ரகுராமனுக்கு வங்கியில் காசாளராக வேலை பார்த்த காலம் ஞாபகம் வந்தது. தினமும் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் அவருடைய விரல்களின் இடையே புகுந்து அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும். அவற்றின் மீது மனம் ஒட்டுவதில்லை. அவர் சொந்தம் கொண்டாட முடியாது. அவற்றின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டியிருக்கும். மாலையில் அன்றாடக் கணக்கைச் சரிபார்த்து, பணத்தை எண்ணி முடித்து, இரும்பறையில் பூட்டி வைத்ததும், கைகள் விடுதலை பெற்றுவிட்டது போலிருக்கும். ஒரு பைசா வேறுபாடு வந்தாலும், மீண்டும் மீண்டும் சரியாக எண்ண வேண்டும். நாற்காலியைச் சுற்றியிருக்கும் தடுப்பை மூடிவிட்டு வெளியே வந்து, விரல்களை இரண்டு மூன்று முறை முன்னும் பின்னும் மடக்கி சாதாரண நிலைக்குக் கொண்டு வருவார். அங்கேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றும். ‘நமக்குக் காலில் சக்கரம்’ என்று நினைத்துக் கொண்டார்.
வங்கி வேலையை விட்டுப் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனால் சம்பளம் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது பின்னால் புரிந்தது. நினைத்துப் பார்த்தால் வந்த அதிர்ஷ்டங்கள் விரல்வழியே ரூபாய் நோட்டுக்களைப் போலவே எங்கோ சென்றுவிட்டன. மீண்டும் அந்த நாள்கள் வருமா? சம்பளம் வாழ்க்கைதானோ? வெறும் சம்பளத்தை வைத்துக் கோண்டு பெரிய உயரங்களை எட்ட முடியாது என்றாலும், இப்போது இருப்பது போல் அதல பாதாளங்களையும் பார்க்க வேண்டியிருக்காது. இன்றைக்கு குடியிருக்க வீடும் ஏன், சாப்பாடும் கூடப் பிரச்சனையாகிவிட்டது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதை.
இந்த வீட்டுக்கு வந்து நான்கு மாதங்களாகிவிட்டன. இனி காவியுடை உடுத்தக் கூடாது என்று அவற்றை யாருக்கும் தெரியாமல் தீயிட்டு எரித்துவிட்டார். வெள்ளுடையில் இருந்தார். காவியுடை உடுத்தத் தொடங்கிய காலத்தில், லௌகிகம் வேண்டாம் என்று வெறுத்துப் போயிருந்தார். ஆனால் இன்று எந்தப் பாதையில் செல்வது என்ற குழப்பம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. ‘என்ன செய்துகொண்டிருக்கிறேன்? யாருக்காக இதைச் செய்கிறேன்? இரண்டு சிறிய அறைகள் உள்ள இந்த வீட்டில் ஒரு சூட்கேஸ் மட்டும் அவருக்குச் சொந்தம். சென்னையிலிருந்து டெல்லிக்கு முதல் முறையாக வேலைகிடைத்துச் சென்ற புதிதில், அவருடன் அங்கே வேலை பார்த்த நண்பர்கள் நான்கு பேர் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தனர். அவரிடம் ஒரு டிரங்க் பெட்டி மட்டும் இருந்தது. பாங்க் வேலையை ஏன் விட்டீர்கள் என்று இப்போது யாராவது கேட்டால் பதில் சொல்ல முடியாது. பதில் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. ஐம்பத்தி ஐந்து வயதில் மீண்டும் வேலைக்குப் போக முடியுமா?
பெயர் பெற்ற சிவந்தாகுளம் மடத்தில் ஒரு குட்டி இளவரசர் போல இருந்த நாட்களில், அவருடைய குருவாக இருந்த ‘சிவஞானாச்சாரியார்’ என்ற ‘சிவம்’ அறிமுகப்படுத்தி வைத்த புலவர் சேதுராமன் இந்த வீட்டை அவருக்கு வாடகைக்குக் கொடுத்தார். ஒரு வேளை மடத்தின் தலைவராக இருந்த நமச்சிவாய சுவாமிகள், சேதுவிடம் சொல்லியிருக்கலாம். மடத்திலிருந்து வெளியேறிய நாளில் அவர் முன் வந்து நின்ற சேது, ‘சாமி, பெரிய தெருவில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது. தற்போதைக்கு அங்கே இருந்து கொள்ளுங்கள்’ என்று அவரை வாடகைக் காரில் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். மலைமீதிருந்து தலைகுப்புற விழுந்தது போலிருந்தது. வாழ்வில் அது இரண்டாவது முறை.
பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார் ரகுராமன். ஆனால் மடத்தில் பெரிய மரியாதையுடன் இருந்துவிட்டு, உடனே தெருவில், அதுவும் இதே ஊரில் அலைய முடியாது. ‘சேது, சிவத்துக்கு வேண்டியவராக இருக்கலாம். நமச்சிவாய சுவாமிகள், மடத்திலிருந்து தன்னைத் ‘துரத்தி’விட்டதற்கான பிராயச்சித்தமாக சேது மூலம் உதவி செய்திருக்கலாம். விளையாட்டில் தோற்றவனுக்கு வென்றவன் காட்டும் கருணையா? சேது என்நிலையைப் பார்த்து இரக்கம் கொண்டிருக்கலாம். ஆனால் சேதுவிடம் கேட்கவில்லை. இனிமேல் மடத்துக்குள் நுழையக் கூடாது. பட்டம் கட்டியிருக்க வேண்டிய நாள் வருவதற்குள்… கதை மாறிவிட்டது. ‘சிவத்’துக்கும் ஏன் மரணம் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டது? மடத்திலிருந்து வெளியேறிய மூன்று நாட்கள் கழித்து ‘‘பெரியவர் கொடுத்தார்’’ என்று சேது ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார்’. இரண்டு வருடங்களுக்கு முன்னால், மடத்தின் இரண்டாமிடத்தில் இருந்த ‘சிவம்’ மாரடைப்பில் சாகும் வரை, மடத்துடனும், ஆன்மீகத்துடனும் மீதி வாழ்க்கை கழிந்துவிடும் என்று நம்பியிருந்தார் ரகுராமன். நினைத்த மாதிரியெல்லாம் வாழ்க்கை வளைந்து கொடுக்குமா?
‘சிவம்’ பூஜை செய்யும் முறைகளை, தேவாரம் திருவாசகம், திருமுறைகளை, அவற்றை ஓது முறைகளைத் தினமும் கற்றுக் கொடுத்தார். ஐந்தாறு வருடங்கள். இன்றும் காலையில் பூஜை செய்துவிட்டு, திருமுறைகளிலிருந்து பாடல்களைப் பாடி வழிபட்டார். பழக்கம், ஆறுதல். பின்னால், திருவாக்குகள் வழங்க உபயோகப்படலாம். கற்றது மறப்பதில்லை. டைப்ரைட்டிங் முதல் பணம் எண்ணுவது வரை.
உலகில் எல்லாவற்றுக்கும் கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது. பூர்வாசிரமம். கோயமுத்தூரில் வீட்டிலிருந்து படிக்கும் போது, படிக்கக் கஷ்டப்பட்டார். வெறுப்பாக இருந்தது. மனப்பாடம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு எந்தப் பலனும் இருந்தது மாதிரி அப்போது தெரியவில்லை. டிகிரி படித்து முடிப்பதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது. ஆனால் இப்போது டிகிரி படித்தது உதவுகிறது. திக்கித் திக்கி ஆங்கிலம் பேச முடிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் நன்றாகப் பேசலாம். ரகுராமன் வீட்டில் அம்மா அப்பா தங்கை எல்லோருக்கும் இடையில் ஏதாவது சண்டை, வாக்குவாதம் நடந்து கொண்டே இருக்கும். அதற்கப்புறம் மனைவியுடன் சென்னையில் குடியேறின பிறகு மனைவியுடன் தினமும் சண்டை நடக்கும். பல நாட்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாமலேயே கழிந்தன. ‘அவள் ஓயாமல் சளசளத்துக் கொண்டிருப்பாள். அவன் அதற்கு நேர்மாறாக இருந்தான்.
அப்பா கோவையில் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்தார். அவருக்கும் அம்மாவுக்கும் சண்டை வராத நாளில்லை. படித்துவிட்டு, வேலையில்லாமல் இரண்டரை வருடங்கள் அலைந்து கொண்டிருந்தான். வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை. ஒரு வழியாக மத்திய அரசுத் தேர்வு எழுதியதில் வேலை கிடைத்து டில்லிக்குப் போனான். அங்காவது இருந்திருந்தால் வாழ்க்கை வேறுமாதிரி இருந்திருக்கும். அவனுடைய அந்தக் காலத்து நண்பர்களில் சிலர், இன்னும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆசை யாரைவிட்டது? வங்கியில் சம்பளம் அதிகம் என்று இன்னும் பலரைப் போன்றே அவனும் தேர்வெழுதி, வேலை வாங்கிச் சென்னைக்கு வந்தான். அப்படி வந்திருக்கக் கூடாதோ? எல்லாச் சனியன்களும் அங்கேதான் தொடங்கின.
வாசலில் யாரோ வந்து நிற்பது போல் நிழலாடியது. ‘அதற்குள் யார் வருவார்?’ கடைக்காரன் கொடுத்துவிட்டிருந்த நான்கு இட்லிகளில் மூன்றைத்தான் சாப்பிட்டிருந்தார். இன்னொன்றை என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டே, டிரங்குப் பெட்டியிலிருந்த வெள்ளைத் துண்டை எடுத்துப் போர்த்திக் கொண்டார். காவியுடைகளைத் தீயில் போட்டதை அறிந்த புலவர் சேது, மூன்று செட் வெள்ளை வேட்டிகள், துண்டுகள் வாங்கிக் கொடுத்திருந்தார். இப்போது அதுதான் சொத்து. மடத்தில் பரிச்சயமான யாராவது வந்திருக்கக் கூடும். அதைத் துவைப்பதற்கான ரின் சோப் கூட அவர் கொடுத்த பணத்தில் வாங்கியதுதான். இவர் மடத்திலிருந்து வெளியேறியதை அறிந்தவர் சிலர், அவ்வப்போது வந்து கொண்டிருந்தார்கள். பழக்க தோஷமோ? அதிர்ச்சியா? அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவன் என்ன ஆனான் என் பார்க்கும் ஆர்வமா? அனுதாபமா? இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புலவர் சேதுவும் வந்து கொண்டிருந்தார். இந்த ஆன்மீகத்தை விட்டு வேறேதாவது… ஆனால் அது முடியாது. உட்கார்ந்து பேசிச் சாப்பிட்டுப் பழகியாயிற்று.
ரகுராமன் அறையின் நடுவில் இருந்த ஜமக்காளத்தில் சம்மணமிட்டு அமர்ந்தார். ‘இனிமேல் பார்க்க வருகிறவர்கள் வரலாம்’. வயதான பெண்மணி ஒருவர் வாசலருகில் தயங்கித் தயங்கி நின்றிருந்தார். ‘சாமி’ ஜமக்காளத்தில் அமர்ந்ததும் உள்ளே வந்தார். ‘இனித் தொடங்க வேண்டியதுதான்’ ரகுராமன் மீண்டும் மனதுக்குள் ஒரு கிரீடத்தைச் சூடிக் கொண்டார். ‘வாங்க, என்று வாய்விட்டு அழைக்க நினைத்தாலும், தனது விருப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். ‘சாமி’யல்லவா? கீழிறங்க முடியாது. தலையை மட்டும் அசைத்து வரவேற்றார். வந்த பெண்மணி, அவர் முன்னால் முழந்தாளிட்டு, குனிந்து வணங்கினார். பாதிக்கு மேல் நரைவிழுந்த முடி, ஐம்பத்தைந்து வயதிருக்கலாம். என்ன துயரமோ? களையான முகம். வசதியான வீட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். நடையிலும் உடையிலும், பாவனையிலும் ஒரு பதவிசு தெரிந்தது.
அந்தப் பெண்மணி பேசட்டும் என்று காத்திருந்தார். கலங்கிய கண்களைக் கைக்குட்டையால் துடைத்துவிட்டு, தொண்டையைச் செருமிக்கொண்டு அந்தப் பெண் பேசத் தொடங்கினார் ‘சாமிஜி, என் பெயர் உஷா, உஷா நந்தினி. நீங்க மடத்தில இருக்கும்போது அடிக்கடி சின்ன சாமியையும் உங்களையும் ‘தரிசனம்’ பண்ணுவேன். அப்பா காலத்திலிருந்து பழக்கம். (அப்படியென்றால், மடத்துக்கு கண்டிப்பாக ஏதாவது பணம், பொருட்கள் வழங்கியிருப்பார் – இவரை நம்பலாம்). நான் சாமிகளைத் தரிசனம் செய்ததிலிருந்து, கவலைகள், வீட்டுப் பிரச்சனைகள், பணப்பிரச்சனைகள், கணவர், மகன் மகள் பிரச்சனைகள் குறையத் தொடங்கியிருக்கு. எனக்கென்னவோ பெரிய சாமிஜிகிட்ட போகிற வழக்கம் இல்லை (அவர் வேற கோத்திரத்தைச் சேர்ந்தவரென்பதை அந்தப் பெண்மணி நேரடியாகச் சொல்ல முடியுமா?) – சிவஞானாச்சாரியாரும் இந்தப் பெண்ணும் ஒரே கோத்திரம்) – ரகுராமனுக்குப் புரிந்தது. ‘ரொம்ப வருஷங்களா, மனசில நிம்மதியே இல்லை’ சொல்லி முடிப்பதற்குள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. பேச முடியாமல் குமுறினார்.
‘ரகுராமன் அருகில் இருந்த செப்புத் தம்ளரிலிருந்த தண்ணீரை அந்தப் பெண்ணிடம் நீட்டி, ‘குடிச்சிக்குங்க’. அது சாமிஜி வைத்திருந்த பூஜைப் பொருள் என்று நினைத்த உஷா, அதை வாங்கத் தயங்கினார். மீண்டும் ‘குடிங்க, ஒண்ணும் பாதகம் இல்லை’ என்று சொன்னதும் தண்ணீரைக் குடித்து, தொண்டைய லேசாகச் செருமி, தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டார். ரகுராமன் ‘மீண்டும் ஆன்மீகத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இவரைப் போன்றவர்கள் ரகுராமனைத் ஆன்மீகத்துக்குள் தள்ளிவிடுவார்கள். ‘அடியார்க்கு அடியாராக’ ஆனபின், சிவ பக்தர்கள் விடுவதாக இல்லை. பக்தர்களின் மன அவஸ்தைகளை யாரிடம் சொல்வார்கள்? குடும்ப நண்பர்கள், சொந்தக்காரர்கள் யாரிடம் சொன்னாலும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பு இருக்கும். என்னைப் போன்ற குடும்பமற்ற ஆட்கள் எந்தத் தகவலையும் இவர்களுக்கு எதிராக உபயோகிக்க மாட்டோம்’. இது உண்மையா என்ற கேள்வியும் ரகுராமன் மனதில் எழுந்தது. அந்தப் பெண்மணி பேசிக் கொண்டே இருந்தார். ‘யாரிடமாவது துயரங்களைச் சொன்னால் போதுமானது. ஏதோ ஒரு வெளிநாட்டில், சுவர் ஓரம் நின்று தங்கள் பிரார்த்தனைகளைச் கவலைகளைச் சொல்கிறார்களாம். நானும் ஒரு சுவர், சாய்ந்து அழுவதற்கு ஒரு தோள்’.
இது மிகச் சிறிய இரண்டு அறைகள் கொண்ட வீடு. மடத்தில் முக்கிய புள்ளியாக வந்து போய்க்கொண்டிருந்த புலவர் சேதுராமன், அவரது இந்த வீட்டை வாடகை வேண்டாமென்று சும்மா கொடுத்தார். ‘சாமி, சும்மா நீங்கள் இருந்து கொள்ளுங்கள். நீங்களும் ‘சிவம்’ போல ஆகியிருக்க வேண்டியவர்…’ என்று இழுத்து நிறுத்திக் கொண்டார். இரண்டாவது முறையும் அணிவதற்கென்று மூன்று செட் வெள்ளை வேட்டியும் மேல் துண்டும் வாங்கிக் கொடுத்தார். (காவி ஏன் தரவில்லை. ‘சாமி’ ஆகவில்லை என்று நினைக்கிறாரா? சாமி ஆக முடியாது என்று நினைக்கிறாரா?) அவற்றை ரகுராமன் இப்போது உபயோகித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு வகையில் ‘சாமி’யாக இல்லாவிட்டாலும் துறவியாகத் தொடரலாம் என்று சொல்லாமல் சொன்னவர், சேதுராமன். அப்படித்தானா? ஒரு வேளை ‘துரத்திவிட்ட பாவத்தைத்’ தீர்க்க மடத்தலைவர் சேதுராமன் மூலமாக உதவியிருக்கக் கூடும். அவருக்கும் ரகுராமனுக்கும் என்ன பகை? பெரியவர், தனது ஆளை இரண்டாமிடத்துக்குக் கொண்டுவர சமயம் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம். நம்மை விரும்பாதவர்கள் கூட அவர்களுடைய ஏதோ ஒன்றுக்கு நாம் தடையாக இருப்பதனாலேயே வெறுக்கிறார்களோ? அந்தக் காரணம் முடிந்துவிட்டால், நம்மைப் பொறுத்தவரை சாதாரண மனிதநேயம் உள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
மடத்திலிருந்த ஏழாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிலும் அதிகாரத்திலும் மேலே ஏறிக் கொண்டிருந்தார். மடத்தின் மீது ஊர், ஜாதி, மத, இலக்கிய, அரசியல், பக்தி, சொத்து என்ற ஏதோ ஒன்றில் ஈடுபாடு கொண்டு வரும் பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு அவனைத் தெரிந்திருந்தது. அதிகார வரிசையை நம்மவர் விரைவாகப் புரிந்து கொள்கிறார்கள். பிறப்பிலிருந்து வருவது. அவர்களில் பலர் மடத்திலேயே துறவியாவதன் முதல் படியான வெள்ளுடை தரித்து ‘அவரான’ பொழுதிலும் தொடர்ந்து வந்து தரிசித்தார்கள். ஆசிகள் வாங்கிக் கொண்டார்கள். கல்வியோ, பக்தியோ, அதன் மூலம் வரும் அருளோ தேஜசோ எதுவும் அதீதமாக இல்லாத தன்னைப் போன்ற ஒருவனிடம் அவர்கள் ஏன் வருகிறார்கள் என்று அவருக்குப் புரிந்ததில்லை. ஏன்? இன்றும் கூடப் முழுவதுமாகப் புரியவில்லை. அதிகார அடுக்கில் இடையில் செருகப்பட்டிருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு தேவையை பூர்த்தி செய்கிறேன்’.
தினமும் பத்துப் பேர் வரை வந்துவிடுகிறார்கள். ஆளுக்குப் பத்து ரூபாயைத் தட்டில் போட்டாலும் போதும். அன்றையச் செலவுக்குப் போதும். துறவியாக இருப்பவனுக்கு வேறு வழி ஏது? முதலில் கூச்சமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. ஒன்றும் பாதகமில்லை, வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ‘பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ள மடத்தின் இரண்டாமிடத்தில் இருந்திருக்க வேண்டியவர். எல்லாம் தலைவிதி’ என்று பலர் பேசிக் கொண்டிருக்கலாம். இங்கிருந்து பத்துக் கடைகள் தள்ளியிருக்கும் ஒரு ‘சைவ’ ஹோட்டலில் இருந்து இட்லி வருகிறது. மதியமும் அங்கிருந்துதான் உணவு வரும். அவ்வப்போது காசு கொடுத்துவிடுவார்.
முன்னால் பூஜை செய்து வைத்த பூக்களும், தேங்காய் பழங்களும் குங்குமம், சந்தனம் திருநீறும் சின்னச் சின்னக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன. அந்த அம்மாள் எழுந்து போனபின் இன்னும் இரண்டு மூன்று பேர் வந்தார்கள்.
***
இரவில் நார்க்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அவரிலிருந்து அவனாக மாறிவிட்டிருந்தான். மடத்தில் இரும்புக் கட்டிலில் செயற்கைஇழை மெத்தை விரித்திருந்தது. இந்த நார்க்கட்டில் உடலை அழுத்தியது. டெல்லியில் வேலையில் இருந்த போது பிளாஸ்டிக் கட்டில். உட்கார்ந்தால் நடுவில் பள்ளமாக இருக்கும். இருவர் உட்கார்ந்தால் தொட்டிலாக மாறிவிடும். வங்கியில் வேலைக்கு சேர்ந்த போது முன்னூறு ரூபாய் சம்பளம் அதிகம் கிடைத்தது. ஆனால் சென்னைக்கு வந்து விட்டான். அதற்காகவா வந்தேன்? மிகவும் ‘சில்லி’யான காரணமாகத் தெரிந்தது. இன்னும் என்னென்னவோ நடந்திருக்கும். மீண்டும் சாமியாராகி ‘ஒவ்வொரு பாதையும் வேறுபட்டது. நம்மால் தேர்ந்தெடுக்கத்தான் முடியும். பின் விளைவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது’ என்று தோன்றியது. இது சாமியாருக்கும் மட்டும் தோன்றக் கூடியதா? சாதாரண மனிதன் கூட இதைப் புரிந்து கொண்டிருப்பான். ஆனால் இங்கு வருகிறவர்கள், மனநிம்மதி இழந்த நிலையில் வருகிறார்கள். அவர்களுக்கு இது அசரீரி.
தனக்குக் குருவான ‘சிவத்’தை பார்த்த நாளை நினைத்தான். சுமார் எட்டு வருடங்கள் இருக்கும். ரகுராமனின் அம்மாவும் அப்பாவும் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. தங்கை ஈஸ்வரி கணவருடன் நியூசிலாந்தில் இருந்தாள். அவன் ஐந்து நட்சத்திர மருத்துவமனையில் மயக்கத்திலிருந்து விழித்த போது, யாரும் அருகில் இல்லை. தலையை அசைக்க முடியவில்லை. ‘இன்னும் மருத்துவமனையில்தானே? எத்தனை மாதங்கள்?’ அடுத்த கட்டிலைப் பார்த்தான். ‘சிவம்’ படுத்திருந்தார். இடுப்பு வரை தெரிந்தது. காவியுடையில் இருந்தார். அவருக்குத் துணையாக இருந்தவர், கட்டில்களுக்கு இடையில் இருந்த திரையைப் போட்டு மறைத்தார்.
மனைவி இருக்கிறாளா என்று கண்கள் தேடின. வேறு எங்காவது போயிருக்கலாம். மகள் பள்ளிக் கூடம் போயிருக்கலாம். என்ன செய்வதென்று தெரியாமல், எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தான். நர்ஸ் வந்து பார்த்த போது, புன்னகைத்தாள். ‘எப்டி இருக்கீங்க? தலைவலி இருக்கா?’ ‘தலைவலி நல்லாக் குறைஞ்சிடுச்சு. லேசாக் கனம் இருக்கு’ ‘அது மருந்துகள் சாப்பிடறதுனாலா இருக்கும். டாக்டர் வந்தாக் கேளுங்க’. ‘என் வொய்ஃப் அங்க நிண்ணா அனுப்புங்க சிஸ்டர்’ சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். ஆனால் நிறைய நேரமாகியும் யாரும் வரவில்லை. இன்னொரு நர்ஸ் வந்து நரம்பு ஊசி போடும் போது, மீண்டும் சொன்னான் ‘சிஸ்டர், என் வொய்ஃப் இருந்தா வரச் சொல்லுங்க’. அதற்கப்புறமும் அவள் வரவில்லை. எங்கே போய்விட்டாள்? வீட்டில் ஏதாவது வேலையாக இருக்குமோ? அல்லது பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லையோ? அல்லது அவளுக்கே உடம்பு சரியில்லையோ? அன்றைக்கு மாலை வரை மனைவி வரவில்லை. நர்ஸ்களும் சரி வரச்சொல்கிறோம் என்றார்களே தவிர, இல்லையென்றோ, எங்கே போயிருக்கிறாள் என்றோ சொல்லவில்லை. எப்படித் தொடர்பு கொள்வது?
மாலையில் ஏழுமணிக்கு, வங்கியில் கூட வேலை பார்க்கும், சண்முகநாதன் வந்தார். அவனைவிட ஐந்து ஆண்டுகள் சினியர். ‘எப்படி இருக்கீங்க? என்று கேட்டார். தலை மட்டுங் கொஞ்சம் கனக்குது வேற ஒண்ணும் இல்லை’. ‘டாக்டரைப் பார்த்துவருகிறேன்’ என்று அரைமணி நேரம் காணாமல் போய்விட்டார்.
திரும்ப வந்து பேசத் தொடங்கினார் ‘எட்டு மாசத்துக்கு அப்புறம் கண்ணைத் திறந்திருக்கீங்க. டாக்டர்ட்ட பேசிட்டேன். இன்னும் இரண்டு நாள்கள் அப்சர்வேஷன்ல வச்சிட்டு அனுப்பிருவாங்களாம். வீட்டுக்குப் போகலாம்’. கொஞ்ச நேரம் அவனையே பார்த்தார். ‘வசந்தாவைக் காணம். எங்க போயிருக்கா? காலையில இருந்து பாக்றேன். வரல’. சண்முக நாதன் முகத்தில் குழப்பம் தெரிந்தது. ஏதோ யோசித்தார். ‘நீங்க நல்லாத் தேறீட்டிங்க. இன்னும் ரெண்டு நாள்ள ‘இண்டிப்பெண்டண்ட்டா’ இருக்கத் தொடங்கியிரு வீங்களாம். ஒரு பிரச்சனையும் வராது’ மீண்டும் அமைதியானார். ரகுராமன் மனைவியும் மகளும் வரும் வழியைப் பார்ப்பது போல் தவிப்புடன் அலைபாய்ந்து கொண்டிருந்தான்.
சண்முகநாதன் சொன்ன விஷயங்களைக் கேட்ட அதிர்ச்சியில் இன்றும் கூட அவர் எப்படித் தொடங்கினார் என்பதே நினைவுக்கு வருவதில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பே மனைவியும், மகளும் வருவதை நிறுத்திவிட்டார்களாம். சென்னையில் வீட்டிலிருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட்டாளாம். வங்கியிலிருந்து மருத்துவமனைக்கு பணத்தை சண்முகநாதன் ஏற்பாட்டில் நேரடியாகச் செலுத்தி விடுகிறார்களாம். அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. என்ன ஆயிற்று? பதினைந்து வருடங்களுக்கு மேல் சேர்ந்து குடும்பம் நடத்தியவள், ஏன் போய்விட்டாள்?’
‘இரண்டு வருடங்களுக்கு மேலாக அவனுக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. அவ்வப்போது சொல்லுவாள். ‘அவனுடைய சேமிப்புப் பணம் அத்தனையும் செலவாகிவிட்டது. அவளுடைய நகைகளில் பெரும்பகுதியை விற்று அந்தப் பணமும் செலவாகிவிட்டது’. ஒருவேளை இறந்து போய்விடுவான் என்று நினைத்திருக்கலாம். அவனுடைய சிகிச்சைக்குச் செலவழித்தால், தன்னிடமிருக்கும் சேமிப்பு எல்லாம் கரைந்து, தெருவில் நிற்கவேண்டியிருக்கும் என்று நினைத்திருக்கலாம்.
‘எப்ப இருந்து வர்றதில்லை?’ கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டாலும், அவன் நல்ல கணவனாகத் தானே நடந்து கொண்டான். அவளும் அபப்டித்தானே தெரிந்தாள். எல்லோர் வீட்டிலும் நடந்தது, நடப்பதுதானே.
‘ரகுராமன், இனிமே நீங்க அவங்களைப் பத்தி நினைக்கிறதானல எந்தப் பயனும் இல்லை. இனிமே அவங்க வர்ற மாதிரித் தெரியல. உங்களப் பத்தி மோசமாகத்தான் பேசினாங்க. நீங்க எழுந்து நடமாடி, அவங்ககிட்டப் பேசிப் பாக்றது அப்பறம். ஆனா இன்னைக்கு நீங்க இருக்க இடமில்லை. எனக்கே சொல்லக் கஷ்டமாத்தான் இருக்கும். நானே சின்ன வீட்ல இருக்கேன். இல்லைன்னா எங்க வீட்லயே உங்களை வச்சுக் காப்பாத்துவேன்’
‘இப்படி விட்டுட்டுப் போனவ கிட்ட நான் ஏன் போறென்? பேசுவேன்? சாகக் கிடந்த நேரத்தில கவனிக்காதவ, இருந்தென்ன இல்லாட்டி என்ன?’ அவன் பேசப் பேச கோபத்தில் குரல் கூடக் கம்மியது. படுக்கையில் படுக்க முடியாமல், எழுந்து உட்கார்ந்தான். என்னென்னவோ பேசிக் கொண்டே இருந்தான். சண்முகநாதனுக்கும் முகம் கறுத்து, அவ்வப்போது அவன் அழும் போது அவரும் கண்ணீர் விட்டார்.
கடைசியில் சொன்னார் ‘பக்கத்துப் பெட்ல, சிவந்தாகுளம் மடத்து சாமி ஒருத்தர் படுத்திருக்கார். அவருக்கு உன் நிலை தெரியவந்தது. அவர் சொல்லியிருக்கார். “அவருக்கு எல்லாச் செலவும் நான் பாத்துக்கிறேன். சரியானதும், எங்கிட்டக் கூட்டிட்டு வாங்க. எங்கூடவே வச்சுக்கிறேன். எனக்கும் ஒரு நம்பிக்கையான ஆள் தேவைப்படுது”. உனக்குச் சிவந்தாகுளம் பிராஞ்ச்சுக்கு மாற்றச் சொல்லி ஏற்பாடு பண்ணிக்கிட்ருக்கோம்’. அவனுக்குக் கண்ணீர் பெருகி ஓடியது. சில மனிதர்கள் மிக மோசமாக இருந்தால் சில மனிதர்கள் முன்பின் பழக்கம இல்லாத மனிதர்களிடம் எல்லையற்ற அன்பும் கருணையும் காட்டுகிறார்கள். மனிதர்கள் விந்தையானவர்கள்.
ஒரு மாதத்துக்குள் ரகுராமன் மருத்துவ மனையிலிருந்து சிவந்தாகுளம் மடத்தில் தங்கியிருக்கத் தொடங்கினான். அந்த ஊரிலிருந்த வங்கியின் கிளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சாமிஜி அவனை தனது சிஷ்யனாக தத்து எடுத்துக் கொள்வதற்கு இருபது நாட்களுக்கு முன்னால், வேலையிலிருந்து ராஜினாமா செய்தான். சிஷ்யனான பிறகு மடத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது இதுவெல்லாம் பழங்கதையாய்ப் போய்விட்டது.
***
உஷா ஒரு சனிக்கிழமை மாலை சாமிஜியைக் காணக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் அங்கேதான் போகிறாள் என்பதை கணித்த அவளது கணவர் சுந்தர், அவளருகில் வந்து நின்றார். ‘என்ன?’ என்பதைப் போல் அவரைப் பார்த்தார் உஷா. ‘சாமிஜியைப் பார்க்கப் போக வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாரோ என்று பயந்தாள். பிறகு சண்டை போட வேண்டியிருக்கும்.
‘நானும் உன் கூட வர்றேன்’ என்றார். அவளுக்கு வியப்பாக இருந்தது. இவரா சொல்கிறார்?
‘சுவாமிஜியப் பாக்கவா? நீங்களா?’
‘ஆமா, மனசில தோணுது’
‘என்ன திடீர்னு?’
‘திடீர்னு இல்லை. நீ சாமிஜியைப் பாக்கத் துவங்கினதுக்கப்புறம், நம்ம வியாபாரம் நல்லா நடக்குது. திக்கு முக்காடிட்டு இருந்தேன். உங்கிட்டச் சொன்னதில்ல. இப்பவும் அப்பவும் அதே உழைப்புதான். ஆனால் விருவிருன்னு பிசினசும் வருமானமும் நம்ப முடியாத அளவுக்கு வளந்திருச்சு.’
உஷாவுக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது. சாமிஜியின் அருளை எண்ணி வியப்படைந்தார். உடைமாற்றிக் கொண்டே யோசித்தாள் ‘எப்போதும் ஏறுக்குமாறாகப் பேசுகிறவர். ஒரு நாள்கூட தன் அகங்காரத்தை விட்டுக் கொடுக்காதவர், திடீரென்று நானும் வருகிறேன் என்கிறார். நான் சாமிஜியிடம் போனதால் அவரது வியாபாரம் பெருகிவிட்டதாம். சாமிஜியிடம் சொல்ல வேண்டும். அங்கு வரும் பக்தர்களிடம் சொல்ல வேண்டும். அவரது மகிமையே மகிமை….’ உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. சுந்தரும் உஷாவும் சேர்ந்து சாமிஜியைத் தரிசனம் செய்யக் கிளம்பினர். அவள் வாழ்வில் ஐம்பத்தில் ஆறாவது வயதில் விடிவெள்ளி தெரிந்தது.
அன்று சாமிஜியைத் தரிசனம் செய்ய பத்தர்கள் பத்துப் பதினைந்து பேர் வந்திருந்தனர். சுந்தரமும் உஷாவும் அவரை வணங்கிவிட்டு எழும்போது ‘அருள்வாக்கு’ச் சொல்லுங்கள் சாமிஜி’ என்றனர். சாமிஜி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். ‘என்ன பேசுவது என்று சிறிது யோசித்தார். சிஷ்யர்களின் வேண்டுகோளை மறுக்க முடியுமோ? அவர்கள் பீடம் ஒன்றைக் காட்டும் போது ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான்! பிறகு பேசத் தொடங்கினார். சுந்தர், பின்னால் திரும்பி, வெளியே காத்திருந்தவர்களையும் அழைத்தார். அன்றிலிருந்து சனிக்கிழமைகளில் சாமிஜி அருளுரையாற்றத் தொடங்கினார்.
உஷா சனிக்கிழமை, செவ்வாய்க் கிழமை இரண்டு நாள்களிலும் தரிசனத்துக்கு வந்தாள். சுந்தரும் உஷாவும் சாமிஜியின் அருளால் மனம்மொன்றி விட்டனர். சுந்தர் பெரும் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தார். உஷா வாடகைகாரில் வரத்தொடங்கினாள். அவளிடம் சுந்தர் ‘சாமிஜிக்கு சிறிய வீடு போதவில்லை. இந்த வாரம் நானும் வருகிறேன். வேற இடத்தில் பெரிய வீடாகப் பார்ப்போம். அதற்கு நான் பொறுப்பு. வேறு யாரையும் பணத்துக்கு கஷ்டப்படுத்த வேண்டாம்’ என்றார்.
அடுத்த மாதம் ‘சாமிஜியை, சுவாமிஜி என்று அழைக்க வேண்டும் என்று ஒரு பக்தர் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சுவாமிஜி விஜயன் காலனியில் பெரிய வீட்டில் குடியேறினார். அவரைப் பார்க்க வரும் செல்வத்துரை, அவருக்கு ஆறு செட் காவி உடைகளைப் பரிசளித்தார். ‘நம்ம பாக்கப் போற சாமிய நல்லாக் கவனிக்க வேண்டியது நம்ம பொறுப்பில்லையா?’ என்று சுந்தரிடம் அவர் சொல்லியிருந்தார். சுவாமிஜிக்குக் கண்கள் கலங்கிவிட்டன. ‘கடவுள் எப்படியெல்லாம் அருள்புரிகிறார்’ என்று எல்லோரிடமும் சொன்னாலும், அவரைப் பார்க்கவரும் மனிதர்கள்தான் இதெற்கெல்லாம் காரணம் என்று அவருக்குப் புரிந்தது. அவர்களின் மனம் கோணாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். செவ்வாய்க் கிழமைகளிலும் ‘தரிசனத்துக்கு’ ஆண்களும் பெண்களும் வந்தனர். கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அருளுரைகளும் செவ்வாய் சனி இரண்டு நாள்களிலும் நடந்தன.
‘அருளுரை ஆற்றுவதற்காக, சுவாமிஜி பல பக்தி நூல்களைப் படித்தார். புத்தகங்கள் பெருகப் பெருக அவற்றை வைப்பதற்கு அலமாரி ஒன்றைப் பெருமாள்சாமி, வாங்கிக் கொடுத்தார். வசந்தன் என்ற ஆறாம் வகுப்புப் படித்த வேலைக்காரனை அமர்த்தினார்கள். ரகுராமனுக்கு வேண்டிய எல்லாம் வேலைகளையும் அவன்செய்தான். புத்தகங்களை வாசித்துக்காட்டினான். சுந்தர், கட்டிலும் மெத்தையும் வாங்கிக் கொடுத்தார்.
அடுத்த சனிக்கிழமை, ரகுராமன் மாலைப் பூஜைக்கு வந்த போது அந்தப் பெரிய கூடத்திலும் வெளியிலும் கூட்டங் கூட்டமாக மக்கள் இருந்தனர். நகரத்தில் பல இடங்களில் சாமிஜியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்று பின்னால் தெரிந்து கொண்டார். ‘எல்லாம் சுந்தரின் வேலையாக இருக்க வேண்டும்’.
அவர் முன்னால் புன்னகையுடன் நின்ற உஷாவைக் கேட்டார் ‘இன்றைக்கு ஏன் இவ்வளவு கூட்டம்?’
‘சுவாமிஜி, இன்றைக்குப் ………! உங்கள் மகிமை பரவிக் கொண்டிருக்கிறது. விசேஷ நாள், தரிசனம் பண்ணக் கூட்டம்’. ‘நல்ல நாள், புனித நாள்களையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டார். மற்றதை உஷாவும், சுந்தரும், பெருமாள் சாமியும் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
ரகுராமனுக்கு அவ்வப்போது, சற்று பயமும், தடுமாற்றமும் ஏற்படும். ‘நன்றாக இருந்தேன் என்று நினைத்த இடத்திலிருந்து இரண்டு முறை அதல பாதாளத்தில் விழுந்தேன். உஷாவும் மற்றவர்களும் இதைப் பெரியதாக்கிக் கொண்டே போகிறார்கள். ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தாலும், இறைவா, நீ என்னை எங்கே கொண்டு போகிறாய்?!’
கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரோ? தன்மீது கருணை காட்டுகிறாரோ?
உஷாவின் வீட்டில் பெரிய மனிதர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பெருமாள்சாமி பேசிக் கொண்டிருந்தார் ‘பதினைந்து ஏக்கர் நிலம் வாங்க வேண்டும். பெரிய சிலையொன்று வைக்க வேண்டும். அதைச் சுற்றி, நவீன வசதிகள் வேண்டும். நிறையப் பேர் சாமிஜியின் உரையைக் கேட்க மேடையுடன் கூடிய மைதானம் வேண்டும். பக்தர்கள் பஜனை செய்யவும், ஆனந்தமாக நடனமாட டைல்ஸ் போட்ட இடம் பெரியதாகக் கட்ட வேண்டும். பெரிய தோட்டம் அமைக்க வேண்டும். வருகிறவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு வாங்க வேண்டும். பின்னொரு நாளில் நாட்டுத் தலைவரை வரவழைத்து நம் புகழை நாடெங்கும் பரப்ப வேண்டும்’ அவர் பேசிக் கொண்டே இருந்தார்.
அந்த செய்தி ரகுராமனை எட்டியது. அவர் வியப்பில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார். ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொல்லும் போதே அவருக்கு உஷாவும், சுந்தரும், பெருமாள் சாமியும் ஞாபகம் வந்தனர். யாருக்கு யார் புகலிடம்? அவருக்குப் புரிவது போல் இருந்தது.
இங்கு வரும் பக்தர்கள் உதவியால் புதியதாக ஒரு மடத்தை நிறுவிவிடலாம் என்று தோன்றியது. பக்த்தர்கள், சிஷ்யர்கள் தங்கள் குருக்களைக் கைவிடுவதில்லை.