாமதிக்கக் கூடாது. இன்னும் சில நிமிடங்கள் தான். கலங்கிய கண்களுடன் பார்த்த போது பல்லர் தலையசைத்து ஆமோதிப்பது தெரிந்தது.
அந்தம்மாவின் காதில் விழும்படியாக மேலும் சில வார்த்தைகள். இன்னும் சுருதி கூட்டி.
அந்தம்மா திரும்பினாள். கட்டிலின் காலருகே இருந்த பெரிய தலையணையை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தாள்.
ஒளியும் இருளும் சந்தித்துக் கொள்ளும் அந்த புள்ளி. பல்லர் எனக்கு விடை கொடுத்தார்.
”ச்ச ச்ச சச்சோ”