4. S/O.தசரதன்

கு கண் மூடி அமர்ந்திருந்தான்.

கண்ணீர் கன்னங்களில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தன.

யாரோ இவன் தோளைத் தொட்டார்கள்.

விழித்தான்.

இளவயது பெண் ஒருத்தி எதிரில் நின்று கொண்டிருந்தாள்.

அண்ணா. என்னாச்சு? தனியா உக்காந்து அழுதிட்டிருக்கீங்க?

கண்களைத் துடைத்துக் கொண்டான்.

ஓண்ணுமில்லேம்மா. 

சொல்லுங்க. குழந்தைக்குச் சுகமில்லையா?

மறுபடியும் கேட்டாள்.

பெருமூச்சு விட்டான். 

இல்லம்மா.என் அப்பா.

தோள் தொட்டுச் சொன்னாள்.

சரியாய்டுவாரு. தைர்யமா இருங்க அண்ணா.

நிமிர்ந்து பார்த்தான்.

ஏதோ ஒரு கோணத்தில் அம்மா போல் தெரிந்தாள். இனி எல்லாப் பெண்களும் அம்மாதான்.

நன்றிம்மா.

என் பொண்ணை  இங்கதான் அட்மிட் பண்ணிருக்கோம். மருந்து வாங்க வந்தேன். நீங்க அழுதிட்டு இருந்தீங்களா ..மனசு கேக்கலை அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன். வர்றேண்ணா.

தலையசைத்து நகர்ந்தாள்.

மிஸ்டர் ரகுராமன்.. மிஸ்டர் ரகுராமன்.

ரிசப்ஷனில் கூப்பிட்டார்கள்.

உங்க பில் ரெடியாய்டுச்சு. கேஷ் மட்டும்தான் அக்ஸெப்ட் பண்ணிக்குவோம்.

பில் எவ்வளவு?

எழுபதாயிரத்து இருபது .

அவ்வளவா?

இவன் கண்கள் தானாகப் பொங்கின.

என்ன சார்? 

பணம் அவ்ளோ இல்ல.

ஒன் அவர்ல ரெடி பண்ணி கொண்டாங்க.

தயங்கினான்.

என்ன சார்? இப்ப வந்து பணம் இல்லைங்கிறீங்க?

தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்.

உண்மையிலேயே இல்லையா?

தலையசைத்தான். 

சிறிது யோசித்தாள். தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டாள்.

உங்க டாக்டர் யாரு?

யோசித்து சொன்னான்.

குகன்.

குகன் சாரா?

ஆமா.

அப்ப ஒண்ணு செய்ங்க. செகண்ட் ஃப்ளோர்ல அவர் இருப்பார். அவர் கிட்ட உங்க நிலமையை சொல்லுங்க. அவர் ஃபீஸ்ல எதாச்சும் குறைச்சுக்குவார். வசதி இல்லாதவங்களுக்கு அவர் நிறைய உதவி பண்ணுவார்.

செகண்ட் ஃப்ளோர்ல எங்க ?

ரூம் நம்பர் 10.

நன்றிம்மா.

சார்.. ஒரு நிமிஷம். நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க.

சரிம்மா.

 ரூம் நம்பர் 10.

அறையில் யாருமில்லை. சுற்று முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு நர்ஸ் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அருகில் போனான்.

சிஸ்டர் டாக்டர் குகன் சார் இல்லையா?

இருக்கார்.

ரூம்ல காணோம்.

தியேட்டர்ல் இருக்கார். ஒரு மேஜர் சர்ஜரி. 

எப்ப வருவார்?

எப்டியும் ஒரு மணி நேரம் ஆகும். பாக்கணும்னா வெய்ட் பண்ணுங்க. நான் தியேட்டருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.

சரிங்க சிஸ்டர்.

உங்க பேர் சொல்லுங்க.

ரகுராமன். என் பேர் சொன்னா அவருக்குத் தெரியாது. என் அப்பாவைத்தான் அவர் அட்டெண்ட் பண்ணினார்.

அப்பா பேர் சொல்லுங்க.

தசரதன்.

எந்த ரூம்?

ஜென்ட்ரல் வார்டு.

ஒகே. நான் சொல்லிடறேன். அந்த ரூம் வாசல்லே உக்காருங்க. 

ஸ்டீல் நாற்காலி உடையை மீறி சில்லிட்டது. வெதுவெதுப்பாக அணைத்து ஆறுதல் சொல்ல எவருமில்லை. 

மொபைல் எடுத்து நேரம் பார்த்தான். 

இன்னும் ஒரு மணி நேரம். தனக்குள் முனகிக் கொண்டான்.

திடும்மென அந்த நர்ஸ் வேகமாக ஓடி வந்தாள். பின்னால் ஒரு ஸ்ட்ரெச்சர் உருண்டு வந்து கொண்டிருந்தது. வாயிலிருந்து நுரை வழிய ஒரு பெண் கோணல்மாணலாக படுத்திருந்தாள்.

அவளின் அம்மாவைப் போன்ற ஒரு பெண் தலையிலடித்துக் கொண்டே ஓடினாள்.

பாய்ஸன் கேஸ்.

வார்டு பாய் அருகில் இருந்தவனிடம் சொல்லியது காதில் விழுந்தது. இவனுக்கு மார்பு பலமாக அடித்துக் கொண்டது.

பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு பர்ஸை எடுத்தான்.  அதிலிருந்த பாபா படத்தைத் தொட்டுக் கும்பிட்டான்.

பாபா.. இந்தக் குழந்தையைக் காப்பாற்றுங்கள்.

கை தன்னிச்சையாக பர்ஸின் உள்புறமாக செருகியிருந்த பேப்பரை எடுத்துப் படித்தான்.

அம்மாவின் கடிதம்.

இனிய ரகு,

என்னை மன்னிச்சிடு. தவிர்க்க முடியாத நிலையில் தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன். என்னால் நீ படும் கஷ்டம் தாங்க முடியவில்லை. என் நோயைப் பற்றி உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். நீ எங்கே கடன் வாங்கி வைத்தியம் பார்த்தாலும் எனக்கான நாட்கள் மிகக் கம்மி. என் கடைசி நிமிடத்தில் ஒன்று கேட்கிறேன். உன் அப்பாவை வெறுத்து விடாதே. அவர் அடிப்படையில் நல்ல மனிதர். சக்ரவர்த்தியாய் வாழ்ந்தவர். சூழலால் கீழே விழுந்தவர் பின் எழமுடியவில்லை. அவர் உனக்கு நல்ல அப்பவாய் இருந்ததில்லை தான். ஆனால் நீ அவருக்கு ஒரு நல்ல மகனாய் இரு. இதுவே என் கடைசி ஆசை.

கண்ணா..உன் முடியைக் கோதிவிட என் விரல்கள் தவிக்கின்றன.

அன்பு முத்தங்களுடன்,

அம்மா.

இந்தக் கடிதம் எழுதிய இரவுதான் அப்பாவின் வேஷ்டியில் தன் கழுத்தை இறுக்கி அம்மா தற்கொலை செய்து கொண்டார்.

அம்மா.. அம்மா. என்ன செய்வேன் அம்மா?

கண்மூடி உள்ளுக்குள் கதறினான்.

நர்ஸ் அவனைத் தொட்டு எழுப்பினாள்.

சார்.. சார். டாக்டர் வந்துட்டார். கூப்பிடறார்.

டாக்டர் குகன் இவனை விட இளையவராகத் தெரிந்தார்.

இவன் தன் இயலாமையைச் சொன்னான்.

சிறிது நேரம் மெளனமாயிருந்தார்.

உங்க நிலை புரியுது. என் பீஸ்ல ஒரு பத்தாயிரம் குறைச்சுக்கறேன்.

ரகு தயங்கினான்.

ஸாரி சார். அதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது.

நின்றுகொண்டேயிருந்தான்.

யோசித்தார்.

ஒண்ணு செய்யுங்க. பெரியவரப் பாருங்க . அவர் தான் இந்த ஹாஸ்பிடல் ஓனர். அவர் ஏதாச்சும் செய்யலாம்.

கையெடுத்துக் கும்பிட்டான்.

நர்ஸைக் கூப்பிட்டார்.

இவரை பெரியவர்ட்ட அழச்சிட்டுப் போங்க.

பெரியவர் ரூம் அதே மாடியில் இருந்தது.

அனுமந்தராவ்.

அவர் அறை வாசற்கதவில் பித்தளை எழுத்தில் அவர் பெயர் மின்னியது.

உள்நுழைந்தான்.

குகன் ஃபோன் பண்னினார்.

மனசு கஷ்டமாத்தானிருக்கு. நாங்களும் ஹாஸ்பிட்டல் ரன் பண்ணனும்ல்ல..

இவன் கண்களைப் பார்த்து தலை குனிந்து யோசித்தார்.

ம்.. ஒரு பத்தாயிரம் கழிச்சிக்கறேன். அம்பதாயிரம் கட்டுங்க போதும்.

வெளியே வந்தான்.

லெஷ்மணன் இரண்டாவது ரிங்கில் ஃபோனை எடுத்தான்.

என்ன ரகு?

சொல்லும் போதே அழுகை பீறிட்டது.

டேய்.. அழாதே.. அழாதே. நான் இப்ப பஸ்ல வந்துட்டு இருக்கேன். பாப்பாக்கு திருச்செந்தூர்ல மொட்டப் போட்டுட்டு வர்றோம். நான் ஊருக்கு வர பன்னெண்டு மணி ஆய்டும். நான் ஒரு இருபது தர்றேன் ரகு. என்கிட்ட இருந்த காசெல்லாம் செலவாய்டுச்சு. இறங்குனதும் நானே அங்க கொண்டாந்து தர்றேன். பாக்கி முப்பது வேற யார்கிட்டயாவது கேட்டுப் பார். தைர்யமா இரு.

அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. சிக்னல் ப்ராப்ளம்.

முப்பதாயிரம்.

எங்கே போவது?

நாற்காலியில் உட்கார்ந்தான். மனம் வெறுமையாக இருந்தது.

எல்லாரிடமும் கடன் வாங்கி தான் அப்பாவை இந்த ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தான்.

இரவாகிவிட்டது.

எவரிடம் கேட்பது?

யாரோ இவன் கை தொட்டார்கள்.

திரும்பினான். ஒரு குழந்தை இவனைத் தொட்டுக் கொண்டி நின்றுகொண்டிருந்தது.

ஜானு.. ஜானு..

ஒரு பெண் அழைத்துக் கொண்டே வந்து அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றாள்.

சிறு மின்னல் போல் அவள் ஞாபகம் வந்தது.

ஜானு.. ஜானு.. ஜானகி.

யோசித்தான். இது சரியா?

தலையை வேகமாக அசைத்துக் கொண்டு அவள் நம்பருக்கு டயல் செய்தான்.

ஜானகி ஃபோனை எடுக்கவில்லை.

மணி பார்த்தான். 9.15.

இந்த நேரத்துக்கு அவள் தூங்கியிருக்க மாட்டாள்.

இரண்டாம் முறையாக அவளைக் கூப்பிட்டான்.

அப்போதும் எடுக்கவில்லை.

என் செய்வேன் என் தெய்வமே.

மாடிப்படிகளில் தளர்ந்து இறங்கினான்.

கால்கள் நடுங்கின. படிகள் இளகி திரவமாகி ஓடின. கைப்பிடியை இறுகப் பிடித்துக் கொண்டான்.

மொபைல் அதிர்ந்தது.

ஜானகி.

என்ன ரகு அதிசயமா இருக்கு. கூப்ட்ருக்கே. என்ன விஷயம்?

குரல் அமிழ்தம்.

எத்தனை நாள் ஏங்கி தவமிருந்து பெற்ற வரம். அதையும் சாபமாக்கிக் கொண்ட தன்னை நினைக்கவே கூசியது.

என்னாச்சு ராம்?

குரல் தடுமாறச் சொன்னான். 

எதிர்முனையில் அவள் விசும்பல் கேட்டது.

அழாதே ஜானு.

தைர்யமா இரு ரகு. அவர்  வீட்டுல இல்ல. அவருக்கு ஃபோன் பண்னி பணம் ஜிபேல அனுப்பச் சொல்றேன். உன்கிட்ட ஜிபே இருக்குல்ல.?

இருக்கு. ஆனா.. அவர்?

அவர் கிட்ட நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். அதெல்லாம் பிரச்சினை இல்ல. இந்த நம்பருக்கு அனுப்பச் சொல்றேன். திரும்பவும் சொல்றேன் தையமா இரு. இனிமேலாவது சரியான முடிவு எடு.

ஃபோனை வைத்தாள்.

சரியான முடிவு. சுற்றி சுற்றி வந்து காதலித்தவளை எப்படி விரட்டி அடித்தேன். அவளின் கல்யாணத்துக்கு முதல் வாரம் கூட வந்து எவ்வளவு மன்றாடினாள்.

கல்லுடா நீ. சொல்லி சென்றவளை அதன் பின் சந்ததிக்கவில்லை. அதற்கப்புறம் இப்பத்தான் குரல் கேட்கிறான்.

ஏடிஎம் எங்க இருக்கு?

அருகில் நின்றவரிடம்  கேட்டார்.

கேஷ் கெள்ண்ட்டர்கிட்டவே இருக்கு.

போனான்.

கேட்டான்.

இதுல பத்தாயிரம் தான் எடுக்க முடியும். அதிகமா எடுக்கணும்னா இளங்கோ தெருவுல ஹெச்டிஎஃப்சி பேங்க் ஏடிஎம் இருக்கு. அதுல அம்பதாயிரம் வரைக்கும் எடுக்கலாம்.

ணி பார்த்தான். 

10.30.

லெஷ்மணன் வர இன்னும் நேரமிருக்கிறது.

வராண்டாவில் நிறைய பேர் படுத்திருந்தனர். வாட்ச்மேன் அவர்களை விரட்டிக்கொண்டிருந்தார்.

வண்டி ஷெட் இருளாயிருந்தது. 

பனியில் நனைந்து ஸ்கூட்டி கிளம்ப மறுத்து அடம் பிடித்தது.

உதைத்தான். சின்னதாக கமறி அமைதியானது.

மீண்டும் மீண்டும் உதைத்தான்.

கால்கள் நடுங்கின. உள்ளே நுழைந்த இளைஞன் அருகில் வந்தான்.

என்னாச்சு?

ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.

உதைத்தான். ஸ்டார்ட் ஆகியது.

லைட்டை ஆஃப் பண்ணாம  உதச்சிருக்கீங்க.. அதான்.

நன்றி தம்பி.

 டிஎம் வாசல் குமொஹர் மரத்தடியில் நீலநிற யூனிஃபார்மில் அந்த பெரியவர் அமர்ந்திருந்தார்.

ஸ்கூட்டியிலிருந்து இறங்கிய இவனை ஆர்வத்துடன் பார்த்தார்.

ஒர்க் பண்ணுதுங்கலா ஐயா?

வேல செய்யுது தம்பி.

மொபைல் எடுத்து பார்த்தான்.

ஜானகியிடமிருந்து செய்தி வரவில்லை.

பெரியவரைப் பார்த்தான். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாறர்.

ஏந்தம்பி எடுக்கலையா?

இன்னும் பணம் வரலங்க. வெளில குளிருதுல்ல .உள்ற போய் இருக்கலாம்ல ஐயா.

உள்ற உக்கார பர்மிஷன் கிடையாதுங்க தம்பி. கம்பெனிக்காரங்களோட ரூல்ஸ் அது. உள்ற பாத்தா அனுப்பிடுவாங்க.

சொட்டர் ஏதாச்சும் போட்டுக்கலாம்ல.

எங்க தம்பி அதுக்கு காசு. இவங்க கொடுக்கற காசுல மூணு வேள சாப்பிடவே பத்தல. ரெண்டு வயிறு. நானும், எம்பொண்டாட்டியும்.

புள்ளைங்க?

அமைதியாயிருந்தார்.

தப்பா கேட்டுருந்தா மன்னிச்சிக்குங்க ஐயா.

அடடா என்ன தம்பி. அதெல்லாம் ஒண்ணுமில்லே. ஒரே பையன். கல்யாணம் ஆனதும் எங்கள மறந்துட்டான். அவனுக்கும் சொல்ப சம்பளம் தான். அவனையும் குத்தம் சொல்ல மனசு வரல.

கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அத வுடுங்க தம்பி. இந்த நேரத்துக்கு ஏடிஎம்ல வந்து நிக்குறிங்க. ஏதும் அவசரமா?
அப்பா ஆஸ்பிட்டல இருக்காங்க. பணம் கட்டணும். அர்ஜெண்ட். அதான். ஃப்ரெண்ட் அனுப்புவாங்க.

கவலப் படாதீங்க தம்பி. இந்த மாதிரி நல்ல புள்ளயப் பெத்ததுக்கு அவர் நிச்சயம் நல்லாய்டுவாரு.

சட்டென ரகுவின் விழிகள் திறந்து கொண்டன்.

அவர் பதறி அருகில் வந்து தோல் தொட்டான்.

தம்பி.. தம்பி.சரியாய்டுவாரு..சரியாய்டுவார்.

கர்சீப் எடுத்து மூக்கு சிந்தினான். மரத்திலிருந்து சிவந்த குல்மொஹர் அவன் தலையில் விழுந்து தரைக்கு நழுவியது.

மொபைலில் நோட்டிபிகேஷன் வந்தது. 

பணம் வந்துடுச்சு.

கார்டை நுழைத்து பணம் எடுத்தான்.

ஐயா.. நான் வர்றேன். 

அப்போதுதான் கவனித்தான். 

அவர் சட்டையில் மார்பு பக்கம் குத்தியிருந்த கம்பெனி பேட்ஜில் அவர் பெயர் பொறித்திருந்தது.

தசரதன்.

எங்க அப்பா பேரும் தசரதன் தான்.

போய்ட்டு வாங்க தம்பி. நல்லாய்டுவாரு.

தெருமுனை திரும்பும் போது அந்த டீக்கடை கண்ணில் பட்டது.

சட்டென ஓர் எண்ணம் உதிக்க வண்டியை நிறுத்தினான்.

ஸ்கூட்டி சீட்டுக்கு அடியில் அந்த சின்ன ஃப்ளாஸ்க் இருந்தது.

அப்பாவுக்காக வெந்நீர் கொண்டு வந்தது.

திறந்து வெந்நீரைக் கொட்டினான்.

ரெண்டு டீ பார்சல். ஜீனி தனியா பேப்பர்ல கட்டிக் கொடுத்துடுங்க.

அவர் இவனை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

என்ன தம்பி இன்னும் பணம் எடுக்கணுமா?

தலையசைத்து ஃப்ளாஸ்க்கை நீட்டினான்.

என்னது?

கொஞ்சம் டீ இருக்கு. இதுல சக்கரை இருக்கு. தேவைன்னாப் போட்டுக்கோங்க.

மறுத்து வேகமாக தலையசைத்தார்.

இல்ல.. தப்பா நெனைக்காதீங்க. உங்க பையனா நினச்சுக்கோங்க.

தயக்கத்துடன் கை நீட்டி வாங்கி கொண்டார்.

ஹாஸ்பிட்டல் வராண்டா பரபரப்பாயிருந்தது.

ரிசப்ஷன் கவுண்டரில் இருந்த பெண் நிமிர்ந்தாள்.

எங்கே சார் போனீங்க? நாலு தடவை கூப்டாச்சு. பணம் கிடச்சுதா?

இந்தாங்க முப்பதாயிரம்.

நீட்டினான்.

பாக்கி?

இன்னும் அரை அவர்ல வந்துடும்.

அவள் பார்வையில் கோபம் தெரிந்தது.

சார்..இதென்ன அரசாங்க ஆஸ்பத்திரின்னு நினச்சுட்டிங்களா?

தலைகுனிந்திருந்தான்.

சொல்ல கஷ்டமாத்தானிருக்கு. என்ன பண்றது? உங்க அப்பா சாயங்காலம் அஞ்சு மணிக்கு இறந்து போனாரு. பணத்தக் கட்டி பாடிய எடுத்துட்டுப் போகாம இந்த அந்தன்னு இழுத்துட்டு இருக்கீங்க.

வந்துடும் சிஸ்டர்.. வந்துடும்.

குரல் நடுங்கியது.

அப்பா?

எவ்ளோ நேரம் பாடியை வார்டுல வச்சிருக்க முடியும். மத்த பேஷண்ட் பயந்துடுவாங்கல்ல. பின்னாடி கார்ஷெட்ல வச்சிருப்பாங்க. வாசல் வழியா பின் பக்கம் போய் பாருங்க.

ரகு நடுக்கத்துடன் பின் பக்கம் ஓடினான்.

பழைய கார் டயர்களுக்கிடையே அப்பா ஆஸ்பத்திரி படுக்கை விரிப்பில் உடல் புதைந்து ஒரு நீல பொட்டலம் போல் கிடந்தார்.

திடும்மென வெடித்த அவனின் பெருங்குரல் கேட்டு பறவையொன்று சட்டென வெளிகிளம்பி ஒரு வட்டமடித்து பூவரசு மரத்தின் கிளைகளில் அமர்ந்தது.

 

                                                                   **************

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *