7.காத்திருப்பு

 

மூன்று உருவங்கள் மைக் கருப்பு பின்னணியில் தெரிகின்றன. வலப்புற உருவம் மடியின் மேல் ஒரு சாக்குப் பைக்குள் கையை விட்டு பொருட்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறது, நடு உருவம் வலது கையால்  வெறுமையிலிருந்து கண்ணுக்கு தெரியாத எதையோ நடுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் நடுவில் பிடித்து பிடித்து சாக்கு பைக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறது. சாக்கு பைக்குள் அடைக்க அடைக்க பை விரிகிறது. வெளித் தோற்றத்தில் அத்தருணத்தில் ஆண்களாக காண்பவை சில சமயம் பெண் தோற்றத்திற்கு மாறுகின்றன, சில சமயம் பால் ஏதும் கண்டுபிடிக்க முடியாத உருவங்களாகின்றன. மூன்றாம் உருவம் பேசுவதில்லை , நகர்வதில்லை எந்த வித முக பாவனையையும் செய்வதில்லை, கையில் சாக்கு பையும்மில்லை . 

“நல்ல பிடிப்பா?” நடு உருவம் வலப்புறம் இருக்கும் உருவத்திடம் கேட்டது. வலப்புற உருவம் எதுவும் பேசாமல் தன் வேலையில் மும்முரமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை, “நல்ல பிடிப்பா?” என்றது. இப்போதும் பதில் எதுவும் கூறாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தது  வலப்புற உருவம். 

“என்ன தேடற?” நடு உருவம் வெறுமையில் எதையோ பிடித்துக்கொண்டே  கேட்டது. 

” பிறப்பு, இறப்பு, கொண்டாட்டம், துக்கம்…” மெல்ல பேசிய வலப்புற உருவம் தொடர்ந்து,  

“உனக்கு?” என்றது.

“முழுக்க ரொம்பல. இன்னும் பாக்கி இருக்கு” நடு உருவம்.

“ஓ ஆமாம்” 

இரு உருவங்களும் முன்னம் செய்து கொண்டிருந்ததை தொடர்கின்றன. பின்னணியில் மாற்றங்கள் கண்பட தெரிய ஆரம்பிக்கிறது. வலுத்த கருமை கொஞ்சம் கொஞ்சமாக கலையத் தொடங்குகிறது.   

“இதை எதுக்காக செய்யறோம்னு உனக்கு தெரியுமா?” வலப்புற உருவம் கேட்டது. 

“ஒரு தேடல். அது கிடைச்சதும் நிறுத்திடலாம்” நடு உருவம்.

“எது? எது கிடைச்சதும்?” வலப்புற உருவம். 

“பார்த்தா கண்டுபிடிச்சிரலாம்”

“எப்படி இருக்கும் அது? அது ஒரு பொருளா?”

“தெரியாது. ஆனா பார்த்தா கண்டுபிடிச்சிரலாம். ரெண்டு பேர் கிட்டையும் ஒரே மாதிரி இருந்துதுன்னா நாம செய்யறதேயே  கூட நிறுத்திடலாம்” நடு உருவம் சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தது. பின்னணியில் அமைதி, நிசப்தம், பின்னர் தூரத்தில் மின்னல் வெளிச்சம், இடி முழக்கம். 

கருப்பு பின்னணி மெதுவாக மறைந்து வெளிச்சம் தெரியத் தொடங்குகிறது.

“அது பேசாதா?” மூன்றாவது உருவத்தை பார்த்து வலப்புற உருவம் கேட்டது. 

“இல்ல. பேசாது” என சொல்லிவிட்டு எதையோ மீண்டும் வெறுமையிலேருந்து நடுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் பிடிக்கிறது நடு உருவம். பிடித்ததை சாக்கு பைக்குள் அடைத்தது, சாக்கு பை விரிகிறது. மெதுவாக வண்ண காகிகத்தால் போர்த்தப்பட்ட பரிசு ஒன்றை சாக்கு பைக்குள்லிருந்து வெளியில் எடுத்தது நடு உருவம்.

“தப்பா என்னக்கு கொடுத்திருக்காங்க” என்றது நடு உருவம். இதைக் கேட்ட வலப்புற உருவம் அப்பரிசை பார்த்தது. 

“ஆமாம். இது உனக்கில்லதான். உன்னை மாதிரியே இன்னோன்னுக்கு கொடுக்கவேண்டியது. ஓரளவுக்கு உன்னை மாதிரிதான் அதுவும். ஆனா  நீ அது கிடையாது. நீ அசல் கிடையாது, அசல் திரும்ப வராது. ஒருவேளை இது தெரிஞ்சுதான்…அந்த ஏக்கத்துலதான் உனக்கு இந்த பரிசை கொடுத்திருக்காங்களோ? என்கிட்டையும் இதை மாதிரி நிறைய பரிசு இருக்கு” வலப்புற உருவம் சொன்னது. நடு உருவம் எதுவும் பேசாமல் தன் வேலையை தீவிரமாக செய்துகொண்டிருந்தது. சுற்றமும் மௌனம், தங்கள் வேலையில் ஆழ்கின்றனர் இரு உருவங்களும். 

உருவங்களுக்கு பின்னால் வெளிச்சம் அதிகமாகிறது.

“அது கிடைச்சுதா உனக்கு?” நடு உருவம் கேட்டது. 

“எது?” வலப்புற உருவம். 

“அதான் நாம தேடறோமே அது”

“ஓ அதுவா. இல்லை” 

பிறகு மீண்டும் மௌனம். பணிகள் மீண்டும் தொடர்கின்றன.  

இப்பொழுது வெளிச்சம் உச்சத்தில் இருக்கிறது.

“நாம எப்போத்திலிருந்து  இதை செஞ்சுக்கிட்டிருக்கோம்?” நடு உருவம் கேட்டது. 

“தெரியாது” வலப்புற உருவம்.

“தெரியாதா இல்ல ஞாபகமில்லையா? ரெண்டுக்கும் வித்யாசமிருக்கு” நடு உருவம்.

“தெரியவும் தெரியாது, ஞாபகமும் இல்லை. பைல இருக்கிறது மட்டும் தான் தெரியும், ஞாபகம் இருக்கும்” வலப்புற உருவம் சொன்னது. 

“ஓ ஆம்மாமில்ல” என நடு உருவம் சொல்லிவிட்டு மீண்டும் எதையோ பிடித்து பைக்குள் அடைத்து, பைக்குள் பார்த்தது.

“நல்ல பிடிப்பா?” வலப்புற உருவம் கேட்டது. 

“தெரியல. இன்னும் முழுக்க முடியல. உனக்குத்தான் முடிஞ்சது” என்றுவிட்டு நடு உருவம் கை விரல்களினால் எதையோ மீண்டும் பிடிக்கத் தொடங்கியது.

வெளிச்சம் மங்க ஆரம்பித்தது.

 “ஆமாம்” என்றது வலப்புற உருவம். இவை அனைத்திற்கும் நடுவில் மூன்றாவது உருவம் எதுவும் பேசாமல் அசைவுகளின்றி இருந்தது. வலப்புற உருவம் சாக்குப் பைக்குள் கையை விட்டு ரத்தம் படிந்த கத்திரியின் ஒரு பாதியை  எடுத்தது. 

“இதை பார்த்தியா?” வலப்புற உருவம்.

“ஓ இதுவா. இத்தோட இனொரு பாதி இங்க இருக்கு” என்று சொல்லி நடு உருவம் இன்னொரு ரத்தம் படிந்த பாதியை காட்டியது. 

“ரெண்டையும் சேர்க்க முடியுமா?” நடு உருவம்.

“அது முடியாது” வலப்புற உருவம். 

பின்னணி மீண்டும் மெல்லிதான கருப்புக்கு மாறியது. 

உருவங்கள் இரண்டும் சாக்கு பைக்குள் தேடுவதும், வெறுமையிலேருந்து கண்ணுக்கு தெரியாத எதையோ பிடித்து மூட்டைக்குள் அடைப்பதையும் செய்து கொண்டிருந்தன.

“நாம தேடறது நிச்சயமா கிடைக்குமா” வலப்புற உருவம் கேட்ட்டது. 

“தெரியல. ஆனா பார்த்தா கண்டுபிடிச்சிரலாம்”

“என் கையிலிருந்து நழுவி போயிடுச்சுன்னா?” வலப்புற உருவம் கேட்டது. 

“போனாலும் என்கிட்ட சிக்கும், என்கிட்டேருந்து நழுவினாலும் அது கிட்ட சிக்கும்” பக்கத்தில் இருந்த மூன்றாவது உருவத்தை பார்த்துச் சொன்னது நடு உருவம். 

பின்னணி இப்போது முழு கருமையாக மாறி இருந்தது.

“இதை பாரு.” மூட்டையிலேருந்து ஒரு படத்தை எடுத்தது வலப்புற உருவத்திற்கு காட்டியது நடு உருவம். படத்தில் ஒரு தம்பதி ஒரு சிறுமி.

“இவன் அத பார்த்திருக்கான். அவன் கண்கள் சொல்லுது. அது இவனுக்கு தெரிச்சிருக்கு” நடு உருவம் சொன்னது.

“ஆமாம். இவன் எனக்கு தெரிந்தவன் தான். நீ சொன்ன மாதிரி அவன் கண்ணுல அது தெரியுது. அவன் அதை பார்த்திருக்கான். அத வெச்சு ஏதோ திட்டம் போட்டான். ஆனா அதுக்கப்பறம் உனக்கு தான் தெரியணும்” வலப்புற உருவம். 

“ஆமாம். திட்டம் போட்டான் ஆனா அத செயல் படுத்தினானான்னு எனக்குத் தெரியாது. நாம தேடிகிட்டு இருக்கிறத இவன் நிச்சயமா பார்த்திருக்கான். ஒருவேளை இதுக்கு தெரியுமோ?” பக்கத்தில் எதுவும் பேசாமல் இருந்த மூன்றாவது உருவத்தை பார்த்து சொன்னது நடு உருவம்.

பின்னணியில் இருள் தீவிரமானது. 

“நீ மாறிக்கிட்டு இருக்க” வலப்புற உருவம் நடு உருவத்தை பார்த்துச் சொன்னது. 

“அப்படியா? நீயும் மங்கிகிட்டு இருக்க” என்றது நடு உருவம். 

“உன்னைய பார்த்தா மாதிரி இருக்கு” என்றது வலப்புற உருவம் 

“ஓ அப்படியா?”. செயலில் மீண்டும் ஆழ்ந்தன இரு உருவங்களும்.  

“நீ முழுக்க மங்கி மறைஞ்சு போய்ட்டா, உன் பைய என்ன பண்ணுவ?” நடு உருவம் கேட்ட்டது. 

“என்கிட்டேயே தான் இருக்கும்” வலப்புற உருவம் சொன்னது. 

“நாம தேடிகிட்டு இருக்கிறது கிடைச்சிட்டதுன்னா நாம செய்யறதை நிறுத்திடலாமா?” நடு உருவம் கேட்டது. 

“ஆமாம். கிடைச்சிதுன்னா நம்ம தேவையே  இருக்காது. நாம ரெண்டு பேர் கிட்டையும் ஒரே பொருள் இருக்கும். அதோட தேவையும் இருக்காது” என்றது வலப்புற உருவம் மூன்றாவது உருவத்தைப் பார்த்து. 

இருள் உச்சத்தை தொட்டது. இப்போது மைக் கருப்பு.  

வலப்புற உருவம் பைக்குள் தேடுவதை நிறுத்தியது. நடு உருவம்  பிடிப்பதை நிறுத்தியது. உருவங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன, 

“இப்ப ஞாபகம் வருது. நீ என்னை மாதிரிதான் இருக்க” என்றது வலப்புற உருவம். 

“ஆமாம், சாமான்ய நாட்களாத்தான் நம்மை ஞாபகம் வெச்சிக்கப்போறாங்க. நம்பிக்கை கிடைச்ச நாளா இல்லை ” என்று சொன்ன நடு உருவம் பார்த்துக் கொண்டிருக்கும்  போதே வலப்புற உருவம் மறைந்தது, நடு உருவம் வலப்புற உருவமானது. இதுவரையில் பேசாமல் இருந்த மூன்றாம் உருவம் நகரத் தொடங்கி உருமாறி நடு உருவமானது, புது சாக்குப் பைக்குள் விரல்களால் வெறுமையிலிருந்து எதையோ பிடித்து அடைக்க ஆரம்பித்தது. புது மூன்றாம் உருவம் ஒன்று தோன்றியது. புது மூன்றாம் உருவம் எதுவும் பேசாமல், நகராமல் கையில் சாக்கு பையில்லாமல் இருந்தது. புது நடு உருவம் வலப்புற உருவத்தை பார்த்து, 

“நல்ல பிடிப்பா?” என்றது.

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *