குழந்தைகள் தண்டோராவை தொடுவதும், தட்டுவதுமாய் இருந்தார்கள். வசந்தி குழந்தைகளைப் பார்த்து “கையி, கால வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாதா..? அதப்போயி நொட்டு நொட்டுனு தட்டிக்கிட்டு.. இப்ப போறிங்களா என்னவாம்.”என்று கையை ஓங்கினாள் .
அவளின் அரட்டலுக்குப் பயந்து மண்ணெண்ணெய் பட்ட எறும்புக்கூட்டம்போல குறுக்கு மறுக்காக களைந்த குழந்தைகள் கொஞ்ச தூரம் போயி நின்றுகொண்டார்கள்.
முப்டாரி அம்மனின் பொங்கலைப் சாட்டுவதற்கு தண்டோராவை மீண்டும் பரமன் அடிக்க ஆரம்பித்ததும் ,களைந்துபோன குழந்தைகள் மீண்டும் தண்டோராவை நோக்கி வந்தார்கள் .
“ஏய்.. உங்களுக்கு ஒரு தடவ சொன்னா அறிவு வராதா..? . திரும்பவும் வர்றிங்க… “என்று கையை ஓங்கினாள் வசந்தி .
எட்டப் போய் நின்ற குழந்தைகள் வசந்தியை மொறைத்துப் பார்த்தார்கள்.”என்ன மொறப்பு கண்ண நோண்டிடுவேன் “என்று சொன்னாள் வசந்தி.
பதிலுக்கு “என்ன மொறப்பு கண்ண நோண்டிடுவேன் “என்று குழந்தைகள் சொன்னதும் கோபமாக வீட்டுக்குள் எதையோ எடுக்கப்போனாள் வசந்தி. தன் அம்மாவை எதிர்த்து பதிலுக்கு பதிலு பேசியதை பார்த்து “எங்கம்மாகிட்ட வம்பா இளுக்கிறிங்க… நாளைக்கு பள்ளிக்கொடத்தில டீச்சர்ட்ட சொல்லி உங்கள அடிவாங்கி விடுறேன். முக்கியமா மணிமேகலையைத்தான் அடிவாங்கிவிடுவேன். “என்றாள் பத்மா.
“வெவ்.. வெவ்வா”என்றாள் நக்கலாக மணிமேகலை.
வீட்டுக்குள்ளிருந்து வசந்தி பளபளன்னு சீவி வைத்திருந்த மஞ்சனத்தி கம்புடன் வந்ததும் மாட்டின் வால்சுழட்டலுக்கு பயந்து பறந்தோடும் ஈக்களைப்போல குழந்தைகள் பறந்தார்கள் .
நின்ற இடத்திலிருந்து கொஞ்ச தூரம் ஓடிப்போய் நின்றுகொண்டாள் மணிமேகலை. அவள் பின்னாடியே ஓடி வந்த அவளது தங்கை வெண்ணிலாவும் -சில குழந்தைகளும் அவளுக்கு ஆதரவாக நின்றார்கள்.
கோபமாக கையில் வைத்திருந்த மஞ்சனத்தி கம்பால் வசந்தி ஓங்கினாள். பதிலுக்கு மணிமேகலை, வெத்துக் கையை ஓங்கினாள்.
” நேத்துப் பெறந்த நோனி. என்னவாப் பாத்து கை ஒங்குற..? கையில கெடச்ச ஒனக்கு இன்னைக்கு பெறந்த நாளு கொண்டாடிருவேன்”என்றாள் வசந்தி கோபத்தில்.
“எனக்கு பெறந்தநாளு இன்னைக்கு இல்ல. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு “என்றாள் நக்கலாக மணிமேகலை.
மணிமேகலையின் நக்கலைப் பார்த்து சிரித்தன பல குழந்தைகள் .
தன்னுடைய அம்மாவிடம் நக்கலாக பேசிக்கொண்டிருக்கும் மணிமேகலையைப் பார்த்து -ஏதாவது வையணும் போலிருந்த பத்மாவுக்கு, டக்கனு மணிமேகலை பட்டப்பெயர் ஞாபகம் வந்தது.
“போடி செத்தாட்டுக்கறி” என்றாள் மணிமேகலையை. மணிமேகலைக்கு என்னவோ போலிருந்தது. பதிலுக்கு “போடி சப்பமூக்கு” என்றாள். பத்மாவைப் பார்த்து மணிமேகலை. தன் அக்காவுடன் சேர்ந்துகொண்டு வெண்ணிலாவும் ‘சப்பமூக்கு ‘என்றாள்.
“எங்க வீட்ல நல்ல ஆட்டுக்கறிதான் எடுத்துத்திம்போம். உங்கள மாதிரி செத்தாட்டுக்கறி எடுத்துத் திங்கமாட்டோம்”என்று சொல்லிவிட்டு சில நொடிகளில்’வ்வோனு’ வாந்தி வருகிற மாதிரி ஓங்கறிச்சு சத்திமிட்டு “செத்தாட்டுக்கறிய நெனச்சாவே ஓங்கரிச்சு வாந்தி வருது.அதை எடுத்து எப்படித்தான் தின்னிங்களோ..! “என்று சொன்னாள் பத்மா.
மணிமேகலைக்கு அதற்குப்பிறகு பேச வாய் வரவில்லை. கண்ணீர்தான் வந்தது. அந்நேரம் மணிமேகலைக்கு வந்த கோபத்தில் -தன்னுடைய அம்மாவைத்தான் திட்டினாள்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, தன்னோடு ஆறாம் வகுப்பு படிக்கும் சுமதி வீட்டில் ஆட்டுக்கறிக்கொழம்பு இருப்பதைப் பார்த்துவிட்டு, ஆட்டுக்கறி நம்ம வீட்லயும் இன்னைக்கு வைக்கணும்னு மணிமேகலை திடீரெனு மொரண்டு பிடிக்க -அவளோடு சேர்ந்துகொண்டு அடம் பிடித்தால் வெண்ணிலாவும். “திடீரெனு இப்படி மொரண்டு பிடித்தால் ஆட்டுக்கறிக்கு எங்க போவேன்.ஆடிப்பொங்கலுக்குதான ஆட்டுக்கறி எடுத்தோம். அதுக்குள்ள என்ன ஆட்டுக்கறி கேக்குது உங்களுக்கு..?” என்றாள் அம்மா.
“சுமதி வீட்லெல்லாம் அடிக்கடி ஆட்டுக்கறி எடுக்குறாங்க. “என்றாள் மணிமேகலை.
“திடீரெனு அவங்க குதிரையில போவாங்க. அதுக்காக நாமளும் போகமுடியுமா.. ?வசதி இருக்கு அவங்க எடுப்பாங்க… “என்றாள் அம்மா. சிறிதுநொடி அமைதியாயிருந்த மணிமேகலையும் -வெண்ணிலாவும் “அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு ஆட்டுக்கறி வேணும் “என்று அடம் பிடித்தார்கள.
“ஒர்ராளு வேள செஞ்சு உங்களக் காப்பாத்ததான் முடியும்.அதுக்காக நீங்க கேக்குறப்பெல்லாம் ஆட்டுக்கறியா எடுத்துத் தரவா முடியும். ஆட்டுக்கறினு குண்டூசி வெலையா..? அது மல வெல..! ஆட்டுக்கறி எடுக்குற காச வச்சு நாளுநாளைக்கு பொழப்ப ஓட்டிடுவேன்” என்று வெளமெடுத்து பேசினாள்அம்மா. அம்மா என்னதான் பேசினாலும், மணிமேகலையும்-வெண்ணிலாவும் காதில் வாங்கவில்லை. சில நொடிகள் கடந்து “கோழிக்கறினா எடுத்துத்தாரேன் ..”என்றாள் அம்மா. திரும்பவும் ஆட்டுக்கறிதான் வேணும் என்று மொரண்டு பிடித்தார்கள் இருவரும். கோபத்தில்” ஏன்டி நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் .உங்களுக்கு காதுல ஏற மாட்டேங்குது .உங்களுக்கென்னா பைத்தியமா..? “என்று தாறுமாறாய் அடி பிடித்தாள். கொஞ்ச நேரம் கழிச்சு தகப்பன் இல்லாத புள்ளைகள இப்படி அடிச்சுப்போட்டோமே என்று வருத்தப்பட்டாள் .பிள்ளைகளை அடித்ததிற்கு பிராயசித்தமாய் ஆட்டுக்கறி வாங்க நல்லது பொல்லது திங்காம காசு சேர்த்து வைத்தாள்.
திடீரெனு ஓருநாளு ஆட்டு வியாபாரி ராமர் வீட்ல உடம்பு சரியில்லாம ஆடு ஒன்னு எறந்துபோச்சு. இந்த செய்தி எப்படியோ மணிமேகலை அம்மா காதுக்கு எட்டவும், ஆட்டுக்கறி எடுக்க ஓடினாள். செத்த ஆட்டுக்கறி எப்பவுமே பாதி வெலதான்.அம்மா ஆட்டுக்கறி எடுத்தது மணிமேகலைக்கும் -வெண்ணிலாவுக்கும் ஏகப்பட்ட சந்தோஷம் .
அன்று விளையாடுற எடத்தில பத்மாவுக்கும் மணிமேகலைக்கும் வாய்ச்சண்டை. செத்தாட்டுக்கறி விஷயம் தெரிந்த பத்மா “எங்க வீட்ல நல்ல ஆட்டுக்கறிதான் எடுப்போம். செத்த ஆட்டுக்கறி எடுக்கமாட்டோம்” என்றாள். அன்றிலிருந்து மணிமேகலைக்கு செத்தாட்டுக்கறினு பட்டப்பெயரு வந்திருச்சு.
இப்ப அந்த பட்டப்பெயரைச் சொல்லித்தான் மணிமேகலையை வாயடைத்தாள் பத்மா .குழந்தைகளின் சத்தத்துக்கிடையே “இப்ப போறிங்களா. உங்க வீட்ல வந்து சொல்லவா..? “என்றாள் வசந்தி.
.“எக்கா வாக்கா வீட்டுக்குப் போவோம்”என்றாள் வெண்ணிலா .
“நீங்க பரமேஸ்வரி மக்கதான…?வாயா அடிக்கிறிங்க. ..நாளைக்கு உங்காமகிட்ட சொல்றேன் “என்றாள் மணிமேகலை -வெண்ணிலாவைப் பார்த்து வசந்தி. வசந்தி அப்படிச் சொன்னதும் வெண்ணிலாவுக்கும் -மணிமேகலைக்கும் மனதுக்குள்ளே பயம் வரத் தொடங்கியது .
இரவு முழுதும் பெருத்த மழை பெய்ததாலும், மழை மேகம் இன்னும் கொஞ்சம் இருந்ததாலும் விடிந்தும் இருளாகவே இருந்தது வானம். வீட்டு வெளியே ஆள் நடமாட்டத்தால்தான் விடிந்துவிட்டது என்றே தெரிந்தது பரமேஸ்வரிக்கு. போர்வையை விலக்கிவிட்டு படுக்கையிலிருந்து அயற்சியில் எழுந்து கதவைத் திறந்தாள். குளிர்ந்த காற்றால் உடல் புல்லரித்தது. வாசல் ஸ்படிக பாசியாய் குளிர்ந்தது. தவளைசத்தம் ‘கிர்கிர்னு ‘காதைப் பிளந்தது.
அண்ணாந்து வானத்தை பார்த்தாள். எரியும் மெழுகுலிருந்து நழுவி விழுந்தை ஒற்றைத் துளியாய் நிலவு காட்சியளித்தது, நகரும் மேகங்களுக்கிடையே. ஆட்டுரலில் தேங்கிக்கிடந்த மழைத்தண்ணீரை அள்ளி முகத்தை கழுவி, வாய் கொப்பளித்தாள். அதனருகே இருந்த குத்து உரல் முக்கால்வாசி தண்ணியால் நிரம்பியிருந்தது. எப்போது அப்பா சொன்னதுதான் ஞாபகம் வந்தது-அதாவது குத்து உரலில் மழைத்துளி விழுந்து விழுந்து முக்கால்வாசி நிரம்பிவிட்டாலே -அது பெரிய மழைதான் என்று .
அப்பா சொன்னது மாதிரி பெரிய மழைதான் -அந்த ஆத்தா முப்டாரி புண்ணியத்துல பெரியமழைதான். அந்த ஆத்தாவுக்கு பொங்க வைக்க ஏதோ கொஞ்ச அரிசி தந்தேன் -அந்த அரிசிதான் மழையா மாறுவேஷம போட்டு பூமியில பேஞ்சிருக்கு. இனி கொஞ்ச நாளைக்கு பொழப்பைத்தேடி மிளகா வத்தல் கம்பெனிக்கு ஆவ்ஆவ்னு அரக்கபரக்க ஓடத் தேவையில்ல. கரிசக்காட்டுல நாலஞ்ச மாசம் வேல ஓடும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். மணிமேகலை தூக்கம் களைந்து பாயில் முழித்தாப்புலயே குளுருக்கு போர்வையை இறுக்கப் பொத்தி படுத்துக் கிடந்தாள் .
” அம்மா வேலைக்குப் போனப்பெறகு கம்மாக்கரைத்திக்கம் போயிரக்கூடாது. மழை பேஞ்சு கம்மாலாம் பெருகிக் கெடக்கு. யாராச்சும் உம்புள்ளக கம்மாக்கரை திக்கம் வந்தாங்குனு என் காதுல சொன்னாங்க… முதுகுத்தோல பிச்சுப்புடுவேன்.சரியா”என்றாள் பரமேஸ்வரி ,வெண்ணிலாவைப் பார்த்து. அதற்கு “சரிம்மா”என்றாள் வெண்ணிலா. அம்மா சொல்வதை காதில் வாங்காது மாதிரி படுத்துக் கிடந்தாள் மணிமேகலை.
மொதலெல்லாம் மூத்தவள் மணிமேகலையிட்டதான் எதுன்னாலும் அம்மா சொல்வாள் -இப்ப ஒரு மாசமா மணிமேகலனாலே பச்ச நாவி என்கிறாள் . ஒரு மாசத்துக்கு முன்னாடி மணிமேகலையோடு ஆறாம் வகுப்பு படிக்கிற கலாதேவி சடங்குக்கு ஆட்டுக்கறி சாப்பிடுகிற ஆசையில் மணிமேகலை போய்விட்டாள்.அன்றிலிருந்து ஒரே கோபம்- அம்மா பரமேஸ்வரிக்கு .
பத்திரிக்கையே கொடுக்காத வீட்டுக்கு சாப்பிடப்போனது மட்டுமில்லாமல் -மெத்தில வண்டு விழுந்த தட்டாம்பயரை வெயில் பட காயப்போட்டு போயிருந்தாள் பரமேஸ்வரி. அதையும் மழையில் நனைய விட்டுவிட்டாள் மணிமேகலை . அன்றைக்கு பரமேஸ்வரி வந்து மணிமேகலையையும்-வெண்ணிலாவையும் பத்திரிக்கை கொடுக்காத வீட்டுக்கு ஏன் போனிங்க..? என வெளுவெளுனு வெளுத்தாள். வெண்ணிலா, அக்காதான் என்னையும் கூப்பிட்டுப்போனாள் என்ற சொன்ன பிறகு ,மழையில பயற நனையப்போட்டு -இவளயும் கூட கூப்பிட்டுப்போயிருக்க என்று உடம்பெல்லாம் தடுப்பு, தடுப்பாய் விழும்வரை அடித்தாள்.
மணிமேகலை அழுகை சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டு இராமாயி கெழவி ஓடி வந்து, தடுத்து நிறுத்தி மணிமேகலையை தன்னோடு அழைத்துச் சென்றாள். ‘கலாதேவி நம்ம வீட்ல பத்திரிக்கை கொடுக்க சொல்லல போல அவ அம்மாகிட்ட.. சொல்லியிருந்தா நம்ம வீட்ல பத்திரிக்கை கொடுத்திருக்கும். கோவத்தில நம்ம அம்மாவும் அடிக்காம இருந்திருக்கும். ‘சடங்குக்கு பத்திரிக்க கொடுக்கச் சொல்லலேல.. இருக்கட்டும் பள்ளிக்கூட பரீட்சையில இனிமே எதுவும் எழுதிக்கோனு கலாதேவிக்கு காட்டக்கூடாது…
இனி நாம வயசுக்கு வந்தால் கலாதேவி வீட்ல பத்திரிக்கை கொடுக்கக் கூடாது…அது எப்படி படிப்புல, ஓட்டப்போட்டியில எனக்கு பின்னாடிதான கமலாதேவி வந்தாள். வயசுக்கு வர்றதில்ல மட்டும் எப்படி முன்னாடி வந்தாள் இப்படி ஏதேதோநினைப்போடியது மணிமேகலைக்கு .
ஓரு மாசமா பேசமா இருந்தவள் சில நொடிகளில் மனசு கேக்காமல் மணிமேகலையைப் பார்த்து “ஏய் ..நீயும் கம்மாத்திக்கம் போயிறாத.. “என்றாள் அம்மா பரமேஸ்வரி. அதற்கு “ம்”என்று மெல்லிய குரலில் சடவா பதில் சொன்னாள் மணிமேகலை.
வெண்ணிலாவைப் பார்த்து ஏதோ குசுகுசுனு பேசினாள் மணிமேகலை. டக்கனு கவனித்த அம்மா பரமேஸ்வரி . “என்ன ஏதோ குசுகுசுனு பேசுறிங்க..? “என்றாள் வேகமாக. “அக்கா அஞ்சு ரூவா கேக்கச்சொல்றாமா ஒங்கிட்ட” “என்றாள் வெண்ணிலா. “அஞ்சு ரூவா எதுக்குடி மாணங்கனியா…?”என்றாள் எரிச்சலாக அம்மா. “அக்கா மெழுகு கிளியாஞ்சட்டி வாங்கப்போறாளாம்”என்றாள் வெண்ணிலா. அப்போதுதான் கார்த்திகை மாதம் நெருங்கிருச்சு என்ற நினைவு அம்மாக்கு வந்தது.கார்த்திகை மாதம் நெருங்கிட்டாலே புள்ளைக வெளையாட்டுக்குத் தொணை கலர்கலரான மெழுகுவர்த்திதான்..!
இதெல்லாம் பரமேஸ்வரிக்கு தெரியாமலில்லை. ஆனாலும் வெண்ணிலா -மணிமேகலையைப் பார்த்து, கடையில பொறிகடல வாங்கத் துட்டு இல்லாம வத்தல அரச்சு தொவையலு வச்சுக்கிட்டிருக்கேன். உங்களுக்கு கிளியாஞ்சட்டி வாங்க அஞ்சு ரூவா வேணுமாக்கும்.பெரிய சீமயான் மகள்க..! வேணும்னு அம்பி, அம்பிசாபுக்கு மெழுகுவர்த்தி வாங்கிக்கிங்க. என்னால அம்புட்டுதான் முடியும். உங்கிஷ்டத்துக்கு என்னால கிளியாஞ்சட்டி வாங்கித்தர முடியாது. உங்களுக்கு விருதுநகர் மந்தையில போயி கைஎரிய வத்தலு ஆஞ்சுட்டு வந்து கஞ்சிதான் ஊத்த முடியும். நீங்க கைய நீட்டனதெல்லாம் வாங்கித்தர முடியாது “என்றாள் கோபமாக. திரும்பவும்”எம்மா அஞ்சு ரூவா தாம்மா”என்றாள் கெஞ்சலாக கேட்டாள் மணிமேகலை.
“ஆமா நீ நல்லபுள்ள. நீ கேட்டதும் காசு தந்தரணும்.முந்தாநேத்து வசந்தி பெரியம்மாவ ஏதோ வக்கணம் காட்டி கேலி பண்ணுணங்களாமுல்ல. தண்ணிக்கொழாயில உங்களப் பத்தி பெருமையாச் சொல்லுச்சு வசந்தி பெரியம்மா”என்றாள் அம்மா
இனி எதுவும் ஆவப்போவதில்லை என்று அமைதியாக இருந்தார்கள் வெண்ணிலாவும் -மணிமேகலையும்
அம்மா கிளியாஞ்சட்டி வாங்க துட்டுத் தரமாட்டேன்னதும் மணிமேகலைக்கு அழுகை வந்தது. “சரி வேலைக்கு கெளம்புறேன். கம்மாப் பக்கம் போகாதிங்க. பள்ளிக்கொடம் போயிட்டு வீட்டுக்கு வந்திருங்க. மழை பேஞ்சா நனையாதிங்க. சாப்பிட்டுப் போங்க “என்று சொல்லிக்கொண்டே வயர்கூடையை எடுத்துக்கொண்டு பஸ்ஸப் புடிக்க வேமா கெளம்பிப்போனாள் அம்மா .
அம்மா போனதுக்குப் பெறகு கோபத்தில் சாப்பிடக்கூடாது என்று நினைத்தாள் மணிமேகலை. சிறிதுநேரத்தில் வயிற்றுப்பசியால் முடிவை மாற்றிக்கொண்டாள்.நேத்துலிருந்து மணிமேகலைக்கு கொஞ்சம் வயிறு வலி இருந்ததால் அம்மா அரைத்துவைத்த வத்தல் துவையலை பார்த்தது கொஞ்சம் எரிச்சல் வந்தது. ஆனாலும் அந்த துவையலை வைத்துதான் மணிமேகலையும் ரசச்சோறு சாப்பிட்டாள்.
மணிமேகலை பள்ளிக்கூடம் போனதும், கம்மாயில் வந்திருக்கும் புதுத்தண்ணீரைப் பார்க்க கிளம்பினாள். அவள் பின்னாடியே சென்றார்கள் வகுப்புத்தோழிகள். சின்னக்கம்மாய் தண்ணீரால் நிறைந்திருந்து. ஊரின் கழிவுநீர், வேண்டாத குப்பை கூளங்கள் சின்னக்கம்மாயில் கலப்பதனால், பெரிய கம்மாய் அளவுக்கு மதிப்பில்லை சின்னக்கம்மாயிக்கு.
“சின்னக்கம்மாய்க்கே இவ்வளவு தண்ணி வந்திருக்கின்னா.. பெரிய கம்மாய்க்கு இதவிட ரெம்பத் தண்ணி வந்திருக்கும்..!”என்றாள் சுகன்யா. அதற்கு” ஆமா ரெம்பத் தண்ணி வந்திருக்கும் “என்றாள் கையை அகலகமாக வைத்து ஜெயப்பிரதா. மழை திரும்பவும் கொசுபோல லேசா தூறியது.
பேய்தம்மா பேய்தம்மா
பேய்மழைதான் பேயுதம்மா…
ஊசிபோல மின்னி மின்னி
ஊரெல்லாம் பேயுதம்மா…
பாசிபோல மின்னி மின்னி
பட்டணமெல்லம் பேயுதம்மா…
மாரியாத்தா கிருபையாலே
மண்ணெல்லாம் பேயுதம்மா..
காளியாத்தா கிருபையாலே
காடெல்லாம் பேயுதம்மா ..
என்று பாடினாள் சுகன்யா. அவளுக்கு பின்பாட்டு பாடினார்கள் மற்றவர்கள். மணிமேகலை மட்டும் உம்முனு வந்தாள். பெரிய கம்மாயை நெருங்க நெருங்க அவர்களுக்குள் உற்சாகம் கூடிக்கொண்டே வந்தது. ஒரே சமதளமாக தண்ணீர் வெண்ணிறத்தால் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது. பந்திக்கு மிகப்பெரிய தார்ப்பாய் விரித்தது போல இருந்தது. எத்தனையோ வருடங்களாக கம்மாய்க்குள் கிடக்கும் சிவன் சிலையும் லிங்கமும் முழுதாக மூழ்கியிருந்தது. தண்ணிமேலெல்லாம் இலைதழை, முள்கள் மிதந்தன. மகிழ்ச்சியில் ஓடிப்போய் தண்ணீரில் கை வைக்க துடித்தார்கள் குழந்தைகள்.
வெளிப்புற தண்ணியெல்லாம் கம்மாய்க்குள் இறங்குவதற்கு தெக்குப்புறம் சுவர் பகுதியில் கொஞ்ச இடைவெளி விட்டு சுவர் கட்டியிருந்தார்கள். அந்த இடைவெளியிலிருந்து தண்ணீரை குழந்தைகள் தொட்டு விளையாடினார்கள். தண்ணீர் ஐஸ்ஸாய் இருந்தது.
தெற்குப்புறம் எதிர்ப்பக்கம் குளித்துக்கொண்டிருந்த சில பெரிசுகள் குழந்தைகளைப் பார்த்து “ஏய் உள்ளகிள்ள விழுந்து தொலச்சுராதிங்க. இப்ப பள்ளிக்கொடம் போறிங்களா ..டீச்சர்கிட்ட வந்து சொல்லவா..? “என்று அதட்டினார்கள் “வ்வ்வ்வா”என்று எல்லாக் குழந்தைகளும் பெரிசுகளைப் பார்த்து சொன்னார்கள். “இப்ப போறிங்களா..? முதுகுல வந்து வைக்கவா..? “என்று ஒரு பெரிசு சத்தம் போட்டு ஓடி வந்ததும், எல்லாக் குழந்தைளும் தடாபுடானு ஓட்டம்பிடித்தார்கள். கொஞ்ச தூரம் தள்ளி வந்து வெரட்டி வந்த பெரிசு மாதிரி ஓடிக்காட்டினாள் பவித்ரா. அதைப் பார்த்து எல்லாக் குழந்தைகளும் சிரித்தார்கள். மணிமேகலையும் சிரித்தாள். ஆனால் அந்தச் சிரிப்பு கூமுட்டையாய் இருந்தது.!
வர்ற வழியில் தேங்காய் சிரட்டை ஒன்னு மழைக்கு நனைந்து கிடந்தது. அதை கையில் எடுத்த சுகன்யா “செரட்டைக்குள் மெழுகுவர்த்தியை பொருத்தி வைத்து தண்ணிக்குள் தீபம் விடலாம்ல” என்றாள். அதற்கு எல்லாக் குழந்தைகளும் ஆமா என்று தலையசைத்தார்கள் .
சாயங்காலம் கம்மாத்தண்ணியில செரட்டையில வச்சு தீபம்விட இந்தந்த கலர்ல மெழுவர்த்தி வாங்கப்போவதாக ஒவ்வொருவராக சொன்னார்கள். சுகன்யா மட்டும் கிளியாஞ்சட்டி வாங்கப்போவதாக சொன்னாள். அவள் அப்படிச் சொல்லியதும் மணிமேகலைக்கு சந்தோஷமாயிருந்தது.
செரட்டயை சாயங்காலம் எடுத்திக்கலாம் என்று வர்ற வழியிலயே போட்டுவந்தாள் சுகன்யா. மணிமேகலேக்கு வத்தல் தொவையல் தின்னதால் அதிகமாக வயிறு வலிப்பது மாதிரி இருந்தது.
“நீங்க பள்ளிக்கொடம் போய்க்கிட்டுருங்க எனக்கு வயிறு வலிக்குது”என்று வேலிக்குள் வேகமா போனாள் மணிமேகலை. சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும், வீட்டுக்குப் போயி பைக்கட்டைப் போட்டதும், பெருமாள் கோவில் அருகில் வந்து ஆர்வமாக நின்றாள் மணிமேகலை. தூரத்தில் சுகன்யா வருவதைப் பார்த்ததும் ,மணிமேகலை மனமெங்கும் மகழ்ச்சி.
கையில் வைத்திருந்த மெழுகு கிளியாஞ்சட்டியை காட்டினாள் சுகன்யா . அதை கையில் கொடு கொடு என்று கெஞ்சினாள் மணிமேகலை. நீண்ட நேர தவிப்புகளுக்கிடையே கிளியாஞ்சட்டியை கையில வாங்கினாள். நத்தையின் உணர்கொம்புகள் போல கிளியாஞ்சட்டி திரி நீட்டிக்கொண்டிருந்து. வெளெரெனு பருத்திச்சொலைய போலிருந்த மெழுகால் நிரப்பபட்டிருந்தது கிளியாஞ்சட்டி .சுற்றுப்பகுதி மேடுபள்ளம்வடிவில் வரிவரியாகிருந்தது. அதை மீண்டும் சுகன்யா கேட்கும்போது மணிமேகலைக்கு கொடுக்க மனமில்லை.
பெருமாள் கோவில் முன்னே தீபத்தை பற்ற வைத்தாள் சுகன்யா. பற்றியதும் தீயை இரசித்து இரசித்து அறுசுவை உணவுபோல தின்றது மெழுகுத்திரி. சிறிது காற்றடித்தாலும் உடனே கையை வைத்து மூடி தீபத்தை அமரவிடாமல் பார்த்துக்கொண்டாள் மணிமேகலை.
கொஞ்ச நேரத்தில் ஊதி அணைத்தாள் சுகன்யா.”எதுக்கு அமத்துன” என்றாள் மணிமேகலை. “தொடர்ந்து எரியவிட்ட வேமா காலியாப்போகும்ல”என்றாள் சுகன்யா. அதற்கு “ஆமா ஆமா… “என்றாள் மணிமேகலை.
திடீரென்று காலையில் தூக்கிப்போட்ட தேங்காய்ச்செரட்டை ஞாபகம் வந்தது சுகன்யாவுக்கு. கிளியாஞ்சட்டியை செரட்டையில் வைத்து தண்ணீரில் விடுவதற்கு பெரிய கம்மாயின் தெக்குப்புறம் சுவற்றோரம் வந்தார்கள் மணிமேகலையும் -சுகன்யாவும் . செரட்டையின் உட்புறம் குழந்தையை தொட்டிலுக்குள் வைப்பதுபோல வைத்து மெதுவாக தண்ணீரில் விட்டாள் சுகன்யா. காற்றுக்கு செரட்டை இங்கிட்டும் அங்கிட்டும் அசைந்தது. உள்ளே எரியும் தீபம் பெருங்குடிகாரனின் விரல்போல ஒரு நிலையில் இல்லாமல் ஆடியது. கொஞ்ச நேரத்தில் காற்றுக்கு பொசுக்குனு தீபம் அமந்துபோனது.
மணிமேகலைக்கும் -சுகன்யாவுக்கும் அமந்த தீபத்தைப் பார்த்து எப்படியோ போனது .அந்த செரட்டையை பக்கத்தில் இழுப்பதற்கு ஒரு பெரிய குச்சியைக்கொண்டு தாங்கள் இருக்கும் பக்கம் வாரி விட்டார்கள். அது கொஞ்சம் நகர்ந்து வந்தது.அதுக்குள்ளே எதிர்க்கரையிலிருந்த ஒரு பெரியவர் “இப்ப வீட்டுக்குப் போறிங்களா என்னவாயிருக்கு.. பொழுதுபோன நேரத்தில கம்மாப்பக்கம் வந்துக்கிட்டு “என்று அதட்டினார். அப்படியே குச்சியை போட்டுவிட்டு ஓடிவந்து விட்டார்கள்.
“வயிறு வலிக்கிறது மாதிரியிருக்கு வெளிக்கிருக்கப்போறேன். நீ வீட்டுக்குப் போ.பின்னாடி வாறேன்”என்றாள் மணிமேகலை.” சரி”என்று வீட்டுக்குப் புறப்பட்டாள் சுகன்யா.
வெளிக்குப் போய்விட்டு வீட்டுக்குப் போக மனமில்லாமல் கம்மாயைப்பார்த்தாள் மணிமேகலை. விறுவிறுவெனு கம்மாயை நோக்கி வந்தாள். அனாதைக் குழந்தையாய் தனியாக தள்ளாடிக் கொண்டிருந்து செரட்டை. குச்சியால் வாரினாள் தண்ணியை. சில நொடிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மணிமேகலையை நோக்கி செரட்டை வந்தது. நெருங்கி வரவர மணிமேகலை மனது பனியில் வளரும் மல்லிச்செடியாய் இருந்தது. செரட்டை பக்கத்தில் வந்ததும், மொண்டி போட்டு இடதுகையால் தடுப்புச்சுவரை பிடித்துக்கொண்டு செரட்டை இருக்கும் திசையை நோக்கி ஒருபுறம் சாய்ந்து வலது கையால் எடுக்க முற்பட்டாள் .செரட்டை தண்ணிக்குள் கொஞ்சம் தள்ளிப்போனது. அதை எடுக்க இன்னும் கொஞ்சம் மணிமேகலை ஒருபுறமாக சாய்ந்தாள். கவர்மெண்ட காண்ரக்ட்டில் கட்டியதால் சுவர் இயல்பாகவே ஆரக்கியமற்று இருந்தது.
இடது கை பற்றியிருந்து சுவரின் காரை திடீரென்று பிய்ந்ததால் தண்ணிக்குள் குப்புராக்க விழுந்தாள் மணிமேகலை, விழுந்த அதிர்ச்சியில் கைகால் புரியாமல் தத்தக்கா புத்தாக்கனு கைகால்களை அசைத்தாள். எவ்வளவு அசைத்தும் அவளால் தண்ணியைவிட்டு மேலே வரமுடியவில்லை. பாதிமொகம் தண்ணிக்குள் மொங்கி மூச்சு கிடைக்காமல் தெணறியது. நவதுவாரங்களிலும் விறுவிறுவெனு தண்ணீர் பாய்ந்தது. கண்கள் பயத்தால் பிதுங்கியது.யாரோ கழுத்தைப்பிடித்து நெருக்குவதுபோலிருந்து. கண்கள் எரிந்தது.கைகால்கள் உதைந்து உதைந்து வலுவிழந்தது. கொஞ்சநேரத்தில் அவளின் எல்லா இயக்கங்களுக்கும் இயற்கை கருப்புக்கொடி காட்டியது. இதுவரை தண்ணிக்குள் மேலிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கிப்போனாள் சிலையாக.
வேலையிலிருந்து வந்து ரெம்ப நேரமாகியும், மணிமேகலை வராததால் “அந்த ஊர்சுத்தி முண்ட எங்க போனா.. இன்னும் ஆளாக்காணோம்”என்றாள் கடுப்பில் அம்மா பரமேஸ்வரி. “அவ பள்ளிக்கொடம் போயிட்டு வந்ததுமே வவுறு வலிக்கிதுன்னு வேமா ஜட்டியை அவுத்துப் போட்டு வெளிக்கிருக்கப் போனா “என்றாள் வெண்ணிலா. அப்போதுதான் வத்தல் தொவையலு வச்சது தப்புனு தோணுச்சு அம்மாவுக்கு. காலையிலிருந்து ரெண்டு, மூனு தடவ வெளிக்குப் போயிட்டா.”என்றாள் வெண்ணிலா. பாவம் புள்ளைக்கு ரெம்ப வயிறு வலிக்குதுபோல. வரவும் ஓமத்தரம் வாங்கிக்கொடுக்கணும் என்று நினைத்துக்கொண்டே, மணிமேகலை அவுத்துப்போட்டுப் போன ஜட்டியை எடுத்து வெளிக்கிப்போயிருக்காளா என்று பெரட்டி பெரட்டி உற்றுப் பார்த்தாள் அம்மா பரமேஸ்வரி .ஜட்டியின் முன்பக்கம் பார்த்த நொடியில் மனது வேகமா அடித்தது. இது என்னது இரத்தந்தான..! இரத்தமேதான்..! அதுவும் பழக்கப்பட்ட இரத்தம். கண்டிப்பா நம்ம புள்ள பெரியபுள்ள ஆயிட்டா… ! அட தெய்வமே இது நெஜந்தானா..! என்று சந்தோஷத்தில் கைகால் புரியாமல் கண் கலங்கியது அம்மா பரமேஸ்வரிக்கு. உடனே மணிமேகலையை மொகத்தை பார்க்க வேண்டும் போலிருந்தது. முட்டையும் நல்லெண்ணயும் கலந்து மணிமேகலைக்கு கொடுக்கணும் போலிருந்தது. “வெண்ணிலா ஒங்கக்கா வயசுக்கு வந்துட்டாடி”என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டே வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து மணிமேகலையை தேடி புறப்பட்டாள் அம்மா . பின்னாடியே வெண்ணிலா ஓடினாள் அக்கா மணிமேகலையை பார்க்க ஆவலாக .