என்றென்றும் மாறாதது.

டாக்டர் சோமசுந்தரம் சாரின் பண்ணை வீடு தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை ரோட்டில், கந்தர்வகோட்டைக்கு மூன்று கிலோமீட்டருக்கு முன்னால் இருக்கிறது ,பண்ணைவீடு என்றால் முப்பத்திரெண்டு ஏக்கர் அளவுடையது,

முதலில் வாங்கியது இருபத்தியாறு ஏக்கர் தான் அது முன்புறம் கொஞ்சம் அகலமாகவும் பின்னால் போகப் போக  குறுகி ஒரே அளவாக இருக்காது . பிற்பாடு அதை சதுரமாக மாற்ற பக்கத்திலுள்ள இடங்களையும் பல்வேறு “திறமைகளை” காட்டி வாங்கி, வேலியமைத்து பார்பதற்கு நன்றாக சதுரமாக இருக்குமாறு செய்து விட்டார்.

பண்னையில் குடும்பத்தோடு தங்கி வேலை பார்பவர் மகேந்திரன் இரண்டு குழந்தைகள் மனைவியோடு தங்கி இரவும் பகலும் பண்ணைய பார்த்துக்கொள்வதும் ,வரும் வேலையாட்களை வேலை வாங்குவதும் ,கூடவே இருந்து வேலை பார்பதுமாக, பண்ணையில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து வேலை செய்வார்.

யார் மூலம் எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை எனது போன் நம்பரை வாங்கி என்னை அழைத்தார்.

ஹலோ சார் , சரவணனா பேசுறது? தஞ்சாவூர்ல உங்க நம்பர குடுத்தாங்க ,இங்க டாக்டர் சோமசுந்தரம் சாரின் பண்ணையில சர்மர்சிபிள் திரிபேஸ் மோட்டார் ஓடல பாக்க முடியுமா ? லோக்கல்ல ஆளுங்க சரியா பாக்கமாட்டேங்குறாங்க நீங்க நல்லா பாப்பீங்கன்னு சொன்னாப்ல.

ம். பாப்போம்ண்ணே  என்ன ஃபால்ட்னே , சப்ளை சரியா வருதா? மோட்டார் ஓடலயா? இல்ல தண்ணீ கொஞ்சமா வருதா?

இல்ல சரவணன் மோட்டாரே ஓடல பாக்க முடியுமா ?இன்னிக்கு வர முடியாட்டி நாளைக்காவது வரப் பாருங்க .

சரின்னே இன்னிக்கு இங்க வேல கொஞ்சம் இருக்கு, அதனால நாள காலையில  ஆறுமணிக்கு கூப்ட முடியுமா? சமயத்துல வேலையில மறந்துருவேன்.

சரி சரவணன் காலையில ஞாபகப்படுத்துறேன். நீங்களும் செல்லுல ஏதோ ஒன்னு ஞாபகப் படுத்த இருக்காமே, அதுல போட்டு வைய்யுங்க, இடம் சரியா தெரியுமா? சொல்லவா? 

சரிண்ணே காலையில பாப்போம் பாத்துட்டு தேவன்னா ஆள கூப்ட்டுக்குவோம் ,அதெல்லாம் தேவைப்படாதுண்ணே அடிக்கடி அந்த பக்கம் போவேன் அதனால சரியா வந்து சேந்துருவேன்  சரிண்ணே காலையில பாப்போம். 

ஒகே சரவணன் பாப்போம்.

அதிகாலை ஐந்து முப்பதுக்கே  நல்ல ஆழ்ந்த தூங்கத்தில் இருக்கும் போதே போன் செய்துவிட்டார்.

நானும் பல்விளக்கி , முகம் கழுவி , உடைகள் மாற்றி , கிளம்பி எனது டூவீலரில் டுல்ஸ் பையுடன்  பண்ணக்கு வந்துவிட்டேன். பண்ணையை பற்றி விசாரிக்க தேவையில்லாமல்  ரோட்ரோரத்திலேயே இருந்தது பெயர் பலகையும் இருந்தது.

பெரிய முன்புற கேட்டை திறந்து விட்டு உள்ளே வண்டியுடன் நழைந்து சைடுஸ்டேன்ட் போட்டுவிட்டு கேட்டை பழையபடி மூடி கொண்டியை போட்டு, அங்கிருந்து வண்டியை எடுத்து இருபுறமும் திட்டமிட்டு அளவுடன் வைத்து வளர்க்கப்பட்ட தென்னை  மரங்களை கடந்து பண்ணவீட்டின்  வெளிப்புறம் இருந்த மாமரத்தின் நிழலில் நிறுத்தினேன்.என்னை எதிர்பார்த்து வாசலில் காந்திருந்த மகேந்திரண்ணனை பார்த்துவிட்டு .

அண்ணே மெயின் போர்டு எங்க இருக்கு காட்டுங்க கரண்ட் திரிபேஸ் இருக்கான்னு  சரி பாத்துடுவோம்.

மெயின் போர்டு பண்னையின் வீட்டு நுழைவாசலுக்கு இடது புறம் பெரிய மரப்பலகையில் திரிபேஸ் மீட்டர், மூனும் மூனும் ஆறு பியூஸ் கேரியறும் ,  திரிபேஸ் போஸ்மா மெயின் சுச்சும் , மோட்டர்ஸ்டாட்டறும்  சுவரில் நல்ல எல் ஆங்கிளில் வெல்டு வைத்து பதிக்கப்பட்டும், மரத்தில் ஓட்டை போட்டு ஆங்கிளில் போல்டு ,நட்டு, வாசர் உபயோகப் படுத்தி நல்லா , அழகாக பொருத்தப்பட்டிருந்தன. மிகவும் திறமையான எலக்ட்டிரிஸ்யனின்  கைவன்னம்  தெரிந்தது .

செக்கப் செய்ததில் கரண்ட் திரிபேஸில் ஃபால்ட் இல்லை, ஸ்டாட்டரும் நன்றாகவே இருந்தது  மோட்டாரை ஓட்டிப்பார்த்தில் ஓடவில்லை என்பது உறுதியானது. ஒயர் எங்காவது அறுந்து போயிருக்கலாம். ?

அண்ணே ஸ்டாட்டர் , சப்ளை சரியா இருக்கு மோட்டார் ஓடல தூக்கி தான் பாக்கனும் ஆள் இங்க இருக்கா இல்ல நம்ம பசங்கள கூப்ட்டுக்கலாமா.

இங்க ஆள் இல்லை சரவணா உங்க ஆளுங்கள வரச்சொல்லிடுங்க தூக்கி பாத்துருவோம் என்றார்.

சரிண்ணே இப்பவே சொன்னாதான் ஒன்பதரைக்குள்ளவாவது வருவாய்ங்க அண்ணே காசு கரக்டா கொடுத்துருவாரா?

அதெல்லாம் கொடுத்துடுவாரு  வாங்கிக்கலாம்.

போன் செய்து நண்பர் குமார், சுரேஷ் ,கணேசனை வரச் சொல்லியயிற்று.

மோட்டாருடன் இணைக்கப்பட்ட ரெண்டு இன்ச் HDPஹோஸ் பைப்பை  இரும்பாலான கிளம்ப் கொண்டு டைட் செய்து ,ஆறு இன்ச் போர் பைப்பின் மீது வைத்து கயிற்றால் கட்டப்பட்டிருந்தது . கையிற்றை ஒருவர் பிடித்துக்கொள்ள மற்ற இருவர் ஹோஸ் பைப்பை பிடித்து  தூக்க மோட்டர் வரவில்லை ஏனோ தெரியவில்லை .

சிக்கியிருக்க வாய்ப்பு அதிகம் என தோன்றியது.

மேலும் மேலும் முயற்சி செய்ததில் மோட்டாருடன் ஹோஸ்  அசையேவே இல்லை ஹோஸ் பைப்பு என்பது கறுப்பாக கிட்டதட்ட கால் இன்ச் முதல் கொஞ்சம் கூடுதலான மொத்தத்தில் இருக்கும் .

அண்ணே மோட்டார் தூக்குனா வரமாட்டுது கம்ப்ரசர் வைச்சி ஊதி தூக்கிபாக்கலாம் வேற வழி இல்ல என்ன செய்யலாம் .

சரி தம்பி டாக்டர கேட்டுர்றேன் இப்பவே போன் பண்ணுறேன் .

பட்டன் மொபைலை எடுத்து நம்பர் அழுத்தி விட்டு காதோடு வைத்துக்கொண்டு அந்த பக்கம் எடுப்பதற்காக காத்திருந்தார் போன் எடுக்கப்படவில்லை .

வேலையா ?

இருப்பார் போல தம்பி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம் பாத்துட்டா பண்ணுவாரு .

சில நேரங்களில் மோட்டாரை போரிலிருந்து தூக்கும் போது மேலே வராவிட்டால கம்ப்ரசர் வைத்து காற்றை வெகு அழுத்தமாக பைப்பினுள்  செலுத்தும்போது காற்று ஹோஸ் பைப்பு வழியாக பம்பு , மோட்டாரை அடைந்து  மேலும் போரின் அடி ஆழம் வரை சென்று, அழுத்தும்போது போர் பைப்பில் உள்ள அடைப்பு நீங்கி  ஹோஸ்சுடன் மோட்டாரும் வருவதற்கு வாய்பு அதிகம் இந்த டெக்னிக் எல்லா இடத்துக்கும் பெருந்தும் எனவும் சொல்லமுடியாது.

முப்பது நிமிசம் கழித்து  டாக்டர் போன் செய்தார் .

செய்தியை சொன்னவுடன் சரி ஆள  கம்ப்ரசரோட  அனுப்புறேன் என்னோட நண்பரோடதுதான் , எப்ப வருவாங்கன்னும் சொல்லிடுறேன். 

பத்து நிமிசம் கழித்து போன் வந்தது சாயந்தரம்  தான் வரமுடியுமாம் பரவாயில்லையா என்றார்.

சரி சார் வெயிட் பண்றோம் மணி இப்போவே ரெண்டு ஆயிடுச்சி

நாங்களும் போய் சாப்ட்டு வந்துர்றோம் சார் என்றார் மகேந்திரன்.

அனைவரும் சாப்பிட்டு விட்டு மரத்தடியில் சுற்றி உட்கார்ந்தும் படுத்தும் பொழுதை தள்ள முயற்சித்தனர்.

ஆறு மணிக்கு மேல் தான் கம்ப்ரசர் ஆள் வந்தார் வண்டியுடன் .

என்னா ஆச்சி மோட்டார் வரலன்னு சொன்னாங்க , பாப்போமா மோட்டர் நிப்புளுக்கு மேலே உள்ள நான்ரிடன் (Non Return)வால்வோட கழட்டி எடுத்துட்டு  கம்ப்ரசர் ஹோஸ்க்கும் மோட்டர் ஹோஸ்க்கும் ஜாய்ண்ட் பண்ணி பிரசர்ர அதிகமாக்கி தூக்கலாம் வந்தாலும் வந்துரும் என்றார்.

கம்ப்ரசர் ஆறரை மணிக்கு வந்தாலும் வேலை ஆரம்பிக்க ஒன்பது மணி ஆனது கம்ப்ரசரோட ஹோஸ் பைப்பை  மோட்டர் பைப்புடன் ஜாயின்ட் செய்து ஆயில் எஞ்சினை ஸ்டார்ட் பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக  பிரசர் தர ஆரம்பித்தார்.

பிரஷர்  அதிகமாக்க  லேசாக மோட்டாருடன் ஹோஸ்சும், சேர்ந்து மெதுவாக மேலே வரப்பார்த்தது நான்கு அடிக்கு மேல் மோட்டர் வெளியே வரவில்லை  , மேலும் பிரஷரை அதிகமாக்கியும் அசையவே இல்லை.

இரவு பதினோரு மணிக்கு மேல் டாக்டரின் டிரைவர்  சீனு ஆம்னி காருடன் வந்தார் ,மகேந்திரனிடம்,

என்னாண்ணே மோட்டர் வெளியே வரலயா?

எல்லோரும் சாப்டாச்சா இல்லன்னா கந்தர்வகோட்டை போயி வாங்கிட்டு வரவா  .

இல்ல சீனு மோட்டார் எங்கையோ வசமா சிக்கியிருக்கலாம் இல்லேன்னா மண்ணு உள்ளே சரிஞ்சி பிவிசி பைப்பு ஒடஞ்சி போயிருக்கனும் என்றார்.

சரி வேலைய நிப்பாட்டு சரவணா சாப்ட்டுட்டு வேலைய ஆரம்பிப்போம்.

ஏற்கெனவ ரெம்ப மெனக்கெட்டதால் எல்லோரும் டயர்டாயிருப்பாங்க .சாப்டுட்டு வந்து பாப்போம் .

கந்தர்வ கோட்டை நைட்டு கடையில் வாங்கிய இட்லி புரோட்டாவுடன் இரவு சாப்பாடு முடிந்தது , கொஞ்சநேரம் கழித்து தூக்கலாம்னு  திரும்பவும் முயற்சி பண்ணோம் லேசா அசஞ்சி கொஞ்சம் கொஞ்சமா மேல வந்திருச்சி ,இருபத்தி அஞ்சடிக்கும் மேல வந்தது அதுக்கும் மேல வரல.

கம்பரசர் ஆள் கொஞ்சம் கடுப்பாயிட்டாப்ல போல.

கொஞ்சம் பிரசர்ர அதிமாக்கி பாக்கலாமா என்றார்.

ம். செய்யுங்க வேற வழி மணியும் ரொம்ப ஆயிடிச்சி மகேந்திரண்ணே தூங்க ஆரம்பிச்சிட்டாப்லே  . என்றேன்.

பிரசர் அதிகமாக்கியும் அசையவில்ல அவசரப்பட்டு டக்குன்னு ஒரேடியா பிரசர ஏத்திவிட்டுட்டாரு, டம் முன்னு ஒரு பெரிய சத்தம் ஹோஸ் பைப்பு வெடிச்சி கம்ப்ரசர் ஹோஸிலிருந்து பெரும் சத்தத்துடன் காற்று வெளியாகிட்டிருந்தது.

அந்த இடத்தசுத்தி ஒரே தூசி மண்டலமா மண்ணு காத்துல பறந்து ஒன்னுமே தெரியல சுத்தியும் யாரையும் பாக்க முடியல சத்தம் மட்டும் கேக்குது ?

பத்துநிமிசம் கழிந்த பின்னாடி பாத்தா ஹோஸ் வெடிச்சி கம்பரசரோட இரும்பு பைப்பு ரெண்டா கிழிஞ்சி இருந்தது சரவணன் குனிந்திருந்தவன் எழுந்து.

மகேந்திரண்ணே குமாரு , சுரேசு ,கணேசா யாரும் பக்கத்துல இருக்கீங்களா? யாருக்காவது அடிபட்டிருக்கா  உடனே பாருங்க கம்ப்ரசர் ஆளு எங்க இருக்காருன்னு பாருங்க. என கூவினேன்.

மகேந்திரன், கணேசன் கம்ப்ரசர் ஆளின் குரல் மட்டும் கேட்டது குமாரின் குரல் கேட்கவில்லை.

கணேசா குமாரோட கொரல் கேட்கல உடனே பாருங்க என்னாச்சின்னு தேட ஆரபித்தோம்.

தேடியதில் மூச்சி பேச்சில்லாமல் குமார் குப்புற கிடந்தான். பதறியடித்து தூக்கி மல்லாக்க போட்டதில் முதலில் ஒன்றும் தெரியவில்லை தலையில் கைவைத்து பார்த்ததில் இரத்தத்தின் பிசுபிசுப்பு அந்த இருளில்  திடுக்கிட வைத்து வயிற்றில் பயம் இறங்கியது.

யாருகிட்ட டார்ச்சிருக்கு இல்லேன்னா செல்லுல இருக்குற டார்ச்ச அடிங்க இங்க தலையில ரத்தம் வர்றமாரி தெரியுது என்றேன்.

டார்ச் அடித்து பார்த்ததில் காதின் மேல்பக்கத்தில் ரத்தம் வருவது தெரிந்தது தசை பகுதியும் முடியின் ஒரு பகுதியும் மேலே கிழிக்கப்பட்டு லேசான ஆழத்தில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.

உடனே தன்னிச்சையாக பதற்றமும் அழுகையும் தொற்றிக்கொள்ள டிரைவர் சீனுவை கூப்பிட பக்கத்தில் இருந்தவன் 

இங்கனதான் இருக்கேன் என்ன செய்யனும் சொல்லுங்க 

வண்டிய ஒடனே எடுங்க மெடிக்கல் போய்டுவோம் தலையில் அடிபட்டிருக்கு மூச்சி பேச்சி வேற இல்ல  நானும் அதிகம் பதற்றம் அடைந்தேன்.

குமாருக்கு திருமணமாகி இரண்டு வருடமே ஆகியதோடு பெண் குழந்தை பிறந்து எட்டு மாதம் முடிந்திருந்தது.

டிரைவர் சீனு சற்று தயக்கத்தோடு டாக்டர கேக்கனும் அவரு என்ன சொல்றாரோ  என்றான்.

லேசான எரிச்சல் கலந்த கோபத்தோடு அடிப்பட்டத பாத்தும் கூட இப்படி சொல்றீங்க வண்டிய மொதல்ல எடுங்க என்பதற்குள் டாக்டருக்கு போன் செய்திருந்தான் அவர் எடுக்கவில்லை.

மகேந்திரண்ணன் கொஞ்சம் கடுமையான முறையில் திட்ட ஆரம்பித்ததும்.

வண்டியை திருப்பி குமாரை காரில் ஏற்ற வசதியாக நிறுத்தி குமாரை தூக்கி வண்டியில் படுக்க வைக்க உதவியும் செய்தான் சீனு

காரில் முன்புறம் நானும் பின்னாடி கணேசன் மகேந்திரண்ணனும் குமாரை பிடித்துக் கொள்ள சுரேஷ் அங்கேயே இருப்பதாக சொல்லிவிட்டான் , அதிக வேகத்தோடு காரை ஒட்டி பத்து நினைந்து நிமிடத்திற்குள் தஞ்சை மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி அவசர பிரிவுக்கு வந்து சேர்த்தான்.

அவசர பிரிவில் உள்ளவர்கள் உடனே வந்து பார்த்து போலீஸ் கேஸ் இல்லையே என்று கேட்டுவிட்டு நடந்ததை சொன்னதில் ஒரு வழியாக நம்பி பெட்டில் கொண்டுபோய் பல்ஸ் , காயத்தையும் தெளிவாகபார்த்து விட்டு அதிர்ச்சியா இருக்கும் அதனால மயக்கம்  பயப்பட ஒன்னும் தேவையில்ல ,ஆனா காலையில மொத வேலையா ஸ்கேன் பண்ணனும் தலையில அடிபட்டிருக்கு பாத்துக்கலாம் என்றார் பெரிய டாக்டர்

இது என்னை மேலும் பயத்திலாழ்த்தியது.

குமாரின் பொண்டாட்டிக்கு என்ன பதில சொல்வது என்பதில் ரெம்பவும் கலங்க ஆரம்பித்தேன்.

இடையில் விடிகாலை ஐந்து மணிக்கு டிரைவர் சீனுபோன் செய்திருந்ததை பார்த்த டாக்டர் சோமசுந்தரம் என்ன நடந்தது என கேட்டு பதில் சொல்லாமல் வைத்துவிட்டார் .அது மேலும் பதற்றத்தையும் இயலாமையும் சேர்த்து கோபத்தை கிளப்பியது.

தம்பி சரவணா கவலைபடாத குமாருக்கு ஒன்றும் ஆவாது  தைரியமா இரு என்றார். மகேந்திரண்ணன் கூடவே,

இந்த டாக்டரு ஏன் இப்படி பண்றாரு போன் பண்ணி சொல்லியும் வரவும் இல்ல மெடிக்கலுக்கும் சொல்லல என்னா மனுசனய்யா இவரு. நாளைக்கு நமக்கும் இது போல நடந்தா பாப்பாரான்னு புலம்பியபடியே நின்றார்.

ஒருவழியா கண்முழிச்சி பார்த்தான் குமாரு  ,என்ன எப்படி இருக்கு ஏதாவது தெரியுதா.

ஒன்னும் தெரியல ஒடம்பெல்லாம் வலிக்குது தலையில் ஒரு பக்கம் வலி தெரியுது மத்தபடி நல்லாயிருக்கேன். ஏன் அங்க என்னாச்சி வேற யாருக்கும் ஒன்னும் ஆகலையே டம்மூனு சத்தம் பெரிசா கேட்டுச்சி அதுக்கப்புறம் இப்பதான் முழிப்பு வந்துச்சி என்றான்.

உன்னதவிர யாருக்கும் ஒன்னும் ஆகல எல்லாரும் தெரிச்சி ஓடிட்டோம் கம்ப்ரசர் ஆளு நீ அடிபட்டு பேச்சி மூச்சி இல்லாம இருக்குறத பாத்த உடனே கம்பிய நீட்டிட்டான்.

சரி விடு பாத்துப்போம் ஆஸ்பிடல்ல என்ன சொல்றாங்க.

காலையில ஸ்கேன் சென்டர் தொறந்ததும் MRI பண்ணி பாக்கனும்னு சொல்லிட்டாங்க வேற ஒன்னும் சொல்ல  எந்திரி நடந்து பாரு என்றேன்.

எழுந்து நடந்து பார்த்ததில் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை எப்பொழுதும் போல இருப்பதாகத்தான்பட்டது.

கொஞ்சம் நடந்ததில் தெம்பான குமார் .

வாங்க எல்லாம் வெளியே போய் கேண்டீன்ல டீ சாப்பிடலாம் எனக்கு தான் ஒன்னுமே இல்லையே என்றான்.

வார்டு ஸ்டாப் நர்ஸ் தலையில் அடித்துக்கொண்டபடி ஏதாவது செய்யுங்க ஆன இங்க வந்து ஏதும் சொல்ல கூடாது என்றார் கோபத்தோடு.

டீ சாப்பிடுகையில் மகேந்திரண்ணனின் போனுக்கு டாக்டர் பேசினார் தகவலை கேட்டுவிட்டு .

தனக்கும் அதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என் வீட்டுக்கோ கிளினிக்கிற்கோ யாரையும் கூப்பிட்டுகிட்டு வர வேண்டாம் என்றபடி  போனை வைத்து விட்டார்.

எனக்கு ஒன்னுமே புரியல என்னாடா இது  அவருக்கு வேல பாக்க வந்துருக்கோம் , எதிர்பாராம இது மாதிரியாயிடிச்சி அதுக்கு நாம என்னா பண்ணுறது இவரு சம்பளம் கூட தராம இப்படி நடந்துகிறாரு இவர பத்தி கேள்வி கூட பட்டது கிடையாதே  ,சரி என்னா செய்யுறது  நேர்ல போயி கேட்டு பாப்போமுன்னு மனச தேத்திகிட்டேன்.

காலை ஒன்பது மணிக்கு ஸ்கேன் செய்து  அதன் ரிப்போர்ட்டை வார்டில் கொடுத்துவிட்டு  காத்திருந்தோம் 12 மணிக்கு தலைமை டாக்டர் வந்து பார்த்து, ஒன்றும் ஆகவில்லை பயப்பட வேண்டாம் என்றவுடன் தான் மனநிம்மதி வந்தது.

குமாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பண்ணைக்கு போய் டூல்ஸ், டூல்ஸ் பையை எடுத்துக் கொள்ள போனேன்.

அங்கே ஃபோர் பக்கத்தில் நடப்பட்டிருந்த இரும்பு பைப்பில் முனைகிழிந்த இரும்பு நிப்பிளுடன் ஹோஸ் பைப் கிட்டதட்ட ஒன்பது சுற்றுக்கள் சுற்றி இருந்தது.

கலித்தேவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *