புரியாதது

இன்று தலைவலி அதிகமாக இருந்தது.  ஹாஸ்டலில் அனேகமாக பூரிக் கிழங்கு.  அவளுக்கு அதைச் சாப்பிடப் பிடிக்கவில்லை.  வெளியில் எங்காவது போய் வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.  டில்லியில் நடக்கும் பெண்கள் ஹாஸ்டலில் பிரசரெட், பொங்கல், இட்லி, தோசை கிடைக்காது. இட்லி தோசை போட்டாலும், அவை காகிநாடாவில் சாப்பிட்டது போல் இருக்காது. சாம்பார் என்ற பெயரில் காரமாக, பருப்பே இல்லாமல் புளித்தண்ணியை வைத்து விடுவார்கள்.  என்ன செய்வது என்று யோசித்தாள்.  பகவான் தாஸ் ரோட்டிலிருந்து ஜந்தர் மந்தரிலிருக்கும் மலையாளி கடைக்குப் போனால் ஓரளவு வாய்க்கு ருசியாக இட்லி தோசை கிடைக்கும்.  அங்கிருந்து ஆஃபிஸ் போய்விடலாம். ஆனால் ஆட்டோ செலவு டபுள் ஆகிவிடும். இங்கிருந்து ஜந்தர் மந்தர், அங்கிருந்து ராஃபி மார்க்.  கொஞ்சம் யோசனையாக இருந்தது.  நடுப்பகலில் போக முடியாது. ஒரு வழியாக ஹாஸ்டலை விட்டு வெளியே வரும் போது மணியைப் பார்த்தாள். எட்டு இருபத்தி ஐந்து.  ஆட்டோ பிடித்து ஜந்தர் மந்தர் வந்தாள். 

அந்தக் கடை நாற்பது வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருந்தது என்று அலுவலகத்தில் சௌம்யா சொல்லியிருக்கிறாள். அவள் டெல்லியில் பிறந்து வளர்ந்தவள்.  கூட்டம் அதிகம் இல்லை. ஒரு ஆனியன் தோசை சாப்பிட்டுவிட்டு, ஆட்டோவைப் பிடித்தாள். அவள் ஆட்டோவில் ஏறும் போது ஒரு கார் ஆட்டோவை மறித்து, சற்று நின்று பிறகு போய்விட்டது. அது ஒன்றும் கவனித்திருக்கக் கூடிய நிகழ்வு இல்லைதான். 

அந்தக் காரில் இருந்தவர், பத்மாவின் மேலதிகாரி, சஞ்ஜீவ் ஜெயின் என்பது பத்மாவுக்குத் தெரியவில்லை. ஆனால் சஞ்ஜீவ் அவளைப் பார்த்துவிட்டுத்தான் டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார். அதற்குள் அவள் ஆட்டோவில் ஏறிக் கிளம்பிவிட்டாள்.  ‘சரி, சரி, நிறுத்த வேண்டாம் என்றதும் அவன் காரை நகர்த்திவிட்டான். 

பத்மா பிரிவு அதிகாரியின் சுருக்கெழுத்தர்.  அவருக்கும் மேலதிகாரி சஞ்சீவ் ஜெயின்.  நேரடியான தொடர்பு இல்லை. ஆனாலும் மாதத்தில் ஓரிரு முறை அவசரமான ஃபைல்களில் ஒன்றை அவரிடம் கையோடு கொடுத்துவிடும்படி பிரிவு அதிகாரி ராகேஷ் சொன்னால், அவள் அவர் அறைக்குப் போய் கொடுத்துவிட்டு வந்துவிடுவாள். பத்மாவுக்கு அவர் முகம் தெரியும் அவ்வளவுதான்.  அவருக்கும் இன்னொரு முகம் இருந்தது அவளுக்குத் தெரியாது. பலருக்கும் தெரியாது. 

தினமும் சஞ்சீவ் ஜெயின் அலுவலகத்துக்கு வரும் போது, ஜந்தர் மந்தர் பக்கம் வந்ததும், ஏன் ஸ்லோ பண்ணச் சொல்கிறார் என்று அவருடைய டிரைவர்  பவன் சிங் நேகி’க்கு அடுத்த நாள் புரியவில்லை. அதற்கு அடுத்த நாள் யூகித்துவிட்டார்.  அவருக்கும் ஐம்பது வயதாகிறது. இதுமாதிரி எத்தனை அதிகாரிகளைப் பார்த்திருப்பார்.  ஆனால், நல்ல வேளையாக பத்மா அங்கேயில்லை.  அவள் அவனுடைய ராஃபி மார்க் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள் என்பது கூட பவன் சிங்கிற்குத் தெரியவில்லை.  கிளம்பும் போது, வீட்டை விட்டு மனைவியிடம் டாடா காட்டிவிட்டு வருகிற இந்த ஆள், இப்படி இருப்பான் என்று அவர் அதுவரை நினைத்ததில்லை. 

பத்மா வேலைபார்த்த பிரிவிலிருக்கும் ஒரு உதவியாளருக்குக் குழந்தை பிறந்ததற்கு அவர் ஒரு சின்னப் பார்ட்டி கொடுத்தார். அதில் பிரிவு அதிகாரிக்கு அடுத்த அதிகாரியான சஞ்சீவ் ஜெயின் வந்திருந்தார். அவருடன் பவன் சிங்கும் வந்தார்.  ஜந்தர் மந்தரில் பார்த்த பெண் அங்கே இருந்தது அப்போதுதான் பவன் சிங்குக்குப் புரிந்தது.  ’இந்த நாயின் எச்சக்கலைப் புத்தி வேலை செய்யத் தொடங்கிவிட்டது’ என்று தன் அதிகாரியின் முகத்தைப் பார்த்தார்.  அவர் குழைந்து குழைந்து பிரிவில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சல் அடைந்தார். அங்கே அவர் இருந்த முக்கால் மணி நேரமும், இந்தப் பெண்ணிடம் எப்படி சஞ்சீவ் ஜெயின் குறித்து எச்சரிக்கை செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவள் புதிதாக வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை.  வடக்கத்திப் பெண் இல்லை. அதனால் தட்டுத் தடுமாறி இந்தி பேசுகிறவளாக இருக்கும். தன் பெண்ணை விடச் சிறிய வயது.  ஒரு ஆண், அவளுடைய மூத்த அதிகாரியின் டிரைவர், ’அந்த அதிகாரி உன்னைக் கவனிக்கிறார்’ என்று அவளிடம் மற்றவர்களுக்குத் தெரியாமல் எப்படிச் சொல்வது? எல்லாவற்றையும் அமைதியாக, ஆனால் தீர்க்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். 

அடுத்தநாளும் அதற்கு அடுத்த நாளும் ஜந்தர் மந்தர் வந்ததும், காரிலிருந்த அதிகாரி சலனப்படுவதும், பவன் சிங் எரிச்சலடைவதும் தொடர்ந்தாலும், இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. அதிகாரி பவன் சிங்கின் எதிர்வினைகளைக் கவனிக்கிற மனநிலையில் இல்லை. முன்னாலிருப்பதால் அவர் முகக்குறிப்பும் தெரியவில்லை. 

ஒரு நாள் அதிகாரியுடன் அவர் மனைவி, அவருடைய பத்துவயது மகன் இவர்களை ஏற்றிக் கொண்டு சினிமாத் தியேட்டருக்குப் போனார். அரசுக் கார் அதற்காகத் தானே கொடுத்திருக்கிறார்கள்.  அப்போது கூட, அவளுடைய கணவர் என்ன செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று சொல்லத் தோன்றியது. அது எங்கே போய் முடியும் என்று யூகிக்கத்தான் முடியும்.  அதிகாரிக்கு எந்தப் பாதிப்பும் வராது.  ஆனால் ‘டிரைவரின் பணி வண்டி ஓட்டுவது, அதற்கு மேல் பேசாதே என்று அவருடைய மனைவியும் சொல்லக் கூடும். அதையும் தாண்டி  அவள் கணவனுக்குத் தெரிந்துவிட்டால்,   வேறு ஏதாவது காரணம் சொல்லி அந்த அதிகாரி, தன் மீது பொய்ப்புகார் கொடுக்கக் கூடும்’.  இதையெல்லாம் பார்க்காதவரோ கேள்விப்படாதவரோ அல்ல பவன் சிங். அவமானப்பட வேண்டியிருக்கும்.  தான் எதுவும் செய்துவிட முடியாது என்று புரிந்து கொண்ட பவன் சிங் ஒன்றும் நடக்காதது போல் தன் வேலை உண்டு தானுண்டு என்று அமைதியாக இருந்தார். 

பத்மா தன் வேலையில் மிக நேர்த்தியாக இருப்பாள்.  அவளுடைய பிரிவு அதிகாரிக்கு அவளை நிறையப் பிடிக்கும்.  அவளுக்கு உரிய மரியாதையக் கொடுத்தார். மற்றவர்களும் அவளை அப்படியே நடத்தினர். அவளுக்கு இந்தி பேசுவது அவ்வளவு எளிதாக இல்லை. தட்டுத் தடுமாறி, அவள் பேசுவதை அவர்கள் மிகவும் ரசித்து, இயல்பாகவே கிண்டல் செய்தனர். அவளும் அவர்களை தட்டுத்தடுமாறும் ஆங்கிலத்தில் கிண்டல் செய்வாள்.  அதனால் அவள் ஆங்கிலமும் இந்தியும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகப் பேசிப் பழக வேண்டியிருந்தது. அவள் தொடர்ந்து முயற்சித்து வந்தாள். 

வீட்டில் பத்மா மூன்றாவது பெண்.  அவளுடைய அப்பா பொன்னையா அரசு அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக இருந்து ரிடையர் ஆனவர்.  முதல் பெண் ரத்னாவுக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஊருக்குப் போனால் மட்டுமே அவளிடம் பேச முடியும். அவளுடைய வீட்டில் அவளுக்கு எக்கச்சக்க வேலை. தொலைபேசியில் தொடர்பு கொள்ளக் கூட முடியாது.  இரண்டாவது பெண், லட்சுமி பி.காம்,. படித்துவிட்டு ஒரு கம்பெனியில் சொற்பச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.  இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. மூன்றாவது பத்மா. நான்காவது பையன் எம்.ஏ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறான்.  வாரத்துக்கு ஒருமுறை எஸ். டி.டி. பூத்திலிருந்து அம்மாவிடம் போனில் பேசுவாள்.  பூத்தில் கண்ணெதிரே ஓடுகிற மீட்டரைப் பார்த்துக் கொண்டே பேசுவதில் கெட்டிக்காரி. அவசரத்துக்கு அலுவலக போன் நம்பர் கொடுத்திருந்தாள். 

அன்றும் தோசைக்கு ஆசைப்பட்டு ஜந்தர் மந்தர் சென்று அலுவலகத்துக்கு வந்து சேரும் போது மணி ஒன்பதரை ஆகிவிட்டது. அதற்குள் அவளுடைய மேலதிகாரி சஞ்ஜீவ் ஜெயின் வந்து வருகைப் பதிவேட்டில் அவளுக்கும் இன்னும் ஒருவருக்கும் ஆப்செண்ட் மார்க் போட்டுவிட்டுப் போய்விட்டார்.  பத்மாவுக்கு அவமானமாகப் போய்விட்டது. ஆனால் பிரிவு அதிகாரி அவளுடைய முகத்திலிருந்த கலக்கத்தையும் வருத்தத்தையும் பார்த்து, ’கவலைப்படாதே. சும்மா, சஞ்ஜீவ் ஜெயினைப் பார்த்துவிட்டு வா.  அடுத்தமுறை சரியான நேரத்துக்கு வா, என்று சொல்லி விட்டுவிடுவார்’ என்று அறிவுரை சொன்னார். லேட்டாக வந்த வினோத், அவளிடம் ‘சும்மா, தலையைக் காட்டு, அது போதும்’ என்று சொன்னார்.  

பத்மா மேலதிகாரியின் அறைக்குச் சென்றாள்.  அப்போது பவன் சிங் அவரிடம் ஒரு பையைக் கொடுத்து, மேடம் கொடுக்கச் சொன்னார்கள்’ என்றார். ‘பையனை அவன் மேட்ச் நடக்கும் இடத்தில் கொண்டு போய்விட்டாயா?’ என்று கேட்டார். ‘கொண்டு போய் விட்டுட்டேன், சாப், நாலு மணிக்கு மேல வரச்சொல்லிருக்காங்க’ என்று சொல்லிவிட்டு, அறைக்குள் வந்த பத்மாவைப் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு சென்றார்.  அவருக்குள் ஏதோ உறுத்தியது. அலுவலகத்தில் அதிகாரியை அவருடைய அலுவலகத்தில் யாரும் சந்திக்கலாம். அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இது அப்படித்தானா?

சஞ்ஜீவ் ஜெயின், ‘என்னாச்சு, பத்மா’ என்றார். ‘கொஞ்சம்  லேட்டாயிருச்சு சார்’ என்றாள்.  தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள், ஒன்பது இருபத்தி ஐந்துக்கே அவள் அலுவலகத்திற்குள் வந்துவிட்டாலும், தயங்கித் தயங்கி, பிரிவில் நின்று, மற்றவர்கள் ஒன்றும் நடக்காது என்று சொல்லிக் கொடுத்து இவரிடம் வர ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. வழக்கமாக டீ கொண்டுவரும் அதிகாரியின்  பியூன் வந்தார். ‘இவருக்கும் சேர்த்துக் கொண்டு வா’ என்று அவரிடம் சொல்லிவிட்டு, ‘பத்மா உட்கார்,  டீ குடித்துவிட்டுப் போ’ என்றார். பத்மா தயக்கத்துடன், நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.  பியூன் டீ கொண்டு வரப் போய்விட்டார். 

’எங்க தங்கியிருக்க?’

’ஹாஸ்டல்ல’

’அது எங்க இருக்கு’

’பகவான் தாஸ் ரோட்ல’

’அது பக்கத்தில தான’

’இன்னைக்கு ஜந்தர் மந்தர் போய்ட்டு வந்தேன் சார். அதான். கொஞ்சம் லேட் ஆகிருச்சு’

‘ஏதாவது வேலையா?’

’இல்லை சார். என்னைக்காவது போய், சாப்பிட்டுட்டு வருவேன் சார்.’

‘அங்க என்ன இருக்கு’

‘ஒரு சவுத் இண்டியன் கேண்டீன் இருக்கு’

‘அங்க நல்லா இருக்குமா’

‘ம்ம்’ என்று தலையாட்டினாள். 

அதற்குள் பியூன் டீ கொண்டுவந்துவிட்டார். அவர் டீயை ஊற்றிக் கொடுக்கும் போதும் அவர் பேச்சைத் தொடர்ந்தார். 

‘நீ, மெட்ராசா?’

‘இல்லை சார். ஆந்திரா.

‘எங்க?’

‘காக்கிநாடா.

‘ஃபேமிலி எல்லாம் அங்க இருக்காங்களா?’ அவர் கேட்கும் போதே தன் அலுவலக எண்ணில் எஸ்.டி.டி இணைப்பு உள்ளது என்று மனதில் குறித்துக் கொண்டார்.

‘ஆமாம் சார்’ 

டீ குடித்ததும், ‘தேங்ஸ்’ சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். அவரிடம் தனக்கிருந்த பயம் குறைந்துவிட்டதை உணர்ந்தாள். 

பிரிவு அதிகாரி, தன்னிடம் வேலை பார்க்கும் அந்தப் பெண் இவ்வளவு நேரம் மேலதிகாரியின் அறையில் ஏன் இருந்துவிட்டு வந்தாள் என்று கொஞ்சம் யோசித்தார். ஆனால் அப்படியே விட்டுவிட்டார்.

*******

பத்மா வழக்கம் போல ஆஃபீஸ் போய்க்கொண்டிருந்தாள்.  இப்போதெல்லாம் அவளை அவளுடைய மேலதிகாரி அடிக்கடி அழைத்து ‘டிக்டேஷன்’ கொடுத்துக் கொண்டிருந்தார்.  அவருடைய சுருக்கெழுத்தர், கே.டி. சாஹா நன்றாக வேலை பார்க்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தார்.  பத்மாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அவளுடைய அதிகாரி அவளுக்கு முன்னுரிமை கொடுத்தது அவளுக்கும் பிடித்திருந்தது.  ஆனால் அவளுடைய பிரிவு அதிகாரியாக இருந்த எம்.கே.பாண்டா, கொஞ்சம் முகம் சுளித்தார். தன்னிடம் வேலை செய்யும், திறமையான ஒரு சுருக்கெழுத்தரை மேலதிகாரியிடம் இழக்க வேண்டிய கட்டாயம். அப்படிச் செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அதைவிட இந்த இளம் பெண்ணிடம் சஞ்சீவ் ஜெயின் குழைந்து பேசுவது போல் அவருக்குப் பட்டது. அவளுக்கு அது பெருமையாக இருந்தாலும், அவள் சின்னப் பெண்.  பத்மா சஞ்ஜீவ் ஜெயின் அறையிலிருந்த அவரது போனிலிருந்து வாரம் ஒரு முறை காகிநாடாவிலிருக்கும் வீட்டுக்குப் போன் பண்ணிக் கொண்டிருந்தாள்.  அவருடைய அலுவலக போனில் மட்டும்தான் எஸ்.டி.டி (தொலைதூர போன் வசதி) இருந்தது.  ஓசியில் வீட்டுக்குப் போன் செய்வது அவளுக்கு வசதிகாக இருந்தது.  வாழ்க்கையில் எதுவும் ஓசியாகக் கிடைப்பதில்லை என்பது அவளுக்குப் பின்னாளில் புரிந்தது.

அதிகாரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது பிரிவு அதிகாரிக்குத் தெரியும். இதில் ஏதோ இருக்கிறது என்று அவர் புரிந்து கொண்டார்.  அந்தப் பெண் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கூட ஆகவில்லை. இருபத்தி மூன்று இருபத்தி நான்கு வயதிருக்கும். பிரிவு அதிகாரி முப்பத்தைந்து வயதானவர்.  அவளிடம் தன் சந்தேகத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அவளை எச்சரிக்க விரும்பியும் அதைச் செய்ய முடியவில்லை. அவள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ளக் கூடும்.  ஒரு இளம்ஆண் ஒரு இளம்பெண்ணிடம் சகஜமாக இதுமாதிரி விஷயங்களைப் பேசுவது நாகரீகமாக இருக்காது.  அவர் பிரிவில் இருந்த இரண்டு பெண்கள், திருமதி கோஷ், வனிதா, இருவருக்கும் வீட்டு வேலைகள், அலுவலக வேலைகளைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. 

அவர் என்ன நினைத்தாரோ அது நடக்கத் தொடங்கிவிட்டது. சிறிய ஊரிலிருந்து வந்த இளம்பெண்ணுக்கு அந்த மேலதிகாரியின் ஆடம்பரம், பகட்டு, பிடித்துப் போய்விட்டதோ?  மேலதிகாரியின் டிரைவராக இருந்த பவன் சிங், ஒரு நாள் அலுவலக வாயிலில் பார்த்த போது சொன்னார் ‘அவள் அவருடைய வேலையில் சிக்கிக் கொண்டாள்’.  அது வேலையைப் பற்றியது மட்டுமல்ல என்று இருவருக்கும் தெரிந்தது. ஆஃபிஸ் வாயிலில் அதற்கு மேல் பேச முடியாது. பவன் சிங்கின் குரலில் கவலையும் கேலியும் சேர்ந்தே ஒலித்தது. 

ஒருநாள் பத்மா, வெகு வேகமாகப் பிரிவுக்குள் வந்து தன்னுடைய நாற்காலியில் பதறிப் போய் படக்கென்று விழுவது போல் உட்காருவதற்குள்   குலுங்கி அழத் தொடங்கியதை அடுத்த நாற்காலியிலிருந்து பார்த்த  சோமன், தன் அருகிலிருந்த சீனியரான ’காயத்ரி கோஷிடம்  ஜாடையாகச் சுட்டிக் காட்டியதும் அவர் பதறிப் போய் எழுந்து, மற்றவர்கள் கவனிக்காத வகையில் அவளிடம் சென்று அவளை அணைத்தபடி கூட்டிக் கொண்டு வெளியே போய்விட்டார்.  அவரை விட்டு ஐந்தடி தூரத்தில் நடந்த இதையெல்லாம் வேலையில் தீவிரமாக இருந்த பிரிவு அதிகாரியோ மற்றவர்களோ கவனிக்கவில்லை. சோமனும் சொல்லவில்லை. இதெற்கெல்லாம் என்ன அர்த்தம், அதன் விளைவுகள் என்ன என்று புரிந்தவன். 

—–

அடுத்த நாள் பத்மா அலுவலகத்துக்கு வரவில்லை. ’ஏன் வரவில்லை. போன் ஏதாவது வந்ததா?’ என்று பிரிவு அதிகாரி கேட்டார்.  காயத்ரி கோஷ் ‘நேற்று அவளுக்கு உடம்பு சரியில்லை.  ஏதாவது இருக்கும்’ என்று சொல்லிச் சமாளித்தாள். ’விடுப்பு வேண்டுமென்றால், பிரிவு அதிகாரியிடம் காலையில் போனில் அனுமதி பெற்றுக் கொள்’ என்று நாளைக்கு அவளிடம் சொல்ல வேண்டும்’. சோமனும் கோஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அலுவலகத்தில் எல்லோர் முன்னாலும் விவாதிக்க முடியாத விஷயம் இது.  பேசத் தொடங்கினால், பத்மாவின் பெயர் கெடும்.  காயத்ரி கோஷின் சர்வீஸில் இதுவரை இப்படிக் கேள்விப்பட்டது இல்லை.  ஒரு வேளை பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அமைதியாக இருந்து விடுவதனால் ‘கேள்விப்படாமல்’ போய்விடுகிறோமோ? என்று அவளுக்குத் தோன்றியது.  அலுவலக வேலைகளுக்கிடையே, இதை எப்படி எதிர்கொள்வது என்று நடுநடுவில் யோசித்தாள்.  அந்தப் பெண்ணுக்கு இருபத்தி ஐந்து கூட இருக்காது. மனதளவில் பெரும்பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.  சோமன் சொன்னான் ‘படே சாஹப் வந்திருக்கிறார்’. 

இரண்டு நாள்கள் கழித்து பத்மா அலுவலகம் வந்தாள். அவள் நடையிலிருந்த தளர்ச்சியும் முகத்திலிருந்த வருத்தமும், கண்களில் இருந்த கலக்கமும் பயமும் காயத்ரி கோஷைக் கலங்கடித்தது. ’ஒன்றும் நடக்கவில்லை. தைரியமாக இரு. பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவளருகில் போய் சொன்னாள். ஆனாலும் உடனடியாக என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. பிரிவு அதிகாரி ஆணாக இருப்பதால் அவரிடம் பேசத் தயங்கினாள்.  மேலும் அவருக்கு நடந்த விஷயம் இன்னும் தெரியவில்லை. அவரிடம் சொன்னால் அது அலுவலகம் முழுவதும் பரவிவிடக் கூடும்.  

இன்னொரு இணை இயக்குனராக இருந்த மேடம் நிவேதிதாவிடம் போய் யோசனை கேட்கலாம் என்று காயத்ரி கோஷ் கிளம்பினாள்.  அதிர்ஷ்டவசமாக நிவேதிதா தன்னுடைய அறையில் தனியாக இருந்தாள்.  ’மேடம், கொஞ்சம் தனியாக உங்களிடம் பேச வேண்டும்’ என்றதும் நிவேதிதாவுக்கு வியப்பாக இருந்தது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டாள். ’உங்களிடம் மட்டும்தான் பேச முடியும்.’ காயத்ரி கோஷ்  பத்மாவிடம் சஞ்சீவ் ஜெயின் பாலியல் சீண்டல் செய்ததையும் அதனால் பத்மா மிகவும் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் இருப்பதையும் சொன்னாள்.  ‘என்ன செய்யலாம், மேடம்?’ என்று கேட்டாள்.  

நிவேதிதா ‘நான் பாலியல் சீண்டல்களை விசாரிக்கும் கமிட்டியில் இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டாள். காயத்ரி கோஷுக்குத் தெரியாது.  ‘இதில் என்ன பிரச்சனை என்றால், முதலில் பத்மா கம்ப்லெயிண்ட் கொடுக்க வேண்டும்.  கம்ப்லெயிண்ட் கொடுத்தபின் விசாரணை தொடங்க வேண்டும். இந்த அலுவலகத்தில் நான் ஐந்து ஆண்டுகளாக அந்தக் கமிட்டியில் இருக்கிறேன். போன வருடம்தான் கமிட்டியை மீண்டும் அமைத்து, அதில் நான், சந்தீப் அரோரா, ஆர்.கே குப்தா மூன்று பேர் உறுப்பினர்கள் ஆனோம். சந்தீப் ஏற்கனவே இந்த விஷயத்தில் பேர் பெற்றவர். அவரைப் பற்றியே பல கதைகள் இருக்கின்றன.  அவரிடம் போனால் அப்படியே அமுக்கிவிடுவார். நான் இந்த விஷயத்தை கமிட்டியில் முன் வைத்தால், பிறகு கமிட்டியின் நடுவு நிலைமை பாதிக்கும் என்று அவர் சொல்லாம். அதனால், நான் நடுநிலை வகிப்பவள் அல்ல என்று எனக்குக் கெட்ட பெயர் ஏற்படக் கூடும். பெண்கள் கூட்டுச் சேர்ந்து விட்டார்கள் என்று இதையே சாக்காக வைத்து சஞ்ஜீவ் ஜெயின் குற்றமற்றவர் என்று சொல்லக் கூடும்.  குழப்பம் ஏற்படும்.. எனவே முதலில் ஆர். கே குப்தாவிடம் போனால், அவர் மூலம் கமிட்டிக்கு முறையீடு வந்தால் நான் அதில் நடு நிலைமை வகிப்பதாக ஆகிவிடும். அப்படிச் செய்யுங்கள்.’ என்றார். 

காயத்ரி கோஷ் தொடர்ந்து சொன்னாள் ‘சஞ்ஜீவ் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிமையான அதிகாரியாக இருக்கிறார். அவர் இப்படிச் செய்வாரா என்பது எனக்கே வியப்பாக இருக்கிறது.  இன்னும் எங்கள் பிரிவு அதிகாரிக்குக் கூடத் தெரியாது. அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? ஒவ்வொரு ஆணும் என்ன நினைப்பார்? என்று கற்பனைதான் செய்ய முடியும்’

’அது சரிதான். இந்த விஷயத்தில் யார் எப்படி என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. பிறகு, நிகழ்ந்தது உண்மை என்று கருதுகிறவர்கள் கூட நமக்கெதுக்க்கு வம்பு என்று ஒதுங்க விரும்பலாம்.  இன்னும் சிலர், அலுவலகத்தில் தங்கள் பெயர் எதிலும் வந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருப்பார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதில் வேறுபாடு இல்லை. அவர்களுக்கு அதிகாரிகளிடம் எப்போது நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற கரிசனம்,  தங்கள் பதவியுயர்வுகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் எப்போதும் இருக்கும். நிறையப் பேருக்குத் தெரியாமல் இருப்பது நல்லது. பத்மாவின் பெயரும் கெட்டுப் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விஷயம் வெளியே வராமல் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை.  ஆனால் நியாயம் கிடைத்தாலும், பாதிக்கப்பட்ட பத்மா மற்றவர்கள் பார்வையில் குற்றவாளியாகவே இருப்பாள். இந்தச் சிக்கலையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  எதற்கும், பத்மாவிடம் ஒரு கம்ப்லெயிண்ட் எழுதிக் கொண்டு போய் ஆர்.கே குப்தாவிடம் கொடுக்கச் சொல்லுங்கள்.  பிறகு என்னிடம் சொன்னால், நான் அவரிடம் தகவல் கேட்பது போல் கேட்டுக் கொள்கிறேன்.’ நிவேதிதா பேசியது காயத்ரிக்கு நியாயமாகவே பட்டது. 

’பத்மாவிடம் நடந்ததை எழுதித் தா’ என்று சொல்லி மூன்று நாட்கள் ஆகியும் அவள் எழுதிக் கொடுக்கவில்லை.  காயத்ரிக்கே தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் தவறு செய்தவரைத் தண்டிக்க வேண்டும், குறைந்தபட்சம் அந்த ஆள் மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்ற கோபம்.  பத்மா கோபப்பட்டாலும், ஒருமுறை அவமானப்பட்டபின், விசாரணை அது இது என்று இன்னும் பலமுறை அவமானப் படவேண்டுமா என்று யோசித்தாள். அவளுடைய வீட்டில் அவளுக்கு டெல்லியைச் சேர்ந்தவரை மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார்கள்.  பத்மா வீட்டில் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை.  இன்னும் குழப்பம் அதிகமாகிவிடும் என்று பயந்தாள். இப்படிப் பல நாள் குழம்பிக் கொண்டிருந்தாள்.  ‘நாட்கள் அதிகமாக அதிகமாக, இது வேண்டுமென்றே செய்யப்பட்ட கம்ப்லெயிண்ட் என்று திரிக்கப்பட்டுவிடும்’ என்று காயத்ரி கோஷ் அவளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள். 

‘சுப்ரீம் கோர்ட்டில், விஷாகா தீர்ப்பு வழங்கிவிட்டாலும், நேரடிக் களத்தில் இதுமாதிரி விஷயங்களை எதிர்கொள்வது கடினமானது.  எதற்கெடுத்தாலும் பெண்களைக் குறைசொல்லும் நம் நாட்டு மனிதார்களிடம், நீதியை என்ன, அனுதாபத்தைக் கூடப் பெறமுடியாது’ என்று காயத்ரி கோஷ் நினைத்தாள்.  இந்த விஷயத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்று தினமும் யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்.  

‘என்ன ரொம்ப யோசித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கணவர் கேட்டதும் தான் காயத்ரி கோஷ் தன்நினைக்கு வந்தாள். ’தேநீர் ஆறிவிட்டது’ என்று டீ பாயில் இருந்த கப்பைக் காட்டினார்.  தான் பத்மாவை நினைத்துக் கொண்டிருந்தது அப்போதுதான் அவளுக்கே தெரிந்தது. ‘எங்க ஆஃபீஸப் பத்தி நினைத்துக் கொண்டிருந்தேன். அதான்.’ மிஸ்டர் கோஷ் கேட்டார் கேட்டார் ‘அப்படி ஏதாவது சீரியஸான விஷயமா?’ காயத்ரி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அடுக்களையில் இருந்த வேலைக்காரப் பெண்ணை அழைத்து, ‘இந்த டீ ஆறிவிட்டது. திரும்பச் சூடு பண்ணிக் கொண்டா’ என்றாள். 

பிறகு தன கணவரிடம் பேசத் தொடங்கினாள். அவள் பத்மாவின் நிலையைச் சொல்லி முடித்ததும், கணவர் சொன்னார் ‘இது மாதிரி எங்கள் பள்ளியிலும் ஒரு கேஸ் நடந்தது. ஒரு காமர்ஸ் பி.ஜி டீச்சர், சுனில் மிட்டல், ஒரு பெண் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அது பெரிய விஷயமாகிவிட்டது. சுனில் கடைசிவரை நான் அப்படியெல்லாம் பேசவில்லை, நடந்து கொள்ளவும் இல்லை, என்று சாதித்தார். ஆனால் அந்தப் பெண் மாணவி அவர் பேசுவதை தன் செல் போனில் பதிந்து வைத்திருந்தார்.  அவர் அந்தப் பெண்ணை ஏதோ மாலுக்கு (பெரியகடை வளாகம்) வரச்சொன்னார்.  ஒரு முன் ஏற்பாடுடன் அவளும் போனாள்.  அதை அவளுடன் பயிலும் மாணவன் விடியோ எடுத்தான். பிறகு, பள்ளியில் அதைக் கொடுத்தார்கள்.  போலீஸ் கேஸ் ஆகிவிட்டது’

’பிறகு என்ன ஆச்சு?’

‘அது பெரிய கதை. ஒரு பெண் போலீஸுடன் வந்த போலீஸ்காரரும் அதை மிக நேர்த்தியாக விசாரித்தார்.   கேஸ் கொடுக்கும் போது பெற்றோர்களை சம்பந்தப்படுத்த வேண்டியதாகிவிட்டது.  அவர்கள் ஏழைகள். கேஸ், கோர்ட் என்று அலைந்தால், தங்கள் குழந்தையின் பெயர் கெட்டுவிடும், திருமணம் முடிக்க முடியாது என்று சொல்லி போலீஸ் கேஸ் வேண்டாம் என்று சாதித்து விட்டார்கள்.  நாங்கள் எவ்வளவோ சொன்னோம். போலீஸ்காரர்களும் சொன்னார்கள். இரண்டு பேருக்கு இப்படித் தண்டனை கொடுத்தால்தான் மற்றவர்களும் சரியாவார்கள். ஆனால் சுனில் வேலையை ரிசைன் பண்ணிவிட்டான். வேறு பிரைவேட் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.” என்று முடித்தார். 

                                                   *

காலையிலிருந்து பத்மா பதட்டத்தில் இருந்தாள்.  எதையோ கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்தாள்.  காயத்ரி கோஷ் அவளருகில் சென்று, ‘போவோமா?’ என்று கேட்டாள்.  ‘இதை முடித்துவிட்டுப் போவோம்’ என்றாள். பத்மா மனதில் பிறகு என்னென்ன நடக்கும் என்று கற்பனைச் செய்து கொண்டிருந்தாள். பதட்டம் அதிகமானதில் கவனம் சிதறி, தவறுகள் அதிகமாக வந்தன.  கொஞ்சம் நிறுத்தி, பிறகு தொடர்ந்தாள். ஒருவழியாக பிரிண்ட் அவுட்டை பிரிவு அதிகாரியிடம் கொடுத்துவிட்டு கோஷிடம் போனாள். இருவரும் ஆ.கே குப்தாவிடம் கம்ப்லெயிண்ட் கொடுக்கச் சென்றனர். 

மூன்றாவது தளத்தில் ஆர்.கே.குப்தா, எக்ஸிகியூடிவ் என்ற பெயர்ப் பலகையைக் கண்டதும், சற்றுத் தயங்கி நின்றனர். வெளியே பியூன் யாரும் இல்லை.  காயத்ரி கோஷ், லேசாகக் தட்டிவிட்டுக் கதவைத் திறந்தாள். நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அவர் நிமிர்ந்து பார்த்தார்.  அவருக்கு எதிரே இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர்.  அவர்களும் இந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.’என்ன?’ என்று கேட்டார் ஆர்.கே குப்தா.  ‘சார், உங்களைப் பார்க்க வேண்டும்’ என்றார் கோஷ். ‘கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து வாருங்கள்’.

காயத்ரி கோஷும், பத்மாவும் வெளியே காரிடரில் நின்று கொண்டிருந்த போது, பத்மாவுக்கும் எல்லோரும் தங்களையே பார்ப்பது போலிருந்தது. கொஞ்ச நேரத்தில் அவரிடம் பேசிக் கொண்டிருந்த இருவர் வெளியே வந்ததும்,  இவர்கள் உள்ளே போனார்கள். 

’என்ன விஷயம்?’

‘சார், ஒரு அப்ளிகேஷன்’ என்று சொல்லிவிட்டு, காயத்ரி கோஷ் பத்மாவின் கையிலிருந்த தாளை வாங்கி, அவரிடம் நீட்டினார்

ஆர்.கே குப்தா, அதைக் கொஞ்ச நேரம் அமைதியாகப் படித்தார். பிறகு ‘இந்தப் பெண் தானா?’ என்று கேட்டார். இருவரும் ஆமாம் என்பது போல் தலையசைத்தனர். படித்து முடித்தபின் மீண்டும் ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்தார். அவர் புருவங்கள் உயர்ந்து, முகம் சுருங்கியது. வேண்டாத வேலை ஒன்று செய்ய வேண்டியிருக்கிறதே என்றிருந்தது அவர் முக பாவனை.  ’சரி கொடுத்துவிட்டுப் போங்கள். என்ன செய்யவதென்று பார்க்கிறேன்’ என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். 

அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் ஓடி விட்டன. ஒன்றும் நடக்கவில்லை. காயத்ரி கோஷ் அவ்வப்போது பத்மாவிடம் கேட்பாள் ‘ஏதாவது தகவல் வந்ததா?’ முறையீடு கொடுத்தவரைக் கூப்பிட்டு ஏதாவது கேட்டால்தானே தெரியும்.  இப்படிக் கமுக்கமாக இருக்கிறாரே? ஏதாவது கேட்டால், பிஸி என்று சொல்லிவிடுவார்.  இந்த ஆஃபீஸர்களைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். சொந்த வேலை என்றால், எந்த ராத்திரியிலும், தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களை விரட்டி விரட்டி வேலை வாங்குவார்கள்.  

ஒருநாள் காயத்ரி கோஷ், பத்மாவைக் கூட்டிக் கொண்டு, நிவேதிதாவிடம் சென்றாள். ‘மேடம், கம்ப்லெயிண்ட் கொடுத்து மூன்று மாதங்கள் ஆகின்றன. அவர் ஒன்று செய்யவில்லை போலிருக்கிறது. குறைந்தது, பத்மாவைக் கூப்பிட்டு என்ன நடந்தது என்றாவது கேட்டிருக்கலாம். கமுக்கமாக இருக்கிறார்’. 

‘இவர மட்டுமல்ல, இதுவரை இந்தக் கமிட்டியில் இருந்த ஆண் ஆஃபீஸர்கள் எல்லோருமே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.  எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்!. எல்லாம் கூட்டுக் களவாணிகள். அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு முன்னாலேயே, ஆர்.கே குப்தாவை இண்டர்காமில் தொடர்பு கொண்டாள்.

‘பத்மான்னு ஒரு பொண்ணு ஒரு கம்ப்லெயிண்ட் கொடுத்ததாமே?’

ரொம்ப நேரம் ‘உம்ம்ம்ம்ம்ம்’ என்று சத்தத்துடன் யோசித்த பிறகு, ‘ஆமா ஞாபகம் வந்திருச்சு. அதைப் பாக்கணும்.  இப்ப ரொம்ப அவசரமா மந்திரி ஒரு டென்டரை முடிக்கணும்னு ஆர்டர் போட்டுடிருக்கார். ரொம்ப பிஸியா இருக்கேன். கொஞ்சம் ஃப்ரீ ஆனதும் நானே ரிங் பண்றேன்’ என்று சொல்லிப் போனை வைத்துவிட்டார்.  

நிவேதிதா ‘அந்தப் பேப்பரை எடுத்துச் மேஜைக்கு அடியில வைத்திருப்பார். நான் திரும்பவும் அவரிடம் கேட்கிறேன்.  என்ன செய்வது? இந்த மாதிரி ஆட்களைத்தான் இந்தக் கமிட்டியில் போடறாங்க.  எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். இருந்தாலும் மத்த ரண்டு ஆஃபீஸர்கள் கூட வேலை பார்க்க வேண்டியிருக்கே. கொஞ்சம் ஒத்துழைச்சாத்தான், மூன்று பேரும் ஒரே கருத்தைச் சொல்ல முடியும். மூன்று பேரும் ஒரே கருத்தைச் சொன்னால், மேலதிகாரிகள் சீக்கிரம் ஆக்‌ஷன் எடுப்பாங்க.  நானும் டிரை பண்றேன். நீங்களும் ஒரு பதினைந்து நாள்கள் கழித்து வாங்க.  ஏதாவது அடுத்த ஸ்டெப் எடுக்க முடியுதான்னு பார்ப்போம். என்ன செய்றது கவர்மண்ட் வேலை மெல்ல நடக்குது’  என்று சொன்னாள். இருவரும் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.   

 இப்படியே பல மாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இதனிடையில் பத்மாவைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை அவளை அலுவலகத்திலேயே பார்க்க வந்தார்.  பேங்கில் வேலை. இருவருக்கும் பிடித்துவிட்டது. ஆள் பத்மா எதிர்பார்த்தபடியே உயரமாக லட்சணமாக இருந்தார்.  பத்மா வீட்டுக்கும் கடிதம் எழுதினாள்.  அவளுடைய அப்பாவும் அம்மாவும் திருமணத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டனர். மாப்பிள்ளை அடிக்கடி பத்மாவுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். வெகு மும்முரமாக வேலைகள் நடந்தன. மாப்பிள்ளையின் பெற்றோர்கள் அவளையும் அவளுடைய பெற்றோர்களையும் சந்தித்தனர். நிச்சயதார்த்தம் காக்கிநாடாவில் நடக்கவிருந்தது.

இதனிடையில் கமிட்டியின் விசாரணை தொடங்கிவிட்டது.  பத்மா இரண்டு முறை விசாரணைக் கமிட்டியில் சாட்சி சொன்னாள்.  சஞ்சீவ் ஜெயின் பத்மா அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளையெல்லாம் முற்றிலும் மறுத்தார். சாட்சிகள் ஏதுமில்லை என்று சுட்டிக் காட்டினார்.  விசாரணை தொடர்ந்து நடந்தது.  

அந்தக் காலகட்டத்தில் திடீரென்று மாப்பிள்ளையிடமிருந்து போன் வருவது நின்றுவிட்டது.  பத்மா இருமுறை போனில் அழைத்தாள். முதல் முறை எடுக்கவில்லை. இரண்டாவது காலில் ‘என்கேஜ் டோன்’ வந்தது. இப்படிப் பலமுறை நடந்தது. அவளுக்கே வெறுப்பாகிவிட்டது.  இந்தப் பெண் வேண்டாம் பொருத்தமில்லை என்று பத்மாவின் அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட்டார்கள்.  யாரோ இங்கே நடந்த விஷயத்தை மாப்பிள்ளையிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று பத்மாவிற்குச் சந்தேகம்..  அவர் அவள் நடத்தை கெட்ட பெண் என்று அவன் நினைத்திருக்கலாம்.  சொன்னது யாராக இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்த்தாள். சஞ்சீவ் ஜெயினாக இருக்கலாம், ஆர்.கே குப்தாவாக இருக்கலாம், அவர்களுடைய பியூன்களாக இருக்கலாம், அவளுடைய பிரிவில் வேலை பார்க்கும் ஒருவராக இருக்கலாம். அது மாப்பிள்ளைக்குத் தெரிந்தாலும்தான் என்ன? அவன் வேறுமாதிரி நடந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவள் குற்றவாளியா? அவன் அதைப்பற்றி யோசிக்கவே விரும்பவில்லை போலும். இப்படி ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணாமல் விட்டது நல்லது என்றே தோன்றியது.

 விசாரணை முடிய இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  நீண்ட நாள் போராட்டத்துக்குப் பின், அதிகாரி வேறு வழியில்லாமல் ‘சாரி’ சொன்னார். வேறு சிறு துரும்பு கூட அவர் மேல் படவில்லை.

இன்னும் பத்மா திருமணம் ஆகாமலேயே இருக்கிறாள். அவளுக்கும் வயது முப்பத்தி எட்டு ஆகிவிட்டது.  அவள் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் படர்ந்தே இருக்கிறது.  அதற்கு யார் காரணம் என்று அவளுக்கும் புரியவில்லை. 

வேலு இராஜகோபால்

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *