லால்குடியில் புதியதாக மேம்பாலம், ரவுண்டானா, விரிவாக்கம் செய்த பேருந்து நிலையம் உருவாகி சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போனது. ரவுண்டாவின் இடது புறம் திருச்சி பாதையில் ஶ்ரீ அம்மன் ஐயங்கார் பேக்கரிக்கு அருகே திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும். ஒரு சில நிமிடங்களுக்குள் பேருந்துகள் நிச்சயம் உண்டு. பேக்கரியில் தேநீர் அருந்தியது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தை கொடுத்து பேருந்திற்காக காத்திருக்கச் செய்தது. மாலை சூரியனின் செந்நிற பரப்பில் கீழ்வானத்தில் எழுந்து மேல் வரை திட்டு திட்டாக வெண்மேக பரப்பில் தன் ஆளுமையை காட்டியது. அன்பில் பக்கமாக ஜெட் அமைப்பில் கொக்குகள் பறப்பது செவ்வானத்தில் தீட்டிய ஓவியமாக தெரிந்தது. ரவுண்டானாவில் மக்களின் போக்குவரத்து அபரிதமான முறையில் அவசர அவசரமாக செல்வதும், பேருந்துகள் மூச்சை இழுத்து பிடித்து நிற்பதும், புறப்பட்டு போகும் வழியில் மூச்சு விடுவதும் வழக்கம் போல என முடிவுக்கு வந்தேன். இரண்டு நிமிடங்களுக்குள் தர்மராஜ் டிரான்ஸ்போர்ட் பேருந்து வந்தது. கூட்டம் அதிகமில்லை. உட்கார இடம் கிடைத்தது பக்கத்து பக்கத்து இருக்கைகளில். நம்பர் ஒன் டோல் கேட் வரை எனது மனைவி மகளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து ஒரு வழியாக பெருமுச்சு விட்டேன். துண்டு துண்டான வீடியோவின் சப்தங்களும் பெரிதான காது கூசும் சிரிப்பொலியும், முக்கலும் முனங்கலுமான கமண்ட்களும் கேட்டது. சுற்றிலும் இருந்த மக்கள் தலை குனிந்து தங்களின் செல்போனில் மூழ்கி விரல்களால் தள்ளியும், அதன் வெளிச்சம் முகத்தில்பட்டு அவ்விடம் முகம் நீரில் ஆடும் புகைப்படத்தை நினைவூட்டியது.
மாமனாரின் காரியம் முடிந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்புவதற்காக கிளம்பியிருந்தோம். பத்து நிமிடங்களில் நம்பர் ஒன் சமயபுரம் டோல்கேட் வந்து சேர்ந்தது பேருந்து. நல்ல சீரான வேகத்தில் வந்ததால் விரைந்து வந்து விட்டது. எந்த பஸ்ஸ்டாப்பிலும் ஏறவும் இறங்கவும் ஆளில்லாமல், நிறுத்தாமல் வந்ததால் சீக்கிரம் வந்துவிட்டோம். வழக்கம் போல இறங்குபவர்களுக்கு வழிவிடாமல் ஏறி தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநாட்டினர்.
இறங்கி ரவுண்டானாவின் அகல சாலையை கடந்து வலதுபுறம் போனால் திருச்சி செல்லும் அனைத்து பேருந்துகளும் அம்புஜம் மருத்துமனை வாசலுக்கு அருகில் நிற்கும். பக்கத்தில் ஒட்டினாற் போல ஆஸ்பத்திரியின் சொந்த பெரிய மருந்து கடையும் உண்டு. நாங்கள் பேருந்து நிறுத்தம் வருவதற்கும், நாமக்கல் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. இப்பேருந்தில் ஏறினால் பால்பண்ணை வழியாக திருச்சி ஜங்சன் பேருந்து நிலையம் போவதால் பால்பண்ணையில் இறங்கினால் அடிக்கடி தஞ்சை செல்ல உட்காரும் அளவிற்கு பேருந்துகள் சில சமயம் காலியாக வரும். தனியார் பேருந்துகள் மட்டும் எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும் , ஒன் டு ஒன் பேருந்துகள் அங்கே நிற்காது. பைபாஸ் நான்கு வழிச் சாலையில் பயணித்து இரண்டு மேம்பாலங்களை கடந்து, பதினைந்து நிமிடத்தில் பால்பண்ணை வந்து விட்டோம். இருநூறு அடிக்குள் பேருந்து நிறுத்துமிடம் இருந்தது. நடைபாதையில் ஏறி இரு மாலை நேர உணவு கடைகளை கடந்து, தள்ளுவண்டியில் ஹைபிரிட் ல் வளர்ந்த கொய்யா பழங்களை விற்பவருக்கு அருகில் பேருந்து நிற்குமிடத்திற்கு வந்து நின்றோம். . கொய்யா பழங்களைப் பார்த்தால் நாயக்கர் கால சிற்ப அழகு ஞாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை. எங்களை போல வேறு பலரும் தஞ்சை செல்ல பேருந்திற்காக காத்திருந்தனர். முதலில் வந்த இரு பேருந்துகளில் இடம் இல்லை. ஒரு சிலர் மட்டும் நின்று கொண்டு பயணித்தாலும், அவசரமாக போக வேண்டுமென்றதால் பரவாயில்லை என ஏறி நின்று பயணித்தனர். நாங்கள் ஏறவில்லை. ஆறு ஏழு நிமிடம் கழித்து மூன்றாவது நான்காவது பேருந்துகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்தது, மிக மெதுவாக வந்த நான்காவதில் இடமிருப்பதாக நடத்துனர் சொல்லி, பேருந்தை நிறுத்தியதால் நாங்கள் உடனே நம்பி ஏறினோம்.
ஓட்டுனரின் இருக்கைக்கு பின் இருவர் அமர இடம் இருந்தது. அதில் மனைவியும் மகளும் அமர்ந்தனர். பின்புறம் கடைசி இருக்கைக்கு முன்னிருக்கையில் மூவர் அமரும் இருக்கையின் நடுவில் இடமிருந்தது. பேருந்து ஓட ஆரம்பித்தது. வேகமெடுக்கையில் ஆட்டத்தில் வேகமாக நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி, கையிலிருந்த பையினால் யார் மேலும் இடிக்காத வண்ணம், மெதுவாக நடந்து காலியாக இருந்த அவ்விருக்கைக்கு அமரச் சென்றேன்.
நான் அருகில் வந்ததும் முன்னே அமர்ந்தவர், முன்யோசனையாக உள்ளே போக வழிவிட்டார். நுழைந்து நடுவில் அமர்ந்தேன். கையில் வைத்திருந்த பையை மடியில் இருவருக்கும் இடைஞ்சல் இல்லாதவாரு வைத்துக கொண்டு, பேருந்தை நோட்டம் விட்டேன். நடுவில் உட்காருவது ரெம்ப கஷ்டம். இருபக்கமும் இருவரின் இடித்தல்கள் ,நாம் இடிப்பது, சரியாக உட்காருவதே சவால்தான். முன் தள்ளி இருக்கையின் முனையில் அமர்ந்ததால் பின்னால் சாய்ந்து கொள்ள இடமில்லை. எனக்கு முன்னிருக்கையில் ஏழு வயது மதிக்கக் தக்க பையனும் அவனின் முப்பத்தியைந்து வயதுக்குள் இருக்கும் அம்மா, அப்பாவுடன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து அம்மாவின் மடியில் உடலைச் சாய்த்து தூங்கினான். வெகு தூரத்திலிருந்தோ , ஜங்சன் பேருந்து நிலையத்திலிருந்தோ ஏறியிருக்க வாய்ப்பு என நினைத்தேன். ஜங்சனில் இருந்து பால் பண்ணை வருவதற்கே அரை மணியாகிவிடும். எனக்கு இடது புறம் ஐம்பது வயதுடைய நபரும், வலது புறம் இருபத்தியைந்து வயதுடைய வாலிபரும் இருந்தனர். ஐம்பது வயதுடைய நபர் அரைவாசிக்கும் மேல் நரைத்த தலையும், ஒருவார வெள்ளை கறுப்பு கலந்த தாடியும், அடர்த்தியான பழுப்பு நிறத்தில் டி சர்ட்டும் சிமெண்ட் நிறத்தில் பேண்டும் அணிந்து சாதாரணமாக இருந்தவர், தனது செல்போனில் செய்திகளையும், வாட்சாப்பையும் மாறி மாறி பார்த்தவண்ணமிருந்தார். இடதுபுற வாலிபர் கருநீல வண்ண முழுக்கைச் சட்டையும், அதே நிறத்தில் பேண்டும் அணிந்து , கறுப்பாக ஒடிந்து விடும் ஒல்லியாக இருந்தார். முகத்தில் மெல்லிய பூனை முடி மீசையும், இளம் தாடியும் குழந்தைத்தனமான முகத்துடனும் முதுகில் தூக்கிச் செல்லும் பையை வைத்திருந்ததோடு, செல்போனில் வாட்சாப்பில் ஏதோ பதிவுகள் போட்டவண்ணம் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக தெரிந்தது.
காட்டூர் வந்த போது வாலிபருக்கு போன் வந்தது. மறுமுனையில் பெண் குரல் ஓரளவு தெளிவாக காதில் விழுந்தது.
“ஹலோ சொல்லு நா ஊருக்கு போறேன், அம்மா வரச் சொன்னிச்சி இரண்டு நாள் லீவு தானே போறேன்”
“நா தான் இப்ப போவாதடா, அடுத்த வாரம் இல்லன்னா வருசபெறப்பு கொண்டாடிட்டு அப்புறம் போன்னு சொன்னேனே காதுல உழுந்திச்சிசா”
“உழுந்ததிச்சி டி அப்போவே சொன்னேன்டி நீ தான் காதுல வாங்கல, இப்ப நா போறதுல ஓனக்கு என்னா பிரச்சன”
“லீவுட்டா ஒடனே வீட்டுக்கு போவனுமா ? நா வேணாமா?”
“இல்லடி அம்மா வரச் சொன்னிச்சி. அப்பாவும் திட்றாங்க. எனக்கு மொத நாளே லீவு ஒன்னாலதான், நேத்து போவல ரூம்லயும் யாரும் இல்ல அதான் கிளம்பிட்டேன்”
“இல்ல நீ தனியா இருக்க பயப்படுற”
“இல்லடி பயமெல்லாம் இல்ல, அம்மா சந்தேகப்பட ஆம்பிச்சிடுச்சி. முந்தாநாளே வீடியோ கால் போட்டு ரூம்ல யாரும் இருந்தாங்களன்னு காட்ட சொல்லி , சுரேசையும், தமிழையும் பாத்தப்புறமா தான் டி நம்புச்சி”
“இல்ல நா நம்ப மாட்டேன், இப்ப நீ எங்க இருக்க வீடியோ கால் போடுடா”
“சொன்னா நம்ப மாட்டியா டி இரு போடுறேன்” என அழைப்பை துண்டித்து சற்றே சப்தமாக “இதே வேலையா போச்சு இவளுக்கு” என்று வீடியோ கால் செய்தார்.
முன்னிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி என்னை போல உரையாடல்களை காதில் வாங்கியிருப்பார் என நினைத்தேன். நமுட்டுச்சிரிப்புடன் வாலிபரை திரும்பிப் பார்த்து, என்னையும் பார்த்தார். பின் தன் கணவரிடம் ஏதோ சொல்லி, அவர்களுக்குள் மென்மையாக சிரித்தனர்.
வீடியோ காலிலில் பேருந்து ஓடும் வெளிப் புறத்தையும், உள்ளே பயணிகள் அமர்த்திருத்தையும் காட்டினார். அவள் குரலில் அதிருப்தி தெரிந்தது. வீடியோ அழைப்பு துண்டித்து, சாதாரண அழைப்பு வந்தது.
“ஹலோ சொல்லுடி பாத்தியா நம்புரியா ஊருக்கு தான்டி போறேன்.”
“ஒன்ன யாருடா ஊருக்கு போ சொன்னா ? சொன்னா புரியாதா எங்கூட இருக்க ஒனக்கு கஷ்டமா இருக்கா? புடிக்கலயா?”
“நா ஊருக்கு போறன்னாலே ஒனக்கு புடிக்கலடி, எதையாவது சொல்லி இருக்க வச்சிடுறே, அம்மாவும் லீவு தானே இங்க வந்துரு ரூம்ல நீ தனியா என்ன பண்றன்னு டார்ச்சர்”
“நீ ஒரு பக்கம் ….டார்ச்சர் தாங்க முடியலடி”
“ஏன்டா ஜாலியா இருந்தப்ப டார்ச்சரா இல்லியா ?”
“நீ மாறிட்ட டா ஒனக்கு சலிச்சிடுச்சி போல அதான் ஓடுற”
“ஒடனே அத சொல்லு நீயும் ஜாலியா தான இருந்த அம்மா கூப்டுச்சுன்னு போனா ஒனக்கு புடிக்கல , எப்பலாம் நா ஊருக்கு போறன்னு சொன்னாலே நீ கடுப்பாவுற லூசா டி நீ”
“ஆமாடா நா லுாசுதான். ஒன்னவிடாம சுத்துறேன்ல. நா லூசுதான். நீ இப்பவே இங்க வரனும் வர்றியா இல்லியா?”
“என்னாடி எத பேசுனாலும் இப்படியே டார்ச்சர் பண்ற. என்னால முடியலடி. வர முடியாது. ஊருக்கு போறேன். ரெண்டு நாள்ல வந்துருவேன், நியூ இயர கொண்டாடலாம்டி. இப்ப நீ எங்க இருக்க வீடியா கால்போடுடி மொத போடும் போது சரியா பாக்கலடி ”
“முடியாது. இப்ப வே நீ இங்க வந்தாத்தான் ஒத்துக்குவேன். நா இப்ப பேசுறது ஒனக்கு டார்சரா இருக்காடா ? பெரிய மயிருன்னு நெனப்பு”
“வர முடியாதுடி. என்னவேன்னா செஞ்சிக்கோ, வை டி போன” என கட் செய்தார். ரிங்டோனை ஆப் செய்து வைப்ரேட்டரில் மாற்றி வைத்து விட்டார் போல .
ஒரு சில நொடிகளில் மீண்டும் கால் வந்தது. அதிர்வில் உண்டாகும் ரீங்காரத்துடன் கேட்டது. மீண்டும் கட் செய்து ”இதே வேல இவளுக்கு” வெளிப்படையாக முனகினார்.
முப்பது நொடிகள் கூட ஆகவில்லை இவரே போன் செய்தார்.
“ஹலோ சொல்லு ஏன்டி லூசா நீ? இப்படி டார்ச்சர் பண்ற. வேணான்னா விட்டுடு என்னால முடியலடி , எத பேசுனாலும் குத்தம் கண்டுபிடிச்சு அதயே சொல்றது , மூனு மாசம் முன்னாடி கம்பெனி ஹச் ஆர் வச்ச பரீட்சை முடிஞ்சி பதினேழு நாள் லீவுல வீட்டுக்கே போவாம ஒங் கூடத்தானடி இருந்தேன். அப்ப ஒன்னும் சொல்ல இப்ப இவ்ளோ சொல்ற , என்ன விடு நிம்மதியா போய்டும்”
“போய்டுவியாடா நீ .போய் தான் பாறேன். எனக்கு வேற ஆளு கொடைக்காம போவாது , ஒனக்கு என்ன விட்டா யாரும் கெடக்க மாட்டா பாத்துக்க, இனி போன் பண்ணாத ”
“நீ ரெம்ப லூசாயிட்ட. திமிரும் அதிகமாய்டிச்சி டி. சரி இனி போன் பண்ண மாட்டேன் ஆளவிடு” என போனை கட்செய்தார். அவர்கள் பேச ஆரம்பித்து அரை மணிக்கு மேலாகியது. செங்கிபட்டியை நெருங்கியது பேருந்து. முன்னால் அமர்ந்திருந்த பெண்மணி ஓரக்கண்ணால் இடது புறமாக, என்னைப் பார்த்து லேசாக சிரித்தார். அதிகம் சிரிக்காமல் கண்களால் மட்டும் சிரித்து, அவர் எதற்காக சிரித்தார் என புரிந்து கொள்ள செய்தேன். வாலிபர் என்னை திரும்பி பார்க்கக்கூட முயற்சி செய்யவில்லை. வெளியே விரையும் வாகனங்களையும், இருட்டி வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக இருளில் மறைந்து அவ்வப்போது ஹெட்லைட் வெளிச்சத்தில் மரங்கள் தெரிந்தன. நான்கு வழிச் சாலை அமைத்த பிறகு இருபுறமும் அவ்வளவாக மரங்கள் இல்லை. சாலையின் நடுவில் பிரிவுக்காக இருந்த சிமென்டால் கட்டப்பட்டு செம்மண்ணால் நிரப்பி, நடுவில் அரளி பூச்செடிகள் வளர்ந்து, பூத்து கொட்டிய சாலையைப் பார்த்து ஏக்கத்தில் இருந்தது. வேகமாக போகும், வரும் வாகனங்களின் புகையினால் அவற்றிற்கு ஒன்றும் பாதிப்பு உண்டாகவில்லை.
செங்கிப்பட்டி வந்தது கூட தெரியவில்லை. வாலிபருக்கு மீண்டும் அழைப்பு.
“ஹலோ சொல்லுடி என்ன அதான் வேணாம்னு செல்லிட்டியே, அப்புறம் எதுக்கு போன் பண்ற , வேற புது ஆள பாத்துக்க, ஆளவிடு போதும் இத்தோட நிறுத்துக்குவோம்.”
“அப்டியா சொல்ற.. நா ஒனக்கு வேண்டாவதவளா ஆயிட்டேன் , ஜாலியா இருந்தப்ப தேனு மாறி இருந்திச்சா? இப்ப ஓடுற, ஆம்பளங்களே இப்படித்தான்.. ஏமாத்திட்டு ஓடிருவான்வோ.. நம்பிக்க துரோகிகள்”
“நீயும் தானே ஜாலியா இருந்த.. சும்மா சும்மா கூப்டு ஒன்னா இருந்தமே மறந்திட்டியா ஒடன என்ன குத்தம் சொல்றது. அங்க வேற ஆளு கெடப்பான்.. புடிச்சுக்க ஆளவிடு. நீ ரெம்ப லூசாயிட்ட. மென்டல் மாறியே பேசுற. நா ஊருக்கு போறதுல ஒனக்கு என்னா வந்திச்சி …லுாசு லூசு வைடி போன”
எதிர்முனையில் பேசுவது சரியாக கேட்கவில்லை. போன் அழைப்பை துண்டித்திருந்தார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். தனக்குள் பேசியபடி செல்லைப் பார்த்துக்கொண்டு , வெளியே வேடிக்கையும் பார்த்தார் . சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. “இவளுக்கு இதே வேல” என்றபடி அழைப்பை எடுத்தார்.
“ஹலோ சொல்லுடி லூசு.. நா இப்ப என்ன சொல்லிட்டேன் . நீயும் தானே சொன்ன . நீ சொல்லும் போது நா ஏதாவது பேசுனேனா… சும்மா அதையே சொல்ற”
“ஆமாட நா லூசுதான் ஆயிட்டேன் , எங்கூட இருக்குறதுல ஒனக்கு என்னா கஷ்டம் அத மொதல்ல சொல்லு , உடன இங்க வர்ற… இல்லேன்னா நா இங்கயே பஸ் ஸ்டாண்டுலயே இருப்பேன். எனக்கு எது ஆனாலும் நீ தான்டா பொறுப்பு.”
“சரியான மென்டல் டி நீ …ஒனக்கு என்ன டார்சர் பண்றத வேலயா போச்சி. அங்கயே இரு என்னால இப்ப வர முடியாது. வைடி போன”
“வர முடியாதுல்ல… சரி விடு நா பாத்துக்குறேன்.. இனி எனக்கு கால் பண்ணாத” அழைப்பை துண்டித்தாள்.
உடனே இளைஞர் போன் செய்தார்.
“ஹலோ வீடு போய் சேரு.. நா லீவு முடிஞ்சி வர்றேன். பேசிக்கலாம் . அப்பாவும் அம்மாவும் சந்தேகப்படுறாங்க. அடுத்த லீவுல ஒன்ன கூட்டிட்டு போய் காட்டுறேன்டி லூசு… வீட்டுக்கு போடி… இப்ப என்னால அங்க வர முடியாது.”
“முடியாதுன்னா விடுடா நா பாத்துக்குறேன். எல்லாம் முடிஞ்சிடுச்சில்ல.. அப்படித்தான் பேசுவ , ஒனக்கு வேற யாரடயாவது லிங்க ஆயிடிச்சா கழட்டி விட பாக்குற”
“இல்லடி லூசு ..மாறி பேசத. ஒனக்கு தான் லிங்க் ஆயிடிச்சி போல, அதான் டார்ச்சர் பண்ணி கழட்டி விட பாக்குற புடிக்கலன்னா சொல்லிடு டி”
“ஆமாடா நா லூசா அலையுறேன் யாராவது புதுசா கெடப்பாங்களான்னு. எனக்கு இதான் வேல பாரு . ஒரு நாள் கழிச்சி வீட்டுக்கு போடான்னா மொத நாளே சொல்லாம கொள்ளாம ஒடுற, நீ ஆம்பள தானே.”
“நா ஒரு நாள் முன்னாடியே போறதா சொன்னேன்டி நீ காதுல வாங்கலன்னா நா என்னா பண்ண”
“அதுலயும் நா ஊருக்கு போறேன்னா ஒனக்கு என்னமோ ஆயிடுதுடி. சரி தஞ்சாவூர் வரப்போவது ரெண்டு நாள்ள வந்துருவேன். நியூ இயர ரூம்ல கொண்டாடுவோம். யாரும் இருக்க மாட்டாய்ங்க. அங்க சூப்பரா கொண்டாடுவோம். நாம ரெண்டு பேரு மட்டும் அப்ப நா ஆம்பளன்னு காட்டுறேன்டி.. ஒகே”
“இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல, இப்ப நீ இங்க வர முடியுமா முடியாதா?”
“மறுபடியும் மொதல்லேந்தா.. வர முடியாதுடி வைடி போன.. பஸ்ஸ்டாண்டு வந்துருச்சி ரெண்டு நாள்ள வருவேன், பாப்போம்” அழைப்பைத் துண்டித்தார். என் பக்கம் திரும்பவே இல்லை. முன்னிருக்கை பெண்மணி தன் பையனை எழுப்பும் சாக்கில் ஜாடையாக இளைஞரை ஓட்டினார்.
“தம்பி எழுத்திரி… ஊரு வந்துருச்சி… தூங்குனது போதும், வீட்டுல போய் தூங்கிக்க” என்றார். என்னைப் பார்த்து தாராளமாக புன்னகைத்து, பக்கத்திலிருந்த இளைஞரையும் உற்றுப் பார்த்தார்.
“தம்பி எழுந்திரி ரெம்ப கஷ்டமா இருக்கு, என்னால முடியல. எந்திரி” பையனை உலுக்கி எழவைத்தார்.
என்னால் புன்னகைப்பதை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகியது. அப்பெண்ணை பார்த்துச் சிரித்து வைத்தேன். அவரும் கணவரும் ஒன்றாக சிரித்தனர்.
தஞ்சை பேருந்துநிலையம் உள்ளே நுழைந்த பேருந்து முக்கால் சுற்று சுற்றி திருச்சி பேருந்து நிற்மிடத்திற்கு வந்து நின்றது. பயணிகள் இறங்கினர் .
எனது மனைவியும் மகளும் முன்புற படிக்கட்டின் வழியாக இறங்கியும், நான் பின்புறமாக இறங்கி அவர்களைத் தேடிய போது பேருந்தின் முன்புறமாக சென்று பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம் நோக்கி நடந்து சென்றார்கள், எனக்கு பக்கத்திலிருந்த இளைஞரை தேடி பேருந்தின் பின்புறமாக வேகமாக சென்று பார்த்தால் அவரும் சற்று தூரத்தில் பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி செல்வதைக் கண்டு பின்தொடர்ந்து பேருந்துகள் நிற்குமிடத்திற்கு வந்து சேர்ந்தேன். இடது புறம் நகராட்சியின் பைக் ஸ்டான்டும் பின்புறம் வசந்தபவனும் இருப்பதால் அங்கு நல்ல வெளிச்சமிருந்தது. பேருந்து வருவதற்காக காத்திருந்தோம். எனக்கு கொஞ்சம் தள்ளி முன்புறமாக அந்த இளைஞர் செல்லில் ஏதோ நோண்டியபடி இருந்தார். எனது மனைவியிடம் நடந்ததை சுருக்கமாகச் சொல்லி அவ்விளைங்ஞரை சுட்டி காட்டி, மெலிதாக புன்னகைத்தேன் நோட்டம் பார்க்க வாகாக நின்றேன்.
சட்டென்று ஒரு இளம் பெண் அவ்விளைஞரை பின்புறமாக அனுகி தோளில் கை வைத்தாள். அவர் திரும்பி பார்த்தவுடன் முகத்தில் குழப்பம் மகிழ்ச்சி இரண்டும் மாறி மாறி தாண்டவமாடி இறுதியில் மகிழ்ச்சியில் திளைத்து தோளில் கையிட்டு தோளாடு அணைத்து “நீ என்னாடி பண்ற இங்க?”
நல்ல ரோஸ் சிவப்பில் உடல்நிறமும் ,தலைமுடி பிளிச்செய்து பின்னாமல் அப்படியே விட்டு முகத்தில் புன்னகை தவழ நின்றிருந்தார் . புன்னகைக்கும் போது கன்னத்தில் குழி விழுந்து அழகாகத் தெரிந்தார். கொஞ்சம் சதைப் பிடிப்பான உடல்வாகு. சால் இல்லாமல் சுடிதார் தூய வெள்ளை நிறத்தில் அணிந்திருந்தார். முதுகில் தூக்கிச் செல்லும் பையை வைத்திருத்தார். இளைஞரின் கையைப் பிடித்து தோளில் தொங்கி கொஞ்சும் படலம் தொடங்கியது.
“சாரிடா ஒன்ன சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் அப்டி செஞ்சேன் ஒன்ன விட்டு போவ மாட்டேன்டா கறுப்பா” என்றார்.
அவர் திகைப்பது முகத்தில் தெரிந்தது. ஏதும் சொல்ல முடியாமல் மலங்க விழித்தார்
“நீ என்னாடி இங்க பண்ற… ஒன்ன யாரு வரச் சொன்னா , நீ ஊரு போ நியூ இயர்க்கு மொத நாள் வந்துடுவேன் அப்போ பாக்கலாம்”.
“இல்ல டா இந்த வாட்டி ஏமாத்த முடியாது. நானும் ஒங்கூட ஒங்க வீட்டுக்கு வரப் போறேன். போன் பண்ணி சொல்லிட்டேன். ஒனக்கு வேற வழி இல்ல” என கலகல வென சிரித்தார்.
“லூசாடி நீ… அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான். ருத்ர தாண்டவம் தாண்டி. இப்ப விடுடி மெதுவா ..பேசி புரிய வச்சிட்டு ஒன்ன கூப்புடுறேன்”
“டேய் நீ தான்டா லூசு… ஏற்கெனவே பேசிட்டேன். அவங்க தான் வரச் சொன்னாங்க இத மாத்த முடியாது. நீ வர்றியா இல்லையா?” என்றார்
அவரின் திகைப்பும் குழப்பமும் உச்சத்திற்கு சென்றது. தலையில் கை வைத்து யோசனையில் ஆழ்ந்தார்.
என் மகள் அவர்களையும் எங்களையும் பார்த்து விட்டு கண்களால் சைகை செய்து என் காதருகே “அவர் மாட்டுனாரு இனி தப்பிக்க வே முடியாது” என்றாள்.
நான் சிரித்தபடி மனைவியை ஒரக்கண்ணால் பார்த்து “இது எங்க போய் முடியுன்னு தெரியுதா” என்றேன்.
“அதெல்லாம் போகப்போக சரியாடும். உங்கள மாதிரியா” என அசந்தர்பமாக சிரித்து என்னை தொடைப் பக்கமாக லேசாக கிள்ளி “ஒங்களுக்கு இதே வேல. யாரு என்ன பண்றான்னு? வீட்டுக்கு வாங்க வச்சிக்கிறேன்” என்றாள்.
இளைஞரை திரும்பிப் பார்த்த போது, அப்பெண் அவரை கைப்பிடித்து இழுத்தபடி பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் முன்புறம் ஏறினார். எங்கள் வீட்டு வழியாக அப்பேருந்து செல்லும். வீட்டிற்கு வெகு அருகில் பேருந்து நிறுத்தம். நாங்ளும் ஏறி அமர்ந்தோம். அவ்விளைஞரும் அப்பெண்ணும் முன்னால் அமர்த்திருந்தனர். இளைஞரின் முகம் மொளனமாக திகைப்புடன் இருந்ததைப் பார்த்தேன். எனக்குள் ஏதோ தோன்ற தலையாட்டிக் கொண்டேன்.