3.சொர்க்கம்

ரோஸ்லின் எப்படி இந்த தீவை தேடிக் கண்டுபிடித்தாள் என்பது எனக்கு வியப்பாக இருந்தது.  வேலைக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு எங்கள் வாழ்கையைக் கொண்டாட அவள் தேர்ந்தெடுத்த இடம்.  இப்படி ஒரு தீவு தேசம் வேறு யாருக்குமே தெரியாதது வியப்பளித்தது.  உலக வரைபடத்தில் இத்தீவு காணப்படவில்லை.  இணையத்தில் பொதுவாகத் தேடுபவர்களுக்கு இது பற்றிய விவரம் எளிதாக கிடைப்பதில்லை.  எப்படியோ என் தேவதை ரோஸ்லின் இதைக் கண்டுபித்தாள்.  சொர்க்கம் தேவதைகளின் கண்களில் மட்டுமே படும் அல்லவா?

உலகில் எத்தனையோ இயற்கை அழகு மிக்க தீவுகள் இருக்கின்றன.  இதில் மட்டும் அப்படியென்ன சிறப்பு என்று உங்களுக்குத் தோன்றலாம்.  நானும் அப்படித்தான் நினைத்தேன்.  ”நம்மில் நாம் திளைக்க.  நம் உலகை கண்டுபிடித்து விட்டேன்” என்று அவள் சொன்னபோது அவள் ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியளித்த போதும் கொஞ்சம் அலட்சியத்துடனே அதை எடுத்துக் கொண்டேன்.  அவள் பல வீடியோக் காட்சிகளை அடுத்தடுத்து காண்பித்துக் கொண்டே இருந்தாள்.  நம்பமாட்டீர்கள்.  இந்த இடங்கள் இந்த உலகில்தான் இருக்கின்றனவா என்று தோன்றியது.  மலைகளும், முகடுகளும், கடற்கரைகளும், முகில்களும், நீல வானும், நதிகளும், மலர்களும், மிக அழகிய தாவரங்களும், மகிழ்ச்சி நிறைந்த மனிதர்களின் அழகிய முகங்களும்.  இதெல்லாம் வேறு இடங்களில் இல்லாததா என்ன? என்று தோன்றலாம்.  இருக்கலாம் தான்.  ஆனால் இந்த தீவில் இருப்பது போல இல்லை என்பேன்.  என்னால் உங்களுக்கு சொற்களால் அதை விளக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை.  ஒன்று மட்டும் சொல்வேன்.  நீங்கள் இயற்கையின் அழகைப் பார்த்திருப்பீர்கள்.  செயற்கையின் அழகையும் பார்த்திருப்பீர்கள்.  இங்கு ஒவ்வொன்றுமே அதன் உச்சத்தில் இருப்பதாக தோன்றியது.  அவ்வளவுதான் சொல்ல முடியும்.

எங்கள் விமானம் அந்த தீவு தேசத்தை நோக்கி செல்ல எழுந்த போது ”இதோ முகில்களில் ஏறி சொர்க்கத்தில் சென்று இறங்கப்போகிறேன் என் பேரழகு தேவதையுடன்” என்று எண்ணம் எழுந்தது.  என் தேவதையின் அழகை வர்ணிக்க மாட்டேன்.  அவள் எனக்கு மட்டுமே உரியவள்.  அவள் அருகிருப்பு நரகத்தையும் சொர்க்கமாக மாற்றிவிடும்.  ஒருவேளை அவளது அழகின் மயக்கில் அவள் ஒவ்வொன்றையும் எப்படிக் காண்கிறாளோ அப்படியே நானும் காண்கிறேனா எல்லாவற்றையும் மிகைத்து கொள்கிறேனா என்று கூட தோன்றியது.  விமானத்தில் எங்களைப் போன்றே இளம் ஜோடிகளே பெரும்பாலும் நிறைந்திருந்தனர்.  அனைவருமே மகிழ்ச்சி உணர்வில் திளைத்தனர்.  அந்த பேரழகு தீவு நாட்டில் விமானம் தரை இறங்கியது.  நான் என் தேவதையின் இதழ்களைச் சுவைத்து விட்டு எழுந்து கொண்டேன்.

அந்த பேரழகு நாட்டில் என் ரோஸ்லினுடன் நாட்கள் போனதே தெரியவில்லை.  ஒவ்வொன்றும் சுவை.  ஒவ்வொன்றும் இனிமை.  சுவையற்ற உணவே இந்நாட்டில் கிடையாது, அழகற்ற எதுவும் இங்கு கிடையாது.  புலன்கள் ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய உச்ச தரம் வாய்ந்த விஷயங்களே இங்கு அளிக்கப்படுகிறது.  எனில் இந்நாடு எத்தகையது? இதன் மக்கள் எவ்வளவு திறன் மிக்கவர்கள்? இவர்கள் மனிதர்களே அல்ல தெய்வங்கள்தான்.  எப்போதும் சிரித்த முகத்துடன் மட்டுமே இருக்கும் மக்களை கொண்ட இதுபோன்ற ஒரு தேசத்தை நீங்கள் உலகில் வேறு எங்கு பார்க்க முடியும்?.  இத்தீவின் இருப்பே வெளியே இருக்கும் உலகின் கண்களுக்கு தெரியாமல் போனது இதனால்தானோ என்னவோ?

நான் ரோஸ்லினை மீளமீள அறிந்து கொண்டிருந்தேன்.  அவள் என்னுள் புகுந்தாடிக் கொண்டிருந்தாள.  இன்மதுவின் மயக்கில் அந்த சொர்க்கத்தின் மலைகளின் மீது அதன் உச்சிகளை, முகடுகளை மலர்களென முகர்ந்து வண்டுகள் என பறந்து கொண்டு திரிந்தோம்.

முப்பது நாட்கள் கழிந்தபின் எங்கள் அறையின் படுக்கையில் ரோஸ்லின் சொன்னாள்.  ”நினைவிருக்கிறதா இன்னும் பதினைந்து நாட்கள்தான்.  பின் நாம் ஊர் திருப்ப வேண்டும்.”

”ஆம் என் தேவதையே.”

ரோஸ்லினின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தில் சிறு மாறுதல் தென்பட்டது.  அவள் இங்கிருந்து திரும்பிச் செல்வது பற்றி கவலை கொண்டிருக்கிறாள் என்று எண்ணினேன்.

”இங்கே ஒரு விஷயம் கவனித்தீர்களா? ” என்று கேட்டாள்.

”என்ன?”

”இங்கு எல்லோரும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்.”

”ஓ.. அது தெரிந்தது தானே? எவ்வளவு இனிமையான மக்கள்? எவ்வளவு இனிமையான தேசம்”

”இல்லை.  அவர்கள் சிரிப்பு உண்மையானதாக இருப்பதாக எனக்குப் படவில்லை”

நான் வியப்படைந்தேன்.  பின் அவள் கரங்களை மெதுவாகப் பற்றி சொன்னேன் ”ரோஸ்லின் என் தேவதையே.  உனக்குத் தெரியும் நீ எது சொன்னாலும் எனக்கு அது அப்படியாகவே மாறிவிடும்.  என் கண்ணே இந்த இனிமையின் உலகில் கசப்பின் விதைகளை கற்பனையிலும் கொண்டு வராதே”

ரோஸ்லின் மௌனமாக என்னைத் தழுவிக் கொண்டாள்.

மறுநாள் நாங்கள் இன்மதுவை அருந்தவில்லை.  கைகள் கோர்த்துக் கொண்டு கடற்கரையிலும் எங்கள் விடுதி இருந்த ஊருக்குள்ளும் நீண்ட தூரம் நடந்தோம்.  வழியில் எங்களைப் போன்றே பல்வேறு தேசங்களில் இருந்து புதிதாக வந்த இளம் இணையர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.  சட்டென்று இத்தீவில் வந்திறங்கியபோது விமான நிலையத்தில் கண்ட வாசகம் நினைவில் தோன்றியது.  ”நாங்கள் வாழக் கற்றுத் தருகிறோம்.”  அது யார் வைத்திருந்த வாசகம்.  இந்நாட்டின் அரசாக இருக்கும்.  ஆம் உலகிற்கு கற்றுத் தரும் தகுதி இந்த தேசத்திற்கு மட்டுமே இருக்கிறது.

ஒரு கடையில் பழச்சாறு அருந்தியபோது புன்முறுவலுடன் எங்களை உபசரித்த அக்கடையின் சீன இணையரை கண்டேன்.  அந்த சீனப் பெண் எங்களுக்கு வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்டுவிட்டு மாறாத புன்னகையுடன் அன்பு தெரிவித்து நகர்ந்தாள்.

ரோஸ்லின் தன் தோளால் என் தோளை இடித்தாள்.  ”கவனித்தீர்களா? அந்த சிரிப்பும் கனிவும் நடிப்பு போல உங்களுக்குத் தோன்றவில்லையா?” என்றாள்.

”ரோஸ்லின்.  தயவு செய்து விட்டுவிடு.  அவர்கள் தங்கள் கடமையாக அப்படி நடிப்பாக நடந்துகொண்டாலும் இருக்கட்டுமே அதனால் என்ன தவறு? விமானப் பணிப்பெண்கள் பயணிகளிடம் இன்முகம் கட்டுவது அவர்கள் கடமை என்பதைப்போல இதுவும் இருக்கட்டுமே ? என் கனவைக் கலைத்து விடாதே…நாம் நம் நாட்டிற்கு சென்ற பிறகு இதை ஆராய்ந்து கொள்வோம்” என்றேன்.

பிறகு ரோஸ்லின் எதுவும் பேசவில்லை.  நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே எங்கள் விடுதியை நோக்கி நடந்தோம்.

வழியில் எங்கள் நாட்டைச் சேர்ந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவரைப் போல தோன்றிய ஒரு நடுவயதுக்காரர் எதிர்பட்டார்.  எங்களைப் பார்த்து ஒரு கணம் தயங்கி நின்றார்.  பின் எங்களை நோக்கி சில அடிகள் வந்தார்.  பிறகு மீண்டும் தயங்கி நின்று, ”இல்லை” என்பது போல தனக்குத் தானே தலையசைத்துக் கொண்டு திரும்பிச் சென்று விட்டார்.

———

எங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டிய நாள் வந்தது.  எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு அறையின் சாவியை விடுதியின் பெண்ணிடம் ஒப்படைத்தபோது நான் உற்சாகமாகவே இருந்தேன்.

”மீண்டும் வருவோம்” என்றேன்.

அந்த பெண் சிரித்து தலையசைத்தாள்.

ரோஸ்லின் எதுவும் பேசாமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாக நின்றாள்.  ஏனோ அவளைப் பார்க்க எனக்கு அச்சம் ஏற்பட்டது.

விடுதியிலிருந்து எங்களுக்காக முன்பதிவு செய்திருந்த டாக்ஸி வந்தது.  டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.  திடீரென்று ரோஸ்லினின் உதடுகள் நினைவுக்கு வர நான் திரும்பி அவளைப் பார்த்தேன்.  அவள் புன்னகைத்தாள்.

டாக்ஸி சென்று கொண்டே இருந்தது.  நகர்ப்புறம் கடந்து நெடுஞ்சாலையில் விரைந்தது.  மெலிதாக கண்ணயர்ந்து பின் விழித்தபோது நீண்ட நேரமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

”இதென்ன? விமான நிலையம் அவ்வளவு தொலைவா என்ன? நாங்கள் வரும்போது அப்படி இல்லையே?” என்று ஓட்டுனரிடம் கேட்டேன்.

அவன் எதுவும் பதில் சொல்லவில்லை.  நான் பதற்றடைந்தேன்.

”ஹலோ எங்கே செல்கிறீர்கள்.  விமானம் புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.”

இதற்கும் பதில் இல்லை.  கார் சென்று கொண்டே இருந்தது.

எனக்கு கோபம் வந்தது.  ”யார் நீ? என்ன செய்கிறாய்? நான் போலீஸை அழைப்பேன்” என்று கூச்சலிட்டேன்.  என் கைப்பேசியில் அதற்காக  அழைப்பது போல தேடி பாவனை செய்தேன்.  உண்மையில் அந்த நாட்டின் காவல் துறை உதவி அழைக்கும் எண் எதுவும் என்னிடம் இல்லை.  விடுதியில் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.  செய்யவில்லை.  விடுதியின் எண்ணுக்கு அழைக்க முயன்றேன்.  தொடர்பு கிடைக்கவில்லை.  இங்கிருந்து எங்களது நாட்டிற்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முடியுமா? அது முடியாவிட்டால் இணையத்தின் மூலம்? இணையம் இங்கு வேலை செய்யுமா?  எதுவும் புரியாது குழப்பமடைந்தேன்.  ரோஸ்லின் அச்சமடைந்தாள்.

”ஏய்…ஏய்…வண்டியை நிறுத்து” கத்தினேன்.

ஓட்டுனர் சொன்னான்.  ”வீணாக ஆர்பாட்டம் செய்ய வேண்டாம்.”

”எனில் நீ விமான நிலையத்திற்குச் செல்” என்றேன்.

”இந்த நாட்டிலிருந்து வெளியே செல்ல விமான நிலையம் இல்லை.”

இது என்ன பதில் என்று குழப்பமடைந்தேன்.

”விமான நிலையம் இல்லையா? நாங்கள் விமானத்தில் தான் இங்கு வந்தோம்”

”அது என்ட்ரி விமான நிலையம்.  இந்த நாட்டிற்குள் வருவதற்கானது.  இங்கு வெளிநாட்டிற்கு செல்ல எக்ஸிட் விமான நிலையம் இல்லை”

”ஏன் அப்படி?”

அவன் பதில் சொல்லவில்லை.  என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை.  விமான நிலையத்தை நினைவு கூர்ந்தேன்.  அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டுச் செல்வதைப் பார்த்தேனா? விமானங்களின் புறப்பாடு பற்றிய அறிவிப்புகள் எதுவும் கேட்டேனே? நினைவிற்கு வரவில்லை.

”எங்களை எங்குதான் அழைத்துச் செல்கிறாய்?”

”உங்களுக்குரிய இடத்திற்கு”

”எங்களுக்குரிய இடமா?.. எங்களுக்குரிய இடமா? நீ யார் அதை தீர்மானிப்பதற்கு?”

இதற்கும் அவன் பதில் சொல்லவில்லை.

மேலும் சற்று நேரம் கடற்கரையை ஒட்டிய நெடுஞ்சாலையில் கார் பயணித்தது.  கடலை ஒட்டிய சதுப்பு நிலங்கள் விரிந்து பரந்தவையாகத் தென்பட்டன.  இறுதியாக கடலின் அருகே அமைந்திருந்த ஒரு பெரும் கட்டிடத்தின் வாசலில் கார் நின்றது.  ஓட்டுனர் வெளியே இறங்கி எங்களை இறங்கச் சொன்னான்.  நாங்கள் இறங்கி எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்ட பிறகு கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.  ஒரு இணையர், சீருடை அணிந்தவர்கள், சிரித்த முகத்துடன் எங்கள் அருகே வந்தனர்.  அந்த பெண் அழகியவள்.  தன் கையில் ஒரு ரோஜா மலரை வைத்திருந்தாள்.  அதை அவள் ரோஸ்லினின் கைகளில் தந்தாள்.  அவளுடன் வந்த ஆண் என்னிடம் கைகுலுக்க கை நீட்டினான்.  நான் தயங்க அவன் என் கையை பற்றி குலுக்கினான்.

பிறகு அந்த பெண் சொன்னாள்.

”வாருங்கள்.  அதிர்ஷ்டசாலிகளே.  இந்த சொர்க்கத்தின் நிரந்தர குடிமக்களாக நீங்கள் ஆகிவிட்டீர்கள்.  மற்றொரு சிறப்பான பரிசாக நீங்கள் இந்த நாட்டின் அரசு ஊழியர்களாகவும் ஆகிவிட்டீர்கள்”

”அரசு ஊழியர்களா? நாங்கள் அப்படி எதுவும் கேட்கவில்லை.  நாங்கள் எங்கள் நாட்டிற்குச் செல்ல வேண்டும்.” என்றேன்.

”அதுதான் அதிர்ஷ்டம்.  நீங்கள் கேட்காமலே இந்த தகுதியைப் பெற்றுவிட்டீர்கள்” என்றாள்.  எங்கள் நாட்டிற்கு நாங்கள் செல்ல வேண்டும் என்று நான் சொன்னதற்கு மட்டும் அவள் பதில் சொல்லவில்லை.

”வாருங்கள்” என்று சொல்லி பின் தொடர்ந்து வருமாறு சைகையும் செய்து விட்டு மிடுக்குடன் நடந்து அந்த கட்டிடத்திற்குள் சென்றாள்.  அவளுடன் வந்த அந்த சீருடை ஆண் வேறுபக்கம் விலகிச் சென்றுவிட்டான்.

எனக்கு ஆத்திரம் வந்தது.  நான் கூச்சலிட்டுக் கொண்டே அவள் பின்னால் விரைந்தேன்.  அவள் பொருட்படுத்தவே இல்லை.  நான் என்னை நிதானப்படுத்திக் கொண்டேன்.  என் பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது.

”இவளை ரேப் செய்ய வேண்டும்” முணுமுணுத்தேன்.

”என்னை அப்படித்தான் செய்யப் போகிறார்கள் என்று தோன்றுகிறது” என்று ரோஸ்லின் சொல்ல அச்சத்தில் என் கால்கள் தடுமாறின.

அந்த பிரமாண்ட கட்டிடத்திற்குள் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண் அதிகாரியை மீண்டும் வேக நடையில் விரட்டிச் சென்று ”பாருங்கள்…மேடம்….நாங்கள் எங்கள் நாட்டிற்குச் செல்ல வேண்டும்” என்றேன்.  பதில் இல்லை.

அந்த கட்டிடத்தின் பின்னிருந்த வாசல் வழியே வெளிவந்த போது கடற்கரைக்கு வந்து விட்டோம்.  ஏராளமான சிறு கப்பல்கள், விசைப்படகுகள் அலைகளில் ஏறி இறங்கி செல்வதும் வருவதுமாக இருந்தன.  எங்களைப் போன்ற பல ஆண்களும் பெண்களும் அங்கு இருப்பதைக் கண்டோம்.  தனித்தனி குழுக்களாக பிரிந்து அவர்கள் வேவ்வேறு விசைப்படகுகளில் ஏறிச் சென்றார்கள்.  சில படகுகளிலிருந்து வேறு சிலர் இறங்கினார்கள்.

எங்களை அழைத்து சென்ற பெண் அதிகாரி நின்றாள்.  சீருடையில் எதிர் வந்து அவளை வணங்கி நின்ற வேறோரு ஆணைச் சுட்டி ”இவர் பில்.  இந்நாட்டின் முக்கிய பொறுப்பு மிக்க அரசு அதிகாரிகளுள் ஒருவர்.  இவர் உங்களை அழைத்து சென்று உங்கள் பொறுப்புகளைத் தெரிவிப்பார்.”

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  ரோஸ்லினின் முகத்தைப் பார்க்க எனக்குத் துணிவில்லை.  அந்த ஆள் சிரித்த முகத்துடன் கனிந்த பார்வையுடன் எங்களை பார்த்துவிட்டு வருமாறு சைகை செய்து அழைத்துச் சென்றார்.

பிறகு நாங்கள் ஒரு விசைப்படகில் கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம்.  இளம் இணையராக அதில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருந்தார்கள்.  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படகு ஒரு சிறிய தீவைச் சென்றடைந்தது.  கரை இறங்கிய உடன் அதிகாரி பில் எங்கள் குழுவை கடற்கரையில் நிறுத்தி சிறு உரை ஒன்றை நிகழ்தினார்.

”இந்நாட்டிற்கு வந்த நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்.  நானும் உங்களைப் போல இங்கு வந்தவனே.  இந்த நாட்டில் அனைவரும் அரசு ஊழியர்களே.  இந்நாடு சொர்க்கம்.  அதை நீங்கள் அனுபவத்தில் இந்நேரம் உணர்ந்திருப்பீர்கள்.  உங்களுக்கு கேள்வி எழும்.  ஏன் எங்கள் நாட்டிற்கு திரும்பச் செல்லமுடியவில்லை என.  அது நியாயமான கேள்விதான்.  பாருங்கள்.  சொர்கத்திற்கு வந்து மீண்டும் அதிலிருந்து வெளியேற விரும்புவது அறிவின்மை தானே?

எனக்கு சோர்வாகவும் குழப்பமாகம் இருந்தது.  இவர்கள் என்னதான் செய்கிறார்கள்.  மனதில் மெல்லிய சபலம் மீண்டும் தலை தூக்கியது.  ரோஸ்லினின் உதடுகளைப் பார்த்தேன்.

எங்கள் குழுவில் இருந்த ஒருவன் சொன்னான்.  ”இதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை.  நீங்கள் செய்வது அடாவடி.  சட்ட விரோதம்.  எங்கள் நாட்டிற்கு நீங்கள் இப்படியெல்லாம் செய்வது தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அதிகாரி சிரித்துவிட்டு மீண்டும் கனிவுடன் பார்த்தார்.  பின் சொன்னார்.  ”இது சட்ட விரோதம் அல்ல.  இது இந்த நாட்டின் சட்டம்.  இங்கிருந்து வெளியே செல்வதுதான் சட்ட விரோதம்.  உங்கள் நாடுகளுக்குத் தெரிந்தால் என்கிறீர்கள்.  உங்கள் நாடுகளுக்குத் தெரியும் தான்.  அதே சமயம் தெரியவும் தெரியாதுதான்”

க்க்கீ கீ கீ – தான் ஒரு சிறந்த ஜோக்கை சொல்லிவிட்டது போல சிரித்தார்.

”அதாவது உங்கள் நாடுகளின் அரசுகளுக்குத் தெரியும்.  ஆனால் உங்கள் நாடுகளின் மக்களுக்குத் தெரியாது.  ஆனால் இங்கு அப்படி கிடையாது.  இந்நாட்டு மக்களிடம் எதுவும் மறைக்கப்படுவது கிடையாது.  மக்களை அவர்களுக்கான உன்னத நோக்கங்களை அளித்து உயர்த்துவதே இந்த நாட்டு அரசின் நோக்கம்”

”பொய் சொல்கிறீர்கள்.  நீங்கள் இப்படி நடந்துகொள்வது தெரிந்தால் எங்கள் நாடு உங்களை சும்மா விடாது.”

”அப்படி ஒன்றுமில்லை.  உங்கள் நாட்டு அரசுகளுடன் எங்கள் நாட்டிற்கு ஒப்பந்தம் உண்டு.  சரி அதை விடுங்கள்.  நீங்கள் இங்கு செய்யப் போகும் வேலையும் இன்பமானது தான்.  நீங்கள் உல்லாசமாக வாழ இங்கு வந்தீர்கள்.  அதற்கு பொறுத்தமானதே உங்கள் வேலை.  ஒவ்வொரு இணையருக்கும் ஒரு படகு வழங்கப்படும்.  பத்து நாட்களுக்கு மட்டும் உங்களுக்கு பயிற்சி வழங்க ஒருவர் உங்களுடன் வருவார்.  அதன் பிறகு நீங்கள் இணையர்கள் மட்டும் செல்லலாம்.  எளிய ஆனால் இனிய பணி தான்.  நீலக் கடல் வெளியில் நீல வானின் கீழே வெள்ளிச் சூரியனின் கதகதப்பில் மீன் பிடிக்கப் போகிறீர்கள்.  ப்பூ….இவ்வளவுதானா என்று எண்ணாதீர்கள் படிப்படியாக உங்களுக்கு பல சுவாரஸ்யமான பணிகள் வழங்கப்படும்.  ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை.  அனைத்து பணிகளும் எளிமையானவையே.  உலகில் வேறெங்கும் இல்லாத தொழில்நுட்பம் இங்குள்ளது.  உங்களை யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை.  வேலையின் நடுவே வானின் கீழே நீரின் மேலே …கூடிக்களிக்கும்……..அதாவது நீங்கள் கொள்ளும் இன்பம்……படகில்….க்க்கீ கீகீ………மது வேண்டுமெனில் முன்னதாகவே கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.”

பின் தொண்டையை கனைத்துக் கொண்டார்.  ”இவ்வளவுதான்.  வேலைநேரம் முடியும் வரை யாரும் வரமாட்டார்கள்.  வேலை நேரம் முடியும் போது அதை அறிவித்து ஒலி எழுப்பி அதிகாரியின் சிறு கப்பல் வரும்.  மகிழ்ச்சியாக இருங்கள்.  இந்த வேலையின் இன்பத்தை கண்டுகொள்வீர்கள்.”

——–

நாட்கள் சென்றன.  அந்த அதிகாரி சொன்னது போல எங்களுக்கு துவக்க பயிற்சி அளிக்க ராபர்ட் என்ற திருநம்பி எங்களுடன் வந்தார்.  எங்களுக்கான பயிற்சி முடிந்தவுடன் நானும் ரோஸ்லினும் தனிமையில் கடலுக்குள் சென்றோம்.  மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்கள் அப்படி ஒன்றும் கடினமாக இல்லை.  உண்மையில் நன்றாகவே உணர்ந்தோம்.  பிறகு சில நாட்கள் வேறொருவர் வந்து வேறு சில பயிற்சிகள் அளித்துவிட்டு சென்றார்.  பிறகு நானும் ரோஸ்லினும் தனிமையில் எங்களுக்கு சுட்டப்பட திசைகளில் தொலைவுகளுக்கு சென்றோம்.  ஆக்ஸிஜன், நீர்மூழ்கு உடைகளுடன் கடலில் குதித்து ஆழங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது.  அவர் பயிற்றுவித்திருந்த முறையில் சில கற்களை அடையாளம் கண்டு கொண்டு வந்து படகில் சேகரிக்கத் தொடங்கினோம்.  ஏன் அக்கற்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன என்பது தெரியவில்லை.  நான் வேலைப் பளுவை உணரத் தொடங்கினேன்.  ஒரு நாளில் அடுத்தடுத்து செய்துமுடிக்கப்பட வேண்டியவை என வேலை துவங்கும்முன் அக்கடற்கரை கட்டிடத்திலேயே தரப்படும் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.  என் உடல் – அதைவிட மனம் நலிவை உணரத் தொடங்கியது.  ரோஸ்லினுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அச்சம் அடைந்தேன்.  அவள் அவ்வப்போது படகில் வான் நோக்கி படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள்.

அந்த அதிகாரி துவக்கத்தில் சொன்னதை நினைத்துக் கொண்டு நான் கொஞ்சம் விநியோகிக்கப்பட்ட மதுவை கேட்டுப் பெற்றுக்கொண்டு சென்றேன்.  அதை அருந்திவிட்டு படகில் ரோஸ்லினுடன் கூடினேன்.  எனக்கு வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை.  ஆரம்பத்தில் ஒரு ஆறுதலாக சற்று மகிழ்வுடன் அதை ஏற்றுக்கொண்ட அவள் பின்னர் சில நாட்களில் அருவெருப்படைந்து வெறுக்கத் துவங்கினாள்.  ஒருமுறை சற்று மிகுதியாக கிடைத்துவிட்ட மதுவை அருந்தி மிகையான போதையில் அவளை நெருங்கினேன்.  அவள் சம்மதிக்கவில்லை.  வலுக்கட்டாயமாக புணர்ந்தேன்.  அந்த நிகழ்விற்கு பிறகு அவளை எளிதாக நெருங்க முடியவில்லை.  ஒருமுறை ”மிருகமே…..நெருங்கினால் கடலில் மூழ்கி இறப்பேன்” என்றாள்.  பிறகு நாங்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதும் குறைந்தது.  என்றாலும் காமம் அவ்வப்போது எங்களை இணைக்கவும் செய்து கொண்டிருந்தது.

அதிகாரியின் கப்பல் எப்போது வரும் அதன் ஒலி எப்போது ஒலிக்கும் என்பதை சரியாக அறியமுடியவில்லை.  எவ்வளவு வேலை நேரம் என்பதை ஊகிக்க முடியவில்லை.  சூரியனையும் நிலவையும் விண்மீன்களையும் கொண்டு ஊகிக்க முயன்றேன்.

வேலை முடிந்ததும் அந்த பெரிய கடற்கரைக் கட்டிடத்தின் அருகே இருந்த கட்டிடத்திற்கு திரும்புவோம்.  அங்குதான் எங்களுக்கு குடியிருப்பு அளிக்கப்பட்டிருந்தது.  குடியிருப்பிற்குத் திரும்பிய பிறகு அவ்வப்போது நானும் ரோஸ்லினும் ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக்கொள்வோம்.

——-

மாதம் ஒருமுறை அந்த பெரிய கடற்கரை கட்டிடத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்கள்.  பணியின் மேம்பாடுகள், அரசின் உயரிய நோக்கங்கள், நாங்கள் அடையவிருக்கும் உயர்வு என பலவற்றைப் பேசினார்கள்.  எங்களைப் போன்றே சிக்கிய பலரும் சோர்வுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை அப்படி பேசிக்கொண்டிருந்த அதிகாரியிடம் ஒருவர் கேட்டார்.  ”நீங்களும் எங்களைப் போன்று வந்தவர்கள்தான் என்று அன்று எங்களை இங்கு அழைத்து வந்த அதிகாரி சொன்னார்.  அது உண்மையானால்…சொல்லுங்கள்…உங்களுக்கு மனசாட்சி இருந்தால் சொல்லுங்கள் … ஏன் இப்படி செய்கிறீர்கள்?

அதிகாரி சிரித்தார்.  பின் சொன்னார், ”நீங்கள் புரிந்துகொள்ளவில்லை.  நீங்கள் உண்மையைக் காணுங்கள்.  உங்கள் பார்வையின் பிழையைப் புரிந்துகொள்ளுங்கள்.  உங்களின் நன்மைக்காகத்தான் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.”

”இல்லை” ஒருவர் சத்தமிட்டார்.

”எனது பிழையும் இருக்கிறது.  நான் உங்களுக்கு போதிய அளவில் விளக்கவில்லை.  இப்போது சொல்கிறேன் அறிந்து கொள்ளுங்கள்.  எனக்கும் உங்களைப் போல துவக்கத்தில் பிழைப்புரிதல் இருந்தது.  இந்நாட்டில் உங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளில் எவ்வளவு பணம் சேர்ந்து கொண்டிருக்கிறது தெரியுமா? அதன் விவரங்களை உங்களுக்கு அளிக்கச் சொல்கிறேன்.  நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அந்த தேசங்களில் அத்தொகைகளை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.  அத்துடன் உங்களின் உழைப்பு எங்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இங்கு இருக்கும் பதவி உயர்வு அளிக்கும் முறை உலகில் வேறு எங்கும் இல்லாதது.  இன்னும் சில மாதங்களில் நீங்கள் அனைவருமே பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் பெற இருக்கிறீர்கள்.  பிறகு நீங்கள் என் போன்ற அதிகாரியாகி மற்றவர்களுக்கு நல்வழிகாட்டி ஆவீர்கள்.  ஒருமுறை என் வீட்டிற்கு உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்கிறேன்.  அதுபோன்ற வீடு உங்கள் அனைவருக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

”அதெல்லாம் கிடைத்த பிறகு எங்கள் பணிச் சுமை குறைந்து விடுமா?” வெறோருவர் கேட்டார்.

”வேலையை சுமை என்று எண்ணும் எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்.  வேலை இன்பம் என்பதை உணருங்கள்.  மனிதன் தன் முழு ஆற்றலைப் பயன்படுத்தும் போதே தன் உன்னத நிலையை அடைகிறான்.  தெரியுமா? இந்நாட்டின் உயரிய விருது ‘ஒன்னாரே குரே“ அது உங்களுக்கு கிடைக்கும்.  அது எவ்வளவு பெரிய கௌரவம் தெரியுமா? உங்களை நான் என்னிலிருந்து வேறாகக் கருதவில்லை.  அந்த விருது ஆண்டிற்கு ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டிலிருந்து அது அய்ந்தாயிரம் பேருக்கு வழங்கப்பட இருக்கிறது.  பதவி உயர்வுடன் கூடிய விருது.  உங்களில் பலர் அதைப் பெறும் அதிர்ஷ்டசாலிகளாக இருகலாம்.  அதற்கான விழா மிகவும் கோலாகலமாக மாட்சிமை தாங்கிய நமது நிரந்தர பிரீமியரின் மாபெரும் மாளிகையில் நடைபெறும்.  மாட்சிமை தாங்கிய நமது நிரந்தர பிரீமியர் …விருது பெரும் அத்தனை பேருடனும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு அருந்துவார்.  அவர் தனது திருக்கரங்களால் பலரை நேரடியாக கைகுலுக்கி பாராட்டுவார்.  பலரது கன்னங்களிலும் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்துவார்.  மட்டுமல்ல குழந்தையினுடையதைப் போன்ற அவரது மென்மையான உப்பிய கன்னங்களில் முத்தமிடும் வாய்ப்பும் பலருக்கு கிடைக்கும்….ஒளி மிக்க நாள்….உன்னதம்…..ஆ…அதன் பின் நீங்களும் அரசர்களைப் போல உணர்வீர்கள்….உங்கள் உத்தரவுக்கு பணிந்தாக வேண்டியவர் பலர்…”

அதிகாரி சில கணங்கள் பரவசத்தில் ஆழ்ந்தார்.  பின் ”இதெல்லாம்…உங்களுக்கு புரிகிறதா?…இப்போது புரியாவிட்டால் பரவாயில்லை…பின்னர் புரிந்துகொள்வீர்கள்.  வாழ்வை வீணடிக்காதீர்கள்.  செயல் வீரர்களாக இருங்கள்”

எங்களில் யாரும் எதுவும் சொல்லவில்லை.  பின் அதிகாரி சொன்னார் ”மாட்சிமை தாங்கிய நமது நிரந்தர பிரீமியர் அவர்களின் அழகிய பெயர் உங்களுக்குத் தெரியுமா?…….அவர் பெயர் கிம் கௌ டங்…..இந்நாட்டைப் போன்றே அவரது பெயரும் எவ்வளவு அழகு?”

——-

ரோஸ்லின் கருவுற்றாள்.  எனவே கடலுக்குள் என்னுடன் வருவதற்கு பதிலாக அவளுக்கு ஊரில் அலுவலகத்தில் வேறு வேலை வழங்கப்பட்டது.  படகில் எங்கள் இருவருக்கும் துணையாக ஆரம்பத்தில் எங்களுக்கு பயிற்சி அளித்த திருநம்பி ராபர்ட் என்னுடன் கடலுக்கு வந்தார்.  சில நாட்களில் ராபர்ட் என் நண்பராகி விட்டார்.  ராபர்ட்டுக்கு ஏராளமான விஷயங்கள் தெரிந்திருந்தது.

”இந்நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லையா?”

”அனேகமாக இல்லை” என்றார்.

”உங்களுக்கு இங்கிருந்து தப்பி விடும் எண்ணம் இல்லையா? நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறது”

ராபர்ட் சிரித்தார்.  ”என் நாட்டில் இங்கிருப்பதை விட எவ்வகையிலும் மேம்பட்ட வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கவில்லை.  என்றாலும் உங்கள் நிலைமையைப் புரிந்து கொள்கிறேன்”

ராபர்ட்டுக்கு அவரது நாட்டில் சோகமான ஒரு கதை இருந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது.  அவர் தன் அந்த வாழ்க்கையை சொல்ல விரும்பவில்லை.  ஆனால் இந்த தீவு நாட்டின் அரசு, அரசியல், அதிகாரம் சார்ந்த தகவல்களை, அதிகாரிகளின் ஆர்வங்களை, அரசின் எதிர்கால திட்டங்களை என பலவற்றையும் பற்றி சொல்லி வந்தார்.  எப்படியோ அவருக்கு தகவல்கள் கிடைத்து வந்தன.  அவற்றைக் கூறுவதில் அவருக்கு ஒருவித சுவாரஸ்யமும் இருந்தது.

ஓருமுறை கேட்டேன்.  ”ராபர்ட்….இதைக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்து மறந்து விட்டேன்.  இங்கு நாம் எட்டு மணிநேரம் தானே வேலை செய்கிறோம்? அல்லது பத்து மணிநேரமா? நேரமே தெரிவதில்லை”

”எட்டு அல்ல.  பொதுவாக பன்னிரெண்டு மணிநேரம்.  கூடுதலாக ஒரு சில மணிநேரங்கள் அவ்வப்போது”

நான் எவ்வளவு முட்டாளாக இருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டேன்.  பின் கேட்டேன், ”இதை ஏன் அதிகாரி் தெரிவிக்கவில்லை”

”தெரிவிக்கமாட்டார்.”

பிறகு ஒருநாள் மாதாந்திரக் கூட்டத்தில் வேலை நேரம் குறித்து அதிகாரியுடன் எங்களில் சிலர் வாக்குவாதம் செய்தனர்.  அதிகாரி சொன்னார், ”நாளின் பாதி முழுமையாக உங்களுக்கே என்று இருக்கிறது.  இருபத்திநான்கு மணிநேரங்களில் வெறும் பன்னிரெண்டு மணிநேரம் தான் பணியாற்றுகிறோம்.  என்ன…வாரத்தின் ஓரிரண்டு நாட்கள் கூடுதலாக இரண்டு மூன்று மணிநேரம் பணியாற்ற நேர்கிறது அவ்வளவுதானே? வாரம் ஒரு முழுநாள் விடுப்பு தரப்படுகிறதே? …….சரி…இதெல்லாம் யாருக்காக நமக்காகத்தானே?”

ராபர்ட் ஒருநாள் கூறினார்.  இந்த நாட்டைக் குறித்து பிரீமியருக்கு ஒரு மிகப்பெரிய லட்சியக் கனவு இருக்கிறது.  இந்த தேசத்தின் இருப்பு இதுவரை உலகில் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.  இத்தேசத்தைக் குறித்து உலகிற்கு வெளிப்படையாக அறிவிக்கும் அந்த நாள் உலகின் மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு நாளாக, இந்நாட்டிற்கு ஒரு பொன்நாளாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.  உலகின் நிகரற்ற தேசமாக இது விளங்க வேண்டும்.  தொழில்நுட்பத்தில் நிகரற்றதாக இந்நாடு இருக்க வேண்டும்..  எல்லாவகையிலும் மனித இனத்தின் உச்சபட்ட சாத்தியத்தை உலகிற்கு காட்டும் விதமாக இந்த நாடும், தனி மனிதர்களின் உச்சபட்ட செயல்திறனை உலகிற்கு காட்டும் விதமாக இந்த நாட்டு மக்களும் விளங்க வேண்டும்.  பிரீமியரின் பிரம்மாண்ட கனவுகளை நிறைவேற்ற உயர் அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் அயராது பாடுபடுகிறார்கள்.

மருத்துவ விஞ்ஞானி புகழ்பெற்ற டாக்டர். சைக்கோஸிஸ் நரகவேதி தன் குழுவுடன் நிகழ்த்தி முடித்த ஆய்வு ஒன்றின் அறிக்கையை பிரீமியருக்கு சமீபத்தில் அளித்தார்.  உண்மையில் மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஏழு-எட்டு மணிநேர உறக்கம் என்பது தேவையில்லை.  பின்னிரவின் ஒன்றரை முதல் இரண்டு மணிநேர உறக்கமே போதுமானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  அப்படி ஒன்றும் உடல்நல பாதிப்புகள் வந்துவிடாது.  பதினைந்து பதினைந்து நிமிடங்களாக பகலில் நான்கு முறை சிறு உறங்கங்கள் எடுத்துக் கொண்டால் மூளைக்கும் உடல் மொத்ததிற்கும் தேவையான புத்துணர்வு கிடைத்துவிடும்.  ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை நேரம் என்று தாராளமாக அரசு அறிவிக்கலாம்.  நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிக்க அது பயன்படும் என்று டாக்டர் பரிந்துரைத்திருந்தார்.  ஆனால் பிரீமியர் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.  ஏன் வேலை நேரம் அதிகரிக்க வேண்டும்? திறன்மிக்க தொழில்நுட்பங்கள் தான் இருக்கின்றனவே என்று அலட்சியம் காட்டிவிட்டார்.  அதனால் டாக்டருக்கு வருத்தம் கூட.  தொழில்நுட்பங்கள் என்ன இருந்தாலும் மனிதர்கள் தங்கள் உச்சத் திறனில் அதிக நேரம் வேலை செய்யாத நாடு உருப்படாது என்று புலம்பிக் கொண்டிப்பதாக சொன்னார்கள்.

”ஏன் ராபர்ட்? மனிதன் ஏன் தன் உச்சதிறனில் பணியாற்ற வேண்டும்? அவ்வளவு நேரம் பணியாற்றி செல்வம் குவிப்பது எதற்காக? என்ன முட்டாள்தனம் இதெல்லாம்?”

”முட்டாள்தனம் தான்.  ஆனால் மனிதன் தன் உச்ச செயல்திறனுடன் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டாக வேண்டும்.  இல்லாவிட்டால் அவன் மனிதனாகப் பிறந்ததன் பயனை வீணடிக்கிறான்.  தன் மனிதப் பிறப்பின் நோக்கத்தில் இருந்து ஒருவன் விலகக் கூடாது.  இது இங்குள்ள தத்துவம்”

”மனிதப் பிறப்பின் நோக்கமா? மதக் கொள்கையைப் போலவா? மனிதன் பிறந்ததன் நோக்கம் இப்படி வாழ்வதுதான் என்று இவர்கள் எப்படி சொல்ல முடியும்? இவர்கள் என்ன அறிவார்கள்?”

”அதெல்லாம் எனக்குத் தெரியாது.  தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் அல்லது இதுவரையில் இல்லாத வகையில் ஒரு செயலை சாத்தியப்படுத்தும் எவனும் இங்கு பேரறிஞனாக மேதையாக ஏற்றுக் கொள்ளப்படுவான்.  அவன் உண்மையிலேயே அடிமுட்டாளாக இருந்தாலும் சரி”

——-

ரோஸ்லின் கரு கலைந்தது.  வேலைபளு தான் காரணம் என்று நான் அதிகாரியிடம் சண்டையிட்டேன்.  அதிகாரி பொருட்படுத்தாமல் கடந்து சென்றார்.  சில நாட்களில் ராபர்ட் என்னுடன் கடலுக்குள் வருவது விலக்கப்பட்டு மீண்டும் ரோஸ்லினுடன் பணிக்குச் செல்ல நேர்ந்தது.  நாம் தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது தான் மட்டுமாவது தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள்.  எனக்கும் அதே எண்ணமே வந்துவிட்டிருந்தது.  பருவகால மாற்றங்களின் போது கடலுக்குள் செல்வதற்கு பதிலாக ஊரில் வேறு பணிகள் வழங்கப்பட்டன.  எங்களை அழைத்துவந்த டாக்ஸிக்காரனைப் போல அல்லது மதுக்கடைகளில் அல்லது இயற்கை நில அமைப்பை மேலும் காட்சிக்கு இனியதாக அழகுபடுத்தும் நிபுணர் குழுவுடன் இணைந்து அவர் தரும் வேலை –  புதிய சுற்றுலா இடங்களின் உருவாக்கம் எனப்பல.

சில நாட்களுக்குப் பிறகு நானும் ரோஸ்லினும் பணிமாற்றப்பட்டு துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்த மிகப் பெரிய ரஷ்யக் கப்பல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  அந்த கப்பல் சில நாட்களாக அங்கேயே இருந்து வருகிறது.  முழுவதுமாக ரஷ்ய நாட்டின் உயர் அதிகாரிகள் அவர்களது மனைவிகள், காதலிகள் நிறைந்தது.  அவர்கள் ஏன் இங்க வந்தார்கள் என்பது தெரியாது.  அவர்களில் யாரும் இந்த தீவிற்குள் இறங்கவில்லை.

எங்களுடன் சேர்ந்து மேலும் நான்கு இணையர்கள் அக்கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  கப்பலுக்குள் சென்ற பின் எங்கள் பணி என்ன என்பது எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  கப்பலில் பல மருத்துவர்களும் செவிலியர்களும் இருந்தனர்.  அக்கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த ரஷ்யர்கள் ஒரு கடுமையான நோய்த்தொற்றுக்கு உள்ளாகி அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர்.  அவர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வந்தனர்.  சில மருத்துவர்களும் செவிலியரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி மடிய நேர்ந்தது.  எங்களுடைய பணி நோயாளிகளை கவனித்துக் கொள்வது, மருத்துவர்கள் செவிலியருடன் உதவியாக பணி ஆற்றுவது.

வெவ்வேறு அறைகளிலாக ஆண்களும் பெண்களுமாக அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுக்கைகளில் இருந்தனர்.  எனக்கும் ரோஸ்லினுக்கும் இந்த பணி பற்றி கூறப்பட்டபோது எங்களுடன் வந்த பிற இணையரைப் போல அச்சம் ஏற்படவில்லை.  உண்மையில் மகிழ்ச்சியாகக் கூட இருந்தது.  நாங்கள் ஏற்கனவே தற்கொலை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தோம்.  இந்த கொடிய நோய்த் தொற்று எங்களுக்கு ஏற்பட்டால் அது விடுதலைக்கான ஒரு நல்வாய்ப்புதான்.

நாங்கள் ஒரு மாதம் அந்த கப்பலில் பணியாற்றினோம்.  பல சமயங்களில் எங்களுக்குத் தொற்று ஏற்படாமலிருக்க அறிவுறுத்தப்பட்டிருந்த தற்காப்பு முறைகளை மீறினோம்.  ஆனால் இறுதிவரை எங்கள் இருவருக்கும் நோய்த் தொற்று ஏற்படவில்லை.  நானும் ரோஸ்லினும் இரவு பகல் வேறுபாடு தெரியாமல் பணியாற்றினோம்.  மொத்தம் பத்து நோயாளிகளுக்கு நாங்கள் இருவரும் பணியாற்றி வந்தோம்.  எங்களுடன் வந்த பிற இணையர் வேறு நோயாளிகளுக்கு கப்பலின் மற்றொரு பகுதியில் பணியாற்றினர்.  நாங்கள் பணியாற்றி வந்த பத்து நோயாளிகளும் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து முழுமையாக குணமடைந்தனர்.  பிற பகுதிகளில் ஆறு நோயாளிகள் இறந்துவிட்டனர்.  மொத்தம் அய்ம்பத்து ஏழு பேர்கள்.  ஆறு பேர்கள் தவிர அனைவரும் பிழைத்துக் கொண்டனர்.

எங்கள் பணி நிறைவடைந்து நாங்கள் விடைபெறும் நாள் வந்தபோது நாங்கள் பணியாற்றிய குணமடைந்த அந்த பத்து பேரும் மிகவும் நெகிழ்ச்சியுடன் எனக்கும் ரோஸ்லினுக்கும் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.  நாங்கள் மீண்டும் எங்கள் வழக்கமான இருப்பிடத்திற்குத் திரும்பி அனுப்பப்பட்டோம்.

கப்பலில் இருந்து திரும்பியது முதல் ரோஸ்லின் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.  அவள் பழைய ரோஸ்லினாக மாறிவிட்டாள்.  எனக்கு அவளது மகிழ்ச்சியின் காரணம் புரியவில்லை.  நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை முன்பு எப்போதும் அழைப்பது போல அழைத்தேன்.

”என் தேவதையே….உன் மகிழ்ச்சியின் காரணத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வாயா?”

அவள் பாய்ந்து வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.  என் காதில் முணுமுணுப்பாகச் சொன்னாள்.

”நாம் இங்கிருந்து தப்ப இருக்கிறோம்.  நம் நாட்டிற்கு செல்லப் போகிறோம்.”

என்னால் நம்ப முடியவில்லை.

எப்படி?

”அக்கப்பலில் நாம் கவனித்துக் கொண்டவர்கள் அனைவருமே எவர் என்று தெரியும்தானே? ரஷ்யா நாட்டின் அதிகாரமிக்க பொறுப்புகளில் உள்ளவர்கள்.  என்னிடம் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியுடன் என் கரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த பெண்மணியைப் பார்த்தீர்கள் அல்லவா?”

”ஆமாம்”

”அவர் அவர்களின் மிகப் பெரிய அதிகாரியின் மனைவி.  அந்தப் பெண் என்னைத் தனியாக அழைத்துச் சென்று சொன்னார், ”ரோஸ்லின்.  உன் உதவியை என்றும் மறக்க மாட்டேன்.  என் உயிரையும் என் கணவர் உயிரையும் காப்பாற்றியது மருத்துவர்கள் அல்ல.  செவிலயர்களும் கூட அல்ல.  அவர்கள் அஞ்சினாரகள்.  அருவெருத்து விலக்கம் காட்டினார்கள்.  நீ கருணை மிக்க தேவதையாக செயல்பட்டாய்.   நீயும் உன் கணவரும் இருக்கும் நிலை அறிவேன்.  இந்த தீவு நாட்டைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்.  உனக்கு என் நன்றிக்கடனாக நீயும் உன் கணவரும் உங்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப உதவி செய்வேன். நீ மகிழ்ச்சியுடன் செல்.  உன் கணவரிடம் சொல்.  இன்னும் சில நாட்களில் உங்களை இக்கப்பலுக்கு அழைத்து வந்து சேர்ப்பார்கள்.  நான் உங்களை அழைத்துக் கொண்டுதான் செல்வேன்.”

”இந்த தீவிற்கு உத்தரவிடும் அதிகாரம் எங்கள் நாட்டிற்கு இருக்கிறது.  எங்களுக்குப் பணியாற்றிய இந்த இணையரை எங்களுடன் ரஷ்யா அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.  அவர்களை எங்களுடனே வைத்துக்கொள்ளப் போகிறோம் என்று நாங்கள் சொன்னால் இந்த தீவின் அரசு அதை மறுக்க முடியாது.  நீங்கள் ரஷ்யா வந்துவிட்டு அங்கிருந்து உங்கள் நாட்டிற்குச் சென்றுவிடலாம்.  நீ மகிழ்ச்சியாக இரு என் கண்ணே”

ரோஸ்லினின் மகிழ்ச்சி மெல்ல என்னுள்ளும் ஊடுருவியது.  நாங்கள் செல்லத்தான் போகிறோம்.  இது……இந்த தீவு…இது எங்கள் இடமல்ல.  இனி எப்போதும் இது எங்கள் இடமல்ல.  வெறும் கெட்ட கனவு மட்டுமே இது.

——

ரஷ்யாவின் பெரும் கப்பல் தீவை விட்டு விலகி விரைந்தது.  மாலைப் பொன்வெயிலில் நானும் ரோஸ்லினும் உச்சி தளத்தில் நின்றிருந்தோம்.  சூரியனையும் கடலையும் பார்த்திருந்தோம்.  தீவின் பக்கம் திரும்பிப் பார்க்கவும் விருப்பமில்லை.  திடீரெனச் சிரித்து முத்தமிட்டுக்கொண்டு, தழுவிக் கொண்டும் விலகிக் கொண்டும் இருந்தோம்.

சிறிது நேரம் சென்ற பிறகு கவனித்தேன் கடலில் மிதந்துகொண்டிருந்த ஒரு படகில் ஒரு பெண் மல்லாக்க வான்நோக்கிப் படுத்திருந்தாள்.  சற்று தொலைவுதான் என்றபோதும் அந்த பெண் அழுது கொண்டிருக்கிறாள் என்று ஊகித்தேன்.  ரோஸ்லின் அந்தப் படகைப் பார்க்கவில்லை.  ”என்ன ?” என்றாள்.

”ஒன்றுமில்லை என் தேவதையே.” அவள் கரத்தைப் பற்றி விலக்கி அழைத்துச் சென்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *